Wednesday, December 14, 2022

நூற்றாண்டை நிறைவு செய்யும் எங்கள் பிதாமகர்

 










எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் நிறுவனத் தலைவர்களில் ஒருவர், பொதுச்செயலாளராக, தலைவராக பல பத்தாண்டுகள் சங்கத்தை வழி நடத்திய தலைவர் நூற்றாண்டை நிறைவு செய்து இன்று நூற்றி ஒன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்.

 

கடந்த 14,டிசம்பர்,2021 அன்று தன் நூறாவது வயதில் அடியெடுத்து வைத்த போது தங்களின் இல்லத்து திருவிழாவாக இன்சூரன்ஸ் ஊழியர்கள் இந்நிகழ்வைக் கொண்டாடினார்கள், பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டார்கள்..

 

இன்றைக்கு வங்க தேசத்தில் இருக்கிற ஜெஸ்ஸோர் மாவட்டத்தில் பஞ்சியா எனும் ஊரில் பிறந்தவர் மிகவும் இளைய வயதிலேயே ஹிந்துஸ்தான் கோவாப்ரேடிவ் என்ற தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியில் பணியில் இணைந்தார். விடுதலைப் போராட்டம்  உச்சத்தில் இருந்த அக்காலத்தில் மாணவப்பருவம் முதலே இடதுசாரிகளால் ஈர்க்கப்பட்டிருந்த தோழர் போஸ், அந்நிறுவனத்தில்  நிலவிய கொடுமைகளையும் உழைப்புச் சுரண்டலையும் கண்ணுற்று ஊழியர்களை அணி திரட்டத் தொடங்குகிறார். அந்த முயற்சிதான் இன்று அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் எனும் பிரம்மாண்டமான ஆல மரமாக  காட்சியளிக்கிறது.

 

பொய்க்கணக்கு காண்பித்து போனஸை மறுத்த போது, உண்மையான கணக்கு புத்தகத்தை போட்டோ எடுத்து தொழிலாளர் தீர்ப்பாணையத்தில் சமர்ப்பிக்கிறார். நிர்வாகத்தின் மோசடியை கண்டிக்க வேண்டிய நீதிபதி, அதை அம்பலப்படுத்திய தோழர் போஸை பணி நீக்கம் செய்யச் சொல்கிறார். “என் மீது என்ன நடவடிக்கை எடுத்தாலும் பரவாயில்லை, ஊழியர்களுக்கு போனஸை வழங்குங்கள்” என்று  தியாக தீபமாக ஒளிர்ந்தார்.

 

 மெட்ரோபாலிடன் என்ற நிறுவனம் அங்கே சங்கம் அமைக்கப்பட்ட காரணத்தால் ஐம்பத்தி ஐந்து ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தோழர்களையும் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட தோழர்கள் சந்திரசேகர போஸ், சரோஜ் சவுத்ரி, சுனில் மைத்ரா ஆகிய தோழர்கள் மீதும் பொய் வழக்கு போட்டு கைது செய்ய வைக்கிறது. அந்த வழக்கு பின்பு தள்ளுபடி செய்யப்பட்டாலும் பணி நீக்கம் செய்யப்பட்ட  அந்த ஐம்பத்து ஐந்து ஊழியர்கள் மீண்டும் பணி கிடைக்க இன்சூரன்ஸ் தேசியமயமாகி எல்.ஐ.சி உருவாகும்வரை காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால் அவர்கள் பணிக்காலம் கணக்கில் கொள்ளப்படவில்லை. 

இன்று இன்சூரன்ஸ் ஊழியர்கள் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளுக்கும் அடித்தளமாய் அமைந்தது  மெட்ரோபாலிடன் ஊழியர்களின் தியாகமே என்பதை தோழர் சந்திரசேகர போஸ் நினைவுபடுத்திக் கொண்டே இருப்பார். 

 

ஆயுள் காப்பீடு தேசியமயமான போது  இன்றைய பாஜகவின் அன்றைய வடிவமான ஜனசங்கம் எதிர்த்த போது அப்போதைய  நிதியமைச்சர் திரு சி.டி.தேஷ்முக் “ஊழியர் சங்கம் ஆதரிக்கிறது’ என்று ஒரு தந்தியைக் காண்பித்து பேசுகிறார். அந்த தந்தியை அனுப்பியது அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் அன்றைய பொதுச்செயலாளர் தோழர் சந்திரசேகர் போஸ்.

