துரதிர்ஷ்டவசமாக, சமூக முடக்கக் காலத்தில் மீண்டும் உங்களுக்குக் கடிதம் எழுத வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. என்னுடைய முந்தைய கடிதங்களுக்கும் தங்களிடமிருந்து எவ்விதப் பதிலும் இல்லை. உண்மையில், அவை வரப்பெற்றதற்கான ஏற்பளிப்புகூட இல்லை. இது வழக்கமற்ற ஒன்று.
நாடும், நாட்டின் பெரும்பாலான மக்களும் எதிர்கொண்டிருக்கிற பிரச்சனைகள் குறித்து, தங்கள் கவனத்திற்கு மீண்டும் கொண்டுவந்து, அவற்றின் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதற்காக இக்கடிதத்தை எழுதுகிறேன்.
தாங்கள் வெறும் 4 மணி நேர கால அவகாசத்துடன் திடீரென்று அறிவித்த தேசிய அளவிலான சமூக முடக்கத்தின் கடைசி வாரத்தில் நாற்பதாவது நாளைக் கடந்திருக்கிறோம். இது, முற்றிலும் தயார்நிலையில் இல்லாதிருந்த மக்களுக்கும், மாநில அரசாங்கங்களுக்கும் கடும் விளைவுகளை ஏற்படுத்தியது.
1 புலம்பெயர் தொழிலாளர்கள்
சமூக முடக்கத்திற்குப்பின்னர், புலம்பெயர் தொழி லாளர்கள் தங்கள் அனைத்துவிதமான வாழ்வாதாரங் களையும், தங்குமிடத்தையும்இழந்ததன் விளைவாகத் தங்களின் சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்ல முயன்ற தன் காரணமாக, வீதிகளில் கூட்டம் கூட்டமாக கூடத் தொடங்கினர். இதுவே, மக்கள் ஒருவர்க்கொருவர் இடை வெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்கிற சமூக முடக்கத்தின் குறிக்கோளை மறுதலித்தது. அதன்பின்னர் பசி-பஞ்சம்-பட்டினி நிலைக்கும், ஊட்டச்சத்துக்குறைவு மற்றும் தங்குமிடங்களும் இல்லாத நிலைக்கும் கோடானு கோடி மக்களைத் தள்ளியது. சமூக முடக்கத்தைத் தொடர்ந்து, தேவைப்படும் அனைத்து மக்களுக்கும் இலவச மாக உணவு அளிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். மத்திய அரசின் கிடங்குகளில் மிகப்பெரிய அளவில் உணவு தானியங்கள் வீணாகி, அழுகிக் கொண்டி ருக்கின்றன. அவற்றை தேவைப்படும் மக்களுக்கு இலவச மாக விநியோகம் செய்வதற்காக மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டும் என்றும் கோரினோம். இவை எதையுமே தங்களைப் பிரதமராகக் கொண்டுள்ள மத்திய அரசு பரிசீலனை செய்யக்கூட முன்வரவில்லை.
2 வேலையில்லாத் திண்டாட்டம்
சமூக முடக்கத்திற்குப் பின்னர், 340 லட்சமாக இருந்த வேலையில்லாதோர் எண்ணிக்கை 880 லட்சமாக அதிகரித்திருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது பிப்ரவரிக்கும் ஏப்ரலுக்கும் இடையே 540 லட்சம் பேர் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து, இதில் கூடுதலாகி இருக்கின்றனர். இத்துடன் வேலை பார்த்துவந்தவர்களில் 680 லட்சம் பேர் மேலும் கூடுதலாக இதில் சேர்ந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பின்னர், 12 கோடியே 20 லட்சம் பேர் தங்கள் வேலைகளையும், வாழ்வாதாரங் களையும் இழந்துள்ளனர். சமூக முடக்கக் காலத்தையும் சேர்த்து கடந்த மார்ச் மாதத்திலிருந்து ஏப்ரல் 20 வரைக்கும் வேலையின்மை விகிதம் 7.5 சதவீதத்திலிருந்து 23.6 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. இவற்றின் காரணமாக, மத்திய அரசு, வாழ்வாதாரங்களை இழந்த அனை வருக்கும் அடுத்த மூன்று மாதங்களுக்கு மாதந்தோறும் 7,500 ரூபாய் ரொக்க மாற்று உடனடியாகச் செய்திட வேண்டும். இது அவசியம். நிச்சயமாக, கடந்த ஐந்தாண்டுகளில் 7.76 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு பெரும் பணக்காரர் களுக்கும், கார்ப்பரேட்டுகளுக்கும் தள்ளுபடிசெய்யும் வல்லமை உள்ள உங்களால், நாட்டில் பெரும்பான்மை யான மக்களுக்கு உணவு அளித்து அவர்களை ஆதரித்திட பணம் இல்லை என்று சொல்ல முடியாது.
