சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
Saturday, March 31, 2018
Thursday, March 29, 2018
மறக்க முடியாத கதாநாயகர்கள்
கய்யூர் கதாநாயகர்கள்
பி.சி.ஜோஷி
இன்று கய்யூர் தியாகிகள் 75ம் ஆண்டு நினைவு தினம்
மலபார் பகுதியில் மிகவும் செல்வாக்கு கொண்டது நமது கட்சி. நகரங்களில் மட்டுமல்ல; நூற்றுக்கணக்கான கிராமங்களிலும் அங்கு செங்கொடி பட்டொளி வீசி பறக்கிறது.
நமது கட்சியின் 3000 உறுப்பினர்களில் மிகப்பெரும்பான்மையோர் விவசாயிகளின் புதல்வர்கள் ஆவர். அவர்களில் 16 பேர் ஆயுட்கைதிகளாக சிறைகளில் உள்ளனர். 4 பேர் தூக்குதண்டனை பெற்று காத்திருக்கின்றனர்.
கட்சி மையம் என்னைமலபார் மாநில மாநாட்டுக்கு மையத்தின் பிரதிநிதியாக கலந்துகொள்ள அனுப்பிய பொழுது கிராமங்களில் கம்யூனிசம் செயல்முறையில் உள்ளதை நேரில் காணும் எனது நீண்டநாள் கனவு நனவானது.
கட்சி மையம் (தூக்கு தண்டனை நிறைவேற்றத்திற்காக காத்திருக்கும்) கய்யூர் தியாகிகளை சந்தித்துகடைசி வாழ்த்துக்களை தெரிவிக்குமாறும் பின்னர் அவர்களின் குடும்பங்களை கய்யூர் சென்று நேரில் சந்திக்குமாறும் என்னை பணித்தது. இதைவிட வேறு என்ன பெரிய பாக்கியம்எனக்கு இருக்க முடியும்?
கள்ளிக்கோட்டையில் கட்சி மாநாடு நிறைவு பெற்றதும் நாங்கள் கண்ணணூர் விரைந்தோம். அந்த நண்பகல் வெயிலிலும் 6000 பேர் கொண்ட பேரணியுடன் நாங்கள் மத்திய சிறைக்கு சென்றோம். வழியெங்கும் “கய்யூர் தோழர்கள் வாழ்க” எனும் முழக்கம் விண்ணதிர முழங்கியது.
நமது மலபார்செயலாளர் தோழர் கிருஷ்ணபிள்ளை நாங்கள் சிறைக்குள் செல்ல போகிறோம் என அறிவித்தார்.நாங்கள் சிறை வாயிலை அடைந்தோம்.
மற்ற சிறைகளைபோலவே அந்த சிறையும் இருந்தது. குனிந்து உள்ளே சென்றோம். அங்குள்ள பதிவேட்டில் கையொப்பம் இட்டோம்.பின்னர் சிறை அதிகாரி எங்களை அழைத்து சென்றார்.சரளை கற்கள் நிறைந்த அந்த பாதையில் பல சுற்றுகள்நடந்தோம். பின்னர் இன்னொரு சிறிய வாயிலை அடைந்தோம்.அதனுள் நுழைந்தோம்.
அதற்குள்தான் தனிமை கொட்டடி சிறையின் அறைகள் இருந்தன. ஒரு கொட்டடி அறை என்பது மிகச்சிறிய ஒன்று! ஒரு அறையில் ஒருவர்தான் தனிமையில் சிறைவைக்கப்படுவார். முதல் நான்கு தனிமை அறைகளில் நமது தோழர்கள் அடைக்கப்பட்டிருந்தனர்.
நால்வரும் மிக சாதாரணமாக எவ்வித கவலையும் இல்லாமல் இருந்தனர். முஷ்டிகளை உயர்த்தி “செவ்வணக்கம்” என எழுச்சியுடன் கூறினர். அந்த நால்வரின் முன்பும் நானும் செவ்வணக்கம் கூறியவாறு நடந்து சென்று பின்னர் நான்கு அறைகளின் மையமான இடத்திற்கு வந்து நின்றேன். அவர்களை ஏறிட்டு பார்த்தேன்.அவர்கள் மிகவும் இளமையாகவும் சுத்தமாகவும் இருந்தனர். தனிமைச் சிறை காரணமாக சிறிது உடல் மெலிந்திருந்தனர்.
எனினும் அவர்களது முகத்தில் தைரியமும் கண்களில் ஒளியும் தெளிவாக தெரிந்தன. அவர்களை பார்த்தமுதல் பார்வையிலேயே இந்த இளம் போராளிகள் மனதில் உறுதியுடனும் உதடுகளில் “கம்யூனிஸ்ட் கட்சி வாழ்க” எனும்முழக்கத்துடனும் தூக்குக் கயிறை முத்தமிடுவார்கள் என எனக்கு தெரிந்துவிட்டது.
நமது தேசத்தின் பரந்த பகுதிகளிலிருந்து பல மொழிகளில் எழுதிய வாழ்த்து கடிதங்கள் அடங்கிய பெரிய பெட்டியைநாங்கள் கொண்டு சென்றிருந்தோம். அந்த கடிதங்கள் அனைத்தும் அந்த இளம் போராளிகளுக்கு நமது தொழிலாளர்களால், விவசாயிகளால், மாணவர்களால் வாழ்த்துக்களை தெரிவித்து எழுதப்பட்டவை! அனைத்து வயதை சார்ந்த ஆண்களும் பெண்களும் அந்த வாழ்த்துக் கடிதங்களை எழுதியிருந்தனர்.
அக்கடிதங்களை கண்டவுடன் அவர்கள் முகம் மலர்ந்து புன்னகைத்தனர். இக்கடிதங்களை கண்ட சிறை அதிகாரி இவற்றை எப்படி மொழிபெயர்ப்பது எனவும் எப்படி தணிக்கை செய்வது எனவும் கவலை கொண்டார்.
ஒவ்வொரு கடிதத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பும் இணைக்கப்பட்டுள்ளது என்பதை அவருக்கு சொன்னோம். அதற்கு பிறகுதான் நிம்மதி பெரு மூச்சு விட்டார்.
அந்த இளம் போராளிகள் ஆங்கிலம் அல்லது இந்துஸ்தானி மொழியை புரிந்துகொள்ள இயலவில்லை. என்னால் மலையாளம் பேச முடியவில்லை. எனவே சிறை அதிகாரியின் அனுமதியுடன் தோழர் கிருஷ்ணபிள்ளை அவர்கள்ஒவ்வொரு வாக்கியத்தையும் மொழிபெயர்த்தார். அவர்களைகண்டவுடன் எனது கண்களிலிருந்து கண்ணீர் பொங்கியது. வார்த்தைகள் வெளியே வரமறுத்தன. என்னை ஏதோ ஒன்று அழுத்தி வேதனை விளைவித்தது போல இருந்தது. உணர்ச்சி மிகுதியால் ஒரு கட்டத்தில் நான் மயக்கம் அடையும் நிலைக்கு சென்றுவிட்டேன்.
கட்சியின் தலைமை சார்பாக அவர்களிடம் நான் கூறியதின் சுருக்கத்தை கீழே தருகிறேன்.“கட்சி தனது வேறு எந்த உறுப்பினரைவிட உங்கள் நான்கு பேர் குறித்து மிகவும் பெருமைப்படுகிறது.
நாங்கள்நூறுகளாக இருந்தபொழுது எங்களிடம் நீங்கள் வந்தீர்கள். ஆனால் இன்று 9000 நிரந்தர உறுப்பினர்களும் 8000 பரீட்சார்த்த உறுப்பினர்களும் கட்சியில் உள்ளனர். அனைத்து17,000 கட்சி உறுப்பினர்களும் நீங்கள் உயர்த்திப்பிடித்த பதாகையை முன்னெடுத்து செல்வோம் எனவும் நீங்கள் மிகுந்த தைரியத்துடனும் வீரத்துடனும் நடத்திய போராட்டத்தை நாங்கள் தொடர்வோம் எனவும் உறுதி கூறுகிறோம்.”“
நீங்கள் நமது தேசம் மற்றும் இந்த உலகத்தின் விடுதலைக்காகவும் நலனுக்காகவும் ஒரு சாகாவரம் பெற்ற உயர்ந்தஇலட்சியத்திற்காக உயிர்த் தியாகம் செய்யப் போகிறீர்கள்.
