Friday, December 30, 2016

நிஜ வீர மங்கையின் வெற்றித்தருணம்.





கீதா போகத் என்ற மல்யுத்த வீராங்கனை காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வெற்றி பெற்றதுதான் அமீர்கானின் தங்கல் படத்தின் அடிப்படை.

2010 காமன்வெல்த் மகளிர் மல்யுத்த இறுதிப் போட்டியில் கீதா போகத் தன் போட்டியாளருடன் மோதி வெற்றி பெற்ற தருணத்தின் காணொளி காட்சியை பகிர்ந்து கொண்டுள்ளேன்.

மெய்சிலிர்க்க வைக்கும் வெற்றியை பார்த்து மகிழுங்கள்.

இந்த காணொளியை வாட்ஸப்பில் பகிர்ந்து கொண்ட தோழர் பாலாஜி வெங்கட் ராமனுக்கு நன்றிகள் பல. 


ஜெ விற்கு பாரத ரத்னா கொடுத்தால் வியப்பில்லை






ஏராளமான ஊழல் புகார்கள் காரணமாக ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா கொடுக்க வாய்ப்பில்லை என்று நிறைய பேர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஏதோ இதுவரை கொடுக்கப்பட்ட விருதுகள் எல்லாம் தகுதியானவர்களுக்குத்தான் கொடுக்கப்பட்டுள்ளது என்று நம்பிக்கொண்டிருக்கிற அப்பாவிகள் அவர்கள்.

ராம்மோகன்ராவ் ரெய்டு அடங்கிப் போய் விட்டது. சசிகலாவிற்கு எதிராக பாஜக உள்ளது என்ற கருத்தோட்டம் பொன்னார் மற்றும் தமிழ் இசை யின் வாழ்த்துக்களால் அடிபட்டு விட்டது.

மாநிலங்களவையில் பாஜகவிற்கு அதிமுக ஆதரவு அவசியம். அதற்காக எந்த ஒரு சமரசத்தையும் செய்து கொள்ள மோடி தயங்க மாட்டார். ஆகவே ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா கொடுத்தால் அதில் வியப்பதற்கு ஏதுமில்லை.

இப்போதைக்கு சசிகலாவிற்கு தரவில்லை என்றால் வேண்டுமானால் திருப்தி அடையலாம்.

மோடியை தப்பா பேசாதீங்கஜி- நெசமாதான் ஜீ





இன்று வாட்ஸப்பில் ராமலிங்கம் என்ற தோழர் அனுப்பியது. மரண கலாய். ஒரே ஒரு பயம்தான் இருக்கிறது. இதில் மோடி கலாய்க்கப்பட்டுள்ளார் என்பதை புரிந்து கொள்ளாமல் இது நிஜம்தான் என முட்டாள் காவிகள் பிரச்சாரம் செய்து விடுவார்களே என்பதுதான். 

 சுதந்திரத்திற்கு பின்பு காங்கிரஸ் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்துள்ளது . இருப்பினும் அவர்களில் எந்த பிரதமருக்கும் மோடியை போன்ற தீர்க்கமான தொலைநோக்குப் பார்வை இல்லை என்பதை நாம் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும் .


அதே போல தமிழ்நாட்டை கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சி புரிந்த திராவிட கட்சிகளுக்கும் அதன் தலைவர்களுக்கும் திரு மோடியை போல செயலாக்கம் பெற்றவர்களாக இல்லை என்பதையும் , நாம் ஒப்புக்கொண்டே ஆக வேண்டிய தருணம் இது .
 
ஆட்சி அதிகாரங்களில் இல்லாவிட்டாலும் மக்களுக்காக போராடுகிறோம் என கூறிக்கொள்ளும் இடது சாரிகளும் இன்னும் பிற கட்சிகளும் உண்மையில் மக்கள் நலனில் அக்கறை கொண்டிருந்தால் மோடியின் தீர்கமான திட்டங்களை போன்று ஒரு திட்டத்தை முன்பே பரிந்துரையாவது செய்திருக்க முடியும் .
 
அமெரிக்காவின் வளர்ச்சியை சுட்டிக்காட்டி வாய்கிழிய பேசும் அரசியில்வாதிகள் யாரும் அதற்கான உண்மையான காரணத்தை இதுவரை கண்டறியவில்லை .
 
ஆனால் மோடி பதவியேற்றவுடன் அமெரிக்காவை ஆராய்வதற்கு தனிக்குழு அமைக்கப்பட்டது . அக்குழுவில் இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் , சமஸ்கிருத ஒலைச்சுவடிகளை ஆராயும் ஜோதிட வல்லுனர்களும் இருந்தனர் . இக் குழு தீவிரமாக அமெரிக்காவை ஆராய்ந்து ஒரு பேருண்மையை கண்டுபிடித்து மோடியிடம் வழங்கியது .
 
