சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
Thursday, June 17, 2010
தோழர் சரோஜ் சவுத்ரி நினைவு நாள்.
இன்று அகில இந்திய இன்சுரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மகத்தான தலைவர் தோழர் சரோஜ் சவுத்ரி அவர்களின் பதினோராவது நினைவு நாள். இருபத்தி ஒன்பது ஆண்டுகள் பொதுச்செயலாளராகவும் ஆறு ஆண்டுகள் துணைத்தலைவராகவும் இரண்டாண்டுகள் தலைவராகவும் சங்கத்தை வழி நடத்திய ஒப்பற்ற தலைவர். சி.ஐ.டி.யு சங்கத்தின் அகில இந்திய பொருளாளராகவும் செயல்பட்டவர்.
எல்.ஐ.சி நிறுவனத்தின் துவக்கக் காலத்தில், நிர்வாகமும் அரசாங்கமும் மூர்க்கத்தனமாக தாக்குதல்கள் நடத்திக் கொண்டிருந்த அக்காலத்தில், தகவல் தொடர்பு, போக்குவரத்து வசதிகள் வளர்ச்சியடையாத அக்காலகட்டத்தில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தை ஒரு வலிமையான அமைப்பாக மாற்றிய பெருமை அவருக்கு உண்டு.
சமூகம், பொருளாதாரம், மார்க்சியம், அனைத்து வித கலை வடிவங்கள் என அனைத்திலும் ஆழ்ந்த புலமை கொண்ட அவரது அறிவாற்றல் நம்மை பிரமிக்க வைக்கும். ஆங்கிலம் மீதான அவரது ஆளுமைக்கு அவரது கட்டுரைகளும் சுற்றறிக்கைகளுமே சான்று.
1990 ல் கட்டாக்கில் எங்களது அகில இந்திய மாநாடு நடந்தது. மாநாடு
முடிந்த மறுநாள் கோனார்க்கில் இருந்த சூரியன் கோயில்
சென்றிருந்தோம். அங்கே வந்திருந்த தோழர் சரோஜ் அங்கே இருந்த
சிற்பங்களையும் உலகின் பல்வேறு சிறப்பு மிக்க சிற்பங்கள் பற்றியும் நவீன சிற்பங்கள் பற்றியும் விளக்க விளக்க ' இந்த மனிதனுக்கு தெரியாத விஷயமே கிடையாதா" என்ற பிரமிப்பு
ஏற்பட்டதை மறக்கவே முடியாது.
படியுங்கள், தொடர்ந்து படியுங்கள் என்பதே அவர் அனைவருக்கும்
கூறும் அறிவுரை. அவர் இறுதியாக பங்கேற்ற ஹைதராபாத்தில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டிலும் இந்த வாசகங்களோடுதான் அவர் உரை நிறைவு பெற்றது.
வியட்நாம் புரட்சி குறித்து 1975 ல் அவர் எழுதிய கட்டுரையின் கடைசி பத்திகளின் தமிழாக்கம் கீழே
" பொருளாதார நெருக்கடி உள்நாட்டில் முற்றிய சூழலில் வியட்நாமில் அள்ளி அள்ளி இறைக்க இனியும் நிதி வழங்க முடியாது
என அமெரிக்க நாடாளுமன்றம் நிராகரித்தது. மூன்றே வாரங்களில் பொம்மைக் கோபுரம் தரை மட்டமானது. அமெரிக்க டாலர்களாலும் அமெரிக்க வீரர்களாலும் கட்டப்பட்டிருந்த மணற்கோபுரம்தானே அந்த வியட்நாம் அரசு?
விடுதலைக்காகவும் சோசலிசத்திற்காகவும் இப்புவியில் வியட்நாம் மக்கள் போல யாருமே போராடவில்லை. உலகின் வேறு எந்தப் பகுதி மக்களும் வியட்நாம் மக்களைப் போல கொடிய காட்டுமிராண்டித்தனத்திற்கு உட்பட்டதில்லை. முப்பது நீண்ட நெடிய வருடங்கள் தொடர்ச்சியாய் அயராது போராடியதில்லை.
மன உறுதி, பொறுமை, சவால்களை எதிர்கொள்ளல், தியாகம் இவற்றில் எல்லாம் வியட்நாம் மக்களை விஞ்சிடவே முடியாது.
முப்பது ஆண்டுகளாக வியட்நாம் மக்கள் தங்கள் தாய் மண்ணை
ரத்தத்தால் நனைத்து வந்தனர். அவர்கள் வாழ்வில் ஒரு புதிய
அத்தியாயம் துவங்கியுள்ளது. ஒரு புதிய வியட்நாமை ஹோசிமின் கனவு கண்ட ஒரு புதிய உலகைப் படைக்கும் பணியிலே ஈடுபட்டு வருகின்றனர். இவ்வுலகிலே குழந்தைகள் பிச்சை எடுப்பதற்குப் பதிலாக விளையாடிக் கொண்டிருப்பார்கள். பெண்கள், கைப்பிடி உணவிற்காக தங்கள் உடம்பை விற்பதற்குப் பதிலாக ஆண்களோடு
இணைந்து அணைகள், தொழிற்சாலைகள், பள்ளிக்கூடங்கள் கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டிருப்பார்கள்.
வாலிபர்கள், திருடர்களாக, அடியாட்களாக, பெண் தரகர்களாக இருப்பதற்குப் பதிலாக தேச நிர்மாணத்திற்கான உழைப்பை அளிப்பார்கள். தங்களின் வாழ்வின் இறுதிக்காலத்தில் டையம்* மற்றும் தையூ* வின் நாட்களைப் பற்றியும் தேச விடுதலைக்காக தாங்கள்
போராடியது பற்றியும் அனைத்து மக்களின் வாழ்நிலையும் தங்களின்
வாழ்க்கைக் காலத்திலேயே எவ்வாறு மாறியது என்றும் அசை போட்டுக் கொண்டிருப்பார்கள்.
(டையம், தையூ - அமெரிக்காவின் தலையாட்டி பொம்மைகளாய் வியட்நாமில் கொடுங்கோல் ஆட்சி நடத்தியவர்கள்)
அங்கே புதியதோர் சோஷலிச உலகம் படைக்கப் படுகிறபோது வாழ்வு
தூரத்து தொடுவானம் ஆயிரம் வானவில்களால் வரையப்பட்டது போல
அழகாக இருக்கும்.ரோஜாவின் இதழ்கள் மேல் விழுந்த பனித்துளி காலைக்கதிரவனின் ரேகைகள் பட்டு மின்னுவது போல் இனிமையாக இருக்கும்.
நாமும் அத்தகைய வாழ்வை விரும்புவதால் வியட்நாமின் வரலாறு நம்மைப் போன்ற உலகெங்கிலும் உள்ள உழைப்பாளி மக்களுக்கு எழுச்சி தருகிறது. நாம் நேசிக்கிற, போராடி அடைய விரும்புகிற வாழ்வு அவர்கள் கைவசம் வந்து விட்டது. அதுதான் வியட்நாம் நமக்கு உணர்த்துகிற அர்த்தம். வியட்நாமிற்கு நம் செவ்வணக்கம்.
தோழர் சரோஜ் சவுத்ரி அவர்களுக்கு செவ்வணக்கம்.
No comments:
Post a Comment