டிமோ
சந்திரனுக்குப் போனால் எப்படி இருக்கும் என்றொரு கற்பனையில் ஒரு நாடகம் எழுதினேன்.
செப்டம்பர் மாதம் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற எங்கள் கோட்ட மாநாட்டின் ஒரு பகுதியாக
பொது வெளியில் நடைபெற்ற மக்கள் ஒற்றுமை கலை விழாவில் நாடகத்தை அரங்கேற்றினோம்.
ஒரே ஒரு நாள் ஒத்திகையின் போது மட்டுமே என்னால் இருக்க முடிந்தது. அதன் பின் தோழர்களே பயிற்சி எடுத்துக் கொண்டு சில வசனங்களை மெருகேற்றி சிறப்பாக நடித்து மக்களின் கைத்தட்டுக்களை அள்ளிக் கொண்டார்கள்.
அந்த நாடகத்தின் எழுத்து வடிவம் உங்களுக்காக.
மகாராஜாவாக தோழர் சி.சோமசுந்தரம்,
மந்திரி 1 ஆக தோழர் ஜி.ரவி
மந்திரி
2 ஆக தோழர் கே.அத்தாவூர் ரஹ்மான்
விஞ்ஞானியாக தோழர் பி.எஸ்.பாலாஜி
புகைப்படக்காரராக தோழர் சி.கணேசன்
சந்திரனில் மகாராஜா
பின்னணிக்
குரல் : நிலவுக்கு சந்திராயன் மூன்றை அனுப்பி இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர்
நம் விஞ்ஞானிகள். அவர்களுக்கு நம் வாழ்த்துக்கள். கரையான் புற்றெடுக்க கருநாகம் புகுந்த
கதையாய் அந்த மகத்தான சாதனையை சம்பந்தமே இல்லாதவர்கள் களவாடினால் என்ன நடக்கும்?
“ ராஜா, ராஜாதி ராஜன் இந்த ராஜா”ஒலிக்க மகாராஜா அரசவைக்கு வருகிறார். வந்து நின்று ஸ்டைலாக பார்க்கிறார், எல்லா பக்கமும் திரும்பி நிற்கிறார். அவரை போட்டோகிராபர் புகைப்படங்கள் எடுக்கிறார். பிறகு அரியணையில் அமர்கிறார்.
மந்திரிகள் இருவர் பக்கத்தில் வந்து நிற்கிறார்.
மகாராஜா: நாட்டில என்னய்யா நடக்குது?
மந்திரி 1 ;: ;மகாராஜா பணப்பூரில் பயங்கரப் பிரச்சினை. மக்கள் அடித்துக் கொண்டு சாகிறார்கள். நாம் படையை அனுப்பி அமைதியை ஏற்படுத்த வேண்டும்.
மந்திரி 2 : யோவ் மங்குனி மந்திரி, அந்த சண்டையே நாம ஏற்பாடு செஞ்சதுதான். சண்டை நடந்துகிட்டே இருந்தாதான் எவனும் நம்ம கிட்ட வர மாட்டேன்.
மந்திரி 1 : மகாராஜா, விலைவாசி ஏறிக்கிட்டே இருக்குது, வேலையில்லா திண்டாட்டம் அதிகமாயிடுச்சு, ஜனங்க ரொம்ப கஷ்டப்படறாங்க.
மகாராஜா : ஏன்யா எப்ப பாரு நொய் நொய்யுன்னு ஏதாவது பிரச்சினையை சொல்லிக்கிட்டே இருக்க? இதுக்குத்தான்யா நான் அரசவைக்கே வரதுல்ல. என் நாட்டில எனக்கு பிடிக்காத ஒரே இடம் இதுதான்யா.
மந்திரி 2 : மகாராஜா சந்தோஷப்படற மாதிரி, அவரு பெருமையா பேசற மாதிரி ஏதாவது விஷயம் இருந்தா சொல்லுய்யா.
மந்திரி 1 : இருந்தா சொல்ல மாட்டேனா? ஏன் நீயும் மந்திரிதானே! நீ என்ன கிழிக்கற?
மகாராஜா : ஏய், அப்டில்லாம் பேசக் கூடாது. இவன் என் மன சாட்சி, மனதின் குரல். என் மனசுல இருக்கறத செஞ்சு முடிக்கறவன். பணப்பூர் சண்டைக்கே இவந்தான் மெயின்.
மந்திரி 1 : மகாராஜா, அந்த காலத்துல சந்திரனுக்கு போக ராக்கெட் கண்டு பிடிக்க ஆரம்பிச்சாங்க. அந்த வேலை இப்போ முடிஞ்சு நம்ம சைன்டிஸ்டுங்க எல்லாம் இப்போ ரெடியா இருக்காங்க. நீங்க கையெழுத்து போட்டா அவங்க கிளம்பிடுவாங்க. நீங்களும் அவங்கள பெருமையா வழி அனுப்பி வைக்கலாம். போட்டோ எடுத்து போடலாம்.
