ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் 2 மணி நேரம் தாக்குப்பிடித்தேன் ஜெ. பொன்மாறன்
விருதுநகர் மாவட்டம் ஜோயில்பட்டியைச் சேர்ந்த முத்தமிழ்செல்விக்கு (34 வயது) திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள மண்ணிவாக்கத்தில் வசித்துவருகிறார். அங்கு ஜப்பான் மொழி பயிற்றுவிப்பு ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில்தான் முத்தமிழ்செல்வி தானும் சாதிக்க வேண்டும் என்று பல்வேறு மலையேறும் பயிற்சி மற்றும் வில்வித்தை பயிற்சிகளில் ஈடுபட்டும் வந்தார்.
இதனைத் தொடர்ந்து, எவரெஸ்ட் சிகரத்தை அடைவதற்கான பயிற்சி மேற்கொண்டார். ஆனால் பொருளாதார வசதியில்லாமல் தவித்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து ரூ.10 லட்சம் அரசு சார்பில் உதவி வழங்கினார். மேலும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ.15 லட்சத்தை தன் சார்பாகக் கொடுத்து உதவினார்.
இதனையடுத்து, எவரெஸ்ட் மலையில் ஏறிய முத்தமிழ் செல்வி, வெற்றிகரமாக எவரெஸ்ட் சிகரத்தின் 8,848.86 மீட்டர் உயரத்தை அடைந்தார். தமிழ்நாட்டிலிருந்து எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண்ணாக முத்தமிழ்செல்வி சாதனை படைத்துள்ளார்.
காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க மகளிர் துணைக்குழு 37ஆவது மாநாட்டு கௌரவித்தது. மாநாட்டில் தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். தன்னுடைய அனுபவங்களை கூறிய போது நமக்கே மூச்சு சற்று நின்று வருவது போல் இருந்தது. எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்கான தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டார் முத்தமிழ்செல்வி.
“எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்கு நான் ஒரு முயற்சியினை செய்தேன். அதற்கு பக்க பலமாகஎன்னுடைய கணவர் இருந்தார். இந்த விஷயத்தை அவரிடம் சொல்லும் போது முதலில் ஏற்றுக்கொள்ள வில்லை என்னுடைய தொடர்முயற்சியின் காரணமாக எனக்கு சம்மதம் கிடைத்தது. இதேபோல் தான் அனைவரும் தங்களுடைய முயற்சிகளைத் தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் நமக்கு தேவையானது கிடைக்கும். அந்த வகையில் நான் முயற்சி செய்தேன். அதற்கு என்னு டைய குடும்பத்தில் சம்மதம் கிடைத்தது. எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்கு பதிவு செய்தேன். அதில் தமிழ்நாடு, கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களில் இருந்து பலர் விண்ணப்பித்திருந்தார்கள். பின்னர் தான் தமிழகத்தில் இருந்து நாம் எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட முதல் பெண்ணாக இருக்க வேண்டும் என்ற ஒரு பெரும் முயற்சியினை எடுத்தேன். ஒரு ஜாப்பனிய பள்ளியில் ஒரு லட்ச ரூபாய் ஊதியத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். என்னுடைய லட்சியத்திற்காக அந்த வேலையையும் விட்டுவிட்டேன்.
எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்கு விண்ணப்பித்து விட்டு, பயிற்சி மற்றும் எவரெஸ்ட் சிகரம் சென்று வரும் செலவு என்று ரூ, 46 லட்ச ரூபாய் தேவைப்பட்டது. ஓராண்டு பணிக்கு செல்லாத நிலையில் இந்த பயிற்சிக்கு மிகப் பெரிய நிதி உதவி தேவைப்பட்டது. அதை பலரிடம் நான் கேட்டபோது என்னைக் கேவலமாகப் பார்த்தார்கள். ஆனால் நான் வெற்றி பெற வேண்டும் என்ற உறுதியோடு உதவிகளை நாடினேன். ஒன்றரை ஆண்டுகள் இதற்காக நான் மிகவும் சிரமப்பட்டு பல்வேறு அசிங்கங்களை ஏற்றுக் கொண்டேன். ஒரு ஆண் சாதனை செய்யப் போகிறார் என்றால் ஏற்றுக்கொள்ளும் உலகம், ஒரு பெண்ணாகிய என்னை எப்படி ஏற்றுக்கொள்ள நினைப்பார்கள்? அப்போதுதான் நினைத்தேன். நான் கண்டிப்பாக இதை செய்ய வேண்டும் என்று. ஏனென்றால் எப்போது ஒருவர் அடிபடுகிறாரோ அப்போதுதான் அவர் வெற்றி பெற நினைப்பார். என்னை அசிங்கப்படுத்தியவர்கள் முன் நாம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற லட்சியத்தை முன்வைத்து ஓராண்டாக உதவிகளை நாடினேன். அதில் ரூ.4 லட்சத்திற்கும் மேல் என்னால் நிதியினை பெற முடிய வில்லை.
