தமுஎகச அமைப்பின் மாநில துணைப்பொதுச்செயலாளரும் எங்கள் தஞ்சைக் கோட்டத் தோழருமான தோழர் களப்பிரனின் காஷ்மீர் அனுபவங்கள்.
முக்கியமான கட்டுரை, அவசியம் முழுமையாக படியுங்கள்.
*காஷ்மீர் இளைஞர்கள் என்ன நினைக்கிறார்கள்..?*
- களப்பிரன்
*(நன்றி : செம்மலர் 2023 அக்டோபர்)*
”குல்மார்க்” காஷ்மீரின் மலைத்தொடர்கள் நிறைந்த அழகிய பகுதி. பாரமுல்லா மாவட்டத்தில் அமைந்திருக்கும் இப்பகுதி ஸ்ரீநகரிலிருந்து 49கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. செல்லும் வழி முழுக்க நெல் வயல்களும், ஆப்பிள் தோட்டங்களும், நிறைந்திருக்கும் வளம் மிகுந்த பகுதி. ’குல்மார்க்’ என்றால் ’பூக்களின் இடம்’ என்று பொருள். மன்னர்கள் காலத்திலேயே இது கோடைகால தங்குமிடமாக அறியப்பட்டது. ஆங்கிலேயர்கள் காலத்திலும் அது தொடர்ந்தது. மன்னர் ஹரிசிங் காலத்து கோடைகால அரண்மனை இன்றும் அங்கு காட்சிக்கு இருக்கிறது. இவைகளின் தொடர்ச்சியாக இந்திய இராணுவத்தின் உயரதிகாரிகள் தங்குமிடமும் தற்போது அங்கு இருக்கிறது. குளிர்காலத்தில் பனிப்பொழிவு அதிகமாகி வெண்மை சூழ் உலகாக குல்மார்க் காட்சியளிக்கும். பச்சை புல்வெளிகளால் கண்களுக்கு எட்டும் வரை போர்த்திக் கிடக்க, மேகங்கள் குறுக்கும் நெடுக்கும் சென்று கொண்டிருக்க, திரும்பும் திசையெங்கும் அழகு கொட்டிக்கிடக்கும் காட்சியை நம் கண்களால் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அழகுக் குவியல் ஒருபுறம் என்றால், ஆயுதங்களுடனான இராணுவம் அங்கு சற்று அதிகமாகவே குவிக்கப்பட்டிருக்கிறது. காரணம் சில கிலோமீட்டர் தொலைவில் பாகிஸ்தான் எல்லை. குல்மார்க்கிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ’போட்டா பத்ரி’ என்கிற கிராமம் தான் இந்தியாவின் கடைசி கிராமம். அங்கு நீங்கள் செல்லவேண்டும் என்றால், காவல் நிலையத்தில் அனுமதி பெற்று, இராணுவத்திடமும் அனுமதி வாங்கிய பின்னரே செல்ல முடியும்.
காஷ்மீர் பயணத்தில் அங்குள்ள நிறைய இளைஞர்களோடு உரையாட திட்டமிட்டேன். குல்மார்க் எல்லைப்பகுதி என்பதால் கூடுதலாக உரையாடகள் தொடர்ந்தன.