மகாராஜா : சரி கூப்பிடு அந்த ஆளுங்களை.
சைன்டிஸ்ட் வருகிறார் : வணக்கம் மகாராஜா
மகாராஜா : நமஸ்தே ன்னு சொல்லுய்யா.
மந்திரி 2 : மகாராஜாவுக்கு என்ன சொன்னா பிடிக்கும்னு கூட தெரியாம நீயெல்லாம் என்னய்யா ஆராய்ச்சி செஞ்ச?
சைன்டிஸ்ட் : மகாராஜா, எங்க தாத்தா மகாராஜா சந்திரனுக்கு போக ஒரு ராக்கெட்டு கண்டுபிடிக்க ஆரம்பிச்சாரு. அது இப்போ தயாரா இருக்கு! நீங்க இதுல்ல கையெழுத்து போட்டா கஜானாவில இருந்து பணத்தை வாங்கிட்டு மத்த ஏற்பாட்டை செய்வோம்.
மகாராஜா ஃபைலை கையில் வாங்குகிறார். இடது கையில் பச்சை குத்தப்பட்டுள்ள தன் பெயரைப் பார்த்து கையெழுத்து போடுகிறார்.
சைன்டிஸ்ட் நன்றி சொல்லி விட்டு கிளம்புகிறார்.
மந்திரி 2 : இரு இரு எங்க கிளம்பிட்டே. கொஞ்சம் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லிட்டு போ.
சைன்டிஸ்ட் : என்ன மந்திரியாரே?
மந்திரி 2 : சந்திரனுக்கு யார் போகப் போறாங்க?
சைன்டிஸ்ட் : நாந்தான் மந்திரியாரே
மந்திரி 2 : அங்கே போய் என்ன செய்யப் போற?
சைன்டிஸ்ட் : அங்க தண்ணி இருக்கான்னு கண்டு பிடிப்பேன். அங்கே இருக்கிற கல்லையையும் மண்ணையும் கொண்டு வந்து இங்கே ஆராய்ச்சி செய்வேன்.
மந்திரி 2 : தண்ணி இருக்கான்னு பார்க்கவும் கல்லையும் மண்ணையும் கொண்டு வர நீ எதுக்கய்யா? அரசாங்கம் செலவு செய்யும். உனக்கு பேரும் புகழுமா?
மந்திரி 1 : அப்போ என்ன நீ போகப் போறியா?
மந்திரி 2 : நான் எதுக்குய்யா போகனும்? நம்ம நாட்டுக்கே தலைவர் மகாராஜா. அவர் போனாதான் நாட்டுக்கே பெருமை. சந்திரனுக்குப் போற முதல் மகாராஜா நம்ம மகாராஜாவாதான் இருக்கனும்.
மகாராஜா : இது நல்ல ஐடியாவா இருக்கே! நானே சந்திரனுக்குப் போறேன்.;
சைன்டிஸ்டும் ம;ந்;திரி 1 ம் அதிர்ச்சியாகப் பார்க்கிறார்கள்.
சைன்டிஸ்ட் : மகாராஜா, அது கொஞ்சம் ரிஸ்க். நான் அதுக்காகவே படிச்சவன்,
மந்திரி 2 : மகாராஜா படிக்காதவருன்னு சொல்றியா? உலகத்துல யாருமே படிக்காத படிப்பை அவரு மட்டுமே படிச்சதுக்கான சர்டிபிகேட் இருக்கு, பார்க்கறியா?
மந்திரி 1 (மெதுவாக) : நாட்டுல அத்தனை பேரும் அதை கேட்டாலும் தர மாட்டீங்க, அப்படி ஒன்னு இருந்தா காண்பிக்க மாட்டீங்களா?
மகாராஜா : இங்கே பார், நல்ல நாள் பார்த்து நான் கிளம்பனும். அதுக்கு ஏற்பாடு செய். யோவ் சைன்டிஸ்ட், நான் என்ன செய்யனும்னு நீதான் எனக்கு புரியற மாதிரி சொல்லிக் கொடுக்கனும்.
காட்சி 2
விண்வெளிக்கூடம்
சைன்டிஸ்ட்
: மகாராஜா, இதுதான் சந்திரனுக்கு போகும் இயந்திரம். இதுக்குள்ள உட்கார்ந்து முதலில் காற்று அளவை சோதிக்கனும். புவியீர்ப்பு விசையை கவனிக்கனும்.
அப்பறமா …
மகாராஜா : அதெல்லாம் நீங்க செஞ்சு வச்சிருங்க. நான் உள்ள போய் உட்கார்ந்து ஏதாவது மந்திரத்தை சொல்வேன். மிஷின் கிளம்பிரனும்.
