Sunday, May 31, 2020

இறுதி மரியாதையை மறுத்த கொரோனா


நேற்று கிடைத்த ஒரு செய்தி மிகவும் வருத்தமாக இருந்தது.

எனது பிரியத்துக்குரிய வி.வி.ஆர் சார் காலமானார் என்பதுதான். 

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள சர் சிவசாமி ஐயர் மேல் நிலைப்பள்ளியில் 1978 லிருந்து 1982 வரை ஒன்பதாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் போது இரண்டாண்டுகள் வகுப்பாசிரியையாக இருந்த திருமதி மஞ்சுபாஷினி டீச்சர் அவர்களின் கணவர் திரு வி.வெங்கட் ராமன் சார். 

"நினைவில் நிற்கும் ஆசிரியர்கள் - நல்லவர்களும் மற்றவர்களும்" என்று சில வருடங்கள் முன்பாக எழுதிய பதிவில் அவர்களைப் பற்றி 

அர்ப்பணிப்பு உணர்வும் ஆர்வமும் அதிகமாக இருந்த காலம் அது. வகுப்பு ஆசிரியையாக இருந்த மஞ்சுபாஷினி டீச்சர், அவரது கணவர் வி.வி,ஆர் சார் எல்லாம் நல்ல உற்சாகத்தோடு சொல்லிக் கொடுப்பார்கள். தவறு செய்யும் மாணவர்களை அன்போடு திருத்துவார்கள். 

எழுதியிருந்தேன்.

அந்த பள்ளி ஆசிரியர்கள் பெரும்பாலும் ஒரே குடும்பத்தினர் போலவே பழகுவார்கள். என் அக்காவும் அதே பள்ளி ஆசிரியர் என்பதால் என்னிடம் பாசத்தை பொழிந்தவர்கள். 

அப்பள்ளியின் தலைமை ஆசிரியராக பின்னாளில் செயலாற்றி ஓய்வு பெற்ற வி.வி.ஆர் சார்,  ஆங்கிலம் மற்றும் இயற்பியல் எடுப்பவர். பள்ளியில் இயற்பியல் எடுத்தவர் கொஞ்சம் சிக்கல் செய்ததால், விடுதி மாணவர்களுக்கு மட்டுமாக எடுத்த தனிப் பயிற்சியில் அவர் என்னையும் சேர்த்துக் கொண்டார்.  

நான் எல்.ஐ.சி யில் பணியில் சேர்ந்ததும் மிகவும் மகிழ்ந்தவர் அவர். நான் தொழிற்சங்கம் மற்றும் இடதுசாரி சித்தாந்தம் என்று என் பாதையை தேர்ந்தெடுத்த போது குடும்பத்திலேயே நிறைய விமர்சனங்கள் வந்தாலும் என் கருத்துக்களை ஆமோதித்தவர் வி.வி.ஆர் சார். என்னுடைய திருமணத்திற்கு இருவரும் தம்பதி சமேதராக வந்து வாழ்த்தினார்கள். 

என் அக்காவிற்கு ஒரு மூத்த சகோதரர் போல வழிகாட்டியவர் வி.வி.ஆர் சார். 

அவர் நேற்று திருச்சியில் காலமாகி விட்டார். 

திருச்சி வரை சென்று இறுதி மரியாதை செய்வதற்கான சூழலை கொரோனா தடுத்து விட்டது. அவகாசமும் இல்லாமல் போய் விட்டது. 

அவரது நினைவும் எப்போதும் புன்னகைத்த முகமும் உற்சாகமும் மனதை வாட்டுகிறது. 

என் இதயபூர்வமான அஞ்சலி வி.வி.ஆர் சார் . . .

Saturday, May 30, 2020

வட போனாலும் வெறி போகாது


கோவையில் நேற்று இரவு ஒரு வெறியன் இரண்டு கோயில் வாசல்களில் பன்றி மாமிசத்தை வீசி எறிந்திருக்கிறான்.

வழக்கம் போல சங்கிகள் வெறியூட்ட ஆரம்பித்தார்கள். ஹெச்.ராசா மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோரின் ட்வீட்டுகள் அதற்குச் சான்று. அவர்கள் யாரை குறி வைப்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.




ஆனால் காவல்துறை அந்த வெறியனை கண்டுபிடித்து விட்டது. ஹரி என்ற எஸ்.ராம்பிரகாஷ் என்பவன்தான்  அந்த கொடுஞ்செயலைச் செய்தவன்.

கோவை காவல்துறை பதிந்த ட்வீட்டில் "காவல்துறைக்கு நன்றி" என்று எழுதி வானதி அம்மையார் முடித்துக் கொண்டு விட்டார். "வட போச்சே" என்பதை அதில் உணர முடிந்தது.

காவல்துறை போட்ட ட்வீட் என்பது இந்து மக்கள் கட்சிக்கான பதில். அதிலே அவர்கள் "சமூக ஊடகத்தில் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்கள்.




ஆனால் அந்த வெறி பிடித்த சங்கிகளுக்கு ஏது பொறுப்பு?

இந்து மக்கள் கட்சியின் புதிய ட்வீட்டை பாருங்கள்.




இந்த ரத்தக் காட்டேரிகள்தான் பன்றி மாமிசத்தை வீச வைத்திருப்பார்கள் என்று தோன்றுகிறது.

அது தோற்றுப் போன வெறியில்தான் இப்படி வெறியூட்டுகிறார்கள்.

மன அழுத்தம் பாதிக்கப்பட்டவனின் செயல் என்று காவல்துறை கேஸை மூடக்கூடாது.

சங்கிகளின் பங்களிப்பை அடியாழம் வரை சென்று கண்டறிய வேண்டும்.

ஏனென்றால் இந்த கயவர்கள் இதே போன்ற சதியை சில காலம் முன்பு கேரளாவிலும் கர்னாடகாவிலும் கூட செய்திருக்கிறார்கள். 


நிவாரணப்பணியில் சரக்கு பாட்டில்கள்

உள்துறை அமைச்சகத்தின் முகநூல் பதிவு கீழே உள்ளது.



மேற்கு வங்கத்தில் மத்தியரசின் தேசிய பேரிடர் நிவாரணப்படை பணி செய்வதை உள்துறை அமைச்சகம் புகைப்படங்களோடு பதிவு செய்துள்ளது.

தெரிந்தோ, தெரியாமலோ அதிலே சரக்கு பாட்டில்களின் படமும் வந்துள்ளது.

ஒரு வேளை நிவாரணப்பணி செய்பவர்களுக்காக வாங்கி வைத்ததா
அல்லது
நிவாரணப்பணி செலவினத்தில் ஒரு பகுதி இப்படித்தான் போகிறதோ?

பிகு:  சரக்கு தொடர்பான இன்னொரு செய்தி கூட இருக்கிறது. 

மோடியும் ட்ரம்பும் - இரு கில்லாடிகள்


"சீனாவுடனான எல்லைப் பிரச்சினை குறித்து நான் மோடியுடன் பேசினேன். மத்தியஸ்தம் செய்வதாக கூறினேன். மோடியின் குரலில் உற்சாகமில்லை. ரொம்பவுமே டல்லாக இருந்தார்"

இது டொனால்ட் ட்ரம்ப் சொன்னது.

