Monday, December 4, 2023

பார்க்கிங் : கொலை முயற்சியெல்லாம் ?????

 


ஞாயிறு பார்த்த படம். இந்த புயல் மழையிலும் சினிமா தேவையா என்று கேட்காதீர்கள். நேற்று மதியத்திலிருந்து இரவு வரை வேலூரிலும் மழை இல்லை. இன்று காலை முதல் இப்போது வரை சாதாரணமான, கொஞ்சம் கனமான தூறல்கள்தான்.

படத்தின் பெரும்பான்மை காட்சிகள் கீழ் போர்ஷனும் மாடி போர்ஷனும் அமைந்த ஒரு வீட்டிலேயே அமைந்து விடுகிறது. பைக் வைத்துள்ள நகராட்சி அலுவலர் எம்.எஸ்.பாஸ்கர் ஒரு சிக்கனமான, நேர்மையான அதிகாரி. மாடி போர்ஷனுக்கு வரும் ஐ.டி ஊழியர் ஹரிஷ் கல்யாண், கர்ப்பிணி மனைவியை அழைத்துச் செல்ல வசதியாக இருக்கும் என்று கார் வாங்குகிறார். வாசல் போர்ட்டிகோவில் பெரும்பகுதியை கார் ஆக்கிரமித்துக் கொள்ள பைக்கை எடுக்க சிரமப்படுகிறார் பாஸ்கர். இது ஈகோ பிரச்சினையாகி போர்டிகோ காருக்குத்தான் என்று வீட்டு உரிமையாளர் இளவரசு சொல்லி விட போட்டிக்கு கார் வாங்குகிறார் பாஸ்கர்.

போர்ட்டிகோவில் யார் காரை நிறுத்துவது என்று இருவரும் அற்பத்தனமாக போட்டி போட பிரச்சினை முற்றுகிறது. கைகலப்பு, போலீஸில் பொய் வழக்கு, பொய்யான லஞ்சப்புகாரில் சிக்க வைப்பது என்று முற்றிப்போய் இருவரும் ஒருவரை ஒருவர் கொலை செய்ய முயற்சிப்பது என்ற அளவில் செல்ல, மழை நீரில் சிக்கிய கர்ப்பிணி மனைவியை எம்.எஸ்.பாஸ்கர்தான் மருத்துவ மனையில் அப்பா என்று சொல்லி சேர்த்தார் என்பது தெரிந்து அவரை இறுதி நிமிடத்தில் ஹரிஷ் கல்யாண் காப்பாற்ற சுபம்.

நாணயமான அதிகாரியாக சிக்கன சிகாமணியாக காண்பிக்கப்படும் எம்.எஸ்.பாஸ்கர் வெறும் வீம்பிற்காக ரொக்கம் கொடுத்து கார் வாங்கும் போதே அந்த கேரக்டர் பலியாகி விடுகிறது. கர்ப்பிணி மனைவிக்காக வாங்கிய காரை போர்ட்டிகோவிலிருந்து எடுக்க தயங்கும் போது ஹரிஷ் கல்யாண் கேரக்டரும் பலியாகி விடுகிறது. வெறும் பார்க்கிங் பிரச்சினைக்காக கொலை அளவிற்கு செல்வதெல்லாம் டூ மச்.

ஆனால் இந்த கேள்விகள் எல்லாம் படம் முடிந்த பிறகே வருமளவிற்கு சுவாரஸ்யமாக வேகமாக படம் சென்றது என்பது உண்மை. எம்.எஸ்.பாஸ்கர் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய இன்னொரு படம். விரசமான காட்சிகள் இல்லாத படமும் கூட.  பழி வாங்கல், கொலை முயற்சி என்றெல்லாம் செல்லாமல் வேறு மாதிரி கூட இயக்குனர் சிந்தித்து இருக்கலாம்.

ஆனால் மோசமான சில மனிதர்களின் ஈகோ எந்த எல்லையையும் தாண்டி செல்லும் என்பதும் யதார்த்தம்தானே!

1 comment:

  1. Unfortunately car parking is real issue throughout Tamilnadu. Our fellow common man buying the car for status but not having parking space. Builders are the main culprits, they want to make money each and every square feet of the plot and keeping the climbing steps on the road. This film may be treated as a whistle blower and the Government has to come up with rules and regulation for car and its parking space.

    ReplyDelete