Saturday, May 30, 2015

ஆர்.எஸ்.எஸ் பவனாகும் ஐ.ஐ.டி கள்

சென்னை ஐ.ஐ.டி யில் செயல்பட்டுக் கொண்டிருந்த அம்பேத்கர்- பெரியார் வாசகர் வட்டத்தை தடை செய்து மோடி அரசு தான் ஒரு பாசிச அரசு என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துக் கொண்டுள்ளது.

அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் - இருவருமே காவிக் கூட்டத்தால் வெறுக்கப்படுபவர்கள். காவிக் கூட்டத்தின் மேலாதிக்க சதிகளை அம்பலப் படுத்தியவர்கள் என்பதால் இருவருமே பரம வைரிகள். ஆகவே வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இருவரையும் இழிவு படுத்த காவிக்கூட்டம் தயங்காது.

மோடியை விமர்சனம் செய்தார்கள் என்பது ஒரு சாக்காக இருக்க முடியுமே தவிர அவர்கள் உள் மனதில் ஒளிந்து கொண்டிருப்பது  ஆர்.எஸ்.எஸ் சின்  சிந்தனைக்கு எதிரானவர்களை இருட்டடிப்பு செய்வதுதான். 

சாதாரணமாகவே அவர்களின் குணம் இதுதான் என்கிற போது ஆட்சி கையில் இருக்கிற ஆணவத்தில் என்ன வேண்டும் செய்யலாம் என்ற ஆட்டத்தின் ஒரு பகுதிதான் இது.

ஐ.ஐ.டி யில் இவர்களின் முதல் அராஜக நடவடிக்கை இதுவல்ல என்பதை நினைவு படுத்த விரும்புகிறேன்.

ஏற்கனவே ஒரு ஆர்.எஸ்.எஸ் பேர்வழியின் கடிதத்தின் அடிப்படையில் அசைவ உணவு பறிமாறுவதை நிறுத்துங்கள் என்று உத்தரவு வழங்கிய அரசுதான் இது.

இனி ஐ.ஐ.டி வளாகத்தில் யாரும் சாப்பிடுவதற்குக் கூட வாய் திறக்கக் கூடாது என்று உத்தரவு போட்டால் கூட ஆச்சரியப் படுவதிற்கில்லை.

ஆனால் அவர்கள் எதிர்பாராத ஒரு விஷயம் என்னவென்றால் இந்த பாசிச முடிவிற்கு எதிராய் நாடு முழுவதும் எழுந்துள்ள கண்டனக் குரல்கள். சுயமாய் சிந்திக்கும் மனிதர்கள் அனைவரும் பொங்கி எழுந்துள்ளனர். பெரும்பாலான அமைப்புக்கள் கண்டனக்குரல் எழுப்பியதோடு நிற்காமல் போராட்டங்களையும் துவக்கியுள்ளனர். அப்படி ஒரு கண்டனச் செய்தியை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.



பாசிச ஹிட்லருக்கு வரலாற்றில் என்ன மோசமான பெயர் கிடைத்துள்ளதோ அதை விட மோசமான பெயர் மோடிக்காக காத்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் மோசமான கறுப்புக் காலம் மோடியின் ஆட்சிக்காலம்தான். 

மருத்துவமனை, சமுதாயக் கூடம், இப்போது ஆம்புலன்ஸ்



“என்ன தவம் செய்தனை?” என்று கிருஷ்ணனை மகனாகப்  பெற்றதற்காக யசோதாவைக் கேட்பதாக கர்னாடக இசைப்பாடல் ஒன்று உண்டு.

ஆனால் எந்த தவமும் செய்யாமலேயே எல்.ஐ.சி யில் வேலை கிடைத்த ஒரே காரணத்தாலேயே அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் எனும் மகத்தான அமைப்பில் இணையவும் செயலாற்றவும் வாய்ப்பு கிடைத்தது என் வாழ்வின் மிக முக்கியமான திருப்பு முனை என்றுதான் சொல்ல வேண்டும்.

தனது உறுப்பினர்களின் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தாண்டி வேறு எது பற்றியும் கவலைப்படுவதில்லை என்று தொழிற்சங்கங்கள் பற்றி ஒரு குற்றச்சாட்டு சொல்லப்படுவது. ஒரு தொழிற்சங்கத்தின் அடிப்படை நோக்கமே தனது உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதுதான் என்றாலும் கூட இப்படிப்பட்ட குற்றச்சாட்டுக்கள் வந்து கொண்டேதான் இருக்கிறது. இன்றைக்கு இடதுசாரிக் கட்சிகளைத் தாண்டி மக்கள் நலம், தேச ஒற்றுமை, தேசத்தின் பொருளாதார இறையாண்மை குறித்து கவலைப்படுவதும் போராடுவதும் தொழிற்சங்க இயக்கங்களே. தொழிற்சங்க இயக்கங்களின் போராட்டங்கள் இல்லையென்றால் இன்று நாடாளுமன்றம் கூட பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு விற்கப் பட்டிருக்கும்.

