Wednesday, August 31, 2016

அழகாக படம் எடுக்க




கேமரா இல்லாமல் மொபைல் போன் இல்லை என்று மாறிவிட்ட சூழலில் அழகாக படம் எடுப்பது எப்படி என்பதுதான் பலருக்கும் உள்ள பிரச்சனை. டிஜிட்டல் கேமரா, மொபைல் போன் கேமரா எதுவானாலும் அழகாக படம் எடுப்பது நம் கையில்தான் இருக்கிறது. படம் தெளிவாகவும், பளிச்சென்றும் இருக்க அடிப்படையான 10 குறிப்புகளை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பிக்சல் அதிகரிப்பது தெளிவைத் தருமா?
ஒரு சதுர அங்குலத்தில் 120 புள்ளிகள் கொண்டது ஒரு பிக்சல். இது குறைந்த பட்ச அளவுதான். பிக்சலின் அடர்த்தி அதிகமாக அதிகமாக படத்தின் தெளிவும் அதிகரிக்கும். ஆனால், பிக்சல்களின் அடர்த்தி உயராமல் படத்தின் அளவை மட்டுமே அதிகரித்து 0.3 ஆக்ஷ, 2 ஆக்ஷ, 5 ஆக்ஷ, 8 ஆக்ஷ, 16 ஆக்ஷ, 20 ஆக்ஷ என பல அளவுகளில் மொபைல் கேமராக்கள் வந்துவிட்டன. இந்த பிக்சல் அதிகரிப்பு மட்டுமே படத்தை தெளிவானதாக ஆக்கிவிடாது. எனவே, 5 மெகாபிக்சல் கொண்ட போனில் கூட அழகிய படம் எடுக்கலாம்.

பிளாஷ் பயன்படுத்த வேண்டாம்
பிளாஷ் போட்டு படம் எடுத்தால் படம் தெளிவாக தெரியாது. அதோடு மட்டுமல்லாமல் துல்லியமாகவும் இருக்காது. உங்கள் புகைப்படம் அழகாக இருக்க வேண்டுமென்றால் ப்ளாஷ் அம்சத்தை தவிர்த்து இயல்பான வெளிச்சத்தை கொடுத்து எடுக்கவும். ஆனால் இருட்டான அறையில் இருந்தால் ப்ளாஷ் அம்சத்தை பயன்படுத்தலாம். அப்பொழுது மிக அருகில் வைத்து படம் எடுக்காமல் தூரத்தில் வைத்து எடுத்தால் நன்றாக இருக்கும்.

கேமரா லென்ஸ் சுத்தம்
மொபைல் கேமராவின் லென்ஸில் தூசிகள் படிவதைத் தவிர்ப்பது கடினம். அதனை பஞ்சு போன்ற துணியால் துடைத்து சுத்தம் செய்து கொள்ளவும். தெளிவற்ற படம் எடுக்கப்படுவதற்கு இந்த தூசிகளும் காரணம். ஆகவே போட்டோ எடுக்கும் முன்பு லென்ஸ் சுத்தமாக இருக்கின்றதா என்று பார்த்து பின்பு படம் எடுக்கவும்.

பிரேமிற்குள் படம் இருக்கட்டும்
படம் எடுக்கும்போது பிரேமிற்குள் காட்சி பொருந்தி வருகிறதா என்பதை கவனத்தில் வைக்கவும். படம் எடுக்கும்போது பொருள் மையத்தில் இருக்கவேண்டும் என்று நினைக்காமல், அழகாகத் தோன்ற ரூல் ஆப் தெர்ட்ஸ் (Rule of thirds) விதிமுறையையும் பின்பற்றவேண்டும். ரூல் ஆப் தெர்ட்ஸ் என்பது கிடைமட்டம் மற்றும் செங்குத்தாக பிரேமை ஒன்பது பகுதிகளாக பிரிக்கின்றது. பிரேமை ஒன்பது பாகங்களாகப் பிரிக்கும் இந்தக் கோடுகளின் மீது எடுக்க விரும்பும் பொருள் அமையும்படி படம் எடுத்தால் அது சிறந்த படமாக அமையும். இந்த பிரேம் அமைக்கும் வசதி மொபைல் கேமரா செட்டிங்கில் கொடுக்கப்பட்டிருக்கும்.

ஜூம் செய்வதைத் தவிர்க்கவும்
உயர்தரக் கேமராக்களில் அதற்கென உள்ள ஜூம் லென்ஸ் பயன்படுத்தி எடுக்கலாம். ஆனால், மொபைல் போனில் உள்ள ஜூம் வசதியால் போட்டோவை பெரிதுபடுத்த முடியுமே தவிர துல்லியமான படத்தை எடுக்க உதவாது. ஆகவே ஜூம் அவுட் (zoom out) மோடில் படத்தை எடுத்து எடிட் செய்து கொள்ளவும். 

வெளிச்சம்
பிளாஷ் பயன்படுத்தாமல் படம் எடுக்க இயற்கையான சுற்றுப்புற வெளிச்சத்தை சரியாகப் பயன்படுத்த நாம் கற்றுக்கொள்ளவேண்டும். முதலில் வெளிச்சம் எங்கு இருக்கின்றது என்பதை பார்த்து படத்தை ஃபோகஸ் செய்யவும். சில நேரத்தில் இயல்பான மற்றும் போலியான வெளிச்சத்தை தெர்மாகோல், வெள்ளை அட்டை போன்ற செயற்கையான எதிரொலிப்பான்களைப் பயன்படுத்தியும் படத்தை எடுக்கலாம்.

கேமரா அசையக்கூடாது
தெளிவற்ற படங்கள் எடுக்கப்படுவதற்கு முதல் காரணம் கை நடுக்கம்தான். நல்ல படம் எடுக்கக் கற்றுக் கொள்பவர்கள், மொபைலை இரண்டு கைகளாலும் அசையாமல் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளவேண்டும்.

ஷட்டர் வேகம்
கிளிக் செய்யும்போது ஷட்டர் திறந்து மூடும்போது காட்சி பதிவாகிறது. இந்த ஷட்டர் திறக்கும் வேகத்தைத் தேவைக்கேற்ப குறைப்பது நல்ல படத்தை எடுக்க உதவும். உதாரணமாக குறைந்த ஒளியுள்ள இடத்தில் ஷட்டரின் வேகத்தை குறைப்பது அந்தப் பொருள் நன்றாக பதிவாவதற்கான அவகாசத்தை வழங்கும். அதுவே அதிக வெளிச்சம் உள்ள இடத்தில் ஷட்டர் வேகத்தை அதிகரிக்கலாம். நகரும் படத்தை எடுக்க sport scene என்பதுபோன்ற வசதிகளைப் பயன்படுத்தலாம்.

