Tuesday, December 26, 2023

காஷ்மீரில் மீண்டும் துவங்கிய அராஜகம்

 



 மூன்று  நாட்கள் முன்பே எழுத நினைத்த பதிவு. வெண்மணி சென்றதால் தாமதமாகி விட்டது.

 சமூக ஊடகங்களில் கூட இச்சம்பவம் பற்றி யாரும் எதுவும் எழுதாத போது காட்சி ஊடகங்களும் அச்சு ஊடகங்களும் அடக்கி வாசித்ததில் அதிசயம் ஏதுமில்லை.

 தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் ஆறு வாலிபர்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கின் பூஞ்ச் பகுதியிலிருந்து ராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள்.

 அவர்களில் மூவரின் சடலங்கள் சாலையோரம் கிடந்துள்ளது. , மீதமுள்ள மூவரின் நிலை தெரியவில்லை. இறந்து போனவர்கள் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்க்ப்பட்டுள்ளனர். அவர்களின் உடல் உறுப்புக்களில் மிளகாய் பொடி திணிக்கப்பட்டுள்ளது.

 ராணுவத்தால் கூட்டிச் செல்லப்படும் வாலிபர்கள் ஒன்று சடலமாக திரும்புகிறார்கள் அல்லது காணாமல் போனவர்களாகி விடுகிறார்கள். கணவனை, சகோதரனை, மகனை தேடிக் கொண்டே இருக்கும் பெண்களின் எண்ணிக்கை பல்லாயிரக் கணக்கில் இருக்கும்.

 பதவி உயர்வுக்காக, பதக்கங்களுக்காக போலி எண்கவுண்டர்களில் கொல்லப்பட்ட அப்பாவி வாலிபர்களும் ஏராளம். பாலியல் கொடுமைகளுக்கு உள்ளான பெண்களும் அதிகம். அப்பாவி மக்களை கொன்ற ராணுவத்தினர் மீது எப்போதும் நடவடிக்கை எடுக்கப்படாது.

 ஆமாம்.

 அவர்களுக்கென்று ஒரு பாதுகாப்பு அரண் உள்ளது.

 ARMED FORCES (SPECIAL POWERS) ACT என்ற அரண். இந்த பாதுகாப்புப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் எந்தெந்த பகுதிகளில் அமலில் உள்ளதோ,  அங்கே எல்லாம் ராணுவத்தினரின் நடவடிக்கைகளை யாரும் கேள்வி கேட்க முடியாது.

 நேரடியாக ராணுவத்துடன் மோத முடியாத கோபம்தான் கல்லெறிதலாக மாறியது.

 சமீபத்தில் ஓரிரு வருடங்களில் ராணுவத்தின் அத்து மீறல் பற்றி பெரிதாக தகவல் இல்லை.

 இதோ, இப்போது . . .

 காஷ்மீருக்கான அரசியல் சாசனப்பிரிவு 370 நீக்கப்பட்டது சரியென்று

 உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பின் புலத்தில் ராணுவத்தின் அராஜகம் தொடங்கியுள்ளது.

 மூன்று வாலிபர்களோடு கொலைகள் நின்றிடுமா?

 ராணுவத்தின் கடந்த கால வரலாறு அப்படிப்பட்ட நம்பிக்கையை அளிக்கவில்லை என்பதுதான் யதார்த்தம்.

 

No comments:

Post a Comment