Tuesday, January 31, 2017

அந்த உச்ச நடிகரை தெரியாதென்றவர்.



பன்முகப் பரிமாணம் கொண்டவர் பாட்டையா பாரதி மணி அவர்கள். அவருடைய மாமனாரான மூத்த எழுத்தாளர் க.நா.சு பற்றி பாட்டையா தனது “புள்ளிகள், கோடுகள், கோலங்கள்” நூலில் ஒரு அத்தியாயமே எழுதியிருப்பார். இன்று திரு க.நா.சு அவர்களின்  பிறந்த நாளை முன்னிட்டு அந்த  அத்தியாயத்தின் ஒரு சுவாரஸ்யமான பகுதியை மட்டும் கீழே தந்துள்ளேன்.



ஹிந்திக் கவிஞர் ஹரிவன்ஸ் ராய் பச்சன் எப்போதாவது தொலைபேசியில் தொடர்பு கொள்வார். அவர் தில்லிக்கு வரும்போது அவரது குல்மோஹர் என்க்லேவ் வீட்டில் சிலசமயம் விருந்துக்கு அழைப்பார். நான் காரில் கொண்டுபோய் விட்டுவிடுவேன். வரும்போது அவர்கள் காரில் வீடு திரும்புவார். ஒரு தடவை அமிதாப் பச்சன் வீட்டிலிருந்த நேரம். கவிஞர் இவரிடம் ‘KaNaa, He is my son Amitabh‘என்று அறிமுகப்படுத்தினார். க.நா.சு. அமிதாப் பச்சனிடம், What are you doing? என்று கேட்டார். அதற்கு அமிதாப் பணிவாக ’ I am in the Film industry’ என்று பதிலளித்தார். அதில் திருப்தியடையாத க.நா.சு. கேட்ட அடுத்த கேள்வி: Writing songs like your Father? அமிதாப் இன்னும் பணிவாக No, I am an Actor என்று பதிலளித்தார்.

வீட்டுக்கு வந்ததும் என் மனைவி ஜமுனா, ‘ஏம்ப்பா! உனக்கு அமிதாப் பச்சனைத் தெரியாதா? போனவாரம் தானே இந்தியா டுடே-யில படிச்சே! இந்த தஞ்சாவூர் கிருத்திரமம் தானே வேண்டாங்கிறது!’ என்றதற்கு, க.நா.சு-வின் பதில் ஒரு நமுட்டுச்சிரிப்புதான்! 

பத்திரிகைகளுக்கு பல வருடங்கள் பேட்டியே கொடுக்காத அமிதாப்பச்சன் முதல் தடவையாக பம்பாய் ஃபிலிம்பேர் பத்திரிகைக்கு கொடுத்த நீண்ட நேர்காணலில் இது ஒரு கேள்வி: What was the most embarrassing moment in your life? அதற்கு அமிதாப் அளித்த பதில்: ’என் தந்தையைப் பார்க்க வந்திருந்த தென்னிந்திய எழுத்தாளர் ஒருவர் கேட்ட கேள்விதான் என்னை திக்குமுக்காட வைத்தது. அதற்கு ஒரு வாரம் முன்னால்தான் ‘இந்தியா டுடே’ பத்திரிகை என் படத்தை அட்டையில் போட்டு ‘Hundred Crores in One Man Industry’ என்று பல கட்டுரைகளுடன் வெளிவந்த நேரம். ஆனந்த், தீவார் போன்ற வெற்றிப் படங்களுக்குப் பிறகு, என்னை இந்தியாவில் சிறு குழந்தைக்கும் தெரியும் என்ற இறுமாப்புடன் இருந்த என்னைப் பார்த்து, ‘நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய்?’ என்று ஒரு கிழவர் அப்பிராணியாக கேட்ட கேள்வி என்னை உலுக்கிவிட்டது. விளையாட்டுக்காகக் கேட்கிறாரோவென்று அவரை உற்றுப் பார்த்தேன். இல்லை…..ரொம்ப சீரியஸான முகம். அவர் உண்மையாகவே நடித்திருந்தாரென்றால் அவர் என்னைவிட சிறந்த நடிகர்!’


