Thursday, July 24, 2025

இல்லாத நாட்டுக்கு போலி ......

 



மேற்கு ஆர்டிகா,

சபோர்கா,

பௌல்வியா,

லோடோனியா

ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளீர்களா? குறைந்த பட்சம் கேள்வியாவது பட்டுள்ளீர்களா?

நான் இன்றுதான் கேள்விப்பட்டேன், அந்த பெயர்களில் எந்த நாடும் கிடையாது என்றும் அந்த நாடுகளின் தூதர் என்றபெயரில் ஒருவன் போலி தூதரகம் நடத்தி மோசடி செய்து வந்துள்ளான் என்று இன்றுதான் கேள்விப்பட்டேன்.

உபி மாநிலம் காஸியாபாத்தில் ஒரு ஆடம்பர மாளிகையில் ஹர்ஷவர்த்தன் ஜெயின் என்பவன் தன்னை தூதராக காண்பித்துக் கொண்டு "வெளிநாடுகளில் வேலை, ஹவாலா ஆகிய மோசடிகளை செய்து வந்துள்ளான். நேற்று அவன் கைதாகியுள்ளான்.

பழைய போலிச்சாமியார் சந்திராசாமி, போபோர்ஸ் பீரங்கி தரகர் அட்னான் கஷோகி ஆகியோருக்கு நெருக்கமாக இருந்தவன் என்று சொல்லும் ஊடகங்கள் இப்போது அவனுக்கு பின்புலம் யார் என்றோ எத்தனை வருடங்களாக இந்த மோசடியை செய்து வருகிறான் என்பதை மட்டும் சொல்லவில்லை.

ஒரு வலைத்தளத்தில் நான் பார்த்த சில கமெண்டுகள் சுவாரஸ்யமானவை.

இந்த முறை குஜராத்தை மிஞ்சி விட்டது உ.பி.

உ.பி யில் புத்திசாலிகளும் கூட இருக்கிறார்கள் என்பது இப்போதுதான் தெரிகிறது.

காஸியாபாத் மக்கள் பெருமைப்பட வேண்டிய தருணம் இது. குஜ்ராத்திகள் கூட சிந்திக்காத மோசடி இது!

சரி, இதில் மொட்டைச்சாமியார் பங்கு என்ன?

Wednesday, July 23, 2025

இப்படித்தான் இருக்க வேண்டும் மரணம் . . .

 

மார்க்சிஸ்ட் கம்யூன்ஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தோழர் பெ.சண்முகம் அவர்களின் முகநூல் பதிவுகளை பகிர்ந்து கொண்டுள்ளேன். படங்களும் அவரது பக்கத்திலிர்ந்து எடுக்கப்பட்டவையே.

மெய் சிலிர்க்கிறது !!!















நானும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் கே.பாலகிருஷ்ணன்,உ.வாசுகி ஆகியோரும் மறைந்த மகத்தான தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன் அவர்களுக்கு செவ்வணக்கம் செலுத்த ஆலப்புழா வந்து காத்திருக்கிறோம். நேற்று பிற்பகல் இரண்டு மணிக்கு திருவனந்தபுரம் நகரிலிருந்து அவருடைய உடலை சுமந்த ஊர்தி 24மணிநேரம் கடந்த பிறகும் இங்கு வந்து சேர முடியவில்லை. தூரம் என்னவோ 150 கிலோமீட்டர் தான் ஆனால், கேரள மாநில மக்கள் அனைவருமே தெருவில் குவிந்து விட்டார்கள் என்று சொல்லத் தக்க அளவுக்கு கண்ணுக்கெட்டிய தூரம் வரை மக்கள் வெள்ளம்.

இறந்த பின்னும் மக்களை திரட்டும் வல்லமை கொண்டவராக தோழர் வி.எஸ் திகழ்கிறார் என்பதை கண்ணாரக் கண்டு வியந்து போய் இருக்கிறோம். நாங்கள் மட்டுமல்ல. நாடே வியந்து தான் பார்த்துக் கொண்டிருக்கிறது. எப்போது அவருடைய முகத்தை பார்ப்போம் என காத்திருக்கிறோம். மரணம் என்றால் அது இப்படி இருக்க வேண்டும்.

********************************************************************************

என்னுடைய வாழ்நாளில் நான் பார்த்த மிக நீண்ட தூர இறுதி ஊர்வலம் தோழர் வி.எஸ் அவர்களுடையதுதான். பல லட்சக்கணக்கான மக்கள் 150 கிலோமீட்டர் தூரமும் நின்று தாங்கள் நேசித்த தலைவருக்கு இறுதி மரியாதை செய்ய கொட்டுகிற மழையில் காத்திருந்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும். நான் பார்த்த மிகப்பெரும் மக்கள் திரள் பங்கெடுத்த இறுதி ஊர்வலமும் இதுதான். மக்களின் மனங்களை வென்ற மகத்தான தலைவராக தோழர் வி.எஸ் அவர்கள் வாழ்ந்து மறைந்திருக்கிறார். இல்லை, இல்லை மக்கள் மனங்களில் தொடர்ந்து வாழ்வார். அனைத்து தொலைக்காட்சிகளிலும் கடந்த மூன்று நாட்களாக தோழர் வி.எஸ் அவர்களின் இறுதி நிகழ்ச்சியை தவிர வேறு எந்த நிகழ்வுகளும் ஒளிபரப்பப்படவில்லை என்பது மற்றொரு சிறப்பு. அவரைப்போல் வாழ முயற்சிப்போம்

இடியாய் தாக்கிய இரட்டைத் துயரம்

 






 

நேற்று முன் தினம் 21.07.2025 அன்று ஒரு மோசமான நாள். உழைக்கும் வர்க்கம் இரு முக்கியமான தலைவர்களை இழந்த நாள்.

 

ஒருவர், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் துணைத்தலைவரும் சத்திஸ்கர் மாநிலத்தின் முக்கியமான மார்க்சிஸ்ட் கட்சித்தலைவருமான தோழர் பி.சன்யால்.

 

மற்றவர் கேரளாவின் முன்னாள் முதல்வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராகவும் இருந்த தோழர் வி.எஸ்.அச்சுதானந்தன்.

 

தோழர் சன்யால் பற்றி முதல் முறையாக அறிந்தது  எங்கள் சங்கத்தின் “இன்சூரன்ஸ் வொர்க்கர்” இதழின் மூலமாக.

