- தீக்கதிர் நாளிதழ் தலையங்கம் 04.09.2023
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலை ஞர்கள் சங்கத்தின் சார்பில் சனிக்கிழமையன்று சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்று தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன் வைத்த கருத்தை திரித்தும், திருகியும் சங் பரிவாரக் கூட்டம் வெறு ப்பு அரசியலை விசிறி அடிக்கத்துவங்கியுள்ளது.
ஆர்எஸ்எஸ் பரிவாரத்தின் வழக்கமான ஆயுதமான பொய்யையும், புனை சுருட்டையும் அள்ளிவீசுகின்றனர். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக தலைவர்கள் நட்டா, அண்ணாமலை என அனைவரும் களத்தில் இறங்கியுள்ளனர்.
மாநாட்டில் பேசிய யாரும் எந்தவொரு மதத்தைச் சேர்ந்தவர்களையும் புண்படுத்தும் படியோ, இழிவுபடுத்தும்படியோ எதுவும் பேச வில்லை. மாறாக, சனாதனம் என்ற பெயரில் பல நூறு ஆண்டுகளாக உழைக்கும் மக்களை அடிமைப்படுத்தக்கூடிய சிந்தனைகளைத்தான் கண்டித்தார்கள். பிறப்பின் அடிப்படையில்தான் ஒருவருடைய தகுதி தீர்மானிக்கப்படுகிறது என்ற சாதிய மேலாதிக்கக் கோட்பாட்டை யும் பெண்ணடிமைத்தனத்தை நியாயப்படுத்தக் கூடிய கருத்துக்களையும் மூடநம்பிக்கைகளையும் சாடினர்.
அமைச்சர் உதயநிதி பேசும் போது, கணவனை இழந்த பெண்களை நெருப்பில் தள்ளி உடன்கட்டை ஏற வைத்தது, கைம்பெண்களுக்கு மொட்டைஅடித்து வெள்ளைப்புடவை உடுத்தச் சொன்னது, குழந்தைத் திருமணங்களை நடத்தி வைத்தது, இதைத்தானே பெண்களுக்கு சனாதனம் செய்தது என்று சரியாகவே கேட்டார். பெண்களுக்கு எதிரான இந்தக் கொடுமைகளை எதிர்த்து இந்தியாவில் நீண்ட நெடிய போராட்டங்கள் நடந்துள்ளன. இந்தக் கொடுமைகள் எல்லாம் மநு அநீதியின் பெயராலும் வர்ணாசிரமத்தின் பெயராலும் நடத்தப் பட்டன என்பதை இன்றைக்கு அலறுபவர்கள் மறுக்க முடியுமா?
மோடி அரசு கொண்டு வந்துள்ள விஸ்வகர்மா திட்டம் குலக் கல்வியை மீண்டும் கொண்டுவரும் திட்டம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். இதையெல்லாம் மறைத்துவிட்டு இனப்படுகொலைக்கு அழைப்பு விடுப்பதாக சங்பரிவாரம் பொய்யை பரப்புகிறது. தில்லியில் பொய்ப் புகார் கொடுக்கின்றனர். ஆனால் தன்னுடைய வார்த்தைகளில் தாம் உறுதியாக இருப்ப தாகவும் சட்டப்பூர்வமாக எதிர்கொள்வேன் என்றும் உதயநிதி கூறியுள்ளார். மாறாத தர்மம் என்று சொல்லி சாதிய மேலாதிக்கத்தை நியாயப் படுத்துபவர்களின் வழிவந்தவர்கள்தான் இன்றைக்கு ஆத்திரத்தில் அவதூறு செய்கின்றனர். சனாதனத்தின் பெயரால் இஸ்லாமிய, கிறிஸ்தவ பட்டியலின மக்களை படுகொலை செய்பவர்கள், இல்லாத ஒன்றை பொல்லாத வகையில் திரித்துப் பேசுவதை இந்தியா நிராகரிக்கும்.
No comments:
Post a Comment