Thursday, December 22, 2022

அயோக்கியர்களின் புகலிடம் – கொரோனா அச்சுறுத்தல்

 

ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர், கொரோனா பரவலை தடுக்க உரிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும், இல்லையென்றால் பாரத் ஜோடா யாத்திரையை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

 கொரோனா அச்சுறுத்தல் என்பது வெறும் வெட்டிச்சாக்கு. பாஜகவிற்கும் மோடிக்கும் ராகுல்காந்தியின் நடைப்பயணம் எரிச்சலையும் அச்சத்தையும் கொடுத்திருக்கிறது என்பதுதான் யதார்த்தம். அதை தடுத்து நிறுத்த அவர்கள் கையிலெடுத்துள்ள ஆயுதம் கொரோனா அச்சுறுத்தல். மோடியின் அற்ப புத்தியைத்தான் சுகாதாரத்துறை அமைச்சரின் கடிதம் வெளிப்படுத்துகிறது.

 தங்களுக்கு பிடிக்காத, எரிச்சலூட்டும் நிகழ்வை தடுத்து நிறுத்த இந்த கொரோனா அச்சுறுத்தல் என்ற கீழ்த்தர உத்தியை பயன்படுத்தியதை கண்ணுற்ற அனுபவம் எங்களுக்கும் உண்டு.

 அந்த அனுபவத்தை பொது வெளியில் பகிர்வதா, வேண்டாமா என்று நீண்ட நேரம் மனதுக்குள் ஒரு போராட்டம் நடத்திய பின்பே இதை எழுதுகிறேன். மத்திய சுகாதாரத்துறை அமைச்சரின் கடிதம் அந்த சம்பவத்தை  நினைவு படுத்தி விட்டது.

 ஒரு வரலாற்று நிகழ்வுக்குப் பின் இருந்த சதி ஏற்படுத்திய எரிச்சலை இப்பதிவின் மூலமாக ஆற்றிக் கொள்ளலாம் என்ற முயற்சியே.

 மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் எங்கள் சங்கத்தின் தென் மண்டல மாநாட்டை எங்கள் வேலூர் கோட்டச்சங்கம் பொறுப்பேற்று 13.08.2022 முதல் 15.08.2022 வரை மிகச் சிறப்பாக நடத்தினோம். 26 வருடங்களுக்கு பிறகு கிடைத்த வாய்ப்பு என்பதால் எங்கள் தோழர்கள் மிகுந்த உற்சாகத்தோடு, அர்ப்பணிப்போடு செயலாற்றினார்கள், நிதியை வாரி வாரி வழங்கினார்கள். நாங்கள் நிர்ணயித்த தொகையைக் காட்டிலும் அதிகமாக கொடுத்தவர்கள் ஏராளம்.

 ஒரு புறம் மாநாட்டுப் பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்த போது, தோழர்களின் உற்சாகத்தை, மாநாட்டுப் பணிகள் வெற்றிகரமாக நடப்பதை பொறுக்க இயலா சில தீய சக்திகள் அரசின் அதிகார மையங்கள், ஊடகங்கள் ஆகியோருக்கு மொட்டைக் கடிதங்களையும் போலி பெயர்களில் மின்னஞ்சல்களையும் அனுப்பிக் கொண்டே இருந்தார்கள்.

 மாநாடு தொடங்குவதற்கு முதல் நாள், அஞ்சல் ஊழியர் அணுகுகிறார், நீங்கள் அனுப்பிய சில கடிதங்களில் ஸ்டாம்ப் ஒட்ட தவறி விட்டதால் திரும்பி விட்டது, ட்யூ கட்ட வேண்டும் என்று சொல்கிறார். ஏதோ வில்லங்கம் இருப்பது போல உணர்ந்ததால் பணத்தை கொடுத்து வாங்கிக் கொண்டோம்.

 இரண்டு நாளிதழ்களுக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் காவல்துறை கண்காணிப்பாளருக்கும் அனுப்பப்பட்ட கடிதங்கள். சாதாரண கவரில் அனுப்புனர் முகவரி “எல்.ஐ.சி ஊழியர் சங்கம்” என்று கையால் எழுதப்பட்டு இருந்ததால்தான் அஞ்சல் ஊழியர் எங்களிடம் வந்திருந்தார்.