"ஏப்ரல் மாதம் மாத்திரை தொடர்பாக பேசியதற்குப் பின்பு மோடி, ட்ரம்போடு பேசவேயில்லை. அதிலும் மோடி டல்லாக இருந்தார் என்று சொல்வதெல்லாம் கற்பனை"

என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ட்ரம்ப் சொன்னதை மறுத்துள்ளது.

இது இரண்டாவது சம்பவம். 

மோடி அகில இந்திய அளவிலான டுபாக்கூர் என்றால் ட்ரம்ப் அகில உலக டுபாக்கூர். 

இருவருமே பொய்யர்கள். அதனால்தான் இருவருக்கும் ரசாயனம் பொருந்திப் போகிறது.


Friday, May 29, 2020

கோலி டைவர்ஸ் செய்ய வேண்டுமாம்

பாஜக சங்கிகளால் மட்டும்தான் இப்படியெல்லாம் அடுத்தவர் குடும்பத்திற்குள் நுழைந்து அநாகரீகமான உத்தரவெல்லாம் போட முடியும். 


கேவலமான ஜென்மங்கள் என்பதை ஒவ்வொருவரும் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள். 



‘பாதாள லோகத்தால்’ பாஜக பதற்றம்.... அனுஷ்கா ஷர்மா தேசத்துரோகியாம்!




புதுதில்லி:
அமேசான் இணைய தொடரில் காட்டப்பட்டு வரும் ‘பாதாள லோகம்’ இணைய தொடர் தடை செய்யப்பட வேண்டும் என்றும், அதனைத் தயாரித்த அனுஷ்கா ஷர்மா மீது தேசத்துரோகச் சட்டப்பிரிவின்கீழ் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும் உ.பி.சட்டமன்றத்தின்  லோனி தொகுதி பாஜக உறுப்பினர் நந்த்கிஷோர் குர்ஜார் வழக்கு தொடுத்திருக்கிறார். அனுஷ்கா சர்மா, கிரிக்கெட் வீரர் விராட்கோலியின் மனைவி ஆவார்.

அமேசான் இணைய தொடரில் ‘பாதாள லோகம்’ என்று ஓர் இணைய தொடர் (மொத்தம் ஒன்பது தொடர்கள்) வெளியாகி, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.இந்தத் தொடரில் வடமாநிலங்களில் பாஜகவின் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்களை தத்ரூபமாகக் காட்டியிருக்கிறார்கள். 
ரயிலில் வந்த முஸ்லிம் ஒருவரை மாட்டிறைச்சி வைத்திருந்தார் என்று இந்துத்துவா வெறியர்கள் கொலை செய்திடும் காட்சி, கிராமங்களில் தலித்துகளுக்கும் குஜ்ஜார் இனத்தினருக்கும் இடையில் நடைபெறும் கொடூரமான சம்பவங்கள், அமைச்சர் ஒருவர் தலித்துகள் மத்தியில் சமபோஜனம் உண்டுவிட்டு, பின் வீட்டிற்குத் திரும்பியபின் தன்னுடன் கொண்டு வந்துள்ள கங்கை நீரால் தன்னைப் ‘புனிதப்படுத்திக்கொண்டு’ செல்வது முதலானவையும் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. 
மேலும் வடமாநிலங்களின் அரசியல் நிகழ்ச்சிப் போக்குகளை மக்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் பல சம்பவங்கள் அதில் இடம்பெற்றிருக்கின்றன. கதையின் ஆரம்பத்தில் நான்குபேர் ஒரு ஊடகவியலாளரைக் கொல்வதற்காகச் செல்கிறார்கள். அவர்களைக் காவல்துறையினர் வழிமறித்துக் கைது செய்துவிடுவார்கள். அவர்கள் யார் அந்த ஊடகவியலாளர் யார் என்பதில் ஆரம்பித்து சுமார் ஆறரை மணி நேரம் படமாக்கப்பட்டிருக்கிறது.
அந்த நால்வரும் கூலிக்காகக் கொலைகளைப் புரிந்திடுபவர்கள்தான். ஆனாலும் ஆட்சியாளர்கள் அதனை பாகிஸ்தான் உளவு ஸ்தாபனமான ஐஎஸ்ஐ தூண்டுதலுடன் நடைபெற்ற நிகழ்வாக மாற்றுவதாக காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன.

இத்தகு சம்பவங்கள் இத்தொடரில் இடம்பெற்றிருப்பதால் பதற்றமும் ஆத்திரமும் அடைந்து பாஜக எம்எல்ஏ வழக்கு தொடுத்திருக்கிறார் போல் தெரிகிறது. நந்த்கிஷோர் குர்ஜார், உத்தரப்பிரதேசத்தின் லோனி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர். 

அவர் இப்படத்தைத் தயாரித்த விராட் கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மாவிற்கு எதிராக, அவர்மீது தேசத்துரோகப் பிரிவின்கீழ் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று கூறி, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளார். மேலும் இத்தொடரை தடை செய்ய வேண்டும் என்று கோரி மத்திய தகவல் ஒலிபரப்புத்தறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கும் கடிதம் எழுதியிருக்கிறார். 

இவ்விரண்டையும் இவர் தன் ட்விட்டர் பக்கத்திலும் பதிவேற்றம் செய்திருக்கிறார்.   மேலும் நந்த்கிஷோர் குர்ஜார், நியூஸ்ரூம் போஸ்ட் தொலைக்காட்சியிலும் (முகக்கவசம் அணியாமல்) தோன்றி இந்தப்படத்தை அனுஷ்கா ஷர்மா எடுத்ததற்காக கிரிக்கெட் வீரர் விரோட் கோலி, அவரை விவாகரத்து செய்திட வேண்டும் என்றும் மிரட்டியிருக்கிறார்.   (ந.நி.)
கோ
நன்றி - தீக்கதிர் 29.05.2020

என்ன செய்ய உத்தேசம் மோடி?




தடம் புரண்ட ரயில்களை பார்த்துள்ளோம்.
தடம் மாறிய ரயில்கள் உங்கள் சாதனை.

பொம்மை வைத்து விளையாடிய குழந்தை,
தாயின் சடலத்தோடு விளையாடுகிறது.

உழைத்துச் சிவந்த கரங்களுடையோர்,
நடந்து நடந்து சிந்திய குருதியில்
சாலைகள் இப்போது சிவப்பாக.

சாலையில் பிரசவம் முடிந்தது.
பயணம் முடியவில்லை, துயரமும் கூட.

அக்கறையோடென்று கதைத்து
லட்சம் கோடிகள்
வசூலித்த பணம்
இன்னும் பத்திரமாய் 
உம் இரும்புப் பெட்டியில்.

திரட்டிய நிதியை
என்ன செய்வதாய் உத்தேசம்?

ஊர்ப்பணத்தை கொள்ளையடித்து
உண்டு கொழுத்தவர் 
மேலும் பெருத்துப் போக
அள்ளித் தரத்தானே
அந்தப் பணம்?


இன்னும் எத்தனை நாள்
இப்படியே கடந்து போகும்?
தேசத்தை விற்கும்
தரகராம் உம் ஆட்சிக்கு 
இறுதியுரை
எழுதாமலா போயிடுவோம்?

Thursday, May 28, 2020

எம்பி காடியே! அச்சா!

