Tuesday, January 7, 2025

மீம் போட்டால் வரி ?????

 



 சமீபத்தில் நிர்மலா அம்மையாரை நக்கலடித்து சில மீம்கள் பார்த்தேன். யான் பெற்ற இன்பம் நீங்களும் பெற அவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

 




இப்படியே போனால் மீம் போடுபவர்களுக்கும் அம்மையார் புதிய வரி போட்டுவிடுவார். ஜாக்கிரதை.

நிஜத்திலும் இது போல நடந்தது.

 


மேலே உள்ள படத்தை எப்போதோ அலைபேசியில் சேமித்து வைத்திருந்தேன்.

கடந்த சனிக்கிழமையன்று சி.எம்.சி மருத்துவமனையில் சர்க்கரைக்கான அப்பாயிண்ட்மெண்ட். ஒன்பது மணி என்று நேரம் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் எல்லாம் மருத்துவரை பார்க்க வாய்ப்பே இல்லை என்பதால் சென்ற வருடத்தின் கடைசி நாளில் தமுஎகச காட்பாடி   நடத்திய புத்தகக் கண்காட்சியில் வாங்கிய வே.பிரசாந்த் எழுதிய “ஆனைமலை” நாவலை எடுத்துச் சென்றிருந்தேன்.



 முன்பெல்லாம் மருத்துவர் பார்க்க தாமதமானல் சத்தம், கூச்சல், குழப்பம் எல்லாம் இருக்கும். இப்போதோ அமைதியாக இருந்தது, ஏனென்றால் அனைவரது கையிலும் அலைபேசிகள். எல்லோரும் அதனை பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்தனர். நான் நாவலை படிக்க தொடங்கி விட்டே.ன்.

 ஒரு மணி நேரம் கடந்திருக்கும். ஒரு அழைப்புக்காக அலைபேசியை எடுத்து பேசி விட்டு சுற்றி முற்றி பார்த்தால் அந்த அறையில் கிட்டத்தட்ட அறுபது பேர் இருந்திருப்பார்கள். மற்ற அனைவரும் அலைபேசியில் மூழ்கியிருந்தனர். காதில் இயர் போன் மாட்டிக் கொண்டு ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருந்த சிலருக்கு அவர்களின் டோக்கன் எண்ணைக் கூப்பிட்டது கூட தெரியவில்லையென்றால் பாருங்களேன். நானும் மீண்டும் நாவலில் மூழ்கி விட்டேன்.

பிகு: நான் ஒருவழியாக மருத்துவரை பார்த்து விட்டு மருந்துகளை வாங்கிக் கொண்டு வெளியே வருகையில் மணி மூன்று. இருநூற்று நாற்பது பக்கங்கள் கொண்ட அந்த நாவலில் நான்கு பக்கங்கள் மட்டும் பாக்கி இருந்தது. மருந்தக நாற்காலியிலேயே அமர்ந்து அதனையும் படித்து முடித்து விட்டுத்தான் வீட்டுக்கு புறப்பட்டேன்.

 

Monday, January 6, 2025

வக்கிர சங்கியுடன் வாக்குவாதம்.

 


மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் வெறும் பார்வையாளராக மட்டுமே இருக்க விரும்பினாலும் சில நேரங்களில் பொறுமையாக இருக்க முடிவதில்லை.

கட்சியின் மாநில மாநாடு விழுப்புரத்தில் நடந்து கொண்டிருந்த போது தோழர் சு.வெங்கடேசனுக்கு நெஞ்சு வலி வந்து அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதற்கு ஒரு அயோக்கிய சங்கி, மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் “அவரு ஏன் அரசு மருத்துவமனைக்கு போகாமல் தனியார் மருத்துவமனைக்கு போனார். இதான் எளிமையான கட்சியா என்றெல்லாம் பதிவு போட்டிருந்தான். அவனது உள்நோக்கம் அவன் பதிவின் கடைசி வரியில் புரிந்தது.

கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் கோவிட் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது “விரைவில் மத்திய அமைச்சராகப் போகும் பொன்னாருக்கு வாழ்த்துக்கள்” என்று எழுதிய அயோக்கியக் கூட்டமல்லவா இது! வசந்தகுமார் இறந்த பின் நடந்த இடைத்தேர்தலிலும் பின்பு நடந்த 2024 பொதுத்தேர்தலிலும் வசந்தகுமாரின் மகனிடத்தில்தான் பொன்னார் தோற்றார் என்பது வரலாறு.

