Thursday, December 18, 2025

அதிசயமாய் ஒரு நல்ல போலீஸ் . . .

 


நேற்று ஓய்வூதியர் தினம். வேலூரில் மத்திய, மாநில, பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக ஒரு சிறப்பான கூட்டம் நடந்தது. 

அக்கருத்தரங்கில் பள்ளி, கல்லூரி ஆசிரியர் ஓய்வூதியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் ஆர்.பர்வதராஜன் சிறப்புரையாற்ற வந்திருந்தார்.

அவர் சொன்ன ஒரு தகவல் சுவாரஸ்யமாக இருந்தது. ஆச்சர்யமாகவும் இருந்தது.

"மத்தியரசு ஊழியர்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என்று பல்வேறு இயக்கங்கள் நடந்து கொண்டிருந்தது. இயக்கங்களின் நிறைவாக சென்னையில் முற்றுகை போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அப்போது குடியரசுத்தலைவர் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. மிகவும் கடுமையானவர் என்று பெயர் பெற்ற பி.சி.அலெக்ஸாண்டர் ஆளுனர். 500 பேருக்கு மேல் சென்னைக்குள் அனுமதிக்க மாட்டேன் என்று அறிவித்தார். அன்றைய போலீஸ் கமிஷனர் துரை கையில் துப்பாக்கியோடு சுற்றிக் கொண்டிருந்தார். தாக்குதல் நடத்த குதிரைப்படை போலீஸ் தயாராக இருந்தது.

முற்றுகையில் கலந்து கொள்ள நாங்கள் வேனில் சென்னை சென்று கொண்டிருந்தோம். விருதுநகரில் எங்களை ஒரு போலீஸ் அதிகாரி மறித்தார். உங்களையெல்லாம் அனுமதிக்கக் கூடாது என்பதுதான் எங்களுக்கு உத்தரவு. 

நியாயமான கோரிக்கைக்காக செல்லும் உங்களை திருப்பி அனுப்ப எனக்கு மனமில்லை. நான் அனுமதித்தாலும் வழியில் வேறு யாராவது மடக்கி விடுவார்கள். நீங்கள் சென்னை செல்ல ஒரு வழி இருக்கிறது.

சென்னை மெரினா பீச்சில் மெல்மருவத்தூர் ஆதிபராசக்தி பக்தர்களின் மாநாடு நடக்கிறது. நீங்கள் இந்த ஜாக்டீ (அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பு)  பேனர்களை எடுத்து விட்டு வேனில் "ஓம் சக்தி, பராசக்தி" என்று எழுதி விட்டு செல்லுங்கள் என்று சொன்னார்."

தோழர் பர்வதராஜன் இதை சொன்ன போது எனக்கு மிகவும் ஆச்சர்யமாகவே இருந்தது.

தொழிலாளி வர்க்கம் எந்த போராட்டம் நடத்தினாலும் அதன் கோரிக்கைகள் எவ்வளவு நியாயமாக இருந்தாலும் அந்த போராட்டம் வெற்றி பெற்றால் அதன் பலன் அவர்களுக்கும் கிடைக்கும் என்றாலும் போராடும் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தி கைது செய்வதுதான் இன்றைய வாடிக்கையாக இருக்கையில் 

ஒரு காவல்துறை அதிகாரி போராட்டத்திற்கு ஆதரவாக செயல்பட்டது அதிசயமாகவே எனக்கு தோன்றியது.

என்ன சரிதானே!



No comments:

Post a Comment