Saturday, May 31, 2014

வரனும், அவங்கல்லாம் வரனும். யாரு?

இந்தக் கேள்விக்கு விடை காண இன்றைய வலைச்சரப்
பதிவைப் படியுங்கள் 

திருப்தியா சோனியாஜீ?




ஒரு கூட்டுக் கிளியாக இருந்தவர்கள், ஒரு மரத்துப் பறவையாக இருந்தவர்கள் அன்றாடம் அடித்துக் கொள்வது துவங்கி இருக்கிறது. நாங்கள் விசா கொடுத்தால்தான் தெலுங்கானாவிற்குள் யாரும் நுழைய முடியும் என்று இன்னும் கொஞ்சம் நாட்களில் சந்திர சேகர ராவ் சொன்னாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை.

உயிரற்ற கட்டிடங்களுக்காக உயிருள்ள மனிதர்கள் சண்டையிடும் காட்சியைக் காணுகிறோம்.

ஓடி வரும் நதியை சொந்தம் கொண்டாடும் காட்சியைப் பார்க்கிறோம்.

ஒரே மாநிலத்தின் நிலத்தை இரண்டாய்ப் பிரித்து நீங்கள் போட்ட கோடு  மக்களின் மனதில் அல்லவா கீறலை உருவாக்கியது?

அண்டை நாடுகளோடுடனான மோதலைக் காட்டிலும் அல்லவா மோசமாக போய்க்கொண்டிருக்கிறது இம்மோதல்?

இருபது எம்.பி சீட்டுக்களுக்கு ஆசைப்பட்டீர்கள். நம்பினீர்கள். இதற்கு முன்பாகவும் உங்கள் கட்சியை மோசம் செய்தவர் இப்போது கரம் கொடுப்பார் என்று மோகம் கொண்டது உங்கள் கட்சி. தேசத்தை மோசம் செய்த உங்கள் கட்சி மோசம் போனதில் ஒன்றும் தவறு இல்லை. எப்படிப்பட்ட இழிவான தண்டனைக்கும் தகுதி வாய்ந்தது உங்கள் கட்சி. ஆனால் இன்று அவசியமற்ற மோதல்களை உருவாக்கியிருக்கிறது உங்களின் பேராசை.

ஆனால் அதைப்பற்றி உங்களுக்கென்ன கவலை?

ஆட்சிப் பொறுப்பில் இருந்த போதே மக்களைப் பற்றிக் கவலைப்படாத நீங்கள் இப்போது மட்டும் எப்படி கவலைப்படுவீர்கள்?

உங்களுக்குத்தான் தெலுங்கானா பகுதியில் சிலை வைத்து கடவுள் ஸ்தானம் கொடுத்திருக்கிறார்களே சில மூடர்கள்! அது போதாதா?

திருப்தியாக இருங்கள் மேடம்

Friday, May 30, 2014

டுபாக்கூர்கள்தான் மோடியின் மூலதனமோ?

எத்தனைக் காலம் திரிக்கப்படுமோ மோ(ச)டிக் கயிறு?

 


 
“பாய்ஸ் உங்கள் எல்லோரிடம் புல்லட் புரூப் ஜாக்கெட் இருக்கிறதா? புல்லட்புரூப் ஜாக்கெட் இல்லாத வீரர்கள் தூதரகத்துக்குள் செல்லுங்கள். புல்லட்புரூப் ஜாக்கெட் அணிந்து இருக்கும் 6 இந்திய வீரர்களும் வெளியில் இருந்து சுடும் தீவிர வாதிகளை வேட்டையாடுங்கள். இதற்காக நீங்கள் ஆப்கானிஸ்தான் போலீஸ் உத்தரவுக்காகவோ அல்லது நேட்டோ அமெரிக்க படை உத்தரவுக்காகவோ காத்திருக்க வேண்டாம்.
தீவிர வாதிகளை வேட்டையாடி முடித்து விட்டு இரவு விருந்துக்கு என்னுடன் வாருங்கள்”இப்படி ஆவேசமாகப் பேசி அயல்நாட்டில் இருந்த இந்திய ராணுவவீரர்களுக்கு புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி உத்வேகம் அளித்ததாக செய்திவெளியிட்டுள்ளது 