கோவைத் தோழர் கோவிந்தராஜ் ராமசாமி அவர்களின் பதிவு இது.
சூப்பர் தோழர் பி.ஆர்.என்.

படித்தவுடன் நீங்களும் சொல்வீர்கள்


திக்-திக் கடைசி 10நிமிடங்கள்.

சிபிஎம் கோவை மாவட்டக்குழு அலுவலகத்திற்கு  மூட்டை முடுச்சுகளுடன் மூன்று அசாம் மாநில தொழிலாளர்கள் வாயிலருகே வந்து நிற்க .


அப்போது அங்கு வந்த கோவை நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் PR நடராஜன் விசாரித்தார் .



இவர்களில் ஒருவர் தமிழ் அசாமி கலந்த மொழியில் இன்று அசாம்செல்லும் ரயிலுக்கு இங்கு அனுப்பி வைப்பார்களாம் கேள்விபட்டுவந்தோம் எப்படியாவது அனுப்பிவையுங்கள் என்றனர்.

இதை கேட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிஐடியு கோவைமாவட்ட செயலாளரை தொடர்பு கொண்டு கரகரத்த குரலில் தோழரே அசாம் வண்டி கிளம்பிடுச்சா என்றார்.

அதற்கு அவர் இப்போது தான் அனைவரையும் வழி அனுப்பி வைத்தேன் இருந்தாலும் என்றார் சம்மந்தப்பட்ட உயர்அதிகாரிகள் 5 நிமிடம் வண்டிநிற்கும் என்றார் . 

அவரும் கேட்டு உறுதிபடுத்திக் கொண்டார் .

நமது தோழர் மூவரை அழைத்து இருசக்கர வாகனத்தில் அழைத்துவரலாம் என்றார்.


இருப்பது ஐந்து நிமிடம் இடையில் போலீஸ் தடுப்பு இருக்கும் . தான் பயன் படுத்தும் காரில் ஓட்டுனர்தோழர் ஆனந்தை அனுப்புகிறேன்.


உடன் சிபிஎம் அலுவலக ஊழியர் தோழர் மூர்த்தியும் உதவிக்கு உடன்வருவார் என்று கூறி அசாம் தொழிலாளர்கள் மூவரையும் காரில் ஏற்றிக்கொண்டு விரைந்து சென்று ரயில் நிலையம் வந்தனர்.

அப்போது 3நிமிடங்கள்மட்டுமே எஞ்சி இருந்து அதி காரியிடம் எம்பி அனுப்பி தொழிலாளர்கள் என்றதும் ஆதார் நகலை பரிசோதித்து அனுப்பினர். 

மேலே சென்று பார்க்கும்போது அசாம் ரயில் பயணத்தை துவங்கி நகர்கிறது.


அங்கிருந்த அதிகாரிகள் உடனே ஜல்தி செலோ ஜல்தி செலோ என்று ரயிலில் ஏற உதவினர் .அப்பாட என்று தங்களை ஆசுவாசப்படுத்திக்கொண்டு இருக்கையில் அமர அருகில் இருந்தவர்கள் விசாரிக்க நடந்ததை கூறினர் .

அழைத்து வந்தவருக்கு நன்றி தெரிவிக்கவேண்டி போன் செய்தனர். அப்போது நீங்கள் ரயில்நிலையம் வந்தது எம்பி.அவர்கள் பயன்படுத்தும் வாகனம்  அவர்தான் ஏற்பாடு செய்தார் என்றார்.

 வியந்து "எம்பி காடியே அச்சா!" என்று நன்றி தெரிவித்தனர்.


இதுதான் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி செயல்பாடு!

செல்பி சவர்க்கர் என்ன கேட்பார்?

முக நூலில் தோழர் ஆதவன் தீட்சண்யா பகிர்ந்து கொண்டது. 

நீங்களும் என்னைப் போல தாராளமாக சிரியுங்கள்


ஆங்கிலம் அறியாதவர்களுக்காக

சவர்க்கர் இரவு உணவுக்காக ஒரு உணவு விடுதிக்குச் செல்கிறார்.

அங்கே உணவு பரிமாறுபவர் என்ன வேண்டும் என்று கேட்க

சற்றும் தயங்காமல்

 "கருணை" (மன்னிப்பு) 

என்று கேட்கிறார்.

பிகு:

அதென்ன செல்பி சவர்க்கர் என்று கேட்பவர்களுக்கு.

சவர்க்கரின் வீர தீர சூர பிரதாபங்களைப் பாராட்டி சித்ரகுப்தன் என்பவர் ஒரு புத்தகம் வெளியிடுகிறார். அந்த நூலில்தான் அவருக்கு "வீர சவர்க்கர்" என்று பெயர் சூட்டப்படுகிறது.

அந்த சித்ரகுப்தன் வேறு யாருமில்லை.

பிரிட்டிஷ் ராணியிடம் மன்னிப்பு கேட்ட அதே கோழை சவர்க்கர்தான். 

அங்க மாடுங்கதான் ஓட்டு போட்டாங்களாம் . . .



மொட்டைச் சாமியார் யோகி ஆளும் உத்திர பிரதேச மாநிலத்தில் ஒரு காட்சி கீழே.



ஆமாம். அங்கே மாடுகள்தான் ஓட்டு போட்டு பாஜகவை வெற்றி பெற வைத்ததாம். 

அதனால் மாட்டுக்கே என்றும் அங்கே மரியாதை . . .

Wednesday, May 27, 2020

நீங்க சிப்பு சேகரில்லை, சாரு . . .


பாவம் சாரு நிவேதிதா, 

எஸ்.வி.சேகருக்கு பால் பாக்கெட்டுக்களை மாற்றிக் கொடுத்த எடப்படி தனக்கு கெட்டுப் போன மீனுக்கு பதிலாக நல்ல மீனை மாற்றிக் கொடுப்பார் என்று நம்பி முதலமைச்சர் அலுவலக ட்விட்டர் கணக்கில் புகார் சொல்லியுள்ளார்.



என்ன ஒரு நம்பிக்கை!

அவரென்ன சிப்பு சேகர் போல சங்கியா? 
எடப்பாடியின் ஆட்சி சிப்பு சேகர் கட்சியின் தயவில் நடப்பது போல சாரு தயவிலா நடக்கிறது?
சாருவின் அண்ணி முன்னாள் தலைமைச் செயலாளரா?

பாவம், நாளை சாரு புலம்பப் போகிறார். அதனைத்தான் மேலே உள்ள படத்தில் இன்றே சொல்லியுள்ளேன்.

பிகு:

இதை எழுதி முடித்தது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சென்னை புத்தக விழாவில் கண்ட காட்சி ஒன்று நினைவுக்கு வந்தது. 

சென்னை புத்தக விழாவில் கண்டு கொள்ளப்படாத பிரபலம் என்ற பதிவை இணைப்பின் மூலமாக சென்று படியுங்கள். 

எடப்பாடி ஆட்டத்துலயே இல்லையாம்




கொரோனா வைரஸ் தொற்று பரவல் நடவடிக்கையை எந்த முதலமைச்சர் சிறப்பாக எடுக்கிறார் என்றொரு கருத்துக் கணிப்பை பார்த்தேன்.

மதிய உணவு இடைவேளையின் போதான நிலவரம் கீழே உள்ளது.





இதோ இப்போது இந்த பதிவை எழுதும் நேரத்து நிலவரம் இதோ.