 

1988 ல் பாரத் பந்த் நடைபெற்ற போது அவர் பணியாற்றிய ராய்ப்பூர் கோட்ட அலுவலகத்தில் போஃபோர்ஸ் ஊழல் வழக்கு தொடர்பாக வைக்கப்பட்டிருந்த  ஒரு கார்ட்டூனை அடித்து நொறுக்கிய இளைஞர் காங்கிரஸ் குண்டர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக போலீஸ் ராய்ப்பூர் கோட்டப் பொதுச்செயலாளராக இருந்த தோழர் சன்யாலை கைது செய்தது. ராய்ப்பூர் நகர தொழிற்சங்கத் தோழர்கள் கொதித்து போராடியதில் போலீஸ் பின்வாங்கி அவரை விடுவித்தது.

 

1994 ல் அகமதாபாத் நகரில் நடைபெற்ற 15 வது அகில இந்திய மாநாட்டில்தான் அவரை முதன் முதலில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் புதிதாக உருவாக்கப்பட்டிருந்த மத்திய மண்டலக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர். அனல் கக்கிய உரை. இடதுசாரி கருத்தியலை தெளிவாகவும் ஆணித்தரமாகவும் எடுத்துரைக்கும் உரை. சமரசமில்லாத, கொள்கைப் பற்று கொண்ட தலைவர்.

 

அதன் பிறகு ஒவ்வொரு மாநாட்டிலும் அவர் எப்போது பேசுவார் என்று ஆவலோடு எதிர்பார்க்க வைத்தது அந்த உரை.

 

அவருடன் பரிச்சயமானது நான் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் ஆன பிறகுதான்.  தோழமையின் கதகதப்பை அவரிடம் உணர முடியும்.

அந்த செயற்குழுவில் அடுத்த சில மாதங்களில் ராய்ப்பூரில் நடைபெற உள்ள அகில இந்திய மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவராக தோழர் ஹபீப் தன்வர் செயல்படவுள்ளார் என்று அவர் அறிவிக்கையில் பெரும் ஆரவாரம். அவர் மிகப் பெரிய கலை ஆளுமை, நாடக விற்பன்னர், திரை இயக்குனர்  என்பதெல்லாம் பிறகுதான் தெரிந்து கொண்டேன்.  

 

ராய்ப்பூர் மாநாடு ஒரு அற்புத அனுபவம்.  1500 அமரக்கூடிய அரங்கம் ராய்ப்பூரில் கிடையாது. அதனால் ஒரு தற்காலிக அரங்கை பிரம்மாண்டமாக உருவாக்கினார். உணவுக்கூடம், தற்காலிக கழிவறைகள் என எல்லாமே உருவானது. அந்த மாநாட்டுப் பேரணியை வாழ்த்த ரெய்ப்பூர் நகர உழைக்கும் மக்கள் முழுதுமே திரண்டிருந்தனர். மலைவாழ் மக்கள் பங்கேற்பு அதிகமான அளவில் இருந்தது.

 

தோழர் ஹபீப் தன்வர் இரண்டு நாடகங்களை நடத்தினார். திருப்பத்தூர் தூய இருதயக் கல்லூரி  குழுவினர் தோழர் ஹபீப் தன்வரின் “சரண்தாஸ் சோர்” என்ற நாடகத்தை வேலூரில் நடத்தினர். தமுஎகச பொறுப்பேற்று நடத்திய அந்த நாடகத்திற்கான  அழைப்பிதழை கொடுக்க வந்த தமுஎகச பொறுப்பாளரான ஆறுமுகம் பிள்ளை என்ற தோழரிடம்  நான்  ஒரிஜினல் வடிவத்தையே பார்த்துள்ளேன் என்று சொல்ல நாடகத்திற்கான அறிமுகத்தை  அளிக்கும் பொறுப்பை அளித்து விட்டார். நாடக இயக்குனரான தோழர் பார்த்திப ராஜாவோ, நீங்கள் ஹபீப் தன்வர் நடித்ததை பார்த்தீர்களா! அதிர்ஷ்டசாலி என்று வியந்து சொன்ன போதுதான் அவரின் அருமை புரிந்தது. அவரை மாநாட்டில் இணைத்த தோழர் சன்யாலின் அருமையும்.

 

அந்த மாநாட்டில் முதல் நாளில் உணவு பரிமாறுவதில் கொஞ்சம் குளறுபடி இருந்தது. அன்று இரவு அதைப் பற்றி தோழர் சன்யால் “உணவில் கொஞ்சம் சிக்கல் இருந்தமைக்கு வருத்தங்கள். இவர்கள்தான் சத்திஸ்கர் மாநிலத்திலேயே மிகப் பெரிய கேட்டரிங் நிறுவனம். அவர்களோடு விவாதித்தோம்” என்று சொல்லிக் கொண்டு இருக்கையில் “முடிவு என்ன?” என்று அப்போதைய பொதுச் செயலாளர் தோழர் என்.எம்.சுந்தரம் கேட்க “வெற்றிதான் நமது பாரம்பரியம் (Success is our tradition” என்று அவர் சட்டென்று பதிலளிக்க அரங்கம் கரவொலிகளால் அதிர்ந்தது.

 

2010 ல் குடியாத்தத்தில் நடைபெற்ற எங்கள்  கோட்ட மாநாட்டில் அவர் உரையாற்ற வேண்டும் என்று விரும்பி அழைத்த போது உடனடியாக ஒப்புக் கொண்டு பொது மாநாட்டிலும் பின்பு பிரதிநிதிகள் மாநாட்டிலும் மிகச் சிறப்பாக பேசினார்.

