Monday, July 31, 2017

உ.பி யோ, ராஜஸ்தானோ - கேவலம்தானே?



இந்தியா முழுதும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வரும் அந்த வீடியோ பற்றித்தான்.

தலித் இனத்தைச் சேர்ந்த காதலர்கள் இருவரை ஒரு வெறி பிடித்த கூட்டம் ஆடைகளை களைய வைத்து தாக்கிக்கொண்டே ஊர்வலமாகச் செல்கிற காட்சி மனதை கடுமையாக பாதித்தது.

உத்திரப்பிரதேசத்தில்  இக்கொடுமை நிகழ்ந்ததாக சொல்லப்பட்டது. நாடெங்கும் கடும் கண்டனம் எழுந்த நிலையில் அச்சம்பவம் நிகழ்ந்தது ராஜஸ்தானில்தான், போன வருடம் நடந்தது என்று சொல்லி பிரச்சினை திசை திருப்பப்படுகிறது.

சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்கள் மீது வெறுப்பை விதைத்து அவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும்  மனிதத்தன்மையற்ற ஒரு வெறி பிடித்த கூட்டத்தை  உருவாக்கியுள்ளதுதானே பாஜக இத்தனை நாள் நடத்தியுள்ள அரசியலின் விளைவு!

இந்த கேவலம் ராஜஸ்தானில் நடந்தால் என்ன? உ.பி யில் நடந்தால் என்ன?

இதற்கெல்லாம் அடிப்படை சங் பரிவாரக்கும்பலின் வெறுப்பு அரசியல் தவிர வேறு என்ன?

யோகி எனும் தீய சக்தி முதல்வரான பின்பு அதிகரித்து வரும் அராஜக நடவடிக்கைகளை குறைத்து மதிப்பிட முடியுமா என்ன? இதை விட கேவலமாகக்கூட அவரது ரோமியோ படை செயல்படும். ராஜஸ்தானில் நடந்தது என்பதால் உ.பி ஒன்றும் அமைதிப்பூங்கா என்று அர்த்தமில்லை.

இத்தனை அராஜகங்களுக்கும் கிரியா ஊக்கி ஒரு நபர்.

அந்த நபர் இந்தியாவை காட்டுமிராண்டிக்காலத்திற்கு எடுத்துச் செல்வது என்ற இலட்சியத்தோடுதான் ஆட்சி செய்கிறார்.

Sunday, July 30, 2017

சிரிப்பே வரவில்லை ஜெமோ . . .உம் வெறுப்பே . . .




நகைச்சுவைக் கட்டுரை என்ற பெயரில் ஆசான் இம்முறை கிறிஸ்துவர்களுக்கு எதிராக கிளம்பியுள்ளார்.


நகைச்சுவை என்ற பெயரில் அவர் எழுதியுள்ளது அப்பட்டமான வெறி. இதிலே இவர் அடுத்தவர்களை மதவெறி என்று சாடுகிறார்.

மணிரத்னத்தின் பம்பாய் மோசடி போல கடைசி இரண்டு பத்தியில் மாரியம்மன் கோயிலைப் பற்றி எழுதி நடுநிலை நாடகம் போடுகிறார்.

சிரிப்பு வரவில்லை ஜெமோ. உங்களின் நயவஞ்சக வேடம்தான் தெரிகிறது.  

உங்கள் வாசிப்புத் தகுதியின் யோக்கியதையும் கூட

Saturday, July 29, 2017

ஒல்லியான உருவம் . . .வலிமையான ஒலி




தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் பொதுச்செயலாளரும் அனைந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தின் தலைவருமான தோழர் ஆர்.முத்துசுந்தரம் அவர்களின் மறைவு மிகுந்த துயரமளிக்கிறது. 

ஒல்லியான உருவம் கொண்டவர். ஆனால் அவரது உரைகளோ வலிமையாக இருக்கும். நேரடியான பழக்கம் கிடையாது ஆனாலும் பல முறை அவரது உரையைக் கேட்டுள்ளேன். வேலூர் சிப்பாய் புரட்சியை ஒட்டி தமுஎகச ஏற்பாடு செய்த கூட்டத்தில் அவர் ஆற்றிய உரை இன்னும் மனதில் உள்ளது.

தோழர் ஆர்.எம்.எஸ் அவர்களுக்கு வீர வணக்கம்.

எங்கள் தென் மண்டல துணைத் தலைவர் தோழர் கே.சுவாமிநாதன் அவர்கள் பதிவு செய்திருந்த அஞ்சலிச் செய்தியை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்

 
தோழர் முத்துசுந்தரம் மறைவு

இனிமை, எளிமையுடன் வலம் வந்த பண்பட்ட தலைவர் தோழர் முத்துசுந்தரம் அவர்களை 30 ஆண்டுகளாக அறிவேன். அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தின் தலைவராக உழைப்பால், உணர்வு மிக்க செயல்பாட்டால் உயர்ந்தவர். 

அவரை முதல் முதலில் 1988 ல் இராமநாதபுரம் ஸ்வார்ட்ஸ் பள்ளியில் ஓர் கருத்தரங்க சிறப்புரையாளராக வந்திருந்தபோது சந்தித்தேன். அருவி போன்ற நடை . அவருக்காகவே வந்த கூட்டமும் அதிகம். அதில் மூட்டா பார்த்தசாரதி, நிசார் அகமது ஆகிய தலைவர்களும் பேசினார்கள். மூவரின் பேச்சுகளும் பல நாள் பேசப்பட்டது. அது நான் பார்வையாளனாக இருந்த கூட்டம். 

நானும் அவரும் 1997 ல் சிவகங்கை அரண்மனை முன்பு சுதந்திர பொன்விழா திறந்த வெளி கருத்தரங்கில் பேசினோம். நான் பேசி முடித்தவுடன் என்னை பாராட்டிய விதம் என்னை நெகிழச் செய்தது. அவர் பாராட்டிய அளவுக்கு என்னுடைய பேச்சு தகுதி உடையதாக அன்று அமைந்தததா என்ற கேள்வி என் மனதில் இருந்தது. ஆனால் புதியவர்களை தட்டிக் கொடுத்து ஊக்குவிக்க வேண்டும் என்கிற தலைமைப் பண்பின் வெளிப்பாடு அது. இது அவரோடு ஒரே மேடையில் நானும் இருக்கிற வாய்ப்பு கிடைத்தபோது. 

2016 ல் ஈரோடு அனைத்து தொழிற்சங்க கருத்தரங்கம் ஒன்றில் தோழர் ஆதவன் தீட்சண்யாவும் நானும் பேசினோம். தோழர் முத்து சுந்தரம் ஓர் அகில இந்தியத் தலைவர். ஆனால் அவர் வருகை தந்து பார்வையாளராக அமர்ந்து கேட்டார். என்ன எளிமை, அடக்கம்! நிறைகுடங்கள் தழும்புவதில்லை என்பதை நேரில் கண்டேன். 

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க வைரவிழா மாநாடு டெல்லியில் நடைபெற்ற போது பொது மாநாட்டில் பேச அழைக்கப்பட்டிருந்தார். 

அவருக்கு விமானப் பயணம் ஏற்பாடு செய்வதாக கூறினேன். நீங்களெல்லாம் எதில்?என்று கேட்டார். அதற்குப் பிறகு எங்களிடம் சொல்லாமலே முன்பதிவு செய்துகொண்டார்.


நாங்கள் பயணித்த அதே தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் சாதாரண இரண்டாம் வகுப்பில் வந்தார். பக்க மேல் படுக்கையில் ஏறி படுத்துக் கொண்டார்.  உடன் வந்த அனைத்து தோழர்களும் அவரின் எளிமையால் ஈர்க்கப்பட்டனர். 


நிறைய வாசிப்பவர். ஈகோ இல்லாமல் உரையாடுபவர். குழந்தை போன்று தோழமையில் கரைந்து போகிறவர். ஆனால் போராட்ட உறுதி எனும்போது அவரின் போர்க் குணம் நீர்க்கவே செய்யாது. 

முத்து சுந்தரம் அவர்களே! உங்கள் பேச்சு மட்டுமல்ல, உங்களின் வாழ்க்கையும் எங்களுக்கு நிறையக் கற்றுக்கொடுத்திருக்கிறது. எப்படி உங்கள் மறைவை ஈடு கடடப்போகிறோம்! 

க. சுவாமிநாதன்.
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்.

Friday, July 28, 2017

நித்தியை விட கேவலமாய் அவரின் . . . .