நமது இலட்சியம் நியாயமானது; அது வெல்ல வேண்டும்; அந்த இலட்சியம் வெல்ல வேண்டும் என்பதற்காக உங்கள்உயிரை தியாகம் செய்ய உள்ளீர்கள். நீங்கள் மரணம் அடையப்போவது இல்லை; உங்களது கனவை நிறைவேற்ற உள்ளீர்கள்”“
நீங்கள் எங்களின் இதயக்கூட்டுக்குள் வீற்றிருக்கிறீர்கள். உங்களை கட்சி இழக்கப் போகிறது. ஆனால் உங்களைப் போன்றவர்களின் மகத்தான பணியும் தியாகமும்தான் கட்சி இன்றுள்ள உன்னத நிலைக்கு காரணம் ஆகும்.
நீங்கள்கட்சியில் இணைந்த பொழுது மலபாரில் நமது இயக்கம்இளம் தேசபக்த போராளிகளை கொண்ட ஒரு குழுவாகமட்டுமே இருந்தது. இன்று நாம் உங்கள் பகுதியில் ஒரு மிகப்பெரிய சக்தியாக வளர்ந்துள்ளோம். தேசம் முழுதும் மக்களுக்காக தம்மை அர்ப்பணித்து கொள்கின்ற தலை சிறந்த புதல்வர்களும் புதல்விகளும் கட்சியில் இணைந்து வருகின்றனர்.
எங்கெல்லாம் கட்சி உள்ளதோ அங்கெல்லாம் உங்கள் பெயர்கள் பாசத்துடனும் நேசத்துடனும் மிகுந்த மரியாதையுடனும் உச்சரிக்கப்படுகின்றன. தேசப்பற்று மிகுந்த இளம் ஆண்களும் பெண்களும் கட்சியில் இணைவதை பெரிய பாக்கியமாக கருதுகின்றனர்.
ஏனெனில் உங்களை போன்ற தியாகிகளை கட்சி ஜனித்தது.”“
கட்சி உங்களை இழக்கவில்லை. ஆனால் நான்கு தியாகிகளை பெறுகிறது. அவர்கள் உங்களை தூக்கு மேடைக்கு அனுப்பட்டும்; அதனை நம்மால் இன்று தடுக்க இயலாது.
ஆனால் உங்களின் தியாகத்தால் உத்வேகம் பெற்ற 400 அல்லது 4000 புதிய கட்சி உறுப்பினர்களை நாம் வென்றெடுப்போம். இதனை நமது எதிரிகள் தடுக்க முடியாது. அதற்காகநாம் கடுமையாக உழைப்போம்.
தைரியமாக இருங்கள் தோழர்களே! நாம் நிச்சயமாக வெல்வோம். நமது இலட்சியம் சாகாவரம் பெற்றது. அந்த இலட்சியத்தை அடையவழிவகுக்கும் அமைப்பான நமது கட்சியும் சாகாவரம் பெற்றது. அரசியல் அடக்குமுறைகள் நம்மை பலவீனப்படுத்தாது; மாறாக அவை நம்மை மேலும் வலுவாக்கும்.
உங்களது தியாகம் பெருமையை மட்டுமல்ல; கட்சிக்கு வலிமையையும் தருகிறது. எந்த ஒரு கம்யூனிஸ்ட்டும் இதனைவிட சிறந்த முடிவை விரும்ப முடியாது.”“
உங்கள் குடும்பங்கள் உங்களை இழக்கின்றன. நீங்கள்கட்சியில் சேரும் பொழுது மக்கள்தான் உங்கள் பெற்றோர்கள் என்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டீர்கள் என நாங்கள்அறிவோம்.
இந்தியாவின் எந்த ஒரு தந்தையும் அல்லது தாயும் உங்களின் சொந்த பெற்றோர்கள் போல துன்பப்படக்கூடாது என நீங்கள் உழைத்தீர்கள். உங்களுக்கு ஒரு வலுவான உறுதிமொழியை தருகிறோம் தோழர்களே!
எங்களில்17,000 பேரும் உங்களின் குடும்பத்தினரை எங்களின் சொந்தகுடும்பத்தினரை போல பாதுகாப்போம் என உறுதி அளிக்கிறோம். ஒவ்வொரு கட்சி உறுப்பினரும் தங்களின் புதல்வன் எனவும் உங்கள் குடும்பத்தினர் உணரும் வகையில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதனை நாங்கள் செய்வோம்”“
உங்களை சந்திப்பதற்கு எனக்கு கிடைத்த இந்த வாய்ப்புஎன் வாழ்க்கையின் மிகப்பெரிய பேறு என நான் எண்ணுகிறேன். உங்களின் உயிரைவிட மேலாக நீங்கள் நேசிக்கும் கட்சியிடமிருந்து நான் வாழ்த்துக்களை உங்களுக்காக கொண்டு வந்துள்ளேன்.
இங்கிருந்து நேராக உங்களின் கிராமமான கய்யூருக்குதான் செல்கிறேன். உங்களின் குடும்பங்களை நான் சந்திக்க செல்கிறேன். அவர்களுக்கு உங்களிடமிருந்து ஏதாவது செய்தி உள்ளதா?”
அவர்களை கவலைப்பட வேண்டாம் எனவும் தைரியமாக இருக்கும்படியும் கூறுங்கள் என அனைவரும் ஒருமித்தகுரலில் கூறினர்.வேறு ஏதாவது கூற வேண்டியுள்ளதா என நான் கேட்டேன்.
“எங்களின் மனதில் என்ன இருந்ததோ அனைத்தையும் நீங்கள் சொல்லிவிட்டீர்கள்” என அவர்களில் ஒரு தோழர் கூறினார்.“
இல்லை! இல்லை! இந்த நேர்காணலில் எவ்வளவு நேரம் உள்ளதோ அனைத்தையும் நீங்கள் பயன்படுத்த வேண்டும். நீங்கள் கூறிய ஒவ்வொரு வார்த்தையையும் நான் வெளியில் உள்ள தோழர்களிடம் கூற வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அவர்கள் என்னை கிழித்துவிடுவார்கள்.
எனக்கு கூர்மையான நினைவாற்றல் உண்டு. எனவே உங்களின் ஒவ்வொரு வார்த்தையையும் அவர்களிடம் நான் கொண்டுசெல்வேன்” என நான் சிரித்து கொண்டே கூறினேன்.
சிறை அதிகாரி கடிகாரத்தை பார்த்தார். நான் தோழர்களை விரைவாக பேசுமாறு கூறினேன்.
முதல் அறையில் இருந்த தோழர் குஞ்ஞாம்பு பேசினார்.“மக்களுக்கு நான் என்ன செய்தேனோ அதனை செய்யஎன்னை ஆளாக்கியது கட்சிதான்! எனது கடமையை நான்சரியாக செய்து முடித்தேன் என கட்சி மதிப்பிட்டால் அது ஒன்றுதான் என் வாழ்வின் ஒரே விருப்பமாக இருக்க முடியும்!”
தோழர் அப்பு கூறினார்:“கட்சி வளர்ந்து கொண்டுள்ளது எனும் மகத்தான செய்தியை நீங்கள் கொண்டு வந்துள்ளீர்கள். இப்பொழுது கூடுதல் மன உறுதியுடன் நாங்கள் தூக்கு மேடை ஏறுவோம்.இந்த தேசத்தின் விடுதலைக்காக போராடவும் உயிரை அர்ப்பணிக்கவும்தான் நாங்கள் கட்சியில் இணைந்தோம்.”
