இந்தியாவின் பல விளையாட்டு அமைப்புக்களை
முறைப்படுத்துவதற்கான ஒரு மசோதா விளையாட்டுத்துறை
அமைச்சர் அஜய் மக்கானால் முன்வைக்கப்பட்டு மத்திய
அமைச்சரவையால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் வாரியம், ஹாக்கி அமைப்பு, ஒலிம்பிக் சங்கம்
உட்பட எத்தனையோ விளையாட்டு அமைப்புக்கள்
இருந்தபோதும் அவை அனைத்தும் ஊழல்களாலும்
நிர்வாக சீர்கேடுகளாலும் அதிகார துஷ்பிரயோகங்களாலும்
நாசமாய் போய் விட்டன.
விளையாட்டுக்களை, விளையாட்டு வீரர்களை
ஊக்குவிப்பதைத்தவிர மற்ற அனைத்தையும் மட்டுமே
இந்த அமைப்புக்கள் செய்து வருகின்றன.
இவற்றை முறைப்படுத்துவது, முறையாக தேர்தல்
நடத்துவது, தலைவர்களின் வயது வரம்பை எழுபது
என நிர்ணயிப்பது போன்ற பல்வேறு அம்சங்களை
உள்ளடக்கிய மசோதாவை விளையாட்டுத்துறை
அமைச்சகம் தயார் செய்ய அது அமைச்சரவையிலேயே
நிராகரிக்கப்பட்டுவிட்டது.
மசோதாவை அறிமுகம் செய்த உடனேயே பழம்
தின்று கொட்டை போட்ட அமைச்சர்கள் பொங்கி
எழுந்து விட்டனர். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்
தலைவர் சரத் பவார், கால்பந்து சங்க தலைவர்
பிரபுல் படேல், காஷ்மீர் கிரிக்கெட் சங்க தலைவர்
பரூக் அப்துல்லா, இவர்களோடு காங்கிரஸ் கட்சி
அமைச்சர்கள் சி.பி.ஜோஷியும் கமல்நாத்தும்
கடுமையாக எதிர்க்க மசோதா நிராகரிக்கப்பட்டு
விட்டது.
அனைத்து விளையாட்டு அமைப்புக்களையும்
இன்று கட்டுப்படுத்துவது அரசியல்வாதிகள்தான்.
அவற்றை முறைப்படுத்துவது என்பது அவர்களின்
ஆதாயத்தை வெட்டுவது தான்.
எனவேதான் அவர்கள்
எலேய், எங்களோடயே விளையாடறியா? என்று அமைச்சரவைக்கு ஆட்டம் காண்பித்து
விட்டார்கள்.
ஒன்று மட்டும் நிச்சயம் சொல்ல முடியும்.
இந்தியாவில் விளையாட்டு
இனி மெல்லச் சாகும்....