Tuesday, December 26, 2023

எப்போதும் அவர் வழியில்

இன்று எங்கள் மகத்தான தலைவர் தோழர் என்.எம்.சுந்தரம் அவர்களின் நினைவு நாள். எல்.ஐ.சி யை பாதுகாக்க அவர் காட்டிய வழியில் பயணிப்போம் என்று உறுதியோடு அவர் மறைந்த போது எழுதியதை மீண்டும் பகிர்ந்து கொள்கிறேன்



இன்று எங்களை தாக்கிய சுனாமி



26 டிசம்பர் மீண்டும் ஒரு முறை துயரம் தோய்ந்த நாளாய் அமைந்து விட்டது. எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மகத்தான தலைவரும், மிகச் சிறந்த பொருளாதார அறிஞரும் உழைக்கும் வர்க்கத்தின் வழிகாட்டியுமான தோழர் என்.எம்.சுந்தரம் அவர்கள் இன்று மறைந்தார் என்ற செய்தி சுனாமியாய் எங்களை தாக்கியது.

ஊழியர்களின் உரிமைகளை வென்றெடுப்பதில் எப்படி சமரசம் இன்றி உறுதியாக இருப்பாரோ, அது போலவே ஊழியர்கள் அலுவலகப் பணியை செய்ய வேண்டும் என்பதிலும் சமரசம் இல்லாமல் கண்டிப்பாக இருப்பார்.

உலகமயத்தின் தீமைகளைப் பற்றியும் சர்வதேச நிதி மூலதனத்தின் லீலைகளைப் பற்றியும் மிகவும் நுணக்கமாக ஆராய்ந்து அவர் எழுதியுள்ள பல்வேறு கட்டுரைகள் உழைக்கும் மக்களுக்கு அவர் வழங்கிய சக்தி மிக்க ஆயுதங்கள்.

1986 ல் எல்.ஐ.சி பணியில் இணைந்தாலும் அவரைப் பார்க்கிற, அவர் உரையைக் கேட்கிற வாய்ப்பு என்பது 1988 ல் தான் கிடைத்தது. அவர் என்னை அறிந்து கொள்ளும் வாய்ப்பு என்பது 1989 ல் நான் அடியாட்களால் தாக்கப்பட்ட பிறகே கிடைத்தது. அந்த சம்பவத்திற்குப் பிறகு  ஒரு முறை சென்னை சென்ற போது அப்போதைய தென் மண்டல இணைச்செயலாளர் தோழர் கே.நடராஜன் அறிமுகப் படுத்தி வைத்தார். கைகளைப் பற்றிக் கொண்டு "Be Brave and Bold. You can face any challenge" என்று சொன்னதை வாழ்நாளில் மறக்கவே முடியாது. இன்றளவும் அந்த வார்த்தைகள்தான் எதையும் சந்திக்கும் தைரியத்தை அளித்து வருகிறது. சோர்வுற்ற வேறொரு நாளில் அவரோடு தொலைபேசியில் நிகழ்த்திய உரையாடலும் உற்சாகம் அளிக்கும் டானிக் 

எங்கள் கோட்டத்தின் வெள்ளி விழா ஆண்டு துவக்க நிகழ்வில் அவர் பங்கேற்று உரையாற்றிய புகைப்படத்தைத்தான் அந்த நாள் முதல் முக நூலில் Cover Photo வாக பெருமிதத்துடன் வைத்துள்ளேன்.  அந்த புகைப்படத்தை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.



தன் வாழ்நாள் முழுதையும் இன்சூரன்ஸ் ஊழியர்களுக்கும் இந்தியாவின் தொழிலாளி வர்க்கத்திற்கும் அர்ப்பணித்த தோழர் என்.எம்.சுந்தரம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வெளியிட்ட சுற்றறிக்கையை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன். 


இன்சூரன்ஸ் ஊழியர்களின்  இமயம் சரிந்தது.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மாபெரும் தலைவர் தோழர் என்.எம்.சுந்தரம் அவர்கள் இன்று காலை சென்னையில் இயற்கை எய்தினார் என்பதை பெருந்துயரத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

அறுபதுகளின் துவக்கத்தில் எல்.ஐ,சி நிறுவனத்தில் பணியில் சேர்ந்த சில மாதங்களிலேயே தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் இணைச்செயலாளராக ஒரு மிகப் பெரிய பொறுப்பை தன் இளந்தோள்களில் ஏற்றவர் தோழர் என்.எம்.எஸ்.  இரண்டாண்டுகளிலேயே இருபத்தி ஐந்து வயதில் தென் மண்டலப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர் என்.எம்.எஸ் தன் உழைப்பாலும் அறிவாற்றலாலும் உழைப்பாளி மக்களின் மீதான நேசத்தாலும் நாடறிந்த தலைவராக மாறினார்.

1988 ல் ஜெய்ப்பூரில் நடைபெற்ற பதிமூன்றாவது அகில இந்திய மாநாட்டில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளராக தோழர் என்.எம்.எஸ் சுந்தரம் தேர்ந்தெடுக்கப்பட்டார். சங்கத்தின் தலைமையக்கம் கல்கத்தாவிலிருந்து சென்னைக்கு மாறியது. மிகுந்த சவால்கள் நிரம்பிய காலகட்டத்தில் அவர் அகில இந்தியப் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார்.