3 கூட்டாட்சித் தத்துவம்
கொரோனா வைரஸ் தொற்றை முறியடித்திட மாநிலங்கள் போர்முனையில் செயல்பட்டுக் கொண்டி ருக்கின்றன. அவர்களுக்குப் போதுமான அளவில் நிதி, உணவு தானியங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் தேவைப்படுகின்றன. இவை குறித்து அர்த்தமுள்ள விதத்தில் எவ்விதமான உதவியும் மத்திய அரசால் இதுவரை அளிக்கப்படவில்லை. அவசரகதியில் அறிவிக்கப்பட்ட சமூக முடக்கத்தின் விளைவாக புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நெருக்கடி உருவாக்கப்பட்டது. இப்போது இந்நெருக்கடியைச் சமாளித்திடுமாறும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு, தங்கு மிடங்கள் அளித்திடுமாறும் அவர்கள் ஒருவர்க்கொரு வர் இடைவெளியைக் கடைப்பிடித்திட வழிவகை செய்துதருமாறும் மாநில அரசுகள் கேட்டுக்கொள்ளப் பட்டிருக்கின்றன. இது மிகவும் நியாயமற்ற ஒன்றாகும். ஜிஎஸ்டி வசூலில் மாநில அரசுகளின் பங்கினையே இன்னமும் மத்திய அரசு அளித்திடவில்லை. எனவே, மாநில அரசுகளுக்கு தாராளமாக நிதி உதவியினை அளித்திட வேண்டும். இதனை உடனடியாகச் செய்திட வேண்டும்.
4 நிதி
உங்களுடைய பெயரைத் தாங்கி தனியார் அறக்கட்ட ளை ஒன்று பல்லாயிரம் கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது, வசூலித்துக்கொண்டுமிருக்கிறது. இந்தத் தனியார் அறக்கட்டளை வசூலித்திடும் தொகை, மத்திய கணக்கு மற்றும் தணிக்கை அலுவலராலோ (சிஏஜி), அல்லது அரசாங்கம் நியமித்திடும் வேறெந்த தணிக்கையாளராலோ தணிக்கை செய்யப்பட மாட்டாது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அரசு ஊழியர்களின் சம்பளங் களிலிருந்தும் மற்றும் பல்வேறு வகைகளிலும் பிடித்தம் செய்யப்படும் தொகை (அவர்கள் முன்பு அதிகாரப்பூர்வ மான பிரதமர் பேரிடர் நிவாரண நிதியத்திற்கு நன்கொடை அளித்துவந்திருந்தாலும்) கட்டாயமான முறையில் இந்தத் தனியார் அறக்கட்டளையின் நிதியத்திற்கு மாற்றப் படுகிறது. இந்தத் தொகையை கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரானப் போராட்டத்தை வலுப்படுத்தும் விதத்தில் அதற்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்காக, உடனடியாக ஒதுக்கிட வேண்டும்.
5 வீணான செலவினங்களை நிறுத்துக!