சரியான கோணம்
ரூல் ஆஃப் தெர்ட்ஸ் போலவே சரியான கோணத்தில் படத்தை நிலை நிறுத்துவதும் முக்கியமாகும். ஒரு படத்தை கூடுதல் அழகாக்க கேமராவின் கோணம் சரியாக இருக்கவேண்டும்.இடத்திற்கு ஏற்ப கோணம் மாறுபடும். இது அனுபவத்தில்தான் அறிந்து கொள்ள முடியும்.

போர்ட்ராயிட் லேண்ட்ஸ்கேப்
உயரவாக்கில் எடுக்கப்படும் போர்ட்ராயிட் வகைக் காட்சிகள் அழகாக இருக்கும். அகலவாக்கான லேண்ட்ஸ்கேப் வகையில் எடுக்கப்படும் படங்கள் போர்ட்ராயிடைவிட சிறப்பானதாகவும் அழகாகவும் தோன்றும். பொதுவாக லேண்ட்ஸ்கேப் முறையில் எடுப்பதே சிறந்தது.மேற்கண்ட அடிப்படைக் குறிப்புகள் மொபைல் கேமராவிற்கு மட்டுமல்ல டிஜிட்டல் கேமராவில் எடுக்கப்படும் படங்களுக்கும் பொருந்தக் கூடியதே.

நன்றி - தீக்கதிர் 31.08.2016

Tuesday, August 30, 2016

பீஃப் சாப்பிடுங்க, உசைன் போல்ட்டாகுங்க



மேலே உள்ள படம்  கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் உலாவிக் கொண்டிருக்கின்ற ஒன்றுதான். 

அதை பாஜக எம்.பி உதித் ராஜூம் பார்த்திருப்பார் போல. இந்தியாவிற்கு பதக்கங்கள் குறைவாக கிடைத்ததால் ஏதோ உணர்ச்சி வசப்பட்டு உசைன் போல்ட்டின் வெற்றிக்கு மாட்டிறைச்சியும் ஒரு காரணம் என்ற உண்மையை சொல்லி விட்டார். 

பாஜகவில் உள்ள ஒருவர் உண்மையைப் பேசலாமா? அவர் பதவி எப்போது பறி போகப் போகிறதோ?
 

ஆரம்பிச்சுட்டாங்கய்யா, அம்மா, ஆரம்பிச்சுட்டாங்க




இந்த  ஆட்சிக்காலத்தின் முதல் "உள்ளே வெளியே" ஆட்டம் தொடங்கி விட்டது. சண்முக நாதன் அவுட், பாண்டியராஜன் இன். 

மூன்று மாதமாகியும் இன்னும் பொம்மலாட்டம் தொடங்கவில்லையே என்று கவலையாக இருந்தது. ஸ்டார்ட்டிங் ட்ரபிள்தான் போல. 

இனி பிரச்சினையில்லை. அம்மாவுக்கு எப்போவெல்லாம் போரடிக்கிறதோ அப்போதெல்லாம் அமைச்சர்களை மாற்றி மாற்றி விளையாடுவார்கள். கடந்த ஆட்சிக்காலத்தை விட இன்னும் அதிகமான அமைச்சரவை மாற்றம் செய்து சாதனை படைக்க வாழ்த்துக்கள்.
 

Monday, August 29, 2016

ஆள்தான் எளிமை. ஆனால்




பத்து ஆண்டுகளுக்கு முன்பாக வேலூர் நகரத்தில் உள்ள தொழிற்சங்கங்கள் இணைந்து வேலூர் கலை மன்றம் என்ற அமைப்பை உருவாக்கியிருந்தோம். அந்த அமைப்பின் முதல் நிகழ்ச்சியாக திரு கங்கை அமரன் அவர்களின் இசை நிகழ்ச்சி நடந்தது.  திண்டுக்கல் அங்கிங்கு இசைக்குழுவினர் வ்ந்திருந்தார்கள். நிகழ்ச்சி தொடர்பாக கங்கை அமரன் அவர்களை சந்தித்த போது (அப்போது அவர் பி.ஜே.பிக்கு செல்லவில்லை)  கரிசல் குழு திருவுடையானையும் வரச் சொல்லி இருக்கிறேன் என்றார்.

அங்கிங்கு இசைக்குழுவை வரவேற்று அவர்களை தங்க வைக்கும் பொறுப்பு என்னுடையது. அவர்கள் அதிகாலை வருவதாக இருந்ததால் மண்டபத்திற்கு காலையில் நானும் சென்று விட்டேன். அவர்களுக்காக காத்திருந்த போது ஒல்லியான உருவத்தில் வேட்டி கதர் சட்டையோடு ஒருவர் அங்கே வந்தார். தன்னை திருவுடையான் என்று அறிமுகம் செய்து கொண்டார். அவரது பாடல்களைக் கேட்டிருந்தாலும் அவரைப் பார்த்ததில்லை. அவரது தோற்றத்திற்கும் அவரது கணீர்க்குரலுக்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருந்தது.

தொழில் முறை பாடகர்கள் பல பேர் அன்றைய நிகழ்ச்சியில் பங்கேற்றாலும் அன்று சிறப்பாக அமைந்தது தோழர் திருவுடையான் பாடிய பாடல்களே.  "ஆத்தா உன் சேலை" என்று அவர் பாடிய பாடலே அன்றைய நிகழ்ச்சியின் ஹைலைட்டாக இருந்தது. 

நிகழ்ச்சி முடிந்ததும் ஊர் திரும்புவதற்கு முன்பாக அவருக்கான பயணப் படியை அளிக்கையில் "தோழர், இது அதிகம்" என்று சொல்லி நான் கொடுத்ததில் ஒரு தொகையை வலுக்கட்டாயமாக திருப்பிக் கொடுத்து விட்டார். டவுன் பஸ் பிடித்து பேருந்து நிலையம் செல்கிறேன் என்பவரை ஒரு தோழரது இரு சக்கர வாகனத்தில் அமர வைத்து அனுப்புவதே சிரமமாகி விட்டது.

தோழர் திருவுடையான் எளிய தோழராக இருந்தாலும் அவரது குரல் கம்பீரமானது. தமிழை அழுத்தம் திருத்தமாக பாடக் கூடியவர். "தமிழா, நீ பேசுவது தமிழா" என்பது அவரது பிரபலமான பாடல். அதை பாடுவதற்கான முழு தகுதியும் அவருக்கு உண்டு. கொள்கைகளிலும் அவர் உறுதியானவர் என்பதை தீக்கதிர் பொறுப்பாசிரியர் தோழர் அ.குமரேசன், தனது முக நூல் பதிவில் குறிப்பிட்டதைப் படித்தால் உணர முடியும். 


