நேற்றைய பதிவில் இந்திரா காந்தி முன்னிலையில் தோழர் சீத்தாராம் யெச்சூரி ஒரு அறிக்கையை படிக்கும் புகைப்படத்தை பகிர்ந்து கொண்டிருந்தேன்.
அந்த சம்பவம் என்ன?
தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்களின் வார்த்தைகளிலேயே விவரிக்கிறேன்.
“இந்திரா அவர்கள் தேர்தலில் தோல்வியுற்ற பின்னும் ஜேஎன்யு வேந்தர் பதவியில் தொடர்ந்தார். அவசர நிலைக் காலம் கொண்டு வந்ததாலும் அப்போது நிகழ்ந்த அநீதிகளாலும் அவர் அந்த பதவியில் தொடரக்கூடாது என நாங்கள் கூறினோம். நான்கு பக்க குற்றப்பத்திரிக்கை ஒன்றை எழுதி அனைத்து மாணவர்களும் வெலிங்டன் க்ரெஸெண்டில் இருந்த அவரது வீட்டிற்குச் சென்றோம். அவசர நிலைக்காலத்தின் போது தலை மறைவாக இருந்த மாணவர்களின் கைது வாரண்டுகளை ஜேஎன்யு விடுதியில் உள்ள அவர்களின் அறைக்கதவுகளில் ஒட்டி விட்டுச் செல்வார்கள். நாங்கள் எங்கள் மனுவை அவர் வீட்டுக் கதவில் ஒட்ட நினைத்தோம்.
நாங்கள் அங்கே சென்ற போது வி.சி.சுக்லா எங்களிடம் என்னவென்று வினவினார். நாங்கள் இந்த மனுவை அவர்களிடம் தர வந்துள்ளோம் என்று சொன்னேன்.அவர் உள்ளே சென்று சிறிது நேரம் கழித்து வெளியே வந்தார். ஐந்து பேர் மட்டும் உள்ளே வரலாம் என்றார். நான் முடியாது என்று மறுத்தேன். அனைத்து மாணவர்களும்தான் வருவோம் என்று சொன்னேன். அவர் மீண்டும் உள்ளே சென்றார், இம்முறை இந்திரா அம்மையாரே கதவுக்கருகில் வந்தார். அனைவரும் ஆச்சர்யப்பட்டனர். என்ன இதெல்லாம் என்று அவர் கேட்டார். நான் ஜேஎன்யு மாணவர் சங்கத்தின் தலைவர், இந்த மனுவை உங்களிடம் அளிக்க வந்துள்ளோம் என்று அவரிடம் சொன்னேன். அங்கே போலீஸ் காவல் எதுவும் இல்லை. நீங்கள் வேந்தர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று சொன்னேன். நீங்கள் அப்பதவியில் தொடர்வது சரியல்ல என்றேன். அவர் அந்த மனுவை வாசிக்குமாறு என்னிடம் சொன்னார். நாங்கள் சற்று தயங்கினோம். ஏனென்றால் அதில் ஏராளமான வசைகள் இருந்தன. நான் படித்தேன். முகத்தில் ஒரு நிரந்தரமான புன்னகையுடன் அவர் அதனை முழுமையாகக் கேட்டார்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவியிலிருந்து இந்திரா காந்தி உடன் விலகி விட்டார்.
நான் முன்பே பகிர்ந்து கொண்டதுதான். ஆனால் ஒவ்வொரு முறை படிக்கும் போதும் மெய் சிலிர்க்கும்.
நிஜ வாழ்வின் உண்மையான கதாநாயகன் இவர்தான்.
இந்த சம்பவம் ஒரு வீர காவியம்.
மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டிய காவியம்.
தோழர் யெச்சூரி போன்ற மிகுந்த ஞானம் கொண்ட தலைவரை இழந்தது இந்தியாவின் துயரம்.
This comment has been removed by a blog administrator.
ReplyDelete