Monday, January 30, 2017

கேரளாவில் முதல் முறையாக





எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் இருபத்தி நான்காவது பொது மாநாடு இன்று எர்ணாகுளம் நகரில் தொடங்குகிறது. 

இருபத்தி ஐந்தாம் தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டை கேரள முதல்வர் தோழர் பினராயி விஜயன் துவக்கி வைக்கிறார்.

அகில இந்திய மாநாடு கேரளாவில் இப்போதுதான்  முதல் முறையாக நடைபெறுகிறது. அதனால் மாநாட்டை நடத்தும் தோழர்கள் உற்சாகமாக பணி செய்து வருகிறார்கள்.

இடதுசாரிகள் ஆட்சி செய்யும் மாநிலத்தில் மாநாடு நடைபெறுவதால் நாடு முழுதும் உள்ள தோழர்களும் உற்சாகமாக வந்து கொண்டிருக்கின்றனர்.

மாநாடு முடிந்து வேலூர் வந்ததும் சந்திப்போம்.

அது வரை எவ்வளவு டிராப்டில் உள்ளதோ, அது பகிர்ந்து கொள்ளப்படும்.

கோட்ஸேக்களின் குமுறல்





காலம் காலமாய் நடக்கிறது
இந்த யுத்தம்.

பொய்களின் துணை கொண்டு
அராஜக வடிவங்களில்
அநீதியின் புதல்வர்கள் 
தொடுக்கும் போர்களெல்லாம் 
எப்போதுமே தோற்றுக் கொண்டுதான் 
இருக்கின்றன.

உண்மையும் நல்லிணக்கமுமாய்
காந்தி இன்னும் வாழ்வதைப் போல
கொடியவர்களின் வடிவமான
கோட்சேயும் இங்கே மடியவில்லை.                  
 
நாற்காலியைக் கைப்பற்றிவிட்டு
மக்களின் இதயத்தை இழந்தார்கள்
அழிவின் பாதையில்
அழைத்துச் செல்ல முயன்றார்கள்.
 

எத்தனை முறை முயன்றாலும்
ஆயிரம் நாடகம் போட்டாலும்
அயோக்கியர்கள் என்பதும்
அம்பலமாகிக் கொண்டே இருக்கிறது.
மண்டையை மறைத்தாலும்
அந்த நடிகர்களின் கொண்டைகள்
மட்டும் அசிங்கமாய்
தெரியத்தான் செய்கிறது.
 
உண்மையின் பிரகாசத்தில்
இருண்டு போன விழிகள்
கற்பனைக் கண் கொண்டு
காண்பதெல்லாம் மஞ்சளென்று
ஊர் முழுதும் உளறித் திரிந்தது.

ஒற்றுமையை சீர்குலைக்க
ஒழுங்கைக் கெடுக்க
தோல்வியின் புலம்பலாய்
விரக்தியின் வெறியால்
"தேச விரோதி" என
உண்மைக்கும் சத்தியத்திற்கும்
அடைமொழி அளிக்கிறார்கள்,
கோட்ஸேயின் கூட்டத்தார்.

அண்ணலின் தடி வேண்டாம்.
அமைதியின் வழி போதும்,
அநியாயங்கள் எந்நாளும்
வென்றதே கிடையாது.

காந்திக்கும் இங்கு மரணமில்லை,
மக்கள் ஒற்றுமைக்கும்தான். 

 

Sunday, January 29, 2017

இவன்தாய்யா டேஷ் பக்தன் !!!!!



மேலே உள்ள கடிதத்தை படித்தால் நிர்மலா சீத்தாராமன், எச்.ராசா, தமிழிசை வகையறாக்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.

இது போல பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு அடிமையாக இருக்கிற ஆட்கள்தானே இவர்களுடைய அகராதியில் தேச பக்தர்கள் !!!!1!

சேர்க்கை சரியில்லை பன்னீரு


முதுகெலும்பு இல்லாமல் எப்போதும் வளைஞ்சே இருப்பவராக,
தடால் தடால் என்று அம்மா, சின்னம்மா காலில் விழுபவராக,
எப்போதும் பணிவு வேடத்தோடு காட்சியளித்தாலும்  காசை அள்ளுவதில் மட்டும் என்னவோ கவனமாகத்தான் இருந்தீர்கள் பன்னீர்.