ஒரு அரசியல் கட்சியின் தலைவர் தனது ஒரு நிறுவனத்தின் பாடகராகப் பொறுப்பேற்க அழைத்தார். மாதாமாதம் பெரியதொரு தொகை வழங்குவதாகக் கூறினார்.

“நான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர். கட்சியின் சங்கரன்கோவில் நகரச் செயலாளர். இந்த இயக்கப் பணிகளைத் தொடரவே விருமபுகிறேன். உங்கள் அமைப்பில் இணைய முடியாது, மன்னியுங்கள்,” என்று பணிவோடு சொன்னார் தோழர். சொந்தப் பொருளாதாரத்தை வளப்படுத்திக்கொள்ளக் கிடைத்த வாய்ப்பைப் பொருட்படுத்தாமல் செங்கொடி இயக்கத்தின் கானமாய் ஒலித்துவந்தார்.

 
தோழர் திருவுடையான் இன்று காலை வாடிப்பட்டி அருகே ஒரு விபத்தில் காலமாகி விட்டார். கலை இரவு மேடைகளுக்கு ஒர் பேரிழப்பு. அவர் மறைந்தாலும் அவர் பாடல்கள் வாழும். 

தோழர் திருவுடையான் அவர்களுக்கு வீர வணக்கம்.

இந்தக் காணொளி மன அழுத்ததை  இப்போது அதிகரிக்கிறது. 

 

Sunday, August 28, 2016

நோ கமெண்ட்ஸ் மோடி

வார்த்தைகள் எதுவும் தேவையில்லை. படமே போதும்

 

பின் வரிசையில் ஒரு பரபரப்பு




ஒன்பதாவது படிக்கையில் என்றுதான் நினைக்கிறேன்.தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் படிக்கையில் ஒரு நாள் காலை ப்ரேயரின் போது தலைமையாசிரியர் வழக்கம் போல பேசிக் கொண்டிருந்த போது பின் வரிசைகளில் ஒரு பரபரப்பு.  இரண்டு பேர் நின்று கொண்டிருந்தார்கள். அதில் ஒருவரைக் காண்பித்து மாணவர்கள் ரகசியக் குரலில் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் இயக்குனர் துரை. இன்னொருவர் இயக்குனரும் கதாசிரியருமான வியட்னாம் வீடு சுந்தரம். திருக்காட்டுப்பள்ளிக்கு பக்கத்தில் உள்ள பழமார்நேரி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் வியட்னாம் வீடு சுந்தரம் என்பதால் அவரை நிறைய பேருக்குத் தெரிந்திருந்தது. நான் காரைக்குடியிலிருந்து அப்போதுதான் திருக்காட்டுப்பள்ளி சேர்ந்திருந்ததால் எனக்கு தெரியவில்லை.

வகுப்பு தொடங்கிய பிறகு எல்லோருக்கும் ஒரே கேள்விதான். அவர்கள் எதற்கு ஸ்கூலுக்கு வந்தார்கள்?

மதியமே அதற்கான விடை கிடைத்து விட்டது. ஸ்ரீகாந்த், ஷோபா நடிக்கும் "ஒரு வீடு, ஒரு உலகம்" படத்தின் படப்பிடிப்பை பள்ளி வளாகத்தில் நடத்த அனுமதி கேட்டுத்தான் அவர்கள் வந்திருந்தார்கள். ஆஹா, ஒரு திரைப்பட ஷூட்டிங்கை நேரில் பார்க்க வாய்ப்பு கிடைக்கப் போகிறது என்று மகிழ்ச்சி கிடைத்தது. ஆனால் விடுமுறைக்கு ஊர் போய் விட்டதால் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.

கிட்டத்தட்ட நாற்பது வருடங்களுக்கு முன்பு அந்த படத்தின் முடிவு முற்போக்கான ஒன்றுதான். கணவனை இழந்த பெண்ணிற்கு (அதுவும் பிற்போக்குத்தனத்தில் ஊறிய குடும்பத்தைச் சேர்ந்த) அப்பெண்ணின் மாமனாரே மாற்று மதத்தைச் சேர்ந்த கல்லூரிப் பேராசிரியருக்கு திருமணம் செய்து வைப்பார். அதன் கதை வசனம் சமீபத்தில் மறைந்த திரு வியட்னாம் வீடு சுந்தரம். அப்படத்தின் ஒரு அற்புதமான பாடலை இங்கே கேட்டு ரசியுங்கள்.     

எங்கள் பள்ளி அத்திரைப்படத்தில் கல்லூரியாக மாறி இருக்கும். பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் கல்லூரி மாணவர்களாகி இருப்பார்கள்.

திரு வியட்னாம் வீடு சுந்தரம் அவர்களின் கதை வசனத்தில் வந்த இப்படத்தின் கிளைமாக்ஸ்   மிகவும் உணர்ச்சிகரமானது .

தமிழ்ப்படங்களில் இந்த கோர்ட் சீனும் மிகவும் முக்கியமானது.

திரு வியட்னாம் வீடு சுந்தரம் அவர்களுக்கு எனது அஞ்சலி.

பின் குறிப்பு : நீண்ட நாட்களாக ட்ராப்டில் இருந்ததை இன்றுதான் வெளியிட முடிந்தது. 

Saturday, August 27, 2016

தமிழக சட்டசபையை விட கேவலமாக




தமிழக சட்டமன்றத்தில் சபாநாயகர் இருக்கையில் ஜெயலலிதாவும் சசிகலாவும் உட்கார்ந்திருந்த மோசமான சம்பவத்தை தூக்கிச் சாப்பிட்டு விட்டது ஹரியானா சட்டமன்றம்.

ஒரு நிர்வாண சாமியாரை அழைத்து வந்து சபாநாயகருக்கும் மேலாக ஆசனம் போட்டு உபதேசம் செய்ய வைத்துள்ளார்கள்.

நிர்வாணப்படத்தை சட்டமன்றத்தில் பார்த்துக் கொண்டிருந்த பாஜக எம்.எல்.ஏ க்கள் இப்போது ஒரு நிர்வாண சாமியாரையே அவைக்கு அழைத்துக் கொண்டு வந்து விட்டார்கள்.


அடுத்து எந்த மாநிலம்?

இல்லை ஸ்ட்ரெய்ட்டா நாடாளுமன்றம்தானா?

இந்த அசிங்கத்தை பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் எப்படி சகித்துக் கொண்டார்கள்?

 

பதிவுத் தபாலில் ஓரு பட்டம்





நேற்று எனது மகனின் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா. ஐந்தாண்டு படிப்பை வெற்றிகரமாக முடித்து விட்டு நேற்று பட்டம் பெற்று விட்டான். பட்டமளிப்பு விழாவிற்கான தேதியை அறிந்தவுடனேயே மனது பின்னோக்கிப் போய் விட்டது.

எங்கள் கல்லூரியிலும் பட்டமளிப்பு விழா நடத்தித்தான் பட்டம் கொடுப்பார்கள். தேர்வு முடிவெல்லாம் வந்து ஒரு வருடமெல்லாம் கூட கடந்த பின்பு  நிதானமாகத்தான் கொடுப்பார்கள். கவுன் மாட்டிக் கொண்டு தலையில் தொப்பி வைத்துக் கொண்டு பட்டம் பெறும் அந்த தருணத்திற்காக ஆவலோடு காத்திருந்தேன்.

நான் எல்.ஐ.சி க்கு விண்ணப்பிக்கையில் மார்க் ஷீட் மட்டும்தான் வந்திருந்தது. ப்ரொவிஷனல் சர்டிபிகேட் வந்திருக்கவில்லை. அந்த காலத்தில் பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் எல்.ஐ.சி யில் உதவியாளருக்கு விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்று நேர்முகத் தேர்வுக்கு முன்பாக மதுரைக்கு போய் ப்ரொவிஷனல் சர்ட்பிகேட் வாங்கி வந்தேன். அப்போது பட்டமளிப்பு விழா பற்றி விசாரித்த போது விலாசத்தைக் குறித்துக் கொண்டு கடிதம் அனுப்புவதாகச் சொன்னார்கள்.

எல்.ஐ.சி யில் சேர்ந்து ஆறு மாதத்திற்குப் பின்பு மதுரையில் ஒரு உறவினர் திருமணம். அப்போது மீண்டும் கல்லூரிக்குச் சென்ற போது விசாரித்தால், அதே பதில்தான். விலாசம் மாறியிருந்ததால் மாற்றிக் கொடுத்தேன். கொஞ்சம் முன் எச்சரிக்கையாக ஸ்டாம்ப் ஒட்டிய கவர் வேறு கொடுத்து விட்டு வந்தேன். 

ஆனால் எந்த தகவலும் இல்லை. ஒரு கல்லூரி நண்பன் நெய்வேலியில் இருந்த அவனது அண்ணன் வீட்டிற்கு வந்தவன், என்னை அலுவலகத்தில் வந்து பார்த்தான். அப்போதுதான் அவன் அந்த அதிர்ச்சியான செய்தியைச் சொன்னான். பட்டமளிப்பு விழா முடிந்து ஒரு மாதமாகி விட்டதே, நீ ஏன் வரவில்லை என்று கேட்ட போது கோபம் கோபமாக வந்தது.

அத்தனை கோபத்தையும் ஒரு கடிதத்தில் காண்பித்தேன். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் இன்சூரன்ஸ் வொர்க்கர் இதழை தொடர்ச்சியாக படித்துக் கொண்டிருந்ததால் பல புதிய ஆங்கில வார்த்தைகள் வேறு கற்றுக் கொண்டிருந்தேன். கற்றுக் கொண்ட மொத்த வித்தையையும் இறக்கி காட்டமாக ஒரு கடிதத்தை கல்லூரி முதல்வருக்கு அனுப்பினேன்.

என் வாழ்க்கையில் நான் காத்திருந்த ஒரு உன்னதமான தருணத்தை பறித்தது  நியாயமா என்று கேட்டு அக்கடிதத்தை முடித்தேன். அப்போது கிளைச் செயலாளராக இருந்த தோழர் விஸ்வேஸ்வரராவ், அக்கடிதத்தை தட்டச்சு வேறு செய்து கொடுத்தார்.

மூன்று நாட்களுக்குப் பிறகு பதிவுத்தபாலில் உங்களது பட்டச் சான்றிதழ் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என்று மொட்டையாக ஒரு கடிதம் வந்தது. என் உணர்வுகள் பற்றி ஒரு சிறு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. 

இப்படிப் பட்ட சிக்கல்கள் இல்லாமல் என் மகனது பட்டமளிப்பு விழா நடந்தது மகிழ்ச்சி.
 

Friday, August 26, 2016

மாரியம்மன், பிள்ளையாருக்கு போட்டியாகவா?

எங்கள் வீட்டிற்குப் பக்கத்தில் காந்தி நகர் என்ற பகுதி உள்ளது. அங்கே ஒரு மகா மாரியம்மன் கோயில் உள்ளது. கடந்த வருடமும் சரி, இந்த வருடமும் சரி, கூழ் ஊற்றும் திருவிழாவை முன்னிட்டு பெரிய அளவில் மாரியம்மனின் சிலையை வைத்திருந்தார்கள்.

ஊரெங்கும் வைக்கும் பிள்ளையார் சிலைக்கு போட்டியாகவே அந்த மாரியம்மன் சிலையை வைத்ததாக அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். 

அது சரிதான் என்பது போல, வழக்கமாக இது போன்ற திருவிழாக்களின் போது அங்கே ஊடுறுவும் காவிக் கொடிகளை மாரியம்மன் கோயில் பக்கம் பார்க்க முடியவில்லை.

மகா மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது தலித் மக்கள் குடியிருப்பு என்பது கூட அதற்குக் காரணமாக இருக்கலாம்.

நீங்கள் எப்படி கோயில் கட்டி, திருவிழா நடத்தி, சிலை வைக்கலாம் என்று சேஷ சமுத்திரம் போல பிரச்சினை செய்யாதவரை நலமே.

அந்த சிலையின் இரண்டு புகைப்படங்களைப் பாருங்கள். கடைசியில் ஒரு கேள்வியும் இருக்கிறது. 



அம்மன் சிலையினை மீண்டும் ஒரு முறை நன்றாகப் பாருங்கள். 
ஒரு வித்தியாசம் உள்ளது. என்னவென்று கண்டு பிடியுங்கள்.

Thursday, August 25, 2016

ஜாக்கிரதை ஜட்ஜூங்களா, எங்க கிட்டயேவா?




இந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு ஆனாலும் இவ்வளவு தைரியம் கூடாது. 

