மனசாட்சியற்ற மனிதர்கள் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் பொய்களை அள்ளி வீசியுள்ளார்கள். 
இன்சூரன்ஸ் துறையில்  அன்னிய நேரடி மூலதன  வரம்பை 26 % லிருந்து 49 % ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை நேற்ரு முடிவெடுத்துள்ளது. இதில் அதிர்ச்சியடையவோ ஆச்சர்யப்படவோ எதுவுமில்லை. இருபது வருடங்களாக இருக்கிற ஒரு பிரச்சினையை முதலாளிகளுக்கு சாதகமாக முடித்துக் கொடுக்க மோடி முயன்றுள்ளார்.
1994 ல்  இன்சூரன்ஸ்துறையில் சீர்திருத்தங்களை பரிந்துரைப்பதற்காக என்ற பெயரில்  அமைக்கப்பட்ட மல்கோத்ரா குழு அறிக்கை சொன்ன முக்கியமான  இரண்டு பரிந்துரைகள்.
எல்.ஐ.சி யின் 50 % பங்குகள் விற்கப்பட வேண்டும்.
இன்சூரன்ஸ் துறையில்  தனியார் கம்பெனிகள் அனுமதிக்கப்பட வேண்டும். வெளிநாட்டுக் கம்பெனிகள் இந்தியக் கம்பெனிகளோடு கூட்டணி வைத்துக் கொண்டுதான் தொழில் செய்ய வேண்டும்.
இதிலே எல்.ஐ.சி யின் பங்குகளை  தனியாருக்கு விற்கக் கூடாது என்று பதினைந்தாவது நாடாளுமன்றம் ஒரு மனதாக முடிவெடுத்து விட்டது.
இந்திய முதலாளிகளோடு  கூட்டணி வைத்துள்ள வெளிநாட்டுக் கம்பெனிகள் எவ்வளவு மூலதனம் வைத்துக் கொள்ளலாம் என்ற பிரச்சினை நீண்ட நாட்களாக இருக்கிறது.
குஜ்ரால் காலத்தில்  ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருக்கும் போது 1997 ல் இன்சூரன்ஸ்துறையில் தனியாரை அனுமதிக்கும் மசோதாவை கொண்டு வருகிறார். தனியார்மயமே கூடாது என்று இடதுசாரிகள் எதிர்க்கையில் வெளிநாட்டுக் கம்பெனிகளுக்கு அனுமதி கூடாது என்று பாஜக எதிர்த்தது. அதனால் ப.சி அந்த மசோதாவை வாபஸ் வாங்கினார்.
அடுத்து இந்தியா ஒளிர்ந்த வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் 1999 ல் அன்னிய கம்பெனிகள் 49 % வரை மூலதனத்தில் பங்கு வைத்திருக்கலாம் என்ற ஷரத்தோடு யஷ்வந்த் சின்கா மசோதா கொண்டு வர அப்பொது காங்கிரஸ் 26 % வரை இருந்தால் போதும் என்று சொல்ல அவர்களுக்குள் சமரசம் ஏற்பட்டு  மசோதா நிறைவேறியது. தனியார் கம்பெனிகளும் கடையைத் திறந்தார்கள். 
அப்போது வாஜ்பாய் சொன்ன காரணம் என்ன தெரியுமா?
இன்சூரன்ஸில்  வெளிநாட்டவரை அனுமதித்தால் ஐந்தே ஆண்டுகளில் ஒன்றரை லட்சம் கோடி ரூபாயை கொண்டு வந்து கொட்டுவார்கள் என்பது. 
ப.சி மீண்டும் 2004 ல் நிதியமைச்சரான உடனேயே அன்னிய மூலதன வரம்பை  49 % ஆக உயர்த்த வேண்டும் என்றார். எங்கள் சங்கம் நடத்திய நாடு தழுவிய இயக்கங்களால் உருவான கருத்தோட்டம் , ஆட்சிக்கு ஆதரவளித்த இடதுசாரிகளின் கடுமையான எதிர்ப்பு இவை காரணமாக  அந்த முயற்சி தடைபட்டது.  ஆனாலும் இடதுசாரிகள் ஆதரவு விலக்கிக் கொள்ளப்பட்ட பின்பு  2008 ல் அதற்கான மசோதாவை மீண்டும் கொண்டு வந்தார். மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் தோழர் டி.கே.ரங்கராஜன் அவர்கள் நடத்திய வீரப் போராட்டம் காரணமாக மசோதா நிதியமைச்சக நிலைக்குழுவின் பரிசீலனைக்குச் சென்றது.
