மதுரையில்
சிவப்பாய், பிரம்மாண்டமாய்
மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது அகில இந்திய
மாநாடு மதுரையில் மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது.
மாநாட்டின்
நிறைவு நாளான 06.04.2025 ஞாயிறன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்க மதுரை சென்றிருந்தோம்.
காலையில்
7 மணிக்கு வேலூரில் புறப்பட்ட நாங்கள் மதியம் 2.30 மணிக்கெல்லாம் மதுரை சென்று விட்டோம். பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்ற
தமுக்கம் மைதானத்திற்குத்தான் முதலில் சென்றோம்.
நாற்காலியில்
கம்பீரமாக அமர்ந்திருந்த காரல் மார்க்ஸிற்கு பக்கத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்து
புகைப்படம் எடுத்துக் கொள்வதும் ஒரு நோக்கம். கிட்டத்தட்ட ஐநூறு தோழர்களுக்கு மேல்
வரிசையில் காத்திருந்த காரணத்தால் அது இயலவில்லை.
கலை நிகழ்ச்சிகளுக்கான மேடையில் அமைக்கப்பட்டிருந்த
மார்க்ஸுடனும் வள்ளுவரோடும் புகைப்படம் எடுத்துக் கொண்டு ஆறுதல் அடைந்தோம்.
மிகவும்
சிறப்பான தகவல்களோடு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை பார்த்தது தமுக்கம்
சென்றதை நிறைவாக்கியது. தியாகிகள் ஸ்தூபி மற்றும் ராமையாவின் குடிசை பற்றி தனியாக எழுத
வேண்டும்.
அங்கிருந்து
பொதுக்கூட்ட மைதானம் வந்தடைந்தோம். மதுரை முழுதும்
செங்கொடிகளால், செந்தோரணங்களால் சிவந்து போயிருந்தது.
இதற்கு
முன்பாக கோவையில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டு பொதுக்கூட்டம், கோவை, சென்னை, நாகை
ஆகிய இடங்களில் நடைபெற்ற மாநில மாநாட்டு பொதுக்கூட்டங்களிலும் கலந்து கொண்டிருக்கிறேன்.
இந்த முறை மதுரையில் திரண்ட தோழர்கள் அளவிற்கு இதற்கு முன் எந்த இடத்திலும் நான் பார்க்கவில்லை. தோழர்களின் மானுட சமுத்திரமாகவே பொதுக்கூட்ட மைதானம்
நிரம்பி வழிந்தது.
நாங்கள்
சென்ற நேரம் கலை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தது. குமரி முரசு கலைக்குழுவின் ஆட்டக்கலைகள்
அதிரடியாய் அமைந்திருந்தது. காம்ரேட் கேங்க்ஸ்டா குழுவின் ரேப் நடனம் ஏனோ என்னை கவரவில்லை
(வயதானதன் அறிகுறியோ?) புதுகை பூபாளம் எப்போதும் போல கலக்கினார்கள்.
மாநிலச்செயலாளர்
தோழர் பெ.சண்முகம் அவர்களின் தலைமையுரை, மக்களவை உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் அவர்களின்
வரவேற்புரை, சிறிது நேரமானாலும் எழுச்சியுடன் பேசிய மூத்த தலைவர் தோழர் பிருந்தா காரத், கேரள முதல்வர் தோழர் பினராயி விஜயனின் ஆழமான உரை
வரை அரங்கில் இருந்தோம். தோழர் பினராயி ஆங்கிலத்தை விட மலையாளத்தில் பேசியிருந்தால்
இன்னும் கெத்தாகவும் கம்பீரமாகவும் இருந்திருக்கும் என்று எங்களுக்கு முன் வரிசையில்
இருந்த கேரளத் தோழர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். தமிழாக்கத்தில் கூட சில சொதப்பல்கள்
இருந்தது.
எட்டு
மணிக்கு புறப்படுவது என்பதுதான் திட்டம். மிகப் பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும்
இரண்டு பாதைக:ள் அடைக்கப் பட்டுள்ளதால் பொதுக்கூட்ட மைதானத்திற்கு வர இயலாமல் பல வாகனங்கள்
தவிப்பதால் அவர்கள் வர காவல் துறை ஒத்துழைக்க வேண்டும் என்று தோழர் சு.வெங்கடேசன் வேண்டுகோள்
விடுக்க எங்களுக்கு கொஞ்சம் அச்சம் வந்தது. புதிதாக அரசியல் தலைமைக்குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்
பட்டுள்ள தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே புறப்பட்டு விட்டோம்.
மிகப்
பெரிய சவாலான காலகட்டத்தில் பொதுச்செயலாளர் பொறுப்பேற்றுள்ள தோழர் எம்.ஏ.பேபி அவர்களுக்கும்
அரசியல் தலைமைக்குழுவிற்கு தமிழ்நாட்டிலிருந்து தேர்வாகியுள்ள தோழர் கே.பாலகிருஷ்ணன்
மற்றும் தோழர் உ.வாசுகி ஆகியோருக்கும் வாழ்த்துக்கள். எங்கள் சங்கத்தின் மேற்கு மண்டல
பொதுச்செயலாளரான குஜராத்தைச் சேர்ந்த தோழர் ஹெச்.ஐ.பட் மத்தியக்குழு உறுப்பினராக தேர்ந்த்டுக்கப்பட்டுள்ளார். அவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
பொதுக்கூட்டம்
முடியும் வரையில் கலந்து கொள்ள முடியவில்லையே என்று வருத்தம் உண்டு. நாங்கள் செல்ல
வேண்டிய மேலூர் சாலை அடைக்கப் பட்டிருந்தது. ஒரு மகளிர் போக்குவரத்து துணை ஆய்வாளர்,
வேறு ஒரு வழியை மிகவும் நிதானமாக, ஒரு குழந்தைக்கு
சொல்வது போல அவ்வளவு தெளிவாக சொன்னார். அந்த பாதையில் போக்குவரத்து நெரிசல் அல்ல, போக்குவரத்தே
இல்லை. இருந்தும் வீடு வந்து சேர்ந்த போது காலை 3.45 மணி. வழக்கமாக அந்நேரத்தில் உறங்கிக்
கொண்டிருக்கும் மேனகா காந்தியின் நண்பர்கள் அன்று என்னமோ வெறியோடு துரத்தினார்கள்,
ஜனநாயகத்தை அழிக்க முயலும் மோடி அரசின் வேகத்தோடு . . .
மதுரையில்
சங்கமித்த மாபெரும் செங்கடலின் சிறு துளியாக நாமும் இருந்தோம் என்ற மன நிறைவுடன் வீட்டிற்குள்ளே
நுழைந்தேன், பாதுகாப்பாக. . .செங்கொடியின் கீழ் இந்திய ஜனநாயகமும் பாதுகாப்பாக இருக்கும்
என்று மதுரை செங்கடல் தந்த நம்பிக்கையோடு . . .
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteஅடுத்தவரின் அழிவை விரும்பிய நாய்கள்தான் அடிபட்டு செத்துள்ளது. கல்லடி வாங்கி கதறிக் கொண்டிருக்கும் உனக்கு இந்த உண்மை புரியாது.
Deleteஅருமை தோழர்
ReplyDelete