Tuesday, April 29, 2014

மனைவியை நேசிக்கிறவங்க "பிரஸ்டீஜ்" வேண்டாம்னுதான் சொல்லனுமோ?

இன்று முக நூலில் நான் பார்த்த அதிர்ச்சிகரமான தகவலை இங்கே
பகிர்ந்து கொண்டுள்ளேன்.
 



முன் குறிப்பு : தயவுசெய்து கண்ணாடிக்கல் பொருத்தப்பட்ட அடுப்புகளை யாரும் வாங்க வேண்டாம். இது சற்று நீளமான பதிவு என்பதால் படிக்காமல் செல்பவர்களுக்கும் இந்த முக்கியத் தகவல் தெரிய வேண்டும் என்று இதை முதலிலேயே குறிப்பிட்டு விடுகிறேன்.

இந்த விபத்து நடந்து இரண்டு மாதங்கள் ஆகின்றன. இந்தப் புகைப்படங்களை முன்னமே பகிர்ந்திருக்க வேண்டியது. என்னுடைய கைப்பேசியில் ஏற்பட்ட பழுதினால் இவற்றை எடுக்க முடியவில்லை. கிட்டத்தட்ட ஒரு பெரும் விபத்திலிருந்து நாங்கள் தப்பித்திருக்கிறோம் என்றுதான் சொல்ல வேண்டும். சில வாரங்கள் முன்பு காலை ஒரு 6, 6.30 மணிக்கு பெரும் சப்தத்துடன் இந்த அடுப்பு வெடித்தது. அதன் கண்ணாடிச் சில்லுகள் டைனிங் ஹால் வரை தெறித்து விழுந்தன. சமையலறையிலோ காலைக்கூட வைக்க முடியவில்லை. அத்தனைத் துகள் கண்ணாடிகள் எங்கும். ப்ரெஸ்டீஜ் கம்பெனியிலிருந்து இரண்டரை ஆண்டுகள் முன்பு வாங்கியது. கிச்சனில் வேலை பார்த்துக் கொண்டிருந்த மெர்ஸி அம்மா நல்ல வேளையாக இது வெடிக்கும் பொழுது வேறு பக்கம் திரும்பி, ஒரு 4,5 அடி தொலைவில் தள்ளி நின்றிருந்தார். இருந்தும் அவருடைய கைகளில் சில கண்ணாடித் துண்டங்கள் பட்டு லேசான சிராய்ப்புகள் இருந்தன. (அவற்றையும் புகைப்படம் எடுத்திருக்க வேண்டும் என்று பின்புதான் தோன்றியது). அவர் முகத்தில் தெரிந்த பயம் இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. சில நாட்களில் விடிகாலையில் எழுந்துவிட்டால் சச்சின் கிச்சனில் அவருடந்தான் இருப்பான். நான் சொல்லிச் சொல்லி அவனை அவன் பேபி சேரில் அமர்த்தி வைக்க ஆரம்பித்தார். அன்று சச்சினும் அவருடன் கிச்சனில் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்றே என்னால் கற்பனை செய்ய முடியவில்லை. (இன்னும் ஒரு சாக்குப் பையில் அத்தனைக் கண்ணாடிச் சில்லுகளையும் பொறுக்கியெடுத்து, பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்)

டி.டி.கே கம்பெனி எம்மாதிரியான தரக் கட்டுப்பாடுகளை இந்தப் பொருளை சந்தைக்குக் கொண்டு வருமுன் கடைபிடித்தனர் என்று தெரியாது. ஆனால் நிச்சயம் அதில் கோளாறு நடந்திருக்கிறது. சமையல் செய்யும் சூடைக்கூடத் தாங்க முடியாத கண்னாடிகளைத்தான் அவர்கள் அடுப்புகளில் பயன்படுத்துகின்றனரா? இம்மாதிரி ஒரு விபத்தை நான் எங்கேயும் கேள்விப் பட்டதில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் மூன்று மணி நேரங்கள் பதைபதைப்புடன் பொறுத்திருந்து 9.30 மணி வாக்கில் அவர்களுடைய கஸ்டமர் கேர் எண்ணிற்கு அழைத்தேன். விபத்தில் எதுவும் இழப்பு இல்லையெனினும் அதன் பயங்கரம் அவர்களுக்கு உறைக்க வேண்டும் என்பதற்காகவே சிறிது படபடப்புடனும், அவசரத்துடனும் தான் பேசினேன். அவர்களுடைய சர்வீஸ் செண்டர் வளசரவாக்கத்தில் என்னுடைய வீட்டிலிருந்து கல் எறியும் தூரத்தில்தான் இருக்கிறது. ஆனால் கஸ்டமர் கேரில் அழைத்துப் பேசி பதிவு செய்த எண் இல்லாமல் அவர்கள் வரமாட்டார்கள். காலையில் பதிவு செய்தாகிவிட்டது. இது சர்வீஸ் கால் இல்லை, விபத்து நடந்திருக்கிறது, அதனால் உடனடியாக வரவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். வழக்கம் போல் வழ வழாவென்று ஏதோ காரணங்களை அடுக்கிவிட்டு சர்வீஸ் செய்பவரை முடிந்தவரை சீக்கிரம் அனுப்புகிறோம் என்றனர்.