இந்திய வரலாற்றில் ஒரு நிறுவனத்தின் தோற்றத்திற்கும் அதன் பாதுகாப்பிற்கும் அங்கே இருக்கிற தொழிற்சங்கத்தின் போராட்டம்தான் காரணம் என்று சொல்ல முடியுமானால் அது இன்சூரன்ஸ் துறையில் மட்டுமே சாத்தியம். 1951 ல் உருவான அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் முதல் கோரிக்கையான காப்பீட்டுத்துறை தேசியமயமாக்கப்பட வேண்டும் என்பது 1956 ல் எல்.ஐ.சி யின் தோற்றத்தால் வெற்றி பெற்றது. அதன் பின்பு எத்தனையோ தாக்குதல் வந்தாலும் இன்றும் வெற்றிகரமான பொதுத்துறை நிறுவனமாக எல்.ஐ.சி நீடிப்பதற்கு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் இயக்கங்களே காரணம்.

ஊழியர் நலன் என்பதைத் தாண்டி நிறுவன நலன் என்பதிலும் அக்கறை செலுத்துகிற அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் நடவடிக்கைகள் எல்.ஐ.சி யின் எல்லைகளைத் தாண்டி விரிவடைந்து கொண்டே இருக்கிறது. தன் ஊழியர்களை பொறுப்பான மக்களாக உருவாக்குவது, இதர பகுதி உழைக்கும் மக்களோடு இணைந்து செயல்பட வைப்பது, சமூக அநீதிகளுக்கு எதிரான போராட்டங்களில் முன்னணியில் நிற்பது என்று பரிணமித்துள்ளது.

இயற்கைச் சீற்றங்களால் துயருற்ற மக்களுக்கு துணை நிற்பது என்பது அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பாரம்பரியமாகவே மலர்ந்துள்ளது. கண்ணீர்த்துளி மண்ணைத் தொடுவதற்கு முன்பாக களத்தில் இருப்பவனாக அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் உறுப்பினர்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர்.

சுனாமி சமயத்தில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் நிவாரணப்பணிகள்  எப்படி அமைந்தது என்பது பற்றி முன்னரே இவ்வலைப்பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளேன்.

உடனடியாக தேவைப்படும் அத்தியாவசிய உதவிகளைச் செய்வது, நீண்ட காலத்திற்கு பயன்படும் உதவிகளைச் செய்வது என்று இரண்டு விதமாக அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் நிவாரணப் பணிகள் அமையும்.

அப்படி நீண்ட காலத்திற்கு பயன் தரும் விதமாக அமைந்த சில முக்கியப் பணிகளை இங்கே பதிவு செய்கிறேன்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரிசா மாநிலம், கேந்திரபாரா மாவட்டத்தில் பள்ளிக் கட்டிடங்கள் கட்டித்தரப்பட்டுள்ளன.

நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குஜராத் மாநிலம் பூஜ் மாவட்டத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில்  இரு மருத்துவமனைகள் கட்டித்தரப் பட்டுள்ளன. (மருத்துவமனை கட்ட அனுமதி வழங்கவும் பிறகு அதனை திறக்கவும் பாஜக அரசு படாத பாடு படுத்தியதாக ஒரு அகில இந்திய செயற்குழுக் கூட்டத்தில் அப்போதைய அகில இந்திய துணைத்தலைவரும் அகமதாபாத் கோட்டத்தைச் சேர்ந்தவருமான தோழர் கே.எம்.ராமி சொன்னது இன்னும் நினைவில் உள்ளது.)

சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிரந்தர நிவாரணப்பணியாக கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் ஆழிக்கல் என்ற கிராமத்தில் சுனாமியால் இடிந்து போன பள்ளிக் கட்டிடம் மீண்டும் கட்டித்தரப் பட்டது. நாகை மாவட்டத்தில் புதுப்பட்டிணம் என்ற கிராமத்திலும் கடலூர் மாவட்டத்தில் கிள்ளை என்ற கிராமத்திலும் சமுதாயக் கூடங்கள் கட்டித் தரப்பட்டன.