என்னுடைய வீட்டில் கூட எதற்கு இந்த முயற்சி. வேலைக்கு செல்லலாமே என்று கூறினார்கள். அப்போது நான் கூறினேன் ஒரு முயற்சியை நான் எடுத்துவிட்டேன். அதை முடிக்காமல் வேறு எந்த பணியும் செய்ய மாட்டேன் என்று முடிவாகச் சொல்லிவிட்டேன். பின்னர் என்னுடைய உறவினர்களிடம் என்னுடைய லட்சியத்தை எடுத்துக் கூறிய பின் அவர்கள் உதவி செய்ய ஆரம்பித்தார் கள். அதில் ரூ. 20 லட்சம் வரை எனக்கு நிதியாக கிடைத்தது.
இல்லாத அரசாணையை புதிதாக உருவாக்கி நிதி உதவியது
அரசிடம் நான் உதவி கேட்கலாம் என்று நினைத்து கேட்டபோது மலையேறும் பயிற்சிக்கு என்று நிதி உதவி கிடையாது என்று கூறினார்கள் பின்னர் நான் தமிழகத்திலிருந்து எவரெஸ்ட் சிகரத்திற்கு செல்லும் முதல் பெண். என்னால் எவரெஸ்ட் சிகரம் சென்று வெற்றி பெற முடியும் என்று நம்பிக்கை உள்ளது என்று கூறினேன். பின்னர் எனக்காக புது அரசாணையை உருவாக்கி அதிலிருந்து ரூ. 10 லட்சம் நிதியாக வழங்கு வதற்கு உத்தரவிட்டார்கள். அந்த நிதியைப் பெறுவதற்கு செல்லும்போது போக்குவரத்து நெருக்கடியில் மாட்டிக் கொண்டதால் பணம் கொடுக்க காத்திருந்த முதல்வர் சென்றுவிட்டார். மிகவும் மன வேதனையோடு நான் திரும்பி வந்தேன். மூன்று தினங்கள் தான் இருக்கின்றது. எனக்கு அழுகையே வந்துவிட்டது. பின்னர் ஏதோ ஒரு செயலுக்காக தான் நம்மால் வாங்கப் போக முடிய வில்லை. மீண்டும் நாம் வாங்கச் செல்லும்போது அவர் களிடமே மீதமுள்ள 15 லட்சத்தை கேட்போம் என்று முடிவு எடுத்துச் சென்றேன். ரூ.10 லட்சத்திற்கான காசோலை வாங்கும்போது கூறினேன். எனக்கு இன்னும் 15 லட்சம் தேவைப்படுகிறது. நீங்கள் தான் உதவிட வேண்டும் என்று கூறினேன். அன்று மாலையே விளையாட்டுத்துறை அமைச்சரால் என்னுடைய வங்கிக் கணக்கிற்கு ரூ. 15 லட்சம் வந்து சேர்ந்தது.
