தீக்கதிர் ஞாயிறு இணைப்பிதழான வண்ணக்கதிரின் 25.01.2015 அன்று வெளியான எனது சிறுகதை..
ஓவியம் தோழர் ஸ்ரீரசா
அதை மட்டும் அவன் கவனிக்கவில்லை
வேலூர் சுரா
அந்த சூழல் சரணிற்க்கு மிகவும்
வித்தியாசமாகவும் ஏன் கொஞ்சம் வெறுப்பாகவும் கூட இருந்தது. வயல்வெளிக்கு மத்தியில்
சிறிய குடிசை வீடு. கதவு என்ற பெயரில் ஒரு துருப்பிடித்த தகரம், அதிலும் கீழே ஒரு
மூலையில் துருத்திக் கொண்டு வெளியே வந்திருந்தது. சாணம் போட்டு மெழுகப்பட்ட மண்
தரை. வெளியே ஒரு மூலையில் மாட்டுச் சாணம் குவிக்கப்பட்டு அதன் மீது ஈக்கள்
மொய்த்துக் கொண்டு கிடந்தன. ஐந்தாறு கோழிகள் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருக்க,
கறுப்பாக ஒரு நாய் சோம்பலாக படுத்துக் கொண்டிருந்தது. ஒரு புது டி.வி.எஸ் பிப்டி
நின்று கொண்டிருந்தது. அதன் கேரியரில் இருந்த புல் கட்டு எடுக்கப்படாமலேயே
இருந்தது. வேப்ப மர நிழலின் குளிர்ச்சியை மீறி அவன் கொதித்துக் கொண்டிருந்தான்.
பேசாமல் மதுரையிலேயே இருந்திருந்தால்
நண்பர்களோடு கிரிக்கெட்டாவது விளையாடியிருக்கலாம். பரிட்சை நேரத்தில் பார்க்காமல்
விட்ட திரைப்படங்களில் ஏதாவது ஒன்றை பார்த்திருக்கலாம். அதையெல்லாம் விட்டு விட்டு
நிலம் பார்க்கும் ஆசையில் இப்படி மாட்டிக் கொண்டோமே என்று நொந்து கொண்டிருந்தான்.
இரண்டாவது ஆண்டு பி.இ படிக்கும் சரண் இப்படி
கள்ளப்பெரம்பூர் கிராமத்து தைக்கால் தெரு வயல்வெளியில் சிக்கிக் கொண்டதே ஒரு நிமிட
சபலத்தால்தான். குத்தகைப் பணத்தை வாங்கி வருவதற்காக அவனது தந்தை புறப்பட்ட போது
“நீயும் வரியா, நம்ம நிலத்தை பாத்துட்டு வரலாம்”
என்று கேட்ட போது வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்று நினைத்து புறப்பட்டான்.
மதுரையிலிருந்து புதுக்கோட்டை, பிறகு அங்கிருந்து கந்தர்வகோட்டை, அதன் பின்பு
பூதலூர் என்று மாறி மாறி குண்டும் குழியுமான சாலையில் காயலான்கடை பேருந்துகளில்
வரும் போதே ஆர்வம் வடிந்து விட்டது.
பூதலூரில் மினி பஸ்ஸிற்காக ஒரு மணி நேரம்
காத்திருந்த போது எரிச்சல் தொடங்கியது. கூடைகள், கோணிப்பைகள் சகிதமாக காத்திருந்த
பலரோடு முண்டியடித்துக் கொண்டு பஸ்ஸில் ஏறுகையில் எப்போதுமே ஒரு பக்கமாக
சாய்ந்தபடியே செல்லும் மதுரையின் நகரப் பேருந்துகள் நினைவுக்கு வந்தது. இந்த
அவஸ்தையையெல்லாம் அன்றாடம் அனுபவிக்க விடாமல் கல்லூரிக்குச் செல்ல முதல் நாளே பைக்
வாங்கிக் கொடுத்த அப்பாவை ஒரு நிமிடம் பாசத்தோடு பார்த்தான்.
போவோம், பணத்தை வாங்குவோம், நிலத்தைப்
பார்த்து விட்டு புறப்பட்டு விடுவோம் என்று நினைத்து வந்தவனுக்கு பயணம் அலுப்பு
கொடுத்தது என்றால் இவர்கள் நிலத்தை குத்தகைக்கு எடுத்திருந்த சாமிக்கண்ணுவிற்கும்
அவனது அப்பாவிற்கும் நடந்து கொண்டிருந்த நிற்காத உரையாடல் கொதி நிலையை
அதிகரித்துக் கொண்டே இருந்தது. அதற்கு ஏற்றார் போல கையிலிருந்த அலைபேசியின் சார்ஜ்
வேறு உயிரை விட்டிருந்தது.