மாலைமலர் ஏடு (28. 5. 14;பக். 7)ஆப்கானிஸ்தானின் ஹிராத் நகரில் உள்ள இந்தியத் தூதரகத்தின் மீதான தீவிரவாதிகளின் தாக்குதல் நடவடிக்கையின் போது நரேந்திர மோடி வீடியோ கான்ஃபரசிங்கில் பேசினார் என்பதும் தீவிரவாதிகளை வேட்டையாடிவிட்டு விருந்துக்கு வாருங்கள் என்று அழைத்ததும் உண்மையில் நடந்திருக்க முடியுமா என்று சிந்தனையைச் செலுத்தாதபடிக்கு உணர்ச்சிக் கொந்தளிப்போடு செய்தி எழுதப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லஅந்த ஆறு வீரர்களும் மோடியுடன் விருந்தில் கலந்து கொண்டார்கள்என்றும் சரடு விடப்பட்டுள்ளது. இதற்கு ஆதாரம் ஆங்கிலத்தொலைக்காட்சி ஒன்றின் செய்தியென அந்தப்பத்திரிகை கூறுகிறது.ஹிராத் நகரில் தீவிரவாதிகளைச் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படும் இந்திய ராணுவவீரர்கள் தில்லி வந்து விருந்தில் கலந்து கொண்டிருந்தால் அது எவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருக்கும். ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாய் தில்லிவந்து பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட தருணத்தில் இது எவ்வளவு பெரிய செய்தி ஆகியிருக்கும். இது பற்றியெல்லாம் எண்ணிப்பார்க்காமல் மாலைமலர் ஏடு இப்படியொரு பெட்டிச் செய்தியை வெளியிட்டிருக்கிறது. உண்மையில் இது செய்தியா? அல்லது விளம்பரமா? என்ற கேள்வி எழுகிறது.

ஏனென்றால் நரேந்திர மோடியை சூப்பர் மேனாகப் காட்டும் முயற்சி தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கின்போது அவர் ஹெலிகாப்டரில் துணிச்சலுடன் போய் 15 ஆயிரம் குஜராத்தியர்களை மீட்டார் என்று புருடாவிடப்பட்டது.

 நாடே அல்ல உலகமே இந்தப் புனைச்சுருட்டு செய்தியை வியப்புடன் பார்த்தது. பலமாநிலங்களைச் சேர்ந்த மக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் பல இடங்களில் தீவு தீவாகப் பரிதவித்து நின்றனர். இவர்களில் குஜராத்தியர்களை மட்டும் கண்கொத்தி பாம்புபோல் நரேந்திர மோடி எப்படி பொறுக்கி எடுத்து மீட்டார் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதன்பிறகு தான் கோயபல்ஸ் பொய்ப் பிரச்சாரம் வெளிச்சத்துக்குவந்தது.
வெள்ளம் பாதித்த பகுதிகளை அவர்ஹெலிகாப்டரில் பறந்து சென்று பார்வையிட்டுத்திரும்பினார் என்ற உண்மை ஒப்புக்கொள்ளப்பட்டது.

அதேபோன்ற பொய் மூட்டையைத் தான் இன்றும் அவிழ்த்து விட்டிருக்கிறார்கள். உருளுகின்ற பொய்களை நம்பிக்கால்வைத்து தங்கள் வலையில் விழுகின்ற வரைலாபம் என்பது அவர்களின் திட்டமாக இருக்கலாம்.

உண்மையில் நடந்ததாக வெளியான செய்திகளைப் பார்ப்போம்.ஹிராத் நகரில் அமைந்துள்ள இந்தியத் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்த நான்கு தீவிரவாதிகள் முயற்சி செய்தனர். இவர்களில் ஒரு தீவிரவாதி இந்திய தூதரகத்தின் சுவர் மீது ஏறினான். அந்தச்சுவரின் உச்சியில் பொருத்தப்பட்டிருந்த முள்கம்பி வேலியில் அவனது பை சிக்கிக் கொண்டது. அந்தத் தீவிரவாதியை கவனித்த - தூதரகத்தில் பாதுகாப்புக்கு நின்றிருந்த இந்திய - திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர்கள் அவனைச் சுட்டு வீழ்த்தினர். அவன் ஒரு சில அடிகள் ஓடி தப்பிக்க முயன்றும் முடியாமல் சுருண்டுவீழ்ந்து செத்தான். மற்ற மூன்று தீவிரவாதிகள் பக்கத்துக்கட்டிடத்திற்குள் நுழைந்தனர். 


இதனை கவனித்த ஆப்கன் பாதுகாப்புப்படையினர் அவர்கள் மூவரையும் சுட்டுவீழ்த்தினர். இதனை இந்திய - திபெத் எல்லைப்பாதுகாப்புப்படையின் தலைமை இயக்குநர் சுபாஷ் கோஸ்வாமியே செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் (டைம்ஸ்ஆப் இந்தியா- 24/5/ ;பக். 12)இந்தியத் தூதரகத்தின் மீதான தீவிரவாதிகளின் தாக்குதல் முயற்சியைக் கேள்விப்பட்டவுடன் ஹிராத் நகரில் உள்ள தூதரக அதிகாரிகளுடன் நரேந்திரமோடி தொடர்புகொண்டார். ஹமீத் கர்சாயுடனும் பேசினார். தூதரகத்தைத் தாக்க முயன்ற 3 தீவிரவாதிகளை ஆப்கன் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தியதற்காக நன்றியும் தெரிவித்துக்கொண்டார். 

