தான்சானியா நாட்டுப் பெண்ணுக்கு பெங்களூரில் நடந்த இழிவு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் தோழர் கே.கனகராஜ், அந்தப் பெண்ணுக்கான கடிதமாக எழுதிய கட்டுரையை தீக்கதிர் நாளிதழ் இன்று வெளியிட்டுள்ளது.
உறக்கத்தை தொலைக்க வைக்கும் அக்கடிதம் அந்தப் பெண்ணுக்கானது அல்ல. மன சாட்சியுள்ள இந்தியர்கள் அனைவருக்குமானது.
  மன்னித்து விடு மகளே!...
                                                      கே.கனகராஜ் 
அன்பு மகளே, நீ அனுபவித்த அவமானங்களும், துயரங்களும், வேதனையும் 
எங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. நீ பட்டதுயரங்களின் போது ஒட்டு 
மொத்த கும்பலும், ஒருவர் கூட உனக்கு ஆதர வாகக் கைநீட்ட வரவில்லை என்பதும், 
உனக்கு ஆடை கொடுத்தது கூட ஒரு ஆப்பிரிக்க தேசத்து கருப்பர் என்பதும் எங்களை
 வெட்கித் தலைகுனிய வைக் கிறது. எங்கள் தேசத்திற்கு மிகப்பெரிய பாரம்பரியம்
 உள்ளது. குளிரால் வாடிய மயிலைக் கண்ட போது அதற்கு ஆடை கொடுத்த பேகன், 
முல்லைக் கொடி பற்றுவதற்கு கொம்பின்றி தவித்த போது தனது தேரை அதற்காக 
நிறுத்தி விட்டு நடந்துபோன  பாரி, வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடி மனம்
 நொந்த வள்ளலார் அனைவரும் எங்கள் உறவுக்காரர்கள்.நாட்டை இழக்கிற போது 
உதவிக்கு வராத கண்ணன், பாஞ்சாலியின் ஆடை உருவப்பட்ட போது முடிவுறாத ஆடை 
கொடுத்து மானங்காப்பாற்றினான் என்பது எங்கள் இதிகாசம்.
உலகத்தின் 
மூத்த நாகரிகங்களில் ஒன்றான மொஹஞ்சதாரோ- ஹரப்பா நாகரிகத்திற்கு 
சொந்தக்காரர்கள் நாங்கள்.  என்ன இருந்தும் என்ன செய்ய மகளே?ராமாயணக் 
காலத்தில் கூட வனாந் திரத்திற்குள்  அபயக்குரல் கேட்டு ஆதரவுக்கரம் நீண்ட 
கதைகள் பல உள்ளன. இன்று உலகம் முழுவதும் தகவல் தொடர்பு சாதனங்கள் விரிந்து 
பரந்து உலகத்தை ஒரு கிராமமாக மாற்றி வைத் துள்ளது. நிலவிலிருக்கும் ஒரு 
எந்திரத் தோடு செவ்வாயிலிருக்கும் ஒரு விண் கலத்தோடு எதிலும் இறங்காமல் 
பூமியைச்சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு செயற்கைக் கோளோடு எங்களால் 
உடனுக்குடன் தொடர்பு கொள்ள முடியும். ஆனால் மகளே, ஒரு பெருநகரத்திற்குள் 
எல்லாதொழில்நுட்பங்களும் நிறைந்திருக்கிற ஒரு நகரத்துக்குள் உன்னுடைய 
அழுகுரலும், உன்னுடைய அபயக்குரலும் ‘மனித’மனங்களை தொடர்பு கொள்ள முடியாமல் 
காற்றிலே கரைந்து போனது.  நாகரிகத்தின் தொடர்பு எல்லைக்கு வெளியே 
இருக்கிறோம் என்பதை உணர்த்தி சென்றிருக் கிறது. சொத்துக்களை உருவாக்கிக் 
கொண்டிருக்கும் நகரம் மனிதத்தை தொலைத்துக் கொண்டிருக்கிறது. 
யாரோ 
ஒருவன் விபத்து ஏற்படுத்தி 2 குழந்தைகளின் தாய் ஒருத்தியை கொன்று விட்டான் 
என்பதற்காக உணர்ச்சி வசப்பட்டு எங்களின் பாரம்பரியத்தை மனிதத்தின் இயல்பான 
குணத்தை நாங்கள் இழந்து விட்டிருக்கிறோம். அருமை மகளே, உன் கார் நிறுத்தப் 
படும் போது உன் மனதில் என்ன தோன்றி யிருக்கும்? என்னவென்றே தெரியாமல் உன்னை
 அந்தக்கும்பல் அடித்த போது நீ எப்படி பதறி இருப்பாய்? உன் ஆடைகள் 
கிழிக்கப்பட்ட போது எத்தனை முறை செத்து பிழைத்திருப்பாய்? நீ உயிருக்கு 
பயந்து ஓடினாய் என்பதை விட மானத்தை மறைக்க கதவுகளை தட்டியிருக்கிறாய் என்று
 தான் புரிந்து கொள்ள முடிகிறது. தட்டினால் திறக்கப்படும் என்கிறது பைபிள்.