பல்வேறு சந்தர்ப்பங்களில் நேரடியாக மக்களிடம் பொருட்களாக அளித்ததை பட்டியல் போடுவது சிரமம் என்பதால் அந்தப்பக்கம் நான் செல்லவில்லை.

இதோ இப்போது பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தோழர்கள் அளித்த நிதி கொண்டு ஆறு ஆம்புலன்ஸ்கள் அம்மாநில மருத்துவமனைகளுக்கு வழங்கப் பட்டுள்ளன. அது மட்டுமல்ல, ஒரு பெண்கள் பள்ளியின் இடிந்து போன கட்டிடத்தை கட்டுவதற்கான நிதியும் வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்ட அடிப்படையில் பனிரெண்டு குளிர்சாதன சவப்பெட்டிகளும் வழங்கப்பட்டுள்ளது. 





அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் எல்லை இந்தியாவிற்குள் சுருங்கியதும் கிடையாது. நான் பணியில் சேர்ந்த காலத்தில் தென் ஆப்பிரிக்க மக்களின் நிற வெறிக்கு எதிரான போராட்டத்திற்காக   ஊழியர்கள் அளித்த நிதியாக ரூபாய் அறுபத்தி ஓராயிரம் (எண்பதுகளில்) அளிக்கப்பட்டதும் நினைவிற்கு வருகிறது.

இப்போது நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாள மக்களுக்கு உதவ சங்கத்தின் நிதியிலிருந்து ரூபாய் ஐந்து லட்சம் அளிப்பது என்று சமீபத்தில் புவனேஷ்வரில் நடைபெற்ற அகில இந்திய செயற்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இப்படி ஒரு அமைப்பில் உறுப்பினராக இருக்க என்ன தவம் செய்தனை என்று கேட்டால் அது பொருத்தமாகத்தான் இருக்கும்.



Friday, May 29, 2015

தங்கத்தில் டாய்லெட் – அடுக்குமா இது?



ஆடம்பரக் கல்யாணங்களைப் பற்றி நிறையவே படித்திருக்கிறோம், கேள்விப் பட்டுள்ளோம். இந்தியாவைப் பொறுத்தவரை முதல் ஆடம்பரத் திருமணம் என்பது வளர்ப்பு மகனின் திருமணம். (அப்படியெல்லாம் அக்கல்யாணத்திற்கு ஜெ செலவு செய்யவில்லை என்று நீதிமான் குமாரசாமி சொல்லி விட்டது வேறு விஷயம்) அதற்குப் பிறகு சஹாரா நிறுவன மோசடி புகழ் சுப்ரதோ ராய் குடும்பத் திருமணங்கள் உள்ளிட்ட ஏராளமான ஆடம்பரத் திருமணங்கள் நடந்து விட்டது. இனியும் நடக்கும்.
                      
சீதனங்களை வாரி வழங்குவார்கள். கார் வாங்கித் தருவார்கள், பங்களாக்கள் வாங்கித் தருவார்கள், வெளிநாட்டிற்கு தேனிலவிற்கு அனுப்புவார்கள், தீவுகள் கூட வாங்கித் தருவார்கள். விமானங்கள் கூட வாங்கித் தரப்படலாம்.

ஆனால் சவுதி அரேபிய மன்னன், தனது மகளின் திருமணத்திற்கு தங்கத்தில் டாய்லெட் செய்து கொடுத்தாராம் (ஜெ அம்மையாரின் முதல் ஆட்சிக் காலத்தில் அவர் செல்லும் எல்லா ஊர்களிலும் பொதுக்கூட்ட மேடைக்குப் பக்கத்தில் அமைக்கப்படும் குளிர்சாதன வசதி கொண்ட கழிப்பறை கடும் விமர்சனத்துக்கு உள்ளானது நினைவிற்கு வருகிறதா?)






பணக் கொழுப்பு அல்லது அபரிமிதமான பணம் உருவாக்கும் வக்கிரம் என்று இதைச் சொல்ல முடியும்.

மண மகளின் திருமண ஆடைக்கு மட்டுமான செலவு நூற்றி எண்பது கோடி ரூபாயாம்.

பாவம் இந்த ஆடையை அணிவதற்கு அந்தப் பெண் என்ன கஷ்டம் பட்டதோ? அதை விடப் பாவம் அந்த மணமகன்! மனைவியின் அருகில் இருப்பது கூட தெரியாமல் ஒடுங்கி அமர்ந்திருக்கிறான்!