நெஞ்சு வலி என்று வந்தால் முதல் சில நிமிடங்களிலேயே சிகிச்சைக்கு போவது அவசியம், அப்போது அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு செல்வதுதான் முக்கியமே தவிர, அரசு மருத்துவமனையா என்றெல்லாம் பார்க்க முடியாது என்று பின்னூட்டமிட்டேன்.

அயோக்கிய சங்கியல்லவா! மீண்டும் மீண்டும் முட்டாள்தனமாகவும் வக்கிரமாகவும் பதில் சொல்லிக் கொண்டிருந்தான். உன்னைப் போன்ற மூளையற்றவர்களிடம் இனி விவாதிக்கப்போவதில்லை என்று முடித்து விட்டேன்.


 

பின்பு வந்த சில பின்னூட்டங்கள் அந்த அயோக்கிய சங்கியின் உள்நோக்கம் என்னவென்று சந்தேகித்தேனோ, அதனை நிரூபித்து விட்டது. NO என்ற பின்னூட்டம் வருகையில் தோழர் சு.வெ நலமுடன் திரும்பிய செய்தி வந்திருந்தது என்பது கவனிக்கத்தக்கது.

 


வைக்கம் போராட்டத்தின் போது தந்தை பெரியார் சாக வேண்டும் என்று சத்ரு சம்ஹார யோகம் நடத்திய திருவிதாங்கூர் ராஜாதான் தந்தை பெரியார் கேரளா ஜெயில் இருந்த காலத்திலேயே செத்துப் போனான். பெரியார் அதன் பின்பு ஐம்பதாண்டுகளுக்கு மேல் வாழ்ந்தார். கலைஞருக்கு நாள் குறித்த ஜெ, அவருக்கு முன்பே காலமானார். இதெல்லாம் அந்த அயோக்கிய சங்கிகளுக்கு தெரியாது போல . . .

அவ்வையும் கண்ணதாசனும் சொன்னதை கேள் ரெவி

 


ஸ்டேட்டை விட்டே போயிடு ரெவி

 நீ தமிழ்நாட்டை மதிக்க மாட்டே. தமிழ்நாடு சட்டப்பேரவையோட மரபை மதிக்க மாட்டே, அண்ணல் அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சாசனத்துக்கு பதிலா மனுதர்மத்தை அரசியல் சாசனத்தை மாத்தனும்னு சொல்ற உன் நாக்பூர் எஜமான் மாதிரி தமிழ்நாடு சட்டப்பேரவை மரபையும் மாத்தனும்னு சொல்வே!

 நீ எப்படி தமிழ்நாட்டை மதிக்கலையோ, அது போல தமிழ்நாட்டு மக்களும் முட்டாள் சங்கிகளைத் தவிர வேறு யாரும் உன்னை மதிக்கறதில்லை. ஒவ்வொரு வருஷமும் நீ அசெம்ப்ளிக்கு போறதும் உடனே வெளியில ஓடி வரதும் பொழப்பா போயிடுச்சு. உன் இஷ்டத்துக்கு எல்லாம் மரபை மாத்த முடியாதுன்னு உன்னை அடிக்காத  குறையா சொல்லிட்டாங்க.

 “மதியாதார் தலைவாசல் மிதியாதே என்று மானமுள்ள மனிதனுக்கு அவ்வை சொன்னது, அது அர்த்தமுள்ளது”  என்று அந்த காலத்துல கண்ணதாசன் சூர்யகாந்தி படத்துல ஒரு பாட்டு பாடினார்.

 நீ  மானமுள்ள மனிதன் என்றால் உன்னை ……… அளவு கூட மதிக்காத தமிழ்நாட்டை விட்டே ஓடிப் போயிடனும். இனிமே இங்கே தலை வச்சே படுக்கக்கூடாது. பெட்டி சட்டியை கட்டிக்கிட்டு  பீகார் போயிடனும்.

