Thursday, June 30, 2016

அமெரிக்க இந்துக்கள் மட்டும் அவமானப்படுத்தலாமா?





அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட வாய்ப்புள்ள டொனால்ட் ட்ரம்பிற்கு ஆதரவாக அமெரிக்கவாழ் இந்துக்கள் என்ற குழு வெளியிட்டுள்ள விளம்பரம் கீழே உள்ளது.

டொனால்ட் ட்ரம்பை தாமரை மலர் மேல் அமர்ந்துள்ள மகா விஷ்ணுவாக  சித்தரித்துள்ளார்கள் அவர்கள். அமெரிக்க தேர்தல் வரலாற்றில் இதுநாள் வரை இல்லாத அளவிற்கு மத வெறியை கிளப்பி விட்டுள்ள மனிதன் இந்த ட்ரம்ப். அதிலும் அவர் விஷம் கக்குவது இஸ்லாமியர்களுக்கு எதிராகவே.

அந்த ஒரே காரணத்திற்காகவே இந்த குழு டொனால்ட் ட்ரம்பை உயர்த்திப் பிடிக்கிறது. இன்று இஸ்லாமியர்களுக்கு எதிராக நச்சுக் கருத்துக்களை பரப்புகிற மனிதனின் கவனம் நாளை அமெரிக்க வாழ் இந்துக்களுக்கும் எதிராக திரும்பாதா என்ன?

மத வெறியையும் ஜாதி வெறியையும் கையிலெடுத்து ஆதாயம் கண்டவர்கள் கடைசி வரை அதையே தனது ஆயுதமாக பயன்படுத்துவதை இந்திய அளவில் பாரதீய ஜனதா கட்சியையும் தமிழக அளவில் பாட்டாளி மக்கள் கட்சியையும் நாம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்.

ஆர்.எஸ்.எஸ் விதைத்த நஞ்சு அமெரிக்கா வரை புரையோடிப் போயிருக்கிறது என்பதைத்தான் இந்த “டொனால்ட் ட்ரம்பிற்கான இந்துக்கள் குழு” நிரூபிக்கிறது.

சே, சொல்ல வந்த முக்கியமான விஷயத்தை விட்டு எங்கோ போய் விட்டேன் (மேலே சொல்லியிருப்பதும் முக்கியம்தான் என்றாலும்)

இந்துக் கடவுள்கள் படத்தின் தலையில் தங்களுக்கு வேண்டிய அரசியல் தலைவரை பொறுத்திக் கொண்டால் இந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத், இந்து மக்கள் கட்சி போன்ற ஆர்.எஸ்.எஸ் அணிகள் கூச்சல் போடுமே, இப்போது மகாவிஷ்ணு போல டொனால்ட் ட்ர்ம்பை சித்தரித்துள்ளார்களே, அது பற்றி ஏன் இவர்கள் வாய் திறக்கவில்லை. இதிலே டொனால்ட் ட்ரம்ப் மாட்டு மாமிசம் சாப்பிடுபவர் வேறு. சரி மற்றவர்கள் எதுவும் பேசாவிட்டாலும் பரவாயில்லை, எதற்கெடுத்தாலும் துள்ளிக் குதித்து வரும் ஹெச்.ராஜா, வீரத்துறவியார் இருவரும் என்ன செய்கிறார்கள்?

அமெரிக்க வாழ் இந்துக்கள் எது செய்தாலும் பரவாயில்லையா? இல்லை முஸ்லீம்களுக்கு எதிராக பேசுவதால் டொனால்ட் ட்ரம்ப் இவர்களுக்கும் கடவுளாக மாறி விட்டாரா?

இன்னொரு முறை தமிழ்நாட்டில் இது போல ஏதாவது பிரச்சினை வந்து அப்போது ஏதாவது பேசினால் அப்போது வைத்துக் கொள்ளலாம் கச்சேரியை. 


ஸ்வாதி படுகொலையை கண்டித்து - ஒரு தகவலுக்காக

இன்று நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டம் குறித்து நேற்று வெளியிட்ட சுற்றறிக்கை. - உங்கள் தகவலுக்காக

 



காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம்
வேலூர் கோட்டம், பதிவு எண் 640/என்.ஏ.டி
சுற்றறிக்கை எண் 31/16                                                                                    29.06.2016
அனைத்து உறுப்பினர்களுக்கும்
அன்பார்ந்த தோழரே,

பட்டப்பகல் படுகொலையை கண்டிப்போம்,
இனி இது போல நடக்காமல் பாதுகாத்திட அரசை வலியுறுத்துவோம்

சில தினங்கள் முன்பாக சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்போசிஸ் நிறுவன ஊழியர் சுவாதி காலை வேளையில் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. பட்டப்பகலில் நடந்த இந்த கொடூரக் கொலையை நிகழ்த்திய கொலையாளி இன்னும் கைது செய்யப்படவில்லை.

தமிழகத்தில் பெண்கள் மீது தொடர்ந்து நடக்கும் தாக்குதல்களுக்கும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போயிருப்பதற்கும் அரசாங்க இயந்திரம் செயலிழந்து போயிருப்பதற்கும் இந்த கொலை ஒரு சாட்சியமாகும்.

கொலையாளி யார் என்பதைக் கண்டறிய காவல்துறை திணறுவதால் இச்சூழலை சில மதவெறி சக்திகள் பயன்படுத்திக் கண்டு கலவரத்தை தூண்டுமளவிற்கு சமூக வலைத் தளங்களில் வெறியூட்டி வருகின்றனர். சில பிரபல திரைப்பட நடிகர்களும் இவ்வேலையில் ஈடுபட்டுள்ளது மோசமான ஒன்றாகும்.

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய பொறுப்பை நிறைவேற்றாமல் தமிழக அரசு மெத்தனமாக இருந்து விட முடியாது. சுவாதியை கொலை செய்த உண்மையான கொலையாளியை உடனே கைது செய்திட வேண்டும் என்று வற்புறுத்தியும் பெண்களுக்கான பாதுகாப்பை வழங்குவதை உத்தரவாதம் செய்திட வேண்டும் என வலியுறுத்தியும் தமிழகத்தின் அனைத்து அலுவலகங்களிலும் நாளை 30.06.2016 அன்று ஆர்ப்பாட்டம் நடத்திடுமாறு தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு அறைகூவல் விடுத்துள்ளது.

முகநூலில் ஒரு விஷமி செய்த போட்டோஷாப் மூலமாக சேலத்தில் வினுப்பிரியா என்ற பெண் தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவமும் இக்கோரிக்கைக்கான அவசியத்தை அழுத்தமாக உணர்த்துகிறது.

அனைத்து அலுவலகங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தி தீர்மானத்தை தமிழக முதல்வருக்கு அனுப்பி வைப்போம்.
வாழ்த்துக்களுடன்,
தோழமையுள்ள
ஒப்பம் எஸ்.ராமன்
பொதுச்செயலாளர்

Wednesday, June 29, 2016

பிலால் மாலிக்குகள் எச்சரிக்கை




பிலால் மாலிக் என்ற பெயருள்ளவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். 

காவிக் கூட்டம் அப்படி ஒரு பெயர் கொண்டவரை கொலைக் குற்றவாளி என தீர்மானித்து பலி கொடுக்க முடிவு செய்து விட்டது. அதனால்தான் கொலை செய்தது யார் என்ற அனுமானத்துக்கு காவல்துறை வரும் முன்னரே கொலையாளியின் பெயர் பிலால் மாலிக் என்று வொய்.ஜி.மகேந்திரனும் எஸ்.வி.சேகரும் அறிவிக்கிறார்கள்.

தங்களின் கற்பனையை உண்மையாக்க நிச்சயம் அம்மாவின் உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கும். அதான் டீல் எல்லாம் முடிஞ்சாச்சே. போதாக்குறைக்கு இந்த நகைச்சுவை நடிகரின் கல்வித்தாய் அம்மா வேறு தமிழக அம்மாவுக்கு நெருக்கம்.

எனவே தயவு செய்து பிலால் மாலிக் என்ற பெயருடையவர்கள் எல்லாம் எச்சரிக்கையாக, பாதுகாப்பாக இருங்கள். யாராவது ஒரு பிலால் மாலிக்கை போலி எண்கவுண்டரில் போட்டுத் தள்ளி விட்டு பைலையும் மூடி வைத்து விடுவார்கள். நாங்கள்தான் அப்போதே சொன்னோமே என்று இந்த காமெடியன்கள்  வீர வசனம் பேசுவார்கள். 

எனவே, மீண்டும் மீண்டும் எச்சரிக்கிறேன். உஷார், உஷார்

பின் குறிப்பு : மேலே உள்ள படம் நான் தயார் செய்தது அல்ல. எனக்கு வந்ததை, முக நூலில், வாட்ஸப்பில் வந்ததை ஷேர் செய்துள்ளேன். அதிலே யார் இருக்கிறார்கள், என்ன பெயர் உள்ளது என்பதையெல்லாம் கவனிக்கவில்லை. ஆனால் அதன் உட்கருத்தோடு உடன்படுவதால் ஷேர் செய்தேன். அவ்வளவுதான். (இதுதானே வொய்.ஜி.மகேந்திரனும் சொன்னது?)

எதுக்கய்யா விட்டுத் தரணும்?





இளிச்சவாய் இந்தியர்கள் ஒரு கோடி பேரா நேற்றைய பதிவிற்கு வந்த இரண்டு பின்னூட்டங்களில் ஒன்று ஒரு அனானியுடையது. இன்னொன்று ஒரு நாடறிந்த மோடி ஆதரவாளருடையது.

அதில் என்ன தவறு என்ற கேள்வியோடு அனானி நிறுத்திக் கொண்டார். திரு நடராஜன் நாராயணசுவாமி என்ற ஆர்.எஸ்.எஸ், மோடி ஆதரவாளர், இன்னும் மானியத்தை விட்டுத் தராத நீங்கள் எல்லாம் ஒரு மார்க்சிஸ்டா, சுரண்டல்வாதிகள் என்ற அளவிற்குப் போய் விட்டார். அது மட்டுமல்ல, சந்தை விலையில் வாங்க வக்கில்லாதவர்களுக்கு எதற்கு சமையல் எரிவாயு என்ற கேள்வியைக் கேட்டு தனது சுய உருவத்தை தானே அம்பலப்படுத்திக் கொண்டு விட்டார்.

வக்கில்லாதவனுக்கு எதற்கு கல்வி, சோறு, உயிர் என்று கூட நாளை திரு நடராஜன் நாராயணசுவாமி கேட்கலாம். ஏன் இந்த கேள்வியில் அவையும்தானே அடங்கியிருக்கிறது. அவர்களை அப்படி வக்கற்றவர்களாக மாற்றியது யார் என்ற கேள்விக்கு அவர் பதில் தருவரா? அது ஒரு பெரிய விஷயம். அதற்குள் இப்போது நான் செல்லவில்லை. 

அதனால் சமையல் எரிவாயு மானியத்தை கைவிட வேண்டும் என்ற மோடியின் விருப்பத்தை முன்மொழிந்துள்ள இந்த இருவருக்கும் தனியாக பதில் சொல்வதை விட விரிவான ஒரு பதிவாகவே எழுதுவது மேல் என்று தோன்றியது.

மானியம் என்ற சொல்லாடலே முதலில் தவறு. அரசாங்கத்திற்கு மக்களுக்கு சில அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டிய கடமை இருக்கிறது. கல்வி, சுகாதாரம், விவசாயம், வேலை வாய்ப்பு, உணவு போன்றவை அந்த அடிப்படை வசதிகள். ஆனால் உலகமய எஜமானர்கள் அரசாங்கத்தின் கடமை என்பதை கெட்ட வார்த்தையாக மாற்றி விட்டார்கள். கடைக்கோடி மனிதனுக்கும் அனைத்து உரிமைகளும் சென்றடைய வேண்டும் என்ற சிந்தனைகள் முதலாளித்துவ ஆட்சியாளர்களின் மூளையிலிருந்து நீக்கப்பட்டு விட்டது.

அனைத்து மக்களுக்கும் அடிப்படை வசதிகள் செய்து தருவது போல தொழில் வளர்ச்சிக்கான உதவிகள் செய்து தர வேண்டியதும் ஒரு அரசின் கடமைதான். முதல் கடமையை மறந்து போனாலும் இரண்டாவது கடமையை மட்டும் கரடியை கட்டிப்பிடித்த மனிதன் போல கெட்டியாக பிடித்துக் கொண்டு விட்டார்கள்.

முதலாளிகளுக்கு என்னென்ன சலுகைகள் வழங்க முடியுமோ, அத்தனையையும் செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அடி மாட்டு விலைக்கு நிலம், இலவச தண்ணீர், நிற்கா மின்சாரம், வரி விடுமுறை, வரி விலக்கு, ஒவ்வொரு வருடமும் வரி குறைப்பு என்று அள்ளிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். அற்பமான சதவிகித வரி என்றாலும் அவர்கள் அதனை கட்ட மாட்டார்கள். அதனை வரி இழப்பு என்று கணக்கு காண்பித்து கதையை முடித்து விடுவார்கள்.

இப்படி வரி இழப்பாக மட்டும் ஒவ்வொரு ஆண்டும் இந்தியா ஐம்பதாயிரம் கோடி ரூபாய்க்கு மேலாக இழந்து கொண்டிருக்கிறது, நினைவில் கொள்ளுங்கள். இத்தொகை வரிச் சலுகை அல்ல. நிர்ணயிக்கப்பட்ட வரியை தொழில் நிறுவனங்கள் செலுத்தாமல் ஏமாற்றி வருகின்ற தொகை, வரிச்சலுகை, வரி விடுமுறை என்று இழக்கிற தொகை கூடுதல் இழப்பு.

