Tuesday, October 31, 2017

சிவப்பிடம் நடுங்குது காவி





மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழு அலுவலகத்தின் முன்பாக காவிகளின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி யைச் சேர்ந்த சில விடலைப் பசங்க, செங்கொடியை எரித்து கலாட்டா செய்திருக்கிறார்கள். மார்க்சிஸ்டுகளின் பொறுமையை சோதித்து அதன் மூலம் பெரும் கலவரத்திற்கு வித்திட காவிக்குரங்குகள் குட்டிகளை அனுப்பி ஆழம் பார்த்துள்ளன.

கம்யூனிசம் செத்து விட்டது. கம்யூனிஸ்டுகள் அழிந்து கொண்டே இருக்கிறார்கள் என்று வாய்ச்சவடால் பேசுகிற காவிகள் கடந்த இரண்டு மாதங்களாக நாட்டின் பல பகுதிகளிலும் மார்க்சிஸ்ட் கட்சியின் அலுவலகங்கள் முன்பாக கலாட்டா செய்கிறார்கள். காவல்துறை அவர்களுடைய எடுபிடிகளாக இருக்கிற இடங்களில் தாக்குதலும்  நிகழ்த்துகிறார்கள்.

புதுடெல்லியில் உள்ள மத்தியக்குழு அலுவலகம்,
புவனேஸ்வர்,
கரீம் நகர்
டேராடூன்,
உடுப்பி,
புதுச்சேரி,
லூதியானா

என்று பல இடங்களில் அராஜகத்தை தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள். 

கேரளத்தில் இவர்கள் நடத்திய பொய்ப்பிரச்சாரம் எடுபடவில்லை என்றதும் பித்து தலைக்கேறி விட்டது. 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடம் ஏன் அஞ்சுகிறது காவி?

ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் அதன் அரசியல் முகமான பாஜகவும் செய்கிற அட்டூழியங்களை உறுதியாக அம்பலப்படுத்தி வருகிற ஒரே இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

மோடி ஆட்சியின் முழுமையான தோல்வியை தோலுரித்து வருகிற ஒரே கட்சி சி.பி.ஐ(எம்).

பாஜக விற்கு எதிரான மற்ற முதலாளித்துவக் கட்சிகளை சமரசம் மூலமாகவோ அல்லது வழக்கு பதிவு எனும் மிரட்டல் மூலமாகவோ மௌனமாக்க முடிகிற பாஜகவால் நெருங்க முடியாத  நெருப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

அதனால்தான் சிவப்பைக் கண்டு அஞ்சுகிறது காவி.
வன்முறை மூலமாவது அவர்களை அடக்க முடியுமா என்று முயல்கிறது.
அந்த முயற்சி காவியின் பயத்தை, நடுக்கத்தைத்தான் காண்பிக்கிறது.
அந்த பயம் எனக்கு பிடிக்கிறது. 
 

புரிஞ்சுக்கோ . . தெரிஞ்சுக்கோ




புரிஞ்சுக்கோ . . தெரிஞ்சுக்கோ
தமிழா நீ புரிஞ்சுக்கோ
 
பிழைப்புக்காக மதவெறியைத்
தூண்டி கலவரம் செய்யறவன்
மனிதனா? மனிதனா?

புரிஞ்சுக்கோ . . தெரிஞ்சுக்கோ
தமிழா நீ புரிஞ்சுக்கோ

கலவரம் செஞ்சுக்கிட்டே
அண்டா பிரியாணியை
திருடிக்கிட்டு போறவன்
மனிதனா? மனிதனா?
 
புரிஞ்சுக்கோ . . தெரிஞ்சுக்கோ
தமிழா நீ புரிஞ்சுக்கோ

கேன்ஸர் வந்தா கூட
கோமியத்தை குடிக்கச்
சொல்லி உனக்கு  மட்டும்
சொல்லி விட்டு
தொண்டை வலிக்காக
ஹாஸ்பிடல் போறவரு
மனிதனா? மனிதனா?
 
