சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
Tuesday, October 26, 2010
குற்றவாளிக் கூண்டில் ராமர்
ராமர் மீது வழக்கு வந்தால் - நிஜமல்ல, கற்பனைதான் ஆனாலும் ?
அலகாபாத் நீதிமன்றம் இன்று மீண்டும் பரபரப்பாக காட்சியளித்தது. அயோத்தி நிலம்
தொடர்பான வழக்குதான் இருவழியாக டெல்லிக்கு போய்விட்டதே, இன்று ஏன் இவ்வளவு கூட்டம், இத்தனை டிவிக்காரர்கள் என்று நீதிமன்றம் எதிரில் டீக்கடை
வைத்திருந்த முன்னாராம் பக்கத்து பெட்டிக்கடை அப்துல்லாவைக் கேட்டார். யாரோ
புதிய பிரச்சினைகளோடு மீண்டும் வழக்கு தொடுக்கப் போகின்றார்களாம் என்று
விளக்கம் சொன்னார் அப்துல்லா. கோவில் வந்தால் என்ன? மசூதி வந்தால்தான் என்ன
நம் வாழ்க்கை என்னவோ டீ விற்பதிலும் சிகரெட் விற்பதிலும்தான் முடிந்து போகப்
போகிறது என்று அங்கலாய்த்தபடியே கிளாஸ்களை கழுவத்தொடங்கினார் முன்னாராம்.
நீதிமன்றம் கூடியது. மூன்று நீதிபதிகள் தங்கள் இருக்கையிலே வந்து அமர்ந்தார்கள்.
சமீபத்தில் இறந்து போன தந்தையின் ஆன்மா சாந்தி அடைய சங்கமத்தில் காரியம்
செய்ய வந்த உச்ச நீதிமன்ற நீதிபதி கூட பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்தார்.
அயோத்தி வழக்கு அவரிடம்தான் வரும் என்ற செவி வழிச்செய்திகள் இவ்வழக்கு
என்னவாக இருக்கும் என்ற ஆவலை அவருக்கு உருவாக்கி இருந்தது.
கை நிறைய கற்றைக் காகிதகங்களோடு நீதிமன்ற அறையில் வழக்கறிஞர்களோடு
நின்று கொண்டிருந்தவர்களின் தோற்றமே மிகவும் வித்தியாசமாக இருந்தது.
ஒருவரின் முகத்தை உன்னிப்பாக கவனித்தால் குரங்கின் சாயல் தென்பட்டது.
இன்னொருவரின் முகமோ பலமுறை சினிமாவில் பார்த்த பகவதி, ரங்காராவ்
போலவே இருந்தது.
வழக்கு தொடங்கியது. ராமர் மீதும் லட்சுமணர் மீதும் விபிஷணன் மீதும் வழக்கு
பதிய வேண்டும் என அந்த இரண்டு மனிதர்களின் வக்கீல் சொன்னபோது நீதிமன்றம் அப்படியே அதிர்ந்து போனது. மயான அமைதி அங்கே உருவானது.
ஒரு நிமிடம்தான் இந்த நிலை. அடுத்த நிமிடம் சந்தைக்கடை போல அவரவர்
பேசத் தொடங்கினர். என்ன தைரியம் இருந்தா ராமர் மேல வழக்கு போடணும்னும்
சொல்லுவ, மவனே வெளியே வா! என்று காவியுடையும் நெற்றியில் திலகமும்
இட்ட ஒரு தலைப்பாகைக்காரர் கத்த, நிதிபதிகள் மரச்சுத்தியலை தட்டி தட்டி
அமைதியை உருவாக்க சிரமப்பட்டனர்.
வழக்கறிஞரை தனது வாதத்தை தொடங்குமாறு நீதிபதிகள் கூறினர். அவரும் தொடங்கினார்.
கனம் கோர்ட்டார் அவர்களே, இங்கே உள்ள எனது கட்சிக்காரர்கள் கிஷ்கிந்தா அரசன்
வாலியின் சந்ததியைச் சேர்ந்த அங்கதன் மற்றும் இலங்கைச்சக்கரவர்த்தி ராவணின்
பரம்பரையைச சேர்ந்த சிங்கமுகன். இவர்கள் இருவரும் தங்களது முன்னோருக்கு
இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கேட்டு வந்துள்ளார்கள். பல தலைமுறைகளுக்கு
முற்பட்ட வழக்குகளுக்கு தீர்ப்பு சொல்லும் ஆற்றல் இந்த நீதிமன்றத்திற்கு மட்டுமே
உள்ளது என்பதால் இங்கே வந்துள்ளனர்.
அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே சாமியார் போல தோற்றமளித்த ஒருவர் அவசரம் அவசரமாக உள்ளே வந்து வக்கீலின் உதவியாளரின் காதைக்கடிக்க,
அவர் வக்கீலின் காதைக்கடிக்க பரபரப்பாக மீண்டும் நீதிபதிகளை வணங்கி
மை லார்ட் சீதா பிராட்டியின் தந்தை ஜனக மகாராஜாவின் குடும்பத்தினரும்
இவ்வழக்கில் இணைந்து கொள்ள அனுமதி கோருகின்றனர். தங்களின் அனுமதி
வேண்டும் என்று பணிவோடு கோரினார். நீதிபதிகள் தங்களுக்குள் ரகசியமாக
ஏதோ பேசி விட்டு பிறகு அதற்கு அனுமதி தந்தார்கள். இவ்வழக்கு பற்றிய
விசாரணையை மதிய உணவிற்கு பிறகு வைத்துக் கொள்ளலாம் என்று சொல்ல
அவை கலைந்தது.
இதனை நாளா இவனுங்க எங்க இருந்தானுங்க, புதுசா என்ன சிக்கலை கொண்டு
வந்துருக்கானுங்க என்றவாறே மக்கள் முணுமுணுத்துக் கொண்டே கலைந்து
போனார்கள். அங்கதன், சிங்க முகன், ஜனகர் வகையறாக்களை தூரத்திலிருந்தே
வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
மதிய உணவிற்குப்பிறகு நீதிமன்றம் கூடியது. பத்திரிக்கையாளர்களுக்கே இடம்
போதவில்லை. வாதம் தொடங்கியது.
முதலில் ராவணன் தரப்பு வாதத்தை முன்வைத்தார். ராவணன் வதத்தைப் பற்றி
எதுவும் சொல்வதற்கில்லை ஏனென்றால் அடுத்தவர் மனைவியை கடத்திய குற்றம்
அவர் மீது உள்ளது. ஆனால் சூர்ப்பனகையின் மூக்கை அறுத்தெறிந்தது என்பது
லட்சுமணன் செய்த குற்றம். ஈவ் டீசிங் சட்டப்படியும் ஐ.பி.சி 354 பிரிவின் படியும்
அவர் மீது வழக்கு பதிய வேண்டும் என்றார். அதே போல் விபீஷணன் மீது
கட்சித் தாவல் தடைச்சட்டப்படியும் ராவணன் அரசு பற்றிய ரகசியங்களை ராமரிடம்
கூறியதாலும் அவர் மீது தேசத்துரோகச்சட்டப்படி நடவடிக்கை வேண்டும் என்று
வலியுறுத்தினார்.
வாலிக்கும் ராமனுக்கும் எந்த பிரச்சினையும் இல்லாதபோது வாலியை கொலை
செய்தது , அதுவும் மறைந்திருந்து கொலை செய்தது என்பது திட்டமிட்ட படுகொலை. இதற்கு 302 பிரிவின்படி தண்டனை வழங்க வேண்டும் என வாதிட்டார் வக்கீல். அடுத்து
சீதா பிராட்டி தரப்பு வாதங்களை அவர் முன்வைக்கும் முன்னால் அந்த சாமியார் எழுந்து ஐயா, நான் கொஞ்சம் பேசலாமா என்று
பணிவோடு கேட்டார்.
நீதிபதிகள் அனுமதிக்க அவர் பேசத் தொடங்கினார்.
" ஐயா எங்கள் வம்சத்திற்கே மிகப்பெரிய பெருமை சீதா எங்கள்
குலத்தில் பிறந்ததுதான். அயோத்தி இளவரசரை அவர் திருமணம் செய்து
கொண்டபோது மிகவும் மகிழ்ந்தார்கள் எங்கள் முன்னோர்கள். ராமருக்கு
பட்டாபிஷேகம் என்ற போது எங்கள் உற்சாகத்திற்கு அளவேயில்லை. ஆனால்
அவள் கணவரோடு காட்டிற்குப் போனபோது வருத்தமும் ஏற்பட்டது. கணவர்
மீது இவளுக்கு எவ்வளவு மரியாதை என்று பெருமிதமும் அடைந்தோம். அவளைக்
கடத்தி சென்ற போது கவலைப்பட்டோம். மாவீரன் ராமன் இருக்கையில் என்ன
கவலை என்றும் பேசிக்கொண்டோம்.