இன்னும் எத்தனை நேரம் இங்கே இருக்க வேண்டுமோ
என்ற எண்ணத்தில் தனது தந்தையை கோபமாக பார்க்க அவரோ இவனை கவனிக்கவேயில்லை.
“ குத்தகைப் பணம் வாங்க நான் இன்னிக்கு
வரப்போறேன்னு லெட்டர் எழுதிட்டுத்தான்
வரேன். பணம் இல்லைன்னு சொன்னா எப்படி?”
“இப்பல்லாம் எங்க சாமி லெட்டர்லாம் ஒழுங்கா
வருது? வந்திருந்தா ஏதாவது ஏற்பாடு செஞ்சிருப்பேன்”
“போன் நம்பர் கொடுத்திருந்தா போன்
செஞ்சிட்டாவது புறப்பட்டிருப்பேன், நீதான் தர மாட்டேங்கற”
“வாய்க்கும் வயித்துக்குமே இழுத்துக்கிட்டு
இருக்கு, இதில இந்த போன் கண்றாவியெல்லாம் எனக்கு எதுக்கு?”
“இப்பல்லாம் பச்சைக் குழந்தைங்க கூட போன்
வச்சுருக்காங்க, எங்க நான் அடிக்கடி தொந்தரவு செய்வேனோனு நம்பர் தர மாட்டேங்கற.
சரி எங்கயாவது பணத்தை ரெடி செய். நாளைக்கு எனக்கு ஆபீஸ் போகனும்”
“நான் என்ன கையில வச்சுக்கிட்டா இல்லைனு
சொல்றேன். இந்த அறுப்புல பொண்ணுக்கு ஏதாவது நகை நட்டு வாங்கிப் போடனும்னு
பார்த்தேன். அம்மாவுக்கு சுகமில்லாம போய் தஞ்சாவூர் ஆஸ்பத்திரியில சேர்த்து எல்லா
பணமும் கறைஞ்சு போச்சு”
“சாமிக்கண்ணு, நான் என்ன மத்த நிலத்துக்காரங்க
மாதிரி அடாவடி பண்ற ஆளா? அறுவடை அன்னிக்கு வந்து அப்படியே நெல் மூட்டையை
தூக்கிட்டு போறேனா, அறுப்புல பாதி மூட்டைக்கான பணம் கூட கேட்கறதுல்ல, மூணுல ஒரு
பங்கு தரக் கூட இழுத்தா எப்படி”
“நீங்களா சாகுபடி செஞ்சாதான் உங்களுக்கு
கஷ்டம் தெரியும். முன்னாடி விதை, உரம், பூச்சி மருந்து எல்லாமே கவர்ன்மெண்டே
வித்தாங்க, விலை கம்மியா இருந்தது. இப்ப வியாபாரிங்க கிட்டதான் வாங்க
வேண்டியிருக்கு, அவன் வச்ச விலைதான். ஏதோ இந்த வருஷம்தான் மழை வெள்ளம்னு வந்து
பயிரு நாசமாகல. நெல்லைக் கூட வியாபாரிங்க கிட்டதான் விக்க வேண்டியிருக்கு”
“எனக்கும் அதெல்லாம் தெரியும்பா, அதனாலதான்
போன வருஷமும் சரி, அதுக்கு முத வருஷமும் சரி, நான் குத்தகைப் பணமே வாங்க வரலை.
எனக்கிருக்கிற செலவுக்கு நீ கொடுக்கிற பணம் எந்த மூலைக்கு? பூர்வீக
நிலத்திலேருந்து வர பணத்தை வச்சு அரிசி வாங்கி சாப்பிட்டா அதில ஒரு திருப்தி”
“நான் மட்டும் என்னங்க, விளைச்சல் நல்லா
இருக்கிற எந்த வருஷமாவது குத்தகைப் பணம் தராமல் ஏமாத்தியிருக்கேனே?”
“இந்த வருஷம் கூட நான் போனா போகுதுனு
விட்டுடுவேன். பையனுக்கு காலேஜ் பீஸ் கட்ட பணம் குறையுது. நீ கொடுக்கலைனா
கந்துவட்டிக் காரன் கிட்ட தான் கடன் வாங்கனும்”
“ஏன் சாமி, பேங்குல கல்விக்கடன்
கொடுப்பாங்களே, அத வாங்க வேண்டியதுதானே!”