புரிஞ்சுக்கோ . . தெரிஞ்சுக்கோ
தமிழா நீ புரிஞ்சுக்கோ

உன்னை மட்டும் உசுப்பேத்தி
தான் ஜாக்கிரதையா
பதுங்கிக் கொள்ளும்
ஆட்கள் எல்லாம்
மனிதனா? மனிதனா?

 
புரிஞ்சுக்கோ . . தெரிஞ்சுக்கோ
தமிழா நீ புரிஞ்சுக்கோ

வாயைத் திறந்தா
பொய் மட்டும் பேசறவங்க
மனிதனா? மனிதனா?
 
புரிஞ்சுக்கோ . . தெரிஞ்சுக்கோ
தமிழா நீ புரிஞ்சுக்கோ

பின் குறிப்பு 1 : புரிஞ்சுக்கோ, தெரிஞ்சுக்கோ என்று ஓர் இசைக்காவியம்   படைத்த இந்து மக்கள் கட்சியின் அர்ஜூன் சம்பத்திற்கு இப்பாடல்   சமர்ப்பணம்.

பின் குறிப்பு 2 : இந்த இசை அமுதத்தை பருக இந்த இணைப்பை க்ளிக்  
செய்யுங்கள்.

பின் குறிப்பு : இந்த இசைப் பொக்கிஷத்தை கண்டறிந்து உலகின் கவனத்துக்குக் கொண்டு வந்து நமக்கெல்லாம் ஈடு இணையற்ற சுகானுபவத்தை அளித்த வழக்கறிஞர் தோழர் பிரதாபன் ஜெயராமன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. நீங்களும் அவசியம் சொல்லி விடுங்கள். 



 

 
 

Monday, October 30, 2017

பென்சில் முனையில் . . .

வாட்ஸப்பில் வந்த படம் இது.

பென்சில் முனையில் கலை.

இதை செய்த கலைஞன் யார் என்று தெரியவில்லை. யாராக இருந்தாலும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

 

பணம் வந்தாலும் பயனில்லை




வங்கிகளை சீரமைப்பதற்காக அவைகளின் மூலதனத்தை அதிகரிக்க இரண்டு லட்சம் கோடி ரூபாய் வரை நிதி அளிக்கப் போவதாக நிதியமைச்சர் அருண் ஜெய்ட்லி சொல்லியுள்ளார். 

இது தொடர்பாக அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பத்திரிக்கைச் செய்தியை முன்னர் பகிர்ந்திருந்தேன், அதன் பின்னணியில் இங்கே சில கருத்துக்களை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.

இந்த வருட பட்ஜெட்டில் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள அரசுகளின் பங்குகளை 72,000 கோடி அளவில் விற்கப் போவதாக அறிவித்து அந்த வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள்.

மூலதனத்தை  அதிகரிக்க வேண்டிய அவசியமே இல்லாத அளவிற்கு லாபகரமாக செயல்படுகிற, லாபத்தின் பங்காக சில ஆயிரம் கோடி ரூபாய்களை ஒவ்வொரு ஆண்டும் அரசுக்குத் தருகிற பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பங்குகளையும் பட்ஜெட்டில் சொல்லியபடி விற்கத் தொடங்கியுள்ளனர்.

என்.எல்.சி நிறுவனத்தின் ஐந்து சதவிகித பங்குகளை விற்று ரூபாய் 750 கோடி ரூபாய் திரட்டப் போகிறார்களாம். 

அப்படி தன் கைவசம் உள்ள பங்குகளை இதர நிறுவனங்களில் மத்தியரசு விற்று வருகையில் வங்கிகளுக்கு மட்டும் மூலதனத்தை அதிகரிக்க நிதி தருவது என்பது முரண்பாடாக தெரிகிறதல்லவா? இந்த நிதி ஒன்றும் மத்தியரசின் கஜானாவிலிருந்து வரப்போவதில்லை. பின் எங்கே என்பது பற்றி பிறகு பார்ப்போம். 

கூடுதல் மூலதனம் வரப்போவது வங்கிகளுடைய பிரச்சினைகளை தீர்க்க உதவுமா என்பதை மட்டும் இப்போது பார்ப்போம்.