உலகின் உயரமான”ரோப்கார்” இருக்கக்கூடிய பகுதிகளில் குல்மார்க்கும் ஒன்று. அதில் ஏறி கடல் மட்டத்திலிருந்து 10000 அடி உயரத்திற்கு சென்று அமர்ந்து குல்மார்க்கின் அழகை தனியாக ஒரு ஓரத்தில் அமர்ந்து ரசித்துக்கொண்டிருக்கையில், காஷ்மீரின் புகழ்மிக்க தேனீரான “காவா”வை விற்றுக்கொண்டு ஒரு இளைஞர் வந்தார். ஒரு கப் காவா கேட்டேன். அவர் சில ரோஜா இதழ்களை போட்டு மணக்க மணக்க கொடுத்தார். இதமான குளிரில் சூடான அந்த பானத்தை பருகிக்கொண்டே, “இத்தனை அழகான காஷ்மீர். இனிமையான மக்கள். வறுமை கூட எங்குமே இல்லை. அப்படி இருக்க ஏன் காஷ்மீர் முழுக்க இவ்வளவு பதட்டம், இவ்வளவு இராணுவம்”. என்று கேட்டேன். அந்த இளைஞர் சற்று நேரம் என்னை பார்த்துவிட்டு, கொஞ்சம் சுற்றிமுற்றி பார்த்தார். ”நீங்கள் பத்திரிகையாளரா?” என்று கேட்டார். நான் இல்லை என்றும் சொல்லவில்லை, ஆமாம் என்றும் சொல்லவில்லை. சற்று புன்னகைத்தேன். அவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. “நீங்கள் ஒரு திசையை பார்த்து கேள்விகளை கேளுங்கள், நான் சற்று தள்ளி நின்று வேறு பக்கம் பார்த்து பதில்களை சொல்கிறேன். ஆனால் ரொம்ப நேரம் பேச இயலாது” என்று உறுதியாக சொன்னார். எனக்கு புரியவில்லை. ”ஏன்?” என்று கேட்டேன். “காஷ்மீரில் PSA - Public Safety Act என்கிற சட்டம் உள்ளது. நீங்கள் வெளியூர்காரர். இங்கு நான் உங்களோடு நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தால் என்னை சந்தேகத்தின் பேரில் இங்குள்ள காவல்துறை அந்த சட்டத்தின் கீழ் அழைத்து செல்லலாம். என் மீது என்ன வழக்கு, என்ன விசாரனை என்கிற எந்தக் கேள்வியும் இல்லாமல் என்னை சிறையில் அடைக்கலாம். ஆகவே நீங்கள் அந்தப்புறம் திரும்பி கேள்விகள் கேளுங்கள்” என்று சொல்லி சற்று தள்ளி திரும்பி நின்றார்.
அந்த அழகிய மலைத்தொடர், சற்று நேரத்தில் திறந்த வெளி சிறை போல் ஆகிவிட்டது. ”உங்கள் கல்வித் தகுதி?” என்று கேட்க”கணிதவியல் பட்டம் பெற்றுள்ளேன்.” என்றார். “எங்கு” என்றேன் ”பாராமுல்லா அரசுக் கல்லூரி” என்றார். ”ஏன் இவ்வளவு படித்துவிட்டு டீ விற்கிறீர்கள்” என்றேன். ”நாட்டின் பிரதமர் கூட டீ விற்றதாக சொல்கிறார்கள்” என்று கிண்டலாக சிரித்தார். அது வேதனை கலந்த சிரிப்பு. ”நான் மட்டுமல்ல, இங்குள்ள சுற்றுலா தலங்களில் குதிரை ஓட்டும் இளைஞர் முதல், ஸ்ரீநகர் தால் ஏரியில் சிகாரா (படகு) ஓட்டும் இளைஞர்கள் வரை யாரிடம் வேண்டுமானாலும் பேசிப்பாருங்கள். அதில் கனிசமானவர்கள் படித்த இளைஞர்களாக இருப்பார்கள். இருந்தும் அவர்களுக்கு எந்த வேலை வாய்ப்பும் இங்கு கிடையாது. காஷ்மீரில் எந்த தொழிற்சாலைகளையும் ஒன்றிய அரசுகள் புதிதாக ஏற்படுத்தவில்லை. கேட்டால் தீவிரவாத அச்சுறுத்தல் என்று சொல்கிறார்கள். நீங்கள் எந்த வேலை வாய்ப்பையும் இங்கு ஏற்படுத்தாவிட்டால், படித்த இளைஞர்கள் வேறு என்ன செய்வார்கள். மத்தியில் உள்ள மோடி அரசு பதவியேற்றதிலிருந்து கடந்த 9ஆண்டுகளில் கொஞ்ச நஞ்சம் இருந்த அரசு வேலை வாய்ப்புகளையும் முற்றாக முடக்கி வைத்திருக்கிறது. இந்த ஆண்டு ஒட்டுமொத்த இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7.95% என்று அரசு சொல்கிறது. ஆனால் காஷ்மீரில் எவ்வளவு தெரியுமா? கடந்த ஆகஸ்ட் 2022ல் 32.8% வரை சென்றது. ஆனால் தற்போது 23.9% என்று சொல்கிறார்கள்.” என்று படபடவென்று பொறிந்து தள்ளிவிட்டார்.
