Tuesday, October 10, 2023

பவா – பிம்பம் தகர்ந்தது நல்லதே

  


பிக் பாஸ் நிகழ்ச்சியை நான் எப்போதும் பார்ப்பதில்லை. இப்போது நடைபெறும் நிகழ்வில் திருவண்ணாமலை வம்சி பதிப்பக உரிமையாளரும் கதை சொல்லி என்றழைக்கப்படுபவருமான, புளிச்ச மாவு ஆஜானின் நெருங்கிய நண்பருமான பவா செல்லதுரை கல்வி அவசியமில்லை என்று சொல்லி வாங்கிக் கட்டிக் கொண்டிருப்பது பற்றி படித்தேன். மகிழ்ச்சியாக இருந்தது. சில மாதங்கள் முன்பாக அவரைப் பற்றி எழுதியிருந்தேன். அதை முதலில் படித்து விடுங்கள்.

அற்பன் ஜெமோவும் கலை இரவுகளும்

மாதம் ஒரு அசிங்கப்படுவது என்பதை ஒரு விரதம் போல ஜெயமோகன் கடைபிடிக்கிறார் என்று சில நாட்கள் முன்பாகத்தான் எழுத்தாளர் தோழர் இரா.முருகவேளின் ஆஜான் பற்றிய முகநூல் பதிவிற்கு பின்னூட்டம் எழுதியிருந்தேன். மாதம் ஒருமுறை என்பதை ஆஜான் வாரம் ஒரு முறை என்று மாற்றி விட்டார்.

 தமுஎகச தமிழகமெங்கும் தொடர்ச்சியாக வீரியத்தோடு நடத்தி வரும் கலை இரவுகளைப் பற்றி ஆஜான் எழுதியிருப்பது கீழே.

 


தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்ற அமைப்பு முன்னெடுத்த ஒரு நிகழ்வை அன்று அந்த அமைப்பின் திருவண்ணாமலை பொறுப்பாளராக இருந்த ஒருவரோடு மட்டும் சுருக்கப் பார்க்கும் விஷமத்தனம். ஆஜான் குறிப்பிட்டவரோடு மட்டுமல்லாமல் மறைந்த தோழர் கருப்பு கருணா, ஓவியர் பல்லவன் ஆகியோரும் இணைந்து துவக்கிய நிகழ்வு கலை இரவு. தமுஎச என்ற அமைப்பின் சார்பில் மட்டுமே முன்னெடுக்கப்பட்ட  நிகழ்வு அது.

 ஒற்றை பத்தியில் எத்தனை பாட்டில் விஷத்தை கக்குகிறார் ஜெமோ என்று பார்ப்போமா!

 தனி நபர் முன்னெடுத்த நிகழ்வு.

அரசியல் புகுந்தது,

அரசியலால் அழிந்தது.

திருவண்ணாமலையில் மட்டும் முதலில் முன்னெடுத்தவரால் மட்டும் உயிர்ப்போடு உள்ளது.

 தனி நபர் மட்டும் முன்னெடுத்தது அல்ல. தனி நபருக்கான பாத்திரம் இருப்பினும் அமைப்பின், அமைப்பின் மற்ற பொறுப்பாளர்களின் பங்களிப்பும் சற்றும் குறைந்தது அல்ல.

 அரசியல் என்பது புகவில்லை. உழைக்கும் மக்களுக்கான அரசியலோடுதான் தொடங்கியது. உழைக்கும் மக்களுக்கான செய்தியை கலை வடிவில் எடுத்துச் செல்வது என்பதுதான் நோக்கம்.  கலை கலைக்காகவே என்று அதனை புனிதப்படுத்துவது ஜெயமோகனின் நோக்கமாக இருக்கலாம். ஆனால் கலை மக்களுக்காக என்பதை கோட்பாடாகக் கொண்ட தமுஎச அமைப்பு எப்படி அரசியல் பார்வை இல்லாமல் ஒரு நிகழ்வை நடத்தும்! கட்சி அரசியல் அல்ல, வர்க்க அரசியல், பாட்டாளி வர்க்க அரசியல்

 கலை இரவு நிகழ்ச்சி அரசியலால் அழிந்தது என்பது அவருடைய அடுத்த குற்றச்சாட்டு.  

 திருவண்ணாமலை கலை இரவைத் தொடர்ந்து சென்னையில் கலை இரவு நடைபெறுகிறது. அந்த நிகழ்வின் பொறுப்பாளர்களில் ஒருவர் மறைந்த எங்கள் இன்சூரன்ஸ் தோழர் டி.ஏ.விஸ்வநாதன். ஒரு நீண்ட ரயில் பயணத்தில் (கான்பூர் முதல் சென்னை வரை மூன்றே தோழர்கள் ஒரு அகில இந்திய செயற்குழு முடிந்து திரும்பி வந்தோம்) சென்னை கலை இரவு முடிந்ததும் கட்சியிலிருந்து கலை இரவு வடிவம் மிகவும் அதிகமான மக்களை சென்றடைவதால் அனைத்து மாவட்டங்களும் முயற்சிக்க வேண்டும் என்று சுற்றறிக்கையே அனுப்பினார்கள் என்று சொன்னது நினைவில் உள்ளது.