மணல் கொள்ளை சீராக நடந்து அதிகார மையத்தில் உள்ளவர்களுக்கு பகிர்ந்து கொடுப்பதிலும் பொதுப்பணிததுறை ஒப்பந்தங்களுக்கான கமிஷன் தொகையினை கறாராகப் பெற்றுக் கொள்வதிலும் நீங்கள் கவனமாகவே இருந்தீர்கள் என்பதை சேகர் ரெட்டி வாயிலாக தமிழகம் அறிந்து கொண்டது. அப்போது கூட வாய் திறக்க்காமல் அமைதியின் வடிவமாய் காட்சியளித்தீர்கள்.

சட்டப்பேர்வைத் தேர்தலுக்கு முன்பாக நீங்களும் உங்கள் அமைச்சரவை சகாக்களும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு கணக்கு பார்க்கப்பட்டு பங்குத் தொகை, அபராதம், அபராத வட்டி எல்லாம் வசூலிக்கப்பட்ட பின்பே விடுதலையானீர்கள் என்று ஊடகங்கள் கழுவி கழுவி ஊற்றியபோது கூட பன்னீர் என்றால் பணிவு என்றுதான் இருந்தீர்கள்.

மூன்றாவது முறை முதலமைச்சர் ஆன போதும் சரி, அந்த நாற்காலியின் கால்களை சின்னம்மாவிற்காக உடைக்க உங்கள் அமைச்சரவை சகாக்கள் மற்றும் தம்பிதுரை வகையறாக்கள் கிளர்ந்து எழுந்த போதும் சரி அடக்கத்தின் மறு உருவமாகவே தோன்றினீர்கள்.

விளக்குக் கம்பத்தில் கட்டி வைத்து ஆன்ந்தராஜ் அடித்த போது அதை பொறுமையோடு ஏற்றுக்கொண்ட மாணிக்கம் ரஜனிக்கும் உங்களுக்கும் பெரிய வித்தியாசம் என்றுமே இருந்ததில்லை.

ஆனால் இப்போதோ

ஒசாமா பின் லேடன் என்று பேசுகிறீர்கள்.
சமூக விரோதிகளின் ஊடுறுவல் என்று கதைக்கிறீர்கள்.
போலீஸ் லேசா தட்டியது என்று முழு பூசணியை சோற்றில் மறைக்கிறீர்கள்.
பீச்சில் போராட தடை போடுகிறீர்கள்.
தேசத்துரோகிகள் என்று சொல்ல தொடங்கியுள்ளீர்கள்?

மாணிக்கம் பாட்சாவாக மாறும் நிலையோ இது?

ஆனால் உங்கள் வீரத்தை பாதிக்கப்பட்டவர்களிடம் மட்டுமே காண்பிப்பது கதாநாயக பாத்திரத்தின் குணாம்சம் அல்லவே, வில்லனுடையதாயிற்றே?

எங்கிருந்து வந்தது இந்த திடீர் மாற்றம்?


ஜல்லிக்கட்டைத் தவிர காவிரி, மணல் கொள்ளை, பன்னாட்டு குடிபானம் பற்றியெல்லாம் பேசினார்கள் என்று கொதித்துள்ளீர்களே, அதுதான் உங்களின் போலீசை அராஜகமாக தாக்க உத்தரவிட்டதன் மர்மமோ?

உங்கள் தொழில் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளும் சாமர்த்தியம் உள்ளவராயிற்றே! ஆக அது காரணமாக இருக்காது.


பின்னே?

உங்கள் வசனங்கள், நடவடிக்கைகள் எங்களுக்கு புதிதல்ல. இரண்டரை வருடமாக இந்தியாவில் மோடி ஆட்சியின் அசிங்கத்தைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோமே! அதே துர்நாற்றம் எப்படி உங்களின் வாயிலிருந்தும் வருகிறது?