அவர் சொல்வது உண்மை தான். குதிரை ஓட்டுபவர், சிகாரா ஓட்டுபவர், ஆட்டோ ஓட்டுபவர், உணவுக்கடை வைத்திருப்பவர் என்று பல படித்த இளைஞர்களை அங்கு பார்க்க முடிந்தது. வட இந்தியாவிலேயே ஆங்கிலம் அதிகமாக பேசும் இளைஞர்களை காஷ்மீரில் தான் ஓரளவு பார்க்க முடிந்தது. ”நீங்கள் எந்த வயதில் இராணுவம் உங்கள் மத்தியில் அதிகமாக குவிந்திருக்கிறது என்பதை உணர்ந்தீர்கள்?” என்று கேட்க, “எனக்கு இப்போது 23வயது. என் 12ஆம் வயது வரை ஊர் என்றால் இராணுவம் இப்படித்தான் குவிக்கப்பட்டிருக்கும் என்று நினைத்திருந்தேன். இராணுவம் என்றால் எந்தக் கேள்வியும் இல்லாமல் எப்போது வேண்டுமானால் நம் வீட்டில் புகுந்து சோதனை போடலாம், யாரை வேண்டுமானால் காவலில் அழைத்துச் செல்லலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் 12வயதில் நான் பஞ்சாப் சென்றிருந்த போது தான், நம்ம ஊரில் தான் இவ்வளவு இராணுவம் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன். பஞ்சாபும் பாகிஸ்தான் எல்லையில் தான் இருக்கிறது. நாங்களும் அதே பாகிஸ்தான் எல்லையில் தான் இருக்கிறோம். ஏன் காஷ்மீரில் மட்டும் இவ்வளவு இராணுவம் என்கிற கேள்வி அன்று முதல் என் மனதில் நீங்காமல் உறுத்திக்கொண்டே இருக்கிறது” என்றார்.
குதிரை ஓட்டிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவருடன் பேசுவதற்காக குதிரைப் பயணம் மேற்கொண்டேன். அந்த இளைஞர் நீண்ட புல்வெளிகள் நிறைந்த யாருமற்ற மலை உச்சிக்கு குதிரையில் அழைத்துச் சென்றார். அப்போது அவரிடம் பேச்சுக்கொடுத்தேன். அவர் சைக்காலஜியில் பட்டம் பெற்றவர். ”இங்குள்ள படித்த இளைஞர்கள் வெளி மாநிலங்களுக்கோ, வெளிநாடுகளுக்கோ வேலைக்கு செல்லலாமே? ஏன் படித்துவிட்டு இது போன்ற சமூகப்பாதுகாப்பற்ற வேலைகளை செய்கிறீர்கள்?” என்று கேட்டேன், “எங்கள் சமூகமே பாதுகாப்பில்லாமல் தான் இருக்கிறது” என்று சொல்லி சிரித்துவிட்டு தொடர்ந்தார். “எங்களுக்கும் வெளிநாடு செல்ல ஆசை தான். வாய்ப்புள்ள இளைஞர்கள் அதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார்கள். குறிப்பிட்ட சிலர் வெளிநாட்டில், வெளி மாநிலத்தில் பணியாற்றுகிறார்கள். நானும் அந்த முயற்சியில் இருக்கிறேன். ஆனால் எல்லோராலும் அவ்வளவு எளிதில் வெளியே செல்ல இயலாது. எங்கள் பிரச்சனை வேறு” என்று புதிராக பேச ஆரம்பித்தார். ”நீங்கள் எத்தனை நாட்கள் ஊரடங்கில் இருந்திருப்பீர்கள்?” என்று கேட்டார். “கொரோனா காலத்தில்” என்று பதில் சொல்ல, “கொரோனா காலம் இல்லாத சூழலில்?” என்று கேட்டார். ”எனக்குத் தெரிய சில தலைவர்கள் இறந்த போது ஒரிரு நாள் ஊரடங்கு. மற்றபடி எங்கள் ஊரில் ஊரடங்கே இருந்ததில்லை” என்று சொன்னேன். ”ஆனால் நாங்கள் எல்லோரும் மாதக்கணக்கில் ஊரடங்கில் இருந்துள்ளோம். கல்வியாண்டின் மத்தியில் தொடங்கும் ஊரடங்கு, சில நேரம் கல்வியாண்டின் இறுதி வரை கூட தொடரும். அந்த நேரத்தில் எங்களுக்கான அந்தக் கல்வியாண்டு இன்னும் ஆறு மாதங்கள் கூட நீட்டிக்கப்படும். நீங்கள் ஓராண்டில் படிக்கும் வகுப்பை நாங்கள் ஒன்றரை ஆண்டுகள் வரை பல நேரங்களில் படிக்க நேரிடும். இவ்வாறு நாங்கள் எங்கள் படிப்பை எந்த ஆண்டு. எந்த வயதில் முடிப்போம் என்றே தெரியாது. காஷ்மீர் குழந்தைகளைப் போல் மன அழுத்தம் உள்ள பிள்ளைகளை வேறு எங்கும் உங்களால் இந்தியாவில் பார்க்க இயலாது. இந்தச் சூழலில், எதிர்காலத்தை எங்களால் எப்படித் திட்டமிட முடியும். 2019 ஆகஸ்ட் 5ல் 370சட்டப்பிரிவு விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு இந்த நிலை இன்னும் மோசமாகியிருக்கிறது. கடந்த ஓராண்டாகத்தான் இங்கு கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வருகிறோம்.” என்று வேதனையோடு சொன்னார். ஆம் நம் யாருக்குமே ஊரடங்கு என்றால் என்னவென்று தெரியாது. அதுவும் இராணுவம் சூழ் ஊரடங்கு கொஞ்சமும் புரியாது.