அது என்னவெனில் அமெரிக்காவின் வளர்ச்சிக்கு மூல காரணம் - அங்குள்ள சுதந்திர தேவி சிலையின் வாஸ்து பலன்களே என்பதாகும் .
 
இதை கண்டுபிடித்தவுடன் பிரதமர் மோடியின் அலுவலுகம் பரபரபரபாக செயலில் இறங்கியது . மோடியின் அரசு வெற்று பேச்சுகளை தவிர்த்து செயல்படுவதில் மட்டுமே குறியாய் இருந்தது .
 
அதன் விளைவாக பூமத்திய ரேகையின் சுக்கிர மையமாக 270 டிகிரி கோணத்தில் அச்ச ரேகை இடதுபுறமாக 45டிகிரி வளைவும் தீர்க்க ரேகை வலதுபுறத்தில் 45 டிகிரி வளைவும் இருக்கும்படி ஒரு உயர் வாஸ்து மையமாக குஜராத்தில் நர்மதா ஆற்றின் கரையில் சர்தார் வல்லபாய் படேலின் சிலையாக 3000 கோடி செலவில் உருவாக்கப்பட்டு வருகிறது .
 
அதை தொடந்து 3600 கோடி செலவில் மாரட்டிய மாமன்னன் வீரசிவாஜி சிலையை அமைக்கும் திட்டம் இறுதிவடிவம் பெற்று இப்பொழுது மோடியின் திருக்கரங்களால் மும்பையின் ரம்மியமான அரபிக்கடல் பகுதியில் துல்லியமான அட்ச தீர்க்க நேனோ ரேகையில் 45 டிகிரி சுக்கிர கோண சந்திப்பில் அடிக்கல் நாட்டப்பட்டுவிட்டது .
 
ஒரு நாட்டை நிர்வகிக்கும் பிரதமர் ,இரண்டு சிலைக்காக 7000 கோடி ரூபாய் செலவு செய்ய அடிக்கல் நாட்டுவது அறிவுப் பூர்வமானதா ? என கேட்பவர்களுக்கு இச்சிலைகளின் மூலம் விளையப்போகும் பயன்கள் தெரிவதில்லை .
 
7000 கோடி முதலீட்டில் உருவாகும் இவ்விரு சிலைகளும் சரியாக அட்ச தீர்க நானோ ரேகையில் 45டிகிரி சுக்கிர கோண சந்திப்பில் நிர்மாணிக்கப்படுவதால் இந்தியாவின் பருவக்காற்று பரவலாக்கப்பட்டு நாடு முழுவதும் சீரான மழையை பெறும் . நாட்டின் ஒருபகுதி வெள்ளத்தாலும் , மறுபகுதி வறட்சியாலும் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை மாறும் .ஆதலால் பல லட்சம் கோடிகளை விழுங்கும் நதி நீர் இணைப்பு போன்ற திட்டங்கள் இனிமேல் தேவைப்படாது.
 
பாரத பிரதமரின் முந்தைய சீர்மிகு திட்டமான Make in India திட்டத்தின் மூலம் இந்த 7000 கோடி ரூபாய் சிலை செய்வதற்கான ஆர்டர் சீன நிறுவனத்திற்கு வழங்கப்படும் . அதனால் நம் பொருளாதாரம் உயரும் .
 
எப்படியெனில் இந்த சிவாஜி சிலை செய்வதற்கான ஆர்டரை நமது பிரதமர் மோடி அவர்கள் மிகுந்த ராஜதந்திரத்துடன் சீனாவுக்கு மொய் செய்துள்ளார் .
 
எனவே இனிமேல் சீனாவிற்கு தேவையான மாசேதுங் சிலை , டிராகன் சிலை , பாம்பு சிலை ,போதி தர்மர் சிலை ஆகியவற்றை செய்வதற்கான அர்டர்களை சீனா இந்தியாவிற்குத்தானே மொய் செய்தாக வேண்டும் . அதுதானே முறை.
 
அந்த மொய் ஆர்டர்களின் மூலம் இந்தியாவின் பொருளாதாரம் வானாளவிய உயரத்தை தொடும் .
 