வங்கிகளுடைய முக்கியமான பணி என்பது கடன் கொடுப்பதுதான். அதற்கு இப்போது அவர்கள்வசம் நிதி போதுமானதாக இல்லை என்பதுதான் யதார்த்தம்.

அப்படிப்பட்ட நிலை ஏன் உருவானது?

வாராக்கடன் மற்றும் வாராக்கடனை தள்ளுபடி செய்ய ஒதுக்கி வைக்கும் நிதி. 

வசூலிக்க முடியாத வாராக்கடனாக 2011 ல் 74,664 கோடி ரூபாயாக இருந்தவை இப்போது எட்டு லட்சம் கோடி ரூபாயாக மாறி விட்டது. மத்தியரசு சொல்வது போல  வேறு பல கடன்களை மாற்றி அமைத்தால் வாராக்கடன் தொகை பதினைந்து லட்சம் கோடி ரூபாயாக மாறி விடும். 

கடந்த நிதியாண்டில் வங்கிகளின் லாபம் ரூபாய் 1,58,982 கோடி ரூபாய். 

அதிலே வாராக்கடனுக்காக ஒதுக்கி வைக்கப்பட்ட தொகை 1,70,370 கோடி ரூபாய். 

ஆக நஷ்டம் 11,388 கோடி ரூபாய்.

வங்கிகளின் ஒட்டு மொத்த லாபத்தையும் வாராக்கடன் முழுங்கி விட்டது. எனவே அவர்களது மூலதனம் அரிக்கப்பட்டு விட்டது. 

இந்த சூழலில்தான் கூடுதல் மூலதனம் அளிக்கப்படுகிறது. இது எங்கே செல்லும்? மீண்டும் பெரு நிறுவனங்களுக்கு கடனாக செல்லும். ஒரு காலகட்டத்திற்குப் பிறகு இத்தொகையும் வாராக்கடனாக மாறும். ஏனென்றால் வங்கிக்கடனை திருப்பி செலுத்தாவிட்டால் அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும். 

பனிரெண்டு நிறுவனங்கள் மட்டுமே வைத்திருக்கிற வாராக்கடன் ரூபாய் 2,53,729 கோடி ரூபாய். முந்தைய பதிவில் இந்த விபரம் உள்ளது. இருப்பினும் மீண்டும் பகிர்கிறேன்.


ஆனால் வாராக்கடனை வசூலிக்க எந்த நடவடிக்கையும் எடுக்க மத்தியரசு தயாராக இல்லை. ஏன் வாராக்கடன் பட்டியலை வெளியிடக் கூட அவர்கள் தயாராக இல்லை. 

வங்கிகளை சீரமைக்க வங்கி ஊழியர் அமைப்புக்கள் அரசிடம் கோருவது எளிதான நடவடிக்கைகள்தான். அரசு கஜானாவிலிருந்து பத்து பைசா கூட தேவையில்லை.

1) கடனை திருப்பி செலுத்தாதவர்கள் பட்டியலை வெளியிடு

2) கடனை திருப்பிச் செலுத்தாதவர்கள் எந்த தேர்தலிலும் போட்டியிடுவதை, அரசுப்பதவிகளுக்கு வருவதை தடை செய்.

3) சொத்துக்களை பறிமுதல் செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடு.

4) கடனை திருப்பி செலுத்தாததை கிரிமினல் குற்றமாக அறிவித்து அதற்கேற்ற நடவடிக்கை எடு.

5) கடன் வழங்கியவர்கள் யாரோ அவர்களை அதற்கு பொறுப்பாக்கு

கொடுத்த கடனை வசூலிக்காமல் எத்தனை லட்சம் கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்தாலும் அதனால் வங்கிகளுக்கோ, நாட்டிற்கோ, சாமானிய மக்களுக்கோ எந்த பயனும் இல்லை.

ஜெய்ட்லி அறிவிப்பில் இன்னும் சில வில்லங்கங்களும் உண்டு. அவற்றைப் பற்றி பின்னர் பார்ப்போம்.