குல்மார்க்கில் இந்தியப் பனிச்சறுக்கு மற்றும் மலையேறும் கழகம் (Indian Institute of Skiing & Mountaineering) என்கிற உயர் கல்வி நிறுவனம் ஒன்று உள்ளது. அந்த நிறுவனத்தை பார்த்துவிட்டு, வெளியே வந்த போது, வழிமறித்த ஒரு இளைஞர், ”மலையேற்றத்தில் விருப்பம் இருக்கிறதா? அப்படி செல்ல விருப்பம் இருந்தால் அழைத்துச் செல்கிறேன்” என்று சொன்னார். ”நேரம் இல்லை? உங்கள் எண் கொடுங்க, அடுத்த முறை வரும்போது அழைக்கிறேன்” என்று கூறிக்கொண்டே தேனீர் அருந்த அழைத்தேன். ”கிர்டா” என்கிற காஷ்மீரி ரொட்டியையும், தேனீரையும் பருகிக்கொண்டே வேலை வாய்ப்புகள் குறித்து பேச்சை கொடுத்தேன். அந்தக் குதிரை ஓட்டு இளைஞரின் பதில்களைப்போல் இவரும் அதையே வேறு வடிவில் சொன்னார். அதற்கு இடையில், “நீங்கள் இணையவழித் தொடர்புகள் இல்லாமல் எத்தனை நாட்கள் இருந்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார். ”நாட்களா, சில மணி நேரங்கள் வேண்டுமானல் இருந்திருப்போம்?” என்று சொன்னேன். ”ஆனால் எப்போது இணையத் தொடர்பு துண்டிக்கப்படும் என்று எங்களுக்கே தெரியாது. 2019 – 2020ல் மாதக்கணக்கில் இணைய வசதி இல்லாமல் இருந்திருக்கிறோம். அந்த நேரங்களில் புதிய வேலைவாய்ப்பிற்கு மின்னஞ்சல் அனுப்பிவிட்டு, அதில் என்ன பதில் வந்திருக்கிறது என்று பார்க்கக்கூட வாய்ப்பில்லாமல் நாள் கணக்கில் இருந்திருக்கிறோம். ஊரடங்கின் காரணமாக வெளியே செல்ல இயலாது. சரி வீட்டிற்குள் இருந்தாலும் இணையம் வேலை செய்யாது. தொலைக்காட்சி வாய்ப்புகள் கிடையாது. தொலைக்காட்சியே இருந்தாலும் அரசு செய்தி மட்டும் தான். எஃப் எம் ரேடியோ என்று எதுவும் அந்த நேரத்தில் கிடையாது. ஒட்டுமொத்த நாடே”டிஜிட்டல் இந்தியா” என்று சொல்லிக் கொண்டிருந்த போது, நாங்கள் குகைகளில் வாழும் ஆதிமனிதர்களைப் போல் முடக்கப்பட்டிருந்தோம். இந்த சூழலில் வளரும் எங்களால் உங்களைப்போல் நினைத்தால் வெளியே வேலைக்கு கிளம்பலாம் என்கிற மனநிலையே வராது” என்றார். இதுவெல்லாம் ஏன் நமக்கு மட்டும் புரிவதேயில்லை என்கிற குற்ற உணர்ச்சி மேலெழ, தேனீர் கோப்பை தீர்ந்தவுடன் மௌனமாக அவரிடம் விடைபெற்றேன்.