இன்னும் இச்சிலை மூலமாக கிடைக்கப்போகும் இயற்பியல் , வேதியல், அல்ஜீப்ரா பயன்களின் பட்டியல் மிகப்பெரியது 
.
இதையே பின்பற்றி வங்களா விரிகுடாவில் 4000 கோடி செலவில் சிலை அமைக்க நாம் தமிழக அரசை வலியுறுத்த வேண்டும் . அரசு செவிசாய்க்க வில்லையெனில் போராட தயாராக வேண்டும் .
 
ஆம் . இங்கு போராடாமல் எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை .
 
ஜெய்ஹிந்த்.

Thursday, December 29, 2016

பத்து ரூபாய் காயின் பயம் போனதே . . .



காலையில் வீட்டிற்கு வந்த கீரைக்காரர்தான் கிலியை கிளப்பி விட்டார். இரண்டு கட்டு கீரையை கொடுத்து விட்டு முப்பது ரூபாய் கேட்டார். மேலே உள்ள மூன்று பத்து ரூபாய் காயின்களை கொடுத்தால் வாங்க மறுத்து விட்டார்.

“என்ன சார், பத்து ரூபாய் காயின் செல்லாதுன்னு தெரியாதா? என்று வேறு கேட்டார். நீயெல்லாம் என்னதான் படிச்சியோ என்று ஒரு ஏளனப் பார்வை வேறு. பத்து ரூபாய் காயினை எல்லாம் செல்லாதுன்னு சொல்லலீங்க. அதெல்லாம் வெறும் வதந்தின்னு ரிசர்வ் பாங்கே சொல்லிட்டாங்க என்றாலும் அவர் ஒப்புக் கொள்ள தயாராக இல்லை. இவனுங்களை நம்ப முடியாது சார். ஒருநாளைக்கு ஒரு பேச்சு பேசறாங்க. நெருப்பில்லாம புகையுமா என்பதோடு மட்டும் அவர் நிற்கவில்லை.

பணம் இல்லைன்னா பரவாயில்லை சார். அடுத்த முறை வரும் போது வாங்கிக்கறேன் என்று முப்பது ரூபாய்க்கு கடன்காரனாக வேறு மாற்றப் பார்த்தார்.

மூன்று பத்து ரூபாய் நோட்டுக்களை கொடுத்து அவரை அனுப்பி விட்டேன். இந்த மூன்று காயினும் என்னைப்பார்த்து கிண்டல் செய்வது போலவே தோன்றியது. நேற்றைய அவசரச்சட்டம் வேறு நினைவுக்கு வந்து தொலைத்து விட்டது.

செல்லா நோட்டு அறிவிப்புக்குப் பிறகு அரை நாள் விடுப்பெடுத்து கையில் இருந்த ஐநூறு ரூபாய் நோட்டையெல்லாம் வங்கியில் கட்டி விட்டோம் என்று நிம்மதியாக இருந்தேனே, இந்த மூன்று காயின்களை வைத்துள்ளதற்காக சிறை போகப் போகிறோமே என்று மிகவும் பதட்டமாகி விட்டது.

சரி, இதையும் இரண்டு நாளைக்குள் வங்கியில் கட்டி விடலாம் என்றால் விளக்கம் கேட்பார்களே, என்ன பதில் தருவது என்று ஒரு சிந்தனை வந்தது. வங்கியில் நுழையவே முடியாத கூட்டம் இருக்கையில் எப்படி சாத்தியம் என்ற கேள்வியும் எழுந்தது.

சரி வீட்டிலேயே புதைத்து விடலாம் என்று நினைத்தால் “சிப்பு இருக்கு, சேட்டிலைட் மூலம் கண்டு பிடித்து விடுவோம் என்று எஸ்.வி.சேகர் வேறு மிரட்டுகிறார்.

வேலூர் கோட்டை அகழியில் நள்ளிரவு போய் வீசி விட்டு வந்து விடலாம் என்றால் வேலூர் தெருநாய் தொந்தரவு வேறு மிரட்டுகிறது.

மூன்று பத்து ரூபாய் காயின் வைத்திருந்த எல்.ஐ.சி ஊழியர் கைது என்று தின மலர் தலைப்புச் செய்தி போடுவார்களே, கைது செய்து கூட்டிப் போகையில் முகத்தை மறைக்க ஒரு துண்டு தயாராக வைத்திருக்க வேண்டுமே, இதற்கு ஜாமீன் கிடைக்குமா,  இப்படி எல்லாம் சிந்தனை ஓடிக் கொண்டிருந்தது.

செல்லாத நோட்டு வைத்திருந்தால் கைது கிடையாது என்ற புதிய துக்ளக் அறிவிப்பு வந்த பிறகுதான் நிம்மதிப் பெருமூச்சே வந்தது.

ஆனாலும் இந்த முப்பது ரூபாயை எப்படி செலவழிப்பது?