“உனக்கு விவசாயக் கடன் ஒழுங்கா கிடைக்குதா?”
“எங்க, இப்போ, அப்போனு இழுத்தடிச்சுட்டுத்தான்
கொடுப்பாங்க”
“அங்கயும் அதே கதைதான். பெரிய பணக்காரனுக்கு
விழுந்து கிட்டு கொடுப்பாங்க, மாசச் சம்பளம் வாங்கறவனா இருந்தா கூட அலட்சியம்தான்.
மொத்தத்தில இக்கரைக்கு அக்கரைக்கு பச்சை”
“அது சரி” என்று சாமிக்கண்ணு அலுத்துக் கொண்ட
போது அவர் மகள் பொன்னி சரணிற்கும் அவன் அப்பாவிற்கும் மோர் கொண்டு வந்தாள்.
மோரைக் கையில் வாங்கிக் கொண்ட அவன் அப்பா,
அவள் தலை மறைந்ததும்
“ஏம்பா, பொன்னிக்கு வரன் எதுவும் தகையலயா,
இருபத்து அஞ்சு வயசாயிடுச்சே”
“நல்ல பையனா கிடைச்சா, பதினைஞ்சு பவுன் போடு,
பைக் வாங்கிக் கொடுங்கறான். ஒன்னுமத்தவன் கூட பத்து பவுன், டி.வி.எஸ் பிப்டி னு
கேக்கறான். இன்னும் இரண்டு மூணு பேரோட நிலத்தை குத்தகைக்கு கேட்டிருக்கேன்.
கஷ்டப்பட்டு உழைச்சு இயற்கையும் அனுசரிச்சா அடுத்த தையிலயாவது வழி பிறக்கும்”
“பேசாம என்னோட நிலத்தை கிரயம் செஞ்சுக்கோயேன்”
“விடிய விடிய கதை கேட்டுட்டு நிலத்தை விலைக்கு
எடுத்துக்கச் சொல்றீங்களே, அதுக்கு காசு இருந்தா இந்நேரம் பொன்னி கல்யாணத்தை
முடிச்சிருக்க மாட்டேனா?”
“சரி சரி, குத்தகைப் பணத்துக்கு ஒரு வழி
சொல்லு. எனக்கும் நேரமாகுது. இப்ப புறப்பட்டாலே மதுரைக்குப் போய் சேர பத்து
மணிக்கு மேல ஆயிடும்”
கொஞ்சம் யோசித்த சாமிக்கண்ணு
“தஞ்சாவூர்ல உங்க அண்ணாரு வீட்ல தங்கிட்டு
நாளைக்கு வாங்க. பூதலூர்ல என் பங்காளி ஒத்தரு எனக்கு இருபதாயிரம் ரூபாய் பணம்
கொடுக்கனும். அவர் வயலுலயும் மூணு நாள் முன்னாடி அறுப்பு நடந்துருக்கு. அவர் கிட்ட
வாங்கி வைக்கறேன். பையனுக்கு பணம் கட்டனும்னு சொல்றீங்க, என் பசங்களதான் படிக்க
வைக்கல. என்னால உங்க பையன் படிப்புக்கு சிக்கல் வர வேண்டாம். மீதமுள்ள பணத்தை நானே
அடுத்த மாசம் மதுரைக்கு வந்து தரேன்”
“நாளைக்கா? நான் ஆபீஸ் போகனுமே, ஆடிட்
நடக்குது, லீவ் தர மாட்டாங்க சாமிக்கண்ணு”
இருவரும் யோசித்தார்கள். இருவரின் பார்வையும்
சரண் மீது விழுந்தது.
“சரண், நீ பெரியப்பா வீட்டில தங்கி காலைல இங்க
வந்து பணத்தை வாங்கிட்டு மதுரை வந்துடு”
“அப்பா, நான் மதுரைக்கே வந்துட்டு மறுபடியும்
புறப்பட்டு வரேன். பெரியப்பா வீட்டில மட்டும் தங்கச் சொல்லாதீங்க, அவர் பையன்
சுந்தரோட ஓவர் அலட்டலயும் பில்ட் அப்பையும் என்னால தாங்கவே முடியாது” என்று
அலறினான் சரண்.
“ஒரு நாள் அட்ஜஸ்ட் செய்துக்கோ, எதுக்கு
தேவையில்லாம அலையனும்” என்று சொல்லி முடித்தார் அப்பா.
நிலத்தைப் பார்க்கலாம் என்று நடந்தார்கள்.
