Friday, February 28, 2025

சீமான் எனும் …………………….

 


சீமான் சேலத்தில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அந்த காணொளியை நானும் பார்த்துத் தொலைத்தேன். அதனை  பகிர்ந்து என் பக்கத்தின் தரத்தை தாழ்த்திக் கொள்ளவிரும்பவில்லை.


 

பாலியல் குற்றம் ஒன்றை செய்து விட்டு அதை தெனாவெட்டாக பேசுவதெல்லாம் பொறுக்கித்தனம். அதையும் சிலபெண்கள் புன்னகைத்த முகத்துடன் கேட்டுக் கொண்டிருக்கிறார்களே! அவர்களை என்ன சொல்வது?

 சரி ,

 சீமானை என்னவென்று திட்டுவது?

 எல்லா கெட்ட வார்த்தைகளும் பொருத்தமாகவே இருக்கும்.

 பாஜகவின் ஆதரவு இருக்கும் தைரியத்தில் இன்னும் மோசமாக ஆடினாலும் ஆச்சர்யப்பட வேண்டியதில்லை.

மொட்டைசாமியார் அவ்ளோ நல்லவர் கிடையாதே

 


மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் பார்த்த பதிவு கீழே உள்ளது.


இந்த செய்தியை நம்புவதா, வேண்டாமா என்றொரு குழப்பம். போட்டோஷாப்பாக இருக்குமா என்றொரு ஐயமும் கூட. ஒரு வேளை உண்மையென்றால் தமிழுக்கு முன்னுரிமை கொடுக்கும் அளவிற்கு மொட்டைச்சாமியார் ஒன்றும் நல்லவர் கிடையாதே! காசியைச் சேர்ந்தவர்கள், காசிக்கு சென்று வந்தவர்கள் உண்மையை சொல்லுங்களேன், தமிழர்களை ஏமாற்றி வசப்படுத்த இப்படி ஒரு நாடகத்தை அரங்கேற்றி உள்ளனரா என்று . . .

Thursday, February 27, 2025

கங்கை யமுனை சங்கமத்தில் குளித்த கதை

 


மோடி, மொட்டைச்சாமியார் வகையறாக்கள் பில்ட் அப் கொடுத்த மகா கும்ப்மேளா ஒரு வழியாக நேற்று முடிந்து விட்டது. உபி மாநில அதிகாரிகள் கஜானாவில் சேர்ந்த பணத்தை எண்ணி மாநிலத்தின் ஒட்டு மொத்த கடனை கட்டி புது புது வளர்ச்சித் திட்டங்களுக்கு பணத்தை முதலீடு செய்வார்கள் என்று நம்புவோம்.

கங்கையும் யமுனையும் (சங்கிகளின் கற்பனை நதி சரஸ்வதியை நான் கணக்கிலெடுக்கவில்லை)  சங்கமிக்கும் இடத்தில் நானும் ஒரு முறை குளித்துள்ளேன். 

2002 ம் ஆண்டு உபி மாநிலம் கான்பூரில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. அகில இந்திய செயற்குழு உறுப்பினராக நான் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு நடைபெற்ற முதல் கூட்டமும் அதுதான் கான்பூருக்கு சென்னையிலிருந்து தினசரி ரெயில்கள் அப்போது (இப்போதும் இருப்பதாக தெரியவில்லை)  இல்லை. வாராந்திர ரயில்கள்தான்.

தமிழ்நாட்டிலிருந்து சென்ற அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் ஒன்றரை நாட்களுக்கு முன்பாகவே கான்பூர் சென்று விட்டோம். பயணக் களைப்பில் மாலை வரை ஓய்வு எடுத்துக் கொண்டாகி விட்டது. 1857 சிப்பாய் புரட்சி தொடர்பான ஒரு பூங்கா (அந்த புரட்சியை தொடர்பு படுத்தக்கூடிய விதத்தில் எந்த நினைவுச்சின்னமும் அங்கு இல்லை. இந்திய சிப்பாய்களுக்கு பயந்து வெள்ளையினப் பெண்கள் குதித்து இறந்து போன கிணறு மட்டும் மூடப்பட்டிருந்தது) வுக்கு அழைத்துச் சென்ற கான்பூர் தோழர் ஒருவர் அடுத்து கூட்டிச் சென்ற இடம் ஜேகே கோயில். ராதா சமேத கிருஷ்ணன் கோயில்தான். எப்படி டெல்லியில் ராதாகிருஷ்ணன் கோயிலும் ஹைதராபாத்தில் வெங்கடாசலபதி போயிலும் அதை கட்டிய பிர்லாவின் பெயரில் பிர்லா மந்திர் என்று அழைக்கப்படுகிறதோ, அதே போல கோயிலை கட்டிய ஜே.கே மில்ஸ் முதலாளி பெயரில் அந்த கோயில் அழைக்கப்படுகிறது.

அடுத்து ஒரு முழு நாள் உள்ளதே, என்ன செய்வது என்ற கேள்விக்கும் கான்பூர் தோழர்களே விடை சொன்னார்கள். ஒரு டாடா சுமோ ஏற்பாடு செய்து கொடுத்தார்கள்.  அதிகாலையில் புறப்பட்டோம். சென்னை 2 கோட்டத்தின் சார்பாக தோழர் டி.ஏ.விஸ்வநாதன், சேலம் கோட்டத்தின் சார்பாக தோழர் பாலசுப்ரமணியன், தஞ்சைக் கோட்டத்தின் சார்பாக தோழர் எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி,  நெல்லை கோட்டத்தின் சார்பாக தோழர் டி.தேவபிரகாஷ், கோவைக் கோட்டத்தின் சார்பாக தோழர் டி.நீலமேகம், மதுரை கோட்டத்தின் சார்பாக தோழர்கள் பாரதி மற்றும் மீனாட்சி சுந்தரம், வேலூர் கோட்டத்தின் சார்பாக நானும் சிறப்பு அழைப்பாளராக அப்போது பங்கேற்ற இன்றைய அகில இந்திய இணைசெயலாளர் தோழர் எம்.கிரிஜா என இத்தனை பேரையும் அடைத்து சுமோ புறப்பட்டது. சென்னை 1 கோட்டத்தின் சார்பாக யார் வந்தார்கள் என்பது மட்டும் நினைவில் இல்லை. 

பயண நேரம் எவ்வளவு என்பதெல்லாம் நினைவில் இல்லை. ஆனால் வண்டி போனது போனது போய்க் கொண்டே இருந்தது. அலகாபாத் சென்றதும் பலத்த ஏமாற்றம்.  நேரு குடும்ப சொத்தாக இருந்து அருங்காட்சியமாக மாறிய ஆனந்தபவன், பகத்சிங்கின் சகா சந்திரசேகர் ஆசாத் பிரிட்டிஷ் ராணுவத்துடன் போராடி சுட்டுக் கொல்லப்பட்ட பூங்கா அகியவை மூடப்பட்டிருந்தது.

