சந்திராயன்
3 நிலவிற்கு சென்றுள்ள நேரத்தில் இதை எழுதாவிட்டால் குற்றமாகி விடுமல்லவா!
1986
ம் வருட சம்பவம்தான் இது. எல்.ஐ.சி யில் நுழைவுத் தேர்வு முடிவுகள் வந்து நேர்முகத்
தேர்வில் கலந்து கொள்ளும் முன்பு இஸ்ரோவில் SCIENTIFIC ASSISTANT என்ற பெயரில் பல பணிகளுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு வந்திருந்தது. அதில் ஒரு
பணிக்கு BBA படித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் இருந்ததால் நானும் விண்ணப்பித்திருந்தேன்.
எல்.ஐ.சி
நேர்முகத் தேர்வு முடிந்து பத்து நாட்களுக்குப் பிறகு நேர்முகத் தேர்வுக்கு வருமாறு
கடிதம் வந்தது. ஒரு வார அவகாசம் இருந்தது. இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணம் அளிக்கப்படும்
என்று சொல்லியிருந்ததால் கொஞ்சம் தெம்பாகவே சென்றிருந்தேன். தமிழ்நாட்டைத் தாண்டிய
முதல் பயணம் அதுதான். அதுவும் அபிமான சுஜாதாவின் கதைகளின் களமான பெங்களூருக்கு.
நேர்முகத்
தேர்வுக்கு இரண்டு நாட்கள் முன்பாகவே பெங்களூர் போய் விட்டேன். என் அக்கா கணவரின் தம்பி
பெங்களூரில் ஒரு தனியார் பொறியல் கல்லூரியில் அப்போது வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.
அவருடைய கல்லூரி விடுதிக்குத்தான் போனேன்.
அதனை
கல்லூரி என்றே சொல்ல முடியாது. சில வகுப்புக்கள் மட்டும் காங்க்ரீட் கட்டிடத்தில் நடந்து
கொண்டிருந்தது. மற்றபடி ஆசிரியர்களுக்கான விடுதி உட்பட மெஸ், அலுவலகம் என்று அனைத்துமே
தகரக் கொட்டகையில்தான் இயங்கிக் கொண்டிருந்தது.
மறுநாள்
கர்னாடகாவில் எதற்கோ பந்த் என்பதால் வேறெங்கும் செல்ல முடியாமல் தகரக் கொட்டகைக்குள்ளே
பொழுது கழிந்தது.
பத்து
மணி நேர்முகத்தேர்வுக்கு ஒன்பது மணிக்கே இஸ்ரோவின் பிரம்மாண்டமான வளாகத்திற்குள் சென்று
விட்டேன். வழி கேட்டு வழி கேட்டு நேர்முகத்தேர்வு நடக்கும் இடத்திற்கு சென்று விட்டேன்.
மொத்தமே பனிரெண்டு பேர்தான் இருந்தோம். என் கல்லூரி சீனியர்கள் இரண்டு பேர் வந்திருந்தனர்.
அனைவருமே தமிழ் நாட்டினர்தான். மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் படித்தவர்கள்தான்.
ஆம் அப்போது தமிழ்நாட்டில் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் மட்டும்தான் பி.பி.ஏ
இருந்தது.
சான்றிதழ்களை
சரிபார்க்கும் பணி முடிந்து ரயில் கட்டணத்தை கொடுப்பது போன்ற பணிகள் பதினோரு மணிக்கே
முடிந்தாலும் நேர்முகத் தேர்வு தொடங்கவில்லை.
தேர்வுக்குழுவில் உள்ள இருவர் ஏதோ அவசரக் கூட்டத்திற்கு சென்றுள்ளதால் தாமதமாகும்
என்று சொன்னார்கள். பனிரெண்டரை மணிக்கு அழைத்து ஒரு சீட்டு ஒன்றைக் கொடுத்து கீழேயுள்ள
காண்டீனில் கொடுத்தால் ஒரு ரூபாய்க்கு சாப்பாட்டு டோக்கன் கொடுப்பார்கள். சாப்பிட்டு
விட்டு இரண்டு மணிக்கெல்லாம் வந்து விடுமாறு கூறினார்கள்.
ஒரு
ரூபாய்க்கு ஒரு குளோப் ஜாமூன், இரண்டு பூரி, ஒரு பொறியல், ஒரு கூட்டு, சாதம், சாம்பார்,
ரசம், மோர், அப்பளம் என்று உணவு மிகுந்த சுவையோடும் கூட இருந்தது.
ஒன்றரை
மணிக்கெல்லாம் எல்லோரும் போய் விட்டோம். முதலாக சென்றவருக்கு அரை மணி நேரம் நேர்முகத்தேர்வு.
மற்றவர்களுக்கெல்லாம் திக், திக் என்றால் எனக்கு திக் திக் திக். ஆமாம் எனக்கு எட்டு மணிக்கு ட்ரெயின். இப்படியே
போனால் எட்டாவது ஆளான எனக்கு ட்ரெயின் போனால்
என்ன செய்வது என்று கவலை. நல்ல வேளை அடுத்தவர்களுக்கான நேரம் இருபது நிமிடங்கள்தான்
நடந்தது. நான்கரை மணிக்கு அழைத்தார்கள்.
மொத்தம்
ஏழு பேர் தேர்வுக்குழுவில். தேர்வுக்குழு தலைவர் மட்டும் தனியாக அமர்ந்திருக்க, இரு
பக்கத்திலும் மூன்று மூன்று பேர். தலைவருக்கு நேர் எதிரில் எனக்கான நாற்காலி.
திருவிளையாடல்
நாகேஷ் போல தொடர்ச்சியாக கேள்விகள். சிவாஜி போல கம்பீரமாக சொல்லவில்லை என்றாலும் நம்பிக்கையோடு
சொன்னேன். சில கேள்விகளுக்கு விளக்கமாகவும் சொல்ல வேண்டியிருந்தது. மதுரை சௌராஷ்டிரா
கல்லூரியில் பொருளாதாரத்தை ஸ்பூனில் வைத்து புகட்டிய முஸ்தபா சார், ஆடிட்டர் தொழிலில்
பொய்க்கணக்கு எழுதும் பாவத்திற்கு பிராயச்சித்தமாகவே மாணவர்களுக்கு அக்கவுண்டன்சி சொல்லித்தர வருகின்றேன் என்று சொன்ன
பகுதி நேர விரிவுரையாளர் ஆடிட்டர் வெங்கட சுப்ரமணியன் சார் ஆகியோரை நன்றியுடன்
மனதில் நினைத்துக் கொண்டே நேர்முகத்தேர்வு அறையிலிருந்து வெளியே வந்தேன்.
தேர்வு
முடிவுகள் வந்து விட்டதாம், உனக்கு கிடைத்ததா என்று கேட்டு கல்லூரி சீனியர் கடிதம்
வந்த போது எல்.ஐ.சி பணியில் இணைந்து 15 நாட்கள் சென்னை பயிற்சி முடிந்து நெய்வேலி கிளையில்
இணைந்தும் எட்டு நாட்கள் ஆகியிருந்தது.
அவர்
கடிதம்தான் வந்திருந்தது. இஸ்ரோவிலிருந்து எதுவும் வரவில்லை.
அங்கே
வேலை கிடைத்திருந்தாலும் சென்றிருக்க மாட்டேன்.
ஆமாம்.
உள்ளூரிலேயே
எல்.ஐ.சி வேலை என்பதை விட இஸ்ரோ வேலையை விட நூற்றைம்பது ரூபாய் கூடுதல் சம்பளம் என்பதும் கூட . .
.