Tuesday, December 12, 2023

பொறாமையில் காமெடியா தர்மன் ஐயா!

 


சாகித்ய அகாடமி விருது தொடர்பாக நேற்று ஒரு பிரச்சினை ஓடியது. திரு தேவிபாரதி அவர்களுக்கு நீர் வழி படூம் நூலுக்காக வழங்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகி பின் அந்த தகவல் தவறானது என்று தெரிந்தது.

அது தொடர்பாக முன்னுக்குப் பின் முரணாக பேசும் எழுத்தாளர் சோ.தர்மன் ஒரு பதிவு போட்டுள்ளார். 

அந்த பதிவு கீழே

இன்று அதிகாலையிலேயே 2023ம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது பற்றிய அறிவிப்பு முகநூல் களில் தென்பட்டன.பல முக்கிய படைப்பாளிகளும் பகிர்ந்திருந்தனர்.ஆனால் தொலைக்காட்சிகளிலோ பத்திரிக்கைகளிலோ அதைப்பற்றிய ஒரு செய்தி கூட இல்லை.உடனே சாகித்திய அகாதமியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலும் பார்த்தேன் இது பற்றிய எந்த செய்தியும் இல்லை.

இந்திய மொழிகளில் தமிழ் மொழிக்கு மட்டும் வெளியிட மாட்டார்களே என்ற சந்தேகத்தில் இருந்தேன்.அப்புறம் ஒவ்வொருவராக தங்களின் பதிவுகளை நீக்கி உப்புச்சப்பற்ற காரணங்களை பதிவிட்டனர்.

ஒரு விஷயம் தெரிந்தாக வேண்டும்.அதாவது இறுதிச் சுற்றுக்கு வரும் மூன்று நூல்களில் ஒன்றை தேர்வு செய்ய மூன்று நடுவர்கள் நியமிக்கப்படுவார்கள்.அதற்கான கூட்டத்தில் அந்த மூவரில் இருவர் அல்லது மூவருமே ஒருமித்து தேர்வு செய்யும் நூலை தலைவர் சீலிட்டு வைத்து ஒரு குறிப்பிட்ட நாளில் அனைத்து இந்திய மொழிகளுக்கும் விருதினை அறிவிப்பார்கள்.பெரும்பாலும் அது டிசம்பர் மாதத்தின் கடைசி வாரமாக இருக்கும்.

ஆக நடுவர்கள் மூன்று பேர் தலைவர் அதாவது தமிழ் மொழியின் சாகித்திய அகாதமியின் ஒருங்கிணைப்பாளர் இந்த நால்வருக்கு மட்டுமே தெரிந்த இரகசியம் இப்படி அம்பலப்பட்டு நிற்கிறது.வேறு எந்த மொழியிலும் இப்படி நடக்காது.

விருது பற்றியோ விருதுக்கு தேர்வான நூல் பற்றியோ அந்த எழுத்தாளர் பற்றியோ யாருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை.இந்த நால்வரில் இது யார் மூலமாக வெளியே தெரியவந்தது என்பது தெரிந்தாக வேண்டும்.அந்த நபர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

இந்த நடுவர்களுக்குப் பதில் வேறு மூன்று பேரை நடுவர்களாக நியமித்து மறு தேர்வு செய்ய வேண்டும்.இந்த நூலை தேர்வு செய்தாலும் சரி அல்லது வேறு ஒரு நூலை தேர்வு செய்தாலும் சரி அதை தலைவர் முறைப்படி அறிவிக்க வேண்டும்.

இல்லையென்றால் இப்போது வெளியாகியிருக்கும் அதிகாரப்பூர்வமற்ற அறிவிப்பை ரத்து செய்து விட்டு இந்த நூலுக்கு அடுத்ததாக இரண்டாவது இடத்திற்கு வந்திருக்கும் நூலை இவ்வாண்டுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற நூலாக அறிவிக்க வேண்டும்.

சாகித்திய அகாதமியின் நேர்மை,இரகசியம் ,மரியாதை காப்பாற்றப்பட வேண்டும்.

தகவலை கசியவிட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சரிதான். அந்த வேலையை ஒருங்கிணைப்பாளர் மாலன் செய்திருக்கலாம் என்பது என் யூகம். இமையத்திற்கு விருது கிடைத்த போதே தேவிபாரதிக்கு கிடைத்திருக்க வேண்டும் என்ற கருத்தை, சர்ச்சையை உருவாக்கியவர் அவர்தான்.

நிற்க

யாரோ கசிய விட்ட தவறுக்கு எழுத்தாளர் என்ன செய்வார்? ஏன் இரண்டாவது இடத்திற்கு வந்த நூலுக்கு விருது வழங்க வேண்டும்? போதைப் பொருள் உட்கொண்டது தெரிந்ததால் ஒலிம்பிக் பதக்கம் பென் ஜான்சனிடமிருந்து பறிக்கப்பட்டு கார்ல் லூயிசிற்கு கொடுக்கப்பட்ட மாதிரியான பிரச்சினையா இது?

அதில்தான் ஐய்யா தருமனின் பொறாமை வெளிப்படுகிறது. இத்தனைக்கும் இவர் ஏற்கனவே ஜெமோவால் முன்னுரை எழுதப்பட்ட, திராவிட இயக்கத்தலைவர்கள் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரை களங்கப்படுத்துவதையே கருப்பொருளாகக் கொண்ட "சூல்" நாவலுக்கு ஏற்கனவே சாகித்ய அகாடமி விருது வாங்கியவர்தான்.

கடைசியில் ஒன்னு சொல்றாரு பாருங்க!

என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

சாகித்திய அகாதமியின் நேர்மை ,இரகசியம் ,மரியாதை காப்பாற்றப்பட வேண்டுமாம்.

அந்த அமைப்புக்கு அதெல்லாம் இருக்கா என்ன?

செம காமெடி தர்மன் ஐயா.

பிகு: மாலனுக்காக ஸ்பெஷலாக தயாரித்த பாயசம் ஃப்ரிட்ஜிலேயே நீண்ட காலமாக இருக்கிறது. அந்த பாயசம் இன்று வழங்கப்படும். 

No comments:

Post a Comment