யமுனை நதிக்கரையின் ஓரத்தில் இருந்த கோட்டையை வெளியே இருந்து மட்டும்தான் பார்க்க முடிந்தது. அந்த மொட்டை வெயிலில் யமுனை கரையில் இரண்டு பாம்பாட்டிகளைத் தவிர வேறு யாருமில்லை.  பிறகு படகில் சங்கம் சென்றோம். கங்கையும் யமுனையும் சங்கமிக்கும் அந்த இடம் சின்னஞ்சிறு தீவு போலவே இருந்தது. கங்கைக்கும் யமுனைக்கும் வித்தியாசம் நன்றாகவே தெரிந்தது, நீரின் நிறம் மற்றும் வேகத்தில் . . .  படகில் சென்ற எல்லோருமே அங்கே தர்ப்பணம் செய்தார்கள், எங்களைத் தவிர. . . ஒரு புரோகிதர் சுத்தமான தமிழில் நீங்க எல்லாம் என்ன கோத்ரம் என்று கேட்க தோழர் டி.தேவபிரகாஷ் ஏ.ஐ.ஐ.இ.ஏ கோத்ரம் என்று சொன்ன போது எனக்கு விசிலடிக்க தோன்றியது. சங்கமத்தில் குளித்த பின்பு மதிய உணவுக்குப் பிறகு கான்பூர் திரும்பினோம்.

மூன்று நாட்கள் செயற்குழு முடிந்த பின்பு மாலை ஆறு மணிக்கு ஏறிய ரயில் மறு நாள் முழுதையும் எடுத்துக் கொண்டு அதற்கும் மறுநாள் காலை பத்து மணியளவில் சென்னையில் கொண்டு சேர்த்தது. இந்த பயணத்தில் நானும் தோழர் டி.ஏ.விஸ்வநாதன், தோழர் சேலம் பாலு என மூவர் மட்டும்தான். தோழர் டி.ஏ,வி யும் நானும் பெரும்பாலும் பேசிக் கொண்டே வர அவ்வப்போது தோழர் பாலு பேசுவார்.

அலகாபாத் பயணம் ஒரு முக்கியமான பாடத்தை கற்றுக் கொடுத்தது. கான்பூர் செல்கையில் கணக்காகத்தான் பணம் எடுத்துச் சென்றிருந்தேன். அலகாபாத் செல்ல மட்டும் ஒருவருக்கு அறநூறு ரூபாய் ஆனதால் கையிருப்பு மிகவும் குறைந்து போனது. ஏ.டி.எம் கார்ட் கூட அப்போது இல்லை.  இரண்டாம் நாள் இரவில் மற்றவர்கள் ஷாப்பிங் போன போது நான் மிகவும் சிக்கனமாக மகனுக்கு மட்டும் ஒரு ஜிப்பா வாங்கினேன். மனைவிக்கு எதுவும் வாங்கவில்லையா என்று கேட்ட கோழிக்கோடு கோட்டத்தோழர் அச்சுதனிடம் உங்கள் வழிகாட்டுதல்தான் என்று சொல்லி சமாளித்தேன். அதென்ன வழிகாட்டுதல் என்பதை இந்த இணைப்பில் சென்று அறிந்து கொள்ளுங்கள்

அதற்குப் பிறகுதான் எங்கே பயணம் மேற்கொண்டாலும் ஒரு கணிசமான தொகையை ஒரு கவரில் போட்டு கையிருப்பாக எடுத்துச் செல்வேன், அதற்கான தேவை இல்லாவிட்டாலும் கூட. 


பிகு: மேலே உள்ள படம் இன்றைய ஆங்கில இந்து இதழில் முதல் பக்கத்தில் வெளிவந்திருந்தது. 

Wednesday, February 26, 2025

பாட்டை மாற்றிப் பாடுவாரா?

 


மோடி கலந்து கொண்ட ஒரு சிவராத்திரி விழாவில் அவரை வைத்துக் கொண்டே "கொலை கொலையா முந்திரிக்கா, கொள்ளையடிச்சவன் எங்க இருக்கான், கூட்டத்தில் இருக்கான், கண்டுபிடி" என்று பாடப்பட்ட பாடலை அமித்ஷா கலந்து கொள்வதால் "கொலை செஞ்சவன் எங்க இருக்கான்? கூட்டத்தில் இருக்கான், கண்டுபிடி" என்று மாற்றிப் பாடுவாரோ?

ரஷ்யா Vs உக்ரைன், அமெரிக்கா பல்டி

 

ரஷ்ய - உக்ரைன் போர் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. உக்ரைனை டம்மியாக வைத்துக் கொண்டு அமெரிக்காவும் நேடோவில் உள்ள ஐரோப்பிய நாடுகள் நடத்திய போர்தான் அது.

ட்ரம்ப் வந்தவுடன் அவர் உக்ரைன் ஜனாதிபதி ஜேலென்ஸ்கியை கிறுக்கன் என்று திட்டுகிறார்.

ஒரு கிறுக்கனே
இன்னொரு கிறுக்கனை
கிறுக்கன் 
என்று சொல்கிறானே!
அடடே
ஆச்சர்யக்குறி.

நேற்று ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் ஐ.நா சபையில் ஒரு தீர்மானம் கொண்டு வருகிறது. 

இது நாள் வரை உக்ரைனுக்கு ஆதரவாக வாக்களித்த அமெரிக்காவும் அதன் கூட்டாளி இஸ்ரேலும் ரஷ்யாவிற்கு ஆதரவாக வாக்களித்தனர். இந்தியா வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. முழு விபரம் கீழே . . .


சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பது போல அமெரிக்காவின் பல்டிக்குப் பின்னே ஏதோ கணக்கு இருக்கிறது. அதன் பாதிப்பு ரஷ்யாவுக்கா உக்ரைனுக்கா என்பது சீக்கிரம் தெரிய வரும்.  


Tuesday, February 25, 2025

மோடியை மணிப்பூர் வரவேற்குமா?

 

நேற்று காலை ஆங்கில இந்து நாளிதழின் முதல் பக்க விளம்பரம் இது. அது அஸ்ஸாம் மாநில அரசால் வெளியிடப்பட்ட விளம்பரம்.

 


மோடி மணிப்பூருக்கு போனால் அம்மாநில அரசும் ஒது போன்றதொரு வரவேற்பு விளம்பரத்தை கொடுக்கும். அதில் எந்த சந்தேகமும் அவசியமில்லை.

 அப்படி மோடி போனால் மணிப்பூர் மக்கள் அவரை வரவேற்பார்களா? அல்லது #GetOutModi. #GoBackModi  என்று  துரத்தியடிப்பார்களா?

 இந்த எழவே வேண்டாம் என்று மோடி மணிப்பூருக்கே போக மாட்டார்.   மேலே உள்ள  படம்   அதைத்தான் சொல்கிறது.

 

Sunday, February 23, 2025

குருஜியே பொய் சொன்னா மோடி?