தோழர் சிறுகண்டன் கூறினார்:“நாங்கள் வெறும் நான்கு விவசாயிகள்தான்! ஆனால்இந்தியாவில் கோடிக்கணக்கான விவசாயிகள் உள்ளனர். எங்களை அவர்கள் தூக்கு மேடைக்கு அனுப்பலாம். ஆனால்ஏனைய விவசாயிகளை அவர்கள் அழிக்க இயலாது. இந்தஉறுதிதான் எங்களின் மன வலிமையை நீடிக்க செய்துள்ளது.இத்தகைய தேசத்தின் மக்களுக்காக பணியாற்றிட வாழ முடியாமல் போகிறதே எனும் வருத்தம்தான் தேசத்தின் அனைத்துபகுதிகளிலிருந்து வந்துள்ள இந்த கடிதங்களை பார்க்கும்போது உருவாகிறது.
எங்களுக்கு வேறு எந்த ஒரு வருத்தமும்இல்லை. எங்களுக்கு பல பிறவிகள் இருந்தால் மீண்டும் மீண்டும்நமது இலட்சியத்திற்காக நாங்கள் உயிரை விடுவோம்”தோழர் சிறுகண்டன் இரண்டு பெரிய விவசாய போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளார்.
இறுதியாக தோழர் அபுபக்கர் கூறினார்:“நமது தியாகிகளின் வாழ்விலிருந்துதான் நாங்கள் உத்வேகம் பெற்றோம். நாங்களும் அந்த பெருமையின் ஒருஅங்கமாக இருப்போம் என கனவில் கூட நாங்கள் நினைக்கவில்லை. எந்த பயமும் இல்லாமல் நாங்கள் தூக்குமேடை ஏறுவோம் என தோழர்களிடம் கூறுங்கள். எனது தாயார் வயதானவர். அவரை தைரியமாக இருக்க சொல்லுங்கள். எனது சகோதரர்கள் மிகவும் இளையவர்கள். அவர்களை கட்சிப் பணிக்காக கல்வி புகட்டுங்கள். நான்தான் குடும்பத்தின் மூத்தபிள்ளை. அவர்களை பார்த்துக்கொள்ள வேறு எவரும் இல்லை.”
அபுபக்கர் தனது இறுதி வார்த்தையை கூறுவதற்கும் சிறை அதிகாரி நேரம் முடிந்துவிட்டது என கூறுவதற்கும் சரியாக இருந்தது. அந்த தியாகிகளுடன் கை குலுக்க நான்சிறை அதிகாரியிடம் அனுமதி கேட்டேன். அவர் அனுமதித்தார்.
சிறை அறையின் இரும்பு வாயில் மட்டுமல்ல; நீண்ட வராந்தாவும் எங்களை பிரித்து இருந்தது. இவை சிறையின்விதிகள்.அவர்களின் அருகில் சென்றதும் அவர்களின் கைகளை குலுக்கியதும் எனக்கு ஒரு மெய் சிலிர்க்கும் அனுபவமாக இருந்தது.
கைகுலுக்கியவுடன் அவர்கள் முஷ்டிகளை உயர்த்தி செவ்வணக்கம் கூறினர். இது மிக அனிச்சையாக அவர்களுக்கு வந்தது.
ஏனெனில் அவர்கள் நமது கட்சியின் தொண்டர்கள்.தோழர் அப்பு எனது கைகளை சில நொடிகள் கூடுதலாக பற்றிக்கொண்டார்.
அவர் மெதுவாக “தோழர்” என கூறினார். ஆனால் வேறு எந்த வார்த்தையும் அவரிடமிருந்து வரவில்லை.நான் அவரது கண்களை பார்த்தேன். அவை பனித்திருந்தன.
நான் வராந்தாவை பார்த்தேன். அங்கு மலர்களை படுக்கைபோல விரித்து வைத்திருந்தனர். எவ்வித திட்டமிட்ட சிந்தனையும் இல்லாமல் என் உள்ளே இருந்து வாக்கியம் தானாக உருவாகி வெளியே வந்தது;“
அந்த மலர்கள் அழிந்துவிடும். ஆனால் தோழர்களே நீங்கள் மனிதத்தின் மலர்கள். உங்களுக்கு அழிவு என்பதேஇல்லை.”கிருஷ்ணப்பிள்ளை அதனை அப்படியே மொழிபெயர்ப்பு செய்தார்.
இளம் அப்புவின் கன்னம் பெருமையாலும் வெட்கத்தாலும் சிவந்தது.தோழர் அபுபக்கரிடம் வந்த பொழுது அவரது கைகளைவிடுவதற்கு எனக்கு மனமே இல்லை.
கடந்த காலத்தில் நடைபெற்ற மகத்தான மாப்பிளைமார் கலகம் எனது நினைவுக்கு வந்தது. முஸ்லிம் சகோதரர்களின் தேசபக்தியை சந்தேகப்படும் இந்து தேசபக்தர்கள் உண்டு.
ஆனால் நான்கில் ஒருதியாகியை இஸ்லாமிய சமூகம் தந்துள்ளது. நான் அபுபக்கரிடமிருந்து நகர தாமதமான அந்த சில நொடிகளில் “செவ்வணக்கம் தோழரே” என அபுபக்கர் கூறிக்கொண்டே இருந்தார்.
அந்த தோழரின் முகம் கனகச்சிதமாக செதுக்கியது போலஇருந்தது. அபுபக்கரின் கண்களில் உண்மையான தேசபக்திஒளிவிட்டு மின்னியது
.நான் கை குலுக்கலை முடித்த பின்னர் அவர்களும் செவ்வணக்கம் கூறினர். நாங்களும் செவ்வணக்கம் கூறினோம். சிறைக்குள் வந்த பொழுது எங்களின் மனம் கனத்து இருந்தது.நாங்கள் திரும்பி வெளியே வந்த பொழுது மனம் இலேசாகியிருப்பதை உணர்ந்தோம்.
இத்தகைய தோழர்களை பெற்றிருப்பதில் எங்களுக்குள் பெருமை பொங்கியது.நானும் சுந்தரய்யாவும் தனியாக இருந்த பொழுது அதுவரைமவுனம் காத்த சுந்தரய்யா ஆழ்ந்த சிந்தனையுடன் கூறினார்:“
அவர்களுக்கு தைரியம் சொல்லத்தான் நீங்கள் வந்தீர்கள்.ஆனால் அவர்கள் உங்களுக்கு தைரியத்தை தந்துள்ளனர்” என்றார்.
நான் கூறினேன்: “அவர்கள் நமது தியாகிகள். அவர்களுக்குதைரியம் தேவை இல்லை. அவர்கள் தூக்கிலிடப்பட்டால் அவர்களின் தோழனாகிய நான்தான் தனிமைப்படுவேன். எனவே தைரியம் எனக்கு தேவையாக இருந்தது; அதனைநான் பெற்றேன்” இந்த பதிலைதான் நான் சுந்தரய்யாவுக்கு தர முடிந்தது.
எங்களது கார் இரயில்வே நிலையத்திற்கு விரைந்தது. அங்கிருந்து சர்வாட்டூருக்கு சென்று பின்னர் படகு சவாரிமூலம் கய்யூர் செல்ல வேண்டும். தியாகிகளின் குடும்பத்தினர் நாங்கள் அன்று மாலையே வருவோம் என எதிர்பார்த்துஇருப்பர். கய்யூர் சென்றது குறித்து அடுத்த வாரம் நான் எழுதுகிறேன்.
நான் எனது மலபார் பயணத்தை (மார்ச்) 26ஆம் தேதி பூர்த்திசெய்தேன். கள்ளிக்கோட்டைக்கு நான் வந்தபொழுது மெட்றாஸ் செயலாளர் மோகனின் தந்தி எனக்காக காத்திருந்தது. அதில் கூறப்பட்டிருந்தது:“
பிரிட்டிஷ் ஆட்சியின் மேலிடம் ஒயிட் ஹால் தலையிட மறுக்கிறது. தூக்குக்கான தேதி விரைவில் இறுதி செய்யப்படும்”இதனை நான் எழுதிக்கொண்டிருக்கும் பொழுது மலபாரிலிருந்து ஒரு தோழர் 29ஆம் தேதி காலையில் நமது தோழர்கள்நால்வரும் தூக்கிலிடப்பட்டனர் எனும் செய்தியை கொண்டுவந்தார்.
