கடந்த 19, 20 தேதிகளில் எங்கள் வேலூர் கோட்டச்சங்கத்தின்
31 வது பொது மாநாடு பண்ருட்டியில் மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது.
பண்ருட்டி கிளைத் தோழர்கள் அயறாது பணியாற்றி அனைத்து அம்சங்களிலும் மாநாட்டை அற்புதமாய் நடத்தினார்கள். மகளிர் தோழர்கள் அசத்தினார்கள். மாநாடு முடிந்த மறுநாளே மாலை ஒரு குடும்பப் பயணத்திற்கு புறப்பட்டு விட்டதால் மாநாடு குறித்து எதுவும் எழுத நேரமில்லாது போய் விட்டது.
கொஞ்சம், கொஞ்சமாய் பகிர்ந்து கொள்ள ஏராளமான விஷயங்கள் உள்ளது.
அதற்கு முன்பாக மாநாடு குறித்து தீக்கதிர் நாளிதழில் வந்த மூன்று செய்திகளை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க வேலூர் கோட்ட மாநாடு பண்ருட்டியில் துவங்கியது
கடலூர், ஆக.19-
காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கத்தின் வேலூர் கோட்ட 31வது பொது மாநாடு பண்ருட்டியில் ஞாயிறன்று (ஆக.19) துவங்கியது.இந்த மாநாடு திங்களன்றும் (ஆக. 20)தொடர்ந்து நடைபெறுகிறது.இம் மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியையொட்டி ‘எல்ஐசி பாதுகாப்போம்’ என்ற முழக்கத்துடன் எழுச்சிமிக்கப் பேரணி நடைபெற்றது. காந்தி சாலை அரசு மேனிலைப்பள்ளி அருகிலிருந்து தொடங்கிய பேரணியை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர் எஸ். துரைராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியின் வழி நெடுகிலும்கட்டுமான சங்கம், பொதுத்தொழிலாளர் சங்கம், ஆட்டோ தொழிலாளர் சங்கம், மின் ஊழியர் மத்தியஅமைப்பு, ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, சுமைப்பணி தொழிலாளர் சங்கங்களின் சார்பில் சாலைகளில் நின்று கொண்டு மாநாட்டை வாழ்த்தி முழக்கமிட்டனர்.
இதனைத் தொடர்ந்து என்.எம்.சுந்தரம் நினைவரங்கத்தில் நடைபெற்ற பொது மாநாட்டிற்கு வேலூர்கோட்டத் தலைவர் எஸ்.பழனிராஜ் தலைமை தாங்கினார். சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் கடலூர் மாவட்டச் செயலாளரும், வரவேற்புக்குழுவின் தலைவருமான வி. உதயகுமார் வரவேற்றார். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் அகில இந்தியபொதுச் செயலாளர் வி.ரமேஷ் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார்.
தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் ஆர்.தர்மலிங்கம், இணைச் செயலாளர் எஸ். சிவசுப்பிரமணியன், துணைப் பொருளாளர் வி. ஜானகிராமன், எல்ஐசி முதல் நிலைஅதிகாரிகள் சங்கத்தின் வேலூர் கோட்டத் தலைவர் பி. துளசிராமன், வளர்ச்சி அதிகாரிகள் வேலூர் கோட்டப் பொதுச் செயலாளர் சி.சிவராமன், வேலூர் கோட்டமுகவர் சங்க பொதுச் செயலாளர்கள் ஜே.கே.என். பழனி, தா.வெங்கடேசன் ஆகியோர் மாநாட்டை வாழ்த்திப் பேசினர்.
