எங்கள் வேலூர் கோட்டத்தின் முதுநிலை கோட்ட மேலாளராக இருந்த திரு இல்லையில்லை தோழர் அ.சுப்பராயன், நேற்று மாலை காலமானார் என்ற துயரச் செய்தி நேற்று கிடைத்தது. இறுதி அஞ்சலி செலுத்த இன்று புதுவை நோக்கி செல்லவுள்ளோம்.
என் வாழ்வின் முக்கியமான ஆளுமை அவர். 15 நாட்கள் பயிற்சி முடிந்து 02.05.1986 அன்று நெய்வேலி கிளையில் இணைந்த போது அவர் நெய்வேலி கிளையின் முக்கியமான, மூத்த தோழர் அவர். அப்போது அவர் சங்கத்தில் எந்த பொறுப்பிலும் இல்லை. ஆனால் நெய்வேலி கிளைச் சங்கம் அவரைச் சுற்றித்தான் இயங்கிக் கொண்டிருந்தது.
1980 ல் துவக்கப்பட்ட நெய்வேலி கிளையில் தோழர் சுப்பராயன், தோழர் தனராஜ் என்று இரண்டு ஊழியர்கள் மட்டும்தான். எல்.ஐ.சி ஊழியர்களின் போனஸ் உரிமை தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமலாக்க வேண்டும் என்று அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தியது. 14 நாட்கள் நடந்த அந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் தினமும் சுமார் நூறு தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பார்கள். என்.எல்.சி சி.ஐ.டி.யு தோழர்களை பங்கேற்க வைத்த பெருமை அவருக்கு உண்டு. இரண்டே தோழர்களைக் கொண்டு 14 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை எழுச்சியோடு நடத்திய கிளை என்று அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் வரைபடத்தில் நெய்வேலி கிளைச் சங்கத்தை இடம் பெற வைத்தார்.
நாங்கள் பணியில் சேர்ந்த அன்று மாலை எங்களையெல்லாம் பக்கத்தில் உள்ள டீக்கடைக்கு அழைத்து சென்று டீ வாங்கிக் கொடுத்து அனைவரோடும் இயல்பாக பழக வைத்தார்.
ஏற்காடு, ஊட்டி, கோவா என்று அவருடைய திட்டமிடலில் சென்ற பயணங்கள் நெருக்கத்தை அதிகப்படுத்தியது. வயதோ, அனுபவமோ தடையாக இருக்கவில்லை.
புதுச்சேரியைச் சேர்ந்தவர் என்பதால் அவர் பெயர் ஆங்கிலத்தில் SOUPARAYANE என்றுதான் இருக்கும். அதை சௌபராயனே என்று சொல்லித்தான் அழைப்போம்.
தமிழ்த்தேச பொதுவுடமைக் கட்சியைச் சேர்ந்தவர் அவர். அக்கட்சியின் தலைவர்களைக் கொண்டு தொழிற்சங்க வகுப்புக்களை எடுக்க வைத்துள்ளார். ஆனால் அந்த வகுப்புக்களில் அவரது அரசியலை திணிக்க முயன்றதே இல்லை. வகுப்பின் தலைப்போடு நின்று போய் விடும்.
அவர் அளித்த மூன்று புத்தகங்கள் என் வாழ்க்கைப்பயணத்தின் திசைவழியை மாற்றியமைத்தது.
கல்கி, சுஜாதா, ராஜேஷ்குமார், சுபா, இர்விங் வாலஸ், சிட்னி ஷெல்டன் என்று படித்துக் கொண்டிருந்த எனக்கு அவர் அளித்த
ராகுல சாங்கிருத்தியானின் "வோல்கா முதல் கங்கை வரை"
அஸ்வகோஷின் "கடவுள் என்பது என்ன?"
முனைவர் கேசவனின் "சிங்காரவேலரின் வாழ்க்கை வரலாறு" நூல்கள்
புதிய வெளிச்சத்தை அளித்தன.
தொழிற்சங்க இயக்கத்தில் காலூன்ற காரணமாக இருந்தவை அவை.
அவர் அதிகாரியாக பதவி உயர்வில் சென்றது முரணாக தோன்றியது. ஆனாலும் அவர் மனதிலிருந்த வர்க்க உணர்வு மாறவில்லை. 1990 ல் அனைத்து தொழிற்சங்கங்களும் பாரத் பந்த் போராட்டம் நடத்திய போது அவர் அதிகாரியாக இருந்த போதும் கூட அலுவலகம் செல்லாமல் கலந்து கொண்டார்.