கேரள முதல்வர் தோழர் பினராயி விஜயன் முன்னிலையில் இருப்பதில் எந்த வியப்பும் இல்லை.

அவருக்கு அடுத்த படியாக யோகி இருப்பதும் அவருக்கான வாக்குகள் அதிகரித்து வருவதும்தான் உதைக்கிறது. ஒடிஷாவின் நவீன் பட்நாயக் மிகவும் பின் தங்கி இருப்பது கூட சரியில்லை.

ஆனால் ஒன்றை கவனித்தீர்களா?

இந்த ஆட்டத்தில்  எடப்பாடியை சேர்த்துக் கொள்ளவே இல்லை.

இப்படி குதிச்ச பிள்ளை . . .

பாமக ஏற்றியிருந்த ஜாதி வெறி காரணமாக 

"எத்தனை தலைகளை வேண்டுமானாலும் வெட்டி ஐயா காடுவெட்டி குரு சிலை அருகில் போடுவேன். எங்களை சமாளிக்க போலீசும் போதாது, மிலிட்டரியும் போதாது"


என்று குதிச்ச இந்த பிள்ளை


காவல்துறை அறிவுரைக்குப் பின் இப்படி மாறி விட்டது


குடிபோதையில் பேசி விட்டதாம். பாவம் ஜாதி வேறு மாறி விட்டது.

இனிமேலாவது தவறான போதனைகளை பின்பற்றாமல் இருந்தால் சரி. 







கேரளாவை அழிக்க சதியா?

கீழே உள்ளது கேரள நிதியமைச்சர் தோழர் தாமஸ் ஐசக் அவர்களின் பதிவு.


மும்பையிலிருந்து கேரளாவிற்கு ஒரு சிறப்பு ரயில் வருகிறது என்ற தகவல் ரயில் புறப்பட்ட பின்பே அளிக்கப்பட்டுள்ளது. நோய்த்தொற்று நேரத்தில் பெரும்பான்மையான பயணிகளிடத்தில் பாஸ் எதுவும் இல்லை (சோதனை எதுவும் நிகழ்த்தப்படாமல் பயணிக்க அனுமதிக்கப் பட்டவர்கள்) .

கேரளாவில் நோயைப் பரப்பும் கருவியாக ரயில்வே செயல்படுகிறதா என்று கேட்டுள்ள தோழர் தாமஸ் ஐசக், இனியாவது பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள் என்று கண்டித்துள்ளார்.

கேரள மாடல் என்று உலகமெங்கும் புகழப்படுவதால் மோடி வகையறாக்களுக்கு கடுப்பு ஏறியிருக்கும் போல.


Tuesday, May 26, 2020

மோடி தொடர்வாரா? அனுமதிப்பார்களா?



இந்த வருடம் ரம்ஜான் நோன்பு தொடங்கிய போது முதல் முறையாக நரேந்திர மோடி அதற்கான வாழ்த்தை ட்விட்டரில் தெரிவித்திருந்தார். 

தேஜஸ்வி சூர்யா உள்ளிட்ட சங்கிகளின் வெறித்தனத்தால் அரேபிய உலகம் கடுப்பில் இருந்த காலம் அது.

இப்போது முதல் முறையாக ரம்ஜான் பண்டிகைக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். 



அரேபிய மற்றும் வங்க தேச அதிபர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும் தனித்தனியே பதிவிட்டுள்ளார்.

"எதிர்காலத்திலும் இதனை தொடர்வீர்கள் என்றும் உங்கள் கட்சிக்காரர்களின் வெறுப்புப் பேச்சுக்களை தடுப்பீர்கள் என்றும் நம்புகிறேன்" என்று அந்த ட்வீட்டிற்கு பின்னூட்டம் அளித்துள்ளேன்,

சங்கிகள் என்ன எதிர்வினையாற்றப் போகிறார்கள் என்று ஆவலோடு காத்திருக்கிறேன்.

ஏனென்றால்

"ரம்ஜான் வாழ்த்து சொல்வதற்காக உங்களை பிரதமராக்கவில்லை" என்றும் அதற்கு மேலும் (அந்த எழவை சொல்ல நான் விரும்பவில்லை) காலுராம் குஜ்ஜார் என்ற சங்கி பதில் ட்வீட் போட்டுள்ளார். பலரும் கண்டித்த பிறகு, அந்த ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. 


சீமான் ஸ்பெஷல் கறி இட்லி


காலையிலிருந்து முக நூலில், சீமானுக்கு பிரபாகரன் அளித்த "இட்லியை உடைத்தால் உள்ளே கறி"  கதைதான் ஓடிக் கொண்டிருக்கிறது.

மல்லிகைப்பூ இட்லி,
மசாலா இட்லி,
கைமா இட்லி,
குஷ்பூ இட்லி, 
ரவா இட்லி,
காஞ்சிபுரம் இட்லி
இட்லி ஃப்ரை,
இட்லி உப்புமா


போன்றதொரு இட்லி வகையை அறிமுகம் செய்துள்ள சீமானை அதற்காக கலாய்க்கலாமா?

பிரபாகரனை இப்படி சீமானுக்கு விருந்து சமைத்துப் போடுவதையே பிழைப்பாகக் கொண்டுள்ளவர் போல சித்தரிக்கிறாரே, அதற்கு கண்டியுங்கள்

பிகு" கறி இட்லி என்று தேடி கூகுளார் கொடுத்த படத்தைத்தான் மேலே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

மாலைப் பொழுதில் மயக்கிய . . .

நேற்று மாலை ஒரு முக்கிய பணி நிமித்தம் வெளியே சென்று கொண்டிருந்த போது சூரியனும் மேகங்களும் இணைந்து நடத்திய வர்ண ஜாலம் மனதை மயக்கியது. 

இரு சக்கர வாகனத்தை ஒரு நிமிடம் நிறுத்தி அக்காட்சியை என் அலைபேசியில் பதிவு செய்து கொண்டேன்.

அக்காட்சி உங்களுக்கும் இங்கே


Monday, May 25, 2020

யோகி, மதுவந்தி - வாய் தவறி அல்ல ,வியாதி





மதுவந்தி போல உபி முதல்வர் யோகியும் அளந்து விட்டுள்ளார்.

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் படி மூன்னூறு கோடி பேருக்கு அவரது மாநிலத்தில் மட்டும் வேலை தரப் போகிறாராம்.

அவ்வளவு பேர் உலகிலேயே இல்லை என்று நீங்கள் கருதலாம்.
வாய் தவறி சொல்லி இருப்பார் என்றும் கூட நினைக்கலாம்.

ஆனால் இதெல்லாம் வாய் தவறி சொல்வது அல்ல,

சங்கிகளுக்கே இருக்கக் கூடிய Megalomania என்ற வியாதி.  எதையும் மிகைப்படுத்தி பேசுவது என்பது அவர்களின் டி.என்.ஏ வில் இருக்கிற அம்சம். 

மோடி முதல் மதுவந்தி வரை அனைவருக்கும் இந்த வியாதி இருக்கிறது.

இதிலே இவர்கள் கொஞ்சம் கூட கூச்சப்படாத அம்சம் ஒன்றும் உண்டு. 

இவர்கள் செய்கிற ஒன்றை நூறாக, ஆயிரமாக, கோடியாக காண்பித்தால் பரவாயில்லை. 