மேலாண்மை மறைந்தார்



எளிய மக்களின் பிரச்சினைகளை எளிமையான, அதே நேரம் வலிமையான வார்த்தைகளில் வடித்தெடுத்த சாகித்ய அகாடமி விருது பெற்ற அற்புதமான எழுத்தாளர் தோழர் மேலாண்மை பொன்னுசாமி அவர்கள் மறைந்தார் என்பதை வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு  நாகப்பட்டினத்தில் நடைபெற்றபோது  அவரைப் பார்த்ததும் அம்மாநாட்டில் அவர் கௌரவிக்கப்பட்டதும் நினைவுக்கு வருகிறது.

செவ்வணக்கம் தோழர் மேலாண்மை பொன்னுசாமி.


Sunday, October 29, 2017

இன்னும் ஒரு பத்து பாட்டு






நேற்று ஜானகியம்மாவின் பதினோரு பாடல்களின் இணைப்பை பகிர்ந்து கொண்டேன்.

இன்னும் ஒரு பத்து பாடல்களை பகிர்ந்து கொள்ளலாமே, ஏன் இந்த கஞ்சத்தனம் என்று தோன்றியதால் இன்னும்  ஒரு பத்து பாட்டு இன்று.














ஆஹா, கணக்கு தப்பாயிடுச்சு போல இருக்கே, பத்து பாட்டுக்கு மேலயே இருக்கே.

சரி அதனால் என்ன?

இசையில் மூழ்கும்போது கணக்கு பார்க்க முடியுமா என்ன?

பின் குறிப்பு : மேலே உள்ள படங்கள் நேற்றைய  மைசூர் நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டவை

 



 

 

Saturday, October 28, 2017

இனி ஜானகியம்மாவின் புதிய பாடல்கள் இல்லாவிட்டாலும் . . .




இந்தியாவின் இசைக்குயில்களில் முக்கியமானவரான திருமதி எஸ்.ஜானகி அவர்கள் இன்று மைசூரில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியோடு இசையுலகிலிருந்து ஓய்வு பெறப் போகிறார் என்று ஒரு செய்தி படித்தேன்.

இனி அவரது புதிய பாடல்கள் இல்லாவிட்டால் என்ன?

ஏற்கனவே அவர் பாடிய ஆயிரக்கணக்கான பாடல்கள் நமக்கு இசை என்ற இன்ப வெள்ளத்தில் மூழ்க வைத்துக் கொண்டுதானே இருக்கும்.

அவரது பாடல்களில் என்னைக் கவர்ந்த பல பாடல்களில் ஒரு பத்து பாடல்கள்  இங்கே.

சிங்கார வேலனே தேவா, செந்தூரப் பூவே, காற்றுக்கென்ன வேலி, மச்சானை பாத்தீங்களா என்ற எப்போதும் மனதில் நிற்கும் பாடல்களை தவிர்த்துள்ளேன். 

இப்போது பாடல்களை பார்த்தும் கேட்டும் ரசியுங்கள்











இறுதியாக போனஸாக

ஆம். ஜானகியம்மாவின் பாடல்களை கேட்டால் மட்டுமல்ல


 

வந்திருப்பது தலைவலி அல்ல . . .கேன்ஸர் . . .

வங்கிகளுடைய மூலதனத்தை அதிகரிப்பது தொடர்பான மோடி அரசின் முடிவு வங்கிகளுடைய பிரச்சினைகளை தீர்க்க எந்த விதத்திலும் உதவாது என்று அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் தனது பத்திரிக்கை அறிக்கை மூலம் தெளிவு படுத்தியுள்ளது.

அதனை தமிழாக்கம் செய்து விரைவில் பகிர்கிறேன்.

அதற்கு முன்பாக அதன் ஆங்கில வடிவத்தை படியுங்கள்


 

Friday, October 27, 2017

அன்று வெள்ளி. . .இன்று தங்கம் . . .

சில மாதங்களுக்கு முன்பு

 பார்க்கத்தான் ... சாப்பிட அல்ல . . .   

என்று ஒரு பதிவு போட்டிருந்தேன். அந்த பதிவில் இருந்த படங்கள் எல்லாம்   வெள்ளியில் செய்யப்பட்ட தின்பண்டங்கள்.