மாநாட்டில் புதுவணிகம் மற்றும் புதுப்பித்தல் இயக்கத்தில் முதலிடங்கள் பெற்ற முகவர்கள் கவுரவிக்கப்பட்டனர். அதிக மதிப்பெண்கள் பெற்ற 10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது. வேலூர் கோட்டப் பொதுச் செயலாளர் எஸ்.ராமன் நன்றியுரையுடன் துவக்க மாநாடு நிறைவடைந்தது.பின்னர் மாலையில் பண்ருட்டி இந்திராகாந்தி சாலை அருகே மக்கள் ஒற்றுமை கலைவிழா நடைபெற்றது. புதுவை சப்தர்ஹஸ்மி குழு, நடனம், நாடகம், புதுகை பூபாலம் குழுவினரின் அரசியல் நையாண்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், சங்கத்தின் பொறுப்பாளர் சாத்தூர் லட்சுமணப் பெருமாள் ‘தாய் மண்ணே வணக்கம்’ என்ற தலைப்பில் உரையாற்றினார். வரவேற்புக்குழுச் செயலாளர் ஏ.ஜெயப்பிரகாஷ் நன்றி கூறினார்.
மக்களின் நம்பிக்கையை பெற்றது எல்ஐசி மட்டுமே
ஏஐஐஇஏ பொதுச் செயலாளர் வி.ரமேஷ் பேட்டி
கடலூர், ஆக.19-
தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் எவ்வளவு தோன்றினாலூம் மக்களின் நம்பிக்கைக்குரிய நிறுவனம் எல்ஐசிமட்டுமே என அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் (ஏஐஐசிஏ) பொதுச் செயலாளர் வி.ரமேஷ் கூறினார். பண்ருட்டியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-எல்ஐசி 1956 லிருந்து இந்திய தேசத்தை கட்டமைக்க 22 லட்சம் கோடி வழங்கி இருக்கிறது. இப்படிப்பட்ட பொதுத்துறையைதான் அழிக்க மோடி அரசு துடிக்கிறது. லாபம் ஈட்டும்பொதுத்துறைகளை விற்பதன் மூலம்தேசத்திற்கும், மக்களுக்கும் பொருளாதார வளர்ச்சியில் எந்த வகையிலும் உதவாது. அரசின் கொள்கைகளால் அரை மணி நேரத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்கிறான். விவசாயிகளின்ன் ஏழ்மை நிலை மேலும் அதிகரித்துள்ளது. வளர்ச்சிஎன்று கூறுவது மக்களின் வாழ்க்கையில்பிரதிபலிக்கவில்லை.
வறுமையிலும், சத்து குறைபாடாலும் கடந்தாண்டு மட்டும் 25 லட்சம் பேர் இறந்துள்ளனர். பிரதமர் அறிவித்த 50 கோடி மக்களுக்கு காப்பீடு என்பது ஏமாற்று வேலை. 30 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தால்தான் அந்த திட்டம் மக்களுக்கு பயனளிக்கும், மாறாக 2 ஆயிரம் கோடி ரூபாய் என்பது கண்துடைப்பு வேலை.பொதுத்துறை நிறுவனத்தை பாதுகாக்கக் கோரியும், விலை பொருளுக்கு குறைந்த பட்ச ஆதரவிலை அறிவிக்க வேண்டும், தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்தக்கூடாது,அணிதிரட்டப்படாத தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு சட்டங்களை உருவாக்க வேண்டும், நிரந்தர வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 5 ஆம் தேதி தில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்த உள்ளனர்.
இந்த போராட்டத்திற்கு இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் ஆதரவு தெரிவிப்பதுடன், போராட்டத்திலும் நாங்கள் பங்கேற்கிறோம். எல்ஐசியின் 61 வது தினம் செப்டம்பர் 1 கொண்டாடப்படுகிறது. அன்றுஎல்ஐசியை பாதுகாக்கக் கோரியும், முதலீடு செய்ய கோரியும் மக்களிடம் பிரச்சாரம் செய்ய உள்ளோம்.கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பிற்கு ஒரு நாள் ஊதியத்தை இந்தியா முழுவதும் உள்ள இன்சூரன்ஸ் ஊழியர்கள் வழங்குவார்கள். மேலும், அந்த மாநிலத்தில் விதிகளை தளர்த்தி விரைவாக இன்சூரன்ஸ் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்த சந்திப்பின் போது வேலூர் கோட்டச் செயலாளர் எஸ்.ராமன், துணைத் தலைவர் டி.மணவாளன், பொருளாளர் வி.ஜானகிராமன் ஆகியோர் உடனிருந்தனர்.