மாலை வரை யாரும் வரவில்லை. மீண்டும் மாலையில் அழைத்து சற்றுக் கோபமாகப் பேசினேன். மறுநாள் காலையிலேயே அனுப்புகிறோம் என்று வாக்குறுதி அளித்தனர். மறுநாளும் யாரும் வரவில்லை. மூன்றாவது முறையாக மறுநாள் மதியம் நானே அழைத்தேன். அப்பொழுதும் ஏதோ காரணங்களைக் கூறினர். நான் இன்றும் யாரும் வரவில்லையெனில் புகார் (யாரிடம்!!!) செய்ய வேண்டி வரும் என்றேன். இரண்டாவது நாளும் மாலை வரை யாரும் வரவில்லை. இது என்னை மிகவும் கோபத்துக்குள்ளாக்கியது. எத்தனை பெரிய அவலம் இது. முறையாக அவர்களுடைய கம்பெனிக்கு அழைத்து பதிவு செய்து இரண்டாவது நாளின் முடிவில்கூட யாரும் வரவில்லை.

ஒரு ஆறு மணி போல் நான்காவது முறையாக அவர்களை மீண்டும் அழைத்தேன். அப்பொழுது என்னுடன் பேசியவரிடம் அவருடன் பேச விருப்பமில்லை என்றும் அவருடைய மேலதிகாரியிடம் தருமாறும் சொன்னேன். இரண்டு மூன்று பெர்களிடம் ஒன்று விடாமல் திரும்பத் திரும்ப விவரித்த பிறகு ஒருவர் ஆறுதல் கூறுவதுபோல் ஏதேதோ சொன்னார். நான் அவருடைய ஆறுதல் அவசியமற்றது எனவும், இதுவரை அவர் கம்பெனியிலிருந்து யாரும் வராததற்கான காரணம் மட்டுமே எனக்கு முக்கியம் என்றும் கூறினேன். அவரிடம் காரணம் இல்லை. ஆனால் மறுநாள் காலை நிச்சயம் தன்னுடைய Service Engineerஐ அனுப்புவதாக சத்தியம் செய்தார். என்னால் வேறு என்ன செய்திருக்க முடியும், காத்திருப்பதைத் தவிர. (ஒவ்வொரு தடவை ஒவ்வொருவருடன் பேசிய பொழுதும் என்னுடைய தொலைபேசி எண், வீட்டு முகவரி என்று அனைத்தையும் கொடுத்தேன். மேலதிகத் தகவலாக அவர்களுடைய சர்வீஸ் செண்டர் என் வீட்டின் மிக அருகில் இருப்பதையும் அவர்களிடமே தெரிவித்தேன்)

சரியாக அன்று நான்காவது முறை ஃபோன் செய்து முடித்தவுடன் என்னுடைய கைப்பேசியில் ஏதோ பழுது. மீண்டும் அதை செயல்படுத்த முடியவில்லை. என்னிடம் வேறு கைப்பேசியும் இல்லை. மெர்ஸி அம்மாவின் எண் என்னுடைய நெருங்கிய நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தெரியும் என்பதாலும், அன்றுதான் ஆஸ்கார் ப்ரொடக்ஷன்ஸ் அவர்களுடைய கம்பெனியிலிருந்து ஒரு அசிஸ்டெண்ட் டைரக்டரிடம் வல்லினம் திரைப்படத்தின் டி.வி.டியைக் கொடுத்தனுப்பி சப் டைட்டில் வேலையைத் தொடங்கியிருந்தேன் என்பதாலும், அவர்கள் கொடுத்த நேரத்தில் வார்த்தையைக் காப்பாற்றி வேலையை முடிக்க வேண்டும் என்ற பரபரப்பும், முதன் முதலில் செய்யப்போகும் வேலை, சரியாக அமைய வேண்டுமே என்ற கவலையும் ஒன்று சேர அவற்றில் என் முழுக் கவனமும் இருந்ததாலும் என்னால் வெளியில் சென்று வேறு செல்ஃபோனும் வாங்க முடியாத சூழல்.