ராமாயணத்தில் வாலி தன் முன்னே தோன்றுபவர்களின் சக்தியில் பாதியை எடுத்துக் கொள்வானாம். அதற்கு பதிலாக இரண்டு முறை சமீபத்தில் மோடியைப் பார்த்து விட்டு வந்தீர்கள். அவர் தனது கெட்ட புத்தியை உங்களுக்கு அளித்து விட்டார் போலும். அதனால்தான் காவிக் கூட்ட வசனங்களை அப்படியே ஒப்பிக்க ஆரம்பித்து விட்டீர்கள்.

எதுவும் செய்யாத மிக்ஸர் பன்னீராக இருந்தால் கூட பரவாயில்லை. வரலாறு உங்களை மன்னிக்கும். காவிக்கூட்ட அடிமையாக மாறினால் வரலாற்றின் குப்பைத்தொட்டியில் கூட உங்களுக்கு இடம் கிடைக்காது.  
 

Saturday, January 28, 2017

அந்தாள்தான் பெரிய தேச விரோதி அம்மணி



வாயைத் திறந்தா பொய்,
செய்யறதெல்லாம் அக்கிரமம்,
இந்தியாவை வெளிநாட்டு உள்நாட்டு முதலாளிகளிடம்
அடமானம்  வச்ச அவரை விட ,
இந்திய மக்களை நடுத்தெருவில் நிறுத்திய 
உங்கள் பிரதமரை விட 
பெரிய தேச விரோதி யாருமே கிடையாது 
அம்மணி நிர்மலா சீத்தாராமன் அவர்களே!

உங்க காவிக்கூட்டத்தை விட பெரிய தேசத்துரோகக் கூட்டமும்
கிடையாது அம்மணி.

இந்த மிரட்டல் உருட்டல் வேலையெல்லாம் வேற எங்கயாவது
வைச்சுக்குங்க.

ஆயிரம் தடவை சொல்லுவோம்

மோடி ஒரு மோசமான மனிதர். 
மோடி ஒரு மோசடி மனிதர்
மோடி பிரதமராய் இருப்பது இந்தியாவின் துயரம்.

 
 

Friday, January 27, 2017

தமிழன் என்று சொல்லாதே, தலை குனிய வைக்காதே




தமிழர்களின் மானம் இன்னொரு முறை கப்பலேறியுள்ளது.

சில வருடங்கள் முன்பாக ஜூனியர் விகடன் இதழ் ஒரு தொடர் ஒன்றை வெளியிட்டது. தமிழகத்தின் அரசியல்வாதிகளில் என்.டி.திவாரி போன்ற சபலப் பேர்வழிகளின் பட்டியலை வாரம் ஒருவராக வெளியிட்டு அம்பலப் படுத்தியது. அந்த பட்டியலில் இருந்த ஒருவர்தான் இப்போது மேகாலயாவில் பதவி விலகிய காவிக்கூட்டத்தின் கவர்னர். ஆக இந்த செய்தி ஒன்றும் அதிர்ச்சி அளிக்கவில்லை.

அந்த பட்டியலில் இருந்த அதே கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர் வேறு ஒரு மாநிலத்திற்கு வேறு ஒரு பொறுப்பில் போயிருக்கிறார். 

என் கவலையெல்லாம் இவராவது அங்கே ஒழுங்காக இருப்பாரா என்பதுதான்.

அய்யா, புண்ணியவான்களே,  என்ன எழவாவது செய்து கொள்ளுங்கள். ஆனால் தயவு செய்து நீங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று மட்டும் சொல்லிக் கொள்ளாதீர்கள். 

உங்கள் அசிங்களுக்காக தமிழர்களை தலை குனிய வைத்திடாதீர்கள்.

பி.கு 1 : அதெப்படி காவிகளின் எல்லா பிரம்மச்சாரிகளும் களங்கமானவர்களாகவே இருக்கிறார்கள்? 

பி.கு 2 : ஒரு வேளை, இந்த ஆளை மனசுல வைச்சுக்கிட்டுத்தான் சுனாசாமி அடிக்கடி பொர்க்கி என்று சொல்றாரோ?