இவ்வாறு மிகப்பெரிய அளவில் மருத்தவ அவசரநிலை உருவாகி அதனை எதிர்கொள்ள நிதியின்றி தடுமாறிக்கொண்டிருக்கும் நிலையில், அதற்கு நிதி உதவி அளிப்பதற்குப் பதிலாக, மத்திய அரசு கட்டிடங்கள் மற்றும் நாடாளுமன்றக் கட்டிடங்களை இடித்துத் தரைமட்டமாக்கிவிட்டு அவற்றை புதிதாகக் கட்டுவதற்கும், பிரதமரின் இல்லத்தைப் புதிதாகக் கட்டுவதற்கும் மற்றும் பல மக்கள் தொடர்பு நடவடிக்கைகளுக்கும் கோடிக்கணக்கான ரூபாய் மிகவும் வீணான முறையில் செலவு செய்வதைத் தொடர்ந்திட மத்திய அரசாங்கம் திட்டமிட்டிருப்பது, ஆச்சரியமாகவும், திகைப்பாகவும் இருக்கிறது. இது கிரிமினல்தனத்திற்கு ஒப்பான செயலாகும். கடந்த ஐந்தாண்டுகளில் இந்த அரசாங்கத்தின் மரபு, பொது சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி போன்றவற்றிற்கு செலவு செய்திடாமல் அதற்குப் பதிலாக, சிலைகளுக்கும், புல்லட் ரயில்களுக்கும், பரப்புரைப் பிரச்சாரங்கள் போன்றவற்றி ற்கும் அதீதமாக செலவுசெய்வதாக இருந்து வந்திருக்கிறது. இதனை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் தேவைப்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வ தற்கு முன்னுரிமை அளித்திட வேண்டும்.
6 சுய பாதுகாப்பு உபகரணங்கள் பற்றாக்குறை
சமூக முடக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டு, மக்கள் அனைவரையும் சோதனை செய்திட வேண்டும் என்பதும், அதற்கு மருத்துவர்களுக்கும், சுகாதார ஊழியர்களுக்கும் போதுமான அளவில் சுய பாதுகாப்பு உபகரணங்கள் அளித்திட வேண்டும் என்பதும் இன்றையதினம் உலகம் முழுவதும் ஒப்புக்கொண்டுள்ள விஷயமாகும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இவ்விஷயத்தில் இந்தியாவில் போதுமான அளவிற்கு தேவையான தயாரிப்பு வேலைகள் மேற்கொள்ளப்பட வில்லை. இப்போதும்கூட, சமூக முடக்கம் அறிவிக்கப்பட்டு ஒருமாதம் கடந்த நிலையிலும், சோதனை செய்திடும் விகிதம் உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகமிகக் குறை வானதாகவே இருக்கிறது. இது பாகிஸ்தானைவிடக் கீழ் நிலையில் இருப்பது வெட்ககரமானது. சுகாதார ஊழியர் களுக்குப் போதுமான அளவில் சுய பாதுகாப்பு உபகரண ங்கள் இல்லை. இதன் காரணமாக சிலர் இந்நோய்க்குப் பலி யாகிவிட்டனர். இந்தச்சமயத்திலாவது, சோதனை செய்வத ற்கான கருவிகளையும், பாதுகாப்பு உபகரணங்களையும் போர்க்கால அடிப்படையில் அளித்திட மத்திய அரசு முன்வர வேண்டும். இது அவசியம், அவசரம்.
