புது டெல்லி நோய்டாவிற்குப் பக்கத்தில் நித்தாரி என்றொரு சின்ன ஊர். உத்தரபிரதேச மாநிலத்தைச்
சேர்ந்தது. நோய்டாவே உத்தரப்பிரதேசம்தான்
பல வருடங்களுக்கு முன்பு அந்த ஊரில் நடந்த
ஒரு சம்பவம் இந்தியாவையே அதிர வைத்தது.
அந்த ஊரில் உள்ள பெண் குழந்தைகள், இளம் பெண்கள் காணாமல் போகத்
தொடங்கினார்கள். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. ஒரு பணக்காரன் வீட்டின் பின்னே இருந்த
கழிவுநீர் வாய்க்காலில் ஒரு எலும்புக் கூடு கிடைக்கிறது. அது காணாமல் போன ஒரு சிறுமியுடையது
என்று தெரிய வருகிறது.
அந்த செல்வந்தன் வீட்டை சோதனை செய்கையில் மேலும்
பல எலும்புக் கூடுகள். அந்த பணக்காரன் மோனிந்தர் சிங் பாந்தர் என்பவனும் அவனது வேலையாள்
சுரேந்தர் கோலி என்பவனும் கைது செய்யப்படுகிறார்கள். வழக்கு சி.பி.ஐ வசம் செல்கிறது.
கொலை, பாலியல் வன் கொடுமை, ஆள் கடத்தல் ஆகியவை
மட்டும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் அல்ல. அதையும் தாண்டி அதிர்ச்சிகரமான ஒன்றும்
உண்டு.
ஆம். அது நர மாமிசம் சாப்பிட்டதான குற்றச்சாட்டு.
கடத்தி கொல்லப்பட்டவர்களின் உடல்களை சமைத்து
சாப்பிட்டிருக்கிறார்கள். இதனை அவர்களே ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.
இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இவர்களின் கருணை
மனுக்கலை பரிசீலிக்க அநியாயமான கால அவகாசம் எடுத்துக் கொண்டதாக சொல்லி உச்ச நீதிமன்றம்
இவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து விடுகிறது.
நேற்று அலகாபாத் உயர் நீதிமன்றம் இவர்கள் இருவரையும்
விடுதலை செய்துள்ளது.
ஏன்?
இவர்கள்தான் குற்றவாளிகள் என்பதை ஐயத்திற்கு
இடமின்றி நிரூபிக்க விசாரணைக்குழு தவறியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியங்களை
பதிவு செய்ய தவறியுள்ளது. குற்றவாளி சுரேந்தர் கோலி சொன்னதை மட்டும் அடிப்படையாகக்
கொண்டு மற்ற சாட்சியங்களை சேகரிக்க தவறி விட்டது. விசாரணைக்குழு படு அலட்சியமாக இந்த
வழக்கை கையாண்டுள்ளது. குற்றவாளிகளை விடுதலை செய்ய விசாரணைக்குழுவின் அலட்சியம்தான்
காரணம்.
மேலே சொன்னதுதான் உயர் நீதிமன்றத் தீர்ப்பின்
சுருக்கம்.
சி.பி.ஐ ஒரு பொறுப்பான அமைப்பு என்று கருதப்படுகிறது.
ஆனால் அதன் செயல்பாடு அதற்கு நேர் மாறாக இருந்துள்ளது.
குற்றவாளிக்கு ஆதரவாக, குற்றவாளியை பாதுகாக்கவே அப்படி அலட்சியமாக செயல்பட்டதா என்று
சந்தேகம் வருகிறது.
பாதிக்கப்பட்டவர்கள் நிலை?
அவர்கள் கிடக்கிறார்கள் கழுதைகள், அவர்கள்
பாதிக்கப்பட்டதோ, அவர்களின் வலியோ எல்லாம் முக்கியமில்லை. அவர்கள் ஒன்றும் இந்த அமைப்பில் செல்வாக்கானவர்கள்
கிடையாதே! குற்றவாளிகள் மூலம் ஆதாயம் கிடைக்க வாய்ப்புண்டு. பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து
என்ன கிடைக்கும்? ஐயா, எனக்கு நீதியே வேண்டாம் என்று வெறுத்து ஒதுங்கி போக வைக்குமளவுதானே
இன்று நீதி பரிபாலணம் மாறி இருக்கிறது.
சாதாரண நடவடிக்கை தாமதமானாலே குற்றவாளிகள்
திமிர்த்தனத்தோடு அலைவார்கள்! இப்படி அலட்சியமாக அவர்களை பாதுகாப்பது போல நடந்து கொண்டால்
இன்னும் மோசமாகத்தான் போவார்கள். குழந்தையை கொன்றவன் பிணையில் வெளி வந்து தன் அம்மாவையே
கொன்றானே, அது போலத்தான் நடக்கும். நாமும் இப்படி கோபத்தை வெளிப்படுத்திக் கொண்டே இருக்க
வேண்டும், அதனால் எந்த பயனும் இல்லை என்று தெரிந்து கொண்டே.
நாட்டையே அதிர வைத்த ஒரு வழக்கில் அலட்சியம்
காண்பித்த அந்த விசாரணை அதிகாரிகள், குற்றவாளிகளை விட கேடு கெட்டவர்கள். மொத்தத்தில்
நீதி என்பதை கேலிக்கூத்தாக மாற்றி விட்டார்கள்.
ஒரே ஒரு விஷயம்தான் ஆறுதல்.
அலகாபாத் நீதிமன்றம் இக்குற்றவாளிகளை பெண்களின்
பாதுகாவலர்கள், குழந்தைகளின் பாதுகாவர்கள் என்றெல்லாம் அடைமொழி கொடுத்து எந்த பதவியும்
கொடுக்கச் சொல்லி பரிந்துரைக்கவில்லை. அப்படிப்பட்ட கேலிக் கூத்துகள் எல்லாம் நடக்கும்
நாடுதானே நம் இந்திய நாடு! சாத்வி பிராக்யா சிங் தாகூர் ஞாபகம் இருக்கிறதல்லவா!