எதுவுமே செய்யாமல் ஏராளமாக செய்ததாக கதை விடுவதுதான் கடுப்பேத்துகிறது. 

வெஜிடேரியன் கொரோனா - ராஜ குரு மூர்த்தி நடுக்கம்


கீழே இருப்பது ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ராமசந்திரன் அவர்களின் முகநூல் பதிவு.


வெஜிடேரியன் கொரோனா
சென்னை மாதாவரத்துக்கு அருகில் வெஜிடேரியன் நகர் ஒன்று இருக்கிறது. அங்கு வெஜிடேரியன்கள் மட்டுமே மனை, வீடு வாங்கவோ குடியிருக்கவோ முடியும். சவுக்கார் பேட்டையைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் இஸ்ரேலுக்குச் சென்றிருந்த போது அங்குள்ள ஒரு வெஜிட்டேரியன் கிராமத்தினால் கவரப்பட்டார். அதே போல் 1990இல் அவர் உருவாக்கியதுதான் இது. வெஜிடேரியன் கிராமம் என்று அறியப் பட்டிருந்த இந்த இடம் சென்னை மாநாகராட்சி எல்லைக்குள் வந்த போது வெஜிடேரியன் நகரானது. (ஆதாரம்: டைம்ஸ் ஆப் இந்தியா)

நிற்க,

இந்த நகர் இப்போது கொரோனா தடுப்பு மண்டலமாக அறிவிக்கப் பட்டுள்ளது. இது மிகவும் வருத்தத்திற்குரிய செய்திதான். யார் எந்த நோயினால் பாதிக்கப் பட்டாலும் மனிதர்கள் இப்படித்தான் உணர்வார்கள்.

ஆனால் நான்-வெஜிடேரியன் உணவினால்தான் கொரொனா பரவுகிறது என ஒரு திட்டமிட்ட பிரச்சாரம் நடக்கிறது. வெஜிடேரியன் உணவு சாப்பிட்டால் கொரோனா வராது என ராஜகுருமூர்த்தியே சொல்லியிருக்கிறாராம்.

குரு மூர்த்தி உடனே அங்கு குடியேறி நம் அச்சத்தைப் போக்க வேண்டுமென்று ரம்ஜான் தினத்தன்று பிரியாணி வெறியர்களின் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன்!


வாழ்த்துக்கள் சகாவு


கேரள மாநில இடது முன்னணி அரசு இன்று ஐந்தாவது ஆண்டில் பெருமையோடு அடியெடுத்து  வைக்கிறது. 


குறைந்தபட்ச அதிகாரங்களுடன் அதிகபட்ச சாதனைகள் புரிந்து வரும் மக்கள் நல அரசை நடத்திவரும் கேரள முதல்வர் தோழர் பினராயி விஜயன் அவர்களுக்கும் அவரது சகாக்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். 

நேற்று அவரது பிறந்த நாள். அதற்கும் வாழ்த்துக்கள், ஒரு நாள் தாமதமாக . . .



சிறந்த சுகாதாரம், பொதுக் கல்வி, நல்லாட்சி… தலைநிமிர்ந்து ஐந்தாவது ஆண்டில் எல்டிஎப் அரசு

திருவனந்தபுரம்:

கொள்ளைநோயை எதிர்கொள்வதில் பல முன்மாதிரிகளைப் படைத்து கேரளம் உலகின் மத்தியில் இடம் பிடித்துள்ள நிலையில் எல்டிஎப் அரசு தனது நான்கு ஆண்டுகளை திங்களன்று நிறைவு செய்கிறது. அளித்த வாக்குறுதிகளில் நிறைவேற்றாத திட்டம் ஒன்றுகூட இல்லை என்பதுதான் ஐந்தாம் ஆண்டில் காலடி வைக்கும் அரசின் தனிச்சிறப்பு. கோவிட் பின்னணியில் ஆண்டுவிழா வேண்டாம் என முடிவு செய்துள்ள போதிலும் எடுத்துக்கூற வேண்டிய நீண்ட சாதனைப் பட்டியல் அரசிடம் உள்ளது.

முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் 2016 மே 25 இல் அதிகாரத்திற்கு வந்த அரசு புதிய கேரளத்திற்கு அடித்தளமிட்டது. பெருவெள்ளமும் நிபாவும் துயரங்களும் பின்னடைவை ஏற்படுத்திய போதிலும் மறுவாழ்வுக்கான உத்வேகத்துடன் அவற்றை எதிர்கொண்டது எல்டிஎப் அரசு. பெருவெள்ளத்தில் மூழ்கிய கேரளத்தை மீட்டெடுக்கும் மகத்தான பணியைமேற்கொண்டது. இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளும் திறன்மிக்க புதிய கேரளம் படைப்பதை லட்சியமாக கொண்டது. அதற்கான செயல் திட்டத்தில் கவனம் செலுத்தும்போது கோவிட் சூழ்ந்து கொண்டது.

வகுப்புவாத மோதலற்ற கேரளம்

நாட்டின் முதலாவது கோவிட் தொற்று ஏற்பட்ட மாநிலம் கேரளம். சவால்கள் மிக கடுமையானது என்றாலும் கோவிட்டை எதிர்கொள்ளும் கேரள ‘மாதிரி’ உலகின் மிகப்பெரிய செய்தி. பாதுகாப்பான சட்டம் ஒழுங்கு, சிறந்த சுகாதாரம், பொதுக் கல்வி, மிகக் குறைந்த ஊழல், நல்லாட்சி .... என அனைத்து தளங்களிலும் கேரளம் முன்னேறிய நான்கு வருடங்கள் கடந்து சென்றுள்ளன. இந்த நான்கு ஆண்டுகளில் வகுப்புவாத மோதலுக்கு கேரளம் இடமளிக்கவில்லை. வளர்ச்சியிலும், மக்கள் நலனிலும் தீவிரமான- கற்பனைக்கு எட்டாத செயல்முறைகளை கேரளம் கடைப்பிடித்தது. 600 தேர்தல் வாக்குறுதிகளில் மிகச்சிலவற்றையே நிறைவேற்ற வேண்டியதாக உள்ளது. நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதிகள் குறித்து 2019 மே மாதத்தில் ஒரு முன்னேற்ற அறிக்கை (புராக்ரஸ் ரிப்போர்ட்) வெளியிடப்பட்டது. அதன்படி சொன்னதை விட செய்தது அதிகம்என்கிற நிறைவுடன் நான்காம் ஆண்டில் காலடிவைத்தது அரசு. சிறு தொழில் முதல் தேசியநெடுஞ்சாலை வரை கேரளம் இதுவரைகண்டிராத வளர்ச்சியை சாத்தியமாக்கி யுள்ளது.

முதலிடத்தில்...

நிதி ஆயோக்கின் சுகாதார அட்டவணை யில், தொழில் வளர்ச்சியில், பள்ளிக் கல்வி மேம்பாட்டு பட்டியலில் கேரளம் முதலிடத்தில் உள்ளது. கோவிட்டுக்கு பிந்தைய காலத்தின்மறுவாழ்வுக்கான போர்முகத்தை திறந்துஐந்தாம் வருடத்துக்குள் அரசு நுழைகிறது. அரசு நம்முன் உள்ளது என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தி, ‘உணவில் தன்னிறைவு பெற்ற’ புதிய கேரளத்தை அடைவதற்கான பாதையில் எல்டிஎப் அரசின் பயணம் தொடர்கிறது.