குல்மார்க்கிலிருந்து டான்மார்க் தாண்டி வந்துகொண்டிருக்கையில் ஆப்பிள் தோட்டம் ஒன்றில் புல்லட்டை நிறுத்தினேன். அங்கிருக்கும் இளைஞர் ஒருவர் என்னை அந்த ஆப்பிள் தோட்டத்திற்குள் அழைத்துச் சென்றார். அவரும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர். தோட்டம் முழுவதும் ஆப்பிள் காய்த்துத் தொங்கியது. இது காஷ்மீர் டெலிசீயஸ் ஆப்பிள், அது அமெரிக்கன் பச்சை நிற ஆப்பிள் என்று ஒவ்வொன்றாக விளக்கிக் கொண்டே வந்தார். தோட்டத்தின் மையத்திற்கு சென்றவுடன் ”ஆப்பிளும் காஷ்மீர் பொருளாதாரமும்” என்று பேச்சை தொடங்கினேன். ” காஷ்மீர் ஆப்பிளுக்கு 800ஆண்டுகால எழுதப்பட்ட வரலாறே உள்ளது. காஷ்மீர் பொருளாதாரத்தில் ஆப்பிளின் பங்கு மிகப் பெரியது. ஒட்டுமொத்த காஷ்மீர் GDPயில் சுமார் 10% ஆப்பிள் தான். காஷ்மீர் தோட்டக்கலைத்துறை கணக்குப்படி காஷ்மீர் சாகுபடியில் 55% ஆப்பிள் தான். கடந்த ஆண்டு மட்டும் 21 லட்சம் மெட்ரிக் டன் ஆப்பிள் இங்கு உற்பத்தி செய்யப்பட்டது. இந்தியாவில் உற்பத்தியாகும் ஆப்பிள்களில் 75% காஷ்மீரில் தான் உற்பத்தி ஆகிறது. இதை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் 30லட்சம் மக்கள் காஷ்மீரில் வசிக்கிறார்கள். ஆனால் அதன் விலை தற்போது திட்டமிட்டு சரிக்கப்படுவதாக நாங்கள் உணர்கிறோம். கடந்த காலங்களில் கிலோ ரூ.60க்கு விற்ற ஆப்பிள் தற்போது ரூ.30/- வரை சரிந்துள்ளது. அதே போல் காஷ்மீரில் சில பிளைவுட் நிறுவனங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டதன் விளைவாக ஆப்பிள் மரப்பெட்டிகளும் 40% வரை விலை உயர்ந்துள்ளது. காஷ்மீரிலிருந்து வாகனங்களில் ஏற்றப்படும் ஆப்பிள்கள் சோதனை சாவடிகளின் கடும் சோதனையால் சாலையிலேயே 5நாட்கள் வரை நிற்கவேண்டிய சூழல் உள்ளது. போதுமான குளிர்பதன கிடங்குகள் கூட இங்கு கிடையாது. இதற்கு இடையில் அமெரிக்க ஆப்பிளுக்கான இறக்குமதி வரியையும் இந்த G20 மாநாட்டுக்கிடையில் ஒன்றிய அரசு குறைத்து எங்களை மேலும் வஞ்சிக்கிறது. காஷ்மீர் ஆப்பிள்கள் உங்களுக்கு எவ்வளவுக்கு எவ்வளவு சுவை மிகுந்ததாக இனிக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு எங்கள் வாழ்க்கையை கசப்பு, மிகுந்ததாக உருமாற்றுகிறது அரசு.” என்று வேதனைப்பட்டார். அவர் சொல்வது முற்றிலும் உண்மை. ஸ்ரீநகர் சந்தையிலேயே மூன்று கிலோ ஆப்பிள் ரூ.100/-. அங்கு விற்கப்படும் காய்கறிகளை விட மலிவானது ஆப்பிள் மட்டுமல்ல, காஷ்மீர் விவசாயிகளும் தான்.
தால் ஏரிக் கரையில் வண்டியை நிறுத்திவிட்டு சிகாரா படகுப்பயணத்தை மேற்கொள்ள அந்தக்கரையிலேயே கொஞ்சதூரம் நடந்து சென்றேன். பல சிகாரா ஓட்டுனர்கள் அழைத்தார்கள். அதில் ஒரு இளைஞரை தேர்வு செய்து அந்தப்படகில் பயணம் போனேன். அந்த இளைஞன் உருதுமொழியில் பட்டம் பெற்றவர். அப்போது மாலை 06.00 மணி. ஆனால் மாலை 04.00மணிக்கு வெயில் அடிப்பதை போல் வெளிச்சமாக இருந்தது. காஷ்மீரில் பகல் பொழுது அதிகம். தால் ஏரியின் படகு வீடுகள், மிதக்கும் சந்தை, ஏரிக்குள் பயிரிடப்பட்ட தோட்டங்கள் என்று ஒவ்வொன்றாக அந்த படகு ஓட்டுனர் சுற்றிக்காட்டிக் கொண்டே வந்தார். தால் ஏரியின் சுற்றளவு 16 கிலோ மீட்டர் என்றும், தால் ஏரிக்கு மையத்தில் 3க்கும் மேற்பட்ட தீவு ஊர்கள் இருப்பதாகவும் சொல்லிக் கொண்டே வந்தார். அவர் சொல்வதைப் போல அந்த ஏரி மையத்தில் இருக்கும் ஊர்களுக்கு செல்ல கரையிலுந்து ஒவ்வொரு குடும்பத்திற்குமான படகு மூலம் தங்கள் வீட்டை அடைகிறார்கள். தால் ஏரியின் மையத்தில் இருக்கும் போது மெல்ல பேச்சை தொடங்கினேன்.