Thursday, January 26, 2017

குடியரசு தின வாழ்த்து சொல்ல மனமில்லை




அகில இந்திய மாநாடு முடிந்து இன்று காலை ஒன்பது மணி அளவில் வீடு வந்து சேர்ந்தேன்.  அலுவலகத்தில் நடைபெறும் சுதந்திர தின, குடியரசு தின கொண்டாட்டங்களில் தவறாது கலந்து கொள்வேன். ஏழு மணிக்கு வர வேண்டிய புகை வண்டி காட்பாடி ரயில் நிலையத்திற்கு எட்டு நாற்பதுக்குத்தான் வந்து சேர்ந்தது. சரியான நேரத்துக்கு வந்திருந்தாலும் இந்த ஆண்டு கொடியேற்று விழாவிற்கு சென்றிருக்க மாட்டேன். 

ஆம் மனது அந்த அளவிற்கு வலிக்கிறது.


ஐந்து நாட்கள் கேரளாவில் இருந்தாலும் மனம் என்னமோ தமிழகத்தில்தான் இருந்தது.

தமிழகம் இதுநாள் வரை காணாத எழுச்சி மிக்க போராட்டம் கடைசியில் அதிகார வர்க்கத்தின் அராஜகத்தால் முடிவுக்கு வந்த சோகத்தை இன்னமும் ஜீரணிக்க முடியவில்லை.

"பாசிஸ்ட் நீதிமன்றத்தில் டிமிட்ரோவ்"  என்ற நூலை சில தினங்கள் முன்பாகத்தான் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் படித்தேன். தனது கைக்கூலிகள் மூலமாக ஜெர்மன் நாடாளுமன்றத்தை கொளுத்திய ஹிட்லர்  அப்பழியை கம்யூனிஸ்டுகள் மீது அபாண்டமாக சுமத்துவான். அதற்கு சிலர் பொய் சாட்சியும் சொல்வார்கள். ஆனால் இறுதியில் அந்த நாடகம் அம்பலமாகி விடும். 

ஹிட்லரின் வாரிசுகள் இந்திய அரியணையில் அமர்ந்திருப்பதால் என்றைக்கு இந்திய நாடாளுமன்றத்தை எரிப்பார்களோ என்று ஒரு அச்சம் இருந்து கொண்டே இருக்கிறது.

ஆனால் ஹிட்லரின் வழிமுறைகளை தமிழக காவல்துறை கொஞ்சம் கூட பிசகாமல் சிறப்பாகவே கடைபிடித்தது. அமைதியான முறையில் மாநிலமெங்கும் போராட்ட களத்தில் இருந்தவர்களை அராஜகமாக அப்புறப்படுத்தியது மட்டுமல்லாமல் சமூக விரோதிகளும் தேசத் துரோகிகளும் ஊடுறுவிவிட்டனர் என்றும் கதை விட்டது. அந்த கதையை நியாயப்படுத்த அவர்களே வாகனங்களையும் காவல் நிலையத்தையும் எரித்துக் கொண்டார்கள். சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டவர்கள் காவலர்கள் என்பதை பல்வேறு காணொளிக்காட்சிகள் அம்பலப் படுத்தி விட்டன.

சமூக விரோதிகளின் ஊடுறுவல் என்பதை நிலை நாட்ட பொய்சாட்சி சொல்லவும் சிலரை பயன்படுத்திக் கொண்டார்கள். ஹிப் ஹாப் ஆதி, ஆர்.ஜே.பாலாஜி, ராகவா லாரன்ஸ் ஆகியோர் ஆளும் வர்க்க கைபொம்மையாக மாறி தங்களின் மதிப்பை நாசமாக்கிக் கொண்டார்கள்.

காவல்துறையின் வன்முறை ஒரே நாளில் முடிந்து போகவில்லை. போராடிய மாணவர்களுக்கு துணை நின்ற காரணத்துக்காக மீனவக் குப்பங்கள் மோசமாக தாக்கப்பட்டது. அடி, உதை, தீவைப்பு, கைது என்று அனைத்து அராஜகங்களும் அரங்கேறியது. அவர்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கி நடுத்தெருவில் நிறுத்தி விட்டார்கள்.