அதற்கு முந்தைய இரவுதான் அடுத்த நாள் காலையில்அவர்கள் தூக்கு மேடை ஏற வேண்டும் எனும் தகவலை அளித்தனர். அந்த இரவு முழுதும் நான்கு தியாகிகளும் ஒரே குரலில் தேசபக்தி பாடல்கள் பாடிக்கொண்டிருந்தனர். “
கம்யூனிஸ்டு கட்சி ஜிந்தாபாத்” எனும் முழக்கங்களை அடிக்கடி விண்ணதிர எழுப்பினர். கண்ணனூர் மத்திய சிறையில் இருந்த ஒரு கைதி கூட, அவர் அரசியல் கைதி அல்லதுஏனைய கைதியாக இருந்தாலும், அன்று இரவு முழுவதும் தூங்கவில்லை.அன்று காலையில் சுமார் 3000 பேர் சிறைவாயிலில் திரண்டனர். தியாகிகளின் உடல்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரினர்.
ஆனால் அவர்களது கோரிக்கை ஏற்கப்படவில்லை. அவர்களை காவல்துறையினர் கலைத்தனர்.
மலபார் விவசாயிகள் கய்யூர் தியாகிகளை போல சாகாவரம்பெற்ற புதல்வர்களை உருவாக்கினர். உயிர்த் தியாகத்தை புன்முறுவலுடன் ஏற்றுக்கொள்ளும் தேசபக்தர்களை நமதுகட்சி பாதுகாக்கிறது.
கய்யூர் தியாகிகளின் மகத்தான அர்ப்பணிப்புக்காக நமது செம்பதாகையை தாழ்த்துகிறோம்.
(விவரங்கள் மூலம்: பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் Labour Monthly எனும் ஆவணங்கள்)
கட்டுரையாளர்: இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவர், முதல் பொதுச் செயலாளர்(கய்யூர் தியாகிகள் தூக்கிலிடப்படுவதற்கு முன்பு அவர்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரான பி.சி.ஜோஷி நேரில் சந்தித்தபோது எழுந்த உணர்வுகளை, பின்னர் 1943 ஆகஸ்ட்டில் லேபர் மன்த்லி ஏட்டில் எழுதினார். அக்கட்டுரையே இது.
தமிழில்: அ.அன்வர் உசேன்
நன்றி - தீக்கதிர் 29.03.2018
ஜெயமோகனைப் போட்டுத் தாக்கறாங்க!!!!
கும்பகர்ண
உறக்கத்திலிருந்து விழித்து போராட்ட நாடக அரிதாரத்தை மீண்டும் பூசிக் கொண்டுள்ள அன்னா
ஹசாராவுக்கு முட்டு கொடுத்து தமிழக இலக்கிய மாமேதை ஜெயமோகன் எழுதிய அற்புதமான (அற்பத்தனமான
என்றுதான் எழுத வேண்டும். ஆனால் அப்படி எழுதினால் அழகியல் இருக்காது அல்லவா? எது எப்படி
இருந்தாலும் அழகியல் அவருக்கு முக்கியமன்றோ?)
கட்டுரை படித்த போதே பதில் எழுத வேண்டும் என்று விரல்கள் துடித்தது.
வழக்கறிஞர்
ராஜகோபால் சுப்ரமணியன் அந்த கட்டுரைக்கு ஒரு அற்புதமான (நிஜமாகவே அற்புதம்தான்) எதிர்வினை
ஒன்றை முக நூலில் பதிவிட்டிருந்தார்.
வார்த்தைக்கு
வார்த்தை போட்டுத்தாக்கி ஜெயமோகனை தோலுரித்து தொங்க விட்டுள்ளார்.
அதனை
இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.
ஆனால்
ஜெமோ இதற்கெல்லாம் கவலைப்பட மாட்டார். காவிகளுக்கும் வெட்கம், மானம், ரோஷம் என்பதெல்லாம்
எப்படி கிடையாதோ, அவர்களின் ஊதுகுழலான ஜெமோவுக்கு கிடையாது.
பொதுவாக அதிஇலக்கியவாதிகளின் புனைவுகள் தான் சாமானியர்களுக்கு புரியாது என்று சொல்வார்கள். ஆனால், ஜெமோ அதிலும் வித்தியாசமானவர். புனைவுகள் எளிதாக இருக்கும். அரசியல் கட்டுரைகள் தான் புரியாது. ஆகவே, சாமானியர்களின் வசதிக்காக ஜெமோவின் கட்டுரைக்கு பொழிப்புரை எழுதும் பணியில் யாம் இறங்கினோம். படித்து தெளிவுறுக.
//அண்ணா ஹசாரே மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருக்கிறார். அனேகமாக தமிழ் ஊடகங்கள் அனைத்துமே அவரை புறக்கணித்துவிட்டிருக்கின்றன. ஏனென்றால் அவை இங்கே உருவாக்கும் அரசியல்களப் புனைவில் அப்போராட்டத்திற்கு இடமில்லை. மோடி X மோடி எதிர்ப்பு என்னும் ஒரு வரைவை அவை உருவாக்கி அனைவரையும் அதற்குள்ளாகவே சிந்திக்கவைத்துக்கொண்டிருக்கின்றன..//
ஏன்டா இப்படி மோடி மோடின்னு எதிர்த்துட்டு திரியுறீங்க..? கொஞ்சமாவது கேப் கொடுங்கடா...பாவம் இல்லியா அவர்..? அண்ணா ஹசாரேவை லைம் லைட்டுக்கு கொண்டு வந்து மோடியை விடுங்கடா...
-----
//மெய்யான காந்தியராக தன் கோரிக்கையில் உறுதிகொண்டு மீண்டும் மீண்டும் போராடிக்கொண்டிருக்கிறார் அண்ணா ஹசாரே.எல்லா காந்தியப்போராட்டங்களையும்போல இதுவும் இரண்டு முகம் கொண்டது. ஒன்று நேரடியான நடைமுறைக் கோரிக்கை. லோக்பால் அமைப்பை உருவாக்கி ஊழலுக்கு எதிரான ஒரு சட்டபூர்வ அரணை உருவாக்குவது அது. இரண்டு, அக்கோரிக்கையின் குறியீட்டுத்தன்மை. ஊழலுக்கு எதிரான ஒரு அறைகூவலாக அது நிலைகொள்கிறது. நம் சமூகத்தின் முதன்மைப்பிரச்சினையே ஊழல் என்பதை விடாது நினைவூட்டிக்கொண்டிருக்கிறது//
காங்கிரஸ் ஆட்சியின் போது ஊழல் எதிர்ப்பை கையில் எடுத்த அண்ணா ஹசாரேவின் போராட்டம் பாஜகவுக்கு பெரிய அளவிற்கு உதவி புரிந்து ஆட்சிக்கு வருவதற்கு உதவியது. பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு இந்து மத வெறியர்களின் சிறுபான்மை விரோத நடவடிக்கைகள், எழுத்தாளர்களின் கொலைகள், இந்தித்திணிப்பு போன்ற நடவடிக்கைகள், வங்கிகளின் பணத்தை தொழிலதிபர்களுக்கு வாரி வழங்கி நாட்டை விட்டு பாதுகாப்பாக வெளியேற அனுமதித்தது, கல்வி, சென்சார், பத்திரிகை, தொலைகாட்சி, நீதித்துறை, ராணுவம் என்று அனைத்து அமைப்புகளும் பாசிஸ்ட்களால் நிரப்பப்பட்டது அம்பலப்படுத்தப்பட்டு விட்டது. ஊழல் எதிர்ப்பு என்று ஆட்சியை பிடித்த பாஜக தான் அதானி, அம்பானி முதல் தொழிலதிபர்களிடம் அதிகம் "நன்கொடை" வாங்கிய கட்சி என்பதும் தெரியவந்திருக்கிறது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் ஒரு பலனும் இல்லை என்பதும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டது என்பதும் தான் உண்மை என்று பொருளாதார அறிஞர்களால் நிரூபிக்கப்பட்டுவிட்டது. ஜிஎஸ்டியின் மூலம் மாநிலங்களிடமிருந்த கொஞ்சம் நஞ்சம் இருந்து நிதி தன்னாட்சியும் பிடுங்கப்பட்டு விட்டதால், வளர்ந்த மாநிலங்களே நியாயமான நிதி ஒதுக்கீட்டுக்காக மத்திய அரசின் காலை பிடித்து கெஞ்ச வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது. தென்மாநிலங்கள் புறக்கணிக்கப்படுகின்றன என்று வெகுண்டு எழுந்திருக்கிறார்கள். இவை அனைத்தும் சமூக ஊடகங்களின் வலிமை காரணமாக மக்களிடம் சென்றடைய தொடங்கியிருக்கிறது.