அசிங்கம் பிடித்த ஆபாசப் போலிச்சாமியார் நித்தியானாந்தா.  அந்த மனிதனின் சமீபத்திய சித்து விளையாட்டு திருவண்ணாமலையில் உள்ள பவழக்குன்றை ஆக்கிரமித்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது பற்றியும் சில எலும்புத்துண்டு பிராணிகள் சுவரொட்டி அடித்து ஒட்டியது பற்றியும் முன்பே எழுதியுள்ளேன்.

தந்தை பெரியாரை இழிவுபடுத்தி நித்தி பேசியதைக் கண்டித்து தமுஎகச வின் மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் தோழர் கருப்பு கருணா முகநூலில் பதிவிட்டதை தொடர்ந்து நித்தியின் சீடர்கள் என்ற பெயரில் பலர் அங்கே ஆபாச வாந்தி எடுத்து வந்தனர். தமுஎகச வின் இன்னொரு முக்கியமான பொறுப்பாளரான தோழர் வெண்புறா சரவணன் நித்தி அடியாட்களுக்கு தக்க பதிலடி கொடுத்திருந்தார்கள்.

இன்று நித்தி வளர்த்தெடுத்துள்ள பொறுக்கிகள் தோழர் கருணா மற்றும் தோழர் வெண்புறா பற்றி ஒரு ஆபாச வீடியோவை வெளியிட்டுள்ளார்கள். பெண்களை எவ்வளவு கேவலமாக அந்த கூட்டம் பார்க்கிறது என்பதற்கு அந்த வீடியோ ஒரு உதாரணம்.

எலும்புத்துண்டிற்காக அலைகிற இதர பிராணிகள் போல மார்க்சிஸ்டுகள் அவர்களின் பேரங்களுக்கு அடிபணியாமல் இந்த கூட்டத்திற்கு எதிராக உறுதியாக இருக்கிறார்கள் என்ற ஆத்திரத்தை ஆபாசமாக வெளிப்படுத்தியுள்ளனர்.

நித்தி எனும் போலிச்சாமியாரைப் போலத்தானே அவரது சிஷ்யகேடிகளும் கேவலமாக இருப்பார்கள்.

இதற்கெல்லாம் கலங்காமல் அவர்களின் பணி தொடரும். அவர்களோடு நாங்கள் எல்லாம் உறுதியாக நிற்போம்.

தமுஎகச வெளியிட்ட கண்டன அறிக்கை கீழே

 
கருப்பு கருணா குடும்பத்தை
இழிவுபடுத்தும் வீடியோ பதிவு
===========================
தமுஎகச கண்டனம் - நடவடிக்கைக்கு வலியுறுத்தல்
----------------------------------------------------------------------------------
திருவண்ணாமலையில் நித்தியானந்தா சீடர்களின் மலை நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைளை மக்கள் ஆதரவோடு தடுத்த போராட்டத்திலும், முற்போக்குக் கருத்துகளைப பரப்புரை செய்வதிலும் முன்னணியில் நிற்பவரான கருப்பு கருணா, அவரது குடும்பத்தினர், தோழர்களை இழிவுபடுத்தித் தயாரிக்கப்பட்ட காணொளிக் காட்சி சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்திருப்பதோடு, தமிழக அரசும் காவல்துiயும் உடனடியாகத் தலையிட்டு இந்தக் கோழைத்தனமான இழிசெயலில் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளது.

சங்கத்தின் துணைப் பொதுச்செயலாளருமான கருணா போன்ற ஒப்பனையோடு உள்ள ஒருவரிடம் இன்னொருவர் பேட்டி காண்பது போன்ற அந்தக் காணொளிப் பதிவு கருணாவின் பெயரையும், குடும்பத்தினரையும, அவருக்கு ஆதரவாகக் குரல்கொடுத்த சங்கத்தின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஓவியர் வெண்புறா சரவணனையும் நேரடியாகக் குறிப்பிட்டு, பாலியல் வக்கிரத்தோடும் அவமதிக்கிறது.

இது தொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் ச. தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர் சு. வெங்கடேசன் இருவரும் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “சட்டவிரோத ஆக்கிரமிப்புகளில் ஈடுபடுகிறவர்களின் இப்படிப்பட்ட செயல்கள் அவர்கள் எந்த அளவுக்குத் தரம் தாழ்ந்தவர்கள் என்பதைத்hன் எடுத்துக்காட்டுகின்றன. தங்கள் பக்கம் நியாயம் இருந்தால் அதை மக்களிடம் எடுத்துச் சொல்வதற்கு மாறாக, இத்தகைய அற்பத்தனமான முயற்சிகளில் இறங்குகிறார்கள் என்றால், போராட்டம் நியாயமானது என்பதும் தெளிவாகிறது. இத்தகைய தாக்குதல்களால் முற்போக்கு இயக்கத்தினர் ஒருபோதும் அஞ்சிப் பின்வாங்கிவிட மாட்டார்கள்,” என்று கூறியுள்ளனர்.