Thursday, May 28, 2015

ஆர்.கே.நகர் வாக்காளர்களே, அடிக்க மாட்டீங்களே?


 
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று திமுக அறிவித்து விட்டது. விடுதலைச் சிறுத்தைகளும் அதே முடிவு எடுத்துள்ளனர். மற்ற கட்சிகளின் நிலையும் இன்னும் ஓரிரு நாளில் தெரிந்து விடும்.

இன்றைய சூழலில் இந்த இடைத் தேர்தல் ஒரு கேலிக் கூத்தாகத்தான் இருக்கப் போகிறது. நீதியை நிதியால் வென்றவர்கள், ஜனநாயகத்தை பண நாயகத்தால் வெல்லப் போகிறார்கள். சாதாரணமான இடைத் தேர்தல் என்றாலே ஆளும் கட்சியின் அத்தனை பரிவாரமும் அங்கே டேரா போட்டு எல்லா அதிகார இயந்திரங்களையும் தவறாக பயன்படுத்தும். 

இப்போது போட்டியிடப் போவதோ ஆளும் கட்சியின் தலைமை பீடம். அத்தனை அடிமைகளும் அங்கே சேவகம் செய்து வாக்கு வியாபாரம் செய்வார்கள். 

இப்படிப் பட்ட நிலைமையில் அத்தனை எதிர்க்கட்சிகளும் இடைத் தேர்தலை புறக்கணிப்பதுதான் சரியாக இருக்கும். 

போட்டியே இல்லாமல் மகா கனம் பொருந்திய அம்மையார் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்து விடலாம்.

என்ன இதனால் ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்குத்தான் பேரிழப்பு. 

திருமங்கலம் தொகுதியில் தொடங்கிய பார்முலா படி வாக்குகளை விற்பதற்கான வாய்ப்பு பறி போய் விடும். ஆயிரக் கணக்கில் பணம் வரும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்து விடும்.  திமுக போட்டியிடாத காரணத்தால் வாக்குக்கான ரூபாய் மதிப்பு குறைந்து விட்டதாய் ஏற்கனவே ஒரு தோழர் எழுதியிருந்தார்.

போட்டியே இல்லாமல் போய் விட்டால் கொஞ்ச நஞ்ச கவனிப்பு கூட இல்லாமல் போய் விடும்.

தேர்தலே அங்கே தேவையில்லை என்று சொன்னால் ஆர்.கே.நகர் வாக்காளர்கள் அடிக்க வருவார்களோ என்றுதான் அச்சமாக உள்ளது.
 

மோடிக்கு பாஜக தொழிற்சங்கத்தின் வேலை நிறுத்தப் பரிசு





நேற்று முன்தினம் புதுடெல்லியில் அனைத்து தொழிற்சங்கங்களின் தேசியக் கருத்தரங்கம் நடைபெற்றது.

அந்த கருத்தரங்கம் தொழிலாளர்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதித்து பின்பு ஒரு பிரகடனம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

மத்திய அரசு ஒரு தொழிலாளர் விரோத, மக்கள் விரோத, கார்ப்பரேட் ஆதரவு அரசு என்ற குற்றச்சாட்டோடு அந்த பிரகடனம் துவங்குகிறது. (அதன் தமிழாக்கத்தை நாளை பகிர்ந்து கொள்கிறேன்).

மத்தியரசு அதன் பிற்போக்குத்தனமான தொழிலாளர் விரோதக் கொள்கைகளை மாற்றிக் கொண்டு பெரு முதலாளிகளுக்கு வால் பிடிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கிறது.

பாஜக அரசின் கொள்கைகளுக்கு எதிராக நாடு தழுவிய கருத்துப் பிரச்சாரம் மேற்கொள்வது என்பதும் 02.09.2015 அன்று நாடு தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்தம் மேற்கொள்வது என்று அக்கருத்தரங்கம் முடிவெடுத்தது.

இடதுசாரி தொழிற்சங்கங்கள் மட்டும் பங்கேற்ற கருத்தரங்கம் அல்ல இது. காங்கிரஸ் கட்சியின் ஐ.என்.டி.யு.சி மற்றும் திமுக வின் தொமுச வோடு பாரதீய ஜனதா கட்சியின் தொழிற்சங்கமான பாரத் மஸ்தூர் சங்கின் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.

ஆம். நிஜமாகத்தான்.

பி.எம்.எஸ் சங்கத்தின் தலைவர்கள் கருத்தரங்கில் பங்கேற்று பிரகடனத்திலும் கையெழுத்திட்டுள்ளனர்.