 

அவரை நான் செல்லமாக கடிந்து கொண்ட அனுபவமும் உண்டு. கான்பூரில் அகில இந்திய மாநாடு. ஊழியர்கள் பிரச்சினைகளை பேசும் வாய்ப்பு எங்கள் தென் மண்டலத்தால் கொடுக்கப்பட்டிருந்தது. நேரம் போதாமையால் இரவு உணவுக்குப் பின்பும் மாநாடு தொடர்ந்தது. இரவு 11 மணிக்கு குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த போது பேச அழைக்கப்பட்டேன். விடுமுறைப் பயணச் சலுகை விதிகளை எளிமையாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசுகையில் அந்த வருட ஆடிட் முடிந்த பின்புதான் எல்.டி.சி போன மகிழ்ச்சியையே ஒரு ஊழியரால் அனுபவிக்க முடியும் என்று நான் குறிப்பிட  தோழர் சன்யாலும் அப்போதைய வடக்கு மண்டல தலைவருமான தோழர் பகவான் ஸ்வரூப் சர்மாவும் மேஜையைத் தட்டி வெடிச் சிரிப்போடு ஆரவாரம் செய்ய என் பேச்சின் ஓட்டம் தடைபட மீண்டும் இயல்புக்கு வர ஒரு நிமிடம் ஆனது. அடுத்த நிமிடம் மணியும் அடிக்கப்பட்டு விட்டது. உங்களால்தான் என்னால் ஒழுங்காக பேச முடியவில்லை என்று அவரிடம் செல்லமாக கோபித்துக் கொண்டேன்.

 

அவர் என்னிடம் கடிந்து கொண்ட அனுபவமும் உண்டு. பாமக அராஜகக் கும்பலிடமிருந்து தப்பிய அனுபவத்தை ஏற்கனவே பகிர்ந்துள்ளேன். இந்த ஏப்ரலில் கூட மீள் பதிவு செய்துள்ளேன். தைலாபுரம் தோட்டத்திலிருந்து தப்பித்தவுடன் அந்த நிகழ்வை ஓரிரு வார்த்தைகளில் முகநூலில் பதிவு செய்திருந்தேன். “Take Care” என அங்கே பின்னூட்டம் இட்டு விட்டு உடனடியாக அழைக்கவும் செய்தார். பிறகு இன்னொரு இடத்தில் மரம் வெட்டப்பட்டதால் பயணம் தடைபட்டு விட்டது என்றும் ஒரு பதிவு எழுதியிருந்தேன்.அதிகாலை 3 மணிக்கு வீடடைந்து உறங்கியும் விட்டேன்.

 

காலை 7 மணிக்கு  தொலைபேசியில் அழைத்த தோழர் சன்யால், எத்தனை மணிக்கு வீட்டிற்கு வந்தேன் என்பதை கேட்டு விட்டு, “பிரச்சினையில் சிக்கிக் கொண்டதை பதிவு போட்ட நீங்கள், ஜாக்கிரதையாக வீடு திரும்பியதை ஏன் எழுதவில்லை, எவ்வளவு கவலையாக இருந்தது தெரியுமா? இனி இது போல செய்யாதீர்கள்” என்று உரிமையோடு கண்டிக்க என் தவறு புரிந்தது.

 

தோழர் சன்யாலின் மறைவு இடதுசாரி முற்போக்கு இயக்கங்களுக்கு பெரும் இழப்பு.

 

வாழும் வரலாறாகத் திகழ்ந்த தோழர் வி.எஸ்.அச்சுதானந்தன் அவர்களின் மறைவின் மூலம் மார்க்சிஸ்ட் கட்சி தன் முதல் தலைமுறையின் கடைசி தல்லைவரையும் இழந்துள்ளது. போராட்டத்தில் புடம் போற்ற தலைவரின் மறைவின் மூலம் இந்தியா தனது விடுதலைக்காக போராடிய ஒரு வீரரை இழந்துள்ளது.

 

செவ்வணக்கம் தோழர் சன்யால்

செவ்வணக்கம் தோழர் அச்சுதானந்தன்.

 








பிகு: முகப்பில் உள்ளது எங்கள் குடியாத்தம் மாநாட்டு புகைப்படங்கள்.

கீழே உள்ளது ராய்ப்பூர் அகில இந்திய மாநாட்டு புகைப்படங்கள்.

 

Tuesday, July 22, 2025

நீ எப்போ ரெவி?

 


நீ எப்படி தமிழ்நாட்டின் அவமானமோ அது போல மேற்கு வங்கத்தில் ரௌடி கவர்னராக செயல்பட்டு அதனால் துணை ஜனாதிபதியாக பதவி உயர்வு பெற்ற ஜகதீப் தாங்கர் நேற்று ராஜினாமா செய்து விட்டார்.

நேற்று காலை முழுதும் ராஜ்யசபாவில் பங்கேற்று விட்டு மாலை கொடுத்த ராஜினாமா கடிதத்திற்கு உடல் நிலையை காரணம் சொல்வதெல்லாம் உடான்ஸ்,

மோடியா?

மோகன் பகவந்தா?

ராஜினாமா செய்ய உத்தரவிட்டவர் யாரோ?

மதவெறி நீதிபதி, ஊழல் நீதிபதி ஆகியோர் மீதான பதவி பறிப்பு நடவடிக்கையை தள்ளிப் போடவா?

75 வயதாகப் போகும் மோடிக்கு ராஜினாமா செய்ய அழுத்தம் கொடுக்கவா?

எது எப்படியோ தாங்கர் சசெல்வது மகிழ்ச்சியாக உள்ளது. நீ சென்றால் இன்னும் சந்தோஷமாக் இருக்கும்.

பதவியில் இருந்து எந்த நன்மையும் செய்யாத நீ, பதவி வில்குவதுதான் நன்மையாக இருக்கும். 

Friday, July 18, 2025

நீங்களாவது மாற்றுங்கள் நீதியரசர் கவாய் அவர்களே

 


மேலே உள்ளது உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தாவே கூறியது. 

"மோடி பிரதமரான் பின்பு தொடர்ந்து வந்த ஒவ்வொரு தலைமை நீதிபதிகளும் மோடியின் செல்வாக்கினால் நூற்றுக்  கணக்கான வழக்குகளில் சமரசம் செய்து கொண்டு நீதித்துறையை வீழ்த்தி விட்டனர். இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி சீர்குலைந்தமைக்கு நீதித்துறை ஒரு முக்கியக் காரணம்."

அவர் சொன்னது துயரமான உண்மை.

தற்போதைய தலைமை நீதிபதியான திரு பி.ஆர்.கவாய் அவர்களாவது விதி விலக்காக அமைந்து சிதைந்து கிடக்கும் நீதித்துறைக்கு உயிர் கொடுக்க வேண்டும்.