இப்போது வாட்ஸப்பில் ஒரு படம் வந்தது. கீழே கொடுத்துள்ளேன். 

இவையும் தின்பண்டங்கள்தான். ஆனால் தங்கத்தில் செய்யப்பட்டவை.



நுணுக்கமாக இவற்றை தயாரித்த அந்த கலைஞனை பாராட்டுகிறேன்.

Thursday, October 26, 2017

அவர் புகைப்படம் இங்கே . . .



ஏழு ரூபாய் டாக்டர் இங்கேயும் கூட      (இணைப்பின் மூலம் செல்லவும்)


என்ற நேற்றைய பதிவில் வேலூரில் குழந்தைகள் நல நிபுணராக திகழ்ந்த  டாக்டர் பிரகாசம் அவர்கள் பற்றிய என் அனுபவத்தை பகிர்ந்து கொண்டு அவரது புகைப்படம் இணையத்தில் கிடைக்கவில்லை என்றும் எழுதியிருந்தேன். 

முத்து என்ற ஒரு நண்பர் அவரது புகைப்படத்தை மின்னஞ்சல் மூலம் அனுப்பியிருந்தார். 

அந்த மின்னஞ்சலில் அவர் எழுதியிருந்ததை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.  

Read your message on Dr. Praskam...Thanks for sharing your experiences of the great man.

your search for Dr.'s picture if it has not yielded any lookout for his son normally puts up obituaries in tamizh newspapers in the month of August for his parents together.


Best Regards
Muthu

அது  மட்டுமல்லாது மருத்துவர் பிரகாசம் அவர்களின் மகனும் பின்னூட்டம் இட்டிருந்தார். 

Thanks for your acknowledgement sir...I'm really proud of my father..

உண்மையிலேயே மனதிற்கு மிகவும் நிறைவாக இருந்தது. 

முந்தைய பதிவிலேயே அவர் புகைப்படத்தை இணைத்திருந்தாலும் கூட தனியாக இன்னொரு முறையும் பதிவு செய்ய வேண்டும் என்ற உணர்வை ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல் அதிகாரி தோழர் மரியா சிவானந்தம் அவர்கள் முகநூலில் இட்டிருந்த பின்னூட்டம் உருவாக்கியது.

 Yes . He has been an epitome of sincere medical service to the people of Vellore. Recalling with gratitude .


ஆம். உண்மையாக சேவை செய்தவர்களை மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள். 

வேலூர் மக்களின் கனிவான கவனத்திற்கு . . .

தமிழ்நாடு தீண்டாமை முன்னணி போல பல மாநிலங்களில் செயல்படுகிற அமைப்புக்களை  ஒருங்கிணைத்து "ஒடுக்கப்பட்டோர் விடுதலை முன்னணி"  (DALITH SOSHAN MUKTHI MANCH)  அமைக்கப் பட்டது.

அந்த அமைப்பின் அகில இந்திய மாநாடு வரும் 4 நவம்பர் 2017 முதல் 6 நவம்பர் 2017 வரை மதுரையில் நடைபெறவுள்ளது. ஆறாம் தேதி மாலை பேரணியும் பொதுக்கூட்டமும் நடைபெறவுள்ளது. பொதுக்கூட்டத்தில் கேரள முதல்வர் தோழர் பினராயி விஜயன்  உரையாற்றவுள்ளார்.

இம்மாநாட்டை ஒட்டி எங்கள் வேலூர் கோட்டச்சங்கத்தின் சார்பில் இன்று வேலூரில் "சமூக நீதி பாதுகாப்பு மாநாடு" நடத்துகிறோம். எங்கள் தென் மண்டல துணைத்தலைவர் தோழர் கே.சுவாமிநாதன் சிறப்புரை ஆற்றவுள்ளார்.

மாலை 5.30 மணிக்கு எங்கள் சங்க அலுவலகம் சரோஜ் இல்லத்தில் நடைபெறவுள்ளது. ஆற்காடு சாலை கிரவுன் தியேட்டருக்கு பின்னே உள்ள நாகாலம்மன் கோயில் தெருவில் சரோஜ் இல்லம் உள்ளது.