“இங்கு பண்டிட்டுகள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டு துரத்தப்பட்டதாக சொல்கிறார்களே. சமீபத்தில் காஷ்மீர் பைல்ஸ் என்கிற திரைப்படம் கூட?” என்று பட்டென்று நான் கேட்டவுடன், அவர் தனது பேச்சில் நிதானமானார். “இந்த ஏரிக்குள் தான் நேரு பார்க் இருக்கிறது. நேரு என்பது பண்டிட்டுகளின் பெயர். இந்த ஏரிக்குள் பண்டிட்டுகள் ஒரு காலத்தில் கனிசமானவர்கள் வசித்தார்கள். இன்றைக்கும் மிக சொற்பமானவர்கள் வசிக்கிறார்கள். இந்த ஏரியின் கரையில் உள்ள அந்த மலையில் தான் 1400 ஆண்டுகள் பழமையான ஆதி சங்கரர் கோவில் உள்ளது. காஷ்மீரில் உள்ள இந்துக்களும், சுற்றுலாப்பயணிகளும் பெரும் அளவில் அந்த மலை மீது ஏறி மேலே உள்ள கோவிலை தரிசிக்கிறார்கள். கீழிருந்து மேல அழைத்து வர ஆட்டோக்களும் உள்ளது. இந்துக்களை அழைத்து வருகிற ஓட்டுனர்கள் எல்லோருமே இஸ்லாமியர்கள் தான். அந்த மலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி ஆகும். அதில் பணியாற்றும் வன ஊழியர்கள் கூட இஸ்லாமியர்கள் தான். இது தான் காஷ்மீர். காஷ்மீருக்கு வந்த மொகலாய மன்னர்கள் ஆச்சரியத்துடன் பதிவு செய்துள்ள செய்தி,”இங்குள்ள இஸ்லாமியர்கள் வித்தியாசமாக இருக்கிறார்கள். அவர்கள் எல்லா இந்துப் பண்டிகைகளையும் கொண்டாடுகிறார்கள்” என்று ஆச்சரியப்பட்ட இடம் தான் காஷ்மீர். ஆனால் 1989ல் இந்திய அரசின் தொடர் ஜனநாயகமற்ற தேர்தல் தில்லுமுல்லுகளால் விரக்தியடைந்த சில இளைஞர் குழுக்கள் தீவிரவாதத்தால் ஈர்ப்பக்கட்டனர். ஆனாலும் தீவிரவாதிகளாக இருந்த பெரும்பாலான இளைஞர்களும் கூட மதசார்பற்ற அரசியலிலேயே நம்பிக்கை கொண்டிருந்தார்கள். அதில் சில இஸ்லாமிய மத அடைப்படைவாத குழுக்களும் இருந்தது. அவர்கள் தான் இந்தப்படுகொலைகளில் பெரும்பாலும் ஈடுபட்டார்கள். அவர்கள் பண்டிட்டுகளை மட்டும் கொலை செய்யவில்லை. இங்கு இருந்த தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ் கட்சி என்று பல அரசியல் அமைப்புகளில் இருந்த பல இஸ்லாமியர்களையும் கொலை செய்தார்கள். அப்போது நடைபெற்ற படுகொலைகள் எல்லாமே தீவிரவாதகளுக்கும், காஷ்மீரின் ஜனநாயக சக்திகளுக்கு நடைபெற்ற போரே தவிர, அது பண்டிட்டுகளுக்கு எதிரானது அல்ல. காஷ்மீர் ஃபைல்ஸ் படம் பண்டிட்டுகள் மீதான இஸ்லாமியர்கள் தாக்குதலை மட்டுமே சுறுக்கிக் காட்டுகிறது. இந்தப் பிரச்சாரத்தை தான் ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் தொடர்ந்து செய்துவந்தன. ஆனால் அதே காலகட்டத்தில் தேடுதல் வேட்டையில் பல்லாயிரம் இஸ்லாமிய இளைஞர்களும் அரசின் கண்மூடித்தனமான வேட்டையில் கொல்லப்பட்ட பகுதி காஷ்மீரிகளுக்கு மட்டுமே தெரிந்த கதை” என்று சொன்னார்.