சீமான் வகையறாவின் சிரிக்க வைக்கும் புளுகு

 


சீமானைப் போலவே சீமானின் அல்லக்கைகளும் சிரிப்பு மூட்டும் வண்ணம் கதை அளக்கிறார்கள்.



பொய் சொல்வதற்கு கொஞ்சமும் கூச்சப்படுவதில்லை. அப்படி கொஞ்சமாவது  கூச்சமிருந்தால் "1956 ல் துவக்கப்பட்ட மதிய உணவுத் திட்டத்தையும்  1966 ல் பிறந்த  சீமானையும் தொடர்பு படுத்தி பேசுவார்கள்! 

சங்கிகளை விட பெரிய முட்டாள்கள் நாதக தம்பிகள்!

Wednesday, July 16, 2025

என்றைக்கும் இதுதான் டாப்

 


முகநூலில்  ஃப்ரண்ட்லைன் முன்னாள் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் அவர்களின் பக்கத்தில் பார்த்த காணொளி இது. 


1986 லிருந்து நடைபெற்ற ஒவ்வொரு உலகக் கோப்பையிலும் சிறந்த ஒரு கோலை தேர்வு செய்து வழங்கியுள்ளார்கள்.

எத்தனை வருடம் ஆனால் என்ன, எத்தனை வீரர்கள் புதிதாய் தோன்றினால் என்ன, 1986 உலகக் கோப்பையில் இங்கிலாந்திற்கு  எதிரான போட்டியில் மாரடோனா அடித்த கோலுக்கு ஈடு இணை எதுவும் இல்லை. அதுதான் என்றும் டாப்.

பிகு: ஒரு மாறுதலுக்காக அரசியல் இல்லாத பதிவு இது.

எப்போதுமே போதையா சீமான்?

 


எத்தனை முறை அடி வாங்கினாலும் திருந்தாத ஜென்மம் சீமான். பாலியல் குற்றவாளியான சீமான் மீண்டும் ஒரு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தை வம்புக்கு இழுத்து வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளான். 24 மணி நேரமும் போதையிலேயே இருப்பான் போல. அதானி துறைமுக சரக்காக இருக்குமோ?

மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் தோழர் ராதிகா அவர்களின் பதிவு கீழே . . .



கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை..
சீமானே சுயநினைவை இழந்து இத்தனை நாள் எங்கே கிடந்தீர்கள்?
வரதட்சணை கொடுமையால் உயிரிழந்த ரிதன்யாவின் மரணம் தமிழகத்தையே உலுக்கியது.
உடனடியாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து பேசி மறுநாள் திருப்பூர் மாவட்டத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பாக தற்கொலைக்கு காரணமான ரிதன்யாவின் மாமியார் சித்ராவை கைது செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ரிதன்யாவின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.
தமிழக அரசும் காவல்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.என வலியுறுத்தப்பட்டது. அதன் பிறகு சித்ரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
20 நாள் கழித்து தெளிந்த சீமான்..
வழக்கம்போல வாடகை வாயால் வடைசுட ஆரம்பித்து விட்டார்.
மாதர் சங்கம் எங்கே போனது?
நினைவை இழந்து திடீரென வந்து மைக் முன் நின்றால் நடந்தது எதுவும் தெரியாது சீமானே..
கொஞ்சம் தெளிந்த உங்கள் தம்பிகளிடம் கேட்டு தெரிந்து பேசவும்.
எங்களுக்கு உங்கள் பேச்சை கேட்கிற போது
எங்கள் மேல் நீங்கள் கொண்ட பயம் இன்னும் தீராமல் இருப்பது தெரிகிறது.
அநாகரீகமாக பொதுவெளியில் பெண்களைப் பற்றி பேசுவதும் எழுதுவதும் உங்களுக்கும் உங்கள் கட்சிக்கும் புதிதல்ல..
அண்ணன் எவ்வழியோ தம்பிகளும் அவ்வழியே பின்பற்றுகிறார்கள்.
உங்களை போலவே எங்களுக்கும் திருப்பி பதில் சொல்லத் தெரியும்.
ஆனால் அரசியல் நாகரீகமும் பொது மரியாதையும் அறம் சார்ந்த விமர்சனங்கள் மட்டுமே பண்பின் அடையாளம் என இயங்கி வருகிறோம்.
நாவை அடக்கி பேசாவிட்டால் அடக்கும் வல்லமை மாதர் சங்கத்திற்கு இருக்கிறது.
தமிழகத்தில் எங்கு பெண்களுக்கு அநீதி நடந்தாலும் உங்களைப் போன்றவர்கள் கேட்கிற கேள்வி
மாதர் சங்கம் எங்கே போனது?
ஆண்ட கட்சிகள் பல இருக்கிறது.
நாளை நாங்கள் தான் ஆட்சிக்கு வருவோம் என்று சொல்கிற கட்சிகள் இருக்கிறது.
ஆளும் கட்சி இருக்கிறது
அதையெல்லாம் தாண்டி பெண்கள் பிரச்சனை என்றால் போராட்ட களத்தில் இருக்கும் ஒரே அமைப்பு மாதர் சங்கம் தான் என்கிறதை தொடர்ச்சியாக சொல்லி எங்களை வலிமையாக்கி கொண்டிருக்கிறீர்கள்.
அநீதிக்கு எதிரான போராட்டம் என்பது எங்கள் உயிரில் கலந்தது.
உங்களைப் போல நாள் ஒரு பேச்சும் பொழுது ஒரு கொள்கையும் என நெறிகெட்டவர்களுக்கு தமிழக பெண்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
அ.ராதிகா
AIDWA

Tuesday, July 15, 2025

முதல்வருக்கே இப்படியென்றால் ???

 


காஷ்மீரின் முதல்வர் ஓமர் அப்துல்லா. காஷ்மீரில் மன்னராட்சி நடைபெற்ற போது போராடிய மக்கள் மீது அரசு நடத்திய தாக்குதலில் இறந்து போனவர்கள் தியாகிகளாக கிட்டத்தட்ட 94 ஆண்டுகளாக மதிக்கப் பட்டு அவர்கள் நினைவு நாளன்று அவர்களின் கல்லறைக்கு அஞ்சலி செலுத்தப்படுவது வழக்கம்.