சகிப்புத்தன்மை வேண்டும், அதிகார துஷ்பிரயோகம் கூடாது என்று சர்வ சக்தி படைத்த மகா கனம் பொருந்திய அம்மாவிற்கே அறிவுரை வழங்கும் அளவிற்கு ஆணவமா? 

அவதூறு வழக்கு போடுவதை அவதூறு செய்வதா?

கோட்டு போட்டதால் மோடியின் பெயர் கின்னஸில் வருமென்றால் வழக்கு போட்டு சாதனை படைப்பதை தடுக்கப் பார்க்கிறார்களா?

என்ன தைரியம் அவர்களுக்கு?

அவர்கள் என்ன சென்னைப் பக்கம் வர மாட்டார்களா? இல்லை தமிழகத்தில் கால் வைக்கவே மாட்டார்களா?

சுப்ரமணிய சாமிக்கும் சேஷனுக்கும் தமிழகத்தில் கொடுக்கப்பட்ட ராஜமரியாதை பற்றி தெரியாதா அவர்களுக்கு?

நீதிபதிகள் வீட்டிலேயே கஞ்சா வைத்து வழக்கு போடத்தான் முடியாதா?

ஜெ வுக்கு கடும் கண்டனம் என்று தலைப்புச் செய்தி போடுமளவிற்கு பத்திரிக்கைகளுக்கு வீரம் வந்து விட்டதா?  தினகரன் தீ அக்காலம். இக்காலத்தில் என்னவென்று காத்திருங்கள்.

உச்ச நீதிமன்ற  நீதிபதிகள் இனியும் இப்படி பேசினால் தனித் தமிழ்நாடாக பிரியும் முடிவை அம்மா எடுக்க வேண்டியிருக்கும். ஜாக்கிரதை.

பின் குறிப்பு :  பிரபல "நடுநிலை" பதிவர் போல நீதிபதிகளை "விமர்சனம்" செய்வது போல எழுதினால் அவதூறு வழக்கு வராது என்று தெரியும். இப்பதிவிற்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு வாய்ப்பு இருக்கிறதா? 

Wednesday, August 24, 2016

இவங்க எல்லாம் தேசபக்தர்கள்டோய்





காவிப்பட்டாளத்தின் தேச பக்தி நாடகம் எவ்வளவு போலித்தனமானது, அவர்களைப் போல மோசடிப் பேர்வழிகள் யாரும் கிடையாது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் க.கனகராஜ் இக்கட்டுரையில் தோலுறுத்திக் காட்டுகிறார்.

சமீப காலமாக காவிக்கூட்டத்தின் அனானிகள், அனாமதேயங்களாக வந்து பின்னூட்டம் இடுவது குறைந்து போயுள்ளது. அபத்தமாக உளறி வாங்கிக் கட்டிக் கொள்வதற்குப் பதிலாக அடக்கி வாசிப்பது மேல் என்ற அணுகுமுறையை கையாள்கிறார்கள் போல.

அந்த பயம் – எனக்கு பிடிச்சுருக்கு.


மாரீச மான்


க.கனகராஜ்,
மாநில செயற்குழு உறுப்பினர், சி.பி.ஐ(எம்)

கவரிங் நகைகள் உண்மையான தங்கத்தை விட கவர்ச்சியாய் மின்னும். எந்த மானுக்கும் இல்லாத அத்தனை லட்சணங்களோடும், குணங்களோடும் மாரீச மான் அழகாய் மிளிர்ந்தது. கவரிங் நகையின் கடந்த காலம் தங்கமில்லாத ஏதோ ஒரு போலிப்பொருள்.
--- அதன் எதிர்காலம் கறுத்து, சகிக்க முடியாத அவலம். மாரீசனின் கடந்த காலம் அரக்கன். மாரீசனின் எதிர்காலம் அவன் அழிவும் அவன் பிறந்த நாடான இலங்கையின் அழிவும், ஆனால் இரண்டிற்கும் உள்ள ஒற்றுமை நிகழ்காலத்தில் கவர்ந்திழுக்கும் தோற்றமும், ஆளை மயக்கும் அழகும், அறிவை மழுங்கடிக்கச் செய்யும் கம்பீரமும்.
---இப்போது "தேசபக்தி" என்று சொன்னால் "அத்தனைக்கும் தான் தான் மொத்தக்குத்தகை" என ஆர்எஸ்எஸ்-சும், அதன் துணை அமைப்புகளும் கூவித் திரிகின்றன. இவ்வளவு தேசபக்தி மிக்க இன்னொரு அமைப்பு உலகத்தில் எங்குமே இருக்காது என்பது போன்ற தோற்றம் காட்டி அலைகிறார்கள்.
---மற்றவர்களை எல்லாம் "தேசபக்தி அற்றவர்கள்" என்று செப்பித் திரிகிறார்கள். ஏளனம் செய்கிறார்கள். தான் சொல்லும் தேசபக்தியே 'அக்மார்க்' எனவும், அதை மிஞ்ச ஒருவரும் இல்லை என்றும் பீற்றித் திரிகிறார்கள். உண்மையான தேசபக்தி என்பது ஓரடி உயரமெனவும், ஈரடி அகலமெனவும் ஏழாம் அறிவைத் தாண்டியும் எட்டிய அறிவாய் தேசபக்தி இருப்பதாகவும் தங்களுக்குத் தாங்களே தட்டிக் கொடுத்துக் கொள்கிறார்கள்.
--- இதற்கு காரணமில்லாமல் இல்லை.
---இப்போது மின்னுவது போல் தோற்றமளிக்கும் வகையில் தன்னை வெளிக்காட்டிக் கொள்கிற ஆர்எஸ்எஸ்-சின் கடந்த காலம் மிகவும் அவக்கேடானது. அதைப் புரிந்து கொள்கிற எவரும் அந்த இயக்கத்தை அண்ட மாட்டார்கள். தீண்ட மாட்டார்கள். திரும்பிப் பார்க்க மாட்டார்கள்.
--- எனவேதான், அது தேசபக்தி முலாம் பூசி வருகிறது. ஆளும் அரசுக்கு அதாவது ஆர்எஸ்எஸ் என்கிற அமைப்பின் அரசியல் பிரிவான பாஜகவின் அரசாங்கத்தை, அதன் செயல்பாடுகளை விமர்சிப்போரெல்லாம் தேச விரோதிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள்.
---மாட்டுக்கறி தின்றால் தேச விரோதி. செத்த மாட்டின் தோலை உரித்தால் தேச விரோதி. அரசாங்கத்தின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்தால் தேச விரோதி என்று தேச விரோத சான்றிதழ், அவர்களின் சேமிப்புக்கிடங்கில் ஏராளமாய் அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. தனது எதிரிகள் அனைவர் மீதும் அவர்கள் இந்த தேச விரோத முத்திரையை குத்திக் கொண்டே இருக்கிறார்கள்.
---ஆனால், இவர்களின் தேசபக்தி எத்தகையது?
ஆர்எஸ்எஸ்-சும் அதன் தத்துவமும்:
ஆர்எஸ்எஸ் என்கிற அமைப்பு 1925-ம் ஆண்டு விஜயதசமி தினத்தன்று பலிராம் ஹெட்கேவர் என்பவரால்ஆரம்பிக்கப்பட்டது. அகண்ட பாரதத்தில் ஒரு இந்து ராஷ்டிரத்தை அமைப்பதுதான் அவர்களின் நோக்கமென சொல்லப்பட்டது. இதற்கான தத்துவமாக அவர்கள் இந்துத்துவாவை ஏற்றுக் கொண்டனர்.
---" இந்துத்துவா" என்பதை வரையறுத்தவர் வீரசாவர்க்கர். இந்த வீர என்பது இவர்களே இட்டுக் கட்டி சேர்த்துக் கொண்டது. இந்த சாவர்க்கர் இங்கிலாந்தில் இருந்த பொழுது அன்றைய காலனி ஆட்சியாளர்களுக்கு எதிராக எழுதினார், பேசினார். இதன் காரணமாக கைது செய்யப்பட்டு அந்தமான் சிறைக்கு அனுப்பப்பட்டார். அது வரை பொங்கிப் பிரவாகம் எடுத்த சாவர்க்கரின் வீரம் அதன் பிறகு சாம்பலாகி கரைந்து போனது. சிறைக்குள் இருந்தபடி மன்னிப்பு கடிதம் எழுதினார். அதன் பிறகு, வெளியே வந்தார். வெளியே வந்த பிறகும், பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கும் பிறகு இந்திய அரசாங்கத்திற்கும் 7 முறை மன்னிப்பு கடிதங்கள் எழுதினார். (கடிதங்களின் பட்டியல் அடைப்புக்குள் உள்ளது).