“அதேவேளையில் இது ஒரு கோழைத்தனமான செயல் மட்டுமல்ல, அநீதிகளை அம்பலப்படுத்தி மக்களுக்காகப் போராட்டக் களம் காண்கிற மற்றவர்களையும் அச்சுறுத்தி ஒதுங்க வைக்க முயல்கிற சூழ்ச்சியுமாகும். அந்தக் காணொளிக் காட்சியைத் தயாரித்தவர்கள், ஆதரிப்பவர்கள் யார் யார் என அதற்கான இணைப்புகளிலேயே இருக்கிறது. ஆகவே, அடித்தட்டு மக்களுக்கான கலைஞருமான கருணாவை இவ்வாறு சிறுமைப்படுத்த முயன்றவர்கள் மீது தமிழக அரசும் காவல்துறையும் உடனடியாக சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்,” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ராஜினாமா செய்யும் முன் - நிதிஷீடம் . . .




புதிய வேலை கைக்கு வரும் முன் பழைய வேலையை ராஜினாமா செய்யாதீர்கள்.

முன்னாள் முதலாளியிடமும் தொடர்பில் இருங்கள்

நிதீஷ்குமார் கற்றுக்கொடுத்துள்ள பாடம் இது.

வாட்ஸப்பில் வந்ததை தமிழில் தந்துள்ளேன்.

இந்த கேடு கெட்ட சந்தர்ப்பவாதிகள் இன்னும் வேறென்ன எழவை எல்லாம் கற்றுத் தரப் போகிறார்களோ? 

இந்த கேவலத்தை எல்லாம் "ராஜ தந்திரம்" என எத்தனை மூடர்கள் சிலாகிக்கப் போகிறார்களோ?

 

Thursday, July 27, 2017

கூமுட்டை விருது - நிறுத்துங்கப்பா, முடியல

இவங்க சினிமாவுக்கு கதை எழுதப் போகலாம். ஆஸ்கார் விருதே கிடைக்கும். அதை விட்டுட்டு உபயோகமத்த மோடிக்கும் கோவிந்துக்கும் ஏண்டா இப்படி ஒரு பில்ட் அப் கொடுக்கறீங்க.

உங்க கற்பனைக்கு அளவே கிடையாதா?

உங்க ஆளுங்களே இதையெல்லாம் நம்ப மாட்டாங்க.

போதும் நிறுத்தங்கப்பா. முடியல.

இதையும் யாராவது உண்மைன்னு நம்பினா, உலகின் அதி சிறந்த கூமுட்டை என்ற விருதை என் செலவில் தர தயாராக இருக்கிறேன். 




Wednesday, July 26, 2017

உத்தம அடிமை வேடத்தின் பேரம் என்ன?




அவர் அப்படி ஒன்றும் சங்கிகளுக்கு எதிராக உறுதியோடு நின்றவர் அல்ல. அவர்களோடு நீண்ட காலம் கூட்டணியிலும் இருந்தவர்தான்.

பிரதமர் கனவில் இருந்தார். பிரதமராக வேறு ஒருவரை கூட்டணிக்கட்சி முன்னிறுத்தியதும் "திராட்சை கிட்டாத நரி"யாக  வெளியேறினார்.

மக்களவைத் தேர்தலில் இடங்கள் பறி போனதும் கைவசம் உள்ள முதல்வர் பதவியும்  நழுவிப் போய் விடுமோ என்று பதறிப் போய் முன்னாள் எதிரிகளோடு கூட்டு வைத்து ஆட்சியை அடுத்த தேர்தலில் தக்க வைத்துக் கொண்டார்.

அந்த முன்னாள் எதிரி அப்போதும் ஊழல் பேர்வழி என்றே அறியப் பட்டவர். சொல்லப்போனால் தேர்தலில் போட்டியிடும் தகுதி கூட இல்லாதவர். ஆனாலும் இணைந்தார். வென்றார்.