இதற்கும் மேலாக இந்திய வீரர்களிடம் மோடியே பேசினார் - அதுவும் யாருடைய உத்தரவுக் காகவும் காத்திருக்க வேண்டாம் தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்துங்கள் என்று ரிமொட் கண்ட்ரோல் உத்தரவு போட்டார். அடுத்த ஒரு மணிநேரத்தில் இந்திய ராணுவ வீரர்களால் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்ற அதீக கற்பனைதான் உத்தரகாண்ட் மோசடி செய்தியை நினைவுபடுத்துகிறது. 

இந்திய ராணுவவீரர்கள் எந்த நிலைமையையும் தீரத்துடன் எதிர்கொள்ளக் கூடியவர்கள் தான். அதற்காக மோடி தான் அவர்களின் மூளை சக்தி என்று சிறுமைப்படுத்திவிடக் கூடாது. நரேந்திரமோடியை மாவீரனாகக் காட்டும் முயற்சியை ஊடகங்கள் தொடர்கின்றன என்பதன் வெளிப்பாடு தான் இந்தச் செய்தி. செய்தியைவிட வதந்தி வேகமாகப் பரவும் என்பார்கள். அந்த நம்பிக்கையில் தான் இப்படிப்பட்ட சாகச செய்திகள் உலவ விடப்படுகின்றன. இன்னும் எத்தனைக் காலத்துக்குத் தான் திரிக்கப்படுமோ இது போன்ற மோ(ச)டிக் கயிறு. 

இப்படிப்பட்டவர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே “தீரவிசாரிப்பதே மெய்” என்று சொல்லியிருக்கிறார்கள். முன்னோர் மொழிபொருளைப் பொன்னேபோல் உணர்ந்து பின்பற்றுவோம்.

- மயிலைபாலு

நன்றி - தீக்கதிர் 30.05.2014

Thursday, May 29, 2014

கவிதை படிக்கிறீங்களா?

நேற்று வலைச்சரத்தில் கவிதைகளின் களம். 
போய் படிச்சிட்டு அங்கேயே கருத்து சொல்லுங்க.

 

அமைச்சராக கல்வித் தகுதி அவசியமில்லை, ஆனால் நேர்மை ??????



 http://tamil.oneindia.in/img/2014/05/13-smriti-irani-1-600.jpg
மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஸ்மிர்தி இராணி யின் கல்வித்தகுதி பற்றிய சர்ச்சைகள்தான் ஊடகங்களுக்கும் இணைய தள, முக நூல், வலைப்பக்கங்களுக்கு தீனி போட்டு வருகின்றன.

அமைச்சராக இருப்பதற்கு கல்வித்தகுதி அவசியம் இருக்க வேண்டும் என்பதை நானும் ஏற்கவில்லை. முறையான கல்வி கற்காதவர்கள் எத்தனையோ பேர் அரசியல் தளத்தில் சாதனைகள் புரிந்துள்ளனர். சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக கல்வியைத் துறந்தவர்கள் ஏராளம். சமீபத்தில் மறைந்த தலைவர் தோழர் ஆர்.உமாநாத் ஒரு உதாரணம். படித்த மேதை மன்மோகன்சிங் எந்த லட்சணத்தில் ஆட்சி செய்தார் என்பது நமக்கெல்லாம் நன்றாக தெரியும்.

கல்வி இருந்தால் மட்டுமே தன்னுடைய துறையை கவனிக்க முடியும், முன்னேற்ற முடியும் என்பதெல்லாம் வெற்றுக் கோஷங்கள். ஆர்வமும் முனைப்பும் இருந்தால் போதும். ஆகவே பனிரெண்டாவது வரை படித்த ஸ்மிர்தி இராணிக்கு மனித வள மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டது சரியல்ல என்ற வாதங்களை நான் ஏற்கவில்லை.

ஆனால்

தனது கல்வித் தகுதி தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் அவர் அளித்த முரண்பட்ட இரண்டு பிரமாண வாக்குமூலங்கள் அவரது நேர்மையை கேள்விக்குறியாக்குகிறது. முன்னர் பி.ஏ பாஸ் செய்தவர் பின்பு எப்படி முதல் வருடம் படிப்பவராக மாற முடியும்?

