இரண்டு நாட்களாக ஊடகங்களில் அடிப்பட்ட ஒரு செய்தி ஏ.ஆர்.ரஹ்மான் பற்றியது. ஏற்கனவே உருவான சர்ச்சையைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்தாலும் அது ஏனோ கைவரவில்லை. அது அவசியம் எழுதப்பட வேண்டிய விஷயம். இரண்டு மூன்று நாட்களில் எழுதுவேன்.
இப்போதைய சர்ச்சையைப் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
பொன்னியின் செல்வன் 2 படத்தில் இடம் பெற்றுள்ள "வீரா ராஜ வீரா" பாடல் டாகர் சகோதரர்களின் "சிவஸ்துதி" யை காப்பி அடித்த பாடல் என்ற வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு முன்பாக ரஹ்மான் இரண்டு கோடி ரூபாய் வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும் என்பது உச்ச நீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு.
நன்றாக சிக்கிக் கொண்டார் என்று ரஹ்மான் என சங்கிகளும் சரி இளையராஜா வெறியர்களும் சரி தீவிரமாக களமாடிக் கொண்டிருந்தனர். :இஸ்லாமியர் ரஹ்மான் காப்பியடித்தது இந்து மதக் கடவுள் மீதான பாட்டை " என்று சொல்லி வேறு குதூகலித்துக் கொண்டிருந்தார்கள்.
இந்த தகவல் உண்மையா என்பதை நேற்று முழுவதும் செலவழித்து ஆராய்ந்தேன்.
காப்பி அடித்ததாக சொல்லப்பட்ட பாடல் இது
சிவஸ்துதி என்று யூட்யூபில் தேடினால் முதலில் எஸ்.பி.பி பாடிய பாடல் வந்தது. அந்த பாடலுக்கும் பொன்னியின் செல்வன் பாடலுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் கிடையாது.
கொஞ்சம் விரிவாக தேடிய போது கிடைத்த :சிவ ஸ்துதி" கீழே
இதனை கேட்கும் போது ஒரு விஷயம் தெளிவானது.
"வீர ராஜ வீரா" பாடலின் பல்லவியும் இந்த "சீவா சீவ சீவா" பாடலும் ஒன்றுதான். பொன்னியின் செல்வன் பாடலின் தொகையறாவும் சரணமும் வேறு. ஆனால் கண்டிப்பாக பல்லவி இங்கிருந்து எடுக்கப்பட்டதுதான்.
ஆனால் இந்த காணொளியில் குண்டேச்சா சகோதரர்கள் என்று இருந்ததே தவிர டாகர் சகோதரர்கள் என்று இல்லை. அதனால் தேடல் தொடர்ந்தது.
டாகர் சகோதரர்கள் வழங்கிய "சிவ ஸ்துதி" யும் கிடைத்தது.
அது கீழே . . .
யார் இந்த டாகர் சகோதரர்கள் என்று தேடிய போதுதான் சில அற்புதமான விஷயங்கள் தெரிய வந்தது.
யார் இந்த டாகர் சகோதரர்கள்? எந்த ஊர்க்காரர்கள்?
ஹிந்துஸ்தானி இசையில் த்ரூபத் என்ற பாரம்பரிய பாணியை பின்பற்றுபவர்கள் இவர்கள். கிட்டத்தட்ட இருபது தலைமைமுறைகளாக இசைத்து வருபவர்கள். இவர்கள் தனியாக டாகர்வாணி என்ற தனியொரு பாணியை உருவாக்கியவர்கள்.
இந்த நூற்றாண்டில் புகழ்பெற்ற டாகர் சகோதரர்கள் யார் தெரியுமா? அவர்கள்தான் நீங்கள் முதல் காணொளியில் கேட்ட சிவஸ்துதியை பாடிய டாகர் சகோதரர்களின் குருமார்கள். அப்பாக்கள்.
அவர்களின் முழு பெயர் என்ன தெரியுமா?
ஜியா ஃபரிதுதீன் டாகர்
ஜியா மொஹிதுதீன் டாகர்.
இவர்கள்தான் அந்த "சிவஸ்துதி"யை முதலில் உருவாக்கி பாடியவர்கள்.
அவர்களின் வாரிசுகள் பாடிய காணொளிதான் மேலே உள்ளது.
அவர்களின் முழுப் பெயர்கள்
நசிர் ஜாஹிருதுதீன் டாகர்
நசிர் ஃபயாசுதின் டாகர்
இவர்களிடமிருந்து த்ரூபத் இசையை கற்றுக் கொள்ள வந்தவர்கள்தான் குண்டேச்சா சகோதரர்கள்.அவர்களின் முழு பெயர்
ராமகாந்த் குண்டேச்சா மற்றும் உமாந்த் குண்டேச்சா
அவர்களிடமிருந்து டாகர் பரம்பரையைச் சேர்ந்த இளைஞர்கள் இப்போது த்ரூபத் பாணியை கற்றுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் யாரோ ஒருவர் டாகர் வாணி பாணியைப் பற்றி ஏ.ஆர்.ரஹ்மானிடம் சொல்ல, அது "வீரா ராஜ வீரா" பாடலாக உருவாகிவிட்டது.
ஏதோ அற்புதம்னு தலைப்பில் இருக்கே! அது என்ன என்றுதானே கேட்கிறீர்கள்.
இந்துக்களின் கடவுளான சிவனை வணங்குவதற்கான "சிவ ஸ்துதி"யை உருவாக்கி அதனை பல தலைமுறைகளுக்கு எடுத்துச் சென்றவர்கள் இஸ்லாமியர்கள்.
அந்த இஸ்லாமிய டாகர் சகோதரர்களை குருவாக தேடி வந்தவர்கள் இந்துக்களான குண்டேச்சா சகோதரர்கள்.
அவர்களிடம் மீண்டும் பயில வந்தது அதே டாகர் குடும்பத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்கள்.
இது எவ்வளவு அழகாக இருக்கிறது!
இசைக்கு ஜாதி, மதம், இனம். மொழி என எதுவும் கிடையாது என்பதை நிரூபிக்கும் இந்த குரு சிஷ்ய பரம்பரை ஒரு அற்புதமில்லையா? இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு நல்லதொரு உதாரணமில்லையா!
இந்த பன்முகக் கலாச்சாரத்தை யாரும் சிதைக்காமல் பாதுகாப்போம்.
பிகு :அடிப்படையில் இந்த பாடல் "அடாணா" ராகத்தில் அமைந்துள்ளது. அனைவரும் அறிந்த ஒரு அடாணா ராக திரைப்பாடல் கீழே. காபிரைட் சர்ச்சை வராது என்ற நம்பிக்கையில் பதிவு செய்கிறேன், இரண்டு காரணங்கள் இருக்கிறது. இந்த பதிவில் எந்த லாப நோக்கமும் கிடையாது. இந்த பாடலை ஒரிஜினலாக எழுதியவர் காபிரைட் வழக்கு போட இப்போது இல்லை. அவர் தியாகராஜர்.

No comments:
Post a Comment