அப்படி அஞ்சலி செலுத்த ஓமர் அப்துல்லா நேற்று அந்த கல்லறைத் தோட்டத்திற்கு சென்ற போது கதவுகள் அடைக்கப்பட்டு அவருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

அவர் சுவரேறி குதித்து உள்ளே சென்றுள்ளார்.

ஒரு முதலமைச்சர் மீதே துணை நிலை ஆளுனரும் காவல்துறையும் இத்தனை கட்டுப்பாடுகளை விதிக்க முடியுமென்றால் காஷ்மீர் மக்களின் நிலை என்ன?

காஷ்மீர் தேர்தலில் அடி வாங்கிய பின்பும் மோடி வகையறா, சர்வாதிகாரமாக நடந்து கொள்கிறது. காஷ்மீருக்கு நடப்பது நாளை நமக்கு வராதா என்ன?

சிந்திப்பீர், காஷ்மீர் மக்களுக்காக குரல் கொடுப்பீர் . . .

கொஞ்சமா? இல்லை ஹெவியா பொறாமை

 


கடந்த மூன்று நாட்களாக தோழர் சு.வெங்கடேசன் முக நூலில் வறு பட்டுக் கொண்டிருக்கிறார். காவல் கோட்டம் நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது கிடைத்தது எப்படி வன்மம் தெளிக்கப்படுவதற்கான காரணமாக அமைந்ததோ அது போல இப்போதைய வன்மத்திற்கு "வேள்பாரி" நாவலின் விற்பனை ஒரு லட்சம்  பிரதிகளை கடந்திருப்பது  காரணமாக உள்ளது.



சங்கிகளைத் தவிர வேறு யாரெல்லாம் என்று பார்த்தால் . . .

பெரும்பாலும் எழுத்தாளர்கள் . . .
சுவாரஸ்யமாக எழுத முடியாத எழுத்தாளர்கள், இரண்டாவது பதிப்பை காணாதவர்கள்(இடதுசாரிகள் என்ற வரையறைக்குள்ளும் வருபவர்கள்) . சி.பி.எம் மீது ஒவ்வாமை கொண்டவர்கள், ரஜினிகாந்த் கலந்து கொண்டது வெறும் வாயை மென்றவர்களுக்கு அவல் கிடைத்தது போலாகி விட்டது.  அதனால் முற்போக்கு முகாமில் இருக்கும் கமலஹாசன் ரசிகர்களும் இணைந்து விட்டனர்.

அத்தனை வன்மத்திற்கும் ஒரே ஒரு காரணம்தான் உண்டு.

மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர் எழுதிய ஒரு நூலின் விற்பனை ஒரு லட்சத்தை கடப்பதா என்ற பொறாமையன்றி வேறில்லை. 

இது ஒன்றும் புதிதல்லவே!

திருவிளையாடலில் வந்த வசனம்தானே!

Sunday, July 13, 2025

தந்தையால் கொல்லப்பட்ட வீராங்கனை

 


மேலே படத்தில் உள்ளவர் ராதிகா யாதவ், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த சிறந்த டென்னிஸ் வீராங்கனை.

அவரை இரண்டு நாட்கள் முன்பாக  அவரது அப்பா தீபக் யாதவ் சுட்டுக் கொன்று விட்டார்.

காரணம் என்ன?

டென்னிஸ் போட்டிகளில் பெறும் வெற்றிகள் மூலம் டென்னிஸ் பயிற்சிப் பள்ளி மூலமும் அவருக்கு பணம் குவிகிறது.

சமூக வலைதளங்களிலும் அவருக்கு லைக்குகள் குவிகிறது.

பெண்ணின் பணத்தில் பிழைப்பு நடத்துபவன் என்று கிராமத்தினர் கிண்டல் செய்ய, வலைதள செல்வாக்கு பொறாமையை வளர்க்க, தந்தையே மகளை சுட்டுக் கொன்று விட்டு இப்போது சிறையில் . . .


நாலு பேர் சொல்வதைக் கேட்டு நம்ம வீட்டு முடிவுகளை எடுப்பதன் விளைவுதான் இந்த கொலை.

மனதில் ஊறிப் போன ஆணாதிக்க சிந்தனை மகளையும் கூட பலி வாங்குகிறது. மாநிலத்தின் பிற்போக்குச் சிந்தனையும் ஒரு காரணி. பல வருடங்களாக பாஜக திணித்த பிற்போக்கு இது . . .

Saturday, July 12, 2025

நெகிழ்வும் நிறைவும் அளித்த வேலை நிறுத்தம்

 










09.07.2025 அன்று நடைபெற்ற ஒரு நாள் வேலை நிறுத்தம் என் வாழ்வில் மிக முக்கியமான வேலை நிறுத்தமாக அமைந்தது.

முதலில் 20.05.2025 என்றுதான் முடிவு செய்யப்பட்டிருந்தது. அதற்கான தயாரிப்பு பணிகளும் துவங்கியிருந்தது.

இந்த நிலையில்தான் 02.05.2025 அன்று காலையில் அலுவலகம் செய்கையில் ஒரு வேன் என் ஸ்கூட்டரின் பின் பக்கத்தில் மோத   சாலையில் சறுக்கிக் கொண்டே சென்றேன். பேண்ட் இரு இடங்களில் கிழிந்து தொங்கியது. இடுப்பிலும் கழுத்திலும் கடுமையான வலி. முழங்காலில் இருந்து ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. எழுந்து நிற்கவே முடியவில்லை. எனக்கு பின்னால் வந்து கொண்டிருந்த எங்கள் கோட்ட அலுவலகக்கிளைத் தலைவர் தோழர் ஜெயகாந்தம் தகவல் சொல்ல மற்ற தோழர்கள் வந்து மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.

இடுப்பிலும் கழுத்தெலும்பிலும் ப்ளேட் வைத்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்லி அதன் படியே 03.05.2025 அன்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.

மறுநாள் காலையில் முதலில் வந்த ஆர்தோ மறுத்துவரிடம் 20  தேதி வேலை நிறுத்தம் உள்ளது. அன்று நான் அலுவலகம் சென்று வேலை நிறுத்தத்தில் பங்கேற்க வேண்டும். அதற்கேற்றார்போல என் சிகிச்சையை பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்ல  அவர் புன்னகைத்து விட்டு போய் விட்டார்.