உலகமயமாக்கலின் கோர விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை துல்லியமாக கணக்கிட்டு அதற்கெதிரான போராட்டங்களுக்கு ஊழியர்களை தத்துவார்த்த அடிப்படையில் தயார்படுத்திய பெருமை அவருக்குண்டு. 1990 களின் அமெரிக்கச் சட்டம் சூப்பர் 301, இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளின் பொருளாதாரத்தை பாதிக்கும் என்ற விழிப்புணர்வை  உருவாக்க புது டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டின் மூலம் ஒரு மிகப் பெரிய போராட்டத்தின் துவக்கப் புள்ளியாய் இருந்தது தோழர் என்.எம்.சுந்தரம் திகழ்ந்தார்.

இன்சூரன்ஸ்துறையில் தனியாரை அனுமதிக்க வேண்டும், எல்.ஐ.சி யின் பங்குகளில் 50 % ஐ விற்க வேண்டும் என்ற மல்ஹோத்ரா குழு அறிக்கை அளித்த போது அவை எப்படி தேசத்திற்கும் மக்களுக்கும் பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்று அவர் எழுதிய இரண்டு புத்தகங்கள், நம்முடைய போராட்டங்களின் சக்தி மிக்க ஆயுதங்கள்.

“எல்.ஐ.சி யை  பாதுகாப்பதற்கான நம் போராட்டம், பாலிசிதாரர்களுக்கு சிறப்பான சேவையை செய்வதன் மூலமாக நம்முடைய மேஜையிலிருந்துதான் துவங்குகிறது” என்று நம்மை தொடர்ந்து வலியுறுத்துபவர். அதனை கடைபிடிப்பதால்தான் நம்மால் இந்நாள் வரை மக்களிடம் தைரியமாக செல்ல முடிகிறது. எல்.ஐ.சி நிறுவனமும் இன்று வரை முழுமையான பொதுத்துறை நிறுவனமாக நீடிக்கிறது.  வங்கி ஊழியர் தொழிற்சங்கங்களை இணைத்து கூட்டு போராட்டக்குழு அமைத்து பென்ஷனை வென்றெடுத்ததில் தோழர் என்.எம்.எஸ் அவர்களின் பங்களிப்பு மகத்தானது. இன்சூரன்ஸ் ஊழியர்களுக்கு எவ்வித பாதிப்பும் எதிர்காலத்தில் நேரக்கூடாது என்று அவர் காண்பித்த உறுதியை வார்த்தைகளில் விவரிப்பது கடினம்.

“இன்சூரன்ஸ் வொர்க்கர்” இதழின் ஆசிரியராக பல்லாண்டு காலம் செயல்பட்ட தோழர் என்.எம்.எஸ் எழுதிய “Let us play Politics” கட்டுரைத் தொடர், நமக்கெல்லாம் அவர் எடுத்த பாடங்கள். தொழிற்சங்கத் தலைவர் என்பதைத் தாண்டி மிகப் பெரிய பொருளாதார நிபுணராகவும் திகழ்ந்தார். சுரண்டலற்ற சோஷலிச சமுதாயமே நம்முடைய இலக்காக இருக்க வேண்டும் என்பதையும் அதற்கான பயணத்தில் நாம் முன்னேற வேண்டும் என்பதை எப்போதும் வலியுறுத்துபவர்.

2002 ம் ஆண்டு ராய்ப்பூரில் நடைபெற்ற பத்தொன்பதவாது மாநாட்டில் அகில இந்தியத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர் என்.எம்.எஸ் 2007ல் நாக்பூரில் நடைபெற்ற இருபத்தி ஒன்றாவது மாநாடு வரை அப்பொறுப்பில் தொடர்ந்தார்.  இந்த ஆண்டு துவக்கத்தில் எர்ணாகுளத்தில் நடைபெற்ற இருபத்தி நான்காவது மாநாட்டிலும் அவர் கலந்து கொண்டு வழி காட்டினார்.

1988 ல் வேலூர் கோட்டத்தை அவர் துவக்கி வைத்தார். வெள்ளி விழா கொண்டாட்டங்களை அவர்தான் துவக்கி வைக்க வேண்டும் என்று நாம் அழைத்த போது தன் உடல் நலனையும் பொருட்படுத்தாமல் கலந்து கொண்டு சிறப்பித்தார். 1994ல் மல்ஹோத்ரா குழு அறிக்கைக்கு எதிரான சிறப்பு மாநாட்டில் மூன்று மணி நேரம் அவர் உரையாற்றியதை யாரால் மறக்க இயலும்!

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தை தத்துவார்த்தப்பாதையில் அழைத்துச் சென்ற மகத்தான தலைவர் மறைந்துள்ளார். அவரது லட்சியங்களை உயர்த்திப் பிடிப்பதே நாம் அவருக்குச் செய்யும் உண்மையான அஞ்சலி.

தோழர் என்.எம்.எஸ் அவர்களுக்கு செவ்வணக்கம்

காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம்,

வேலூர் கோட்டம்

1 comment: