Saturday, June 29, 2019

உங்க தலைவிக்கும் சொல்லுங்க அம்மணி



திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி திருமதி மஹுவா மொய்த்ராவின் முதல் மக்களவைப் பேச்சு பரபரப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

மோடி அரசு ஒரு பாசிஸ அரசு என்று அவர் சூடாக பேசுகிறதை நானும் காணொளியிலும் பார்த்தேன். நன்றாகத்தான் பேசினார் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.  தங்களின் கல்லூரிப் பட்டத்தைக் கூட காண்பிக்க முடியாத அமைச்சர்கள் உள்ள நாட்டில் ஏழை மக்களிடம் தாங்கள் இந்நாட்டு குடிமக்கள் என்பதை நிரூபிக்க என்ன ஆவணம் இருக்கும் என்ற கேள்வி சரிதான்.

மோடி பாசிஸ ஆட்சி நடத்துகிறார் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.

அதே சமயம் மஹூவா மொய்த்ரா சார்ந்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தில் நடத்துவது என்ன ஜனநாயக ஆட்சியா?

குண்டர்களையும் ரௌடிகளையும் வைத்து ஆட்சி நடத்துகிற மம்தாவின் ஆட்சி மோடி ஆட்சியின் மேற்கு வங்க வெர்ஷன். அவ்வளவுதான்.

முந்தைய பதிவொன்றில் சொன்னது போல இப்போது மேற்கு வங்கத்தில் நடப்பது "பேய்க்கும் பேய்க்கும் சண்டை"

ஆகவே திருமதி மஹூவா மொய்த்ரா அவர்களே  உங்கள் உரையில் சொல்லப்பட்ட அனைத்து நியாயங்களையும் உங்கள் தலைவிக்கும் சொல்லி அவரை திருத்த முயலுங்கள், உங்களால் முடியுமென்றால். 

ஒரே நாடு, ஒரே தேர்தல் – ஒரே பொய், ஒரே மோசடி




மக்களவைக்கும் அனைத்து மாநிலங்களின் சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்ற யோசனையை  மேலோட்டமாக பார்த்தால் செலவினத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்தக் கூடிய நல்ல ஆலோசனை போல தோன்றலாம். ஆனால் மத்தியரசு முன்மொழிந்துள்ள ஆலோசனைகள் எல்லாம் அபாயகரமானவை.

துவக்க காலத்தில் மக்களவைத் தேர்தல் நடந்த போது அதோடு இணைந்துதான் மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தலும் நடந்து கொண்டிருந்தது. ஜனநாயக விரோதமாக சட்டப்பேரவைகள் கலைக்கப்பட்டதுதான் மாறுபட்ட காலங்களில் தேர்தல்கள் நடக்க காரணமானது. சில மக்களவைகள் பதவிக்காலத்திற்கு முன்பே கலைக்கப்பட்டதும் இன்னொரு காரணம்.

இப்போதைய முன்மொழிவுகள் படி ஒரே சமயத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்றால் பதவிக்காலம் முடியும் முன்பே சில சட்டப் பேரவைகளுக்கு தேர்தல் நடத்த வேண்டியிருக்கும். ஐந்தாண்டு காலம் செயல்பட வேண்டிய சட்டப் பேரவைகளை முன்பே கலைப்பதோ அல்லது சட்டப்பேரவைகளின் காலத்தை நீட்டிப்பதோ, இரண்டுமே சரியில்லை.

ஐந்தாண்டு காலத்திற்குள்ளாக பெரும்பான்மை இல்லாத காரணத்தால் ஒரு சட்டப் பேரவையை கலைக்கும் சூழல் ஏற்பட்டால் உடனடியாக தேர்தல் நடத்துவதற்குப் பதிலாக மக்களவைத் தேர்தல் வரை அந்த ஆளுனரின் பொறுப்பில் ஆட்சியை ஒப்படைப்பது என்பது ஜனநாயகத்திற்கு முரணானது. அது போல மக்களவையில் பெரும்பான்மை இல்லாத போது குடியரசுத் தலைவரின் ஆட்சியை அமலாக்குவது என்பதும் சரியாக இருக்காது. அதிகாரக்குவியலுக்கே இது இட்டுச் செல்லும்.

உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமானால் 2021 ல் எடப்பாடி ஆட்சி முடிந்து விடும். மக்களவைத் தேர்தலோ 2024 ல் தான் வரும். அதுவரை எடப்பாடியின் ஆட்சி தொடரலாம் அல்லது 2024 வரை ஆளுனர் ஆட்சி அமலில் இருக்கும்.

இது அடுக்குமா? 

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது தற்போதுள்ள ஆட்சியாளர்கள் ஒரே பொய்யை மக்களவைக்கும் மாநிலங்களுக்கு சொல்லவும் செய்யும் மோசடியை ஒரே நேரத்தில் செய்வதற்கும் வசதியாக இருக்கும் என்பதற்காகத்தான்.

பாஜக, அதன் கூட்டணிக்கட்சிகள் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் இந்த முன்மொழிவை நிராகரித்துள்ளனர். காங்கிரஸ், திமுக, திரிணாமுல் போன்ற கட்சிகள் இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தையே புறக்கணிக்க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர், இது ஏன் ஜனநாயக விரோத நடவடிக்கை என்று விளக்கமாக ஒரு கடிதமே அளித்துள்ளார்.

தன் வறட்டுப் பிடிவாதத்தை மத்தியரசு கை விட வேண்டும். அதுதான் இந்திய ஜனநாயகத்திற்கு நல்லது.


நாளை முதலும் ஓய்வில்லை தோழா!




எங்கள் தென் மண்டலக் கூட்டமைப்பின் துணைத்தலைவரும் தஞ்சைக் கோட்டச் சங்கத்தின் தலைவருமான தோழர் ஆர்.புண்ணியமூர்த்தி இன்று எல்.ஐ.சி பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.

முப்பத்தி ஒன்பது ஆண்டு காலம் எல்.ஐ.சி நிறுவனத்திலும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்திலும் பணியாற்றிய அறுபது வயது இளைஞர் தோழர் ஆர்.புண்ணியமூர்த்தி அவர்களின் பணி ஓய்வுக் காலம் அமைதியாய், ஆரோக்கியமாய், சமூகத்திற்கு பயனுள்ளதாய் அமைய வேலூர் கோட்டத்தின் அனைத்துத் தோழர்களின் சார்பிலும் இனிய நல் வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம்.

கிட்டத்தட்ட இருபத்தி ஏழு ஆண்டு கால தோழமை அவரோடு உண்டு. எங்கள் இருவருக்கும் ஒரு ஒற்றுமையும் உண்டு. இருவரின் மனைவியும் குடந்தையைச் சேர்ந்தவர்கள். அவரது மனைவி என் மாமனாரின் மாணவியும் கூட.

தஞ்சைக் கோட்டம் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்திற்கு அளித்த தலைவர்களின் பட்டியல் நீண்டது. தோழர்கள் ஆர்.கோவிந்தராஜன், என்.ஸ்ரீனிவாசன், கே.லட்சுமணன். எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி என்ற பட்டியலில் அவர்களால் வார்த்தெடுக்கப்பட்டு இணைந்தவர் தோழர் ஆர்.புண்ணியமூர்த்தி.

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதவர். அனைத்து பிரிவு ஊழியர்கள், அதிகாரிகள், முகவர்களோடும் நெருக்கமானவர், ஆனால் எந்த ஒரு நேரத்திலும் ஊழியர்கள் நலனிலோ, சங்கத்தின் நலனிலோ சமரசம் செய்து கொள்ளாதவர்.

சங்கப்பணிகள் தாண்டி அவரது எல்லைகள் மிகவும் விரிவானது. தொழிலாளர் வர்க்க இயக்கங்களிலும் சமூக நீதிக்கான இயக்கங்களிலும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.  தமிழகத்தின் பல கோட்டங்களுக்கு முன்னோடியாக தஞ்சைக் கோட்டம் இருப்பதற்கான அடித்தளம் இவர்.

தகவல்களின் களஞ்சியம் இவர். சில நேரங்களில் செய்திகளை முந்திக் கொடுப்பவரும் கூட. மனிதர்களைப் பற்றிய கணிப்பும் நூற்றுக்கு நூறு சரியாக இருக்கும். அது எனக்கு மிகவும் உதவிகரமாகவும் இருந்துள்ளது.  

துல்லியமான திட்டமிடல் ஒரு சிறப்பம்சம்.  தனக்குள்ள தொடர்புகளை சங்கத்திற்காகவும் மக்களுக்காகவும் பயன்படுத்துவதை சுனாமியின் போதும் கஜா புயலின் போதும் நேரில் பார்த்துள்ளேன்.

வெடிச்சிறப்பும் உரத்த குரலும் அவரது அடையாளம். தென் மண்டல  செயற்குழுக் கூட்டங்களின் உணவு இடைவேளை நேரம் அவரது சிரிப்புக்களால் நிறைந்திருக்கும். 

ஓய்வு பெறும் வயது அறுபது என்று நிர்ணயிக்கப்பட்டதால் அவர் இன்று எல்.ஐ.சி பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.

ஆனால் இன்றைய அரசியல், சமூக சூழல் அவருக்கு ஓய்வளிக்காது. சவால்கள் நிறைந்த இன்றைய சூழலில் எல்.ஐ.சி நிறுவனத்திற்கு அவர் அளித்த நேரமும் இனி உழைக்கும் மக்களுக்கானது என்பது மகிழ்ச்சியே

நீண்ட ஆயுளோடும் புகழோடும் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் தோழர் புண்ணியமூர்த்தி . . .

பிகு: ஆரணியில் நடைபெற்ற எங்கள் கோட்டச்சங்க மாநாட்டு ஓவியக் கண்காட்சியை திறந்து வைத்த போது எடுத்த படம்




Friday, June 28, 2019

இனிமே யாராவது பெயர் கேப்பீங்க?



எங்கள் போளூர் கிளைத் தோழர் சங்கர் பகிர்ந்து கொண்ட காணொளி.

நல்லதொரு நகைச்சுவைக்கு உத்தரவாதம்



யாராவது அந்த பெயரை சரியாக சொல்ல முடியுமா என்று முயற்சித்து பாருங்களேன்.

பம்மல் கே.சம்பந்தம் படத்தில் "கல்யாணம்" என்ற வார்த்தையை சொல்லாமல் உவ்வே என்று கமலஹாசன் ஒரு ரியாக்சன் காண்பிப்பார். 



அது போல வேறு ஒரு ரியாக்சன்! அதையும் முயற்சிக்க வேண்டும்.


இந்தியா ஜெயிக்கனும் - பாகிஸ்தானியர்கள்



தேசபக்தர்களே கேளுங்கள்!

இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் ஞாயிறன்று கிரிக்கெட் போட்டி. முன்னாள் இங்கிலாந்து அணித் தலைவர் நாசர் ஹுசேன் பாகிஸ்தானியரிடம் ஒரு கேள்வி கேட்டிருந்தார். 

இந்தப் போட்டியில் யாருக்கு உங்கள் ஆதரவு என்பதுதான் கேள்வி. 

உலகத்தின் பல பகுதிகளில் வசிக்கும் பாகிஸ்தானியரில் பெரும்பாலோனோர் எங்கள் அண்டை நாடான இந்தியாவுக்குத்தான் என்று பதிலளித்திருக்கின்றனர். 

அதில் ஒருவர் நான் இந்தியாவின் மூவர்ணக் கொடி சட்டையை அணிவேன். அன்று முழுவதும் இந்திப் படப் பாடல்களை மட்டுமே கேட்பேன் என்கிறார். 

இன்னொருவர், கிழக்கிந்தியக் கம்பெனிக்கு நான் ஆதரவு தர மாட்டேன். அண்டை நாடான இந்தியாதான் வெல்ல வேண்டும் என்கிறார். 

ஜெய் ஶ்ரீராம்!

ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரன் அவர்களின் முக நூல் பதிவு

Thursday, June 27, 2019

பி.எஸ்.என்.எல் உண்மை என்ன?


பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் நிலவும் பிரச்சினைகள் பற்றியும் அதன் பலம், பலவீனம் பற்றியும் ஆட்சியாளர்களின் பாராமுகம் பற்றியும் பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்கத்தின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் தோழர் பி.அபிமன்யு வெளியிட்டுள்ள அறிக்கையை முழுமையாக படியுங்கள்.

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை பாதுகாப்போம் என்ற குரல் ஒன்றுபட்டு வலிமையாக எழ வேண்டிய நேரம் இது.




மத்திய சங்கத்தின் பத்திரிகைச் செய்தி

17.6.2019 அன்று,  பி.எஸ்.என்.எல்.   நிர்வாகத்தால் தொலைதொடர்பு இலாகாவுக்கு எழுதப் பட்ட கடிதத்தால் எழுந்துள்ள சில குழப்பங்களுக்கு தெளிவு ஏற்படுத்துவதற்காக  பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கம் இந்த பத்திரிகை செய்தியை வெளியிடுகிறது. பி.எஸ்.என்.எல்.   நிறுவனத்தின் நிதி நிலைமை மிக மோசமாக உள்ளதென்றும், தேவையான நிதி உடனடியாக விடுவிக்கப் படவில்லை என்றால் ஜூன் மாத ஊதியத்தை ஊழியர்களுக்கு வழங்குவதற்கும், பி.எஸ்.என்.எல்.   நிறுவனத்தின் அன்றாட வேலைகளைத் தொடர்வதற்கும் சிரமம் ஏற்படும் என்று இக்கடிதத்தில் பி.எஸ்.என்.எல். நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. 

இக்கடிதத்தின் அடிப்படையில், ஊழியர்களையும் பொது மக்களையும் தவறாக வழிகாட்டும் வகையில் பல ஊடகச் செய்திகள் வெளியிடப் பட்டு வருகின்றன. பி.எஸ்.என்.எல்.  வாடிக்கையாளர்களை தனியார் நிறுவனங்களுக்கு மாறி விடுமாறு ஆலோசனை கூறும் அளவுக்கு ஓர் ஊடகச் செய்தி வெளியாகியுள்ளது.

தற்போது, பி.எஸ்.என்.எல்.   மட்டுமல்ல, ஒட்டு மொத்த தொலைதொடர்பு துறையும் அவசர சிகிச்சை பிரிவில் உள்ளது.
 ரிலையன்ஸ் ஜியோ நடைமுறைப்படுத்தி வரும் கழுத்தறுப்பு கட்டணங்களின் காரணமாக பல்வேறு நிதி நெருக்கடிகள் இத்துறையின் குரல்வளையை நெரிக்கின்றன.

 செப்டம்பர் 2016- இல் சேவைகளைத் துவக்கிய காலம் முதல் அடக்க விலைக்குக் குறைவாகவே ஜியோ நிறுவனம் சேவைகளை வழங்கி வருகிறது. பெரும் நிதி வலிமை உள்ள ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது போட்டியாளர்களை வெளியேற்றுவதற்காக இத்தகைய நிலைபாட்டை எடுத்து வருகிறது. அரசாங்கமும், டிராய் அமைப்பும் ஜியோ நிறுவனத்துக்கு  ஓசைப் படாமல் தங்களின் ஆதரவை வழங்கி வருவது துரதிருஷ்ட வசமானது. 

அதன் விளைவாக, பி.எஸ்.என்.எல்.  உள்ளிட்ட அனைத்து தொலைதொடர்பு நிறுவனங்களின் வருமானமும் தலை கீழாக அதல பாதாளத்துக்குச் சரிந்துள்ளன.

ரிலையன்ஸ் ஜியோவின் காட்டுமிராண்டித் தனமான கட்டணப் போர் முறையால், ஏற்கனவே ஏர்செல், டாடா டெலி சர்வீசஸ், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ஃபோகாம், டெலினார் உள்ளிட்ட பல தொலைதொடர்பு நிறுவனங்கள் மூடப் பட்டு விட்டன. பி.எஸ்.என்.எல்.  இன் செயல் திறன் குறித்துப் பேசுவோர், ஒரு விஷயத்தை மறக்கக் கூடாது. இன்றிருப்பதைக் காட்டிலும் ஒரு லட்சம் ஊழியர்கள் கூடுதலாக இருந்த காலத்தில், 2004-05 ஆம் ஆண்டில் நிகர லாபமாக 10,000 கோடி ரூபாயை  நிறுவனம் ஈட்டியது இதே பி.எஸ்.என்.எல்.  நிறுவனம்தான்.

ஆனால், அதன் பின்னர், 7 ஆண்டுகள் நீண்ட காலத்திற்கு, கட்டமைப்புகளை விரிவுபடுத்துவதற்கான  புதிய கருவிகள் வாங்குவதற்கு பி.எஸ்.என்.எல்.  நிறுவனத்தை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் அனுமதிக்கவில்லை. பி.எஸ்.என்.எல்.  நிறுவனம் விடுவித்த டெண்டர்கள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக ரத்து செய்யப் பட்டன.

 இது பி.எஸ்.என்.எல்.  நிறுவனத்தின் வளர்ச்சியைக் கடுமையாகப் பாதித்தது.

மேலே சொல்லப் பட்ட நெருக்குதலுக்குப் பிறகும் கூட,  பி.எஸ்.என்.எல்.   நிறுவனம் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தது – ரிலையன்ஸ் ஜியோ வரும் வரை. 

2014-15 நிதியாண்டு முதற்கொண்டு, பி.எஸ்.என்.எல்.  நிறுவனம் செயல்பாட்டு லாபத்தைத் தொடர்ந்து ஈட்டி வந்தது.

2015- ஆம் ஆண்டு தனது சுதந்திர தின உரையின் போது கூட, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள்,  நிறுவனம் செயல்பாட்டு லாபத்தை ஈட்டத் துவங்கியுள்ளதைப் பெருமையோடு குறிப்பிட்டார். 

இன்றைய நிதி நெருக்கடிகளுக்கு இடையிலேயும், பி.எஸ்.என்.எல்.   நிறுவனம், தனது மொபைல் வாடிக்கையாளர் தளத்தைத் தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது.

உதாரணமாக, 2017-18- ஆம் ஆண்டில், பி.எஸ்.என்.எல்.  நிறுவனத்தின் மொபைல் வாடிக்கையாளர்கள் 11.5 % அதிகரித்தனர். ஆனால் இதே ஆண்டில் ஏர்டெல் மொபைல் வாடிக்கையாளர்கள் 9.5 % -உம், வோடஃபோன் 3.8% - உம், ஐடியா நிறுவனம் 3.2% மட்டுமே அதிகரித்தன. 

ஏப்ரல் 2019 மாதத்தில் கூட, பி.எஸ்.என்.எல்.  நிறுவனம் 2,32,487 புதிய மொபைல் வாடிக்கையாளர்களை இணைத்திருந்தது. ஆனால் ஏர்டெல் 29,52,209 மொபைல் வாடிக்கையாளர்களை இழந்திருந்தது ; வோடஃபோன் 15,82,142 வாடிக்கையாளர்களை இழந்திருந்தது. 

நிதி நிலை குறித்து பேசினாலும் கூட, தனியார் நிறுவனங்களோடு ஒப்பிடும் போது, பி.எஸ்.என்.எல்.  நிறுவனத்தின் நிலை அந்த அளவு மோசமல்ல.

 இன்றைய தேதியில், பி.எஸ்.என்.எல்.  றுவனத்தின் கடன் 13,000 கோடி ரூபாய் மட்டுமே. ஆனால் வோடஃபோன் ஐடியா நிறுவனம் 1,18,000 கோடி ரூபாயும், ஏர்டெல் நிறுவனம் 1,08,000 கோடி ரூபாயும் கடன் வைத்துள்ளன. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கூட 1,12,000 கோடி ரூபாய் அளவுக்கு மிகப் பெரிய கடன் சுமையைக் கொண்டுள்ளது. மேலும், பி.எஸ்.என்.எல்.  நிறுவனத்தின் நிதி அடித்தளம் போதுமான வலிமையானதாகவே உள்ளது.

 7.5 லட்சம் வழித்தட கிலோ மீட்டர் அளவு கண்ணாடி இழை வலைக் கட்டமைப்பு  பி.எஸ்.என்.எல்.  நிறுவனத்திடம் உள்ளது.  ஆனால், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திடம் 6.25 லட்சம் வழித்தட கிலோமீட்டரும், ஏர்டெல் நிறுவனத்திடம் 2.5 லட்சம் வழித்தட கிலோமீட்டரும், வோடஃபோன் ஐடியா நிறுவனத்திடம் 1.6 லட்சம் வழித்தட கிலோ மீட்டரும் மட்டுமே உள்ளன.

நாடு முழுவதும் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான காலியிடங்கள்    பி.எஸ்.என்.எல்.  நிறுவனத்திடம் உள்ளது.  வேறு எந்த நிறுவனத்திடமும் இவ்வளவு பெரிய சொத்துக்கள் இல்லை.
மேற் சொன்ன இத்தனை வலிமைகள் இருந்தும்,   பணப் புழக்கம்  வருவதில் கடுமையான குறைவை  பி.எஸ்.என்.எல்.   நிறுவனம் சந்தித்து வருகிறது. தொலைதொடர்பு துறைக்கு இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடியினாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்திய அரசாங்கமே பி.எஸ்.என்.எல்.  நிறுவனத்தின் 100% பங்குதாரராகும்.

பி.எஸ்.என்.எல்.   நிறுவனத்தின் சொந்தக்காரர் என்ற முறையில்,  பி.எஸ்.என்.எல்.  நிறுவனத்தின் குறுகிய கால மற்றும் நீண்ட கால மூலதன தேவைகளைப் பூர்த்தி செய்வது அரசாங்கத்தின் கடமையாகும். 

பி.எஸ்.என்.எல்.    நிறுவனம் தொடங்கப் பட்டு கடந்த  பதினெட்டரை ஆண்டுகள் காலமாக, மக்களின் வரிப்பணத்திலிருந்து ஒரு நயா பைசா கூட நிதி உதவியாக பி.எஸ்.என்.எல்.   நிறுவனம் பெறவில்லை என்று கூறுவது மிகையானதல்ல.

இயற்கைப் பேரிடர்கள் ஏற்படும் போதெல்லாம் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ளும்போது அரசாங்கத்துக்குக் கை கொடுப்பது  பி.எஸ்.என்.எல்.  நிறுவனம் மட்டுமே.

இந்த காலங்களில், தனியார் நிறுவனங்கள், தங்கள் பொறுப்புகளிலிருந்து விலகிக் கொள்கின்றன.

அது மட்டுமன்றி,  பின் தங்கிய வட்டாரங்களில் வாழும் மக்கள் தங்கள் தொலைதொடர்பு தேவைகளுக்கு  பி.எஸ்.என்.எல்.  நிறுவனத்தை மட்டுமே நம்பியுள்ளனர். 

எனவே,  பி.எஸ்.என்.எல்.  நிறுவனத்தின் நிதி ஸ்திரத் தன்மையை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கே உள்ளது.

மத்தியில் அதிகாரத்துக்கு வந்த தொடர்ச்சியான அனைத்து அரசாங்கங்களும்  பி.எஸ்.என்.எல்.  நிறுவனத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடனேயே நடத்தி வந்துள்ளன.

இன்று வரையும் இதே நிலைமை தொடர்கிறது.

உதாரணமாக, மொபைல் சேவை வழங்குவதற்கு தனியார் நிறுவனங்களுக்கு 1995- ஆம் ஆண்டிலேயே அனுமதி வழங்கப் பட்டது.

ஆனால், மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்.   - க்கு, 2002- ஆம் ஆண்டில்தான் மொபைல் சேவை அனுமதி வழங்கப் பட்டது. அது போலவே, 4 ஜி சேவை வழங்குவதற்கான அனுமதி தனியார் நிறுவனங்களுக்கு 5 ஆண்டுகள் முன்னரே வழங்கப் பட்டது. ஆனால் அரசாங்கம் பி.எஸ்.என்.எல்.  நிறுவனத்திற்கு 4 ஜி அலைக்கற்றையை இன்னும் வழங்கவில்லை.

இவ்வாறு, அரசாங்கத்தின் கொள்கை முடிவுகள்தான்,  நிறுவனத்தின் வளர்ச்சிக்குக் கடுமையான தடைகளை ஏற்படுத்தி உள்ளன 

2000- ஆம் ஆண்டு, பி.எஸ்.என்.எல்.  றுவனம் உருவாக்கப் பட்ட போது, பி.எஸ்.என்.எல்.  நிறுவனத்தின் நிதி ஸ்திரத் தன்மை பாதுகாக்கப் படும் என்று மத்திய மந்திரிசபை உறுதி அளித்திருந்தது. ஆனால், இந்த வாக்குறுதி காகிதத்தில் மட்டுமே உள்ளது.

தொலை தொடர்பு துறையின் உண்மையான கட்டுப்பாட்டாளர் பி.எஸ்.என்.எல்.  நிறுவனம் மட்டுமே.

பி.எஸ்.என்.எல்.  நிறுவனம் சந்தையில் இருப்பதால் மட்டுமே, தனியார் நிறுவனங்கள் கட்டணங்களை உயர்த்த முடியாமல் உள்ளன.

பி.எஸ்.என்.எல்.   நிறுவனம் மூடப் பட்டால், வாடிக்கையாளர்கள் மீது இரக்கமற்ற கட்டணக் கொள்ளையைத் தனியார் நிறுவனங்கள் நடத்துவார்கள்.

 எனவே, இந்திய நாட்டு மக்களுடையவும், நாட்டினுடையவும் பரந்துபட்ட நலன்களைக் கருத்தில் கொண்டு,  நிறுவனத்தைப் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.


பி. அபிமன்யு,
பொதுச் செயலாளர்,
ஊழியர் சங்கம்.

அம்மா இல்லை, இலையும் இல்லை



ஆமாம்

இனி  

அ  - அம்மா
ஆ - ஆடு
இ -  இலை

என்றெல்லாம் குழந்தைகளுக்கு சொல்லித்தர மாட்டார்களாம்.

அதற்குப் பதிலாக பாஜகவின் செயல்திட்டத்தை அரங்கேற்றி உள்ளார்கள்.

ஒன்றாம் வகுப்புப் புத்தகத்தில் கூட கொலைகாரர்களின் முழக்கம் வந்து விட்டது.

தமிழ்ப் புத்தகத்திற்கு இப்படி ஒரு நிலைமை!