 


எம்.ஏ (என்டயர் பொலிட்டல் சைன்ஸ்) படித்ததாக மோடி பொய் சொல்வதற்கு தனக்குத்தானே "வீர" என்று அடைமொழி கொடுத்துக் கொண்ட மகாத்மா காந்தி கொலை அக்யூஸ்ட் சாவர்க்கரிடமிருந்துதான் என்று இத்தனை நாள் நினைத்துக் கொண்டிருந்தோம்.

ஆனால் சாவர்க்கருக்கு முன்பே இது போன்ற வெட்டி பீற்றலை சங்கிகளின் முக்கியமான தலை ஒன்று செய்துள்ளது இப்போது அம்பலமாகியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இரண்டாவது சர்சங்சாலக்கான குரு கோல்வாக்கர்தான் அது.

பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் வெறும் ஆய்வக உதவியாளராக இருந்த கோல்வாக்கர், தன்னை முன்னால் பேராசிரியர் என்றே முன்னிலைப் படுத்திக் கொண்டிருக்கிறார். அதை சங் பரிவாரங்களை தொடர்ந்து அம்பலப்படுத்தி வரும் தீரெந்திர ஜா அம்பலப்படுத்தியுள்ளார். 


சங்கி என்றாலே பொய்யர்தான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

கோல்வாக்கரே போலி பேராசிரியர் என்றால் நான் செய்வதும் தப்பே இல்லை என்று போலிப் பேராசிரியன் ராம.சீனுவாசன் மகிழ்ச்சியடைவான் அல்லவா!

ரெண்டரை லட்சம் கோடி ரூபாயாம் . . .

 


அடித்து விடுவது என்று முடிவெடுத்தால் சங்கிகள் போல அளந்து விட  யாரும் இல்லை. 


மகா கும்பமேளா என்ற பெயரில் உலாவும் கதைகளைத்தான் சொல்கிறேன்.



இதுவரை 45 கோடி  மக்கள் வந்ததாக சொல்கிறார்கள்.  55 கோடியை கடக்கும் என்று கணக்கு போடுகிறார்கள். அப்படியென்றால் இந்திய மக்கட்தொகையில் கிட்டத்தட்ட  முப்பத்தி எட்டு சதவிகிதம் அலகாபாத் போயிருக்க வேண்டும். 

அப்படியென்றால் விமானங்களும் ரயில்களும் பேருந்துகளும் எத்தனை பயணிகளை அங்கே அழைத்துச் சென்றன என்ற விபரத்தை தருவார்களா? 

எத்தனை பேர் நெரிசலில் சிக்கி இறந்தார்கள் என்ற கணக்கே இல்லாத ஆட்சியாளர்கள் இவர்கள் என்பதை நாம் மறக்கக்கூடாது.

7500 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டது என்று சொல்கிறார்கள். அது ஒரு வேளை உண்மையாக இருக்கலாம். 7500 கோடிக்கு கணக்கும் இருக்கலாம். 

ஆனால் அந்த ரெண்டரை லட்சம் கோடி ரூபாய் வருமானம் வந்தது என்பதில்தான் சங்கிகளின் அளப்பு மேனியா வெளிப்படுத்துகிறது, எங்கிருந்து வந்தது அந்த தொகை? யாருக்கு சென்றது?

அலகாபாத் கோயில்களில் உண்டியலில் விழுந்த தொகையா? (தட்டில் விழும் தட்சணை கணக்கில் வராது? குளிக்க வந்தவர்கள் தங்க, சாப்பிட செலவழித்த  தொகையா? கரையிலிருந்து சங்கமத்துக்கு ( 23 ஆண்டுகள் முன்பாக கான்பூர் போன போது அலகாபாத் போன போது சங்கமம் சென்று குளித்துள்ளேன். அந்த அனுபவத்தை பிறகு எழுதுகிறேன்). செல்வதற்கான படகுக் கட்டணமா? ரெண்டரை லட்சம் கோடி எப்படி வந்தது என்று சங்கி எகானமிஸ்டுகள் விளக்குவார்களா?

அடுத்த கதை ஒட்டு மொத்த உற்பத்தியில் 23 பில்லியன் டாலர் புகுத்தப்பட்டது. 

23 பில்லியன் டாலர் என்றால் அது கிட்டத்தட்ட ரெண்டு லட்சம் கோடி ரூபாய். 

ரெண்டரை லட்ச ரூபாய் வருமானம் என்றால் அது எல்லாமுமே ஒட்டு மொத்த உற்பத்தி கணக்கில் சேர வேண்டுமே! அதிலே ஒரு ஐம்பதாயிரம் கோடி ரூபாய் துண்டு விழுகிறதே! அந்த துண்டை  யாருக்கு போர்த்தினார் மொட்டைச்சாமியார்?

இப்படியெல்லாம்  கேள்வி கேட்பதால்தான் அந்த அயோக்கிய சங்கி படித்த நடுத்தர மக்களை திட்டுகிறார்.


Saturday, February 22, 2025

மோடியை ட்ரம்ப் அசிங்கப்படுத்தினால் கோபம் வராதா?



 மோடி இந்தியா திரும்பிய பிறகு ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் ட்ரம்ப் பேசியது கீழே உள்ளது. தமிழாக்கத்திற்கு ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் தோழர் ஆர்.விஜயசங்கருக்கு நன்றி.

 மகாவும் மிகாவும்

 டெஸ்லா கார் தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் அமெரிக்க அதிபர் டொனால்ட்  டிரம்பின் மூத்த ஆலோசகருமான ஈலான் மஸ்க் இந்தியாவில் கார் தொழிற்சாலை தொடங்கப் போவதாகத் அறிவித்திருந்தார். டிமோ அமெரிக்கா சென்ற போது அவரை மஸ்க் சந்தித்தார். ஆனால் நேற்று நடந்த ஒரு ஊடக சந்திப்பில் மஸ்க்கை பக்கத்தில் வைத்துக் கொண்டே மஸ்க்கின் திட்டம் அமெரிக்க நலனைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது நியாயமில்லை என்று கூறியிருக்கிறார். இந்தியா அமெரிக்கப் பொருட்களின் இறக்குமதி மீது அதிக காப்பு வரி விதிக்கிறது என்கிற குற்றச்சாட்டின் பின்னணியில்தான் டிரம்ப் இப்படிக் கூறியிருக்கிறார். மஸ்க்கும் அதை ஒப்புக் கொள்கிறார்.

 டிரம்ப் மேலும் கூறியது: “காப்பு வரியைப் பொறுத்தவரையில் யாரும் என்னுடன் வாதிட முடியாது. நான் பிரதமர் மோடியிடம் கூறினேன். இதைத்தான் நாங்கள் செய்யப் போகிறோம். பரஸ்பர வரி விதிப்பு. நீங்கள் என்ன வசூலிக்கிறீர்களோ, நாங்களும் அதையே வசூலிப்போம்.”

 Making America Great Again (MAGA) என்பதுதான் டிரம்பின் தேர்தல் முழக்கம். நம்மவரும் எசப்பாட்டுப் பாடி a Making India Great Again (MIGA) என்று அசடு வழிந்தார்.