 தமுஎகச தாண்டி தொழிற்சங்கங்களும் கலை இரவு நடத்தத் தொடங்கினார்கள். இந்தியன் வங்கி ஊழியர் சங்கத்தின் மாநில மாநாடு வேலூரில் நடைபெற்ற போது அதனால் ஈர்க்கப்பட்ட நாங்களும் 1998 ல் புதுவையில் நடைபெற்ற எங்கள் கோட்ட மாநாட்டில் முதல் முறையாக கலை இரவு நடத்தினோம். எங்கள் கோட்டத்தில் பிரிக்க முடியாத அங்கமாக கலை இரவு மாறி விட்டது. 1999 ம் ஆண்டு எங்கள் மாநாடு திருவண்ணாமலையில் கோட்ட மாநாடு நடைபெற்ற போது வரவேற்புக்குழுக் கூட்டத்தில் தமுஎகச  பொறுப்பாளர் தோழர் கருப்பு கருணாதான் “மக்கள் ஒற்றுமை கலை விழா” என்று பெயர் சூட்டுங்கள் என்ற ஆலோசனைப்படி இப்போதும் நாங்கள் “மக்கள் ஒற்றுமை கலை விழா” என்றுதான் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

கலை இரவுகள் எப்போதும் போல இப்போதும் கொண்டாட்டமாக உயிர்ப்போடு தமிழகம் முழுவதும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வடிவம் அழிந்து விட்டது என்று சொல்வது ஜெயமோகனின் வக்கிர புத்தி. அந்த வடிவம் அழிய வேண்டும் என்ற அவரின் விருப்பத்தை இவ்வாறு வெளிப்படுத்துகிறார். ஜெயமோகனின் பார்வைக் கோளாறு என்பதைத் தாண்டி இக்குற்றச்சாட்டில் ஏதுமில்லை.

 திருவண்ணாமலையில் அந்த கனவை அவர் உயிர்ப்போடு வைத்திருக்கிறார் என்பது ஆஜானின் அடுத்த ஸ்டேட்மெண்ட்.

 ஆஜான் குறிப்பிடும் பவா செல்லத்துரைக்கு அவருடைய முகநூல் பதிவு ஒன்றில் “உங்களை முன்னிறுத்தி ஜெயமோகன் தமுஎகச அமைப்பை சிறுமைப்படுவது தொடர்பாக உங்களின் மௌனத்தை கலையுங்கள் தோழர்” என்று பின்னூட்டமிட்டிருந்தேன். ஆனால் இந்த நிமிடம் வரை அவர் மௌனம் கலையவில்லை. சுயமோகன் சொல்வதை அவர் ரசிக்கிறார் என்றுதான் அந்த கள்ள மௌனம் தெரிவிக்கிறது. அதனால் அவருடைய முந்தைய பதிவொன்றி ஏற்பட்ட நெருடலையும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

 தோழர் கருப்பு கருணா மறைந்த போது அவர் நீண்ட பதிவொன்றை எழுதி இருந்தார். தமுஎகச அமைப்பின் மாநில மாநாடு திருவண்ணாமலையில் நடைபெற்ற போது அதற்கான நிதியை திரட்டும் பொறுப்பு அவர் தலையில் சுமத்தப்பட்டு விட்டது என்பது அதில் ஒரு குற்றச்சாட்டு. எந்த ஒரு பெரிய நிகழ்விற்கான நிதியை தனி ஒருவரால் திரட்ட முடியும் என்பதெல்லாம் எந்த காலத்திலும் சாத்தியமானதில்லை.

  திருவண்ணாமலையில் ஒரு குறிப்பிட்ட நாளன்று வீடு வீடாக மக்களை சந்தித்து நிதி திரட்டினார்கள் என்பதை நான் அறிவேன். அதற்காக ஏராளமான சுவரொட்டிகளை நகரெங்கும் ஒட்டியிருநார்கள். நூற்றுக்கணக்கான மார்க்சிஸ்ட் கட்சி தோழர்களும் மற்ற வெகு ஜன அமைப்புக்களின் தோழர்களும் அந்த பணியில் ஈடுபட்டிருந்தார்கள்.