பாஜகவின் ஊழல் எதிர்ப்பு என்பது ஒரு மிகப்பெரிய மோசடி மட்டுமல்ல நாட்டின் வளர்ச்சிக்கும் ஒருமைப்பாட்டுக்கும் மதச்சார்பின்மைக்கும் ஜனநாயகத்தின் இருப்பிற்கும் பாஜக ஆட்சி விளைவித்த கேடுகளை மக்கள் உணர தொடங்கியிருப்பது இந்து ஞானமரபின் மைந்தர்களுக்கும், பாஜக ஆர் எஸ் எஸ் போன்ற தேசபக்தர்களுக்கும், வலதுசாரிகளுக்கும் பெரிய ஆபத்தில் முடியும்.
எனவே, இந்த இக்கட்டான காலகட்டத்தில் அண்ணா ஹசாரே போன்ற காந்திய கோமாளியின் உண்ணாவிரதத்திற்கு முக்கியத்துவம் தந்து நம் பக்கம் இருக்கும் அனைத்து பெரும்பான்மை ஊடகங்களும் அங்கு கண்ணாடியை திருப்புங்கள்.
---------
//காந்தியப்போராட்டத்தின் வழியில் ஒவ்வொருமுறையும் பேச்சுவார்த்தைக்கு இடமளித்து, எதிர்த்தரப்புக்கு வாய்ப்பளித்து அண்ணா ஹசாரே போராடுகிறார். எதிர்தரப்பை நம்புவது காந்தியின் வழி. அந்நம்பிக்கை பொய்க்கையில் மீண்டும் எழுவது அவருடைய முறை. இப்போதைய அரசு அனைத்து வாக்குறுதிகளையும், வாய்ப்புகளையும் தவறவிட்டிருப்பதனால் அவர் களமிறங்கியாகவேண்டியிருக்கிறது.//
பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு நான்கு வருடங்கள் அவகாசம் கொடுத்து விட்டு விருப்பப்பட்டு கோமாவிற்கு சென்று விட்டார். அதனால், நாட்டில் நடந்த அத்தனை அநியாயங்களும் அராஜகங்களும் அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தற்போது தான் லோக்பால் அமைக்கப்படவில்லை என்பதை தெரிந்து கொண்டவுடன் மீண்டும் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துவிட்டார். எனவே, மீண்டும் பாஜக அரசுக்கு அவகாசமும் வாய்ப்பும் அளிக்க வேண்டிய தேவை இருக்கிறது
---------
//ஆனால் அண்ணா ஹசாரே காந்தி அல்ல. காந்திக்கு உறுதியான நாடளாவிய அமைப்பு ஒன்றை உருவாக்கும் வாய்ப்பு அமைந்தது, ஆற்றலும் இருந்தது. அவ்வாறு ஓர் அமைப்பை உருவாக்கவியலாமல் போராடும்போது அண்ணா ஹசாரே தனிமைப்படுகிறார். முதுமை அவரை தளர்த்துகிறது. அனைத்துக்கும் மேலாக இருமுனைகொண்டு உச்ச உணர்ச்சிகள் குவிந்துள்ள அரசியல்சூழலில் அவருடைய குரல் தனித்தொலிக்கிறது//
இருமுனை உச்ச உணர்ச்சிகள் என்றால் வேறு என்னவோ ஏதோ என்று நினைத்து விடாதீர்கள். மோடி அண்ட் மோடி எதிர்ப்பு மட்டுமே. எனவே, மோடி எதிர்ப்பை காங்கிரஸ், ஆர் ஜே டி, திமுக, இடதுசாரி எதிரிகள் அறுவடை செய்வதற்கு பதிலாக கிரண்பேடி, அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற நேச சக்திகளை இந்திய அளவில் உருவாக்க வலிமை இல்லையே, முடியவில்லையே என்று நினைக்கும் போது தான் தனக்கு வயதானதும் தனிக்கட்டையாக இருப்பதும் புரிகிறது.
--------
//மேலும் ஊழலுக்கு எதிரான குரல் திட்டவட்டமான எதிரியைச் சுட்டிக்காட்டுதல்ல. வெறுப்பலைக்கு அதில் இடமில்லை. பெரும்பாலும் மக்களையே அது குற்றவாளிகளாக காட்டுகிறது. ஆகவே அதற்கு பெரிய ஆதரவும் இருக்க வாய்ப்பில்லை. முதல்முறை நாட்டை உலுக்கிய ஊழல்கள் வெளிவந்துகொண்டிருந்த காலம். ஆகவே எதிரி கண்ணுக்குத்தெரிந்தான். மக்களாதரவு எழுந்தது. இன்று அந்த எதிரிகள் ஒவ்வொருவராக சட்டத்திலிருந்து நழுவிக்கொண்டிருக்கிறார்கள். அண்ணா கோருவது அதற்கு எதிரான அமைப்புகளைத்தான். ஆனால் அதை கவனிக்கச்செய்வது கடினம்//
2-ஜி, நிலக்கரி ஊழல் நடந்தவை காங்கிரஸ் திமுக ஆட்சியில் இருந்தார்கள் என்பதால் முதன்முறையாக எதிரிகளை "வெறுப்பு இல்லாமல்" சுட்டிக் காட்டினோம். தற்போது அவர்கள் நீதிமன்றத்தின் மூலம் குற்றமற்றவர்களாக வெளியே வந்துவிட்டார்கள். ரபேல் விமான ஊழல், வங்கிகளின் ஊழல்கள் தெரியவந்தாலும், தற்போது பாஜக ஆட்சியில் இருப்பதாலும், விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்ற 'தோல்வியுற்ற தொழில்முனைவோர்கள்' பாதுகாப்பாக வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாலும் திட்டவட்டமாக எதிரியை சுட்டிக்காட்டுவது நோக்கம் அல்ல. எனவே, ஊழல் எதிர்ப்பு என்பது எக்காலத்திலும் பாஜக எதிர்ப்பு வெறுப்பு அரசியலாக மலர்ந்துவிட கூடாது. எனவே, ஊழல் எதிர்ப்பு அமைப்புகளை பாஜக அமைக்கும் என்று நம்பி அவர்களுக்கு அவகாசம் அளிப்பதே நம்முடைய நோக்கமாக இருக்க வேண்டும்.