வேலூர் மற்றும் அருகாமையில் உள்ளவர்களை இந்நிகழ்வுக்கு வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்



Wednesday, October 25, 2017

ஏழு ரூபாய் டாக்டர் இங்கேயும் கூட . . .





1993 அக்டோபரில் என் மகன்  கும்பகோணத்தில் பிறந்தான். 1994 ஜனவரியில் அவனை  வேலூருக்கு அழைத்து வந்தோம். அதன் பின்பு அவனுக்கு உடல் நலத்தில் ஏதாவது பிரச்சினை என்றால் வேலூர் தென்னமரத் தெருவில் இருந்த டாக்டர் பிரகாசம் என்ற குழந்தைகள் நல நிபுணரிடம்தான் அழைத்துச் செல்வோம்.

சின்ன இடத்தில்தான் அவரது கிளினிக் இருந்தது. மருத்துவர் பார்வையிட ஒரு அறை. அதற்கு முன்பாக நோயாளிகள் அமர ஒரு அறை அவ்வளவுதான். அதிகபட்சமாக ஒரு இருபது பேர் உட்காரலாம். எப்போதுமே கூட்டம் அலைமோதும். முன் கூட்டியே சென்று டோக்கன் வாங்கிக் கொள்ள வேண்டும்.

குழந்தைகளை பரிசோதனை செய்து விட்டு அவரே மூன்று வேளைக்கான மாத்திரைகளை அவரே கொடுத்து விடுவார். ஐந்து ரூபாய் மட்டுமே வாங்கிக் கொள்வார். அவசியமேற்பட்டால் மட்டுமே ஊசி போடுவார். அதற்காக கூடுதல் பணமும் வாங்க மாட்டார்.

நாம் சொல்வதை முழுதாகக் கேட்பார். ஆனால் அவர் அதிகம் பேச மாட்டார்.  வெள்ளை சட்டை, வெள்ளை பேண்டோடுதான் எப்போதும் பார்த்திருக்கிறேன். வேலூரைப் பொறுத்தவரை குழந்தைகள் நிபுணர் என்றால் அவர்தான். தனியாக மருத்துவமனை எதுவும் அவர் நடத்தவில்லை. குழந்தைகளின் நிலைமை மோசமாவது போல தோன்றினால் சி.எம்.சி மருத்துவமனைக்குப் போகச் சொல்லி விடுவார்.

நீண்ட நாட்கள் வரை ஐந்து ரூபாய் மட்டுமே வாங்கிக் கொண்டிருந்தார். 1995 மத்தியில் ஏழு ரூபாய் வாங்கத் தொடங்கி இருந்தார்.

ஆனால் அது நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.

ஆம்.

வேலூர் கோட்டையில் அடைக்கப்பட்டிருந்த விடுதலைப்புலிகள் ஒரு சுரங்கம் தோண்டி தப்பித்தார்கள் என்ற செய்தி நினைவுக்கு வருகிறதா?

அந்த நாள் 15.08.1995. அன்று இரவு வேலூர் முழுதும் மின் வெட்டு. இரவு பத்து மணி அளவில் போன மின்சாரம் மறு நாள் காலை ஏழு மணி அளவில்தான் வந்தது.

மின்சாரம் போன நிலையில் அவர் கையில் மெழுகுவர்த்தி வைத்துக் கொண்டு போர்ட்டபிள் ஜெனரேட்டரை இயக்கியுள்ளார். டீசல் அவர் மீது தெறித்து விழுந்து தீ பற்றிக் கொள்ள அந்த விபத்தில் அவர் காலமானார்.

வருடங்கள் பல உருண்டோடினாலும் அவரது சேவை மனப்பான்மை இன்னும் அவரை நினைக்க வைக்கிறது.

மருத்துவர்கள் நினைத்தால் எளிய கட்டணத்தில் சேவை செய்ய முடியும் என்பதற்கு அவர் ஒரு உதாரணம்.

பின் குறிப்பு : இணையத்தில் எவ்வளவோ தேடியும் அவரது புகைப்படம் கிடைக்கவில்லை. ஆனால் என்ன, என் மனதில் அவர் படம் பதிந்துள்ளது. 