இதைத்தவிர இயற்கை எரி வாயு படுகைகள், நிலக்கரிச் சுரங்கங்கள், இதர இயற்கை வளங்கள் என்று பல லட்சம் கோடி ரூபாய்களை உள்நாட்டு, பன்னாட்டு முதலாளிகளுக்கு தாரை வார்த்துள்ளோம். அப்படி முதலாளிகளுக்கு தாரை வார்க்கும் தொகைகளுக்கு “ஊக்கத் தொகை” என்று பெயர் வைத்து விட்டு சாமானிய மக்களுக்கு செலவழிக்கும் தொகைக்கு “மானியம்” என்று பெயர் வைப்பதே அயோக்கியத்தனம்.

சமையல் எரி வாயுவிற்கான மானியத்தை கைவிட வேண்டும் என்று கோடிக்கணக்கான ரூபாய் விளம்பரம் கொடுத்து கேட்கின்ற மோடி அரசு, விறகு அடுப்பில் சமைக்கிற ஏழைப் பெண்களுக்காக கண்ணீர் சிந்துகிற மோடி, வரிச்சலுகைகளை விட்டுக் கொடுங்கள் என்று ஏன் முதலாளிகளைப் பார்த்து கேட்கக் கூடாது. ஒவ்வொரு வருடமும் செலுத்த வேண்டிய வரியை ஒழுங்காக கட்டுங்கள் என்று கதறக் கூடாது? (விறகு அடுப்பில் சமைக்கிறவர்களுக்கு கேஸ் அடுப்பு ஒரு கேடா  என்று திருவாளர் நடராஜன் நாராயணசுவாமி கேட்டதை மறந்து விடாதீர்கள். மோடி உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ் ஆட்கள் மனதில் உள்ளதைத்தான் அவர் வெளியே சொல்லி இருக்கிறார்). நடுத்தர மக்கள் மானியத்தில் சிலிண்டர் வாங்குவதால்தான் ஏழை மக்களுக்கு கிடைக்கவில்லை என்ற கேவலமான பிரிவினை உத்திதான் “விட்டுக் கொடுங்கள்”. ஏழை மக்களை நடுத்தர மக்களுக்கு எதிராக நிற்க வைக்கும் மட்டமான புத்திதான் மோடியுடையது. திருவாளர் நடராஜன் நாராயணசுவாமி அவர்களால் என்னைப் பார்த்து சுரண்டல்வாதி என்று சொன்னதும் அதே தீய எண்ணத்தால்தான். அவரும் முதலாளிகள் அனுபவிக்கும் கொள்ளை பற்றி வாய் திறக்க மாட்டார்.

அடுத்த முக்கியமான கேள்வி சமையல் எரிவாயுவிற்கான மானியம் என்று சொல்லப்படுவது நிஜமாகவே மானியம்தானா?

பெட்ரோல், டீசல் போல கேஸ் சிலிண்டரின் விலையிலும் அதன் உற்பத்திச் செலவைக் காட்டிலும் வரியின் அளவே அதிகம். உற்பத்திச் செலவு, போக்குவரத்துச் செல்வு, டீலருக்கான கமிஷன், நேர்மையான லாபம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு சிலிண்டரின் விலையை நிர்ணயம் செய்தால் மானியம் என்பதே தேவைப்படாத அளவிற்குத்தான் இருக்கும். ஆக மானியம் என்பது வெறும் மாயையே. பொய்க் கணக்கே.

பல லட்சம் கோடி ரூபாய்களை முதலாளிகளுக்கு அள்ளிக் கொடுக்கும் மோடிக்கு சில நூறு ரூபாய்களை விட்டுக்கொடுங்கள் என்று மக்களைக் கேட்பதற்கான அருகதையே கிடையாது. பெருந்தன்மையான மனிதர்கள் போல காட்டிக் கொண்டாலும் மோடியின் பேச்சில் மயங்கி விட்டுக் கொடுத்தவர்கள், அவர்கள் சில ஆயிரம் பேரோ இல்லை மோடி கதைப்பது போல ஒரு கோடி பேரோ அவர்கள் கண்டிப்பாக இளிச்சவாயர்கள்தான்.