--------
//ஆனால் எப்போதுமே காந்தியர்கள் தனித்துச்செயல்படத் தயங்கியவர்கள் அல்ல. அவர்களை சமகாலச்சூழல் கிறுக்கர்கள் என்றும் கோமாளிகள் என்றும் முத்திரை குத்துவதைப் பொருட்படுத்தியவர்களும் அல்ல. அவர்கள் நம் சமூக மனசாட்சியின் குரலென ஒலிப்பவர்கள். நம் கீழ்மைகளை, சுயநலங்களைக் கொண்டு அவர்களை நோக்கிக் கெக்கலி கொட்டும்போதும் அவர்களையே நம்பியிருக்கிறோம். அண்ணா வெல்லவேண்டும் என விழைகிறேன்//
தமிழ்நாட்டில் எச்.ராஜா எவ்வளவு கல்லடி படுகிறார், கோமாளியாக்கப்படுகிறார், விமர்சனம் செய்யப்படுகிறார். ஆனாலும் அவரின் வீரியம் குறைந்ததா? நமக்கு நோக்கம் தான் முக்கியம். எவ்வளவு தான் எச்சில் துப்பினாலும் துடைத்துப்போட்டு விட்டு மக்களை மொழி, மதம், பண்பாடு என வெறுப்பு அரசியலில் ஈடுபட செய்யும் நோக்கம் நிறைவேறியதா என்று தான் பார்க்கவேண்டும். இந்து ஞான மரபின் மைந்தர்களை எதிர்க்கும் கீழ்மையான எண்ணங்களையும், குறைந்த பட்ச ஜனநாயக விழுமியங்களை காப்பாற்ற கூடிய அரசுகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற சுயநலத்தையும் வீழ்த்த வேண்டுமென்றால் அது அண்ணா ஹசாரே போன்ற கிறுக்கர்களால் தான் முடியும். அவரிடம் இருந்து தான் கிரண் பேடிகளும், கேஜ்ரிவால்களும் உருவாவார்கள் என்பதால் அண்ணாவையே நம்பியிருக்கிறோம், அண்ணா மீண்டுமொரு முறை ஜெயிக்க வேண்டும்.
---------
//சில மாதங்களுக்கு முன் கேரளப் பொருளியலாளர் ஒருவர் சொன்னார், உலகிலேயே அதிகம் வரிவாங்கும் நாடுகளில் ஒன்று இந்தியா என. நாம் நேரடியாகவும் மறைமுகமாகவும் நம் ஊதியத்தில் கிட்டத்தட்ட பாதியை வரியாகக் கட்டிக்கொண்டிருக்கிறோம். ஆனால் இங்கே சாலைகள் தனியாரால் போடப்படுகின்றன, கட்டணம் பெறப்படுகிறது. துறைமுகங்கள், விமானநிலையங்கள் , கல்விநிலையங்கள், மருத்துவமனைகள் எல்லாமே தனியார். இத்தனை வரிகொடுத்தும் ஒரு நல்ல சாலைக்கு, குடிநீருக்கு, பொதுநீர்நிலைகள் பராமரிப்புக்கு, குப்பை அள்ளுவதற்கு நமக்கு அரசு இல்லை. நாம் திரும்பப்பெறுவது நூற்றுக்கு ஒரு ரூபாய்கூட இருக்காது//
அதே பொருளாதார அறிஞர் தான் காங்கிரஸ் காலத்தில் பெட்ரோல் விலை பேரல் 130 டாலராக இருந்த போது 60 ரூபாய்க்கு விற்றதையும் தற்போது 50-60 டாலராக இருக்கும் போது 78 ரூபாயாக இருப்பதன் முரணையும் சொன்னார். எவ்வளவு தான் ஊழல் இருந்தாலும் ஒப்பீட்டளவில் கல்வி, மருத்துவம், உள்கட்டமைப்பு வசதிகளில் தமிழகம் முன்னேறி இருப்பதை ஆதாரங்கள் சுட்டுகின்றன என்றும் குறிப்பிட்டார். நோபல் பரிசு வாங்கிய அமர்த்தியா சென் எனும் பொருளாதார அறிஞரே கூட தமிழ்நாடு தனியாக இருந்திருந்தால் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்திருக்கும் என்பதை தெரிவித்திருக்கிறார் . தற்போது கூட காங்கிரஸ் ஆட்சிக்காலத்தை விட பாஜக ஆட்சியில் தான் தென்மாநிலங்கள் அளிக்கும் வருவாயில் இருந்து வடமாநிலங்களுக்கு அதிகமாக செலவிடப்படுகின்றன என்பதையும் குறிப்பிட்டார். ஆனால், அவ்வாறெல்லாம் புள்ளிவிபரங்களை குறிப்பிட்டு சொல்வது மோடி அரசை விமர்சிக்கும் செயல் என்பதால் நடுநிலையாக பொதுவாக சொல்வதே வழக்கம்.
--------
//இந்தியாவின் உண்மையான பிரச்சினை இதுவே. பூட்டான் அல்லது ஸ்ரீலங்கா அல்லது நமீபியா போன்ற சிறிய நாடுகளைச் சென்று ஒருமுறை பார்த்துவந்தால்கூட நமக்கு இதுபுரியும். இதையன்றி அனைத்தையும் இங்கே அரசியலில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நம் வரிப்பணம் கொள்ளை போகிறது. பலவகைகளில். அதற்குக் காரணம் ஊழல். அது இருக்கும் வரை எவர் அரசமைத்தாலும், எந்தக்கொள்கை பேசினாலும் இங்கே ஏதும் நிகழப்போவதில்லை.//
எனவே தாம் சொல்கிறோம், 'இந்து பாசிசம், மொழித்திணிப்பு, கூட்டாட்சிக்கு வேட்டு, சிறுபான்மை விரோதம், ஜனநாயக மறுப்பு, எம் எல் ஏக்களை விலைக்கு வாங்கியும்,வாங்காமலும் சட்டவிரோத ஆட்சிகளை நாடு முழுவதும் நடத்துவது, போன்றவை முக்கியமல்ல..ஊழல் தான் இந்த நாட்டின் முதன்மையான முக்கியமான பிரச்சினை.
------
//நாம் நம் ஊழல்மனநிலையால், வெவ்வேறு காழ்ப்புகளால், இனம் சாதி மதம் சார்ந்த பற்றுகளால் ஊழல்வாதிகளை ஆதரிக்கிறோம் என்பதனாலேயே நமக்கு ஊழலைப்பற்றிப் பேசுவது பிடிப்பதில்லை. அதை எதிர்ப்பது கோமாளித்தனமாகத் தெரிகிறது. ஆனால் அதுவே தலையாய பிரச்சினை என நம்மிடம் ஓயாது ஒருகுரல் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டியிருக்கிறது அவ்வகையில் அண்ணா ஹசாரேயின் போராட்டம் அதன் பணியை ஆற்றிக்கொண்டே இருக்கிறது.//
எனவே பாஜக எதிர்ப்பு சக்திகளிடம் சென்று ஊழலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துவிடாதீர்கள்...அண்ணாவை ஆதரியுங்கள்...அல்லது அண்ணா போல தோற்றமளிக்கும் சிஸ்டம் எஞ்சினியர் ரஜினி, மய்யவியலாளர் கமல் போன்ற கோமாளிகளை ஆதரியுங்கள்...
பாஜகவிற்கு இல்லாத உரிமையா?
தேர்தல்
ஆணையர் யார் என்பதை அவர்கள்தான் முடிவு செய்வார்கள்.
எந்த
தொகுதிகளில் எந்த அதிகாரிகள் இருக்க வேண்டும் என்பதை அவர்கள்தான் முடிவு செய்வார்கள்.
தேர்தல்
தேதிகளை எப்போது அறிவிக்க வேண்டும் என்பதையும் அவர்கள்தான் முடிவு செய்வார்கள்.
எந்தெந்த
வாக்குச்சாவடிகளில் கலவரம் செய்வது என்று அவர்கள்தான் முடிவு செய்வார்கள்.
எந்தெந்த
வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரம் ஒழுங்காக வேலை செய்ய வேண்டும், எங்கே மோசடி
செய்ய வேண்டும் என்று முடிவு செய்வதும் அவர்கள்தான்.
எந்த
இடத்தில் ஊடகத்தாரை அனுமதிப்பது, எங்கே மறுப்பது என்பதை நிர்ணயம் செய்வதும் அவர்கள்தான்.
இப்படி
தேர்தல் குறித்த சகல முடிவுகளை எடுக்கும் சர்வ வல்லமை படைத்த பாஜக கட்சிக்கு தேர்தல்
தேதிகளை மட்டும் முன் கூட்டியே அறிவிக்கும் உரிமை கிடையாதா என்ன?