அறுவடையாகியிருந்த ஒரு வயலைக் காண்பித்து
“சரண், இதுதான் நம்ம நிலம்” என்று சொல்ல
இடை மறித்தார் சாமிக்கண்ணு.
“சாமி, இது உங்க அண்ணாரோட நிலம்.
அதுக்கடுத்ததுதான் உங்களோடது. நிலம் எதுன்னே தெரியாம குத்தகைப் பணம் வாங்க
வந்துட்டீங்க” என்றபோது அவருக்கு சுருக்கென்று தைத்தது. அதை வெளியில் காட்டிக்
கொள்ளாமல் சிரித்த படி சமாளித்தார்.
பூதலூர் வரை பேருந்தில் போகிற போது சரண் அவனது
அப்பாவிடம் மூச்சு விடாமல் பேசிக் கொண்டே வந்தான்.
“அப்பா, அவர் ரொம்பவுமே உங்க கிட்ட கதை
விட்டாரு. நான் வீட்டுக்குள்ள போகலைனாலும் வெளியே இருந்தே கவனிச்சேன். டி.வி க்கு
மேல ஒரு மொபைல் சார்ஜ் போட்டிருந்தது. வண்டியும் புதுசாதான் வாங்கியிருக்காரு,
இன்னும் ரிஜிஸ்ட்ரேஷன் கூட ஆகல. பத்து
கோழி, நாலு ஆடு, இரண்டு பசு மாடு, இரண்டு காளை மாடு எல்லாமே இருக்கு. அவரோட பொண்ணு
கழுத்தில பெரிசா ஒரு தங்கச் சங்கிலியும்
இருந்தது. உங்களுக்கு குத்தகைப் பணம் கொடுக்காம டபாய்க்கறதுக்கு என்னன்னமோ
சொல்றாரு. நீங்கதான் எதையும் சரியா கவனிக்கவில்லை” என்று புகார் படித்தான்.
“இந்த நிலம் எத்தனையோ தலைமுறையா நம்ம கிட்ட
இருந்தாலும் எங்க இருக்குனே தெரியலை. நம்மால நேரடியா வந்து விவசாயமும் செய்ய
முடியாது. தரிசா கிடக்காம உழுது பயிர் செய்யறான். அதனால முடிஞ்சத கொடுக்கட்டும்.
இந்த பணம் வந்துதான் வாழ்க்கையை நடத்தனும்கற நிலையில நாம இல்லை. நிஜமாகவே
இன்னிக்கு விவசாயத்துல ஏராளமான பிரச்சினை இருக்கு. இந்த பேஸ்புக், வாட்ஸபப்
இதைத்தாண்டி பேப்பர் படி, அப்ப புரியும்”
என்று அவரும் மூச்சு விடாமல் பேச சரண்
மௌனமானான். அவர் பூதலூரில் இறங்கி புதுக்கோட்டை பஸ் பிடிக்க இவன் தஞ்சாவூருக்கு
விருப்பமில்லாமல் பயணமானான்.
மறு நாள் காலை பத்து மணிக்கெல்லாம்
சாமிக்கண்ணு வீட்டிற்கு வந்து விட்டான்.
“தம்பி, எனக்கு கொஞ்சம் மேலுக்கு சுகமில்லை.
பொன்னி கூட பூதலூருக்கு போய் பணத்தை வாங்கிக்கிட்டு நீ கிளம்பிடு” என்றார்
சாமிக்கண்ணு.
கொஞ்சம் சங்கோஜத்தோடே பொன்னியின் பின்னால்
டி.வி.எஸ் பிப்டியில் அமர்ந்து புறப்பட்டான். பூதலூர் பஸ் ஸ்டாண்டில் சரணை இறக்கி
விட்டு “ஒரு அரை மணி நேரம் இரு தம்பி, நான் வந்துடறேன்” என்று சொல்லி பொன்னி
புறப்பட அவன் தன் போனில் மூழ்கிப் போனான்.
இருபது நிமிடத்திலேயே வந்த பொன்னி இவன் கையில்
பணத்தைக் கொடுக்க அதை எண்ணி பைக்குள் வைத்துக் கொண்டு புதுக்கோட்டை பஸ் வருகிறதா
என்று பார்த்தான்.
பொன்னியின் கழுத்தில் நேற்று பார்த்த அந்த
தங்கச் சங்கிலிக்குப் பதிலாக ஒரு கவரிங் முத்து மாலை தொங்கிக் கொண்டிருந்தது
என்பதை மட்டும் அவன் கவனிக்கவில்லை.