ஆனால் போர் முடிந்து தீக்குண்டத்தில் சீதையை இறங்கச்சொன்னபோதுதான்
உள்ளம் வலித்தது. எம் குலப்பெண்ணிற்கு இப்படி ஒரு கொடுமையா என்று
பதைத்துப் போனோம். ஆனால் அதே தவறை மீண்டும் மீண்டும் செய்வது
எப்படி ஐயா சரியாக இருக்கும்? கர்ப்பமடைந்த பெண்ணை காட்டிற்கு துரத்தினார்கள்.
மீண்டும் அதே போல் குற்றம் சுமத்தி பூமிக்குள் செல்லும்படி செய்தார்கள்.
இதை நியாயம் என்று ஐயா ஒப்புக்கொள்வீர்களா ? என்று கண்ணீரோடு கேள்வி
கேட்டார் அந்த பெரியவர்.
அப்போது எழுந்த வக்கீல் ஐயா ராமபிரான் மீது ஐ.பி.சி யின் பல பிரிவுகளில்
வழக்கு பதிவு செய்யலாம்.
பெண்ணை இழிவு படுத்தியதற்கு 498 ஏ மற்றும் 499
தற்கொலைக்கு தூண்டியதற்கு 306
அஸ்வமேத யாகத்தின் போது சீதைக்குப் பதிலாக தங்கச்சிலையை
வைத்ததற்கு ஆள்மாறாட்ட வழக்கு பதிவு செய்யலாம் என்ற போது என் கட்சிக்காரர்
அதனை விரும்பவில்லை. ஆக எனது வாதங்களின் அடிப்படையில் வழக்கினை
நடத்தி தவறிழைத்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன், யுவர்
ஹானர் என்று கூறி முடித்தார்.
நீதிமன்றத்தில் நிலவிய நிசப்தத்தை ஒரு நீதிபதி கலைத்தார்.
நீங்கள் கூறியவர்கள் யாருமே இப்போது இல்லாதபோது எப்படி வழக்கை நடத்த
முடியும்? நீங்கள் கூறுவதற்கெல்லாம் என்ன ஆதாரம்? சாட்சிகள் வருவார்களா?
பணிவோடு வழக்கறிஞர் பதிலளித்தார்.
ஐயா, ராமர் எந்த இடத்தில் பிறந்தார் என்று தாங்கள் எந்த அடிப்படையில் தீர்ப்பு அளித்தீர்களோ, அந்த அடிப்படையில்தான் இந்த வழக்கில் நீதி கேட்கிறோம். அது
சரி என்றால் இதுவும் சரியல்லவா? ராமர் பிறந்தது நம்பிக்கை என்றால் அவரது
வாழ்நாளில் நடந்ததாக சொல்லப்பட்ட சம்பவங்களும் உண்மைதானே? ராமருக்கு
நியாயம் வழங்கியது போல இவர்களுக்கும் நியாயம் வழங்க வேண்டும் என்று
சொல்லி அவர் அமர நீதிபதிகளுக்கு இதயத்தில் மெல்லமாய் வலித்தது.
உச்சநீதி மன்ற நீதிபதி தனக்குள்ளாக சொல்லிக் கொண்டார். தன்னிடம் அயோத்தி
வழக்கு வந்தால் எப்படியாவது அதை வேறு யாருக்காவது மாற்றி விட வேண்டும்.
நாட்டு நடப்பையும் மக்கள் மனதில் உள்ள கேள்விகளையும் இராமாயண மறுவாசிப்பாக காண்பித்து கடைசியில் சினிமா போல கற்பனை என்று கூறி சொதப்பி விட்டீர்கள். பரிவாரங்கள் மீது பயமா?
ReplyDeleteஇப்படி நடந்தால் நன்றாக இருக்கும் என்ற விருப்பத்தை கதையாக்கியிருப்பதால்
ReplyDeleteகற்பனை என்ற பட்டியலில் கொண்டு வந்தேன். சங் பரிவாரக் கும்பலில் மீது பயம்
இருந்தால் இக்கதையை எழுதியிருக்கவே மாட்டேன். பயமில்லை என்று காண்பிக்க
இப்போது தலைப்பை மாற்றுகிறேன்.