நம்பிக்கை அளிக்கும் எல்டிஎப் அரசு

2016 கேரள சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் 91 இடங்களை கைப்பற்றியது இடது ஜனநாயக முன்னணி. கேரள வரலாற்றில் அதிக எண்ணிக்கையில் நடந்த 8 இடைத்தேர்தல்களுக்கு பிறகு 93 வரை எல்டிஎப் உறுப்பினர் பலம் அதிகரித்தது. தற்போது 2 இடங்கள் காலியாக உள்ள நிலையிலும் 91 உறுப்பினர்கள் எல்டிஎப் வசம் உள்ளனர்.யுடிஎப் கூட்டணியில் காங்கிரஸ், கேரள காங்கிரஸ், முஸ்லீம்லீக் என முக்கிய கட்சிகள் கோஷ்டி மோதல்களில் மூழ்கி உள்ளன. முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி மீதான சோலார் ஊழல் வழக்கு, அமைச்சர்கள் மீதான பாலாரிவட்டம் மேம்பாலம் ஊழல், நில அபகரிப்பு போன்றவை மக்கள் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் நாட்டிலேயே ஊழல் குறைந்த, ஆட்சித்திறன் மிக்க எல்டிஎப் அரசின் மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது.   



நன்றி - தீக்கதிர் 25.05.2020
 

Sunday, May 24, 2020

ஒரிஜினல் நடிகர்கள் இவர்களே . . .



நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற காட்சிகள் கீழே. 





எலியும் பூனையும் போல உர்ரென்று முறைத்துக் கொண்டாலும் அதெல்லாம் வெளி வேஷம்தான்.

இருவரும் அவர்களுக்குள் மோதுவது போல நடிப்பார்கள். ஆனால் தேவைப்படும் நேரத்தில் கரம் கோர்த்துக் கொள்வார்கள்.

ஒரே ஒரு உதாரணம் சொன்னால் புரியும் என்று நினைக்கிறேன்.

சாரதா சிட்பண்ட் ஊழல் என்ன ஆயிற்று?

வானும் மண்ணும் ஒட்டிக் கொண்டதே!


ஒரு தோழர் அனுப்பிய காணொளி இது.

பொலிவியாவில் உள்ள “சாலர் டி வுயுனி” (Salar de Uyuni )என்ற பகுதி. ஒரு காலத்தில் ஏரியாக இருந்த பகுதி இப்போது பாலைவனமாக காட்சியளிக்கிறது. கடல் மட்டத்தை விட 11,995 அடி உயரத்தில் இருக்கிற இப்பகுதியில் மேகங்களும் வெண் நிற மண்ணில் அந்த மேகத்தின் பிரதிபலிப்பும் எவ்வளவு அழகாக, ஒரு கவிதையாக காட்சியளிக்கிறது என்று பாருங்கள், ரசியுங்கள். 

சொர்க்கம் என்பது இதுதானோ?




மாமதுரை அன்னவாசல் வாழியவே . . .



ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி செயல்பட வேண்டும் என்ற புதிய இலக்கணத்தை படைத்து வரும் தோழர் சு.வெங்கடேசன் அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.


மணிமேகலையின்
அட்சய பாத்திரமாய்...
மாமதுரையின் அன்னவாசல்
வேறு எந்த ஊருக்கும் இந்த பெயர் இத்தனை சரியாக பொருந்தியிருக்காது. கீழவாசல், மேலவாசல், தெற்குவாசல், வடக்குவாசல் என்ற அன்னை மீனாட்சி மாநகரின் ஐந்தாவது வாசலாக “மாமதுரை அன்னவாசல்”, மே முதல் தேதியிலிருந்து திறந்தே கிடக்கிறது... கொரோனா ஊரடங்கின் பிடியில் சிக்கி பசியோடு காத்திருக்கும் விளிம்பு நிலை மனிதர்களுக்காக... சமைத்து உண்ண முடியாத முதியவர்கள், தனித்துவிடப்பட்டவர்கள், தனித்து வாழும் பெண்கள், நடக்க முடியாத மூதாட்டிகள், மாற்றுத் திறனாளிகள், கைவிடப்பட்ட ஏழைகளுக்காக...!

மதுரை மாநகரிலும், மாவட்டத்தின் இதர பகுதிகளிலுமாக 17 மையங்களில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனின் முன்முயற்சியில்; மார்க்சிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர், புறநகர் மாவட்டக் குழுக்களின் ஒருங்கிணைப்பில்; அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் மற்றும் சிஐடியு, நடுத்தர வர்க்க சங்கங்கள் என மக்கள் இயக்கங்களின் அர்ப்பணிப்பு மிக்க 400க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்களின் ஓய்வில்லா உழைப்பில்... மாமதுரையின் அன்னவாசல் மாந்தர்க்கு உணவு அளிக்கிறது.

பிரபல திரைக் கலைஞர் சூர்யா வழங்கிய ரூ.5 லட்சம் நன்கொடை, மே 10 முதல் தினந்தோறும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முட்டைகளை வழங்கிக் கொண்டிருக்கும் சுகுணா சிக்கன் நிறுவனம் என்று துவங்கி, அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள், காய்கறிகள் உள்பட எண்ணற்ற மனிதநேய உள்ளங்கள் அன்னவாசலில் சங்கமித்திருக்கிறார்கள்.

மாமதுரையிலும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் எத்தகைய பேரிடர் ஏற்பட்ட காலங்களிலும் மக்களோடு மக்களாக, ஏதுமற்ற ஏழைகளின் - எளியவர்களின் - உழைப்பாளி மக்களின் உன்னத தோழனாக களத்தில் நின்று செயலாற்றிய இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எனும் மகத்தான செங்கொடி இயக்கம். இதோ கொரோனா ஊரடங்கு விடுத்திருக்கும் மிகப் பெரும் சவாலையும் செங்கொடி இயக்கத்தின் நாடாளுமன்ற பிரதிநிதியும், சக தோழர்களும் கையில் அன்னமேந்தி எதிர்கொண்டிருக்கிறார்கள்.

மணிமேகலையின் அட்சய பாத்திரமாய்... சு.வெங்கடேசன் எம்.பி.

2020 மே முதல் தேதியில் தொடங்கப்பட்ட “மாமதுரையின் அன்னவாசல்” மே 23 சனிக்கிழமையுடன் ஒரு லட்சம் மதியவுணவுப்பொட்டலங்கள் என்ற எண்ணிக்கையைக் கடந்திருக்கிறது. இந்த எண்ணிக்கையைச் சாதனை அளவாகக் குறிப்பிடவில்லை. ஆனால் இந்த அளவினை அடையும் முயற்சி எளிதில் நடந்துவிடவில்லை.மதுரையில் இயங்கும் ஐ.டி. நிறுவனங்கள் மனமுவந்து வழங்கிய கார்ப்பரேட் சமூக பொறுப்பு நிதி, திரைக்கலைஞர் சூர்யா, சுகுணா சிக்கன் நிறுவனத்தார் உள்பட எண்ணற்ற இயதங்களின் இணைப்பு இது...இச்செயலில் ஈடுபட்டிருக்கும் ஒவ்வொருவரும் தங்களின் உழைப்பு மற்றும் பங்களிப்பு மூலமாக மகத்தானதொரு நம்பிக்கையை நிறுவியிருக்கிறார்கள். எளிய மனிதர்களுக்காக நீளும் கைகள் எளிதில் துவண்டுவிடுவதில்லை. அவற்றின் வலிமை குன்றியதுமில்லை. மாமதுரையின் அன்னவாசல் பசித்த வயிறுகளுக்காக அகல திறந்து கொண்டே போகிறது, மணிமேகலையின் அட்சயபாத்திரமாய்...