 MAGA ஆவதற்கு MIGAவைத் தடுத்துச் சுரண்டுவதுதான் டிரம்பின் திட்டங்களில் ஒன்று.

 அமெரிக்கச் சங்கிலி அதைத்தான் நமக்கு உணர்த்துகிறது.

 நியாயமாக பார்த்தால் சங்கிகள் இதற்குத்தான் பொங்க வேண்டும். ஆனால் ட்ரம்பை ஏதாவது சொன்னால் அடி விழும் என்பதால் கள்ள மவுனம் சாதிக்கிறார்கள்.

Friday, February 21, 2025

இரண்டு கெட் அவுட்டும் ஒன்றா? ?

 


 

இன்றைக்கு மத்யமர் ஆட்டுக்காரன் குழு பக்கம் போகவே முடியவில்லை. கெட் அவுட் ஸ்டாலின் என்பது ட்விட்டரில் வைரலாவதால் வெறித்தனமாக இருக்கிறார்கள். 2026 சட்டமன்ற தேர்தல் ட்விட்டரின் நடைபெறப் போவதான ஒரு நெனப்பில்  ஆட்சியைப் பிடுத்தது போன்ற தெம்பில் இருக்கிறார்கள்.

 இந்த பிரச்சினை எங்கே துவங்கியது?

 தமிழ்நாட்டுக்கு உரிய நிதியை அளிக்காமல் அடாவடி செய்யும் மத்தியரசை கண்டித்த உதயநிதி ஸ்டாலின் “இனி மோடி தமிழ்நாட்டிற்கு வந்தால் கோ பேக் மோடி என்று சொல்லாமல் கெட் அவுட் மோடி என்று சொல்வோம்” இதற்குத்தான் ஆட்டுக்காரன் அப்படி கொதித்தான். கெட் அவுட் மோடின்னு சொல்வியா? வெளியே போடான்னு சொல்வியா என்றெல்லாம் கேட்டவடன் :கெட் அவுட் மோடி என்று பதிவு போடத்தொடங்கி விட்டார்கள். ட்ரெண்டிங்கும் ஆகி விட்டது.

 அதனால் வேறு வழியில்லாமல் ஆட்டுக்காரனும் “கெட் அவுட் ஸ்டாலின்” என்று தொடங்க, பாஜகவின் ஒட்டு மொத்த ஐ.டி விங்கும் நாடு தழுவிய அளவில் பதிவுகள் போட அதுவும் ட்ரெண்டிங் ஆகி விட்டது.  சங்கிகள் திட்டமிட்டு செய்தது இது. சர்க்கார் படத்தில் யோகிபாபு ஆயிரம் கள்ள வோட்டு போட்டதாக புளிச்ச மாவு ஆஜான் வஜனம் எழுதியிருப்பார்.  அது சாத்தியமில்லை. ஆனால் ஒரு சங்கியால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ட்வீட்டுகளை போட முடியும்.

 அதனால் அதன் எண்ணிக்கை கூடுதலாக இருப்பதில் அதிசயம் ஒன்றுமில்லை. ஆனால் இதை வைத்து 2026 ல் ஆட்டுக்காரனே முதல்வர் என்பதெல்லாம்

 சிறுபிள்ளைத்தனம் . . .

 பிகு: மோடியை நிஜமாகவே அசிங்கப்படுத்தியது வேறொரு ஆள். அதற்கு சங்கிகள் பொங்கினார்களா?

 நாளை பார்ப்போம்.

 

Thursday, February 20, 2025

சிறைவாசிகள் மீது என்னே அக்கறை!

 


நேற்றைய ஆங்கில இந்து நாளிதழில் ஒரு செய்தி வந்திருந்தது. கும்பமேளாவில் குளித்த புண்ணியம் சிறைவாசிகளுக்கு கிடைக்க மொட்டைச்சாமியார் நடவடிக்கை என்று முதலில் சொல்லப்பட்டிருந்தது. ஆஹா! கும்பமேளாவை முன்னிட்டு சிறைவாசிகள் எல்லோருக்கும் விடுதலை அல்லது பரோல் கொடுக்கப் போகிறார்களா அல்லது சிறைவாசிகளை அலகபாத்திற்கு அழைத்துச் செல்லப் போகிறார்களா என்று ஆவலோடு மேலே படித்தேன்.

கும்பமேளாவிலிருந்து தண்ணீரை உ.பி யில் உள்ள எல்லா சிறைச்சாலைகளுக்கும் எடுத்துக் கொண்டு போய் அங்கே உள்ள மேல்நிலை தண்ணீர் தொட்டியில் கலந்து விடுவார்களாம். அப்படி கும்பமேளா தண்ணீர் கலக்கப்பட்ட தண்ணீரில் குளித்தால் அவர்களுக்கு கும்பமேளாவில் குளித்த புண்ணியம் கிடைத்து விடுமாம்.

 அடேங்கப்பா! சிறைவாசிகளுக்கு புண்ணியம் கிடைக்க எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள்! உருப்படியா மக்களுக்கு எதுவும் செய்யாவிட்டாலும் இந்த மாதிரி யோசனை மட்டும் எப்படி வருதோ?

 இங்கே தமிழ்நாட்டிலும்தான் இருக்கிறார்களே! சிறைவாசிகளுக்கு நல்ல வாசிப்பனுபவம் கிடைக்க வேண்டும், அவர்களின் அறிவுத்திறன் பெருக வேண்டும் என்பதற்காக எந்த ஊரில் புத்தக விழா நடந்தாலும், அங்கெல்லாம் "கூண்டுக்குள் வானம்" என்ற பெயரில் ஒரு அரங்கம் அமைத்து வாசகர்களிடமிருந்து புத்தகங்களை திரட்டி சிறை நூலகத்தை மேம்படுத்தி வாசிப்பை ஊக்குவிக்கிறார்கள்.

 


மொட்டைச்சாமியார் ரேஞ்சிற்கு யோசிக்க மாட்டேங்கறாங்களே!

 பிகு: வேலூர் புத்தக விழாவின் போது சிறைவாசிகளுக்கு என்னுடைய சேகரிப்பில் இருந்த சில புத்தகங்களை கொடுத்த போது எடுத்த படம் மேலே.

 

ஆட்டுக்காரனின் தரங்கெட்ட பேச்சு

 


பார்த்தாலே எரிச்சலூட்டுபவன் ஆட்டுக்காரன் என்று போன வாரம்தான் ஒரு பயணத்தின் போது ஒரு தோழரிடம் சொன்னேன். அதனால் அந்தாளின் காணொளிகளையெல்லாம்  பார்ப்ப்தில்லை. இன்று மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் ஒரு சிகண்டி (பெண் பெயரில் உலவும் போலி ஐடி) ஒரு பேச்சை ரொம்பவும் விதந்தோந்தி எழுத அப்படி அதில் என்ன இருக்கிறது என்ற பார்த்தால் …

துணை முதல்வர்  உதயநிதி  ஸ்டாலின் மீது தரக்குறைவான தாக்குதல், கேவலமான மொழியில் பேசுகிறார். ஒருமையில் பேசுவது மட்டுமல்ல, ஒரு மட்டமான வதந்தியை வைத்து வேறு பேசுகிறார்,

விதை ஒன்று போட்டால் சுரை ஒன்றா வரும்!