 

1955 முதல் 1994 வரை பொதுச்செயலாளராக, துணைத்தலைவராக, தலைவராக என்று பொறுப்பில் இருந்த காலத்தில் மட்டுமல்ல, இன்றும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தை வழி நடத்தி வரும் தலைவர். அகில இந்திய மாநாடுகளில் அவர் பங்கேற்பு உற்சாகம் தரும்.எழுச்சி ஊட்டும். ஒவ்வொரு அகில இந்திய மாநாட்டிலும் தன் அனுபவப் பொக்கிஷத்தை அள்ளி அள்ளி வழங்குவார். 1951 அமைப்பு மாநாடு தொடங்கி 2020 விசாகப்பட்டிணம் மாநாடு வரை முழுமையாக பங்கேற்றவர்.

 

வரும் ஜனவரியில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் இருபத்தி ஆறாவது பொது மாநாடு கொல்கத்தா நகரில் நடைபெறவுள்ளது.  வேறு யாரையும் விட அந்த மாநாட்டை உற்சாகமாக எதிர்பார்த்துக் கொண்டிருப்பது தோழர் போஸ்தான். மாநாட்டு வரவேற்புக்குழு அமைப்புக் கூட்டத்திலும் பின் நடந்ததொரு ஊடகவியலாளர் சந்திப்பிலும் ஒரு இளைஞன் போல ஆர்வத்துடன் கலந்து கொண்டிருக்கிறார்.

 

தொழிற்சங்கம் தாண்டி கல்வித்துறையிலும் தடம் பதித்தவர் தோழர் போஸ். கல்கத்தா பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராக பல ஆண்டுகள் செயலாற்றியுள்ளார். ரவீந்திர நாத் தாகூர் மீதும் வங்க மொழி மீதும் நேசம் கொண்டவர்.

 

“முற்றுகை” நூல் எழுத நான்காண்டுகள் முன்பு அவரை கொல்கத்தாவில் சந்தித்து தரவுகள் சேகரித்த போது அவரது நினைவாற்றலும் நிகழ்வுகளை கால வரிசை மாறாமல் நிதானமாக விளக்கிய பாங்கும் பிரமிக்க வைத்தது. மறைந்த தன் தோழர்கள் சரோஜ் மற்றும் சுனில் பற்றி பேசும் போது மட்டும் உணர்வு மயமானார். அவரது விருந்தோம்பலும் இரவு பத்தரை மணிக்கு டாக்ஸி பிடித்து தருகிறேன் என்று புறப்பட்டதும் எந்நாளும் மறக்க முடியாத இனிய அனுபவம்.

 

அவர் எல்.ஐ.சி பணியிலிருந்து ஓய்வு பெற்ற போது அன்றைய அகில இந்திய பொதுச்செயலாளரும் தோழர் போஸின் உற்ற நண்பருமான தோழர் சரோஜ் சவுத்ரி,  “தோழர் போஸ் ஒரு முழுமையான மனிதர். எதிர்காலத்தில் யாராவது வரலாற்றியலாளர் இந்தியாவின் மத்தியதர தொழிற்சங்க இயக்க வரலாற்றை எழுதினால் தோழர் சந்திர சேகர் போஸ் அவர்களின் பன்முகத் தன்மை கொண்ட ஏராளமான நடவடிக்கைகள் பற்றி கணிசமான பக்கங்களை ஒதுக்க வேண்டியிருக்கும். நம்முடைய பெருமையே நாம் அவரது தோழர், சக ஊழியர், சம காலத்தவர் என்பதுதான்.” என்று எழுதினார்.

 


ஆம். தோழர் சந்திர சேகர் போஸின் தோழர் என்பதைக் காட்டிலும் வேறு பெருமை வேண்டுமோ நமக்கு! தோழர் போஸ் நீடூழி வாழ்க

 

2 comments:

  1. வர்ணனை இல்லாத உண்மை வரிகள்.

    வணங்குவோம்!வாழ்த்துவோம்!!
    வழிநடப்போம்!!!

    ReplyDelete
  2. மாபெரும் சரித்திரத்தை ரத்தின சுருக்கமாக தந்திருக்கிறீர்கள்.பாராட்டுகள்.

    ReplyDelete