எங்கள் சங்க இதழான சங்கச்சுடரில் வரும் தொடருக்காக எழுதப்பட்டது.
ஊழல்களின் ஊர்வலம்
கால்நடைத் தீவனத்தால் கலைந்து போன பிரதமர் கனவு
"சமோசாவில் ஆலு (உருளைக்கிழங்கு) இருக்கும் வரை பீகாரின் முதல்வராக நான் இருப்பேன்' என்று ஆரவாரமாக அறிவித்த லாலு பிரசாத் யாதவ் இந்தியப் பிரதமர் பதவியையும் குறி வைத்தார். ஆனால் அவரது முதலமைச்சர் பதவியையும்
பறி கொடுக்க வைத்தது கால்நடைத் தீவன ஊழல்.
சிற்றோடைகளிலிருந்துதான் மிகப் பெரிய நதிகள் உருவாகின்றது என்ற சொற்றொடர் இந்த மிகப் பிரம்மாண்டமான 950 கோடி ரூபாய் ஊழலுக்கும் பொருந்தும். கால்நடைகளைப் பாதுகாக்க அவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க
விவசாயிகளுக்கு இலவசமாக தீவனம், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் வழங்குவது என்ற திட்டத்தை பீகார் மாநில அரசு அறிமுகம் செய்கின்றது.
1970 களின் இறுதியில் இத்திட்டம் துவங்குகின்றது. முதலில் ஒரு மாவட்டத்தில் செலவு செய்யாமல் பொய்யானரசீதுகள் போட்டு அரசு கஜானாவிலிருந்து பணம் சுருட்டுகின்றார்கள். அதை அப்படியே மாநிலம் முழுதும் விரிவு படுத்துகின்றனர். ஜகன்னாத் மிஷ்ரா முதலமைச்சராக இருந்த போது தொடங்குகின்ற இந்த முறைகேடு லாலு பிரசாத் யாதவ் காலத்தில் விஸ்வரூபம் எடுக்கிறது. இந்த வகையில் பணம் சுருட்ட ஒரு மாபியா கும்பலே செயல்படுகின்றது.
பணம் பலருக்கும் செல்கின்றது.
பீகார் அரசு, மத்தியரசுக்கு அனுப்ப வேண்டிய சில அறிக்கைகளை அனுப்பாமல் கால தாமதம் செய்கின்றபோதுதான் இந்த ஊழல் வெளி வருகின்றது. இந்த ஊழலை மத்திய புலனாய்வுத்துறை விசாரிக்கிறது. பீகார் மாநில அதிகாரிகள்
விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கின்றார்கள் என உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ புகார் செய்ய நீதிமன்றம் கண்டித்த பின்பே விசாரணை வேகம் பிடித்தது. இந்த விசாரணையை முடக்குவதற்காக லாலு பிரசாத் யாதவ் அளித்த
நிர்ப்பந்தத்தால் சி.பி,ஐ இயக்குனர் ஜோகீந்தர்சிங்கை அப்போதைய பிரதமர் ஐ.கே.குஜ்ரால் மாற்றினார் என்று குற்றச்சாட்டு சொல்லப்பட்டது.
இறுதியில் ஜகன்னாத் மிஷ்ரா, லாலு பிரசாத் யாதவ் மற்றும் ஏராளமான அதிகாரிகள் கைது செய்யப்படுகின்றனர்.லாலு முதல்வர் பதவியிலிருந்து விலகி அவரது மனைவி ராப்ரி தேவியை முதல்வராக்குகின்றார். இந்த ஊழல்
வழக்கின் இறுதி தீர்ப்பு இன்னமும் வரவில்லை.
பின் குறிப்பு: இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராகக் கருதப்பட்ட பீகார் கால்நடைத்துறை இயக்குனர் கடற்கரை ஆறுமுகம் என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி, இந்த ஊழல் தொடர்பாக ஒரு இணைய தளத்தையே துவக்கி உள்ளார். அதிலே பீகாரின் தற்போதைய முதல்வர் நிதீஷ் குமாரும் ஒரு கோடி ரூபாய் லஞ்சப் பணத்தை இந்த ஊழலில் தொடர்புள்ள அதிகாரி தூபே யிடமிருந்து பெற்றார் என்று சொல்லப்பட்டுள்ளது.