ஆபாசமாகவும் அசிங்கமாகவும் பேசும் மோடி கட்சியின் மாநிலத் தலைவன் பேச்சு என்ன இலக்கியத்தரமாகவா இருக்கும்!

தரங்கெட்டுத்தான் இருக்கும்!

Wednesday, February 19, 2025

ஆளில்லா கடையிலா மோடி டீ விற்கிறார்?

 


 

இன்சூரன்ஸ் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை 100 % ஆக உயர்த்துவோம் என்று நிர்மலா அம்மையார் அறிவித்தது தொடர்பாக சில நாட்கள் முன்பு எழுதியிருந்தேன்.

 இதனை 74 % ஆக உயர்த்திய போது எழுதிய பதிவை கீழே மீண்டும் பகிர்ந்துள்ளேன்.

 அதனை முழுமையாக படியுங்கள். பழைய பதிவு நீல நிறத்தில் உள்ளது.  இப்போது பகிர்ந்து கொள்ளும் கருத்துக்களை ப்ரௌன் நிறத்தில் கொடுத்துள்ளேன்.

மோடிஜி ஆளில்லா கடையில் யாருக்காக ?

 


இன்சூரன்ஸ் துறையில் அன்னிய  நேரடி முதலீட்டு வரம்பை 49 % லிருந்து 74 % ஆக உயர்த்தப் போவதாக மத்திய நிதி நிலை அறிக்கையில் நிதியமைச்சர் அறிவித்துள்ளார். அது அவசியமா என்று பார்ப்பதற்கு முன்பாக இரண்டு சம்பவங்களை நினைவு கூர்வது அவசியம்.

 சம்பவம் 1 : இன்சூரன்ஸ் கட்டுப்பாட்டு ஆணைய மசோதா (அப்போது வெறும் கட்டுப்பாடுதான் வளர்ச்சி இல்லை)  26.08.1997 அன்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்கிறார். இன்சூரன்ஸ்துறையில்  தனியார் துறையை அனுமதிக்கக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு திருத்தம் கொண்டு வர அத்திருத்தம் தோற்கடிக்கப்படுகிறது. இன்சூரன்ஸ் துறையில் தனியார் கம்பெனிகள் இருக்கலாமே தவிர அன்னிய மூலதனமோ, அன்னிய கம்பெனிகளோ அனுமதிக்கப்படக்க் கூடாது என்ற திருத்தத்தை பாஜக உறுப்பினர் ஒருவர் கொண்டு வருகிறார். இடதுசாரிகள் அந்த திருத்தத்தை ஆதரிப்பதாகச் சொல்கின்றனர். அப்படியானால் அந்த திருத்தம் வெற்றி பெறும் என்பதை உணர்ந்த அப்போதைய பிரதமர் ஐ.கே.குஜ்ரால் ஐ.ஆர்.ஏ மசோதாவை திரும்பப் பெறுகிறார். இன்சூரன்ஸ் துறையில் அன்னியக் கம்பெனிகளை வர விடாமல் தடுத்தவர்கள் நாங்கள்தான் என்று பாஜகவினர் கொஞ்ச நாள் பெருமை பேசிக் கொண்டிருந்தார்கள்.

 சம்பவம் 2 : வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் 26 % அன்னிய நேரடி முதலீட்டோடு தனியார் நிறுவனங்களை இன்சூரன்ஸ் துறையில் அனுமதிக்கும்  இன்சூரன்ஸ் வளர்ச்சி மற்றும் ஒழுங்காணைய மசோதாவை 28.10.1999 அன்று பாஜக அரசு மக்களவையில் அறிமுகம் செய்கிறது. அன்றைய தினம் இன்சூரன்ஸ் துறையில் தனியாரை அனுமதிக்கக் கூடாது என்று இந்திய மக்களிடம் நாம் பெற்ற 1,50,54,577 கையெழுத்துக்கள் கொண்ட படிவங்கள் அன்றைய  மக்களவைத் தலைவர் திரு ஜி.எம்.சி.பாலயோகி அவர்களிடம் அளிக்கப்படுகிறது. அதே நாள் புதுடெல்லியில் பாஜகவின் குரு பீடமாக இருக்கிற ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஒரு பிரிவான ஸ்வதேசி ஜக்ரான் மஞ்ச், அதன் தலைவரான ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி தலைமையில் இன்சூரன்ஸ் துறையில் அன்னிய மூலதனத்தை அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி ஒரு தர்ணா போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தது.

 ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஒரு பிரிவு அன்னிய மூலதனத்தை அனுமதிக்கும் மசோதாவை அறிமுகம் செய்கிறது. இன்னொரு பிரிவோ அதற்கு எதிராக போராட்டம் நடத்துகிறது. பாரதியார் சொன்ன “நடிப்புச் சுதேசிகள்” என்ற வாசகம் இவர்களைத் தவிர வேறு யாருக்கு பொருந்தும்?

 அன்னிய மூலதனமே கூடாது என்று திருத்தம் கொண்டு வந்தவர்கள் அவர்களின் ஆட்சியில் முதலில் 26 % அன்னிய மூலதனத்தை அனுமதித்தார்கள். அதையும் அவர்களே எதிர்ப்பதாக வேறு ஒரு நாடகத்தையும் நடத்தினார்கள்.

 மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் காலத்தில் நிறைவேற்றப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இன்சூரன்ஸ் சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றி 49 % வரை அன்னிய நேரடி முதலீட்டிற்கு ரத்தினக் கம்பளம் விரித்தனர்.

 இன்சூரன்ஸ் துறையில் அன்னிய மூலதனம் வந்தால் கட்டமைப்புத் தேவைகளுக்கான நிதி கொட்டிக் கொண்டே இருக்கும் என்று சொன்னார்கள், சொல்கிறார்கள், சொல்வார்கள். கட்டமைப்புத் தேவைகளுக்கான முதலீடுகள் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் மூலம் ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் வரும் என்பது அன்றைய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா நாடாளுமன்றத்தில் சொன்ன உறுதிமொழி. அப்படிப் பார்த்தால் இந்த இருபது வருடங்களில் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் முப்பது லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்திருக்க வேண்டும். ஆனால் அதிலே நூற்றில் ஒரு பங்காவது வந்ததா என்றால் அது சந்தேகமே!

 அன்னிய மூலதன வரம்பை 49 % லிருந்து 75 % ஆக உயர்த்த துடிக்கிறார்களே, இப்போது எத்தனை தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளில் 49 % அன்னிய நேரடி மூலதனம் உள்ளது?

