ஆகஸ்ட் மாதம் எங்களின்
தென் மண்டல மாநாடு வேலூரில் நடைபெற்றது. மாநாட்டுப் பணிகள் தொடர்பாக திட்டமிட்டுக்
கொண்டிருந்த போது எங்கள் கோட்டத் தலைவர் தோழர் எஸ்.பழனிராஜ் ஒரு ஆலோசனையை முன்வைத்தார்.
“மாநாட்டு வளாகத்தில்
அனைவரையும் ஈர்ப்பது போன்ற ஒரு கலை வடிவை அமைக்க வேண்டும். மாநாட்டிற்கு வருகிற அனைத்து
தோழர்களும் புகைப்படம் எடுத்துக் கொள்ள தூண்டும் விதத்தில் அந்த வடிவம் அமைய வேண்டும்.
வேலூர் மாநாட்டின் நினைவாக அந்த புகைப்படம் இருக்கும்”
என்பதுதான் அந்த ஆலோசனை.
பல சகோதர அமைப்புக்களின்
நிகழ்வுகளுக்கு சிலை வடித்துக் கொடுத்திருக்கிற சிற்பி தோழர் கா.பிரபாகரன் அவர்களை
அணுகினோம். அவர் வடித்திருந்த ஒரு மாதிரி ஸ்தூபியைக் காண்பித்தார். இதை எந்த அமைப்பாவது
ஃபைபரில் அமைத்துக் கொடுத்தால் கீழ்வெண்மணியில் அமைந்துள்ள புதிய வெண்மணி நினைவாலயத்தில்
வைக்கலாம் என்று சி.ஐ,.டி.யு சங்கத்தின் மாநிலத் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான
தோழர் அ.சவுந்தரராஜன் சொன்னதாகவும் அவர் தெரிவித்தார். நீங்கள் ஏன் இதனை மாநாட்டில்
தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த பயன்படுத்திக் கொண்டு பின்பு வெண்மணிக்கு அளித்து விடலாமே
என்ற முன்மொழிவை வழங்கினார்.
தலைமையகத்தில் உள்ள
பொறுப்பாளர்கள் விவாதித்த போது அந்த முன்மொழிவு முழு மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு பணிகள்
தொடங்கியது.
மாநாட்டின் சிறப்பம்சங்களில்
ஒன்றாகவே தியாகிகள் நினைவுச் சின்னம் அமைந்தது. அனைவராலும் பாராட்டப்பட்ட படைப்பு அது. அவ்வளவு அழகாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் தோழர் பிரபாகரன் வடிவமைத்துக் கொடுத்திருந்தார்.
நேற்று வெண்மணி தினத்தன்று
அந்த தியாகிகள் ஸ்தூபி வெண்மணி நினைவாலயத்தில் எங்களால் அர்ப்பணிக்கப்பட்டது.
வெண்மணிக்கு வந்த
தோழர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்ப்பதாகவே அமைந்திருந்தது. வெண்மணி தியாகிகளுக்கு அஞ்சுலி
செலுத்த வந்த எங்கள் வேலூர் கோட்டத் தோழர்கள் அனைவரோடும் ஒரு புகைப்படம் எடுத்துக்
கொள்ள விரும்பி ஒரு அரை மணி நேரம் போல காத்திருந்தோம். அந்த நேரத்தில் மட்டும் குறைந்த
பட்சம் 500 தோழர்கள் தனியாகவோ குழுவாகவோ படமெடுத்துக் கொண்டதை பார்க்க முடிந்தது. நிறைவாகவும்
இருந்தது.
வெண்மணித் தீயில்
மடிந்த 44 தியாகிகளின் நினைவைப் போற்ற எங்களால் முடிந்த சிறிய பணி என்ற உணர்வோடு வெண்மணியிலிருந்து
புறப்பட்டோம்.
No comments:
Post a Comment