 அன்றைய தினம் எங்களின் கோட்ட செயற்குழுக் கூட்டம் திருவண்ணாமலையில்தான் நடந்து கொண்டிருந்தது. வெங்கடேசன் என்ற கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் தலைமையிலான குழு எங்கள் செயற்குழுக் கூட்டம் நடந்து கொண்டிருந்த போது திடிரென உள்ளே நுழைந்து எங்களிடம் நிதி திரட்டினார்கள். இப்படி கூட்டத்தின் நடுவில் ஒரு தகவல் கூட சொல்லாமல் வந்து விட்டார்களே என்று ஒரு சிறு எரிச்சல் கூட வந்தது. அப்படிப்பட்ட தோழர்களின் உழைப்பை சிறுமைப்படுத்தியது ஜெயமோகனின் சகவாசத்தினால்தானோ என்று கூட தோன்றியது.

 இட்லி வேகவில்லை என்ற புகாரைக் கூட என்னிடம் தெரிவித்தார்கள் என்பதெல்லாம் சிறுபிள்ளைத்தனமான குற்றச்சாட்டு. மாநாட்டு வரவேற்புக் குழு செயலாளரிடம்தான் மாநாட்டு பங்கேற்பாளர்கள் தங்கள் பிரச்சினைகளை தெரிவிக்க முடியும். இது சொந்த அனுபவமும் கூட, மாநாட்டு பங்கேற்பாளனாகவும் அமைப்பாளராகவும்.

 நான் ஒரு படைப்பாளி, எழுத்தாளன், என்னிடமா இதையெல்லாம் சொல்வது என்ற புலம்பல் எல்லாம் அமைப்பை விட தான் மிகவும் மேலானவன் என்ற கொம்பு முளைத்த சிந்தனையின்றி எதுவுமில்லை.

 கலை இரவு கனவை, தமுஎகச அமைப்பை அதன் பொறுப்பாளர்கள் இன்றளவும் உயிர்ப்போடுதான் வைத்திருக்கிறார்கள். ஆஜானின் சிந்தனைதான் எப்போதும் போல புளித்த தோசை மாவு.

 அவர் நண்பர் கனவை எப்படி உயிர்ப்போடு வைத்திருக்கிறார்! உண்டாட்டு என்ற நிகழ்ச்சியை நடத்துவதன் மூலம். அது என்ன உண்டாட்டு? கறி சோறுடன் கூடிய மது பான விருந்து.

 ஜெயமோகனின் பொய்களை, அராஜகங்களை அம்பலப்படுத்தக் கூடிய பலரும் இருப்பது தமுஎகச அமைப்பு என்பதால் அதனை சிறுமைப்படுத்த முயற்சித்து இன்பம் காணுகிறார் ஆஜான். எந்த ஒரு மன நல மருத்துவரும் குணப்படுத்த முடியாத அளவிற்கு அவரது மன வியாதி முற்றி விட்டது என்பதுதான் உண்மை.

இந்த பதிவிற்கு வந்த இரண்டு பின்னூட்டங்களையும் கீழே தந்துள்ளேன்.

எனது நினைவுகளில் 90-கள் அல்ல 80-களிலேயே தோழர் ராஜன் (ஆர்.ஜெகதீசன்) செயலாளராக இருந்த போது தோழர்.கவிஞர்.வெண்மணியால் வித்தூன்றப்பட்டதே கலை இரவு முயற்சி.

*********************

 Next target is Comrade Bava? கமலின் தேவர் மகன் டயலாக் தான் நியாபகம் வருகிறது.... (அதை கொஞ்சம் மாற்றி) புரிந்து கொள்ளவும்.

***********************************************

(என்னுடைய பதில்)

இதிலே டார்ஜெட் எங்கிருந்து வருகிறது? சில உண்மைகளை வெளிப்படையாக பேச வேண்டிய நேரம் வந்து விட்டது. அவ்வளவுதான்.

 *******************************************************

முதல் பின்னூட்டம் கலை இரவு முயற்சியை முன்பே துவக்கி விட்டனர் என்ற உண்மையை சொல்கிறது. அதிலே கவிஞர் வெண்மணியோடு இணைந்து செயல்பட்டது எங்கள் கோட்டச்சங்கத்தின் முதல் பொதுச்செயலாளர் தோழர் ஆர்.ஜகதீசன் என்ற செய்தி பெருமிதமும் அளிக்கிறது.

 

இரண்டாவது பின்னூட்டம் தோழர் பவாவை அடுத்த இலக்காக கொண்டுள்ளீர்களா என்று கேட்டது. அதற்கு நான் பதிலும் கொடுத்து விட்டேன்.

*******************************************************************

இப்போது விஷயத்திற்கு வருவோம்.

 இதில் மகிழ்ச்சியடைய என்ன இருக்கிறது என்பதுதானே உங்கள் கேள்வி!

 ஆமாம். கண்டிப்பாக இருக்கிறது.