உடலின் இரண்டு பக்கங்களிலும் அறுவை சிகிச்சை நடந்துள்ளதால் குறைந்த பட்சம் ஆறு வாரங்கள் படுக்கையில்தான் இருக்க வேண்டும், அது வரை நிற்பதோ, உட்கார்வதோ வாய்ப்பில்லை என்று சொன்னபோதுதான் முந்தைய டாக்டரின் புன்னகைக்கான அர்த்தம் புரிந்தது.

பணிக்காலத்தின்  இறுதி வேலை நிறுத்தத்தில் நேரடியாக பங்கேற்க முடியாது  என்பது  மிகப் பெரிய ரணமாக இருந்தது. 

இந்த சூழலில்தான் வந்தது அந்த நற்செய்தி.

எல்லையில் உருவான பதற்றத்தின் காரணமாக வேலை நிறுத்தத்தை 09.07.2025 அன்று ஒத்தி வைத்த நற்செய்தி.

வாக்கர் துணை கொண்டு மெதுவாக நடக்கலாம் என்று ஜூன் மத்தியில் மருத்துவர் அனுமதி கொடுக்க அலுவலகம் செல்ல தொடங்கினேன். அதனால் எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பிளாட்டினம் ஆண்டு தொடக்க விழாவில் கலந்து கொள்ள முடிந்தது. பிளாட்டினம் ஆண்டு இலச்சினையை வெளியிடும் நல் வாய்ப்பையும் எங்கள் கோட்டத் தலைவர்கள் அளித்தார்கள்.




ஒரு  வழியாக வந்தது 09.07.2025. அன்றைக்கு ஆர்ப்பாட்டத்திற்கு வந்த தோழர்களின் எண்ணிக்கை சிறப்பாகவே இருந்தது. பணிக்காலத்தின் இறுதி வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டதன் மூலமாக ஒரு விசுவாசமான உறுப்பினராக  உழைக்கும் வர்க்கக் கடமையை நிறைவேற்றிய நிறைவு கிடைத்தது. பறி போயிருக்க வேண்டிய வாய்ப்பு மீண்டும் கிடைத்ததில் நெகிழ்ச்சியும் கிடைத்தது. பணிக்காலத்தின் இறுதி வேலை நிறுத்தத்தில் நான் பங்கேற்ற அதே நாளில் மே மாத துவக்கத்தில் பணியில் சேர்ந்து தன் பணிக்காலத்தின் முதல் வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற இளைய தோழர் டி.அஜித் குமாரை( மறைந்த எங்கள் தோழர் டி.தேவராஜ் அவர்களின் மகன்) ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் பார்க்கையில் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

அடுத்த தலைமுறை தயாராகிக் கொண்டிருக்கிறது என்ற மகிழ்ச்சி.


பிகு: மேலே உள்ள படங்கள் எங்கள் வேலூர் கோட்டத்தின் பல்வேறு கிளைகளில் நடந்த வேலை நிறுத்தக் கூட்டங்களின் போது எடுக்கப்பட்டது. உள்ளூர் தோழர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்றாலும் உணர்வை வெளிப்படுத்த அர்க்கோணம், ஆரணி, குடியாத்தம்,  ராணிப்பேட்டை கிளைத் தோழர்கள் ஆர்ப்பாட்டம்  நடத்தத் தயங்கவில்லை. ஆறாவது புகைப்படம் எங்கள் கோட்ட அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பொறுப்பாளர்கள். ஏழாவது புகைப்படம் எங்கள் பொதுச்செயலாளர் தோழர் எஸ்.பழனிராஜ். எட்டாவது புகைப்படம் பணிக்காலத்தில் இறுதி வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற நான். 

பிகு: இன்னமும் "வாக்கர்" துணையுடன்தான் நடை. இயல்பு வாழ்க்கை திரும்பும் நாள் இன்னும் கண்ணில் தென் படவில்லை.




Thursday, July 10, 2025

இதுதாண்டா குஜராத் மாடல்

 


தோழர் ரவி பாலேட் வரைந்த அருமையான ஓவியம்.

அது சொல்லும் உண்மையை தாங்க முடியாத சங்கிகள் அவர் மீது ஆபாச வாந்தியை கக்கிக் கொண்டிருக்கின்றனர். 

சீமான் கொஞ்சம் டவுட்டு

 


சீமானிடம் சில சந்தேகங்கள் கேட்க வேண்டியுள்ளது.

ஏன்?


சரி. என்ன சந்தேகம்?

நீங்கள் திரட்டியுள்ள மாடுகளோடு என்ன மொழியில் பேசுவீர்கள்?

அவர்களிடம் திரள் நிதி எப்படி கேட்பீர்கள்/

அவர்களை மாநாட்டுக்கு திரட்ட என்ன கொடுத்தீர்கள்?

பருத்திக் கொட்டை பிரியாணி? புண்ணாக்கு கள் பானம்?

புதிதாக மாடுகள் அணி அமைத்து பொறுப்பாளர்கள் போடுவீர்களா?

அவர்களையும் தேர்தலில் நிறுத்தி பயிற்சி கொடுப்பீர்களா? 

Wednesday, July 9, 2025

முட்டாள் சங்கிகளின் உலகமே!

 


காலையில் எழுதிய பதிவில் தேதிகளை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருந்தேன்.

மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் ஒரு சிகண்டி இன்றைய வேலை நிறுத்தம் தொடர்பாக திமுகவை திட்டி எழுத மற்ற மூடச்சங்கிகளும் அப்படியே அதை வழி மொழிந்திருந்தனர். 

அதிலே ஒரு அடிமுட்டாள் சங்கி, இந்த வேலை நிறுத்தமே, சமீபத்திய கொலையை திசை திருப்ப திமுகவின் ஏற்பாடு என்று எழுதி இருந்தது.

இது ஒரு அகில இந்திய வேலை நிறுத்தம் என்பதோ முதலில் 20.05.2025 அன்று நடத்துவது என முடிவு செய்யப்பட்டதோ பின்பு 20.07.2025 என ஒத்தி வைக்கப்பட்டதோ தெரியாமல் அவர்கள் கட்டமைத்த பொய் உலகிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் மூடச்சங்கிகள்.

அந்த அடி முட்டாளுக்கு பதில் போட்டு அவருடைய கருத்து சிறுபிள்ளைத் தனமானது, முட்டாள்தனமானது என்று சொன்னேன்.


