Friday, May 8, 2026

கூவாத்தூர் புராணத்தின் துவக்கப்புள்ளி

 


தங்கள் கட்சி மக்கள் பிரதிநிதிகள் எங்கே தங்கள் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு மாற்றுக் கட்சிக்கு தாவி விடுவார்களோ என்ற அச்சம் நம்பிக்கை தீர்மானம் அல்லது நம்பிக்கையில்லா  தீர்மானம் சமயத்தில் வந்தால் அந்த எம்.எல்.ஏ, எம்.பி க்களை பாதுகாப்பாக வைத்திருக்க இப்போதெல்லாம் ஏதாவது சொகுசு ரிசார்ட்டுக்கு மாற்றி விடுவார்கள். இதிலே மிகவும் பிரசித்தி பெற்றது ஏ2 அதிமுக எம்.எல்.ஏ க்களை கூவாத்தூரில் வைத்திருந்ததுதான்.

இந்த நடைமுறை எப்போது துவங்கியது?

ஆந்திராவின் முதலமைச்சர்களை காங்கிரஸ் தலைமை தொடர்ந்து அவமதித்த நிலையில் என்.டி.ராமாராவ், தெலுங்கு தேசம் கட்சியை 1982 ல் துவக்குகிறார். அவருக்கு உதவியாக இருந்தவர் காங்கிரஸ் கட்சியில் அமைச்சர் பதவியிலிருந்து கழட்டி விடப்பட்ட பாஸ்கர் ராவ்.

ஜனவரி 1983 ல் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. பிரம்மாண்டமான வெற்றி பெற்று முதலமைச்சராகிறார். அப்படி ஒன்றும் பெரிய சூப்பர் ஆட்சியெல்லாம் கொடுக்கவில்லை.

இதய அறுவை சிகிச்சைக்கு 1984 ல் அவர் அமெரிக்கா போகிறார். என்.டி.ஆர் ஆட்சியில் பெரிதாக எந்த பலனும் கிடைக்கவில்லை என்று பாஸ்கர் ராவிற்கும் சில எம்.எல்.ஏ க்களுக்கும் வருத்தம். அந்த வருத்தம் ஆட்சியை கலைக்கும் அளவிற்கு சென்றது. அவர்கள் ஆளுனரிடம் கடிதம் கொடுக்க ஆளுனர் என்.டி.ஆரை டிஸ்மிஸ் செய்து விட்டு பாஸ்கர் ராவை முதல்வர் பதவி ஏற்க அழைத்து பதவி பிரமாணமும் செய்து வைக்கிறார்.

என்.டி.ஆருக்கு ஆதரவாக நாடெங்கிலும் குரல் எழுகிறது. ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்ற முழக்கத்தோடு ஒரு நாள் பாரத் பந்த் வேறு நடக்கிறது.

இந்த காலகட்டத்தில்தான் என்.டி.ஆர் ஆதரவு எம்.எல்.ஏ க்களை  காங்கிரஸ் கட்சிக்கோ அல்லது பாஸ்கர் ராவிடமோ செல்லாமல் பாதுகாக்க வேண்டும் என்ற அவசியம் வருகிறது. அவர்கள் அத்தனை பேரையும் வேறு மாநிலத்தில் ஒரே இடத்தில் தங்க வைக்க வேண்டும் என்று துக்ளக் சோ ஆலோசனை சொல்ல, எங்கள் மாநிலத்துக்கு வாருங்கள் என்று அப்போதைய கர்னாடக முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டே உத்தரவாதம் கொடுக்க மைசூர் நந்தி ஹில்ஸில் இருந்த ஒரு விடுதியில் தெலுங்கு தேச எம்.எல்.ஏ க்கள் பாதுகாப்பாக அடைக்கப்பட்டார்கள்.

கவர்னர் மாற்றப்படுகிறார். புதிய கவர்னர் பாஸ்கர் ராவை பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்லி அது முடியாத காரணத்தால் அவரை டிஸ்மிஸ் செய்து விட்டு என்.டி,ராமராவை மீண்டும் ஆட்சி அமைக்க அழைத்து அவரும் மீண்டும் முதல்வராகிறார்.

ஆக ரிசார்ட் கலாச்சாரத்தை இந்திய ஜனநாயகத்திற்கு அளித்த கொடையாளர்கள் சோ, ஹெக்டே மற்றும் என்.டி.ஆர்



இந்த பதிவை இத்தோடு முடித்து விட முடியாது.

தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக என்.டி.ராமராவ் வீதிக்கு வந்தார். அவரே பல மாநிலங்களுக்குச் சென்று ஆதரவைத் திரட்டினார். மக்கள் மத்தியில் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார். நான் வீட்டில் தூங்கிக் கொண்டிருப்பேன். எனக்காக மற்ற கட்சிகள், அதிலும் என்னோடு கூட்டணியில் இல்லாத, நான் தீய சக்தி என்று வர்ணித்த கட்சியோடு கூட்டணியில் இருந்த கட்சிகள் குரல் கொடுக்க வேண்டும் என்று அவர் இல்லை. 

பெரும்பான்மை என்.டி.ஆரிடமிம் இருந்தது. அதனால் அவர் போராடினார்.  அவர் தன்னுடைய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் ஆதரவை கோரவில்லை. ஒரு வேளை அப்படி அவர் கேட்டிருந்தால் "இவர் என்ன பைத்தியக்காரரா?" என்று மக்கள் கேட்டிருப்பார்கள். இன்றைக்கு சில அதி மேதாவிகள் விஜய்க்கு ஆதரவு தர வேண்டும் என்று சி.பி.ஐ(எம்), சி.பி.ஐ, விசிக ஆகியோரை மிரட்டி, அந்த இயக்கங்களுக்குள்ளேயே இரண்டு கருத்துக்கள் வருவது போல செய்திருக்க மாட்டார்கள்.

காங்கிரஸ் கட்சியின் ஆதரவு பெற்ற பாஸ்கர்ராவ் நடத்திய ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை முறியடிக்க முடிந்த என்.டி.ராமராவ், இறுதியில் வீழ்ந்தது அவரது மருமகனான, அவர் மகளை மணந்த சந்திரபாபு நாயுடு செய்த கலகத்தினால்தான். 



3 comments:

  1. Sir, CPI & CPM have announced their support for TVK to form the government. As a communist, what are your thoughts on this stance? As a common man, what are your thoughts?
    Please do not take this personally.

    ReplyDelete
    Replies
    1. I feel very much humiliated. Very wrong. Very Bad

      Delete
  2. by supporting tvk , cpi cpm are going to get their vote share swallowed by tvk.

    ReplyDelete