 ஐ.ஆர்.டி.ஏ வின் 2018-2019 ஆண்டறிக்கை உண்மையைச் சொல்கிறது. மொத்தமுள்ள 23 தனியார் ஆயுள் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் மூன்று நிறுவனங்களில் அன்னிய மூலதனமே கிடையாது.  ஏகான், அவியா லைப், பார்தி ஏஎக்ஃஎஸ், ஆதித்ய பிர்லா சன்லைஃப், டிஹெச்எப்எல் பரமெரிக்கா, எடெல்வாய்சின் டோக்யோ, ரிலையன்ஸ் நிப்பான், டாடா ஏ.ஐ.ஏ ஆகிய  எட்டு நிறுவனங்களில் மட்டுமே 49 % அன்னிய முதலீடு உள்ளது. ஏழு நிறுவனங்களில் அன்னிய மூலதனம் 26 % லிருந்து 49 % க்குள் உள்ளது. ஐந்து நிறுவனங்களில் 26 % க்கும் குறைவாகத்தான் உள்ளது. அனைத்து தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் மொத்த மூலதனமே 27,515.75 கோடி ரூபாய்தான். அதில் அன்னிய மூலதனம் 9,764,20 கோடி ரூபாய்தான். அது வெறும் 35.49 % மட்டுமே.

 பொது இன்சூரன்ஸ் துறையில் நிலைமை இன்னும் மோசம். மொத்தமுள்ள 21 தனியார் பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களில் ஏழு நிறுவனங்களில் அன்னிய மூலதனமே கிடையாது. ஐந்து நிறுவனங்களில் மட்டுமே 49 % அன்னிய மூலதனம் உள்ளது. 21 கம்பெனிகளின் மொத்த மூலதனமான 9570.88 கோடியில் அன்னிய மூலதனம் வெறும் 2,895.99 கோடி ரூபாய் மட்டுமே. 29.79 % தான்.

 அன்னிய மூலதன வரம்பை 49 % ஆக உயர்த்தும் சட்டத் திருத்தம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே வந்தாலும் அது 15 ஆயுள் இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கும் 16 பொது இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கும் தேவைப்படவே இல்லை. இந்த தனியார் நிறுவனங்களுக்கு கூடுதல் அன்னிய மூலதனம் தேவைப்படவே இல்லை என்பதுதானே யதார்த்தம்! அன்னிய மூலதன அளவு குறைவாக இருந்தும் அவர்கள் வணிகம் செய்து கொண்டுதானே இருக்கிறார்கள்!

 தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் 49 % வரம்பையே பயன்படுத்தாத நிலையில் 74 % ஆக உயர்த்த வேண்டிய அவசியம் ஏன்? ஆளில்லாத கடையில் யாருக்காக டீ ஆத்துகிறது என்ற கேள்வி மனதுக்குள் எழும்.

 நரியின் பார்வை இரையின் மீதுதான் என்பதை மறந்து விடக் கூடாது. பல இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கு இந்தியக் கம்பெனிகளின் பங்குதாரர்களாக இருப்பது என்பது வேப்பங்காயாக கசக்கக் கூடியது. 100 % மூலதனத்தோடுதான் செயல்பட வேண்டும் என்ற கொள்கையில் மாறாத உறுதியோடு இந்தியாவில் கடை விரிக்காத அன்னியக் கம்பெனிகள் இருக்கிறார்கள்.

 இங்கிலாந்தின் லாயிட்ஸ் நிறுவனம் 100 % முதலீட்டில் மட்டுமே வருவது என்று பிடிவாதமாக உள்ளது. அதே போல உலகின் மிகப் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான வாரண் பஃபெட்டின் நிறுவனமாக ஜென் ரீ நிறுவனத்தையும் சொல்லலாம். இவை இன்று இந்தியாவில் மறு இன்சூரன்ஸ் நிறுவனமாக செயல்படுகிறதே தவிர நேரடி இன்சூரன்ஸ் வணிகத்திற்கு வரவில்லை.

 நேரடியாக 100 % அன்னிய மூலதனத்தை அனுமதிப்பதற்கான முதல் கட்டமாகவே இப்போது அன்னிய மூலதன வரம்பை 74 % ஆக உயர்த்தியுள்ளது. அரசின் இறுதி இலக்கு என்பது 100 % தான் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

 அது மட்டுமல்ல, பென்ஷன் துறையில் அன்னிய நேரடி முதலீட்டு வரம்பை உயர்த்த வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் அரசுக்கு உள்ளது. இன்சூரன்ஸ் துறையில் உயர்த்தினால் அங்கேயும் உயர்த்துவது மிகவும் எளிதாகி விடும்.

 பென்ஷன் நிதியை நிர்வகிப்பவர்களாக இன்று ஏழு நிறுவங்கள் உள்ளன. அவர்கள் நிர்வகிக்கும் தொகை 2018 ல் 2,34,579 கோடி ரூபாயாக இருந்தது 2019 ல் 3,18,214 கோடி ரூபாயாக 36 % அதிகரித்துள்ளது. இந்த தொகை அன்னியக் கம்பெனிகளின் கண்களை உறுத்துகிறது.

 அன்னிய மூலதன வரம்பை உயர்த்துவதன் பொருள் என்பது ஒன்றுதான். இந்திய மக்களின் உள்நாட்டு சேமிப்பில் ஒரு பகுதிதான் இன்சூரன்ஸ் பிரிமியமாக மாறுகிறது. அப்படிப்பட்ட உள்நாட்டு சேமிப்பின் மீதான கட்டுப்பாடு அன்னிய மூலதனத்தின் கைகளுக்குச் செல்லும். இது நாட்டின் பொருளாதாரத்திற்கு ஊறு விளைவிக்கும். அதனால்தான் இதை அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் கடுமையாக எதிர்க்கிறது. தேசத்தை நிஜமாக நேசிக்கிற ஒவ்வொருவரும் கண்டிப்பாக எதிர்த்திட வேண்டும்.

 முடிப்பதற்கு முன்பாக

 உலகப் பொருளாதார நெருக்கடி வந்த போது அமெரிக்காவில் நூற்றுக்கும் மேற்பட்ட பெரிய, சிறிய வங்கிகள் திவாலாகின. அந்நாட்டின் மிகப் பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான அமெரிக்கன் இன்சூரன்ஸ் க்ரூப் (ஏ.ஐ.ஜி) திவாலின் விளிம்புக்குச் சென்றது. அரசு ஏராளமான நிதி கொடுத்து அந்த நிறுவனத்தை மீட்டது. வணிகத்தில் அரசுக்கு வேலை இல்லை (Government has no business in business) என்று எப்போதும் உபதேசித்துக் கொண்டிருக்கிற யாரும் ஒரு வணிக நிறுவனத்தை பாதுகாக்க ஏன் வரி செலுத்துவோர் பணத்தை விரயம் செய்கிறது என்று கேட்கவே இல்லை.