 அந்த கடிதம் வெவ்வேறு ஆட்களால் எழுதப்பட்ட தோற்றத்தில் இருந்தாலும் ஒரே மாதிரி தட்டச்சு செய்யப்பட்ட கடிதம்தான்.

  “கொரோனா காலத்தில் மாநாடு நடத்த அனுமதிக்கக் கூடாது. கேரளாவில் பன்றிக் காய்ச்சல் பரவுவதால் கேரளாவைச் சேர்ந்தவர்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்ள வருவதால் தமிழ்நாட்டிலும் பன்றிக்காய்ச்சல் பரவி  தமிழ்நாட்டில் பெரும் உயிரிழப்பு நடக்கும். டெல்லியில் இஸ்லாமியர் மாநாடு உருவாக்கிய விளைவுகள் போல தமிழ்நாட்டில் இம்மாநாட்டின் மூலம் நிகழும்”

 இதுதான் அக்கடிதத்தின் சாராம்சம். எங்கள் கைகளுக்கு அக்கடிதங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்காததால் மண்டையை மறைத்தாலும் மண்டைக்கு வெளியே இருந்த கொண்டையை மறைக்க மறந்து விட்டார்கள்.

 பாவம் அவர்கள் வேறு யாருக்கெல்லாம் கடிதம் அனுப்பினார்களோ, அவர்கள் எல்லாம் அதனை குப்பைத் தொட்டியில் போட்டு விட்டார்கள் போல.

 “இன்று போய் நாளை வா” திரைப்படத்தில் ராதிகாவை காரில் வைத்து துபாய்க்கு கடத்திப் போக காமெடி வில்லன் கூட்டம் திட்டம் போடும். புறப்பட்ட கொஞ்ச நேரத்துலயே பெட்ரோல்  இல்லாமல் கார் நின்று போகும். ஏண்டா  பெட்ரோல் போடலியா என்று மெயின் வில்லன் அடியாளை கேட்க துபாயில பரோட்டா கிடைக்குமான்னு தெரியாததால் அந்த காசுல பரோட்டா தின்னுட்டோம் என்பார். அது போல ஸ்டாம்ப் வாங்கி கவரை அனுப்ப பணிக்கப்பட்டவர் அந்த காசை எதற்கு பயன்படுத்தினாரோ, சதியின் ஆதாரம் எங்களிடம் சிக்கியது.

 “எவ்வளவோ பாத்தாச்சு, இதையும் பார்ப்போம்” என்று அதை அலட்சியப் படுத்தி விட்டு மாநாட்டை நடத்தினோம். பங்கேற்ற அனைவராலும் பாராட்டப் பட்ட மாநாடு என்ற மன நிறைவைப் பெற்றோம். வேலூர் கோட்டத்தின் ஒவ்வொரு தோழரின் பெருமிதமாக தென் மண்டல மாநாடு அமைந்தது. 















































 இப்பதிவில் பகிர்ந்து கொண்டிருக்கும் புகைப்படங்கள் மாநாட்டின் பிரம்மாணடத்தைச் சொல்லும்.

 தீய சக்திகளின் வயிறு பொசுங்கியது.  தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தனாக அவதூறுகளோடு அடுத்த மொட்டைக் கடிதாசி பறந்தது. இம்முறை அவர்கள் ஸ்டாம்ப் ஒட்டியிருந்தார்கள். ஆனாலும் யாருக்கெல்லாம் அனுப்பியிருந்தார்களோ, அவர்களே அதை எங்களுக்கு கொடுத்து விட்டார்கள்.

 கொரோனா அச்சுறுத்தல் என்று அற்பத்தனமாக செயல்படும் ஒன்றிய அரசும் அசிங்கப்படப் போகிறது.

3 comments:

  1. சீப்பை ஒளித்து வைத்து கல்யாணத்தை நிறுத்திய கதை

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். ஆனால் அசிங்கமாக அம்பலப்பட்டார்கள்

      Delete
  2. அருமையான பதிவு தோழர் வாழ்த்துக்கள்

    ReplyDelete