*நாளொரு கேள்வி (1621): 27.09.2024*
தொடர் எண்: *1621*
இன்று நம்மோடு தீக்கதிர் கட்டுரையாளர் *மதுரை சொக்கன்*
#########################
*பஞ்சாமிர்த அரசியல்*
கேள்வி: திருப்பதி லட்டு விவகாரத்தை தொடர்ந்து பழனி பஞ்சாமிர்தத்திலும் கலப்படம் என்றும், அரசு நிர்வாகத்தின் கீழ் கோயில்கள் இருக்கக் கூடாது என்றும் சங்பரிவார அமைப்புகள் கூக்குரல் இடுவது ஏன்?
*மதுரை சொக்கன்*
ஏ.ஆர்.நிறுவனம் திருப்பதி கோயிலுக்கு தாங்கள் மட்டுமே நெய் வழங்கவில்லை வேறு நிறுவனங்களும் வழங்கியிருக்கிறார்கள் என்றும், பழனி கோவிலுக்கு தாங்கள் நெய் வழங்கவில்லை என்றும் விளக்கம் அளித்திருந்தது. இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பழனி கோவிலுக்கு தமிழக அரசுக்கு சொந்த மான ஆவின் நிறுவனத்திடமிருந்து மட்டுமே தரமான நெய் வாங்கப்படுகிறது என்று தெளிவுபடுத்தியிருந்தார். ஆனால் தவறான தகவலை பரப்பி யதற்காக எச்.ராஜா மன்னிப்புக் கேட்க வில்லை. தனது கருத்தை மாற்றிக் கொண்டதாகக் கூட தெரிவிக்க வில்லை. அத்தகைய பழக்கமும் அவருக்கு இல்லை.
இதைவிட மோசமாக திரைப்பட இயக்குநர் என்று தன்னை கூறிக் கொள்ளும் மோகன். ஜி, பழனி பஞ்சாமிர்தத்திலும் கலப்படம் உள்ளது; பஞ்சாமிர்தத்தில் ஆண்மைக் குறைவை உருவாக்கும் மருந்தை கலந்துள்ளனர் என்றெல்லாம் அவதூறு செய்தார். பழனி கோவிலின் புனிதத்தை இழிவுபடுத்தினார். திருச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து மோகன். ஜியை கைது செய்தனர். ஆனால் நீதிபதி, கைது செய்த விதம் சரியில்லை என்று கூறி ஜாமீனில் விடுவித்துள்ளார். தற்போது பழனியிலும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பழனி பஞ்சாமிர்தத்தை இழிவு செய்ததாக மோகன். ஜி மீது சங்கிகள் பாயவில்லை. மாறாக அவர் மீது கை வைத்தால் நடப்பதே வேறு என வழக்க மான வாய்ச்சவடாலில் ஈடுபடுகின்றனர். பாமக தலைவர் அன்புமணி மோகன். ஜி என்ன தீவிரவாதியா என வக்காலத்து வாங்குகிறார்.
பழனி கோவில் குறித்து அவதூறு பரப்பினால் ஏன் பாஜக மற்றும் அதன் பரிவாரங்களுக்கு கோபம் வருவதில்லை. ஏனென்றால் கோவில்களை எங்களிடம் கொடுத்துவிடுங்கள்; அரசு கோவில்களிலிருந்து வெளியேற வேண்டும் என்று கூக்குரலிட்டு வருகின்றனர். திருப்பதி மற்றும் பழனி கோவில் சர்ச்சைகளை பயன்படுத்தி இப்போது இந்த கூச்சலை அதிகப்படுத்தியுள்ளனர்.
தனியார் கோவில் எனப்படும் சிதம்பரம் கோவில் பொது தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்தக் கோவிலுக்குச் சொந்தமான 2 ஆயிரம் ஏக்கர் நிலம் சட்டவிரோதமாக விற்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை புகார் தெரிவித்துள்ளது.
திருப்பதி, பழனி, சிதம்பரம் என அனைத்தையும் இணைத்துப் பார்த்தால் உண்மை ஓரளவு பிடிபடும்.
*செவ்வானம்*
No comments:
Post a Comment