---
இவரை வீர சாவர்க்கர் என்பதை விட மன்னிப்பு கடிதங்களின் மன்னன் என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும். இவர்தான் இந்துத்துவா என்பதை வரையறுத்தார். ஆர்எஸ்எஸ்-காரர்கள் இந்துத்துவா என்பதும், இந்து என்பதும் ஒன்று என்பது போல பசப்பித் திரிகிறார்கள்.
---ஆனால் இந்துத்துவாவை வரையறுத்த சாவர்க்கர் கடவுள் நம்பிக்கை இல்லாத ஒரு நாத்திகர். அவரது மனைவி மரணமடைந்த போது இந்து முறைப்படி அடக்கம் செய்யக்கூடாது என்றும், சடங்குகள் எதுவும் செய்யக்கூடாது என்றும் உறுதியாக மறுத்து விட்டார்.
---அவருடைய இந்துத்துவாவை கடைபிடிப்பவர்கள்தான் இந்துத்துவா என்பதை இந்து மதத்தோடும், மக்களோடும், கடவுளோடும் சில உணவுப்பழக்க வழக்கங்கள், உடை பழக்க வழக்கங்களோடும் இணைத்து மக்களை மோத விடுகிறார்கள்.
பற்றி எரிகையில் பார்வையாளராக :
---இது ஒருபுறம் இருக்க, 20-ம் நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகள் சுதந்திரப் போராட்ட உணர்வு பற்றி எரிந்த காலம். மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், தொழிலாளிகள் என சமூகத்தின் அத்தனை தரப்பினரும் தங்கள் படிப்பை புறக்கணித்து வேலையை புறக்கணித்து வீதியில் நின்று போராடினார்கள். தூக்கு மேடை ஏறினார்கள். துப்பாக்கி குண்டுகளுக்கு இரையானார்கள். சிறைச்சாலைக்கு போனார்கள். செக்கிழுத்தார்கள். மூவர்ணக்கொடியை கீழே விழுந்து விடாதபடி பிடித்ததற்காகவே அடிபட்டு செத்துப்போனார்கள்.
---இந்த காலத்தில்தான் 1925ல் ஆர்எஸ்எஸ் உருவானது. அந்த இயக்கம் ஆங்கிலேயர்கள் இந்தியத் தாயின் ஒவ்வொரு அங்கத்தையும் ஆங்கிலேய ஏகாதிபத்தியம் கொத்தி, குதறிக் கொண்டிருந்த காலத்தில் உருவானது.
--- எனவே அந்த இயக்கம் இந்திய மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்த இந்திய மக்களின் உணர்வாய் இருந்த அந்தப் போராட்டத்தில் அதன் பங்கு என்னவாக இருந்தது என்கிற கேள்வி மிக முக்கியமானது. இந்தக் கேள்விக்கு அந்த இயக்கத்தால் நேர்மையான பதிலை தர முடியாது.
---ஒருவேளை அது நேர்மையான பதிலை கொடுக்கும் என்றால் இந்திய மக்கள் மத்தியில் அதனால் தலை நிமிர்ந்து நடக்க முடியாது. ஒரு நாடு அந்நியரிடம் அடிமைப்பட்டு இருந்த போது அந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்குமான கடமை, வேறு எதையும் விட அந்த நாட்டின் விடுதலைக்காக போராடுவது மட்டுமாகவே இருந்திருக்கும். பாரதியின் வார்த்தைகளில் சொல்வதானால் மேலோர்கள் வெஞ்சிறையில் வாடினர்”.
--- ஆனால் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர்கள் ஒருவர் கூட, ஒருவர் கூட சுதந்திரப்போராட்டத்தில் சிறைக்குப் போனது கிடையாது.
நாங்களும் தான் :
---சில ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள் டாக்டர் ஜி சிறைக்கு போனாரே என்பார்கள். ஆமாம், டாக்டர் பலிராம் ஹெக்டேவர் ஆர்.எஸ்.எஸ்.சின் நிறுவனத் தலைவர் இரண்டு முறை சிறைக்கு போயிருக்கிறார். ஒருமுறை 1920 அப்போது ஆர்.எஸ்.எஸ். ஆரம்பிக்கப்படவில்லை. ஹெக்டேவர் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக இருந்தார். எனவே அது ஆர்.எஸ்.எஸ். கணக்கில் சேராது.
---அதன் பிறகு 1930-ல் ஒரு முறை ஆர்.எஸ்.எஸ். தலைவரான பிறகு அவர் சிறைக்கு போனார். ஆனால் அப்போது ஒரு அமைப்பு என்கிற முறையில் ஆர்.எஸ்.எஸ். அந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளாது என்று அறிவித்துவிட்டார். அதையும் மீறி ஆர்.எஸ்.எஸ்.க்காக யாரேனும் சிறைக்குப் போனால் அது அவர்களின் தனிப்பட்ட உரிமை என்று சொல்லி நகர்ந்து விட்டார். ஆனால் டாக்டர் ஜி சிறைக்கு போனாரே என்று அவர்கள் பெருமிதத்தோடு கேட்பார்கள்.
--- டாக்டர் ஜி எதற்காக ஜெயிலுக்கு போனார் என்பதை அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் பதிவு செய்திருக்கிறார். சிறைக்குள் போராட்டத்தில் ஈடுபட்டு சென்றிருக்கும் காங்கிரஸ்காரர்களை அங்கு சந்தித்து அவர்களையெல்லாம் ஆர்.எஸ்.எஸ். வேலைக்கு அழைத்து வருவதற்காகத்தான் சென்றதாக கூறியிருக்கிறார். எனவே, அவர் மனதில் சுதந்திர தாகம் கொளுந்து விட்டு எரிந்து அதன் காரணமாக சிறைக்கு செல்லவில்லை.
---இதைத் தவிர ஆர்.எஸ்.எஸ்.சின் எந்த காக்கை, குருவியும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு எந்தக் காலத்திலும் சிறைக்குப் போனதே கிடையாது. அந்த இயக்கத்தின் இரண்டாவது தலைவராகவும் இந்திய விடுதலைக்கு ஏழு வருடத்திற்கு முன்பாக தலைமை பொறுப்பை ஏற்றிருந்தவரும் அந்த இயக்கத்தின் தத்துவார்த்த ஆசானாக கருதப்படுவோரும் குருஜி என்று அழைக்கப்படுவருமான திரு. மாதவ சதாசிவ கோல்வால்கர் ஒரு போதும் ஜெயிலுக்கு போனதில்லை. சுதந்திரப் போராட்டத்தில் ஓரம் சாரமாக நின்று வேடிக்கை கூட பார்த்ததில்லை. தலைவர் எவ்வழியோ அவ்வழியே ஆர்.எஸ்.எஸ்சின் அத்தனை உறுப்பினர்களும் இருந்தார்கள்.
ஆங்கிலேயருக்கு வெண்சாமரம், பகத்சிங்கிற்கு ?
---இது ஒருபுறமிருக்க போராடவில்லை என்றாலும் சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பாராட்டினார்களா என்றால் அதுவும் இல்லை. மாறாக, பகத்சிங் போன்று தூக்கு மேடையை ஏறியவர்களை அவர்கள் தூக்கில் தொங்கினார்கள், எனவே வெற்றி பெறாமல் இருப்பதற்கு ஏதோ காரணம் இருந்தது, எனவே அவர்களை உதாரண புருசர்களாக கொள்ள முடியாது என்று ஏகடியம் செய்தார்கள்.
---சரி, ஜெயிலுக்கு போகவில்லை, போராட்டத்தில் ஈடுபடவில்லை, போராளிகளை பாராட்டவில்லை, அவர்களிடம் ஏதோ குறை இருந்தது என்று விமர்சித்தார்கள், ஆனால் பிரிட்டிஷ்காரர்கள் தேவ தூதர்களா இந்திய மக்களை பாதுகாக்க வந்தவர்களா?
---அவர்களைப் பற்றி எங்கேனும் ஆர்.எஸ்.எஸ். விமர்சனம் செய்திருக்கிறதா? ஒரு இடத்தில் கூட அப்படி ஒரு விமர்சனத்தை வைக்கவில்லை. வாயால் மட்டும் பேசிவிட்டு, செயலில் ஈடுபடாதவர்களை வாய்ச் சொல் வீரர் என்பர். ஆனால் வாய்ச் சொல் கூட வீச முடியாத அளவிற்கு அத்துணை வீரர்களாக ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் இருந்தார்கள் என்பது உண்மை.
--- மாறாக, பல இடங்களில் தங்கள் எழுத்துக்களிலும், பேச்சுக்களிலும் ஆர்.எஸ்.எஸ்,. தலைவர்கள், ஆங்கிலேயர்களைப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்கள். இது தான் ஆர்.எஸ்.எஸ்.சின் தேசத் தொண்டு, தேச பக்தி.
---இப்படி தங்கள் கடந்த காலம் அவக்கேடாக இருக்கிற காரணத்தினால் சுதந்திரப் போராட்டத்தை முன்வைத்து தேச பக்தியை பேசினால் டவுசர் கிழிந்த போகும் என்று அவர்களுக்கு தெரியும். எனவே தான் மாட்டுக்கறி சாப்பிடாதவன் தேச பக்தன், கோழிக்கறி தின்பவன் தேச பக்தன் என்று தேச பக்திக்கு தின்னிய விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அவமதிப்புக்கு தப்பாத தேசியக்கொடி :
--ஒரு தேசத்தில் ஒரு குடிமகன் தேசியக் கொடியை வணங்குவதும், மரியாதை கொடுப்பதும் மிக முக்கியமான அம்சம்.
---ஆனால் 1947 ஆகஸ்ட் 14ந் தேதி ஆர்.எஸ்.எஸ்.சின் அதிகாரப் பூர்வ பத்திரிகை இப்படி எழுதியது. நாங்கள் மூவர்ணக் கொடியை வணங்கவும் மாட்டோம், மதிக்கவும் மாட்டோம்என்று.
---1949 நவம்பர் 8-ந் தேதி அதே ஆர்.எஸ்.எஸ். பத்திரிகை எழுதியது. மனுநீதியை ஏற்காத அரசியல் சட்டத்தை ஏற்க மாட்டோம்என்று. மனிதர்களில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று பிறப்பால் பிரித்து வைக்கிற மனுநீதி தான் அவர்களின் வேதப் புத்தகமானது.
--- 2002ம் ஆண்டு வரை ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் மூவர்ணக் கொடியை அவர்கள் ஏற்றியதே கிடையாது. இவர்கள் தான் தேச பக்தியை பற்றி பேசுகிறார்கள்.
---எனவே நாட்டின் விடுதலைக்காக போராடுவது அரசியலமைப்புச் சட்டத்தை மதிப்பது, தேசியக் கொடியை வணங்குவது, போற்றுவது என்று எதை எடுத்தாலும், எதைப்பற்றி பேசினாலும் அவர்கள் வண்டவாளம் தண்டவாளம் ஏறி தடுக்கி விழுந்து விடும். எனவே தான் அவர்கள் தேசபக்திக்கு புது இலக்கணம் கற்பிக்க முயற்சிக்கிறார்கள்.