 அவ்வை சொன்னது மானமுள்ள மனிதனுக்குத்தானே, நாங்க சங்கிகள் யாருமே மனுசங்களே கிடையாதே!  எங்களுக்கு வெ.மா.ரோ.சூ.சொ என எதுவுமே கிடையாதேன்னு சொல்லிட்டு துப்பினா துடைத்துக் கொள்ளும் ஆள்தானே நீ!


Sunday, January 5, 2025

எல்.ஐ.சி யில் மட்டும் ஏன் முடியாது?

 


முன் குறிப்பு : ரயில்வேயில் தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் முடிவுகள் வெளிவந்த காலத்தில் எழுதப்பட்ட பதிவு. சற்று தாமதமாக இப்போது பகிர்ந்து கொள்கிறேன்.

ரயில்வேயில் தொழிற்சங்க அங்கீகாரத்திற்கான தேர்தல் நடைபெற்று அங்கே DREU சங்கம் வெற்றி பெற்றுள்ளது. இது மகிழ்ச்சிகரமான செய்தி. ரயில்வே துறை ஒரு மத்தியரசு நிறுவனம். அங்கே அரசு அங்கீகாகரத்திற்கான தேர்தலை நடத்தியுள்ளது.

மத்தியரசு நிறுவனமாக இருக்கிற  பி.எஸ்.என்.எல் நிறுவனத்திலும்  மூன்றாண்டுகளுக்கு ஒரு முறையாக சங்க அங்கீகாரத் தேர்தல் நடந்து வருகிறது. இதுவரை ஆறு முறையோ ஏழு முறையோ அங்கே தேர்தல் நடந்துள்ளது.

நிதித்துறைக்கு கீழ் உள்ள வங்கித்துறையில் அனைத்து வங்கி ஊழியர், அதிகாரிகள் சங்கங்களுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டு  ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் அனைத்து சங்கங்களும் கையெழுத்திடுகின்றன.

நிதித்துறையின் கீழ் வரும் பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களிலும் நான்காண்டுகளுக்கு ஒரு முறை சங்க அங்கீகாரத் தேர்தல் தொடர்ச்சியாக நடந்து கொண்டு வருகிறது.

ஆனால்

அதே நிதியமைச்சகத்தின் கீழ்வரும் எல்.ஐ.சி யில் மட்டும் சங்க அங்கீகாரத் தேர்தல் இது வரை நடந்ததே இல்லை.

தொழிற்சங்க ஜனநாயகம் ஏன் எல்.ஐ.சி யில் மட்டும் மறுக்கப்படுகிறது?

காரணம்?

பயம், பயமின்றி வேறில்லை.

ஏனென்றால் இங்கே எல்.ஐ.சி யில் எண்பது சதவிகிதத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர் எண்ணிக்கையுடன் பெரும்பான்மையாக உள்ளது ஒரே ஒரு சங்கம் மட்டும்தான்.

அது

எங்களின் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்.

எல்.ஐ.சி தோன்றும் முன்னே தோன்றிய சங்கம்.

நவீன தாராளமயமாக்கல் கொள்கைக்கு எதிரான சங்கம்.

மக்கள் ஒற்றுமையையும் மதச்சார்பின்மையையும் ஜனநாயகத்தையும் உயர்த்திப் பிடிக்கிற சங்கம்.

நிறுவன நலனுக்காகவும் பாலிசிதாரர்கள், முகவர்கள்,  ஊழியர் நலனுக்காகவும் சமரசமின்றி தொடர்ந்து  போராடுகின்ற  சங்கம்.

எல்.ஐ.சி நிறுவனத்தை பொதுத்துறை நிறுவனமாக பாதுகாக்க தொடர்ந்து போராடுகின்ற, மக்களின் ஆதரவை திரட்ட அவர்கள் மத்தியில் பல பத்தாண்டுகளாக கருத்துப் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிற சங்கம்.

 அது மட்டுமல்ல, இங்கே அரசுக்கு ஆதரவான சங்கம் என்பது ஊழியர்களால் புறக்கணிக்கப்பட்ட சங்கம், அதற்கும் அங்கீகாரம் கொடுத்து அழகு பார்க்க வாய்ப்பே கிடையாது.