அந்த முன்னாள் எதிரி ஒரு விஷயத்தில் மட்டும் உறுதியானவர். மத வெறியை அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்தும் காவிகளை எதிர்ப்பதில் எக்காலத்திலும் சமரசம் செய்து கொள்ளாதவர்.

தேர்தலில் தோற்றுப் போனாலும் குதிரை பேரம், மிரட்டல்கள், ஆளுனர் மோசடி என்று ஒவ்வொரு மாநிலமாக அரசுகளை தங்களின் கைப்பிடிக்குள் கொண்டு வரும் ஆளும் கட்சிக்கும் அவர் என்றுமே ஒரு உறுத்தல்தான்.

கோபித்துக் கொண்டு போன முன்னாள் கூட்டாளியை கோவிந்தைக் காண்பித்து அரவணைத்துக் கொண்டார்கள். நிரந்தர எதிரியை ஏவல் எடுபிடியான சி.பி.ஐ மூலம் சோதனைகள் செய்தார்கள்.

முன்னாள் கூட்டணி உத்தம வேடம் போட்டு பதவி விலகல் நாடகமும் நடித்து விட்டார். புதிய அடிமையாக மாறி விட்டார். 

வெளியிலிருந்து ஆதரவா அல்லது  கூட்டணி அமைச்சரவையா?

பேரம் என்னவென்று விரைவில் தெரியும். 

எடப்பாடி வகித்து வந்த அடிமைப் பதவியில் இன்று நிதிஷ்குமார் அமர்ந்து விட்டார் என்பதுதான் யதார்த்தம்.
 

Saturday, July 22, 2017

ஜெமோ . . .உடலே கொழுப்பாக . . .




உடலில் கொழுப்பு இருக்கலாம். கொழுப்பிலே உடல் இருந்தால், அதுதான் ஆசான் என்று அழைக்கப்படும் ஜெமோ/

இடங்கை இலக்கியம்” என்று அவர் சிண்டு முடிய நடத்திய முயற்சியில் அடி வாங்கியதால் வழக்கம் போல மீண்டும் தூற்றியுள்ளார். அதிலே அவரது சுய தம்பட்டம் தவிர வேறெதுவும் வெளிப்படவில்லை. அவரது அற்புத வசைகளை பார்ப்போம். அதற்கான பதிலையும் கீழே கொடுத்துள்ளேன்.

இடதுசாரிகளிலேயே பலர் என்னில் கால்வாசிகூட வாசித்திருக்க மாட்டார்கள். நான் இதே வேலையாக கால்நூற்றாண்டை கடந்திருக்கிறேன். [அதோடு பெரும்பாலானவர்கள் எனக்கு நூலை அனுப்பியும் விடுகிறார்கள்]

உங்களுக்கு வாசிப்பது மட்டும்தான் வேலை. இடதுசாரிகளுக்கு வேலை பெரும்பாலும் போராட்ட களத்தில்தான். மக்களிடம்தான் அவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். உங்களின் வாசிப்பு அனுபவத்தை விட அவர்களின் கள அனுபவம் இன்னும் மேன்மையானது. பாவம் அந்த பெரும்பாலானவர்கள். உங்களுக்கு புத்தகத்தையும் அனுப்பி பிறகு உங்களிடம் வசையும் வாங்கி விடுகிறார்கள்.

இடங்கை இலக்கியம் என்றெல்லாம் பெயர் மாற்றப்படவில்லைகட்டுரைகளுக்குத் தலைப்பு வைக்கும்போது கவனத்தை ஈர்க்கும்படி, நினைவில்நிற்கும்படி தலைப்புவைப்பது இலக்கியவழக்கம்.

அது வித்தியாசமாக ஒலிப்பதனாலும், வரலாற்றுக்குறிப்பு ஒன்று இருப்பதனாலும்  கொஞ்சம் இலக்கியரசனையும் வாசிப்பும் உள்ள எவருக்கும் அத்தலைப்பு. சுவாரசியமான ஒரு சொல்லாட்சியாகவே தோன்றியது. இந்த எளிய விஷயத்தைக்கூட உணராதவர்கள் என்னதான் இலக்கியம் வாசிக்கிறார்கள்?