உயிர்பிழைத்து வந்த வெற்றிப் பயணம்
இரண்டு மாதப் பயணம். அதில் கடைசி கட்டப்பயணம் மிகவும் கடினமான பயணம். முகாம் நான்கு. 34 மணி நேர பயணம். இது எவரெஸ்ட் சிகரத்திற்கு முன் உள்ள கடைசி முகாம். இங்கு ஆக்சிஜன் இல்லாமல் செல்ல முடியாது, நாங்கள் செல்லும் நேரத்தில் பனிப்புயல் அதிகமாக இருந்தது, இதனால் 30 மணி நேரத்தில் செல்லக்கூடிய இடத்திற்கு 36 மணி நேரம் செலவாகியது. நம்மைக் கூட்டிச் செல்வதற்கு வழிகாட்டியாக (கைடு) ஒருவர் கூட வருவார். அவர் கூறினார், நாம் 36 மணி நேரத்தில் சென்று திரும்பி இருக்க வேண்டும். கூடுதலான நேரம் நமக்கு செலவாகிவிட்டது. இலக்கை எட்டி விடலாம். ஆனால் திரும்பி வர முடியாது என்று கூறினார். ஏனென்றால் போதிய அளவு ஆக்சிஜன் இல்லை. என் கண்முன்னே கூட ஒரு பெண் இறந்து போனார். அவ்வளவு பனிமூட்டம். மூச்சு விடுவதற்கு மிக கடினமான ஒரு சூழ்நிலை. நான் சென்ற இடத்தில் சிறிது தூரத்தில் பார்த்தால் நூற்றுக்கணக்கான உடல்கள் இறந்த நிலையில் கிடந்தன. அதிலும் பல ஆண்டுகள் ஆன
அடுத்தவருக்கு கொடுத்துவிட்டேன்
நான் எல்லையை தொட்டு திரும்பும் நேரத்தில் என்னுடன் வந்த ஒரு காவல்துறை சேர்ந்த ஒருவர் ஆக்சிஜன் இல்லாமல் உயிருக்கு போராடிக் கொண்டி ருந்தார். என்னிடமும் ஆக்ஸிஜன் குறைவாகவே இருந்தது. என்னிடம் இருக்கும் ஆக்சிஜன் சிலிண்டரை வைத்து தான் நான் கீழே செல்ல வேண்டும். இருந்தாலும் தமிழ் மக்களுக்கு என்று ஒரு உதவும் மனநிலை இருக்கும். எனக்கு அவரைப் பார்த்தவுடன் மிகவும் வேதனை யாக இருந்தது. உடனடியாக என்னிடம் இருந்த ஆக்சிஜன் சிலிண்டரை நான் அவருக்கு கொடுத்து விட்டேன். அந்த நேரத்தில் நான் எந்தவித பலனையும் எதிர்பார்க்க வில்லை. அவருக்கு உதவிட வேண்டும் என்ற மனநிலை மட்டும் தான் என்னிடம் இருந்தது. எவரெஸ்ட் சிகரத்தை தொட்டுவிட்டு மீண்டும் முகாம் நான்கிற்கு திரும்பி விட்டேன். இதில் என்னுடன் வந்த நான்கு பேரின் நிலை மிகவும் மோசமாகிவிட்டது. ஒருத்தருக்கு பனிக்காற்று சேராமல் கண் பார்வை தெரியாமல் போய்விட்டது. மற்றொருவருக்கு கை கால்கள் மரத்துப் போய்விட்டது, நான் ஆக்சிஜன் கொடுத்து உதவிய போலீஸ்காரர் சுயநினைவை இழந்துவிட்டார். இந்த நிலையில் என்னுடைய ஆக்சிஜன் சிலிண்டர் பத்து நிமிடத்தில் முடிந்து விட்டது.
நினைவிலாடிய “அம்மா திரும்பி வந்துவிடுவேன்” வாக்கியம்
மீண்டும் நாங்கள் கீழே செல்ல வேண்டுமென்றால் 10 மணி நேரம் ஆகும் ஏற்கனவே எங்களுக்கு 48 மணி நேரம் ஆகிவிட்டது. இந்த 48 மணி நேரத்தில் தண்ணீர், உணவு, ஓய்வு எதுவுமே இன்றி நடந்து கொண்டே தான் இருந்தோம். இது போன்ற கடின உழைப்பு இருந்தால் மட்டும் தான் நாம் வெற்றி பெற முடியும். நான் வெற்றி பெற்று விட்டேன். ஆனால் என்னால் பேச முடிய வில்லை. நம்முடைய நாட்டிற்கு திரும்பிச் செல்ல முடியாது என்ற சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் என்னுடைய மூளையில், என்னுடைய குழந்தைகளுக்கு அம்மா திரும்பி வந்து விடுவேன் என்று சொன்ன வாக்கியம் மட்டும் எனக்கு உறுதியாக நின்றது.
மீண்டும் நான் செல்ல வேண்டும் என்றால் எனக்கு ஆக்சிஜன் சிலிண்டர் தேவைப்படுகிறது. அப்போது முகாமில் தேவைக்கென்று இரண்டு சிலிண்டர்கள் வைத்திருப்பார்கள் அதில் ஒன்றை எனக்கு வழங்கி னார்கள். அந்த சிலிண்டரின் மூலமாக தான் இரவு நான் தூங்கினேன். காலையில் எழுந்தவுடன் கீழே இறங்கு வதற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றேன். என்னுடைய சிலிண்டர் இன்னும் ஒரு மணி நேரம்தான் தாக்கு பிடிக்கும் என்ற சூழ்நிலையில் நான் கீழே இறங்க வேண்டும். கீழே இறங்குவதற்கு 10 மணி நேரம் ஆகும். அப்போது ஒரு பெரும் முயற்சியை நான் எடுத்துள்ளேன்.