7 அனைவருக்குமான சுகாதாரப் பாதுகாப்பு
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் கவனம் செலுத்திக்கொண்டிருக்கிற அதே சமயத்தில், கொரோனா வைரஸ் தொற்று அல்லாத விதத்திலும் ஏராளமான அளவிற்கு மரணங்கள் ஏற்பட்டுக்கொண்டிருப்பதை மத்திய அரசு பார்க்கத் தவறிடக்கூடாது. மூன்று லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகளும், பல லட்சம் கர்ப்பிணிப் பெண்களும் அவர்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்குத் தேவை யான தடுப்பூசிகள் அளிக்கப்படாமல் அவர்கள் தத்தளித்துக் கொண்டிருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. இதேபோன்றே கடந்த ஐந்து வாரங்களில் மலேரியா மற்றும் காசநோய் ஒழிப்புத் திட்டங்களும் பெரிய அளவில் வீழ்ச்சி அடைந் திருக்கின்றன. புற்றுநோய்ப் பாதிப்புக்கு ஆளான லட்சத்திற்கும் அதிகமான நோயாளிகளும், 3.5 லட்சத்திற்கும் அதிகமான சர்க்கரை நோய் பாதிப்புக்கு ஆளான நோயாளிகளும் தேவையான சிகிச்சையைப் பெற முடியவில்லை. மலேரியா ஒழிப்பு மற்றும் காச நோய் ஒழிப்புத் திட்டங்களும் கடந்த ஐந்து வாரங்களில் பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்திருக்கின்றன. இரத்த சேமிப்பு வங்கிகளில் போதிய அளவிற்கு இரத்தம் இல்லை என்றும், இதனால் இரத்தம் தேவைப்படும் நோயாளிகள் மிகவும் அவதிக்குள்ளாகி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இத்தகைய நிலைமையை ஏற்க முடியாது என்பதும் இவற்றை உடனடியாகச் சரி செய்ய வேண்டியது அவசியம் என்பதும் நிச்சயமாகும்.
8 அரசாங்கத்தின் முன்னுரிமை நடவடிக்கைகள்
மத்தியப்பிரதேச மாநிலத்தில் மிகப்பெரிய அளவில் சுகாதார நெருக்கடி ஏற்பட்டுக்கொண்டிருப்பது குறித்துக் கவலைப்படாமலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் எதையும் எடுக்காமல் அவற்றை மீறியும், எதிர்க்கட்சி அரசாங்கத்தைக் கவிழ்ப்பதிலேயே கவனம் செலுத்திய பாஜகவின் உயர்மட்டத் தலைமையின் அதிகாரத்தின் மீதான இச்சை, ஒட்டுமொத்த மாநிலத்திலும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய விதத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான வர்களின் எண்ணிக்கையை உயர்த்தி இருக்கிறது. இதனால் அங்கே கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி யுள்ள ‘பாசிடிவ்’ எண்ணிக்கை அதிகமாகி இருக்கின்றன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்த்து, பாஜக அரசாங்கம் பதவியேற்றபின், மாநிலத்தில் எந்தவித அர சியல் தலைமையும் செயல்படாத நிலையில், சாமானிய மக்கள் மிக வேகமாகப் பரவி வரும் கொரான வைரஸ் தொற்றுக்கு பெரிய அளவில் விலை கொடுத்து வருகின்றனர்.
9 மோசமான அரசு நிர்வாகம்
இப்போது மத்திய அரசு வெளியிடும் ஆணைகள் புரிந்து கொள்ள முடியாததாகவும், பின்னர் பல விளக்கங்கள் அவற்றுக்கு அளிக்கப்படுவதும், பின்னர் அவையும் ரத்து செய்யப்படுவதும் வழக்கமாக மாறியிருக்கின்றன. ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பண மதிப்பிழப்பு காலத்தில் இத்தகைய மோசமான முன்னு தாரணத்தை நாம் கண்டோம். இப்போது அது மீண்டும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இவை அனைத்தும், ஆட்சி நிர்வாகத்தில் அமர்ந்திருக்கும் அரசியல் கட்சிக்கு நிர்வாகத் திறமை இல்லை என்பதை தெள்ளத் தெளிவாக்கி இருக்கிறது.
10 மதவெறி
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்தை நாடும், நாட்டு மக்களும் ஒற்றுமையுடன் இருந்தால் மட்டுமே வெற்றிகரமாக முறியடித்திட முடியும். தப்லிகி ஜமாத் அமைப்பு மாநாடு நடத்திய பொறுப்பற்ற தன்மையைவைத்து, ஒட்டுமொத்த முஸ்லீம் சிறுபான்மை இனத்தினரைக் குறிவைத்துத் தாக்குவதற்கும், சமூகப் பிளவினை ஆழப்படுத்தவதற்கும், மதவெறித் தீயை விசிறிவிடுவதற்கும் சாக்காக வைத்துக்கொள்ளக்கூடாது. இது மதத்தின் பெயரால் வெறுப்பைப் பரப்புவதுடன், இந்தியாவையும் பலவீனப்படுத்திடும். இத்தகைய மதவெறிப் பிரச்சாரத்தின் தாக்கம் இப்போது உலகின் பல நாடுகளில் வாழும் இந்தியர்கள் மற்றும் இந்தியாவைப் பூர்வ வம்சாவளியினரால் (Indian origin) உணரப்பட்டு வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைத்திட மத்திய அரசின் அங்கம் வகிக்கும் அரசியல் தலைமை முன்வர வேண்டும். இல்லையேல், கொரானா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்திற்கு மட்டுமல்ல, வெளிநாடுகளில் வாழ் இந்தியர்களுக்கும், நம் நாட்டு மக்களுக்கும் மாபெரும் அளவில் கேடு விளைவித்திடும்.