சைன்டிஸ்ட் : இயந்திரத்திற்குள் நுழைந்து ஏதோ செய்து விட்டு வருகிறார்.
சைன்டிஸ்ட்
: மகாராஜா இந்த மந்திரத்தை ஞாபகம் வச்சுக்குங்க
மகாராஜா: என்ன மந்திரம் அது?
சைன்டிஸ்ட் : அண்டா காகசம், அபுகா ஹுகும் புறப்படு சீசேம்.
மந்திரி 2 : யோவ்! இது கொள்ளைக் கூட்டத்தோட மந்திரம்தானே!
மந்திரி 1 : பொருத்தமாத்தானே இருக்கு!
சைன்டிஸ்ட் மகாராஜா இதை போட்டுக்குங்க என்று விண்வெளி உடையைத் தருகிறார்.
மகாராஜா : இதைப் போட்டுக்கிட்டா என் கம்பீரமே போய்டுமேய்யா?
மந்திரி 1 : இதை போடலைன்னா உங்க உயிரே போயிடுமே!
மகாராஜா தயாராக வருகிறார். அவர் கூடவே போட்டோகிராபரும் வருகிறார்.
சைன்டிஸ்ட் : மகாராஜா, இவரு எதுக்கு?
மகாராஜா : இவரு இல்லைன்னா என்னை சந்திரனில யாரு போட்டோ எடுப்பா?
சைன்டிஸ்ட் : ஒருத்தர்தான் உட்கார முடியும். கவலைப்படாதீங்க மகாராஜா, நம்ம மிஷினே உங்களை போட்டோ எடுக்கும்.
மகாராஜா மிஷினுக்கு அருகில் போய் விட்டு மீண்டும் வருகிறார்.
மகாராஜா : யோவ் சைன்டிஸ்ட், பஞ்சாங்கத்தை ஒழுங்கா பாத்த இல்ல? இன்னிக்கு அமாவாசை கிடையாதே? நான் பாட்டுக்கு சந்திரனை தேடிக்கிட்டு இருக்கப் போறேன்.
சைன்டிஸ்ட்: ராஜா, நீங்க சந்திரனில இறங்கின உடனே இதே மந்திரத்தை கொஞ்சம் மாத்தி சொல்லனும்
மகாராஜா:. நீ வாயை மூடு. அதெல்லாம் எனக்கு தெரியும்.
மகாராஜா சந்திரனுக்கு புறப்படுகிறார்.
சைன்டிஸ்ட் கையில் உள்ள கம்ப்யூட்டரையே பார்த்துக் கொண்டு இருக்கிறார். கொஞ்ச நேரம் கழித்து
சைன்டிஸ்ட் : மகாராஜா சந்திரனுக்கு போயிட்டார்
சந்திரனில் இறங்கியதும்
மகாராஜா : அண்டா பிரியாணி, அப்பா வச்ச பேரு, டைகர் கா ஹுகும்.
சைன்டிஸ்ட் தலையில் கை வைத்துக் கொள்கிறார்.
மந்திரி 1 : என்னாச்சு சைன்டிஸ்டு?
சைன்டிஸ்ட் : இப்படியெல்லாம் சொதப்புவார்னு நான் நெனச்சேன்.
மந்திரி 2: என்னாச்சுய்யா?
சைன்டிஸ்ட் :மகாராஜா மிஷினில இருந்து இறங்கிய உடனே சொல்ல வேண்டிய மந்திரத்தை மாத்தி சொல்லிட்டாரு.
மந்திரி 1 : அதனால என்ன?
சைன்டிஸ்ட் : மிஷின் நிற்காம சுத்திக்கிட்டே இருக்கும்.
மந்திரி 1 : அப்போ மகாராஜா?
சைன்டிஸ்ட் : அவரு இனிமே அதை துரத்திக்கிட்டே இருக்கனும்.
ராக்கெட் போய்க் கொண்டே இருக்கிறது, அதன் பின்னால் மகாராஜாவும் ஓடிக் கொண்டே இருக்கிறார்.
அடுத்தவர் உழைப்பை களவாட நினைப்பவர், மக்களைப் பற்றிக் கவலையில்லாமல் சுய நலமாய் வாழ்பவர் நிச்சயம் ஒரு நாள் தெருவில் நிற்பார். அந்த நாள் சீக்கிரம் வரும்.
பிகு:
ஒரு ஆட்டோவின் நான்கு பக்கங்களிலும் விண்கலனின் படத்தை ஒட்டி அதை சந்திராயனாக மாற்றி
இருந்தோம். சந்திராயன் மேலே செல்வதற்குப் பதிலாக சாலையில் சென்றது.
No comments:
Post a Comment