பாஜகவின் யஷ்வந்த் சின்கா (ஆம்  அதே பழைய நிதியமைச்சர்தான்) தலைமையிலான  நிலைக்குழு  அன்னிய மூலதன வரம்பை உயர்த்த வேண்டிய அவசியமில்லை என்று பரிந்துரையை நாடாளுமன்றத்திற்கு அளித்தது. அத்ற்குச் சொன்ன காரணம் மிகவும் எளிமையானது, ஆனால் உண்மையானது. 
உலகப் பொருளாதார நெருக்கடியில் பன்னாட்டு நிறுவனங்கள் சிக்கி தவிக்கையில் இந்திய மக்களின் சேமிப்பின் மீதான கட்டுப்பாடு அவர்கள் கைகளுக்குச் செல்வது இந்தியப் பொருளாதாரத்தை பாதிக்கும். 
இன்சூரன்ஸ் பரவலை அதிகமாக்குவது, புதிய தொழில் நுட்பங்களை கொன்டு வருவது, புதிய பாலிசிகளை அறிமுகப் படுத்துவது என்று சொல்லப்பட்ட காரணங்கள் எதுவுமே தனியார் கம்பெனிகளால் நடைபெறவில்லை என்பதும் நிரூபணமாகி விட்டது.
அதே போல பாலிசிதாரர் சேவை என்ற விஷ்யத்திலும் தனியார் கம்பெனிகள் மோசமாகவே இருக்கிறது. இறப்பு கேட்புரிமம் வழங்குவதில் அவர்கள் பாக்கி வைத்துள்ள தொகை ஏராளம். குப்பைக் காரணங்கள் சொல்லி இறப்பு கேட்புரிமங்களை நிராகரிப்பது அன்றாடம் நடக்கிறது. தீவிரவாதிகளுடன் மோதினால் உயிர் போகும் என்று தெரிந்தே மும்பை தீவிரவாதிகளோடு சண்டையிடப் போனார் என்று சொல்லி காவல்துறை உயரதிகாரி ஹேம்ந்த் கார்கரேவின் கேட்புரிமத்தை நிராகரித்தது ஒரு தனியார் கம்பெனி.
  
இன்சூரன்ஸ் பரவலை அதிகமாக்குவது, புதிய தொழில் நுட்பங்களை கொன்டு வருவது, புதிய பாலிசிகளை அறிமுகப் படுத்துவது என்று சொல்லப்பட்ட காரணங்கள் எதுவுமே தனியார் கம்பெனிகளால் நடைபெறவில்லை என்பதும் நிரூபணமாகி விட்டது.
அதே போல பாலிசிதாரர் சேவை என்ற விஷ்யத்திலும் தனியார் கம்பெனிகள் மோசமாகவே இருக்கிறது. இறப்பு கேட்புரிமம் வழங்குவதில் அவர்கள் பாக்கி வைத்துள்ள தொகை ஏராளம். குப்பைக் காரணங்கள் சொல்லி இறப்பு கேட்புரிமங்களை நிராகரிப்பது அன்றாடம் நடக்கிறது. தீவிரவாதிகளுடன் மோதினால் உயிர் போகும் என்று தெரிந்தே மும்பை தீவிரவாதிகளோடு சண்டையிடப் போனார் என்று சொல்லி காவல்துறை உயரதிகாரி ஹேம்ந்த் கார்கரேவின் கேட்புரிமத்தை நிராகரித்தது ஒரு தனியார் கம்பெனி.
அன்னிய மூலதனத்தை உயர்த்த வேண்டும் என்று சொல்வதற்கு
இவர்கள் சொல்லும் காரணங்கள் என்ன தெரியுமா?
தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளில் மூலதனத்திற்கான
உடனடி தேவை இருக்கிறது. அன்னிய கம்பெனிகளின் மூலதன அளவை அதிகரித்தால் மட்டுமே
மூலதனம் கிடைக்கும்.
இரண்டாவதாக சொல்வது அன்னிய மூலதன வரம்பை
அதிகரித்தால் வெளிநாட்டிலிருந்து கோடிக் கணக்கில் பணம் கொட்டும். உடனடியாக
அறுபதாயிரம் கோடி ரூபாய் வரும்.
இவை எல்லாம் எப்பேற்பட்ட ஏமாற்று வேலை தெரியுமா?
தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் தங்கள் மூலதனத்தை
அதிகரிக்க வேண்டுமானால் இப்போதுள்ள 74:26 என்ற விகிதத்திலேயே அதிகரித்துக் கொள்ள முடியும்.
உதாரணமாக பஜாஜ் அலையன்ஸ் என்று வைத்துக் கொள்வோம். கூடுதலாக ஐம்பது கோடி ரூபாய்
மூலதனம் போட வேண்டுமென்றால் பஜாஜ் முப்பத்தி ஏழு கோடியும் வெளிநாட்டு அலையன்ஸ்
பதிமூன்று கோடியும் முதலீடு செய்யலாம். ஆகவே அன்னிய மூலதன வரம்பை உயர்த்தினால்
மட்டுமே மூலதனத்தை அதிகரிக்க முடியும் என்று சொல்வது பித்தலாட்டம்.
அடுத்த படியாக புதிதாக பங்குகளை வெளியிடுவதன்
மூலமும் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் தங்கள் மூலதனத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.
ஆனால் அதற்கு அவர்கள் தயாராக இல்லை. பத்தாண்டுகளுக்கு மேலாக இன்சூரன்ஸ் வணிகம்
செய்தும் இன்னும் லாபத்தை தொட்டுப் பார்க்காத தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளின்
பங்குகளை வாங்குவதற்கு இந்திய முதலீட்டார்களும் அன்னிய நிதி நிறுவன
முதலீட்டாளர்களும் அவ்வளவு மூடர்களா என்ன? பங்குச்சந்தை சூதாடிகளின் “உள்ளே
வெளியே” சூதாட்டத்தில் சாதாரண முதலீட்டாளர்கள் வேண்டுமானால் பாதிக்கப்படுவார்களே
தவிர பிணந்தின்னிக் கழுகுகள் அல்ல.
அடுத்த படியாக வெளிநாட்டு நிறுவனங்கள் கோடிகளாக
கொட்டுவார்களா? 
இன்சூரன்ஸ்துறையில் தனியாரை அனுமதிக்கும் போது
யஷ்வந்த் சின்கா என்ன சொன்னார் தெரியுமா?
இன்சூரன்ஸ் துறையில் தனியாரை அனுமதித்தால் அவர்களது
வெளிநாட்டுக் கூட்டாளிகள் மூலமாக ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் வரும். அதைக் கொண்டு
இந்தியாவையே தலைகீழாக புரட்டி விடலாம். இதிலும் ஒரு மோசடி ஒளிந்திருக்கிறது.
இன்சூரன்ஸ் கம்பெனி துவக்குவதற்காக போடப்படுகிற மூலதனத்தை வைத்து அரசு எதுவும்
செய்ய முடியாது. கம்பெனி திரட்டுகிற பிரிமிய வருமானத்தை ஒரு வேளை எல்.ஐ.சி போல
அரசின் பத்திரங்களில் முதலீடு செய்தால் அதை வைத்து அரசு செலவழிக்க முடியும்.
தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் பங்குச்சந்தையைத் தவிர வேறு எங்கும் அவர்களின்
பிரிமிய வருமானத்தை முதலீடு செய்வதில்லை.  மூலதனத்தை வைத்து ஒரு பத்து பைசா மிட்டாய் கூட
வாங்க முடியாது. ஆனாலும் சொன்னார்கள், இப்போதும் சொல்கிறார்கள்.