---
முஸ்லீமாக இருந்தால், கிறித்தவனாக இருந்தால் மதச்சார்பற்றவனாக இருந்தால் சுருக்கமாய் சொல்வதென்றால் பாஜக ஆட்சியின் கொள்கைகளை ஆதரிக்காதவன் என்றால் நீ தேச விரோதி என்று முத்திரைக் குத்த ஆரம்பிக்கிறார்கள்.
***மேற்கண்ட எந்தவொன்றையும் அளவீடாக கொண்டால் ஆர்.எஸ்.எஸ். என்கிற அமைப்பை எந்தவொரு இந்தியனையும், எந்த காலத்திலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே தான் ஆர்.எஸ்.எஸ். பாஜக அதன் பரிவாரங்கள் தேச பக்திக்கு புது விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
***இப்போதும் அவர்கள் முஸ்லிம் லீக்தான் இந்தியா இரு நாடுகளாக பிரிந்ததற்கு காரணம் என்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் சமீபத்தில் மோடி அரசாங்கம் தேச பக்தர் என்று புகழாரம் சூட்டி இந்து மகா சபையின் தலைவராக இருந்த ஷியாமா பிரசாத் முகர்ஜிக்கு தபால்தலை வெளியிட்டது.
***அந்த ஷியாமா பிரசாத் முகர்ஜி வங்க மாநிலத்தில் முஸ்லிம் லீக்கோடு கூட்டணி மந்திரி சபையில் நிதியமைச்சராக இருந்த போதுதான் வங்காளத்தை பிரிப்பது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வங்காளத்தில் மட்டுமன்றி சிந்து மாகாணம் மற்றும் வடமேற்கு எல்லை மாகாணம் ஆகியவற்றில் இருந்த காங்கிரஸ் அரசாங்கங்களை கவிழ்த்து விட்டு முஸ்லிம் லீக்கோடு இணைந்து இந்து மகா சபை ஆட்சியதிகாரத்தை பங்கிட்டுக் கொண்டார்கள்.
***இன்னும் சொல்ல ஏராளம் இருக்கிறது. அவர்களால் எழுதப்பட்ட அவர்களின் எழுத்துக்களே இத்தனைக்கும் சாட்சியாய் இருக்கிறது.
***தங்களின் அவக்கேடான கடந்த காலத்தை மறைப்பதற்காக சில நேரங்களில் அவர்களின் சில தலைவர்களை அரிதாரம் பூசி இவரும் சுதந்திரப் போராட்ட வீரர்தான் என்று நிறுத்தும் முயற்சியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தார்கள்.
***1999 தேர்தலுக்கு முன்பாக அட்டல் பிஹாரி வாஜ்பாயையும் கூட சுதந்திரப் போராட்ட வீரர்தான் என்று அவர்கள் பேச ஆரம்பித்தார்கள்.
*** பிரண்ட் லைன் ஏடு 1998 பிப்ரவரி 7-20 தேதியிட்ட இதழில் அப்போது சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் ஆவணக்காப்பகத்தில் உள்ள ஆவணங்களை வெளியிட்டு அதை பொய்யாக்கியது.
***உடனடியாக வாஜ்பாயின் சார்பில் அந்த பத்திரிகைக்கு வக்கீல் நோட்டிஸ் அனுப்பப்பட்டது. தங்களுடைய எழுத்தும், தரவுகளும் சரியானவை என்று பிரண்ட் லைன் உறுதிபடக் கூறிய போது வாஜ்பாய் வக்கீல் நோட்டிசை திரும்பப் பெற்றுக் கொண்டார்.
***அவக்கேடான கடந்த காலத்தை மறைப்பதற்காக பொய் சொல்வதையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை.
***இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்னது போல மாரிசன் மானாக இருந்த தருணம் போன்று இந்த தருணம்அவர்கள் அழகாக காட்சி தருகிறார்கள். மாரிசனின் கடந்த காலம் அரக்கன்,
*** ஆர்.எஸ்.எஸ்.சின் கடந்த காலம் தேச விடுதலை இயக்கத்திற்கு துரோகமிழைத்தது. மாரிசனின் மான் வேடத்திற்கு பிந்தைய காலம் அவனுடைய இறப்பில் முடிந்தது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வரலாறு வெளிப்படும் போது அதன் மொத்த கொள்கையும் முடிவுக்கு கொண்டு வரப்படும்.
***அந்த நாளை விரைவுபடுத்த வேண்டிய அவசியம் இந்திய நாட்டின் ஒவ்வொரு குடிமகன் கையிலும் இருக்கிறது. மிகக் குறிப்பாக ஒவ்வொரு இளைஞனின் கையிலும் இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். எனும் போது அது ஒரு கவர்ச்சிக்கரமான கவரிங், மிக அழகான மாரீசமான் என்பதை ஒவ்வொருவரும் மனதில் நிறுத்த வேண்டும்.