 நிர்மலா அம்மையார் மட்டுமல்ல அவர்களுக்கு முன்பாக இருந்த அருண் ஜெய்ட்லி கூட அந்த சங்கத்தை வளர்க்கப்பார்த்தார். ஒரு உதாரணம் சொல்ல வேண்டும். எங்களுக்கு 1995 ல் பென்ஷன் திட்டம் அறிமுகமானது. சிறிய அளவிலான ஊழியர்கள் அப்போது அத்திட்டத்தில் இணையவில்லை. வட்டி விகிதங்கள் வீழ்ச்சியடைந்த பின்னணியில் பென்ஷன் திட்டம்தான் லாபகரமானது என்பது புரிந்து பென்ஷன் திட்டத்தில் இணைய எங்களுக்கும் வாய்ப்பு வேண்டும் என்ற கோரிக்கை உருவானது.

 அக்கோரிக்கையை வென்றெடுக்க எங்கள் சங்கம் தொடர்ந்து போராடியது. முயற்சிகள் எடுத்தது. வேலை நிறுத்தங்கள் மேற்கொண்டோம். அரசு உயர் அதிகாரிகளிடம் நியாயத்தை விளக்கினோம். இறுதியில் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது.

 அருண் ஜெய்ட்லி என்ன செய்தார் தெரியுமா? அரசாணை வெளியிடப்பட்டதும் அதனை எல்.ஐ.சி நிர்வாகத்திற்குக் கூட தெரிவிக்காமல் அவருடைய ஆதரவு சங்கத்திற்கு சொல்லி தகவலை பரப்ப வைத்தார். ஏதோ அவர்கள்தான் பெற்றுக் கொடுத்தது போன்ற தோற்றத்தை உருவாக்க நினைத்த அற்ப ஆசை. ஒரு சில அப்பாவிகள் வேண்டுமானால் அந்த மாயையில் மயங்கியிருக்கலாம். ஆனால் பெரும்பாலான ஊழியர்கள் யாரால் அந்த பலன் வந்தது என்பதில் தெளிவாக இருந்தார்கள்.

 தங்களுக்கு எந்நாளும் அடிபணியாத ஒரு சங்கம் அங்கீகாரம் பெறுவதை தடுக்க முயல்கின்றனர்.  நாட்டின் ஜனநாயகத்தையே  மதிக்காத கும்பல் தொழிற்சங்க ஜனநாயகத்தை மட்டும் மதிக்குமா என்ன?

 ஆனால் நாங்கள் விட மாட்டோம். தொடர்ந்து போராடுவோம். இறுதி வெற்றி எங்களுடையதே.

 

 

வாச்சாத்தி நாயகருக்கும் சுவாமிக்கும் வாழ்த்துக்கள்

 


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய தமிழ்நாடு மாநிலச் செயலாளராக தோழர் பெ.சண்முகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மிகச் சரியான தோழரை மாநிலக்குழு ஒருமனதாக தேர்ந்தெடுத்துள்ளது.

தோழர் பெ.சண்முகம் என்றால் வாச்சாத்தியில் வனத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை ஆட்கள் சேர்ந்து நடத்திய அராஜகத்திற்கு எதிரான உறுதியான போராட்டம்தான் நினைவுக்கு வரும். இருநூறுக்கும் மேற்பட்டவர்களுக்கு சிறைத்தண்டனை வாங்கிக் கொடுத்த அப்போராட்டத்தினை முன்னெடுத்தவர் தோழர் சண்முகம்.

எங்கள் கோட்டத்தின் இரு நிகழ்வுகளுக்கு அவரை அழைத்துள்ளோம். 

அண்ணல் அம்பேத்கரின் படத்திறப்பு விழா நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றினார். "வேட்டையை வாழ்வாகக் கொண்ட வனத்தின் மைந்தன் ஏகலைவன், துரோணரைப் பார்த்து வில் வித்தை கற்றுக் கொண்டதாக சொல்வதே ஒரு கட்டுக்கதை" என்று அவர் சொன்னது இன்னமும் நினைவில் உள்ளது.

வாச்சாத்தி தீர்ப்பு வந்த நேரத்தில் எங்கள் கோட்டத்தில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் அண்ணல் அம்பேத்கர்-வெண்மணி தியாகிகள் நினைவுக் கருத்தரங்கத்தில்  உரையாற்ற வருமாறு அழைத்தோம். அவரும் உடனடியாக ஒப்புக் கொண்டார். 