இன்சூரன்ஸ் பிரிமியம் மீதான ஜிஎஸ்டி வரியை நீக்குக
காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் வலியுறுத்தல்
கடலூர், ஆக.20-
காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கத்தின வேலூர் மாட்ட 31-வது மாநாடு பண்ருட்டியில் ஆக.19 முதல்20 வரை இரண்டு நாட்கள் நடைபெற்றது.
இம்மாநாட்டிற்கு வேலூர் கோட்டத் தலைவர் எஸ்.பழனிராஜ் தலைமை தாங்கினார். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வி.ரமேஷ் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார்.இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-நான்கு இன்சூரன்ஸ் நிறுவனங்களை ஒரேபொதுத்துறை நிறுவனமாக இணைத்து பங்கு விற்பனையை கைவிட வேண்டும், குறைந்தபட்ச ஊதியமாக அனைத்து தொழிலாளர்களுக்கும் மாதம் 18 ஆயிரம் வழங்க வேண்டும், டாக்டர்எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி விவசாயப் பொருட்களுக்கான கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும்.
விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்பட்டு பொது விநியோக முறைபலப்படுத்தப்பட வேண்டும், வங்கிகளின் வாரக்கடன்கள் வசூலிக்கப்படுவதற்கு உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும், வங்கிகளை மோசடி செய்துவெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றவர்கள் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும், பென்ஷன் திட்டத் தில் இனைவதற்கான இன்னொரு வாய்ப்பு உடனடியாக அளிக்கப் பட வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்துசெய்யப்பட வேண் டும்.பெண்களுக்கான பிரத்யோக உடல் உபாதைகளுக்காக சிறப்பு விடுப்பு வழங்கப்பட வேண்டும், குழந்தை பராமரிப்பு விடுப்பு அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
வேலூர் கோட்டத்தில் வாடகைக்கட்டிடங்களில் செயல்பட்டு வரும்அலுவலகங்கள், சொந்தக்கட்டிடத்தில் செயல்படக் கூடிய விதத்தில் நிலம் வாங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள சென்னைக்கான மாறுதல்கள் நடைமுறைப்படுத்த வேண்டும், மக்கள் ஒற்றுமையை சிதைக்க முயல்கிற மதவெறிக் கும்பல்கள் மீதுகடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தமிழகமெங்கும் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ள வீட்டு வரி,சூயஸ் எனும் பன்னாட்டு நிறுவனத்திற்கு கோவை குடிநீர் வினியோகத்திற்கு வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தம் உள்ளிட்டவைகளை ரத்து செய்ய வேண்டும், 1.8.2017 முதல் எல்.ஐ.சி ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வை இறுதிப்படுத்த பேச்சு வார்த்தைகளை உடனடியாக துவக்க வேண்டும், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிர்வாகிகள்
கோட்டத் தலைவராக எஸ்.பழனிராஜ், பொதுச் செயலாளராக எஸ்.ராமன், பொருளாளராக எல்.குமார், துணை பொருளாளராக எம்.ஏ,மங்களகௌரி, துணைத் தலைவர்களாக டி.மணவாளன், ஏ.நாராயணன், டி.தேவராஜ், கே.மீரா, இணைச் செயலாளர்களாக எஸ்.ரமேஷ்பாபு, எஸ்.குணாளன், கே.வேலாயுதம், பி.கங்காதேவி, ஜி.வைத்தியலிங்கம், மகளிர்குழு அமைப்பாளராக ஆர்.அமுதாஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.