Monday, May 11, 2026

கோஷ்டிச்சண்டை நல்லது ராகுல்

 


என்ன ராகுல் காந்தி, எங்கே இருக்கிறீர்கள்?

நேற்று சென்னையில் உங்கள் புதிய கூட்டாளி ஜோசப் விஜய்யின் பதவியேற்பு விழாவிற்கு வந்தீர்கள். ஒவ்வொரு அமைச்சரும் பதவியேற்ற பின் விஜய்யை பார்க்க வந்த போது நீங்கள் எழுந்து நின்றீர்கள். ஆனால் யாருமே உங்களை கண்டு கொள்ளவில்லை.

முழுமையான பெரும்பான்மை பெறாத விஜய் கூட முதலமைச்சராக பதவி ஏற்று விட்டார். ஆனால் பெரும்பான்மையை விட அதிகமான இடங்கள் பெற்றும் உங்களால் இன்னும் கேரள முதல்வர் யார் என்பதை முடிவு செய்ய முடியவில்லை.

மூன்று கொள்ளிகளில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி என்று உங்களால் இன்னும் முடிவு செய்ய முடியவில்லை.

எந்த கொள்ளி கேரளா சி.எம்?

நான்காவதாக புரியாத ஆங்கிலம் பேசும் சசி தாரூரையும் கணக்கில் எடுங்களேன். இரண்டாவது மனைவி சுனந்தா மர்மமாக இறந்த வழக்கில் இருந்து விடுபட, சசி தாரூர்தான் தன் அம்மாவை கொலை செய்ததாக சுனந்தாவின் முதல் கணவர் மூலம் பிறந்த மகனின் குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்க மோடி புகழ் பாடிய, உங்களுக்கும் உங்கள் கட்சித்தலைவர் என்ற பதவியில் மட்டும் இருக்கும் மல்லிகார்ஜுன் கார்கேவிற்கும் அழைப்பு இல்லாத போதும் மோடி வைத்த விருந்தில் கலந்து கொண்ட சசி தாரூரும் முதலமைச்சர் பதவிக்கு தகுதியானவர்தானே!

எப்படியானாலும் உங்கள் கட்சியில் நடைபெறும் கோஷ்டி மோதல், குடுமி பிடி சண்டை மிகவும் நல்லது. பத்தாண்டுகள் நல்லாட்சி புரிந்த தோழர் பினராயி விஜயன் அவர்களின் தலைமையிலான இடது முன்னணி ஆட்சியை தோற்கடித்த கேரள மக்களுக்கும் நல்லது.

அமரேந்திர பாகுபலியை கொலை செய்தது மிகப் பெரிய தவறு என்று கட்டப்பா, சிவகாமி தேவியிடம் சொன்னது போல  கேரள மக்களும் இடது முன்னணியை தோற்கடித்தது தவறு என்று தங்கள் மனசாட்சியிடம் சொல்வார்கள்.

மகேந்திர பாகுபலி மகிழ்மதி அரியணையில் அமர்ந்தது போல, இந்த பின்னடைவிற்குப் பிறகு மீண்டும் இடது முன்னணி கேரளத்தை வெல்லும். அதற்கு உங்கள் கட்சியின் இன்றைய, நாளைய, எதிர்கால கோஷ்டி மோதலும் ஒரு காரணமாக இருக்கும்.

அதனால் உங்கள் கட்சியின் கோஷ்டி மோதல் நல்லது, கேரளத்திற்கு, கேரள மக்களுக்கு . . .

2 comments:

  1. முன்பெல்லாம் ஒரு டிட்டர்ஜென்ட் கம்பெனி விளம்பரத்தில் *கறை* நல்லது என்று வரும் அதுபோல *கோஷ்டி மோதல் நல்லது* என்கிறீர்களா தோழர்😃

    ReplyDelete
    Replies
    1. இந்த தலைப்பையே அந்த விளம்பரத்தின் தாக்கத்தால்தான் வைத்தேன்

      Delete