காவல்துறையின் வன்முறை வெறியாட்டம் என்பது புதிதல்ல. சமீபத்தில் சென்னையிலும் மதுரையிலும் வாலிபர் சங்கத்தோழர்கள் மீது நடந்த தாக்குதலை யாரும் மறந்திருக்க முடியாது.

காவல்துறை எனும் அம்பை ஏவிய முக்கியக் குற்றவாளி யார் என்பதே இப்போதைய முக்கியமான கேள்வி.

நாற்காலி பிழைக்குமா, கவிழுமா என்ற பதட்டத்திலேயே நாட்களைக் கடத்தும் பன்னீர் செல்வமா?

பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றிய வேகத்தோடு முதல்வர் நாற்காலியில் அமரத் துடிக்கும் சசிகலாவா?

ஜெயலலிதாவின் மர்ம மரணத்தின் மூலமாவது தமிழகத்தில் கால் பதிக்க முடியுமா என்று நாவில் எச்சில் ஒழுக கண்ணில் வெறியோடு காத்திருக்கும் காவிக் கூட்டமா?

இல்லை மூவருமா?

அனைவருக்கும் இதிலே பங்கிருக்கிறது.

காவிக்கூட்டத்திற்கு அதிகமாகவே இருக்கிறது.

நம்ப வைத்து கழுத்தறுத்த பொன்னார், நேரில் போன பன்னீரை மூக்குடைத்து துரத்திய மோடி ஆகியோர் போராட்ட களத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்கள். பீடாவும் காவியும் வேறல்ல என்பதும் அங்கே அம்பலப்படுத்தப்பட்டது. தமிழகத்தின் உரிமை என்பதைத்தாண்டி பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு எதிரான உணர்வும் மேலோங்கியது. விவசாயிகள் தற்கொலை, மணல் கொள்ளை ஆகிய பிரச்சினைகளும் முன்னுக்கு வந்தன.

அது மட்டுமா?

மத நல்லிணக்கத்தின் அடையாளமாகவும் போராட்ட களம் திகழ்ந்தது. போராடும் இடத்தில் தொழுகை ஏன் என்ற பொன்னாரின் வயிற்றெரிச்சல் கேள்வி இதனை உணர்த்துகிறது. அவர்களின் செயல் திட்டத்திற்கு எதிரான ஒற்றுமையோடு தமிழகம் இருப்பதை எப்படி அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியும்?

இது தொடர்ந்தால்?

உரிமைகளுக்காக மகத்தான எழுச்சிக்கு வாய்ப்பு உள்ளது என்ற உதாரணம் உருவானால் மோடிக்கு எதிராக நாடெங்கும் கிளர்ச்சி வெடித்தால் என்ன செய்வது என்ற அச்சமும் அவர்களுக்கு உண்டு.

இறுதியில் தமிழகத்தை தலை நிமிர வைத்த போராட்டத்தை ரத்தக்கறை கொண்டு அடக்கியுள்ளது காக்கி-காவிக் கூட்டணி. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தேசத்துரோகிகள், சமூக விரோதிகள் என்று கொச்சைப் படுத்தும் வேலையை காவல்துறை உயரதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

காங்கியனூர் திரௌபதி அம்மன் கோயிலில் தலித் மக்கள் அனுமதி மறுக்கப்பட்ட இழிவை அகற்ற தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆலய நுழைவுப் போராட்டத்தை நடத்தியபோது  அன்றைய சி.பி.எம் சட்டமன்ற உறுப்பினர் தோழர் ஜி.லதா, மார்க்சிஸ்ட் தலைவர்கள் தோழர் கே.பாலகிருஷ்ணன், தோழர் ஜி.ஆனந்தன் ஆகியோர் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய அமல்ராஜ், இப்போது மாணவர் சங்கம், வாலிபர் சங்கம் போன்ற அமைப்புக்கள் தேச விரோத அமைப்புக்கள் என்று சொல்கிறார். தோழர் என்று அழைத்தால் துண்டியுங்கள் என்று உபதேசிக்கிறார்.