யாரும் வாங்க மறுத்தால் நிஜமாகவே அது செல்லாக்காசுதானே!!!


Wednesday, December 28, 2016

காஷ்மீர், பியூட்டிபுல் காஷ்மீர் ???????



எம்.ஜி.ஆரின் திரைப்படப்பாடலுக்கோ, முக்கியமான விவாதத்தின்போது இப்பாடலைப் பாடி தமிழகத்தின் மானத்தை கப்பலேற்றிய அவரது கட்சி எம்.பிக்கோ தொடர்பில்லாத பதிவு இது. மிகவும் அவசியமான நேரத்தில் வந்துள்ள அவசியமான நூல் பற்றிய பதிவு இது.

நூல்    அறிமுகம்       

நூல்               : காஷ்மீர் பிரச்சினையும் அரசியல் தீர்வுகளும்

ஆசிரியர்                            பேராசிரியர் அ.மார்க்ஸ்

வெளியீடு                           பாரதி புத்தகாலயம்’,
                     சென்னை - 600018

விலை                                 ரூபாய் 20.00



நாற்பது வருடங்களுக்கு முன்பு திரைப்படப் பாடலில் சொல்லப்பட்டது போல அழகை ரசிக்கும் சூழலில் காஷ்மீர் இன்று இல்லை என்பதை இந்த நூலின் அட்டையே உணர்த்தி விடுகிறது. பியூட்டிபுல் காஷ்மீரை பெல்லட் காஷ்மீராக்கிய பெருமை மோடி அரசையே சாரும்.

முப்பத்தி இரண்டு பக்கங்களில் காஷ்மீர் பிரச்சினையை தெளிவாக நமக்கு சொல்கிற நூல் இது.

காஷ்மீரின் வரலாறு. இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின் போது அன்றைய காஷ்மீர் அரசு எடுத்த நிலை, இந்தியாவின் தலையீட்டை கோரிய சூழல், அப்போது இந்தியா அளித்த வாக்குறுதிகள், வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அன்றைய நேரு அரசு தொடங்கி தொடர்ச்சியாக வந்த பிரதமர்கள் இழைத்த துரோகங்கள், பிரச்சினைகளை வளர்த்தெடுக்க பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகள் என்று எல்லா நிகழ்வுகளும் உள்ளது உள்ளபடி சொல்லப்பட்டுள்ளது. அதனை படித்தால்தான் காஷ்மீரின் இன்றைய நிலையை புரிந்து கொள்ள முடியும்.

காஷ்மீரின் தீவிரவாதத்தின் தோற்றுவாய் தொடங்கி இன்றைய நிலைமை வரை விவரிக்கிற பேராசியர் மார்க்ஸ், தீவிரவாத இயக்கங்கள் அனைத்தும் ஒரே மாதிரியான கொள்கைகள் கொண்டதல்ல என்பதையும் அவற்றின் தலைவர்களின் அணுகுமுறை மாறுபட்டது என்பதையும் பதிவு செய்கிறார்.

எப்போதெல்லாம் ராணுவம் அத்துமீறியதோ அப்போதெல்லாம் அங்கே பிரச்சினை வெடிக்கிறது என்பதை கூறும் நூலாசிரியர், தற்போதைய காஷ்மீர் மக்களின் கொந்தளிப்பிற்கு காரணமான புர்கான் வானி கொல்லப்பட்டதில் ராணுவம் சொன்ன பொய்களை அம்பலப்படுத்தி இளைஞர்கள் தீவிரவாதத்தை நோக்கி உந்தப்படுவதற்கான காரணங்களையும் பட்டியலிடுகிறார்.

காஷ்மீர் பிரச்சினைக்கான தீர்வு உடனடி சாத்தியமில்லை என்ற யதார்த்தத்தை சொல்கிற பேராரியர் மார்க்ஸ்  தீர்வுக்கான சூழல் உருவாக வேண்டுமென்றால் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பதையும் பட்டியலிடுகிறார்.

அந்த பரிந்துரைகள் கீழே உள்ளது.



ஆனால் இதைச் செய்யும் அரசியல் உறுதி ஆட்சியாளர்களுக்கு உள்ளதா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

இக்கேள்விக்கான பதிலில்தான் பெல்லட் காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீராக மாறுமா என்பது அடங்கியுள்ளது ஏனென்றால் காஷ்மீரின்  அழகு ஏரிகளிலோ, இமயமலைச் சரிவுகளிலோ, மணம் வீசும் மலர்களிலோ இல்லை. மக்களின் அமைதியில்தான் உள்ளது.