பாரதியின் வெள்ளைத் தலைப்பாகைக்கு காவிச்சாயம் பூசிய கயவர்கள் ஆட்சியில் என்ன வேண்டுமானாலும் நடக்கும்!

பிகு: சர்ச்சைக்குரிய அந்த தமிழ்ப் பாடப் புத்தகத்திற்கு தேவையற்ற விளம்பரம் அவசியமில்லை என்பதால் அப்படத்தை வெளியிடாமல் தவிர்த்துள்ளேன்.




Tuesday, June 25, 2019

அடுத்து என்ன பாஸ் உடன்கட்டையா?




கர்னாடக இசைக்கலைஞர் திருமதி சுதா ரகுராமனின் மகள் ஒரு ஆப்பிரிக்கரை திருமணம் செய்து கொள்ளப் போகிறார்.

நம் கலாச்சாரக் காவலர்களுக்கு இது போதாதா?

தன்னை வசை பாடுகிறார்கள் என்று பொய்யாய் புலம்பும் ஜெயமோகன் படித்தால் வசை என்றால் என்ன என்று புரிந்து கொள்வார்.

கொச்சையாக, ஆபாசமாக பேசுவது தொடங்கி, அவர் ஏதோ மிகப் பெரிய துரோகம் செய்து விட்டதாகவும் அதனால் அவரை தியாகராஜ ஆராதனை தொடங்கி எந்த சபாவிலும் மேடையேற்றக் கூடாது என்பது வரை ஏராளமான கட்டளைகள்.

அது மட்டுமல்ல இனிமேல் பால்ய விவாகங்களை அனுமதிக்க வேண்டுமாம். அப்போதுதான் இது போன்ற இழிவுகள் நடக்காதாம்.

அடப்பாவிகளா!

திருமணம் என்பது அடிப்படையில் அந்த குடும்பத்து விஷயம். திருமணம் குறித்து முடிவெடுக்கும் முதன்மையான உரிமை மணப்பெண்ணும் மணமகனுக்குமே உண்டு.பெற்றோருக்கே அந்த முடிவில் தலையிடும் உரிமை கிடையாது என்பதுதான் சட்டபூர்வமானது.

அப்படி இருக்கையில் அதில் தலையிட ஊரான் உங்களுக்கெல்லாம் என்ன உரிமை உள்ளது?

எத்தனையோ எதிர்ப்புக்கள், கலவரங்கள், ஆணவக் கொலைகள் இருந்தும் கூட இயல்பான ஜாதி மறுப்பு, மத மறுப்பு திருமணங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

ஒரு பிரபலத்தின் மகள் மத மறுப்பு திருமணம் செய்து கொள்வதால் பொங்கி எழும் புத்திசாலிகளே, இன்று பால்ய விவாகம் வேண்டும் என்று கோரும் அறிவாளிகளே, நாளை யாராவது ஒரு பிரபலத்தின் விதவை மகள் மறுமணம் செய்து கொண்டால் மீண்டும் உடன்கட்டை முறையை கொண்டு வரச் சொல்வீர்களோ?

மீண்டும் சொல்கிறேன்.

திருமணங்கள் அந்த குடும்பத்தின் சொந்த விஷயம். அதில் தலையிட ஊராருக்கு உரிமையில்லை.

உங்களால் அதனை ஏற்க முடியவில்லையென்றால்
நீங்கள் வேண்டுமானால் தற்கொலை செய்து கொள்ளுங்கள்.
அதற்கு உங்களுக்கு உரிமை நிச்சயமாக உண்டு.

ஜெய் ஸ்ரீராம் –ராமரே ஓடி விடுவார்





ஜெய் ஸ்ரீராம் – ராமர் மீது பக்தி உள்ளவர்களின் முழக்கம் என்று கருதப்பட்ட முழுக்கம்   அயோத்தி கோயில் பிரச்சினையை சங்கிகள் அரசியல் ஆதாயத்திற்காக கையிலெடுத்த பின்பு அரசியல் முழக்கமானது.

மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்த உடன் அது கலவரக்காரர்களின் முழக்கமாக மாறியது.

ஆம்

தேர்தல் முடிவு வெளி வந்தவுடன் இஸ்லாமியர்கள் மீது நடைபெற்ற நான்கு தாக்குதல் சம்பவங்களின் போதும் சங்கிகள் அவர்களை “ஜெய் ஸ்ரீராம்” என்று முழக்கமிடச் சொல்லியே தாக்கியுள்ளார்கள்.

மக்களவை உறுப்பினர்கள் பதவியேற்கையில் அது வெறுப்பின் அடையாளமாக, திணிப்பின் அடையாளமாக மாறியது.

ஆம்

தமிழ் வாழ்க என்றும் தந்தை பெரியார் வாழ்க என்றும் அண்ணல் அம்பேத்கர் வாழ்க என்றும் சொல்லி பதவியேற்றவர்களுக்கு “ஜெய் ஸ்ரீராம்” என்று சொல்லி எதிர் வினையாற்றி தங்களின் வெறுப்பை வெளிப்படுத்தினார்கள்.

இப்போது அது கொலைகாரர்களின் முழக்கமாக மாறி விட்டது.

ஜார்கண்ட் மாநிலத்தில்  மாட்டுக் குண்டர்களால் கொல்லப்பட்ட  தப்ரீஸ் அன்சாரி என்ற இளைஞனையும் முழக்கமிடச் சொல்லி கட்டாயப்படுத்தி உள்ளனர்.

நாளை ராமர் இங்கே வந்தால் கூட “ஜெய் ஸ்ரீராம்” என்ற முழக்கத்தைக் கேட்டால் தன் உயிரைக் காத்துக் கொல்ல ஓட்டம் பிடித்து விடுவார்.



Monday, June 24, 2019

நிஜ "டாக்" செக்யூரிட்டி சர்வீஸஸ்



காலையில் போட்ட பதிவு அழகு பற்றியது.

இப்போதைய பதிவு யதார்த்தம் குறித்தது.

காதல் மன்னன் படத்தில் கிரீஷ் கர்னார்ட் பிளாக் டாக் செக்யூரிட்டி சர்வீஸஸ் என்று நடத்துவதாக காண்பித்திருப்பார்கள்.

ஆனால் இங்கோ?

காட்பாடி ரயில் நிலையம் சென்று வீடு திரும்பினால் வீட்டு வாசலில் கதவை திறக்க முடியாமல் ஒரு நாய்க் கூட்டமே ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. 



ஹாரன் சத்தத்திற்கெல்லாம் அசைய மாட்டோம் என்று அலட்சியமாக இருந்தார்கள். பின்பு சத்தம் போட்டு விரட்டியதும் அவர்கள் செக்யூரிட்டி சர்வீஸ் வேலையை செய்ய பக்கத்து வீட்டு வாசலுக்கு போய் விட்டார்கள்.