 ஏ.ஐ.ஜி யும் டாடாவும் இணைந்து டாடா ஏ.ஐ.ஜி என்ற பெயரில் ஆயுள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்தார்கள். ஏ.ஐ.ஜி தடம் புரண்ட போது அன்றைய ஐ.ஆர்.டி.ஏ தலைவர் விவேக் நாராயணன் “டாடா ஏ.ஐ.ஜி நிறுவனத்தில் 24 % மட்டுமே ஏ.ஐ.ஜி யிடம் உள்ளது. மீதமுள்ள 76 % டாடாவிடமே உள்ளதால் பாலிசிதாரர் யாரும் கவலைப்பட வேண்டாம்” என்று அறிக்கை அளித்தார். ரத்தன் டாடா முழுப் பக்க விளம்பரங்களை பல நாளிதழ்களில் பல நாட்கள் அளித்தார்.

 24 %  மட்டுமே  அன்னிய மூலதனம் இருந்ததால் கவலைப்படாதீர்கள் என்று சொல்ல முடிந்தது. அன்னிய மூலதனம் 74 % ஆக உயர்ந்தால் என்ன ஆகும்? யோசித்துப் பார்த்தால் அச்சம் வரவில்லையா?

 தன்னுடைய சேமிப்புக்கு என்ன ஆகும் என்ற அச்சத்தோடு ஒரு பாலிசிதாரர் வாழ்ந்திட வேண்டுமா?

 அன்னிய மூலதன வரம்பை உயர்த்தும் முடிவை அரசு கைவிட வேண்டும்.

 நான்கு வருடத்திற்கு முன்பு சொன்னதுதான். நிலைமையில் பெரிய மாறுதல் எதுவும் இல்லை. ஒரே ஒரு நிறுவனத்தில் மட்டும்தான் 74 % அன்னிய மூலதனம் உள்ளது. ஒட்டு மொத்தமாக 32 % அன்னிய முதலீடுதான் உள்ளது. அப்படியென்றால் ஆளில்லா கடையில் மோடி டீ விற்கிறாரா?

 இல்லை.

 பழைய பதிவில் சொன்னதை மறுபடியும் படியுங்கள்,

 “வந்தால் தனியாத்தான் வருவோம்” சில வெளிநாட்டு நிறுவனங்கள்  காத்துக் கொண்டிருக்கிறார்கள்.  அவர்களுக்காக 100 % அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதற்கான முதல் கட்டமாகத்தான் 74 % ஆக உயர்த்தியுள்ளார்கள் என்று எழுதியிருந்தேன்.

 இப்போது அதுதான் நடந்துள்ளது.

 100 % அன்னிய முதலீடு அனுமதிக்கப்படுவதால் சில நிறுவனங்கள் இப்போது வரும்.

 இதன் மூலம் இப்போதுள்ள தனியார் நிறுவனங்களிலும் பிரச்சினைகள் வர வாய்ப்புண்டு.

 எப்படி?

 விரைவில்  விரிவாக பார்ப்போம்.

பிகு : பழைய பதிவில் விவேக்கின் படத்தை பயன்படுத்தியதால் இப்போதைய பதிவில் "தெறி" திரைப்படத்தின் கடைசிக் காட்சியை பயன்படுத்தியுள்ளேன் . . .

மதுரை போலீஸுக்கு மட்டும் காவி சீருடையா முதல்வரே?

 


நேற்று மதுரை திருப்பரங்குன்றத்தில் இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைந்திய ஜனநாயக மாதர் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் ஆகிய அமைப்புக்கள் இணைந்து மத நல்லிணக்கத்தையும், மக்கள் ஒற்றுமையையும் வலியுறுத்தியும் திருப்பரங்குன்றத்தின் அமைதியை குலைக்க சதி செய்யும் அழிவு சக்திகளை முறியடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுமான பிரசுரத்தை மக்கள் மத்தியில் வினியோகித்தனர்.


ஆனால் இதனை மக்களிடம் கொடுக்க விடாமல் திருப்பரங்குன்றம் போலீஸ் தலையிட்டு அதனை பறித்துக் கொண்டு போய் அராஜகம் செய்தார்கள்.

திருப்பரங்குன்றம் பிரச்சினைக்கு மூல காரணம் அரசு நிர்வாகமும் போலீஸும்தான். 

காவல்துறையில் காவி ஆடுகள் ஊடுறுவியுள்ளது என்பது தொடர்ந்து நிரூபணமாகிக் கொண்டிருக்கிறது. 

இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் தல்லையிட்டு களையெடுக்காவிட்டால் நாளை அவருக்குத்தான் சிக்கல்...

Tuesday, February 18, 2025

ஒரு பொய் – இரண்டு சண்டை

 


தைப்பூச விடுமுறை நாளில் மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் சங்கிகளோடு போட்ட சண்டை.

 தமிழ்நாட்டு சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கழுத்தறுக்கும் ஆட்டுத்தாடியின் அடாவடி தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. நீதிபதிகள் ஆட்டுத்தாடியின் நடவடிக்கைகள் குறித்து ஆட்டுத்தாயின் சார்பில் வழக்காடும் மத்தி சரமாரியாக  கேள்வி எழுப்பியுள்ளனர். ( இப்படி கேள்வி கேட்டதாலேயே ஆட்டுத்தாடிக்கு எதிராக தீர்ப்பு வரும் என்றெல்லாம் எதிர்பார்க்க் முடியாது)

 ஆனால் மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில்  இரண்டு பதிவுகள். இரண்டும் ஒரே செய்தியைத்தான் சொன்னது. நீதிமன்றத்தில்  என்ன நடந்ததோ அதற்கு முற்றிலும் மாறான ஒரு தவறான செய்தியை பாஜகவின் ஜனம் தொலைக்காட்சி போட்ட ஒரு பொய் கார்டைத்தான் இருவரும் பகிர்ந்திருந்தார்கள்.

 


அது தவறான செய்தி என்று இரு பதிவுகளிலும் சுட்டிக்காட்டினேன். அதன் பிறகு நடந்த உரையாடல்களை பாருங்கள்.

 முதல் சண்டை






 

இரண்டாவது சண்டை






 

 

சங்கிகள் தாங்கள் அடி முட்டாள்கள், பொய்யர்கள், அயோக்கியர்கள் என்பதை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நிரூபித்துக் கொள்கிறார்கள்.

பொங்கின சங்கிகளே எங்கே போனீங்கடா?

 


மோடியின் கையில் விலங்குகள் போட்ட கார்ட்டூனுக்கு சங்கிகள் பொங்கித் தீர்த்தார்கள்.

அமெரிக்கா இரண்டாவது பேட்ச் இந்தியர்களை அனுப்ப அவர்கள் நேற்று இந்தியா வந்து சேர்ந்துள்ளனர்.

மோடி ட்ரம்பை பார்த்தவுடன்தான்  அவர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களும் கை, கால்களிலும் விலங்கு மாட்டித்தான் அனுப்பப்பட்டுள்ளனர். 