பதவி உயர்வு பெற்ற போது அதற்கேற்றபடி தன் திறமைகளை வளர்த்துக் கொள்ள முயற்சிகள் எடுத்தவர். அவர் அக்கவுண்ட்ஸ் பிரிவில் பணி செய்ததில்லை என்பதால் கிட்டத்தட்ட ஒரு மாதம் அவரது வீட்டிற்குச் சென்று வகுப்பெடுப்பேன். ஒரு குயர் நோட்டு நிரம்பும் அளவு குறிப்புக்களை எழுதினார். இரவு ஏழு மணி முதல் எட்டரை மணி வரை வகுப்பு, பின்பு அரை மணி நேரம் டீக்கடையில் அரட்டை என்று பொழுது போகும். பின்னொரு நாள் அவர் எங்கள் கோட்ட உயரதிகாரியாக வந்து அக்கவுண்ட்ஸ் பிரிவு பயிற்சி வகுப்பை துவக்கி வைத்த போது "உங்கள் பொதுச்செயலாளரிடம்தான் நான் அக்கவுண்ட்ஸ் கற்றுக் கொண்டேன்" என்று சொன்னதாக தோழர்கள் மகிழ்ச்சியோடு வந்து சொன்னார்கள்.
நெய்வேலி கிளையில் ஏராளமான சிக்கல்களை சந்தித்த போது அவற்றுக்கான தீர்வுக்கான ஆலோசனைகளை அளிப்பார். ஒரு பிரச்சினைக்காக விவாதிக்க கோட்ட வணிக மேலாளரே கிளைக்கு வந்த போது அப்போதைய கிளைச்சங்க பொறுப்பாளர்களை அழைத்து "பேச்சுவார்த்தைக்கு செல்வது நீங்கள் அல்ல, சுந்தரம், ராஜப்பா, நடராஜன் என்று நினைத்துக் கொண்டு பேசுங்கள்" என்று தைரியம் கொடுத்தவர்.
19.07.1989 அன்று நான் அடியாட்களால் தாக்கப்பட்டபோது நான் சோர்வுறாமல் நெஞ்சுரத்தோடு செயல்படுவதற்கான ஊக்கம் அளித்தவரும் அவர்தான்.
நான் தொழிற்சங்கப் பாதையில் பயணிப்பதற்கும் அப்போது புகை பிடித்ததற்கும் சுப்பராயனே காரணம் என்று என் அப்பா அவரை திட்டினாலும் கூட அவர் மீது மிகுந்த மரியாதை உண்டு. நெய்வேலி புதிய ஊழியர் குடியிருப்பிற்கு சென்ற போது எல்லோருமே அவர்களின் சொந்த வீட்டிற்கு புதுமனை புகு விழா போலவே சிற்றுண்டியெல்லாம் அளித்து கொண்டாடினோம். என் வீட்டு நிகழ்வுக்கு அவர் வர கால தாமதமான போது "சுப்பராயன் ஏன் இன்னும் வரவில்லை" என்று என்னை நச்சரித்து விட்டார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் வேலூர் கோட்டத்திற்கு முதுநிலை கோட்ட மேலாளராக மாற்றலில் வந்தார். அந்த ஓராண்டு காலம் மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது. பல ஆலோசனைகளை அமலாக்கினார். ஊழியர்கள் நலனில் உண்மையான அக்கறையோடு முடிவுகள் எடுத்தார். தொழிலுறவு நன்றாகவே இருந்தது. பழைய நெருக்கத்தை இருவருமே பயன்படுத்திக் கொள்ளாமல் அவரவர் வ்கிக்கும் பொறுப்புக்கேற்ற இடைவெளியில் கோடு போட்டு நின்று கொண்டோம்.
வாசிப்பின் மீது நாட்டம் கொண்ட அவர், பாரதி புத்தகாலயத்தோடு இணைந்து நாங்கள் நடத்திய புத்தகக் கண்காட்சியை துவக்கி வைத்தது மட்டுமல்லாமல் அலுவலக நூலகத்திற்கு நாங்கள் கொண்டு வந்த அனைத்து நூல்களின் பிரதிகளையும் வாங்கி வைத்தார்.
பணி ஓய்விற்குப் பின்பு உடல் நிலை பாதிக்கப்பட்ட பின்பு அவர் யாரையும் சந்திப்பதை தவிர்த்து வந்ததால் நேரில் ஓஅர்க்க முடியாமல் போய் விட்டது.
தோழர் ஏ.எஸ் ஸிற்கு மனமார்ந்த அஞ்சலி.
பிகு: எங்கள் கோட்டச்சங்க வெள்ளி விழா ஆண்டு மாநாட்டில் தோழர் ஏ.எஸ் வாழ்த்துரை வழங்கிய படம் மேலே உள்ளது.
நல்ல நண்பர்
ReplyDelete