எந்த பதிலும் சொல்ல முடியாமல் பதுங்கி விட்டார்கள், பதிவெழுதிய சிகண்டி உட்பட...

இன்று ஏன் வேலை நிறுத்தம்?

 


கிட்டத்தட்ட இருபது கோடிக்கும் மேற்ப்ட்ட தொழிலாளர்கள் இன்று நடைபெறும் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வேலை நிறுத்தம் முதலில் 20.05.2025 அன்று நடைபெறுவதாக இருந்தது.

மோடியின் உளவுத்துறை கோட்டை விட்டதாலோ அல்லது அரசு அலட்சியம் செய்ததாலோ நிகழ்ந்த பஹல்காம் படுகொலைகள், அதற்கு பிந்தைய நிகழ்வுகள் காரணமாக 20.05.2025 க்கு பதிலாக 09.07.2025 என்று மாற்றி வைக்கப்பட்டது. தேதி மாறியதால் தனிப்பட்ட முறையில் மிகவும் மகிழ்ந்தேன். ஏன் என்பதை பின்னொரு நாளில் எழுதுகிறேன்.

20.05.2025 அன்று நடைபெறுவதாக இருந்த வேலை நிறுத்தத்தை முன்னிட்டு "காப்பீட்டு ஊழியர்" இதழிற்காக எழுதிய தலையங்கத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்,

இந்த தேதிகளையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மாலையில் எழுதுகிறேன்.



அகில  இந்திய வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் உழைப்பாளி வர்க்கம்

 

மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தனது கார்ப்பரேட் ஆதரவு செயல்திட்டத்தை வேகமாக அமலாக்க முயற்சிக்கிறது. இதனை முறியடிக்க இந்திய உழைப்பாளி வர்க்கமும் கடுமையான போராட்டத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது.  விரிவான போராட்ட வியூகத்தை வடிவமைக்க 18.03.2025 அன்று புதுடெல்லியில் “தொழிலாளர்களின் தேசிய மாநாடு” நடைபெற்றது. மத்தியத் தொழிற்சங்கங்கள், துறைவாரி அகில இந்திய சங்கங்கள்,  கூட்டமைப்புக்கள் என இந்திய தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்கள் பங்கேற்றனர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வழிகாட்டுதலில் செயல்படும் பாரதீய மஸ்தூர் சங் (BMS) மட்டும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சார்பாக தலைவர் தோழர் வி.ரமேஷ், பொதுச்செயலாளர் தோழர் ஸ்ரீகாந்த் மிஸ்ரா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றன்ர்.

 

இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மிகவும் முக்கியமானது. இது இந்திய நிலைமையையும் தொழிலாளர்கள் சந்திக்கும் சவால்களையும் ஆட்சியாளர்களின் அராஜகப் போக்கையும் விரிவாக எடுத்துரைத்திருந்தது. 2017-2018 லிருந்த ஊதியங்கள் 2023-2024 ல் குறைந்துள்ளது. ஆண் தினக்கூலி ஊழியரின் ஊதியம் ரூபாய் 203 லிருந்து 242 ரூபாயாகவும் பெண் ஊழியரின் ஊதியம் ரூபாய் 128 லிருந்து ரூபாய் 159 ஆகவும் உள்ளது. அதே நேரம் கார்ப்பரேட்டுகளின் லாபமோ 22.3 % உயர்வை கண்டுள்ளது.  இந்திய மக்கட்தொகையில் 5 % பேரிடம் 70 % செல்வம் குவிந்துள்ள நிலையில் மக்கட்தொகையின் அடிமட்டத்தில் உள்ள 50 % பேரிடமோ வெறும் 3 % செல்வமே உள்ளது. ஐரோப்பிய கோடீஸ்வர்களை விட பெரிய செல்வந்தர்களாக இந்திய கோடீஸ்வரர்கள் உள்ளனர்.  இந்திய ஏழைகளில் 90 சதவிகிதத்தினர் சர்வதேச அளவில் வரையறை செய்யப்பட்டதை விடவும் வறுமையான நிலையில் உள்ளனர்.

 

இப்படிப்பட்ட சூழலில் மத்தியரசு தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளான பணி நேரம், கூட்டு பேர உரிமை, குறைந்த பட்ச ஊதியம், சங்கம் அமைக்கும் உரிமை, வேலை நிறுத்த உரிமை உள்ளிட்ட போராட்ட வடிவங்கள் அனைத்தையும் பறிக்க முயல்கிறது. அரசியல் சாசனம் அளித்திட்ட கருத்துரிமை உள்ளிட்ட அடிப்படை ஜனநாயக உரிமைகளை கார்ப்பரேட் நலனுக்காக UAPA, PMLA, புதிதாக மாற்றப்பட்ட குற்றவியல் சட்டம் BNS ஆகியவை மூலமாக ஒடுக்குவதன் நீட்சியாகவே தொழிலாளர் சட்ட தொகுப்புக்களையும் அமல்படுத்த அரசு முயல்கிறது.

 

தொழிலாளர்கள் கூட்டாகவோ, தங்கள் தொழிற்சங்கங்கள் மூலமாகவோ தங்களின் குறைகளை பதிவு செய்வது கூட புதிய குற்றவியல் சட்டம் பாரதீய நியாய சன்ஹிதாவின்  111 ம் பிரிவின் படி குற்றச்செயலாக கருதப்பட்டு காவல்துறை நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுகிறது. பிணையில் வெளி வர இயலாத படி தொழிலாளர்களையும் தொழிற்சங்கத் தலைவர்களையும் ஒடுக்க முயல்கின்றனர். தொழிலாளர்கள் வாயிற்கூட்டம் நடத்துவது, பிரசுரங்களை அளிப்பது போன்ற நடவடிக்கைகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமல்லாது அரசுத்துறைகளும் கூட எடுக்கத் துவங்கியுள்ளது. இப்படிப்பட்ட நிலைமையை எந்த ஒரு தொழிலாளியாலோ தொழிற்சங்கத்தாலோ ஏற்றுக் கொள்ள முடியாது.