”காங்கிரஸ் கட்சி தானே இங்கு நடைபெற்ற பல தவறுகளுக்குக் காரணம். அப்படி இருக்க ராகுல் காந்தி ஸ்ரீநகர் வருகை?” என்று கேட்டவுடன், “இன்றைக்கு பெரும்பாலான காஷ்மீர் இளைஞர்கள் ராகுல் காந்தியை தங்கள் நம்பிக்கையாக பார்க்கிறார்கள். கடந்த கால தவறுகளிலிருந்து ராகுல் போன்ற சில காங்கிரஸ் தலைவர்கள் பாடம் கற்றுக்கொண்டிருப்பதாக இன்றைய காஷ்மீர் இளைஞர்கள் கருதுகிறார்கள். அதனால் தான் ராகுல் காஷ்மீருக்குள் மக்களோடு மக்களாக சில நாட்கள் நெருக்கமாக சுற்றித்திரிய முடிந்தது. ராகுல் சென்ற இடமெல்லாம் கூட்டம் அலைமோதியது. காஷ்மீருக்குள் அரசியல் அடிப்படையில் இளைஞர்கள் திரள்வது நீண்ட நாட்களுக்குப் பிறகு தற்போது நடக்கிறது. ஆனால் இதே காலகட்டத்தில் இந்திய உள்துறை அமைச்சர் வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் மோடி கூட வந்தார். ஆனால் காஷ்மீர் மக்களோடு அவர்களால் நெருங்கவே முடியவில்லை. காஷ்மீர் மக்களும் அவர்கள் கூட்டங்களை புறக்கணித்தார்கள்.” என்று சொன்னார்.
படகுப் பயணம் முடிந்த போது இரவு 07.30 மணி இருக்கும். கொஞ்ச தூரம் கரையிலேயே நடந்து வந்தேன். அங்கிருக்கும் இராணுவ வீரர்ளில் யாராவது தமிழ் முகம் தெரிகிறதா என்று பார்த்துக் கொண்டே வந்தேன். அப்படி ஒருவர் தென்பட்டார். அவரிடம் பேசத் தொடங்கினேன். அவர் ஒரு மலையாளி. சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர். அவர் நான் தமிழ்நாடு என்றவுடன் ஆர்வமாக பேசத் தொடங்கினார். அவரிடம் காஷ்மீரில் நான் பார்த்த இடங்கள், அங்குள்ள மக்கள் இனிமையாக பழகுவது குறித்து பேசத் தொடங்கினேன். அவரால் என் பேச்சை அதற்கு மேல் இரசிக்க முடியவில்லை. அவர் கோபமாக சொன்ன பதில், “நீங்க டூரிஸ்ட் சார். அதான் உங்களிடம் இனிமையாக பேசுவார்கள். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் இங்கு வந்திருந்த போது, எங்கள் இராணுவ உடையை கண்டாலே கல்லை விட்டெறிவார்கள். ரொம்ப மோசமானவர்கள். நீங்க பாதுகாப்பா இருந்துட்டு ஊருக்கு போங்க சார்” என்று என்னை எச்சரித்தார். ”இது அவருக்கு மட்டுமல்ல, காஷ்மீரில் பணியாற்ற வரும் இராணுவ வீரர்களுக்கு காஷ்மீர் மக்கள் குறித்து அவ்வாறே படம் எடுத்து அனுப்புகிறார்கள்” என்று ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி ஒருவரை சமீபத்தில் சந்தித்த போது என்னிடம் பகிர்ந்துகொண்டார். காஷ்மீரில் உள்ள அரசு ஊழியர்கள் சிலரையும் சந்தித்தேன். அவர்கள் பெரும்பாலும் இஸ்லாமியர்கள். காஷ்மீரின் சுற்றுலா இடங்கள், அழகு, வளம் குறித்து பேசுகிறார்கள். ஆனால் அரசியல் குறித்து கேட்டால் மௌனம் கலந்த புன்னைகையோடு விடைபெறுகிறார்கள்.