மாமதுரை அன்னவாசல் திட்டம் குறித்து நித்யா மெஸ் மேற்பார்வையாளர் பிரபு:

எங்களுடைய உணவகத்தில் இருந்து அன்னவாசல் திட்டத்திற்காக தினசரி 1500 பேருக்கு உணவு சமைத்துக் கொடுக்கின்றோம். மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் உணவு பாதுகாப்பு கழக அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வுகள் மேற்கொண்ட பின்பு தான் உணவு தயாரிப்பதற்கான அனுமதி வழங்கினார்கள். தினசரி காலை 4 மணிக்கு உணவு சமைக்கும் பணியினை துவங்கி விடுவோம். 11 மணிக்கு உணவுப் பொட்டலங்கள் போட்டு வைத்துவிடுவோம். உணவு விநியோகிக்கும் தொண்டர்கள் அவற்றை எடுத்து மதுரை நகரில் உள்ள ஆதரவற்றவர்கள் மற்றும் முதியோர், ஏழை குடும்பங்களுக்கு விநியோகம் செய்து விடுவார்கள். தினசரி ஒருவகை உணவு என்ற அடிப்படையில் சாம்பார் சாதம், தக்காளி சாதம், வெஜிடபிள் பிரியாணி, குஸ்கா, லெமன் சாதம் என்று கொடுத்து வருகிறோம், அதோடு தற்போது ஒரு முட்டையும் வழங்கி வருகிறோம். இந்த உணவு தயாரிப்பு முறை என்பதும் கூட உணவு பாதுகாப்பு துறை சார்பில் தேர்வு செய்யப்பட்ட உணவு. தேங்காய் சேர்க்கக்கூடாது. புளியோதரை சாதம் வழங்கக்கூடாது என நிபந்தனைகளை அரசுத் தரப்பில் கூறியுள்ளார்கள். எனவே தினசரி இந்த வகையான உணவுகள் மட்டுமே பொது மக்களுக்கு வழங்குவதற்கு தயாரிக்கப்படுகிறது. மேலும் மதுரை மக்களவை உறுப்பினருக்கு நன்றியையும் நாங்கள் தெரிவித்துக்கொள்கிறோம். தற்போது இந்த உணவு தயாரிப்பதன் மூலம் எங்கள் உணவகத்தில் பணியாற்றும் 15 குடும்பங்கள் வேலைவாய்ப்பு பெற்று உள்ளது என்பது ஒரு பாராட்டுக்குரிய விஷயம். இதுபோன்ற ஒரு நீண்ட ஊரடங்கு காலத்தில் ஏராளமானோர் வேலையின்றி கஷ்டப்படும் நேரத்தில் எங்களுக்கு தற்போது இந்த உணவு தயாரிக்கும் பணி என்பது பெரும் ஆதரவாகவும் மக்களுக்கு உணவு அளிக்கின்றோம் என்ற மகிழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது.


சிபிஎம் மதுரை அரசரடி பகுதிக்குழு செயலாளர் கு.கணேசன்:

இதற்கு முன் இதுபோன்ற ஊரடங்கு நிலையினை மக்கள் அனுபவித்து இருக்கமாட்டார்கள். அருகில் நின்று பேசுவதற்கு கூட மிகப்பெரும் பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய நிலையில் எங்கள் பகுதியில் தினசரி 300 நபர்களுக்கு உணவு சமைத்து கொடுக்கின்றோம். காலை 9 மணிக்கு சமையல் பணிகள் துவங்கி 11 மணிக்கு பொட்டலங்கள் போடப்பட்டு அதை 35 தோழர்கள் எங்கள் பகுதிக்கு உட்பட்ட கோச்சடை, பெத்தானியாபுரம், அரசரடி, சொக்கலிங்கநகர், சம்மட்டிபுரம், காளவாசல் ஆகிய பகுதிகளில் விநியோகம் செய்கின்றார்கள். இதுபோன்ற ஒரு பெரும் நோய் தொற்றினால் ஏற்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காலத்தில் மதுரையின் மக்களவை உறுப்பினர் ஏற்பாட்டில் ஒரு வேளை உணவை சமூகத்தில் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்துள்ள மக்களுக்கு வழங்குவதில் பெரும் மகிழ்ச்சியாக உள்ளது.


சிபிஎம் பழங்காநத்தம் பகுதிக்குழு செயலாளர் கா. இளங்கோவன்:

தினசரி 250 நபர்களுக்கு உணவு சமைத்து கொடுக்கின்றோம். கட்சி தோழர்களான மேரியம்மாள், மீனாட்சி ஆகிய இரண்டு தோழர்கள் சமைக்கும் பணியில் ஈடுபடுகின்றார்கள். 15 பேர் கொண்டகுழு இந்த உணவினை தினசரி பழங்காநத்தம் பகுதிக்குழுவிற்கு உட்பட்ட மாடக்குளம், முனியாண்டிபுரம், கோபலிபுரம், தண்டல்காரன்பட்டி, பசுமலை அண்ணாநகர், பைக்காரா, பழங்காநத்தம் ஆகிய பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றவர்கள், தனித்து வாழும் பெண்கள், முதியவர்களுக்கு விநியோகிக்கிறது.இப்பகுதியில் உள்ள மக்களும் கேஸ் சிலிண்டர் மற்றும் உணவு சமைப்பதற்கு நிதி, பொருட்கள் கொடுத்து உதவுகின்றார்கள். மக்களிடம் மாமதுரை அன்னவாசல் திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


சிபிஎம் மேலப்பொன்னகரம் பகுதிக்குழு செயலாளர் வை.ஸ்டாலின்:

எங்கள் பகுதியில் 10 முதல் 15 வரை உள்ள வார்டு பகுதிகளில் உள்ள முதியவர்கள், தனித்து வாழும் பெண்கள், விதவைகள் என்று தினசரி 200 பேருக்கு மாமதுரை அன்னவாசல் திட்டத்தின் கீழ் 10 பேர் கொண்ட குழு உணவு வழங்கி வருகின்றார்கள். உணவு சமைப்பதில் இருந்து பொட்டலங்கள் கட்டுவது வரை கட்சி குடும்பங்களைச் சேர்ந்த தோழர்கள் பணிகளை செய்து வருகின்றார்கள். சில பகுதிகளில் உள்ள தன்னார்வலர்கள் நேரடியாக இங்கு வந்து வாங்கி மக்களுக்கு வழங்கி வருகின்றார்கள்.