யாருங்க
அந்த தேர்தல் ஆணையர்?
Wednesday, March 28, 2018
ஆண்டாள் பக்தர்கள் இப்போதும் பொங்குவார்களா?
வைரமுத்து
எங்கள் தாய் ஆண்டாளை இழிவு படுத்தி விட்டார் என்று வசை பாடிய, தலையை எடுப்பேன் என்று
வீரம் காண்பித்த, சோடா பாட்டில் வீசுவேன் என்று திடீர் ரௌடியான ஆண்டாள் பக்தர்களே,
உங்கள் ஆண்டாள் கோயில் நிர்வாகத்துக்கு உட்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீனிவாசப் பெருமாள்
கோயில் கருவறையை பத்ரிநாதன் என்ற அந்த கோயில் பொறுப்பாளர், காஞ்சிபுரம் தேவநாதன் போல பள்ளியறையாக மாற்றி மோசமான
முறையில் இழிவு படுத்தி உள்ளாரே! இப்போது நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?
உண்ணாவிரதப்
போராட்டமா?
சாலை
மறியலா?
தலையெடுக்கப்
போகிறீர்களா?
சோடா
பாட்டில் வீசப் போகிறீர்களா?
ஆண்டாளின்
பாரம்பரியம் நாசமாவதை உங்களால் அனுமதிக்க முடியாது அல்லவா?
Tuesday, March 27, 2018
நாடகத்திற்காக சில அராஜகம் . . .
இன்று உலக நாடக தினம்
நாடகத்தோடு தொடர்புடைய பலரும் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். நமக்கு அந்த அளவு அனுபவங்கள் கிடையாது என்றாலும் இரண்டு நாடகங்களை எழுதியுள்ளதால் அவற்றைப் பற்றி எழுதி நாமும் ஜோதியில் ஐக்கியமாகி விடலாம் என்பதால் இந்த பதிவு.
2012- 2013 ல் எங்கள் கோட்டத்தின் வெள்ளி விழா ஆண்டில் நடத்திய முக்கியமான ஒரு நிகழ்வு "கலை விழா'. அனைத்து கிளைகளும் ஒரு கலை நிகழ்ச்சியை வழங்கிய திருவண்ணாமலையில் நடைபெற்ற அந்த விழா என்றென்றும் மனதில் நிற்கும் ஒரு விழா.
நாங்கள் பணி புரியும் கோட்ட அலுவலகக் கிளை சார்பாக என்ன விழா நடத்துவது என்று ஒரு விவாதம் ஒரு வாகனத்தில் நடைபெற்றது. திருவண்ணாமலையில் ஒரு திருமணத்திற்கு போய் விட்டு திரும்பிக் கொண்டிருந்தோம். முன்னே சென்ற இன்னொரு வாகனத்தில் இருந்த மூத்த தோழர் வி.ஆர்.ஆர் அவர்களின் தலையில் எங்கள் வாகனத்தின் ஒளி பட்டு எதிரொலிக்க அவருக்கு தொலை பேசி செய்து வம்பிழுத்துக் கொண்டிருந்தார்கள். அதை அவரும் மிகவும் ரசிப்பார்.
அப்போதுதான் எங்கள் பொருளாளர் தோழர் எஸ்.குணாளன் சொன்னார்.
'பேசாம வி.ஆர்.ஆரை நடுவில் உட்கார வைத்து வழக்கம் போல அவரை ஓட்டினாலே அதுவே சூப்பராக இருக்கும்"
அவரது அந்த கமெண்டே ஒரு நாடகத்திற்கான கருப் பொருளாக அமைந்தது. வி.ஆர்.ஆர் என்பதை மன்மோகன்சிங் என்று மாற்றினால் என்ன என்று ஒரு சிந்தனை எழுந்தது. அதை அப்படியே நூல் பிடித்து ஒரு நாடகமாக தயார் செய்ய முடிந்தது. அது கீழே உள்ளது. அவசியம் படியுங்கள்.
நாடகம் தயாரானதும் பாத்திரங்களுக்குப் பொருத்தமான தோழர்களை முடிவு செய்து ஒத்திகை பார்த்து வெற்றிகரமாக அரங்கேற்றினாலும் சில சொதப்பல்களும் இல்லாமல் இல்லை. சில அராஜகங்களையும் செய்தோம்.
மகாத்மா காந்தி வேடத்தில் நடித்த தோழர் வஜ்ஜிரவேலுவை மொட்டையடிக்க வைத்தோம். அவரும் முழுமனதோடு அதை ஒப்புக் கொண்டார்.
மன்மோகன்சிங் பாத்திரத்தில் நடித்த தோழர் ரங்கராஜனுக்கு அப்போதுதான் திருமணம் நிச்சயமாகி இருந்தது. கலை விழா முடியும் வரை தாடி வைத்திருக்க வேண்டும் என்று சொல்லி விட்டோம். நரைத்த தாடி வேண்டும் என்பதால் அதிலே சாக்பீஸ் பௌடரைத் தூவ அது போக ரொம்ப நேரம் ஆனது.
விவசாயி பாத்திரத்தில் நடித்த தோழர் ஸ்ரீதர் பொருத்தமான உடையில் வந்தார். நொடித்துப் போன வியாபாரி வேடத்தில் நடித்த தோழர் பாஸ்கர்தான் கடைசி நிமிடத்தில் கசங்கிப் போன சட்டைக்குப் பதிலாக பளபளப்பான ஒரு சட்டை, சால்வையோடு வந்து பிறகு எல்லோரிடமும் பாட்டு வாங்கிக் கொண்டார்.
கடைசிக் காட்சியில் காந்தி வேறு வசனத்தை மறந்து விட்டார். இருப்பினும் நன்றாகவே அமைந்த நாடகம் அது.
இந்த பதிவிற்காக பழைய புகைப்படங்களை பார்த்த போது ஒரு துயரமும் இணைந்தே வந்தது.
பண்ருட்டி கிளை நடத்திய நாடகத்தில் ( அன்றைய விழாவின் டாப் ஒன் நிகழ்வு அதுதான்) அரசியல்வாதியாக அசத்திய
தோழர் பி.மணிமொழி.
அன்றைய நிகழ்வை தொகுத்து வழங்கி, ஒரு கிராமியப் பாடலையும் பாடி சிறப்பித்த
தோழர் சி.வெங்கடேசன்
திருவண்ணாமலையில் நடந்த கலை விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்தது மட்டுமல்லாமல் தானும் நடமாடி, நிகழ்வின் இறுதியில் விழாவில் கலந்து கொண்டிருந்த குழந்தைகளின் கையில் கொடியை அளித்து ஒரு திடீர் நடனத்தை ஏற்பாடு செய்து கலக்கிய
தோழர் ஃப்ளாரன்ஸ் லிடியா சாந்திபாய்
ஆகிய மூவரும் இப்போது நினைவில்தான் வாழ்கிறார்கள் என்ற துயரம் மனதை கனக்க வைக்கிறது.
சரி இப்போது நாடகத்தை படியுங்கள்.
என்ன பதில்?
காந்தி சிலையாக நிற்கிறார்.
கீழே உள்ள நாற்காலியில் பிரதமர் வந்து உட்கார்கிறார்
பிரதமர்
அம்மாடி, இந்த நாடாளுமன்றம் முடிஞ்சதோ, நான் பிழைச்சேனோ,
யப்பப்பா என்ன சத்தம்? என்ன குழப்பம்?
வந்தோமோ, படிக்காசை வாங்கினோமா, காண்டீன்ல போய் டீ குடிச்சோமானு இல்லாம இதைப்பண்ணாத, அதைப் பண்ணாத னு போட்டு உயிர எடுக்கிறாங்க,
இன்னும் இரண்டு மாசம் நிம்மதி,
எங்கயாவது பாரீன் போக வேண்டியதுதான்.
எங்க போகலாம்?
