வாரம் ஒரு நூல் அறிமுகம்
இந்த வாரம் :
26.02.2023
நூல் : போராட்டங்களின்
கதை
ஆசிரியர் : அ.முத்துக்கிருஷ்ணன்,
வெளியீடு : விகடன்
பிரசுரம்,
சென்னை
விலை : ரூபாய் 310.00
அறிமுகம் செய்பவர்
: எஸ்.ராமன், வேலூர்
காடுகளைப் பாதுகாக்க
பழங்குடி மக்கள் என்ன செய்தார்கள்? மரங்களை கட்டித் தழுவிக் காத்த அந்த இயக்கத்தின்
பெயர் என்ன?
வெளி நாடுகளுக்கு
செல்ல நீங்கள் பாஸ்போர்ட் வாங்க வேண்டும். உள்நாட்டுக்குள்ளேயே செல்லக்கூட பாஸ்போர்ட்
வாங்க வேண்டிய அவசியம் இருந்த நாடு எது தெரியுமா?
ஒரு நாட்டின் நாடாளுமன்றம்
முன்பு கூடாரங்கள் அமைத்து அரை நூற்றாண்டு காலமாக தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு
நியாயம் கேட்டு போராடுவது எங்கே தெரியுமா?
பழங்கள் விற்கும்
ஒரு இளைஞனின் தீக்குளிப்பு எந்த நாட்டின் அரசியலையே மாற்றியமைத்தது?
தங்கள் அரசின் போர்வெறிக்கு
எதிராக அந்நாட்டு ம்க்களே போராடியிருக்கிறார்களா?
“செய் அல்லது செத்து
மடி” என்ற முழக்கத்தோடு துவங்கிய போராட்டம் எது?
பன்னாட்டுக் கம்பெனியின்
நலனுக்கு எதிராக எழுதினால் தூக்கு தண்டனையா?
ரத்தம் கசிந்த பாதங்களுடன்
நடந்து வந்தவர்களின் நோக்கம் நிறைவேறியதா?
மேலே எழுப்பப்பட்டுள்ள
அனைத்து கேள்விகளுக்கும் பதில் இருக்கிறது. பதில் சொன்ன நூல் பொது அறிவு நூல் அல்ல,
உலகெங்கும் நடைபெற்ற பல போராட்டங்களைப் பற்றி விவரிக்கும் “போராட்டங்களின் கதை” எனும்
நூல்.
இந்திய விடுதலைப்
போரின் அங்கமாக திகழ்ந்த தண்டி உப்பு யாத்திரை தொடங்கி, வெள்ளையனே வெளியேறு, ஜாலியன்
வாலாபாக் மட்டுமல்ல, சமூக நீதிக்காக தமிழ்நாட்டில் நடந்த இயக்கங்கள், வெண்மணி காவியம்
முதல் பல்வேறு போராட்டங்களின் தொகுப்பு இந்நூல்.
தென்னாப்பிரிக்க விடுதலைப்
போராட்டம், ஆஸ்திரேலிய அபாரிஜின் மக்களின் போராட்டம், வியட்னாம், இராக் போர்களுக்கு
எதிரான அமெரிக்க மக்களின் போராட்டம், ஜியார்ஜ் பிளைட்டின் மரணத்தைத் தொடர்ந்து சமீபத்தில்
இன வெறிக்கு எதிராக நடைபெற்ற போராட்டம், சர்வாதிகாரத்துக்கு எதிராக துனிசியாவில் நடைபெற்ற
மல்லிகை வசந்தம் உள்ளிட்ட எண்ணற்ற போராட்டங்களைப் பற்றியும் நூல் பேசுகிறது.
உலகின் மிக முக்கியப்
போராட்டங்களைப் பற்றிய அறிமுகம் அளிப்பதாக இந்நூல் அமைந்துள்ளது. அவற்றைப் பற்றி விரிவாக
அறிந்து கொள்ள படிக்க வேண்டிய நூல்களைப் பற்றியும் பார்க்க வேண்டிய ஆவணப்படங்களைப்
பற்றிய குறிப்புக்களும் அந்தந்த அத்தியாயங்களிலேயே எழுதப்பட்டுள்ளது தேடல் உள்ளோருக்கு
உதவிகரமாக இருக்கும்.
எளிமையான, அதே நேரம்
உணர்வூட்டும் மொழி நூலின் வலிமை. எந்த ஒரு நாட்டின் சுதந்திரமோ, மக்கள் உரிமையை பெறுவதோ,
தக்க வைப்பதோ, ஆட்சியாளர்கள், பன்னாட்டு முதலாளிகள், அரசியல்வாதிகள் ஆகியோரின் தாக்குதல்களை
சந்திப்பதோ ஒன்றுபட்ட போராட்டத்தால் மட்டுமே சாத்தியம் என்பதை ஒவ்வொரு அத்தியாயத்திலும்
வலியுறுத்தும் நூல் இது.
அதனாலேயே மிகவும்
முக்கியமான நூலாகிறது.
செவ்வானம்.
போராட்டங்கள் இல்லாமல் மனித குல மாற்றங்களோ, முன்னேற்றங்களோ இல்லை என்பதை மிகவும் அழுத்தமாக சொல்வதாலேயே இந்த நூல் மிகவும் பிடித்தமானதாகிறது.