வாச்சாத்தியில் பழங்குடி இன மக்களுக்கு, பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைப் பற்றி அவர் விவரிக்க விவரிக்க கண்ணீர் வடியும் முகங்களோடு அவர் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தோம். ஒரு கட்டத்தில் அவரே உடைந்து போனார். அந்த மக்களின் துயரத்தோடு தன்னை பிணைத்துக் கொள்ளாமல் அது சாத்தியமில்லை.

கருத்தரங்கிற்கு மூன்று நாட்கள் முன்பாக அவரிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது. தவிர்க்க முடியாத வேலை காரணமாக என்னால் வர முடியவில்லை என்று சொல்வாரோ என்ற அச்சத்துடன்தான்  பேசினேன். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகாவில் அரியாகுஞ்சூர் என்ற கிராமத்தில் உள்ளாட்சித் தேர்தலில் தோற்றுப் போன ஒருவர் அங்கிருந்த 11 பழங்குடி மக்களின் குடிசைகளை இடித்துத்தள்ளி விட்டார். அவர்களுக்கு உங்கள் சங்கம் சார்பாக உதவ முடியுமா என்று கேட்டார். 

நாங்களும் உடனடியாக சுற்றறிக்கை வாயிலாக வேண்டுகோள் விடுக்க இரண்டே நாளில் கணிசமான தொகை வசூலானது. அந்த தொகையை அவரிடம் அளித்தோம்.


அவர் அந்த தொகையை எங்களிடமே கொடுத்து நீங்களே நேரில் சென்று அம்மக்களுக்கு பொருட்களாக வழங்குங்கள் என்றார். மார்க்சிஸ்ட் கட்சியின் அன்றைய திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் தோழர் வீரபத்திரனும் செங்கம் ஒன்றியச் செயலாளருமான மறைந்த தோழர் குமரேசனும் ஒருங்கிணைக்க நாங்கள் மறு நாளே அரியாகுஞ்சூர் சென்று வந்தோம். 



மன நிறைவு அளித்த ஒரு பணி அவரால்தான் சாத்தியமானது. 

மாணவர் சங்கத்தலைவராக, மலைவாழ் மக்கள் சங்கத் தலைவராக, விவசாயிகள் சங்கத்தலைவராக மிகச் சிறந்த அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றிய அவர், மாநிலச் செயலாளர் என்ற பொறுப்பிலும் சிகரம் தொடர வாழ்த்துகிறேன்.



எங்கள் தோழர் கே.சுவாமிநாதன் மாநில செயற்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது பெருமையாக இருக்கிறது.

அவர் பணி ஓய்வு பெறும் போது எழுதிய 

தோழர் சுவாமி - சுற்றறிக்கையையும் தாண்டி

என்ற பதிவை மீண்டும் பகிர்ந்து கொள்கிறேன். ஓய்வறியா போராளி என்பது அவருக்கு மிகவும் பொருந்தும். 25 ம் தேதி வெண்மணியிலேயே அவருக்கு கடும் காய்ச்சல். அதன் பின்பு 29, 30 தேதிகளில் திண்டுக்கல், மதுரையில் கூட்டங்கள்.தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நடைப்பயணத்தை துவக்கி வைக்க வேலூர் வந்து விட்டார். 

தோழர் சுவாமிநாதன் புதிய பொறுப்பிலும் முத்திரை பதிப்பார். தோழருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.


மோடியை ட்ரம்ப் எப்படிய்யா கூப்பிடுவான்????

 


மோடிக்கு இப்போது இருக்கும் ஒரே கவலை ட்ரம்ப் பதவியேற்பு விழாவிற்கு அழைப்பிதழ் வருமா என்பது மட்டும்தான். (மக்களைப் பற்றியோ நாட்டைப்பற்றியோ அந்தாள் என்னிக்கு கவலைப் பட்டிருக்கான் என்ற உங்கள் மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்டு விட்டது. அதுவும் சரிதான்.) உலகின் மிகப் பெரிய ராஜதந்திரி என்ற ரேஞ்சில் சங்கிகள் பீற்றிக் கொள்ளும் வெத்துவேட்டு ஜெய்சங்கர் அழைப்பிதழ் பிச்சைக்காக ட்ரம்பிடம் மன்றாடிக் கொண்டிருப்பதைத்தான் மேலேயுள்ள படம் சொல்கிறது.