***1911
முதல் 1950 வரை 40 ஆண்டு காலத்தில் சுதந்திரத்திற்கு முன்பும், பின்பும் வீரசாவர்க்கர் எழுதிக் கொடுத்த மன்னிப்பு கடிதங்களின் விபரம் கீழே. உலகத்தில் எந்த புரட்சிக்காரனும், எந்த உத்திக்காகவும் இத்தனை முறை மன்னிப்புக் கடிதம் எழுதித் தந்து சாதனைபடைத்திருக்க மாட்டான்.
வ.எண். ஆண்டு மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுக்கப்பட்ட அதிகாரி
1. 1911 ஜூலை 4, 1911ல் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார்.
6
மாத காலத்திற்குள் அரசுக்கு மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்தார்.
2. 1913 நவம்பர் 14, 1913, சர் ரெஜினால்டு கார்டக் வைஸ்ராயின்
எக்ஸ்க்யூட்டிவ் கவுன்சில் உறுப்பினர்.
3. 1917 அரசுக்கு
4. 1920 மார்ச் 30, 1920 – அரசுக்கு
5. 1924 அரசுக்கு
6. 1948 பிப்ரவரி 22, 1948 – போலீஸ் கமிசனர் பாம்பே.
7. 1950 ஜூலை 13, 1950 – தலைமை நீதிபதி எம்.சி. சாக்லா,
நீதிபதி கஜேந்திர கட்கர், பாம்பே உயர்நீதிமன்றம்