 கண்ணா காப்பாற்று என்றால் ஆடைகளின் நீளம் முடிவுறாமல் வந்தது என்கிறது 
மகாபாரதம். உன்னுடைய மானத்தைக் காக்கவோ, உனது தட்டலுக்கு திறக்கவோ 
பெங்களூரு தெருக்களில் எந்த ஏசுவும், கண்ணனும் முன்வரவில்லை,  எந்த 
மனிதனும் நடமாடவில்லை. 
நடமாடிய மனிதர்களும் உலவிய மிருகங்களுக்கு 
பயந்து ஒன்றும் பேசாமல் மௌனம் காத்திருக்கிறார்கள். கொடுமையை விட 
குரூரமானது, கேவலமானது குரூரத்தை சகித்துக் கொள்ளும் மனப்பான்மை.  இந்த 
இழிவை மாறா அவமானத்தை, நீ பட்ட துயரம், நீ பட்ட அவமானம் இந்தியர்கள் 
அனைவரின் மீதும் பச்சை குத்தி போயிருக்கிறது. அருமை மகளே, எங்களை மன்னித்து
 விடு என்று கேட்பது இலகுவாகஇருக்கும். உன்னால் எங்களை மன்னித்துவிடக்கூட 
முடியும். ஆனால் இது அனைத் தையும் தாண்டி ஏற்படுத்தப்பட்டிருக்கும் இந்தக் 
களங்கம் ஒருபோதும் மாறாது. ஒரு பெண் என்பதால் உன்னை நிர்வாணமாக்கி 
இருக்கிறார்கள்.  ஒரு கறுப்பினத் தவள் என்பதால் எல்லாக்கதவுகளும் 
மூடப்பட்டிருக்கிறது. இது எல்லாவற்றை யும் தாண்டி இந்திய சமூகத்தில் 
சமீபகாலமாக ஊடுருவியிருக்கும் வகுப்பு வாத விஷம் இவற்றையெல்லாம் 
சாத்தியமாக்கியிருக்கிறது. எங்கள் தாய் நாட்டின்மீது ஒரு தீவிரவாதச் 
செயலில் ஈடுபட்டவன் அவன் வணங்குகிற தெய்வம் அல்லாவாக இருந்தால், முஸ்லிம் 
இனம் முழுவதையுமே தேசபக்தி அற்றதாகவும், பயங்கரவாதிகளாகவும் சித்தரிக்கும் 
மனோநிலையை விதைத்து வளர்த்து, விஷ விருட்சமாய் விரிந்து படர நாங்கள் 
அனுமதித்து விட்டோம். 
அதன் பலனை அரசியல், பொருளாதாரம், சமூகம் என 
ஒவ்வொரு தளத்திலும் நாங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இதுதான் 
உன்னைத் துரத்தி இருக்கிறது. விபத்தை ஏற்படுத்தியவனுக்கும், உனக்கும் தோல் 
கருப்பு என்பதைத் தவிர வேறு என்ன ஒற்றுமை?  உன் நாடு தான்சானியா. அவன் 
சூடான்காரன். இந்த தேசம் இந்த அவமானத்தி லிருந்து மீண்டு வர எத்தனை காலம் 
பிடிக்குமோ அத்தனை காலமும் உலகசமூகத்திடம் நாங்கள் பலமுறை மன் னிப்பு கேட்க
 வேண்டி இருக்கலாம். துறவுபூண்டவர் கிறித்துவ மதத்தைச் சார்ந்தவர் 
என்பதாலேயே பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப் பட்டதன் மூலம் அந்த 
மதத்தை சேதப்படுத்தி விட்டதாக வெற்றி கொண்டாடும் மன நிலை அவர்களுக்கும் 
வந்திருக்கிறது.
தொழுநோயாளிக்கு உதவ வந்தவர் கிறித்தவர் என்பதனாலேயே 
அவர் குழந்தை களோடு எரித்து அவர்களுடைய அழுகை யில் மரண ஓலத்தில் அவர்களால் 
மகிழ்ந்து இருக்க முடிகிறது. ஒருவன் வீட்டில் மாட்டுக்கறி இருப்பதாய் 
சொன்னால், அது என்ன கறி என்று கூட புரிந்து கொள்வதற்கு முன்பாக உயிரோடு, 
அவன் உறவுக்கு முன் னாலேயே அடித்து கொன்று அதைக்கொண்டாடுகிற சமூகமாக 
அவர்கள் மாறிப்போயிருக்கிறார்கள். அரியானாவில்  இரண்டு பிஞ்சுக்குழந்தைகள் 
எரிக்கப் பட்டு அந்த தசைகளின் நாற்றம் இந்தியா வின் எல்லா திசைகளிலும் 
ஆக்கிரமித்துக் கொண்டிருந்த நிலையிலேயே நாய்கள் மீது கல்லெறிவதற்கெல்லாம் 
நாங்கள் பதில் சொல்ல முடியுமா என்று கேட்டு விட்டு அதிகார பீடத்தில் 
தொடர்ந்து அமர்ந்திருப்பதை நாங்கள் அனுமதித்துக் கொண்டிருக்கிறோம். எங்களது
 கடந்த காலம் முற்றிலுமாக அழிக்கப்படுகிறது.