சரி ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் வந்ததா?
இருபத்தி மூன்று தனியார் ஆயுள் காப்பீட்டு
நிறுவனங்கள் உள்ளது.
அவற்றில் பெரும்பாலானவை வெளிநாட்டு கம்பெனிகளோடு
கூட்டணி வைத்துள்ளது. டாடா முதலில் ஏ.ஐ.ஜி யோடு கூட்டணி வைத்திருந்தது. இப்போது
அதை கழட்டி விட்டு விட்டது வேறு கதை. சரி எவ்வளவு மூலதனம் இந்த பதினான்கு
ஆண்டுகளில் வந்துள்ளது தெரியுமா?
வெறும் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் மட்டுமே. யஷ்வந்த்
சொன்ன ஒன்றரை லட்சம் கோடியில் வெறும் ஆறு சதவிகிதம் மட்டுமே. அப்படியென்றால்
இப்போது மட்டும் எவ்வளவு வந்து விடப் போகிறது?
அடுத்து மிக முக்கியமான விஷயம் என்ன தெரியுமா?
அன்னிய மூலதன வரம்பை 26 % லிருந்து 49 % ஆக உயர்த்தப் போவதால் எந்த ஒரு தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியின் மூலதனமும்
அதிகரிக்கப் போவதில்லை. 
இந்த மசோதா நிறைவேறுமானால் இந்திய முதலாளிகள்
தங்களிடம் உள்ள 74 % பங்குகளில் 23 % பங்குகளை அன்னியக் கூட்டாளிகளுக்கு விற்று அவர்களுடைய பங்குகளை 49 % ஆக உயர்த்தி விடுவார்கள். இந்திய முதலாளிகளின் கஜானாவிற்கு மட்டுமே பணம்
செல்லுமே தவிர அந்த பணம் அந்த இன்சூரன்ஸ் கம்பெனிக்கே வரப் போவதில்லை.  
ஆனால் அதே நேரம் ஒரு தனியார் இன்சூரன்ஸ் கம்பெனி
திரட்டும் மக்களின் பிரிமிய வருமானத்தில் 49 % தொகையின் கட்டுப்பாடு வெளிநாட்டு கம்பெனிகளுக்குச் சென்று விடும். எந்த
திடமான, திரவமான பொருளையோ உற்பத்தி செய்து விற்பதல்ல. இன்சூரன்ஸ். ஏதேனும்
நிகழ்ந்தால் குறிப்பிட்ட பலன் அளிக்கப்படும் என்ற நம்பிக்கையை காகித வடிவில்
விற்பதுதான் இன்சூரன்ஸ். 
தங்களின் சொந்த நாட்டு மக்களையே வஞ்சித்த புகழ்
பெற்றவை, நிர்வாகக் கோளாறுகளால் தடுமாறுபவை வெளிநாட்டு இன்சூரன்ஸ் நிறுவனங்கள்.
அவர்கள் நம்பிக்கையை காப்பாற்றுவார்களா? இல்லை என்பதே உலக அனுபவம்.
ஆனாலும் அவர்களுக்கு அடிபணிந்து விட்டது மோடி
அரசாங்கம். அதற்காக கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் ஏராளமான பொய்களை சொல்லி வருகிறது.
பொய்களைச் சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள்தானே….
பின் குறிப்பு ; இந்த மசோதாவில் இன்னொரு மோசமான ஷரத்து உள்ளது. ஒரு தொழிற்சங்க வகுப்பிற்காக இன்று இரவு கோவை செல்கிறே. அது பற்றி செவ்வாய்க் கிழமை எழுதுகிறேன். 
IF THE MODI GOVT DOES NOT HEAR THE VOICE OF WORKING CLASS BJP WILL BE DEFEATED
ReplyDeleteIN THE ASSEMBLY ELECTIONS DUE AND CERTAINLY WILL BE DEFEATED IN THE NEXT GENERAL
ELECTIONS AND HE WILL INDIRECTLY HELP RAHUL TO BECOME NEXT PRIME MINISTER..