காஷ்மீரிலிருந்து விடைபெற்று விமான நிலையம் வந்தேன். விமான நிலையத்தின் வாயிலிலிருந்து ஒரு கிலோமீட்டருக்கு முன்பாகவே என் ஆட்டோ நிறுத்தப்பட்டது. என்னுடைய பைமுழுவதும் சோதனையிடப்பட்டது. அன்றைக்கு பேட்டரி வண்டிகள் கிடையாது என்பதால் விமான நிலையம் வரை ஒரு கிலோமீட்டர் நடந்தேன். அப்போது என்னுடன் காஷ்மீர் இளைஞர் ஒருவர் வந்தார். அவர் பெங்களூரில் ஒரு கார்பரேட் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். அவரோடு என் அனுபவங்கள் குறித்து பேசிக்கொண்டே நடந்தேன். அவரும் நான் பார்த்த இளைஞர்களின் பார்வையிலேயே காஷ்மீர் குறித்து பேசினார். “நீங்கள் பணியாற்றும் இடத்தில் காஷ்மீரிகள் எத்தனை பேர் இருக்கிறார்கள்?” என்றேன். ”நான் மட்டும் தான்.” என்று சொன்னார். “நீங்கள் பணியாற்றும் இடம் ஒரு கார்பரேட். படித்த இளைஞர்கள் நிறைய பேர் இருப்பார்கள். அவர்கள் காஷ்மீர் குறித்து உங்களிடம் என்ன கேட்பார்கள்?” என்று நான் ஆவலாக கேட்க, “வேறு என்ன சார். காஷ்மீரில் ஹனிமூன் ஸ்பாட் எது? எங்க போனா எவ்வளவு ரேட்? நீங்க ச்சீப்பா புக் செஞ்சு கொடுக்க முடியுமா?” என்று கேட்பார்கள், என்று வேதனையோடு சொன்னார். ”அப்போது உங்களுக்கு என்ன தோன்றும்?” என்று கேட்க,”கோபம் வரும். காஷ்மீரில் எங்கள் மக்கள் படும் துயரங்களை கேட்க மாட்டார்களா? காஷ்மீர் என்றால் குளிர் பிரதேசம் மட்டும் தானா? என்று தோன்றும். சரி அவர்கள் அமைதியான சூழலில் வாழ்கிறார்கள். அவர்களுக்கு எங்கள் வேதனை புரியாது, என்று நான் ரிசார்ட் புக் செய்து கொடுப்பேன்” என்றார். அவரின் இந்த பதிலால் சட்டென்று என் கண்கள் கலங்கிவிட்டது.
நான் குல்மார்கில் பார்த்த டீ விற்கும் இளைஞர் கடைசியாக விடைபெறும் போது என்னிடம் சொன்ன வார்த்தை தான் எனக்கு அப்போது நினைவுக்கு வந்தது. “இந்தியாவில் உள்ள மக்கள் காஷ்மீரிகள் பாகிஸ்தானோடு சென்று விடுவார்கள். பாகிஸ்தானுக்கு ஆதரவானவர்கள் என்று நினைக்கிறார்கள். ஆனால் 90% காஷ்மீர் மக்கள் பாகிஸ்தானை விரும்பவில்லை. அதில் பெரும்பாலானவர்கள் இந்தியாவோடு இருக்கவே விரும்புகிறார்கள். ஆனால் இந்திய அரசால் தான் அதை உணர்ந்துகொள்ளவே முடியவில்லை. எங்களை எப்போதும் சந்தேகத்தோடே பார்க்கிறது. நாங்கள் விரும்புவது ஒன்றே ஒன்று தான். சென்னையைப் போல், பெங்களூரைப்போல், ஐதராபாத்தை போல், மும்பையை போல், டெல்லையைப் போல் இந்தியாவின் மற்ற மாநிலங்களைப் போல் சுதந்திரமான சூழலைத்தான். அந்த சுதந்திரத்தை நாங்கள் கேட்கக்கூடாதா?” என்று விம்மிய குரலில் கேட்டார். என்னிடம் அதற்கு பதில் இல்லை. அந்த மலை உச்சியில் அப்போதும் ஆக்சிஜன் அளவு நன்றாகத்தான் இருந்தது. இருந்தபோதும் ஏனோ எனக்கு மூச்சு முட்டியது. இப்போதும் அந்த இளைஞர்களை நினைத்தால் நெஞ்சம் கொஞ்சம் அடைக்கவே செய்கிறது. பதில் சொல்ல வேண்டியவர்கள் அடக்குமுறையை தவிர்த்து அவர்களுடன் மனம் திறந்த உரையாடல்களை நடத்த வேண்டும்.
No comments:
Post a Comment