 அது வெறும் வரலாற்றை 
பாரம்பரியத்தை, புத்தகங்களில் திருத்தி எழுதுவது மட்டுமல்ல, அவர்கள் 
கொஞ்சம் கொஞ்சமாக எங்களின் நாகரிகத்தையும் பின்னோக்கி செலுத்திக் 
கொண்டேயிருக் கிறார்கள். ஒருவேளை இன்னொரு காட்டுமிராண்டி காலத்துக்கு 
போய்விட்டுத்தான் இந்திய சமூகம் அழிவிலிருந்து மீளுமோ என்கிற பயம் அப்பிக் 
கொள்கிறது. தொழில் செய்வதற்காக ஆப்பிரிக்கா வுக்கு போன காந்தி 
நிறவெறிக்கெதிராய் வெகுண்டெழுந்து வந்ததால் இந்திய சுதந்திரப் 
போராட்டத்திற்கு மகாத்மா காந்தியை நாங்கள் பெற்றோம். அவர்அரைநிர்வாண 
பக்கிரியாக தன்னைஅடையாளப்படுத்திக் கொண்டு நிறவெறிக்கு எதிராகவும், காலனி 
ஆதிக்கத் திற்கு எதிராகவும் போராடியதால் அவரை மகாத்மா என்று 
கொண்டாடுகிறோம். அவரை தேசத்தந்தை என்று அழைத்துக் கொண்டாடுகிறோம். 
முன்பெல்லாம் கோட்சே என்றால் அகிம்சையை கொன்ற வன் என்று அடையாளப்படுத்திக் 
கொள்ளும் மனநிலை எங்களுக்கு இருந்தது.இப்போது காந்திக்கும், எங்கள் ஆட்சி 
யாளர்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள். அவரது உயிரை பறித்த கோட்சேவுக்கும் 
அஞ்சலி செலுத்துகிறார்கள்.  இந்த ஆண்டு காந்தியின் நினைவு தினத்தில் அகில 
இந்திய ஹிந்து மஹாசபா காந்தி கொல்லப்பட்டதற்காக கோட்சேவை கொண்டாடி 
இருக்கிறார்கள்.
 இன்னும் சிறிது காலத்திற்கு பின்பு அந்த 
தினம் கோட்சேவுக்காக மட்டுமே கூட கொண்டாடப்படக்கூடும். யார் கண்டது? நரகாசுரனைக் கொன்றதற்காக தீபாவளி கொண்டாடப்படுவது போல காந்தியைக் கொன்றதைக் 
கொண்டாடுவதற்காக ஜனவரி  30, நினைவில் கொள்ளப்படலாம். மன்னித்து விடு மகளே, 
ஒரு அரை நிர்வாண பக்கிரி இந்த தேசத்தின் பெரு மையின் அடையாளமாக 
விளங்கினார். உன் ஆடைகளை கிழித்ததன் மூலம் இந்தியா முழு நிர்வாணமாக 
மனிதத்தின் மத்தியில் வெட்கித் தலைகுனிந்து நிற்கிறது. இந்த தேசம் 
சொத்துக்களின் வளர்ச்சியை, செல்வத்தின் பெருக் கத்தை வளர்ச்சி என்றும், 
நாகரிகம் என்றும் கொண்டாடுகிறது. மனிதத்தையும், சமத்துவத்தையும், சகமனித 
நேசத்தை யும் வளர்ச்சி என்று கொண்டாடுவதற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட 
ஒரு படை இயங்கிக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொருவருக்காக அனைவரும், 
அனைவருக்காக  ஒவ்வொருவரும் என்கிற அந்த உன்னதத்தை நோக்கி நகர்கிற அந்தப்படை
 இனம், மொழி, மதம், சாதி, ஏற்றம், தாழ்வு இதில் எதுவும் அற்ற ஒரு உலகத்தை 
சமைக்கும். அதற்காக அர்ப்பணித்துக் கொள்வது மட்டும்தான் உன்னிடம் 
மன்னிப்புக் கேட்கும் முறையாக இருக்கும்.
நன்றி தீக்கதிர் 06.02.2016 




நமக்கு ஆறுதல்... அந்த நாட்டுப் பெண்களுக்காக, நம்மவர்கள் போராடுவது. விருந்தினர்கள் கடவுளுக்குச் சமம் என்ற எண்ணமில்லாதவர்கள் இருந்தென்ன... செத்தென்ன..
ReplyDeleteகேவலம்.
ReplyDelete