உரிமைக்கான போராட்டம் ஒடுக்கப்பட்ட நிலையில்
கொடூரமாக தாக்கப்பட்டவர்கள் சிறையில் வாடுகையில்

குடியரசு தினத்தை கொண்டாடும் மன நிலை எனக்கில்லை.

அனைத்து மக்களும் அனைத்து அடிப்படை உரிமைகளையும் வழ்ங்குவோம் என்று உறுதி அளிக்கிற  இந்திய அரசியல் சாசனம் அமலாகத் தொடங்கிய நாள்தான் குடியரசு தினம்.

அரசியல் சாசன உறுதிமொழிகள் காற்றில் பறக்க விடப்பட்டுள்ள இன்றைய நிலையில் வெற்று சடங்காக குடியரசு தினத்தை கொண்டாடவோ, வாழ்த்துக்களை பறிமாறிக் கொள்ளவோ, வந்த வாழ்த்துக்களுக்கு பதில் அனுப்பவோ மனம் வரவில்லை. 

ஆனால் அரசியல் சாசனம் பாதுகாக்கப்பட வேண்டும். அனைவருக்குமான அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்ற உணர்வையும் அதற்கான போராட்டத்தில் உறுதியோடு தொடர வேண்டும் என்பதுதான் இன்றைக்கு நம் முன் நிற்கிற முக்கியக் கடமை. 

அரசியல் வேண்டாம் என்ற சிலரின் அரசியலை மாணவர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள் என்றும் எது மக்களுக்கான அரசியல் என்பதையும் மக்களுக்காக நிற்பவர்கள் யார் என்பதையும் அவர்கள் அனுபவத்தின் மூலம் உண்ர்ந்திருப்பார்கள் என்று நம்புகிறேன். 

அந்த அனுபவம் இந்தியாவை உண்மையான குடியரசாக ஒரு நாள் உருவாக்கும்.
 

Wednesday, January 25, 2017

புதுவையில் பீட்டா பேடி கூட்டணி

இச்செய்திக்கு விளக்கம் தேவையில்லை

Friday, January 20, 2017

இது ஹிந்திலிஷ்

டிஜிட்டல் ஆசாமிகளுக்கு இப்பதிவில் வேலை இல்லை. மணி ஆர்டர் போன்றவற்றை இன்னும் பயன்படுத்தும் என்னை மாதிரி சாதாரண கைநாட்டு ஆசாமிக்களானது.

முன்பு தந்தியில் இருந்தது போல மணி ஆர்டர் அனுப்புவதற்கும் எண், கோட் கொடுத்துள்ளார்கள் அதிலே எவ்வளவு நுணுக்கமாக ஹிந்தியை திணிக்கிறார்கள் பாருங்கள்


நிஜத்திற்கும் மேலாக

வாட்ஸப்பில் வந்த படங்கள். இந்த சிலைகளை செய்தவர் யார் என்று தெரியாது. அவ்வளவு தத்ரூபமாக உள்ளது. மேட்ம் துஸாத் மெழுகு மியூசியம் எல்லாம் இதன் கிட்டே நெருங்க முடியாது.

பெயர் தெரியாத அந்த கலைஞருக்கு பாராட்டுக்கள்




 

பெருமையளிக்கும் முதல் பரிசு

காப்பீட்டு ஊழியர் - எங்கள் சங்கத்தின் பொது இன்சூரன்ஸ் அமைப்பு வெளியிடும் தமிழ் மாத இதழ்.

அந்த இதழின் வெள்ளி விழாவை கடந்த மாதம் சிறப்பாக கொண்டாடினார்கள். வெள்ளி விழாவை ஒட்டி அவர்கள் நடத்திய கட்டுரைப் போட்டியில் எங்கள் பண்ருட்டி கிளைச் சங்கத்தின் தலைவர் தோழர் ஜி.வைத்தியலிங்கம் முதல் பரிசு பெற்று எங்கள் கோட்டத்திற்கு பெருமை தேடிக்கொடுத்தார்.

தோழர் வைத்திக்கு வாழ்த்தும் பாராட்டும் சொல்லி அவர் எழுதிய முதல் பரிசு பெற்ற கட்டுரையை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்