அந்த இளிச்சவாயர்களுக்கும் ஒன்று சொல்ல வேண்டும். நீங்கள் விட்டுக் கொடுத்த பணத்தில்தான் மோடி தனக்கென்று இரண்டாயிரம் கோடி ரூபாயில் சொகுசு விமானம் வாங்குகிறார். இளிச்சவாயர்களின் எண்ணிக்கை அதிகமானால் அந்த தொகை ஏழைகளுக்குச் செல்லாது. மோடியின் ஊதாரித்தனத்திற்கே பயன்படும்.

இருப்பவர்களிடமிருந்து இல்லாதவர்களுக்கு தருவதற்குப் பதிலாக இல்லாதவர்களிடம் எஞ்சியிருப்பதையும் பறித்து கொழுத்துக் கிடப்பவர்களுக்கு தருவதுதான் மோடியிசம்.

Tuesday, June 28, 2016

இளிச்சவாய் இந்தியர்கள் ஒரு கோடி பேரா?





சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுத்தவர்கள் ஒரு கோடியை தாண்டி விட்டதாகவும் அதனால் 1800 கோடி ரூபாய் மிச்சமாகியுள்ளது என்று சில நூறு கோடி ரூபாய் செலவு செய்து மோடி தன் படத்தைப் போட்டு விளம்பரம் செய்து கொண்டு வருகின்றார். (மிச்சமான ஆயிரத்து எண்ணூறு கோடியைக் கொண்டுதான் மோடி தனக்கென இரண்டாயிரம் கோடி ரூபாய் சிறப்பு விமானம் வாங்குகிறாரோ?)

சில மாதங்கள் முன்பாக அதானி, அம்பானி போன்ற ஒரு வேளை உணவுக்கே சிரமப்படுகிற ஐயாயிரம் இந்தியர்கள் சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுத்ததாகவும் மாதச்சம்பளம் வாங்கி கொழுத்த பணக்காரனாக மாறிய நீயும் ஏன் விட்டுக் கொடுக்கக் கூடாது என்று மோடியின் சார்பாக ஒரு குறுஞ்செய்தி வந்தது. அநேகமாக ஐயாயிரம் பேர் விட்டுக் கொடுத்து விட்டார்கள் என்ற செய்தி வந்து ஏழெட்டு மாதங்கள் இருக்கும்.

சரி, ஒரு வருடம் என்றே எடுத்துக் கொண்டாலும், இந்த ஒரு வருட காலத்திற்குள் மோடியின் வேண்டுகோளை நம்பி ஒரு கோடி பேர் தங்களின் சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுத்து விட்டார்களா? என்னத்தான் மோடிக்கு வாக்களித்து ஏமாந்தவர்கள்தான் இந்திய மக்கள் என்றாலும் இப்படி அவசியமே இல்லாமல் மானியத்தையெல்லாம் இழக்கக் கூடிய அளவிற்கு ஏமாந்தவர்களாகவா இந்திய மக்கள் இருக்கிறார்கள்?

பொதுவாக எங்கள் கோட்ட அலுவலகத்தில் ஒரு நடைமுறை உண்டு. கிளைகளிலிருந்து ஏதேனும் ஸ்டேட்மெண்ட் வர வேண்டுமென்றால் அதில் தாமதமானால், உங்கள் கிளையிலிருந்து மட்டும்தான் வரவில்லை, மீதமுள்ள இருபத்தி ஓரு கிளைகளும் அனுப்பி விட்டனர் என்று சொல்வதுண்டு. இதே வசனம்தான் எல்லா கிளைகளுக்கும் சொல்லப்படும். அநேகமாக எல்லா துறைகளிலும் எல்லா இடங்களிலும் பின்பற்றக் கூடிய உத்தி இது.

இப்படிப்பட்ட ஒரு உத்தியைத்தான் மோடி பயன்படுத்துகிறார் போல! பொய் சொல்வது அவருக்கு புதிதா என்ன? ஆயிரக்கணக்கான குஜராத்திகளை உத்தர்கண்டிலிருந்து இன்னோவா கார் மூலம் காப்பாற்றிய ஜேம்ஸ்பாண்ட் சூப்பர்மேன் ராம்போ அல்லவா அவர்!!!

இதிலே அவரது பேட்டியைப் பார்த்து பல அதிமேதாவிகள் புளகாங்கிதம் வேறு அடைந்துள்ளார்கள்!!!!! அப்படிப்பட்ட ஆட்கள் இருக்கும் வரை மோடியின் காட்டில் மழைதான். 

அடுத்து ரயில் சீனியர் சிட்டிஸன் சலுகைக்கும் குறி வைக்கப் பட்டுள்ளது. இன்றைய, நாளைய முதியோர்களே, எச்சரிக்கை