இயற்கை, அழகு என்றோடு மட்டும் இருப்பதல்ல வாழ்க்கை, இது போன்ற இம்சைகளும் நிறைந்ததுதான். 

அதிகாலை ஐந்து மணி அளவில்

இன்று காலை ஐந்து மணி அளவில் மகனை ரயிலேற்ற காட்பாடி சென்ற போது வேலூர்  காட்பாடி பாலத்தை கடந்த போது வானம் அவ்வளவு அழகாக இருந்தது.

வண்டியின் பின்னே அமர்ந்திருந்த அவனை அந்த அழகை அலைபேசியில் பதிவு செய்யச் சொன்னேன்.

அந்த புகைப்படங்கள் கீழே






இயற்கை அளிக்கும் வண்ணக்குவியலை மிஞ்ச எந்த ஒரு ஒவியராலும் முடியாது!

Sunday, June 23, 2019

இது கசப்பான "அல்வா"


ஆள்வோர்கள் மாறினாலும்
அமைச்சர்கள் மாறினாலும்
"அல்வா" தயாரிப்பது மட்டும்
மாறுவதே இல்லை.

வரிச்சலுகை,
வரி விடுமுறை,
ஊக்கத் தொகை,
உள்ளதெல்லாம் தள்ளுபடி
என
நெய் சொட்டும் 
"அல்வா"வாய் 
முதலாளிகளுக்குச் செல்வதும்
மாறுவதே இல்லை.

ஏழை, எளிய மக்களுக்கு
காணக்கூட கிடைக்காத
காலிப் பாத்திரம்
என்பதிலும் மாற்றம் இல்லை.

பிகு: மக்களை வணங்கி ஓட்டு கேட்காத
ஒருவர் அல்வாச் சட்டியை வணங்குகிறார்

இனி "மனுச வெட்டிங்களா" மருத்துவரய்யா?



"இனிமே மரவெட்டினு சொன்னால் சொல்றவனைத்தான் வெட்டி போடனும்.... நாய்களா... கம்முனாட்டிகளா....
சண்டாளங்களா."-ராமதாஸ்.

தமிழ் படைப்பாளிகள் பேரியக்க கருத்தரங்கில் தெறித்து விழுந்த நாட்டார் இலக்கிய வசனம்..

இந்த வீர வசனத்தைப் படிக்கையில் என் மனம் இயல்பாகவே 30.04.2013 அன்றைக்குச் சென்று விட்டது.


மேலேயுள்ள இணைப்பிற்குச் சென்று பழைய பதிவைப் படியுங்கள். 

2013 ம் ஆண்டில் கூட அவர்கள் மரம் வெட்டிகளாகத்தான் இருந்துள்ளார்கள் என்பது புரியும்.

டயர் நக்கிகள் என்று இவர்களால் வர்ணிக்கப்பட்டவர்களுடன் இப்போது இணக்கமாக உள்ளார்கள். நாளை ஏதாவது மீண்டும் ஒரு கலவரம் செய்து மருத்துவரய்யாக்கள் கைது செய்யப்படும் நிலை உருவானால் 

"குடிசை கொளுத்திகள்" என்று இப்போது பதவி உயர்வு பெற்றிருந்தாலும்  

"மரம் வெட்டிகள்"  மீண்டும்  வலம் வருவார்கள்.

இந்த உண்மையைச் சொல்பவர்களை வெட்டிப் போடனும் என்று சொல்கிற உங்களை

இனி "மனுச வெட்டி" என்று அழைத்தால் என்ன?

Saturday, June 22, 2019

"விஜய்'க்காக மெல்லினமே!



நடிகர் விஜய் பிறந்த நாள் வாழ்த்தாக அவரது ஷாஜகான் படத்தின் 'மெல்லினமே மெல்லினமே" பாடலை என் மகன் வயலினில் வாசித்த  


பார்த்து ரசியுங்கள்


அந்த லெட்டர் தமிழில் இருந்திருக்குமோ?



"ஒரே நாடு, ஒரே தேர்தல்" (இது பற்றி விரிவாக பிறகு எழுதுவேன்)  பற்றி விவாதிக்க நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அதிமுக சார்பாக போன தமிழக மப்பு அமைச்சர் சி.வி.சண்முகத்தையும் "காஷ்மீர், பியூட்டிபுல் காஷ்மீர்" புகழ் எம்.பி நவனீத கிருஷ்ணனையும்  அரங்கத்திற்கு  உள்ளே அனுமதிக்காமல் துரத்தி விட்டார்கள்.

காரணம் என்ன தெரியுமா?

அக்கூட்டம் கட்சித் தலைவர்களுக்கானதாம். கடிதமே அப்படித்தான் அனுப்பியுள்ளார்களாம். எந்த கட்சியின் சார்பில் யார் கலந்து கொள்ள வேண்டும் என்று அரசு முடிவெடுப்பது எல்லாம் சரியல்ல என்பது வேறு விஷயம்.

ஆனால் வந்த கடிதத்தை ஒழுங்காக படித்தார்களோ என்னவோ தெரியவில்லை, வேறு ஆட்களை அனுப்ப பாஜக அரசு கூட்டணிக் கட்சியான அதிமுக வை அசிங்கப்படுத்தி திருப்பியனுப்பி விட்டது.

மத்தியரசு அனுப்பிய கடிதம் ஒரு வேளை தமிழில் இருந்திருக்குமோ? 

பாஜக கூட்டணிக்குப் பிறகு இவங்களுக்குத்தான் தமிழே பிடிக்கறதில்லையே!  

Friday, June 21, 2019

ஊழல்வாதிகள் ஓடி வாங்க . . .


ஊழலே இல்லாத நேர்மையான கட்சி பாஜக என்று சங்கிகள் பீற்றிக் கொள்வார்கள், அது ஜமுக்காளத்தில் வடிகட்டிய அபத்தமான பொய் என்று தெரிந்த போதும் கூட.

கடலை மிட்டாய் முதல் போர் விமானம் வரை ஊழல் செய்யும் உத்தமர்கள் கட்சியில் யாராவது இணைய வேண்டும் என்றால் அதற்கான தகுதி என்ன தெரியுமா?

மிகப் பெரிய மோசடிப் பேர்வழியாக இருக்க வேண்டும்.

சாரதா சிட்பண்ட் ஊழலில் மம்தாவின் வலது கையாக இருந்து சி.பி,ஐ யால் கைது செய்யப்பட்ட முகுல் ராய் பாஜக வில் இணைந்ததும் உத்தம புத்திரன் ஆகி விட்டார்.

தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்கள் நால்வர் நேற்று அப்படியே கூண்டோடு கைலாசமாக பாஜகவில் மூழ்கி விட்டனர்.  மூழ்க அது என்ன நதியா இல்லை சாக்கடையா என்று கேட்காதீர்கள்.

