.jpg)
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென் சென்னை மாவட்டக் குழு வெளியிட்ட அறிக்கையையும் அதன் பின் ஒரு காணொளியையும் முதலில் பாருங்கள்.
புழுதிவாக்கம் நியூ இந்து காலனியில் வசிக்கும் பட்டியல் சமூகத்தைச் சார்ந்த தனலட்சுமி - சுரேஷ் இணையரின் மகள் நித்திஷா (11 வயது) புழுதிவாக்கம் சென்னை மாநாகராட்சி ஆரம்பப் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார். 
09.10.2025 அன்று மாணவி நித்திஷா பேனாவிலிருந்து இங்க் தரையில் தெளித்ததை பார்த்து கோபம் அடைந்த தலைமை ஆசிரியை இந்திராகாந்தி தரை துடைக்கும் மாப் கட்டையால் மாணவியை கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் மாணவியின் கை, கால் வீக்கமடைந்தது. கடுமையான தலைவலி இருந்தது. முதலில் புழுதிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் (பிரதீப் மருத்துவமனை) அனுமதிக்கப்பட்டிருந்தார். சி.டி ஸ்கேன் எடுத்ததில் தலையில் உள் பகுதியில் இரத்தக்கசிவு இருந்தது தெரியவந்துள்ளது. அதனால் மடிப்பாக்கம் S7 காவல் நிலையத்தல் பெற்றோர்கள் புகார் அளித்தனர். ஆனால் காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.  பின்னர் 23.10.2025 முதல் 26.10.2025 வரை கிண்டி கலைஞர் பல்நோக்கு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கலைஞர் மருத்துவமனையிலிருந்து கிண்டி காவல் நிலையத்தில் புகார் செய்து பின்னர் அது மடிப்பாக்கம் காவல்நிலையத்துக்கு மாற்றப்பட்டது. அதன் பின்னரும் புகாரின் மீது காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பின்னரே குற்ற எண்ணில் - 1105 / 2025 முதல் தகவல் அறிக்கை (FIR) 26.10.2025 அன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பாரதிய நியாய சன்ஹிதா, 2023 (BNS) சட்டத்தின் பிரிவு 118(1)(b) மற்றும் சிறார் நீதி (பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு) சட்டம், 2015 (JJ Act) பிரிவு 75 ஆகியவற்றின் கீழ் குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
பாதிக்கப்பட்ட மாணவி பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் என்றாலும் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டப் பிரிவுகள் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்படவில்லை. நாம் வலியுறுத்தியும் காவல்துறை மறுத்துவிட்டது.
எனவே இவ்வன்கொடுமையைக் கண்டித்தும், எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யக் கோரியும் 30.10.2025 அன்று கண்டன கூட்டம் நடத்த அனுமதி கோரிய போது, குறிப்பிட்ட இடத்தில் மெட்ரோ ரயில் பணிகள் நடப்பதாக கூறி காவல்துறை அனுமதி மறுத்தது.  வேறொரு இடத்தில் 03.11.2025 அன்று  கண்டன கூட்டம் நடத்த மீண்டும் கோரிய போது அற்பத்தனமான காரணத்தை கூறி மீண்டும் அனுமதி மறுக்கப்பட்டது. யாருக்கோ விசுவாசமாக நடந்து கொண்ட காவல்துறை இயக்கம் நடத்த அனுமதி மறுத்ததையடுத்து, தடையை மீறி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணை பொதுச்செயலாளர் க.சுவாமிநாதன் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காவல்துறை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தோழர்களை அராஜகமாக இழுத்துச் சென்று வலுக்கட்டாயமாக கைது செய்துனர்.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவர் ச.லெனின், செயலாளர் கே.மணிகண்டன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எம்.சித்ரா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில பொருளாளர் தீ.சந்துரு, இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ச.ஆனந்த் சிபிஐ எம் மாநிலக்குழு உறுப்பினர் கே.வனஜகுமாரி உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இரவு 8 மணிக்கு அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். 
விடுவிக்கும்போது, வேறொரு நாளில் அனுமதி கோரியிருந்தால் நாங்கள் அனுமதி கொடுத்திருப்போம். இவ்வளவு சிக்கல் ஏற்பட்டிருக்காது என்று காவல்துறை துணை ஆணையர் கூறினார். வேறொரு தேதியில் மீண்டும் அனுமதி கோருவோம், நீங்கள் அனுமதி கொடுங்கள் என்று கூறினோம். (மைக் வைத்து மக்களுக்கு இவர்களின் லட்சனத்தை சொல்லவேண்டாமா). 
அய்யோ, அதெல்லாம் முடியாது. அதுதான் இன்று மறியலே செய்துவிட்டீர்களே. பெரிய போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திவிட்டீர்களே என்றார். நாங்கள் மறியல் செய்ய வரவில்லை. சாலையின் ஓரமாக மக்களுக்கு பாதகம் இல்லாமல் போக்குவரத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது வகையில் கூடிய எங்களை சாலைக்கு விரட்டியது உங்களின் அணுகுமுறைதான் என்று கூறிவிட்டு வந்துள்ளோம். 
எஸ்சி/எஸ்டி ஆணையத்திற்கு கடிதம் அனுப்புங்கள், அவர்கள் சொல்லட்டும் அதன் அடிப்படையில் நாங்கள் செயல்படுகிறோம் என்றார். ஆணையங்களுக்கு மனு கொடுப்பது உங்கள் உரிமை என்றார். மனு போடுவது மட்டுமல்ல போராடுவதும் எங்கள் உரிமைதான் என்று தெரிவித்தோம்.
#மடிப்பாக்கம் காவல்துறையின் இத்தகைய அராஜகத்தை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.  இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தலைமை ஆசிரியை இந்திராகாந்தி மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்துகிறது.  
இந்த போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தியதும் காவல்துறையோடு களத்தில் மோதியதும் எங்கள் தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச்செயலாளர் தோழர் கே.சுவாமிநாதன் (முதல் இரண்டு படங்களில் போலீஸுடன் மோதுபவர்)  என்பது  ஒரு அகில இந்திய இன்சூரன்ஸ்  ஊழியர் சங்க உறுப்பினராக எனக்கு மிகவும் பெருமிதம் அளிக்கிறது.
வார்த்தைகளோடு நிற்காமல் களத்திலும் . . .
இச்சம்பவம் காவல்துறையை நோக்கி சில கேள்விகளை எழுப்பத் தூண்டியது. அக்கேள்விகள் தனி பதிவாக . . .