வழிகாட்டியில்லாமல் தனியாக இறங்கினேன்
என்னுடன் வந்துள்ள வழிகாட்டி உதவி இல்லாமல் நான் கீழே இறங்க முடியாது. நான் கீழே இவர்களுடன் இறங்க வேண்டும் என்றால் எப்படியும் கூடாரங்களைப் பிரித்து எடுத்துக் கொண்டு போக வேண்டும். முகாம் நான்கு என்பது அவ்வளவு கடினமான இடம். ஆனால் என்னிடம் இருக்கும் சிலிண்டர் என்பது ஒரு மணி நேரம்தான் உள்ளது. முகாம் நான்கிலேயே நான் இருந்திருந்தால் கண்டிப்பாக உயிரிழந்திருப்பேன். என்னுடைய உடலைக் கூட கீழே எடுத்து வர முடியாது. முகாம் மூன்றிற்கு சென்று விட்டால் ஏதாவது உதவி கிடைக்கும் என்ற அடிப்படையில் நான் ஒரு முடிவு செய்து என்னுடைய பயிற்சியாளரிடம் நீங்கள் கூடாரத்தை காலி செய்து எடுத்துக் கொண்டு வாருங்கள். நான் கீழே செல்கிறேன் என்றேன். அவர் உங்களால் தனியாக செல்ல முடியாது என்றார். பரவாயில்லை. நான் பார்த்துக்கொள்கிறேன் என்று ஒரு தன்னம்பிக்கையில் கீழே இறங்கி விட்டேன்.
10 நிமிடம் அப்படியே அமர்ந்துவிட்டேன்
கீழே சிறிது தூரம் வந்து மேலே பார்த்தபோது எனக்கு பயம் வந்துவிட்டது. ஒரு பத்து நிமிடம் நான் அந்த இடத்திலேயே அமர்ந்து விட்டேன். பின்னர் ஒரு மணி நேரத்தில் என்னுடைய ஆக்சிஜன் சிலிண்டர் காலியாகிவிட்டது. எனக்கு இருந்த நம்பிக்கையில் இறைவன் ஒரு முறை நம்மைக் காப்பாற்றி விட்டார். மீண்டும் ஒருமுறை காப்பாற்றுவாரா என்று தெரியவில்லை என்று நினைத்துக் கொண்டே எவரெஸ்ட் சிகரத்தை பொருத்தவரை யாரும் யாருக்கும் உதவி செய்ய மாட்டார்கள் ஏனென்றால் அவர்கள் உயிரே அவர்கள் கையில் இல்லை. ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் ஆக்சிஜன் சிலிண்டர் என்பது அவர்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். வேறு யாருக்கும் உதவிட முடியாது. அந்த அடிப்படையில் அவரவர்கள் உயிரை அவரவர்கள் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். ஏற்கனவே ஒரு மணி நேரம் ஆக்சிஜன் இல்லாமல் நான் இருந்திருக்கின்றேன். ஆனால் மற்றவர்கள் 30 நிமிடம் 15 நிமிடம் இருப்பதே மிகப்பெரிய கடினம். மீண்டும் நான் ஒரு மணி நேரம் ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் இருந்தேன்
உதவிய மெக்சிகோ நாட்டு சிறுவன்
இறங்கும் வழியில் என்னைப் பார்த்த மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த ஒரு 19 வயது பையன் என்ன ஆனது என்று கேட்டான். அப்போது நான் என்னுடைய ஆக்சிஜன் சிலிண்டர் முடிந்துவிட்டது என்று சொன்னேன். (I Will Save You) நான் உங்களை பாதுகாக்கிறேன் என்று கூறினான். எப்படி என்னை பாதுகாப்பீர்கள் என்று கூறினேன் மீண்டும் அந்தப் பையன் Will Save You என்று கூறினார். அவருடன் வந்த பயிற்சியாளர் இல்லை. அப்படி செய்யக்கூடாது என்று கூறினார். ஏனென்றால் உங்களை நான் பாதுகாக்க வேண்டும். என்னுடைய நிறுவனத்திற்கு நான் பதில் சொல்லியாக வேண்டும் என்று அந்த பையனிடம் கூறினார். அந்தப் பையன் ஒரு உயிரை நாம் இழந்து விடக்கூடாது என்று நினைத்தான்.