11 புலம் பெயர் தொழிலாளர்களை அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைத்திடுக!
கொரோனா வைரஸ் தொற்று பரவத்தொடங்கிய உடனேயே வெளிநாடுகளில் பெரும் எண்ணிக்கையில் தவித்த இந்தியர்களை இந்தியாவிற்குக் கொண்டுவர சரியானமுறையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. சிறப்பு விமானங்கள் மூலம் அவர்களை வரவழைத்தது. ஆயினும், சமூக முடக்கம் அறிவிக்கப்பட்டவுடன் அதனால் பாதிப்புக்கு உள்ளான புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பிட எவ்விதமான நடவடிக்கையையும் மத்திய அரசு எடுத்திட வில்லை. அவர்களுக்கு சிறப்பு விமானங்கள் வேண்டாம், குறைந்தபட்சம் சிறப்பு ரயில்கள், பேருந்துகள் இயக்கி அவர் களை அனுப்பி வைத்திருக்க வேண்டாமா? இப்போதாவது இதனைச் செய்திட முன்வர வேண்டும். மேலும், இன்னமும் இந்தியர்கள் அதிகமான அளவில் வெளிநாடுகளில் இருந்து வருகிறார்கள். மத்திய அரசு, அவர்கள் திரும்பி வருவதற்கு நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். அதேபோன்று நம்நாட்டில் இருக்கும் வெளிநாட்டினரையும் அவர்களின் நாட்டிற்கு அனுப்பிவைத்திட நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும்.
12 திருவாளர் பிரதமர் அவர்களே!
உலகில் இதர நாடுகளில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள தலைவர்களைப் போல் அல்லாமல், நீங்கள் உங்கள் சொந்த நாட்டு மக்களின் பிரச்சனைகள் குறித்து ஊடகங்களுக்கு முன்னால் வந்து, பதில் சொல்வதை வெறுத்து வருகிறீர்கள். பெரும்பாலான நாடுகளில் அரசாங்கத்தில் அமர்ந்திருக்கும் தலைவர்கள் நாள்தோறும் ஊடகத்தினரைச் சந்தித்து அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்கிறார்கள். உங்களது அரசாங்கம் நிலைமையை நன்கு சமாளிக்கக் கூடிய விதத்தில் திறமையுடன் ஆட்சி புரிகிறது என்று மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்திடுவதற்கும், மக்களுக்குப் பொறுப்பாக இருக்கிறோம் என்பதைக் காட்டுவதற்கும் இது ஒன்றுதான் ஒரே வழியாகும். உண்மையில், இந்தியாவில் உள்ள மாநில அரசாங்கங்களில் பல இதனைச் செய்து வருகின்றன. கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தின் முதலமைச்சர், நாள்தோறும் ஊடகத்தினரைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார். அன்றையதினம் எடுத்த நடவடிக்கைகளை அவர்களிடம் விளக்குகிறார். அதன் மூலம் இந்தச் சவாலை எதிர்கொள்ள மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகிறார். ஆனால் மத்திய அரசின் நிர்வாக நடைமுறை பாணியில் இத்தகைய ஜனநாயகப் பொறுப்பு முழுமை யாகக் காணப்படவில்லை.
- தமிழில் : ச. வீரமணி
நன்றி - தீக்கதிர் 28.04.2020