ப்ரெஸ்டீஜ் கம்பெனிக்கு நான்கு முறை அழைத்தாகிவிட்டது, ஒவ்வொரு முறையும் வீட்டு முகவரியும் கொடுத்தாகிவிட்டது என்ற காரணத்தினாலும், வேலைப்பளுவினாலும் என் கைப்பேசியைப் பற்றி நான் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. அன்று தொடங்கிய என் வேலை அடுத்த ஆறு நாட்களுக்கு எந்த வித ஒய்வொழிச்சலும் இன்றி செய்யவேண்டியிருந்ததால் மற்ற விஷயங்களை நான் மறந்தே போனேன். ஆனாலும் தினமும் ப்ரெஸ்டீஜ் கம்பெனியிலிருந்து யாராவது வருகிறார்களா என்று எதிர்பார்த்தேன். வரவில்லை. என்னுடைய எண் அவர்களுக்குக் கிடைக்கவில்லை என்ற காரணத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. என் வீட்டில் இருபத்தி நான்கு மணிநேரமும் நாங்கள் இருந்தோம். ஒரு கஸ்டமர் விபத்தைப் பற்றி பதிவு செய்ததற்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தால் அவர்கள் யாரையாவது அன்று அனுப்பியிருப்பார்கள். இது அவர்களின் அலட்சியமன்றி வேறில்லை. என் வீட்டிற்கு வந்து, யாருமில்லாதிருந்தால் மட்டுமே நான் பொறுப்பேற்றிருக்க முடியும். என்னுடைய தொலைபேசி எண் கிடைக்காததை நிச்சயம் ஏற்றுக் கொள்ளமுடியாது. இது அலட்சியம் அன்றி வேறில்லை.

சில நாட்களில் என்னுடைய கைப்பேசி சரியாகிவிட்டது. ஆனால் இன்று வரை அவர்களிடமிருந்து ஒரு அழைப்பும் இல்லை. என்னுடைய கம்ப்ளெயின்டை அவர்கள் என்ன காரனம் கொண்டு மூடியிருக்கக்கூடும்? தொலைபேசி எண் இல்லை என்றா? முகவரியைக் கொண்டு எதுவும் முயற்சி செய்யவில்லையா?

டி.டி.கே கம்பெனியின் மீது நுகர்வோர் நீதிமன்றம் மூலம் வழக்குத் தொடர்ந்து என்னுடைய பணத்தைத் திரும்பப் பெறவும், இந்த மாடல் அடுப்புகளை அவர்கள் தயாரிப்பதைத் தடுத்து நிறுத்தவும் மேற்கொண்டு ஆனவற்றைச் செய்ய வேண்டும். மற்ற வேலைகளுக்கு மத்தியில் இந்த வேலையின் பளு நிச்சயம் அயர்ச்சி தரக்கூடியது. ஆனால் இப்படி ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கம்பெனியிடத்தில் 10,000/- 15,000/- சர்வ சாதாரணமாக நாசமாகிக்கொண்டிருக்கிறது. இந்த விஷயத்தில் பணம் என்பதைவிடவும், அவர்களின் அலட்சியம் என்னை ரொம்பவே காயப்படுத்துகிறது. இதற்கு முன்னும் The ING Vysya Insurance Company Ltd, The Indian Public School, Karur என்று இவர்கள் மீது ஏமாற்று வழக்குத் தொடுக்க எண்ணியிருந்தேன். குழந்தைகள் பராமரிப்பிலும் வேறு சில பொறுப்புகளிலும் சுத்தமாக நேரமில்லாமல் அதற்கான எந்த உத்வேகமும் இல்லாமல் போய்விட்டது.

இந்த முறை நிச்சயம் விடுவதாக இல்லை. அவர்கள் இந்த மாடல் பொருட்களை சந்தையிலிருந்து திரும்பப் பெற வேண்டும். இங்கு என்னுடைய லிஸ்டில் இருக்கும் பத்திரிகை நண்பர்கள் அவசியம் என்று கருதினால் இந்தப் பதிவையும், புகைப்படங்களையும் உபயோகித்துக் கொள்ளலாம். யாரும் வழக்கறிஞர்கள் இருந்தால் நேரமிருப்பின் இது குறித்து உங்கள் அறிவுரைகளை (இது வீண் என்பதைத் தவிர) வழங்கினால் நன்றியுடையவளாவேன்.

(பி.கு : இங்கு பதிவதன் மற்றொரு முக்கிய நோக்கம் எதிர்காலத்தில் எனக்கு இது தேவைப்படலாம் என்பதுமாகும். இந்தப் பதிவையும் ஒரு முக்கிய ஆதாரமாகக் கருதுகிறேன்).
 
இதைப் படிக்கும் போது எனக்கு தோன்றியதுதான்
தலைப்பின் வாசகம்
 
 மனைவியை நேசிக்கிறவங்க "பிரஸ்டீஜ்" வேண்டாம்னுதான்
சொல்வாங்க..
(4 photos)

2 comments:

  1. வணக்கம்,

    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
    வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    www.Nikandu.com
    நிகண்டு.காம்

    ReplyDelete