சமாளிக்காதீங்க ஆசானே. நீங்க யாரு, எப்பேற்பட்ட அப்பாடக்கர், சொல்வதிலும் சொல்லாமல் விடுவதிலும் நீங்கள் செய்யும் வன்ம அரசியலை நாங்கள் நன்றாகவே உணர்வோம். ஏதோ என்னைப் போல வலைப்பக்கங்களில் எழுதுபவ்ர்கள் வேண்டுமானால் மற்றவர்களை படிக்க வைக்க சுவாரஸ்யமான தலைப்பை வைக்கலாம். நீங்கள்தான் அகில உலக எழுத்தாள சக்ரவர்த்தியாயிற்றே. உங்களின் வெண்முரசு நாவலையே கண்டிப்பாக படிக்க வேண்டும் என்று எட்டு நண்பர்களிடம் சத்தியம் வாங்கிக் கொண்டவராயிற்றே. உங்களுக்கும் கூட இந்த தலைப்புச் சிறை அவசியமா? செய்த தவறை ஒப்புக்கொள்ள மனமின்றி பம்முவது நன்றாகவே தெரிகிறது. 

நீங்கள் வசனம் எழுதிய ஒரு படத்தின் கதை அடிப்படையில் "மாமனாரின் இன்ப வெறி" ஆனால் வேறு ஏதோ தலைப்பு வைத்தீர்களே? கதைக்கு பொருத்தமான சுவாரஸ்யமான தலைப்பை கோட்டை விட்டு விட்டீர்களே.

இவர்கள் ஏன் இப்படி தலைப்பை வைத்துக்கொண்டு பேசுகிறார்கள்? வேறு எதையும் பேசுவதற்கான வாசிப்புத்தகுதி அல்லது அறிவுத்தகுதி இல்லை என்பதனாலேயே. இது ஒருவகை புறணிப் பேச்சு. இதுதான் இவர்களால் இயலும். சூழலின் துரதிருஷ்டம் இது
தலைப்பைப் பற்றி மட்டும் பேசுவதாக சொல்லி தப்பிக்கப் பார்க்காதீர்கள். இடதுசாரிகளைப் பற்றி எழுதுவதற்கான தகுதி உங்களுக்கு இல்லை என்பதுதான் பிரச்சினை. இதிலே நீங்கள் அடுத்தவர்களுக்கு அறிவுத்தகுதி இல்லை, வாசிப்புத் தகுதி இல்லை என்று திமிரோடு எழுதுகிறீர்கள்.
எல்லா தகுதியும் இருக்கிற நீங்கள் என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்? மத வெறியை வளர்க்கிறீர்கள். கேடு கெட்டவர்களுக்கு முட்டு கொடுக்கிறீர்கள். பெண்களை இழிவு படுத்துகிறீர்கள். உங்கள் வாசிப்புத் தகுதியை வஞ்சத்தை, நச்சு பரப்ப மட்டுமே பயன்படுத்துகிறீர்கள்.
உழைப்பாளி மக்களுக்காக போராடுபவர்களை வம்புக்கு இழுத்து அதிலே அற்ப சுகம் காணும் உங்கள் அணுகுமுறையும் மாறப் போவது கிடையாது. அதனால் உங்களின் அற்ப குணத்தை அம்பலப்படுத்தும் எங்கள் பணியும் நிற்கப் போவது கிடையாது.
நகைச்சுவை என்ற பெயரில் நீங்கள் வெளிப்படுத்தியுள்ள மதவெறி பற்றித்தான் என்னுடைய அடுத்த பதிவு.

நீயும் அப்பவே செத்து தொலைச்சிருக்கலாம்



எங்கள் மகளிர் மாநாட்டில் சி.ஐ.டி.யு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் தமிழ் மாநில அமைப்பாளர் தோழர் எம்.மகாலட்சுமி அவர்கள் பேசிய சில விஷயங்களை முன்னர் பதிந்திருந்தேன்.

இன்னொரு முக்கிய செய்தி இங்கே




பட்டாசுத் தொழிலாளர்கள் மத்தியில் பணி செய்து கொண்டிருக்கிறேன். ஒரு பட்டாசுத் தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டால் தொழிலாளி இறந்து போய் விட்டால் கரித்துண்டாக மாறிப் போய் விடுவார்கள். முதலாளிகள் தந்திரமாக தொழிற்சாலைக்கு வெளியே வைத்து விடுவார்கள்.