மோடியை ட்ரம்ப் புறக்கணிக்க என்ன காரணம் இருக்கும்?

சமீபத்தில் வந்த இந்த செய்தியா?


ஏதோ தாமொதர்தாஸ் சேர்த்து வைத்த சொத்திலிருந்து மோடி வாங்கிக் கொடுத்திருக்கலாம் என்று நினைக்க நாமெல்லாம் சங்கிகளா என்ன? ஊரான் வீட்டு நெய்யே .... என்ற கதையாக இவர் பரிசளிக்க இந்தியாவின் கஜானாவிலிருந்து எடுக்கப்பட்ட பணம் அல்லவா இது!

இதற்காக ட்ரம்ப் கடுப்பாயிருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் ட்ரம்பிற்கு மோடி கொடுத்த பரிசின் விலை 50,000 டாலராம். அதாவது அன்றைய டாலர் மதிப்பில் நாற்பது லட்சம் ரூபாய். இதுவும் தாமோதர்தாஸ் சேர்த்து வைத்த காசில்லை.

பின் என்ன கோபம்?


அமெரிக்கா வரும் மோடியை சந்திக்க விரும்புகிறேன் என்று ட்ரம்ப் சொன்னதும் ஜோ பிடேனுக்கு பயந்த 56 இஞ்ச் வீரன், தன்னுடைய பயணத் திட்டத்தில் ட்ரம்பை சந்திக்க எந்த திட்டமும் கிடையாது என்று உடனடியாக மறுத்ததுதான் காரணமாக இருக்கும்.

ஒரு வேளை மோடியே ட்ரம்பிற்கு தொலைபேசி செய்து சாவர்க்கர் பாணியில் மன்னிப்பு கேட்டால் நிலைமை மாறலாம். அது நடக்காது என்று நம்மால் சொல்ல முடியுமா என்ன?

புது சொக்கா தைத்துக் கொண்டு ட்ரம்புடன் எடுத்துக் கொள்ளும் போட்டோவை விட கௌரவம் எல்லாம் மோடிக்கு முக்கியமா என்ன? 

Friday, January 3, 2025

வெட்கமே கிடையாதா மோடி?

 


5500 கோடியில் நீர் பறப்பதற்காக இரண்டு புதிய சொகுசு விமானங்கள் வாங்கி விட்டு  36,328 சதுர அடியில் 467 கோடி ரூபாயில் சொகுசு மாளிகை ஒன்றை கட்டிக் கொண்டு இப்படி பேச உமக்கு வெட்கமாக இல்லையா மோடி?

அப்படி என்ன பேசினார் பதினைந்து லட்ச ரூபாய் கோட் அணியும் மோடி?

கீழே பாருங்கள். . .


இதையும் நம்பி பரப்பும் முட்டாள் சங்கிகள் இருக்கும் வரை மோடிக்கு வெட்கம், மானம், ரோஷம், சூடு, சொரணை எல்லாம் எப்படி வரும்!


Thursday, January 2, 2025

இது தெரியாம போச்சே . . .

 


கீழேயுள்ள செய்தியை தயவு செய்து நிர்மலா அம்மையார் பார்வைக்கு மட்டும் எடுத்துச் செல்லாதீர்கள். அப்படி போனால் ஸ்மார்ட் போன் வைத்துள்ள இந்தியர்கள் அனைவரும் லட்சக்கணக்கில் வரி கட்ட வேண்டியிருக்கும் . . .


பிகு: அம்மையார் பற்றி நெறய மீம்கள் வேறு ஸ்டாக் உள்ளது. அவற்றையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். 

Wednesday, January 1, 2025

வாசிப்புக் கணக்கு - முன்னேற்றமும் பொறாமையும்


2015  வருடம் முதல் வாசிப்புக் கணக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கிறேன். கடந்த வருட வாசிப்புப் பட்டியல் கீழே உள்ளது.

59 நூல்கள், 10391 பக்கங்கள்.

கடந்த மூன்று வருடங்களில் வாசித்த பக்கங்கள் 8000 ஐ தாண்டவில்லை. அதனை ஒப்பிடுகையில் இந்த வருடம் முன்னேற்றம்தான். 