சிபிஎம் முனிச்சாலை பகுதிக்குழு செயலாளர் ஜெ.லெனின்:

எங்கள் பகுதியில் தினசரி 200 பேருக்கு உணவு அளித்து வருகின்றோம். வீட்டில் சமைக்கமுடியாத முதியவர், கட்டுமான வேலை செய்யும் தொழிலாளிகள், டிரைசைக்கிள் ஓட்டும் தொழிலாளி, தனித்து வாழும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் விதவைகள் என்று மிகவும் நலிவடைந்தவர்களுக்கு வழங்கி வருகின்றோம். மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஏப்ரல் 29 ஆம் தேதி நாங்கள் மக்களுக்கு சமைத்து கொடுக்க துவங்கினோம். மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மே முதல் தேதியில் இருந்து “மாமதுரை அன்னவாசல்” திட்டம் அறிவித்து தடையின்றி சமைத்து கொடுப்பதற்கு வழி செய்தார். உணவு தினசரி சமைத்து கொடுப்பதை பார்த்து இப்பகுதியில் உள்ள சில பிரமுகர்களும் நிதி மற்றும் பொருள் உதவிகள் செய்கின்றார்கள். 45 தோழர்கள் உணவு பொட்டலங்களை பார்சல் செய்வதில் இருந்து மக்களுக்கு விநியோகம் செய்யும் வரை பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.


சிபிஎம் மீனாம்பாள்புரம் பகுதிக்குழு செயலாளர் ஏ.பாலு:

மீனாம்பாள்புரம் பகுதி குழு சார்பில் சக்கரை செட்டியார் படிப்பகத்தில் தினசரி 300 நபர்களுக்கு உணவு சமைக்கப்படுகிறது. இதில் கைத்தறி தொழிலாளிகள், விதவைகள், முதியோர், தனித்து வாழும் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என்று எங்கள் பகுதியில் உள்ள 5, 6 மற்றும் 41 வது வார்டு பகுதிகளில் உள்ள இதுபோன்ற நபர்களுக்கு வழங்கி வருகிறோம் தினசரி வழங்குவது அம்மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பணியில் 16 தோழர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.


சிபிஎம் செல்லூர் பகுதி குழு செயலாளர் ஜா. நரசிம்மன்:

அன்னவாசல் திட்டம் என்பது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது தற்போது மீடியாக்கள் மூலம் மதுரை மக்களவை உறுப்பினர் ஒருவேளை உணவு வழங்குவதன் மூலம் ஒரு பேருதவி செய்துள்ளார் என்பது பொதுமக்களிடையே பரவலாக தெரிந்துள்ளது. செல்லூர் பகுதிக்குட்பட்ட விளாங்குடி, அண்ணாநகர் பகுதியில் இருந்து மதிச்சியம் வரை உள்ள பகுதிகளில் வாழும் கைத்தறி தொழிலாளர்கள், சமையல் கலைஞர்கள், நாடக கலைஞர்கள், மாற்றுத்திறனாளிகள், தனித்து வாழும் பெண்கள், சமைக்க முடியாத முதியவர்கள் என்று 250 பேருக்கு தினசரி உணவினை வழங்கி வருகிறோம் பாக்கியநாதபுரம் பகுதியிலுள்ள கே. டி. கே. தங்கமணி நகர் பகுதியில் சமையல் பணிகள் நடைபெறுகின்றது. இப்பணியில் 24 பேர் தொண்டர்களாக பணியாற்றி வருகிறார்கள்.


சிபிஎம் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன்:

மதுரை நகரில் விளிம்பு நிலையில் உள்ள பலதரப்பட்ட மக்கள், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டவுடன் உணவின்றி சிரமப்படுவதை கருத்தில் கொண்டு மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் “மாமதுரை அன்னவாசல்” திட்டம் என்பதை முன்வைத்தார்.அதன்படி தினசரி மதியம் ஒருவேளை உணவு என்பதை மக்களுக்கு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டு “மே முதல்” தேதியன்று உணவு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டது. இத் திட்டத்திற்கு மதுரை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து நிதியை பலரும் அனுப்புவதற்கு முன்வந்த நிலையில் அந்த நிதி மற்றும் உணவு தயாரிப்புக்கான பொருட்களை நிர்வகிப்பதற்கு 10 பேர் கொண்ட குழுவினை ஏற்படுத்தி, அதனை அவர்கள் மேற்கொண்டு வருகின்றார்கள். மதுரை மாநகர் - புறநகர் என்று மொத்தம் 17 இடங்களில் சமையல் பணி நடைபெற்று வருகின்றது. சமைக்கப்படும் இடத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கட்சி தோழர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என்று மதியம் 12 மணிக்கு எடுத்து சென்று மக்களுக்கு விநியோகம் செய்து வருகின்றார்கள். சமூக அர்ப்பணிப்போடு பல்வேறு பணிகளை மேற்கொண்டுவரும் அதேவேளையில் இப்பணியினையும் மேற்கொண்டு வருவது பாராட்டுக்குரியது.


மாதர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.கே.பொன்னுத்தாய்:

அன்னவாசல் திட்டத்தில் உணவு தயாரிக்கும் பணிகளில் மாதர் சங்கத் தோழர்கள் உள்பட தன்னார்வலர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பங்கேற்கிறார்கள். உணவுப் பொட்டலங்களை விநியோகிக்கும் இளம் தோழர்களின் ஒவ்வொரு நாள் அனுபவமும் கண்களை குளமாக்குகிறது. வறிய நிலையில் இருக்கும் முதியவர்கள், தனித்து வாழும் பெண்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோர் யாரேனும் உணவு தரமாட்டார்களா என ஏங்கி நிற்கும் வேளையில், உணவு அளிக்கும் தோழர்களின் கைகளை பிடித்து கண்ணீர் விடுவதும், நன்றி சொல்வதும், என்றென்றும் மறக்க முடியாத அனுபவங்கள்.


சிபிஎம் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன்:

மதுரை புறநகர் மாவட்டத்தில் குலமங்கலம், நாகமலை புதுக்கோட்டை, சமயநல்லூர், பொதும்பு, எஸ்.ஆலங்குளம், சத்திரப்பட்டி, அழகர்கோவில், மணப்பட்டி, மேலூர், யா.ஒத்தக்கடை, வண்டியூர் ஆகிய 12 பகுதிகளில் தினந்தோறும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு மாமதுரை அன்னவாசல் திட்டத்தின் கீழ் உணவளித்து வருகிறோம். இப்பணியில் தன்னலமின்றி அர்ப்பணிப்பு உணர்வுடன் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை ஈடுபட்டுள்ள அனைத்து தோழர்களுக்கும் வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம்.


வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.பாலா:

கொரோனா ஊரடங்கு காலம் முழுவதிலும் மதுரை மாநகர் மற்றும் புறநகர் மாவட்டங்களில் பல்வேறு சமூக பணிகளிலும், அன்னவாசல் திட்டத்திலும் துடிப்புமிக்க களப் பணியாளர்களாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தோழர்களும் பணியாற்றுகின்றனர். அர்ப்பணிப்பின் அடையாளமாக மட்டுமின்றி, உணவு தேவைப்படுகிற எளிய மனிதர்களை தேடி தேடி பட்டியல் எடுத்து, ஒவ்வொரு நாளும் எண்ணிக்கையை அதிகரித்து கொண்டே செல்வதில் இந்த தோழர்களின் பணியும் பங்கும் அலாதியானது.

===- ஜெ.பொன்மாறன்===

நன்றி - தீக்கதிர் 24.05.2020