பின்னர் அந்தப் பையன் எனக்கு ஆக்சிஜன் மாஸ்கினை கொடுத்தான். மூன்று முறை நான் சுவாசித்து அந்த இடத்திலிருந்து எழுந்து நின்றேன். முதல் நாள் இரவு ஒரு மணி நேரம் மறுநாள் பகல் ஒரு மணி நேரம் என்று இரண்டு மணி நேரம் ஆக்ஸிஜன் இல்லாமல் இருந்துள்ளேன்.
எடுத்துக்காட்டாக நம்மை ஒருவர் தலையணையை வைத்து மூச்சை அழுத்துகிறார் என்றால் நம்மால் எவ்வளவு நேரம் தாக்குப் பிடிக்க முடியும்? அதிகபட்சம் ஒரு 15 நிமிடம், நம்மால் தாக்க பிடிக்க முடியும். ஆனால் அந்த சூழ்நிலை தான் எவரெஸ்ட் சிகரத்தில் இருக்கின்றது. அந்த இடத்தில் இரண்டு மணி நேரம் ஆக்ஸிஜன் இல்லாமல் இருந்திருக்கின்றேன். ஏனென்றால் நாம் கொடுத்த நம்பிக்கையை காத்திட வேண்டும் என்ற ஒரு நோக்கத்தில் நான் இருந்தேன். அந்த மெக்சிகோ நாட்டு பையன் எனக்கு ஆக்சிஜன் மாஸ்கு கொடுத்தது பத்தவில்லை. பின்னர் அவன் சிலிண்டரையே கழட்டி கொடுத்து விட்டான்.
15 நிமிடத்தில் மயங்கிவிட்டான் அப்போது
நான் கூறினேன். இல்லை வேண்டாம் உங்களுடைய உயிரும் முக்கியம் எனவே நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள் என்றேன். இல்லை இல்லை நீங்கள் மாட்டிக் கொள்ளுங்கள் என்று எனக்கு கொடுத்துவிட்டு 15 நிமிடத்தில் அந்தப் பையன் மயக்கமடைந்து விட்டான். நான் இரண்டு மணி நேரம் தாக்குப்பிடித்தேன். ஆனால் அந்தப் பையனால் 15 நிமிடம் தாக்குப் பிடிக்க முடிவில்லை. இதுதான் அங்கு உள்ள சூழ்நிலை. பின்னர் இரண்டு பேரும் ஆக்சிஜன் மாஸ்கினை பகிர்ந்து சுவாசித்துக் கொண்டே கீழே வந்து விட்டோம். எதற்காக நான் கூறுகிறேன் என்றால் நான் ஒரு இடத்தில் எதையும் எதிர்பாராமல் உதவி செய்தேன். அந்த உதவியின் பலன் எனக்கு இரட்டிப்பாகக் கிடைத்தது. ஏன் சொல்கிறேன் என்றால், எங்களுடைய குழுவில் வந்த 18 பேர் இறந்து விட்டார்கள். எந்த ஒரு சின்ன காயமும் கூட இல்லாமல் நான் பாதுகாப்புடன் கீழே வந்து விட்டேன், இப்படி என்னுடன் வந்த பலருக்கும் பல சிரமங்கள் ஏற்பட்டது. ஆனால் நான் மிகவும் பாதுகாப்பாக வந்தேன் என்றால், அதற்கு என்னு டைய தன்னம்பிக்கை தான் காரணம். எனவே எந்த ஒரு விஷயம் செய்தாலும் தன்னம்பிக்கையுடன் செய்யுங்கள். எல்லோருக்குமே ஒரு திறமை இருக்கும். அதற்கான முயற்சியை நீங்களும் செய்யுங்கள். நிச்சயமாக வெற்றி கிடைக்கும். முயற்சிகள் செய்யாமல் நாம் யாரையும் குறை சொல்லக்கூடாது. நாம் ஒரு விஷயத்தை சொல்கிறோம் என்றால் முதலில் கேட்க மாட்டார்கள். மறுபடியும் சொன்னால் கேட்க மாட்டார்கள். அதை திரும்பத் திரும்பச் சொல்லுங்கள். அவர்கள் யோசிக்க ஆரம்பிப்பார்கள். தொடரும் முயற்சியால்தான் வெற்றியை எட்ட முடியும் என்றார்.
பகிர்வுப் பதிவு
No comments:
Post a Comment