2016 ம் வருடம்தான் இதுவரை வாசிப்பின் உச்சமாக 116 நூல்கள், 18,845 பக்கங்கள் என்று அமைந்திருந்தது. அந்த அளவை மீண்டும் எப்போது தொடுவேன் என்று தெரியவில்லை. இவ்வருடம் ஜூலையில் பணி நிறைவு செய்வதால் இந்த ஆண்டு கூட சாத்தியப்படலாம். எதிர்காலம் ஒளித்து வைத்திருக்கும் ஆச்சர்யங்களை யாரறிவார்?

அப்புறம் பொறாமை என்று தலைப்பில் உள்ளது என்று கேட்கிறீர்கள் அல்லவா?

வாசிப்பை பதிவு செய்து வெளியிடும் பழக்கம் எங்கள் மதுரை கோட்டத் தோழரும் எழுத்தாளரும், பொழிபெயர்ப்பாளரும் நேற்று முன்தினம் பணியிலிருந்து ஓய்வு பெற்றவருமான தோழர் ச.சுப்பாராவ் அவர்களிடமிருந்துதான் வந்தது.

அவர் கடந்த ஆண்டு வாசித்த நூல்கள் 104, பக்கங்கள் 22,142.

பிகு: மேலே படத்தில் உள்ள நூல்கள் பட்டியலில் இருக்காது. ஆமாம். த,மு,எ,க,ச, காட்பாடி கிளை மூன்று நாட்கள் நடத்திய புத்தகக் கண்காட்சியில் 31.12.2024 அன்று வாங்கியவை அவை. அவற்றுடன்தான் இந்த வருட வாசிப்பு தொடங்கியுள்ளது.



 




புத்தாண்டு இனிதாய் அமையட்டும்

 


புத்தாண்டின் முதல் பதிவாய் என்ன எழுதலாம் என்று யோசித்தேன். எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மூத்த இரு தலைவர்கள் அனுப்பிய வாழ்த்துச் செய்தியின் தமிழாக்கத்தை அளிப்பது மிகவும் பொருத்தமாக இருக்கும் என்பதால் அவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.



வெறுப்பும் வன்முறையும் புதிய வாழ்வியல் நடைமுறைகளாக  மாறி வரும் இன்றைய சூழலில் அமைதியாய் ஒன்றிணைந்து வாழ்வது, உண்மை, நீதி, அனைவருக்குமான நலன் ஆகிய அழகிய விழுமியங்களுக்காக போராடுவது இன்றியமையாதது. இந்த அழகிய சித்தாந்தங்களை வளர்த்தெடுக்க அழிவு சக்திகளையும் இருளையும் பின்னுக்குத் தள்ள வேண்டியது அவசியமாகும்.

2025 ல்  இந்த உயரிய இலக்குகளை வென்றெடுப்பதற்காக முன்னேறுவதற்கான  பயணத்தை முன்னெடுத்துச் செல்வோம்

புத்தாண்டு வாழ்த்துக்கள்

                                                                               -        தோழர் அமானுல்லாகான்                                                                               முன்னாள் தலைவர்    அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்

புத்தாண்டு புதிய நம்பிக்கைகளை கொண்டு வருகிறது. வெறுப்பை அன்பின் மூலம் அகற்றுகிற, பாகுபாட்டை சமத்துவம் மூலம் அகற்றுகிற, போர்களை அமைதி வென்றெடுக்கிற, வளர்ச்சியையும் செல்வத்தையும் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கிற மனிதத்திற்காக ஒன்றிணைகிற சிறப்பானதொரு உலகம் உருவாகும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது. 

இவை ஒரு நாளில் நிகழாது. புத்தாண்டு அதற்கான பாதையை வழிகாட்டட்டும். 

அனைத்து தோழர்களுக்கும்  மகிழ்ச்சியான 2025  புத்தாண்டு அமைய எனது வாழ்த்துக்கள்

                                                        தோழர் கே.வேணுகோபால்,

                                                  முன்னாள் பொதுச்செயலாளர்,

                      அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்.

 அனைவருக்கும் என் அன்பான புத்தாண்டு வாழ்த்துக்கள்

பிகு: புத்தாண்டின் முதல் பதிவில் ஒரு இனிப்பு இருக்கட்டும் என்பதற்காக இன்று நான் தயாரித்த பீட்ரூட் அல்வா மேலே . . .