இந்த முரண்பாட்டிற்கு அவர் விளக்கம் அளிக்க வேண்டும். ஆனால் பாவம் காங்கிரஸ் கட்சியின் குறி தடுமாறிப் போய் சோனியா காந்தியின் கழுத்துக்கே வந்து விட்டது

Wednesday, May 28, 2014

அங்கே கோச்சடையான் சர்ச்சை




வலைச்சரம்  தளத்தில் கோச்சடையான் பற்றி
நடைபெறும் விவாதத்தைக் காண இங்கே
வாருங்கள்

Tuesday, May 27, 2014

அம்மாவுக்கு தெரிஞ்சா பின்னிடுவாங்க

வேலூரில் பாஜக காரர்கள் வைத்துள்ள பேனர்களின்
வாசகங்கள்

அடைந்தே விட்டோம் செங்கோட்டையை
அடைந்தே தீருவோம் செந்தமிழ் நாட்டை

அம்மா பார்த்தா பின்னிட மாட்டாங்க??????

மகனிடம் அடங்கிய மனசாட்சி



படத்திற்குப் போக
பணம் கேட்ட மகனிடம்
"பரிட்சைக்கு போகும் போதே
படம் பார்க்கும் திட்டமா?"
உரத்த குரலில்
திட்டத்தான் ஆசைப்பட்டேன்.
பரிட்சை முடியும்
முதல் நாளே
படம் பார்க்க பரவசப்பட்டு
பரிட்சையை கோட்டை விட்ட
கதை மறந்தாயா நீ
என மனசாட்சி
என்னைக் குட்ட
பணத்தை அளித்தேன்
மௌனமாக.

Monday, May 26, 2014

எத்தனை முறைதான் இறப்பார் காந்தி?

http://upload.wikimedia.org/wikipedia/commons/b/b2/Rajghat_Delhi.JPG



இந்த இடத்திற்கு
யார் வேண்டுமானாலும் வரலாம்.

அவர் கொள்கைகளை
தகனம் செய்த பின்பு
உடல் எரிந்த இடத்திற்கு
என்ன மதிப்பு இங்கே உண்டு?

இந்தியாவின் ஆன்மா
எங்குமே இல்லாதபோது,

அவர் படம் போட்ட காகிதம்
செல்வந்தர் கை ஆயுதமாக
மாறிய நாளில்,

அமெரிக்க அதிபரை பாதுகாக்க
அவரின் காவல் நாய்
மோப்பம் பிடிக்க வந்த இடத்தில்,

அவர் பெயர் சொல்லி
ஆட்சி நடத்தி
சுதந்திர தேசத்தை
கூண்டிற்கு அனுப்பியவர்கள்
வந்து போன அந்த இடத்திற்கு
இனி யார்
அங்கே வந்தால் என்ன?

கேலிக்குரிய வார்த்தையாக
மத நல்லிணக்கம்
வடிவெடுத்த வேளையில்,

துப்பாக்கிக் குண்டை
பாய்ச்சியவர்களின் வாரிசுகள்,
அவரின் முழுப்பெயர் கூட
சொல்லத் தெரியாதவர்கள்,
கொன்றதன் நோக்கம்
இன்றுதான் வென்றது
என்று சொல்லி விட்டுப்
போயிருப்பார்கள்.

பாவம் காந்தி...
எத்தனை முறைதான்
இறந்திடுவார் இத்தேசத்தில்?

கொஞ்சம் அங்க போய்ட்டு வாங்க

வலைச்சரம் இணைய இதழின் ஆசிரியர் பொறுப்பை
இந்த வாரம் மீண்டும் ஏற்றுள்ளேன்.

பல பதிவர்களை அறிமுகம் செய்யும் இனிய பணி
இரண்டாவது முறையாக கிடைத்துள்ளது.

அங்கே எழுதியுள்ள அறிமுகம்  பற்றியும்
பல்வேறு பதிவர்களின்  பயண அனுபவம் பற்றியும்
படித்து விட்டு வாருங்களேன்.

ஒரு சூடான கவிதை இன்னும் கொஞ்ச நேரத்தில் 
பதிவாகும்

Sunday, May 25, 2014

இன்னும் ஒரு சிறுகதை - கற்பனை மட்டுமல்ல

தீக்கதிர் ஞாயிறு இணைப்பான வண்ணக்கதிர் இதழில் இன்று
(25.05.2014) அன்று வெளியான எனது சிறுகதையை கீழே 
அளித்துள்ளேன்.

படித்து விட்டு உங்களின் விமர்சனத்தைக் கூறவும்.

எழுதிய மூன்றாவது சிறுகதையும் பிரசுரமானது மனதிற்கு
மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

இதை நான் முழுவதும் கற்பனை என்று சொல்ல மாட்டேன்.