சமாதி அம்மையாரின் அடிமையாய் தொடங்கி பரப்பன அக்ரஹார சிறைவாசியாரின் அடிமையாய்
மாறி இன்று மோடியின் அடிமையாய் தொடரும் எடப்பாடி பழனிச்சாமி எனும் தமிழகத்தின்
துயரம், தனது ஏவல்படை கொண்டு தன் தற்போதைய எஜமானர்களை திருப்திப் படுத்தியுள்ளார்.
ஆணவக் கொலைகளை தடுத்து நிறுத்த தனிச்சட்டத்தை இயற்று என்ற கோரிக்கையை
முன்வைத்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்தி வந்த நடைப்பயண இயக்கத்தை
சென்னை மாநகருக்குள் நுழைய அனுமதிக்காமல் தாம்பரத்திலே தடை செய்து பயணக்குழுத்
தோழர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர்
ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோரை கைது செய்துள்ளார்கள்.
இந்த நடைப்பயணத்தை சென்னை நகருக்குள் அனுமதித்தால் சட்டம் ஒழுங்கு
சீர்குலைந்து விடுமாம்!
கடந்த ஒன்பதாம் தேதி சேலத்தில் தொடங்கி நேற்று மாலை தாம்பரம் வரை
நடைபெற்ற பயணத்தில் எங்காவது சிறு
அசம்பாவிதம் நடந்ததாக ஏவல் படையால் சொல்ல முடியுமா? ஏதேனும் மோதல் உண்டா? பயணக்
குழுவில் வந்தவர்கள் குடித்து விட்டு கும்மாளமிட்டார்களா? பெண்கள் முகம் கோண
நடந்து கொண்டார்களா?ஆபாசமாய் பேசினார்களா? வழியில் உள்ள கடைகளை அடித்து
நொறுக்கினார்களா? பிரியாணியை அண்டாவோடு திருடிக் கொண்டு ஓடினார்களா?
என்ன குற்றம் செய்தார்கள் மிஸ்டர் பழனிச்சாமி?
இளவரசன், கோகுல்ராஜ், சங்கர், மாரிமுத்து ஆகியோர் மாண்ட துயரத்தைச்
சொன்னார்கள். அவர்களின் படுகொலைக்குப் பின்னே ஒளிந்துள்ள, தமிழகத்தை பீடித்திருக்கிற ஜாதிய
வெறி பற்றி சொன்னார்கள். கௌசல்யா போல, அபிராமி போல வேறெந்த பெண்ணிற்கும் இது போன்ற
கொடுமைகள் நிகழக் கூடாது என்றார்கள். அதனை தடுக்க சட்டம் வேண்டுமென்றார்கள்.
சமத்துவத்திற்கான விதைகளை வரும் வழி எங்கும் தூவிக் கொண்டே வந்தார்கள். ஜாதியத்திற்கு
எதிரான குரலை வலிமையாக ஒலித்துக் கொண்டே வந்தார்கள். அவர்கள் இறுதியில் உங்களிடம்தான் வருவதாக இருந்தார்கள். சட்டம் இயற்றும் இடத்தில் நீங்கள்தானே
உள்ளீர்கள்?
சேலம் தொடங்கி தாம்பரம் வரை சட்டம் ஓழுங்கிற்கு ஏற்படாத அபாயம் எப்படி ஐயா,
சென்னை நகருக்குள் மட்டும் ஏற்படும்?
ஜாதியத்திற்கும் ஆதிக்க சக்திகளுக்கும் எதிரான குரல் சென்னையில் ஒலிப்பதைக்
கேட்க உங்கள் செவிகளுக்கு விருப்பமில்லையா? உங்களை ஆட்டிப்படைக்கும் மிகப் பெரிய
தீய சக்தியின் உத்தரவா?
கூவாத்தூர் சாக்கடையில் மூழ்கி பதவியைப் பெற்று அதை தக்க வைத்துக் கொள்ள
இன்னொரு சாக்கடையில் கூடிக் குலாவும் உங்களுக்கு நேர்மையின் அடையாளமான
செங்கொடியின் புதல்வர்களைச் சந்திக்க உள்ளம் கூசுகிறதோ? நீங்கள் பதவி பெற்றதற்கும்
உங்கள் ஜாதியப் பின்னணி ஒரு காரணி என்பதாலும் அந்த ஆதிக்க சக்திகளில் நீங்களும்
ஒருவர் என்பதால் தீண்டாமையை கடைபிடிக்கிறீரோ?
சொல்லுங்கள் மிஸ்டர் பழனிச்சாமி, தடை செய்ததன் மர்மம் என்னவோ?
உங்களின் முதல் எஜமானர், அதுதான் சமாதி அம்மையார், அவரே கூட அனுமதிக்காத
ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கி கையில் குண்டாந்தடிகளோடு வாயில் மத வெறி
முழக்கங்களோடு மனதில் மக்களை துண்டாடும் வெறியோடு காவிகள் சென்னை நகரில் நடைபோட
அனுமதித்த உங்களால் செங்கொடிகளின் சங்கமத்தை தடை செய்ய முடிகிறதென்றால் அதற்கு
உங்களின் மோடி விசுவாசத்தைத் தவிர வேறென்ன காரணம் இருக்க முடியும்?
சொந்த அமைப்பைச் சேர்ந்தவர்களாலேயே, அதுவும் தகாத உறவுப் பிரச்சினைக்காக
கொல்லப்பட்ட சசிகுமார் என்பவரின் பிணத்தை வைத்துக் கொண்டு கோவையிலே காவிகள்
ஊர்வலம் செல்லவும் செல்லும் வழியில் கலவரங்கள் நிகழ்த்துவதையும், கடைகளிலே
புகுந்து கொள்ளையடிப்பதையும் சிறு சலனம் கூட இல்லாமல் வேடிக்கை பார்த்த உங்களால்
நியாயமான கோரிக்கையோடு அமைதியான முறையிலே நடைப்பயணம் வந்தவர்களை மட்டும் எப்படி
தடுக்க முடிக்கிறது? கைது செய்ய முடிகிறது?
அடிமைப்
பாரம்பரியத்தைச் சேர்ந்த உங்களைப் போன்றவர்கள் எல்லாம் தமிழகத்தின் முதல்வராக
இருப்பது வெட்கக்கேடு. மானக்கேடு.