விதி மீறலுக்காக சிறைத் தண்டனை அளிக்க வேண்டிய நடவடிக்கைகளில் 180 மீறல்களுக்கு இரண்டாண்டுகள் முன்பாகவே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இப்போது அந்த பட்டியலில் இன்னும் 100 நீக்கப்பட்டுள்ளது. “இடையூறின்றி தொழில் செய்ய உதவுவது” என்ற பெயரில் கார்ப்பரேட்டுகளுக்கு கருணை மழை பொழியும்  அரசுதான் தொழிலாளர்களை மட்டும் ஒடுக்க முயல்கிறது.

 

இப்படிப்பட்ட சூழலில்தான் டெல்லியில் நடைபெற்ற தேசிய மாநாடு ஜாதி, மத, இனம், மொழி கடந்து உழைக்கும் மக்களுடைய ஒற்றுமையை கட்டுவதும் அதை பாதுகாப்பதும் மிகவும் முக்கியம் என்ற புரிதலோடு  பல கோரிக்கைகளை வடிவமைத்து அவற்றை வென்றெடுக்க போராட்ட வியூகங்களையும் வகுத்துள்ளது.

 

இன்சூரன்ஸ், வங்கி, துறைமுகம், ரயில்வே, அஞ்சல், ராணுவ தளவாட உற்பத்தி, போன்ற அனைத்துத் துறைகளிலும் தனியார்மயம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும், இன்சூரன்ஸ் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை 100 % உயர்த்துவதை கைவிட வேண்டும், பாலிசிகள், முகவாண்மையை வேறு நிறுவனத்திற்கு மாற்றும் முயற்சி நிறுத்தப்பட வேண்டும், தேசிய பணமயமாக்கல் திட்டம் கைவிடப் பட வேண்டும் என்பது மிக முக்கியமான கோரிக்கை.

 

குறைந்த பட்ச ஊதியம் ரூபாய் 26,000 ஆக உயர்த்தப்பட்டு விலைவாசி புள்ளியுடன் இணைக்கப்பட வேண்டும், குறிப்பிட்ட கால வேலைத் திட்டம் (Fixed Term Employment Scheme), அக்னிபாத் திட்டம் ஆகியவை நிறுத்தப்பட்டு ஒப்பந்த முறை தொழிலாளர் திட்டம் அகற்றப்பட வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டும், தேசிய பென்ஷன் திட்டம், ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டம் ஆகியவை கைவிடப்பட்டு வரையறுக்கப்பட்ட பலனை உறுதி செய்யும் பழைய பென்ஷன் திட்டம் மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும். குறைந்த பட்ச பென்ஷன் ரூபாய் 9,000 வழங்கப்பட வேண்டும்.

 

அனைத்து முறைசாரா தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு திட்டங்கள் அமலாக்கப்பட வேண்டும், மகாத்மா காந்தி வேலை உறுதிச்சட்டத்தின் படி வேலை நாட்கள் ஆண்டுக்கு 200 நாட்களாக உயர்த்தப்பட வேண்டும். அதற்கான நிதி ஒதுக்கீடு முறையாக செய்யப்பட வேண்டும்.

 

விவசாயிகளின் வீரஞ்செறிந்த போராட்டத்தால் திரும்பப் பெற விவசாயிகள் சட்டத்தை வேறு பெயரில் வேறு வடிவில் திணிக்கும் முயற்சி நிறுத்தப்பட வேண்டும், விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி நிர்ணயிக்கப்பட வேண்டும்.

 

ஆண்டாண்டு காலமாக தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகளை, அடிப்படை ஜனநாயக உரிமைகளை கார்ப்பரேட் முதலாளிகளின் லாப வெறிக்காக பறிக்க கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் நலச்சட்டங்களின் தொகுப்பை அமலாக்கக் கூடாது.

 

இந்த கோரிக்கைகளை முன் வைத்து வரும் 20.05.2025 அன்று நாடு தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்தம் நடத்துவது என்றும் தேசிய மாநாடு முடிவெடுத்தது.

 

20.05.2025 ஒரு நாள் வேலை நிறுத்தத்தினை வெற்றி பெறச் செய்ய, மாவட்ட, மாநில கருத்தரங்குகள் நடத்துவது, மக்களிடத்தில் விழிப்புணர்வை உருவாக்க பிரசுரங்களை அளிப்பது, வாயிற்கூட்டங்கள் நடத்துவது, பிரச்சார இயக்கங்களை மேற்கொள்வது உள்ளிட்ட பல நடவடிக்கைகளை மேற்கொள்வது என்றும் மாநாடு முடிவு செய்துள்ளது.

 

தொழிலாளி வர்க்கத்தின் மீது கார்ப்பரேட் முதலாளிகளும் கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காகவே தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ள மத்தியரசும் எண்ணற்ற தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

"தாக்குண்டால் புழுக்கள் கூட தரை விட்டுத்துள்ளும்! கழுகு தூக்கிடும் குஞ்சு காக்க துடித்தெழும் கோழி, சிங்கம் மூர்க்கமாய் தாக்கும் போது முயல் கூட எதிர்த்து நிற்கும்.சாக்கடை கொசுக்களா நாம்? சரித்திரத்தின் சக்கரங்கள்” 

என்ற தணிகைச் செல்வன் கவிதை வரிகளுக்கேற்ப தாக்குதல்களை முறியடிக்க உழைப்பாளி மக்கள் களம் காண வேண்டிய தருணம் இது.  மத்தியரசின் தாக்குதல்களை சந்திக்க உழைப்பாளி மக்கள் தயாராகி விட்டார்கள் என்ற எச்சரிக்கை மணியை ஒலிக்கும் தருணம்தான் 20, மே, 2025 ஒரு நாள் வேலை நிறுத்தம்.

 “கோடிக்கால் பூதமடா, தொழிலாளி கோபத்தின் ரூபமடா” என்பதை அரசும் முதலாளிகளும் புரிந்து கொள்ளும் வண்ணம் 20.05.2025 ஒரு நாள் வேலை நிறுத்தம் அமையட்டும், பங்கேற்ற அனைத்து தொழிற்சங்கங்கள் காண்பித்துள்ள உறுதி சிறப்பானது. நல்லதொரு மாற்றத்திற்கான துவக்கமாக, தொழிலாளர் வர்க்க ஒற்றுமையின் வெளிப்பாடாக, 20.05.2025 ஒரு நாள் வேலை நிறுத்தம் வெற்றி பெற அர்ப்பணிப்பு உணர்வோடு செயலாற்றுவோம்.