கரித்துண்டான அந்த உடல்களை பாயில் சுற்றி ஒரு ரிக்சாவில் ஏற்றுவோம். ரிக்சாவில் ஏற்ற அந்த ரிக்சாக்காரர் மறுத்தால் “இறந்து போனவனும் உன் வர்க்கம்” என்று சொல்லி ஏற்றுவோம். பட்டாசு ஆலையின் முதலாளி வீட்டின் முன்போ அல்லது அலுவலகத்தின் முன்போ அந்த உடலைப் போட்டு ஆர்ப்பாட்டம் செய்தால் இழப்பீடு கொடுப்பார்கள்.

எவ்வளவு தெரியுமா? வெறும் இரண்டாயிரம் ரூபாய். இது பதினைந்து ஆண்டுகளூக்கு முன்பு. இப்போதெல்லாம் அரசு உதவி, இழப்பீடு, காப்பீட்டுத் தொகை என்று ஏழு லட்ச ரூபாய் வரை தருகிறார்கள். சங்கம் தொடர்ந்து போராடியதன் விளைவு அது.

அதே நேரம் இன்னும் பலர் இருக்கிறார்கள். அவர்களும் கரித்துண்டுகளே. ஆனால் அவர்கள் உடலில் உயிர் ஒட்டி இருக்கும். உடலெல்லாம் வெந்து போனவர்களாக  முகம் தீய்ந்து போனவர்களாக, எந்த ஒரு வேலைக்கும் அடுத்தவர்களை நம்புபவர்களாக, உயிர் இருந்தும் இல்லாதவர்களாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அவர்கள். விபத்தில் அவர்கள் உயிர் பிழைத்திருந்தாலும் வாழ்க்கை அவர்களுக்கு நரகமாக மாறி விட்டது.

இப்படி வேதனை அனுபவிப்பதற்குப் பதிலாக அந்த விபத்தில் இறந்து போயிருக்கலாமே என்று நெருங்கிய சொந்தங்களே சொல்லுமளவிற்கு அவர்கள் வாழ்க்கை ரணகளமாக இருக்கிறது.

அப்படி நடைப்பிணமாக வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கும் மனிதர்கள் நிலைமை மேம்பட சங்கம் தொடர்ந்து போராடிக் கொண்டு வருகிறது.


நீயும் சாவு. உன் ஜாதியும் கூட . . .





சில தினங்கள் முன்பாக அலுவலகம் செல்கையில் என்னைக் கடந்து சென்ற வாகனத்தின் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த வாலிபனின் டிஷர்ட்டில் பின்னே கீழ்வருமாறு அச்சிடப்பட்டிருந்தது.

நாங்க செத்தாலும்
எங்க ஜாதி சாகாதுடா


சத்ரியன்டா

நடுவிலே அந்த ஜாதி சங்கத்தின் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. மாற்றம் முன்னேற்றம் என்று போஸ்டர் அடித்து ஒட்டியவருக்கு சொந்தமான ஜாதி சங்கம்தான்.

அதைப் பார்க்கையில் மிகவும் கவலையாக இருந்தது. வாலிபர்களை இப்படி தவறான வழியில் அழைத்துச் செல்கிறார்களே என்று கோபமும் வந்தது.

இந்த ஜாதி சங்கங்கள் வெறியூட்டப்படும் இந்த இளைஞர்களுக்கு என்ன செய்வார்கள் அல்லது இது வரை என்ன செய்திருக்கிறார்கள்?

ஜாதி சங்கத்தலைவர்களும் ஜாதிக்கட்சித் தலைவர்களும் அடிப்படையில் முதலாளிகள், பலர் கல்லூரி, பல்கலைக் கழகங்கள் நடத்தும் கல்வி வியாபாரிகள்.

தங்களின் வணிக நிறுவனங்களில் வேலை போட்டுக் கொடுத்துள்ளனரா? தங்கள் கல்லூரிகளில் காசு வாங்காமல் இடம் கொடுத்துள்ளனரா?

கூட்டங்களில் கலந்து கொள்ள குவார்ட்டரும் பிரியாணியும் தருவார்கள். கலவரங்கள் செய்யக் கற்றுக் கொடுப்பார்கள். தவறாக வழி நடத்தி அவர்களின் வாழ்க்கையை சீரழிப்பார்கள். அடுத்தவர்கள் மீது வஞ்சத்தை வளர்ப்பார்கள். பகைமைத் தீயை மனதில் பற்ற வைப்பார்கள்.

அந்த டி. ஷர்ட் வாசகத்தை பார்த்ததும் உடனடியாக தோன்றிய எதிர்வினை

அதுதான் இந்த பதிவின் தலைப்பு