நால்வரில் ஒருவர் வங்கி மோசடி காரணமாக சி.பி.ஐ வழக்கு விசாரணையில் உள்ளவர். இன்னும் இருவர் வீட்டிற்கு இப்போதுதான் வருமான வரித்துறையினர் சோதனைக்குப் போனார்கள்.

கட்சித்தாவல் தடைச்சட்டம் காரணமாக பதவிப் பறிப்பு நடக்கக் கூடாது என்பதற்காக இன்னொருவரையும் அழைத்துப் போய் விட்டார்கள். அவருக்கு என்ன பேரமோ?

"ஊழல் செய்வோரே, ஓடி வாருங்கள்  எங்களிடம்"
 என்பதுதான் 
பாஜக விடுத்துள்ள நற்செய்தி

Thursday, June 20, 2019

ஏன் கேரளத் தண்ணி வேணாம் எடப்பாடி?




தமிழகத்தில் அதிலும் குறிப்பாக சென்னையில் நிலவுகிற தண்ணீர் பஞ்சத்தினை சமாளிக்க தமிழகத்திற்கு உதவும் பொருட்டு தினசரி இருபது லட்சம் லிட்டர் தண்ணீரை ரயில் மூலம் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு அனுப்ப கேரள அரசு முன் வந்துள்ளது.

தோழர் பினராயி விஜயனின் இந்த முன்மொழிவை கேரள முதல்வர் அலுவலகத்திலிருந்து தமிழக முதல்வர் அலுவலகத்தில் தெரிவித்து உள்ளனர். 

உங்கள் மாநில தண்ணீர் அவசியமில்லை என்று எங்கள் முதலமைச்சர் மறுத்து விட்டதாக நம் மாநில அதிகாரிகள் தெரிவித்து விட்டனர்?

ஏன் எடப்பாடி ஏன்?

கேரளாவிலிருந்து தண்ணீர் வந்தால் உமக்கு என்ன பிரச்சினை?

தண்ணீர் பஞ்சம் என்பது மாயை என்ற உமது அறிக்கை பொய்த்துப் போய் விடும் என்பதாலா?

கேரள மாநிலத்திலிருந்து தண்ணீர் பெற்றால் உங்க எஜமான் மோடி கோவித்துக் கொள்வார் என்பதாலா?

தண்ணீர் இல்லாமல் கழிவறைகள் பூட்டப்பட்ட அரசு மருத்துவ மனையில் படுத்துக் கொள்ளாமல் நாம்தான் அப்பல்லோவில் அட்மிட் ஆகியுள்ளோமே! கேரளத் தண்ணீர் நமக்கு தேவையில்லை என்ற அலட்சியமா?

நாடாளுமன்றத் தேர்தலில் நம்மை தோற்கடித்த மக்கள் தண்ணீருக்காக அலைந்து சாகட்டும் என்ற நல்லெண்ணமா?

ஏன் எடப்பாடி? ஏன்? 


முன்னுரிமை இதற்குத்தான் மோடி



இந்த படத்தை முழுமையாக (காயம் மறைக்கப்பட்டுள்ளது)  பார்க்கும் போதே பதறியது.

 செய்தியை  படிக்கும் போது இன்னும் அதிகமாக பதறியது.

மஹாராஷ்டிர மாநிலத்தில் வார்தா வில் ஒரு ஆலயத்துக்குள் நுழைந்த ஒரு தலித் சிறுவனின் ஆடைகளை அகற்றி வெறும் தரையில் வெயிலில் உட்கார வைத்ததில் அச்சிறுவனின் பின் பக்கம் வெந்து போய் விட்டது.

காட்டுமிராண்டித்தனம் என்பதைத் தவிர வேறென்ன சொல்வது?

"ஒரே நாடு, ஒரே தேர்தல்" என்று ஜனநாயக விரோதமான ஒரு நடவடிக்கைக்காக நேரத்தை வெட்டியாக விரயம் செய்வதற்குப் பதிலாக

"அனைவருக்குமான நாடு, அனைவருக்குமான உரிமைகள்"

என்று சிந்தித்து அதனை அமலாக்க முயற்சி செய்யவும் மோடி. 

இதுதான் உடனடித் தேவை

Wednesday, June 19, 2019

பானி பூரி ஆசை - செம நக்கல் . . .


எழுத்தாளர், கவிஞர் திரு டி.கே.கலாபிரியாவின் ஒத்தை வரி பதிவு கீழே . . செம நக்கல் இது.


" திருவிழாவில் ஒரே ஒரு குழந்தை பானி பூரி ஆசையில் வழி தப்பிவிட்டதோ" 





இது மலை விழுங்கி மகாதேவன் குடும்பத்துக் குழந்தை. ஐந்தாண்டுகளில் தேனி மாவட்டத்தையே கூட விழுங்கி விடலாம். 

என்ன தேர்தல் ஆணையம் வாழ்க, தேர்தல் ஆணையத்து எஜமான் மோடி வாழ்க என்று சேர்த்து முழங்கி இருக்கலாம்

மாலனுக்கு ஏன் எரியுது?



தமிழகத்தின் மக்களவை உறுப்பினர்கள் (ஓபிஎஸ் மகன் நீங்கலாக) நேற்று பதவியேற்கையில் அழுத்தமாக தடம் பதித்து இந்தியாவையே நேற்று தமிழகத்தின்பால் திரும்ப வைத்துள்ளார்கள்.

"தமிழ் வாழ்க"  என்று முழக்கமிட்டால் தமிழ் எதிரிகளுக்கு கோபமோ பதட்டமோ வந்தால் அது இயல்பானது. "தமிழ் வாழ்க" என்ற முழக்கம் அவர்களின் இந்தித் திணிப்பு முயற்சிக்கு எதிரானது என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். 

தமிழ் எழுத்தாளர், தமிழ்ப் பத்திரிக்கையாளர் என்று சொல்லப் படுகிற மாலனுக்கு ஏன் "தமிழ் வாழ்க" என்ற முழக்கத்தின் மீது அவ்வளவு எரிச்சல்?

"எந்த மொழியில் கையெழுத்திட்டார்கள்? அதெல்லாம் அவைக் குறிப்பில் பதியாது தெரியுமா?"

என்றெல்லாம் ஏன் புலம்பிக் கொண்டே இருக்கிறார்?

புரியவில்லையா?

சிம்பிள்

தேர்தலுக்குப் பிறகும்  பேக்கரி டீலிங் தொடர்கிறது.
வாங்கிய எலும்புத்துண்டுகளுக்காக இன்னும் நன்றாகவே வாலாட்டுவார்.  

Tuesday, June 18, 2019

திருப்பதி நாராயணா தேவையா இது!