மோடிதான் இந்தியா என்று சங்கிகள் வெட்டி உதார் விடுவார்கள். அப்போ அமெரிக்க இந்தியர்களுக்கு விலங்கு போட்டால் அது மோடிக்கும் போட்டு விட்டதாகத்தானே அர்த்தம்! இந்தியர்கள் அமெரிக்காவில் அவமதிக்கப் பட்டால் அது இந்தியாவிற்கும் மோடிக்கும்தானே அவமானம்! யாராவது பதக்கம் வாங்கினால் பல்லை இளித்து போட்டோவுக்கு போஸ் கொடுப்பது போல இதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மோடி கையில் விலங்கு போட்டது போல கார்ட்டூன் போடுவதற்கு பொங்கும் சங்கிகளே, உங்களுக்கு உணர்வு இருந்தால் அமெரிக்கா விலங்கு போட்டதற்கு பொங்குங்கள். ஆனந்த விகடன் போட்டதற்கல்ல. . .


Monday, February 17, 2025

மஹா கும்பமேளா என்பதும் மோசடியா மோடி?

 


இப்போது அலகாபாத்தில் நடந்து கொண்டிருக்கும் கும்ப மேளாவை 144 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் “மஹா கும்பமேளா” என்றுதான் மோடி, மொட்டைச்சாமியார் வகையறாக்கள் சொல்லிக் கொண்டிருக்கிறது.

நிஜமாகவே இந்த வருட கும்பமேளாதான் 144 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் மஹா கும்பமேளாவா?

இல்லை.

நிச்சயமாக இல்லை.

 அதற்கு என்ன ஆதாரம்?

 வயர் இணைய தள இதழ் ஒரு ஆதாரத்தை வெளியிட்டுள்ளது.

 2023 ம் வருடம் மொட்டைச்சாமியார் அரசு பெரும் திரள் கூடல்களின் போது விபத்துக்களை தவிர்ப்பது தொடர்பாக வெளியிட்ட ஆய்வறிக்கையிலேயே 2013 ம் ஆண்டு அலகாபாத்தில் நடைபெற்றது 144 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் மஹா கும்பமேளா என்று குறிப்பிட்டுள்ளது.

 


பின் எப்படி இப்போது நடைபெறுவதை மஹா கும்பமேளா என்று சொல்கிறார்கள்?

 எங்கள் ஆட்சிக்காலத்தில்தான் மஹா கும்பமேளா நடைபெற்றது என்று வெட்டிப் பெருமை பேசிக் கொல்ல (எழுத்துப் பிழை அல்ல, 144 வருடங்கள் என்ற பில்ட் அப் கொடுத்ததன் விளைவாகத்தான் மக்கள் அங்கே அதிகமாக சென்று நெரிசலில் சிக்கி இறக்கிறார்கள்) பொய் சொல்கிறார்கள்.

எதையெடுத்தாலும் பொய்,  எதற்கெடுத்தாலும் பொய்.

 பொய்யை மட்டுமே மூலதனமாகக் கொண்ட மானங்கெட்டவர்கள். இதிலே கார்ட்டூன் போட்டால் மானம் போய் விட்டது என்று கூச்சல் வேறு,

Sunday, February 16, 2025

முடக்கினால் பரவுமடா சங்கி மூடர்களா

 


மேலேயுள்ள கார்ட்டூனுக்காக ஆனந்த விகடனின் இணையதளத்தை ஒன்றிய அரசு முடக்கியுள்ளது. அநேகமாக படத்தை வரைந்தவர் கைது செய்யப்படலாம்.

ஆமாம். அந்த கார்ட்டூனில் என்ன தவறு இருக்கிறது?

இந்தியர்கள் அவர்கள் சட்ட விரோதமாக குடியேறியவர்களாகவே இருந்தாலும் கை காலில் விலங்கு மாட்டி அனுப்பியதை அமெரிக்காவிடம் கேள்வி கேட்க துப்பில்லாத மோடி, அங்கே நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் ட்ரம்பால் அசிங்கப்படுத்தப்பட்டார். ட்ரம்பின் அனைத்து கட்டளைகளுக்கும் அடி பணிந்து "நான் உங்கள் அடிமை ஹூஸூர்" என்று இந்தியாவின் மானத்தை கப்பலேற்றிய நபர் மோடி.

இதற்கு அசிங்கப்படாத, வெட்கப்படாத சங்கிகளுக்கு கார்ட்டூனைப் பார்த்ததற்கு மட்டும் கோபம் வருகிறது.

அதனால் இணையத்தை முடக்கி விட்டார்கள்.

ஆனால் சங்கி முட்டாள்களுக்கு மட்டும் ஒரு உண்மை புரியவில்லை. 

அவர்கள் கொடுத்த விளம்பரத்தால்தான் மோடி விலங்கோடு உள்ள படம் பல மடங்கு வேகமாக உலகெங்கும் பரவும் என்பதையும்

இது போல எம்.ஜி.ஆர் காலத்தில் வானளாவிய அதிகாரம் இருப்பதாக நினைத்து பி.ஹெச்.பாண்டியன் விகடன் ஆசிரியரை கைது செய்ய பின்பு நீதிமன்றத்தால் குட்டுப்பட்டு இழப்பீடு கொடுத்த வரலாற்றையும்



எடுபிடி  எடப்பாடி முடக்க நினைத்த அந்த படம்தான் இன்று ஸ்டெரிலைட் துப்பாக்கிச்சூட்டின் அடையாளமாக திகழ்கிறது என்பதையும் 

மறந்து விட்டார்கள்.

ஆத்திரக்காரனுக்கு புத்தி வேலை செய்யாது என்பார்கள்.

இவர்களோ மூடர்கள், இவர்களுக்கு கோபம் வந்தால் ஆயிரம் மடங்கு முட்டாள்தனமாகத்தானே செயல்படுவார்கள்!

Saturday, February 15, 2025

பக்தியின் பெயரால் சதுரங்க வேட்டை

 


இதை நம்பி எத்தனை பேரோ?

 நேற்று முகநூலில் பார்த்த விளம்பரம் கீழே. 



இதில் குறிப்பிட்டுள்ள எண்ணிற்கு (நம் பதிவை பார்க்கும் சங்கிகள் யாரும் அனுப்பக்கூடாது என்பதற்காக நான் இங்கே மறைத்து விட்டேன்) புகைப்படத்தை 500 ரூபாய் பணத்தோடு அனுப்பினால் புகைப்படத்தை பிரதி எடுத்து கங்கையில் அவர்கள் முங்கும் போது அதையும் சேர்த்து முக்குவார்களாம். இதன் மூலம் 144 வருடங்களுக்கு ஒரு முறை வரும் மகா கும்பமேளாவில் பங்கேற்ற புண்ணியம் உங்களுக்கு கிடைக்குமாம். உங்கள் முன்னோர்கள் உங்களை ஆசீர்வதிப்பார்களாம். தெய்வீக அருள் கிட்டுமாம்.

 அப்பாவி மக்களின் பணத்தை சுரண்ட சங்கி மோசடிக்கும்பல்,    ரூம் போட்டு யோசிக்கும் போல.

 இதை நம்பி எத்தனை முட்டாள் சங்கிகள் 500 ரூபாய் அனுப்பப் போகிறார்களோ, மொட்டைச்சாமியாருக்கே வெளிச்சம்!

 பக்தியின் பெயரால் நடைபெறும் சதுரங்க வேட்டைகளில் இதுவும் ஒன்று.