பின் குறிப்பு 2


இந்த பதிவைப் பார்த்து ஒரு நண்பர் பின்னூட்டமிட்டது அல்லாமல் மருத்துவர் பிரகாசம் அவர்களின் புகைப்படத்தையும் அனுப்பி இருந்தார். அப்படத்தை மேலே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அவரது மகன் வேறு ஒரு பதிவில் பின்னூட்டமிட்டிருந்தார். அதனை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

 

அந்த பத்து லட்சம் - கேஷா? டிஜிட்டலா மோடி?




பாஜக கட்சியில் சேர ஒரு கோடி ரூபாய் அளிப்பதாகவும் பத்து லட்ச ரூபாய் முன்பணம் அளித்ததாகவும் குற்றம் சுமத்தி படேல் சமுதாய தலைவர் நரேந்திர படேல் என்பவர் பாஜகவில் சேர்ந்து வெளியேறி உள்ளார்.

காது வரை கிழியும் வாய் கொண்ட பாஜககாரர்கள் யாரும் இந்த குற்றச்சாட்டை மறுக்கவில்லை.

எனக்கு ஒரு சின்ன சந்தேகம்.

அந்த பத்து லட்ச ரூபாய் முன்பணத்தை நரேந்திர மோடியின் ஆட்கள் நரேந்திர படேலுக்கு எப்படி கொடுத்திருப்பார்கள்?

ரொக்கமாகவா?

அல்லது

ஏதேனும் டிஜிட்டல் வடிவிலா?

என்ன இருந்தாலும் பாஜககாரர்கள் கொள்கைக் குன்றுகள் அல்லவா, அதனால் டிஜிட்டல் வடிவில்தான் பணத்தை மாற்றி இருப்பார்கள் என்று நம்புகிறேன்.

 

Tuesday, October 24, 2017

பயமா மோடி?



குஜராத் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தலை அறிவிக்க தேர்தல் ஆணையம் மறுக்கிறது.

ஆளும் கட்சியிடமிருந்து ஆதாயம் பெற்றவர்தான் தலைமை தேர்தல் ஆணையர் என்ற குற்றச்சாட்டு வருகிறது. 

முன்னொரு நாள் வேறு ஒரு தலைமை தேர்தல் ஆணையரை மதத்தைச் சொல்லி இழிவுபடுத்திய மோடி, தேர்தல் ஆணையரை விமர்சிக்க யாருக்கும் உரிமை கிடையாது என்று பதறுகிறார்.  

மிகப் பெரிய அளவில் சர்ச்சைகள் வந்த பின்னும் எதன் மீதோ மழை பெய்தது போல தேர்தல் ஆணையம் மௌனம் காக்கிறது. 

வெளிநாடுகளுக்குப் போகும் அதே வேகத்தோடு மோடி குஜராத்திற்கும் போய்க் கொண்டே இருக்கிறார். வழக்கம் போல வாக்குறுதிகளை அள்ளி வீசிக் கொண்டே இருக்கிறார்.

இப்போது வெடித்துள்ள புது அணுகுண்டு - பட்டேல் ஜாதி அமைப்பின் தலைவர்களை இழுக்க ஒருவருக்கு ஒரு கோடி ரூபாய் என்ற பேக்கேஜ் டீல்.

குஜராத்தில் தோற்று விடுவோம் என்று பயம் வந்து விட்டதா மோடி?

அதனால்தான் இத்தனை வேலைகளா?

 

Monday, October 23, 2017

கொடியவர்களைத் தீண்டாதா தீ?




நெல்லை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடந்த கொடிய சம்பவம் மனதை வாட்டுகிறது. அந்த புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளும் மன வலிமை எனக்கில்லை.

இந்த துயரத்திற்கு யார் பொறுப்பு?