சங்கி திருப்பதி நாராயணனுக்கு செம பதில் இது.

அந்தாளோட திமிரால அவங்க கோடீஸ்வர எம்.பிக்கள்தான் அசிங்கப் ப

திருப்பதி பொய்- கேவல பாஜக


பாஜக வதந்தித் தொழிற்சாலை பொறுப்பாளர் மது கிஷ்வர் ஒரு புதிய புரளியை உலவ விட்டார்.

ஜெகன் மோகன் ரெட்டி இந்துவாக மாறி விட்டார் என்ற புரளி எடுபடாதா கடுப்பின் விளைவு போல.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவராக யெஹோவா வின்சென்ட் சுப்பாராவ் என்ற கிறிஸ்துவரை நியமித்து விட்டார். இது அடுக்குமா என்று ஓவராக ஒப்பாரியிட முட்டாள் சங்கிகளும் ஜால்ரா தட்ட 

பாவம் அந்த சுப்பாராவ்!

அய்யா நான் யெற்றம் வெங்கட சுப்பாராவ், இந்துதான். 
என்று எல்லா ஆவணங்களையும் வெளியிட்டுள்ளார்.

இவரது நியமனத்தைக் கண்டித்து இன்போசிஸ் சுதா மூர்த்தி ராஜினாமா செய்து விட்டார் என்ற இன்னொரு  கதை வேறு.

முந்தைய அரசின் நியமனம் என்பதால் பதவி விலகியதாகவும் இந்த அரசு பதவி அளித்தாலும் ஏற்கத் தயாராக இருப்பதாக அவரும் அறிவித்து விட்டார்.

இதெல்லாம் பாஜக தவறில்லை. 

கேவலமான அக்கட்சியை ஆதரிக்கும் ...................... தவறு 


Monday, June 17, 2019

அமித் ஷா புத்தி அவ்வளவுதான்

“பாகிஸ்தான் மீது மற்றுமொரு தாக்குதல். அதே விளைவு” என்று குதூகலப்பட்டு இந்திய கிரிக்கெட் அணியை வாழ்த்தியிருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. 

வெற்றியைக் கொண்டாடுவதில் பிரச்சினை இல்லை. அதை அரசியலாகப் பார்த்து ‘தேசபக்தியை’ வளர்ப்பதுதான் அபாயம். 

அப்படிப் பார்த்தால் அபத்தமான முடிவுகளுக்குத்தான் வரவேண்டியிருக்கும். 
இது வரை இரு நாடுகளுக்கும் இடையே நடந்திருக்கும் 59 டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் 12 இலும் இந்தியா 9இலும் வென்றிருக்கின்றன.

131 ஒரு நாள் போட்டிகளில் 74 இல் பாகிஸ்தானும், 56 இல் இந்தியாவும் வென்றிருக்கின்றன.

பாட்டில் தோற்று விட்டால் இந்தப் பாண்டிய நாடே எனக்கு அடிமை என்கிற மன நிலையிலிருந்து மீளவில்லை இந்த வித்யாசாகர்கள். 

இதில் விசேஷம் என்னவென்றால் கிரிக்கெட் வீரர்கள் அந்த மேட்சை மற்றொரு போட்டியாகத்தான் பார்த்திருக்கிறார்கள். 

ஆட்ட களத்திற்குள் செல்லும் முன் அணி சகாக்களிடம் 
என்ன சொல்வீர்கள்  என்று தோனியைக் கேட்ட போது அவர் சொன்னது: Guys, enjoy the game. 

அதாவது விளையாட்டை மகிழ்ச்சியாக
அனுபவித்து ஆடுங்கள்.

_பத்திரிக்கையாளர் Front line விஜயசங்கர் அவர்களின் முகநூல் பதிவிலிருந்து..._

எல்லாம் சரிதான். ஆனால் அமித்ஷாவுக்கு புத்தி அவ்வளவுதானே!

Sunday, June 16, 2019

அழிவின் விலை 1500 கோடி ரூபாய்


தூத்துக்குடி ஸ்டெரிலைட் மூடப்பட்டுள்ளதால் 1500 கோடி ரூபாய் லாபம் குறைந்துள்ளதாக வேதாந்தா அகர்வால் புலம்பியுள்ளார்,

இந்தியா தாமிரத்தை இறக்குமதி செய்கிறதே என்று முதலைக் கண்ணீர் வேறு.

இவர் லாபம் குறையாமல் இருக்க ஒரு ஊரே அழிய வேண்டுமா?

1500 கோடி ரூபாய் அகர்வாலுக்கு.
மக்களுக்கு 
அழிவுதான்


Saturday, June 15, 2019

புளிச்ச மாவு பிரச்சினை - வருத்தம்தான்

புளிச்ச மாவு பிரச்சினை காரணமாக ஜெமோ சிறு காயம் அடைந்தது வருத்தம்தான்.

அவரது வாய் எப்படி என்று எல்லோருக்கும் தெரியும். எல்லோரும் அமைதியாக இருக்க மாட்டார்கள் என்பதை அழகியல் அனுபவமாக எடுத்துக் கொள்வார் என்று நம்பினேன்.

சிறு காயமாக இருந்தாலும் போலீஸ் கேஸை ஸ்ட்ராங் ஆக்க மருத்துவமனையில் படுத்துக் கொண்டு கொலை முயற்சி போல பில்ட் அப் கொடுத்து பதிவு எழுதியதிலும் அந்த வருத்தம் போய் விட்டது.


Friday, June 14, 2019

சாம்பலாகித்தான் மீளுமோ வங்கம்?



மேற்கு வங்கம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. “பேய்க்கும் பேய்க்கும் சண்டை”  என்பது போல ஏற்கனவே பாஜக குண்டர்களுக்கும் திரிணாமுல் குண்டர்களுக்கும் இடையே வெட்டு குத்து கலவரம் நடந்து கொண்டிருக்கிறது.

இப்போது மருத்துவர்களின் வேலை நிறுத்தமும் அதற்கு ஆதரவாக மற்ற தரப்பினரும் களமிறங்க, அனைத்தையும் இரும்புக்கரம் கொண்டு நசுக்க மம்தா அம்மையார் முயற்சிக்க மாநிலம் முழுதுமே பதட்டத் தீயில் வெந்து கொண்டிருக்கிறது.

சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவை போல மேற்கு வங்கம் இனிதான் உயிர்த்தெழும் போல!

எண்ணெய்ச்சட்டியிலிருந்து எரியும் அடுப்பில் குதித்த மூடத்தனத்தை இப்போது வங்க மக்கள் புரிந்து கொள்வார்கள். மக்கள் பக்கம் நிற்கும் தோழன் மார்க்சிஸ்ட் என்பதை புரிந்து கொண்டு மீண்டும் வருவார்கள்.