 தமிழ்நாட்டின் பெரும் பண்பாட்டு அமைப்பான தமுஎகச வை சுயமோகன் இவரை பயன்படுத்தி தொடர்ந்து சிறுமைப்படுத்திக் கொண்டிருந்தார். இவரோ கள்ள மவுனத்தோடு அப்படிப்பட்ட அவதூறுகளை ஊக்குவித்துக் கொண்டே இருந்தார். இவருக்கு கிடைத்திருந்த அறிவுஜீவி முத்திரை, கதை சொல்லி முத்திரை ஆகியவை எல்லாம் இவரை ஏதோ மிகப் பெரும் முற்போக்கு ஆளுமை என்ற பிம்பத்தை உருவாக்கியிருந்தது. கல்வி அவசியமில்லை என்று இவர் சொன்னதன் மூலம் அந்த முற்போக்கு பிம்பம் தகர்ந்து போய் உள்ளத்தில் ஒளிந்திருந்த பிற்போக்குத்தனம் அம்பலமாகியது மகிழ்ச்சிதான்.

 அமைப்பின் பொறுப்புக்களில் இருந்தோ அல்லது அமைப்பிலிருந்தோ வெளியே வந்த பின்பு தான் இருந்த, வளர்வதற்கு காரணமாக இருந்த அமைப்பை நாசமாக்க வேண்டும் என்று அலைகிற, அமைப்புக்கு  எதிரானவர்களோடு கை கோர்த்து அமைப்பை அவதூறு செய்ய நினைப்பவன் எப்பேற்பட்ட கொம்பனாக இருந்தாலும் அது போன்ற நபர்களை நான் எந்நாளும் மதிக்க மாட்டேன். ஏதோ சில காரணங்களுக்காக அப்படிப்பட்ட நபர்களை ஆதரிப்பவர்கள் எப்பேற்பட்ட பெரிய மனிதர்களாக இருந்தாலும் அவர்களும் மனதில் ஒரு படி கீழிறங்கி விடுவார்கள்.

 இப்படிப்பட்ட போலிகள் நிச்சயமாக அம்பலப்பட்டு அசிங்கப்படுவார்கள்.

 அதனை காலம் விரைவிலேயே செய்ததால் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.

 

3 comments:

  1. கவிஞர் வெண்மணி திருவண்ணாமலையில் பணியாற்றிய காலத்தில் 'கவிதா இரவு' எனும் இரவு முழுக்க கவிதை கவிதை வாசிக்கும் நிகழ்வை நடத்தினார்கள். இந்த நிகழ்வில் தோழர் பிரளயன் கூட கவிதை வாசித்தார் என்பது மட்டுமின்றி அண்ணாமலை புராணம் என்னும் 35 பக்க சிறு நூலில் இந்த நிகழ்வைக் குறிப்பிட்டுள்ளார். திருவண்ணாமலையின் கலை இலக்கிய பயணம் குறித்தும் எழுதி உள்ளார் ஒன்றுபட்ட வட ஆற்காடு மாவட்ட மாநாடு 1983இல் திருவண்ணாமலையில் நடந்த போது மாட வீதியில் உள்ள வன்னியர் மடத்தில் கலை இரவு எனும் நிகழ்வு நடந்துள்ளது கே.ஏ. குணசேகரன் இசை நிகழ்ச்சி நடந்துள்ளது அப்போது திருவண்ணாமலை கிளையின் செயலாளராக இருந்தவர் அரசம்பட்டு அழகேசன் என்பதும் குறிப்பிட தகுந்தது. பவா, கருணா இருவரின் வருகைக்கு பிறகும் கலை இரவு நிகழ்வு அரங்க கூட்டமாகவே நடந்து வந்தது. 1989 ல் தான் கலை இரவை, கலை இலக்கிய இரவு என்று மாற்றி பொது வெளியில் நடத்துவது என்று தமுஎகச கிளை கூட்டத்தில் திட்டமிடப்பட்டது அந்த கூட்டத்தில் நானும் இருந்தேன். இந்த நிகழ்வின் வெற்றியில் பவா, கருணா பங்களிப்பு கூடுதலாக இருக்கும் அவ்வளவு தான். இந்த நிகழ்வு ஒரு அமைப்பின் சார்பில் நடைபெற்றது என்பது மட்டுமின்றி இதற்காக உழைத்த நூறு தோழர்களை என்னால் அடையாளப் படுத்த முடியும்.
    மு.பாலாஜி
    மாவட்ட செயலாளர்
    தமுஎகச திருவண்ணாமலை.

    ReplyDelete
    Replies
    1. விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி தோழர். உங்கள் பின்னூட்டத்தையே மாலை தனி பதிவாக பகிர்கிறேன்.

      Delete
  2. சீர்தூக்கி விட்டவர்களை சிறுமைப்பட செய்ய, தன் நிலை மறந்தவர்களின் பட்டியலில் சேர்த்துக்கொள்க!

    வேறென்ன சொல்ல!

    ReplyDelete