வாங்கிய கடனைப் போல இரு மடங்கு வட்டியாக அளித்த பின்பும் அசலை திருப்பிக் கொடு என்று மிரட்டப்பட்ட அந்த குடும்பத்தலைவன் காவல்துறையை நாடிய பின்பும் அலட்சியம் காண்பித்த அல்லது கந்து வட்டிக் கும்பலுக்கு துணையாக நின்ற காவல்துறை அதிகாரிகளைத் தவிர இந்த துர் மரணங்களுக்கு வேறு யாரை காரணமாகச் சொல்ல முடியும்?

கந்து வட்டிக் கொடுமைகள் என்பது தமிழகம் முழுதும் நடந்து கொண்டிருக்கிறது.  இசக்கி முத்து குடும்பம் என்பது முதல் பலி அல்ல. கந்துவட்டி வாங்கி விட்டு அதை திருப்பித் தர முடியாமல் அக்குடும்பத்துப் பெண்ணை கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தலும் புகைப்படம் எடுத்தும் மிரட்டியது ஒரு கும்பல். அக்கும்பலுக்கு எதிராக போராடியதால் வெட்டிக் கொல்லப்பட்ட பள்ளிப்பாளையம் தோழர் வேலுச்சாமியை மார்க்சிஸ்டுகள் மறக்க மாட்டார்கள்.

இன்று துயரம் நடந்திருக்கிற அதே நெல்லையில் கந்து வட்டிக் கும்பலுக்கு எதிராக புகார் கொடுத்த காரணத்தால் நெல்லை மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத்தலைவர் தோழர் கோபி கொல்லப்பட்டார். ஆனால் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை கீழேயுள்ள பத்திரிக்கைச் செய்தி உணர்த்தும்.



இந்த சம்பவத்திற்கும் பிறகும் காவல்துறை மெத்தனமாக இருந்ததன் விளைவே இன்று நான்கு உயிர்கள் மடிய காரணமாகி விட்டது.

இதை வெறும் காவல்துறையின் மெத்தனம் என்று மட்டும் சுருக்கி விட முடியாது.

கந்துவட்டித் தொழில் நடத்துபவர்கள் யாரென்று பார்த்தால் பெரும்பாலும் அரசியல் பின்புலம் உள்ளவர்கள்தான் அல்லது ஜாதிய அமைப்புக்களை நடத்துபவர்கள் அல்லது அதிலே ஆதிக்கம் செலுத்துபவர்கள்.  பல அரசியல் முதலைகளும் தங்களிடம் உள்ள திருட்டுப் பணத்தை மேலும் பெருக்க இந்த கந்து வட்டி பேர்வழிகளிடம்தான் அளிக்கிறார்கள். இவர்களுக்கும் காவல்துறைக்கும் உள்ள நெருக்கம் இயல்பானது. 

அதனால்தான் பாதிக்கப்படுபவர்கள் புகார் கொடுத்தால் அதை உதாசீனம் செய்வார்கள். ஏன் உன் மீது இவர் புகார் கொடுத்துள்ளார் என்று காட்டியும் கொடுப்பார்கள். காவல்துறையின் ஆசி இருக்கிற போது கந்து வட்டிப் பேர்வழிகள் எந்த அராஜகத்தையும் செய்ய தயங்க மாட்டார்கள்.

இப்போது நெல்லை சம்பவம் மூலம் கந்துவட்டிப் பிரச்சினை மக்கள் கவனத்தைப் பெற்றுள்ளது. நால்வர் உயிரிழப்பிற்குக் காரணமான கந்து வட்டி ஆசாமியை கைது செய்தால் மட்டும் போதாது. இசக்கிமுத்து குடும்பத்தினர் கொடுத்த புகாரை அலட்சியம் செய்த காவல்துறை அதிகாரிகள் அனைவரையும் சேர்த்தே கைது செய்ய வேண்டும். அப்போதாவது காவல்துறை பொறுப்பாக நடக்கிறதா என்று பார்ப்போம்.

குடிசைகளில் பரவுகிற தீ,
வெண்மணியில் எரிந்த தீ,
எளியவர்களை கொளுத்துகின்ற தீ
என்றுதான் கொடியவர்களை தீண்டுமோ?
வர்க்க பேதம் பார்த்து 
தயங்குகிறதோ சுட்டெரிக்கும் தீ?