ஸ்விஸ் போவோமா, மாதாஜி அங்க போட்ட பணமெல்லாம் பத்திரமா இருக்கானு கூட பாத்திட்டு வந்துடலாம்.
(பிண்ணனியில் “ போவோமா ஊர்கோலம் “ பாடல் ஒலிக்கிறது.
வியாபாரி உள்ளே நுழைகிறார்;
வியாபாரி : ஜீ இப்டி செஞ்சுட்டீங்களே, என் பொழைப்புக்கு என்ன வழி?
பிரதமர் : என்னாச்சு?
என் பெண்டாட்டி தாலியை சேட்டுகிட்ட அடமானம் வைச்சு மளிகைக் கடை வைச்சேன். நீ பாட்டுக்கு வால்மார்ட்டை திறந்து விட்டுவிட்டு என் கடைய மூட வைச்சுட்டியே, என் பிழைப்புக்கு என்ன செய்ய? என் பெண்டாட்டி தாலிக்கு என்ன பதில்?
பிரதமர்: எனக்கு தெரியாது.
விவசாயி உள்ளே நுழைகிறார்.
விவசாயி : ஐயா மவராசா, எனக்கு என்ன வேலை? எனக்கு என்ன வேலை?
பிரதமர் : என்னாச்சு?
விவசாயி: கஷ்டமோ, நஷ்டமோ, உயிரைக் கொடுத்து விவசாயம் செஞ்சுக்கிட்டு இருக்கோம். விதை விலை ஏறிப்போச்சு, உரம் விலை ஏறிப் போச்சு, காவிரியை நினைச்சா கண்ணீர்தான் வரும், மோட்டார் போடலாம்னா கரெண்டே கிடையாது. தற்கொலை பண்ணிக்கலாம்னு யோசிச்ச நேரத்துலதான் ஐயா, வேற வேலைக்கு போகச்சொன்னீங்க, சொல்லுங்க, எனக்கு என்ன வேலை? எனக்கு என்ன வேலை?
பிரதமர் : எனக்கு தெரியாது.
விவசாயி.: தெரியாதா, அப்ப எதுக்கு வேற வேலைக்கு போகச்சொன்னே? என்னமோ பெரிசா வேலையெல்லாம் கொட்டிக் கிடக்கற மாதிரி! சரி நாங்க விவசாயத்த விட்டுட்டா நீ என்ன சாப்பிடுவே?
பிரதமர் : எனக்கு தெரியாது
குடும்பப்பெண்மணி உள்ளே நுழைகிறார்?
குடும்பப்பெண்மணி : ஒரு வேளை கஞ்சி கூட கிடைக்காம பண்ணிட்டியே படுபாவி,
பிரதமர் : என்னாச்சு?
குடும்பப்பெண்மணி : ஏதோ ரேஷன் கடையில் இருபது கிலோ அரிசி கிடைச்சது. பூச்சியோ, புழுவோ சுத்தம் பண்ணி ஒரு வேளை கஞ்சி நானும் என் குழந்தையும் சாப்பிட்டுகிட்டு இருந்தோம். டைரக்டா பாங்கில பணம் போட்டே, அந்த பாவி மனுஷன் அதை அப்டியே எடுத்துக்கிட்டு டாஸ்மாக் போயிட்டான். இப்போ நாங்க பட்டினி. நாங்க வாழவா? சாகவா?
பிரதமர் : எனக்கு தெரியாது
மாணவி உள்ளே நுழைகிறாள்
மாணவி காந்தி சிலையைப் பாத்து : நடுராத்திரியில நகை போட்டுகிட்டு தனியா நாங்க பத்திரமா போனாதான் சுதந்திரம்னு சொன்னீங்க, வயசான பாட்டிங்களே வெறுங்கழுத்தோட கூட பத்திரமா போக முடியல. இந்த மனுசனுக்கு கொஞ்சமாவது கவலை இருக்கானு பாரேன்.
பிரதமர் : என்னாச்சு?
மாணவி : என்னாச்சா? நாட்டில் என்ன நடக்குதேனு தெரியாதா? சுத்தம்.. நாங்க எல்லாம் தைரியமா நடமாட முடியுமா? முடியாதா?
பிரதமர் : எனக்கு தெரியாது
எல்.ஐ.சி ஊழியர் வருகிறார் :
எல்.ஐ.சி ஊழியர் : மிஸ்டர் பிரைம் மினிஸ்டர், நீங்க செய்யறது நியாயமா?
பிரதமர் : என்னாச்சு? நீ யாரு?
எல்.ஐ.சி ஊழியர் : நானா? எல்.ஐ.சி
அவர் முடிப்பதற்கு முன்பாகவே மன்மோகன்சிங் புலம்புகிறார்.
பிரதமர் : வந்துட்டானுங்கய்யா, ஆ, ஊ னா கையில சிவப்பு கொடிய எடுத்துக்கிட்டு பிரச்சாரம், பிரசுரம், பேரணினு. இவங்க எங்க மனு கொடுக்க வந்திருவாங்களோனு பயந்து கிட்டே பாதி எம்.பிங்க தொகுதிக்கே போகறதில்லை.
எல்.ஐ.சி ஊழியர்: எல்.ஐ.சி, ஜி.ஐசி, பொதுத்துறை எல்லாம் நல்லாதான போயிட்டிருக்கு, அப்புறம் எதுக்கு விக்கப் பாக்கிறீங்க, நாங்களும் இல்லாம போனா, அப்புறம் பணம் வேணும்னா எங்க போவீங்க, நீங்களெல்லாம் படிச்சுதான டாக்டர் பட்டம் வாங்கினீங்க? இல்ல
அதற்குள் உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
என்ற ரிங் டோனோடு தொலை பேசி அடிக்கிறது:
பிரதமர் வாயில் விரலை வைத்து
பிரதமர்: உஷ் . யாரும் பேசாதீங்க, பாஸ் லைனில வராரு
தொலைபேசியில் ஒபாமா (தூரத்தில் அமர்ந்த படி)
ஒபாமா : யாரு இந்தியப் பிரதமரா?
பிரதமர் : பாஸ் குட் மார்னிங், இல்லையில்லை குட் ஈவினிங்
இல்லை குட் ஆப்டர்னூன்.
ஒபாமா: என்னயா தடுமாறிக் கிட்டே இருக்க?
பிரதமர் : இல்லை பாஸ், துரையோட குரல கேட்டாலே சும்மா அதிருது.
ஒபாமா? சரி சரி சொன்ன பேச்ச கேட்கவே மாட்டியா?
பிரதமர் : என்ன பாஸ் அப்டி சொல்லிட்டீங்க? அணு ஒப்பந்தம் ஓகே, வால் மார்ட் ஓகே, பென்ஷன் ஒகே, ஈரான் ஓகே, இன்னும் என்ன பாஸ் இருக்கு?
ஒபாமா? இன்னும் இன்சூரன்ஸ் இருக்கே, நீ செய்யறியா இல்லை நான் வேட்டி கட்டின யாரையாவது பி.எம் ஆக்கவா? இங்க பாரு, நான் எப்ப கூப்பிடுவேனு சாமியாருங்க வேற காத்துக்கிட்டே இருக்காங்க,
பிரதமர் : பாஸ், பாஸ் அப்படியெல்லாம் அவசரப்பட்டு எதுவும் செஞ்சிடாதீங்க, நானே என் கையால உங்களுக்கு மணக்க, மணக்க, எல்.ஐ.சி யையும் விருந்து வைக்கிறேன்.
எல்லோரும் சேர்ந்து : அடப்பாவி, நீ இந்தியாவுக்குத்தான் பிரதம மந்திரியா?
பிரதமர் : எனக்கு தெரியாது.
சிலையாய் இருக்கும் காந்தி கீழே இறங்குகிறார்.
வெள்ளைக்காரன விட மோசமா இருக்கியே, உங்க கூட்டத்தையே துரத்தினாதான் இந்தியா உருப்படும் என்றபடியே கைத்தடியை ஓங்குகிறார்.
அப்படியே எல்லாரும் உறைந்து நிற்கிறார்கள்.