அரசுக்கு எதிராக பேசாதே என்று ஆர்.எஸ்.எஸ் அறிவுறுத்தி சில நாட்கள் கூட முடியாத சூழலில் பி.எம்.எஸ் சங்கம், தொழிலாளர் பிரச்சினைகளுக்காக மற்ற தொழிற்சங்கங்களோடு கரம் கோர்த்து நிற்பது முக்கியமானது.   

மோடியின் நடவடிக்கைகளைச் அவர்களைச் சேர்ந்தவர்களே ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்கு வேறு என்ன ஆதாரம் வேண்டும்?

ஆகவே பாஜக ஆட்கள் யாரும் ஓராண்டு சாதனை என்று கதை விட வேண்டாம்.

Wednesday, May 27, 2015

வேலூர் வெயிலூரா? அப்படியெல்லாம் சொல்லக் கூடாது



தென் மாவட்டங்களில் பயணம் செய்த போது உணர்ந்த ஒரு உண்மை என்னவென்றால் வேலூரில் மட்டும் வெயில் அதிகமாக இல்லை. தமிழகம் முழுதிலுமே அப்படித்தான் வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது.

வேலூர் மட்டுமில்லை, தமிழகத்தின் ஒவ்வொரு ஊருமே வெயிலூர்தான். ஆனால் இதை புரிந்து கொள்ளாமல் தமிழகத்தின் பிற ஊர் மக்கள் வேலூர் மக்களை பரிதாபமாக பார்க்கிறார்கள் அல்லது எப்படித்தான் அங்க இருக்கீங்களோ என்று நக்கல் செய்கிறார்கள்.

நேற்று முன் தினம் திருச்செந்தூரில் ஒரு கடையில் கரும்புச்சாறு பருகுகையில் அந்த கடைக்காரர் “எந்த ஊருங்க நீங்க” என்று கேட்டதற்கு வேலூர் என பதிலளித்ததும் “பாவங்க நீங்க, அங்க ஓவர் வெயிலாமே” என்று பரிதாபப்பட்டார்.

வழக்கமான வேலூர் வெயிலை விட அன்று திருச்செந்தூரில் வெப்பம் தகித்துக் கொண்டிருக்கிறது. அந்த வெப்பத்தோடு அவர் சொன்னதும் சேர்ந்து கொள்ள “இதோ இப்ப உங்க ஊரில அடிக்கிறதை விட வேலூரில குறைவுதான் என்று நான் சொல்ல, என் சகலையோ "எங்க ஊரில குளிர் காலத்துல சாயந்தரம் ஆறு மணிக்கு ஸ்வெட்டர் போடாம வெளிய வர முடியாது. இங்க அப்படியா?” என்று கேட்க அவர் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.

“நீ எதற்கு பேசுகிறாய், நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று வேலூரை பழிப்பவர்களுக்கு இன்று இயற்கையே பதிலடி கொடுத்து விட்டது.

மாலை மூன்று மணி இருக்கும். ஒரு சில விஷயங்கள் குறித்து முதுநிலை கோட்ட மேலாளரிடம் விவாதிக்க படியேறுகையில் வாசலில் பெரும் ஓசை. என்னமோ ஏதோ என்று பதைபதைத்து வந்தால், வானத்தில் ஓட்டை விழுந்து இருக்கும் மேகமெல்லாம் அப்படியே கீழே விழுவது போல அப்படி ஒரு பெரு மழை. முதல் சில நிமிடங்களில் அடித்த காற்று எங்கே மழையை கடத்திச் சென்று விடுமோ என்ற அச்சம் இருந்தாலும் வென்றது மழைதான். 


இதோ இன்னும் பெய்து கொண்டிருக்கிறது.  நடுவில் கொஞ்ச நேரம் கூட இடைவெளி கொடுக்காததால் ந்னைந்து கொண்டுதான் வீட்டிற்கு வந்தேன். 

இதோ இந்த படம் மாலை சரியாக ஐந்து மணி ஐந்து நிமிடத்திற்கு எடுக்கப் பட்டது. எப்படி இருள் கவிழ்ந்து கொண்டுள்ளது பாருங்கள். 



இனி யாரும் வேலூரை வெயிலூர் என கிண்டல் செய்யாதீர்கள். அப்படி கிண்டல் செய்யும் முன் உங்கள் ஊரின் வெப்ப நிலை என்ன என்பதை அறிந்து கொண்டு அதற்குப் பின் பேசுங்கள்.