Sunday, January 8, 2012

தங்க தோசை அலுவாலியாக்கள்




பெங்களூரில்  உள்ள  ஒரு உணவகத்தில் தங்க தோசை
தயாரித்து தருவதாக  ஒரு செய்தி. தங்க நிறத்தில் தோசை
தயாரிக்கிறார்களோ  என்று பார்த்தால்  உண்மையிலயே 
தங்கத்தை  உருக்கி தோசையில் ஊற்றி தருகின்றார்களாம்.


இந்த செய்தி அதிர்ச்சி அளிக்கவில்லை.  முகேஷ் அம்பானிகள்
ஆடம்பர மாளிகைகள் கட்டிக் கொள்வதை பிரமிப்புடன்
மட்டுமே பார்க்கிற தேசம். அந்தப் பணம் எல்லாம் நம்மை 
சுரண்டி சேர்த்தது என்ற  உணர்வே இல்லாத  மக்களின்
தேசம். 


தங்க தோசை ஆயிரத்தி ஒரு ரூபாய்  விலை விற்றாலும் 
விற்பனை அமோகமாக இருக்கிறது என்று  அதன் உரிமையாளர்
மகிழ்ச்சியோடு சொல்கின்றார். எந்திரன்  படத்தை முதல்
வாரத்தில் பார்க்க ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவழிக்க 
தயாராக உள்ள மக்களின் தேசம்தானே  இது!


தங்க தோசை சாப்பிடுபவர்கள் ஒரே ஒரு நிமிடம் மட்டும்
ஒரே ஒரு விஷயத்தை சிந்திக்கட்டும்.


இரண்டு கிராம் தங்கத்தில்  தாலி கட்டிக் கொள்ள முடியாமல்
இன்னும் மஞ்சளை மட்டும் கயிற்றில் இணைத்து கழுத்தில்
கட்டிக் கொண்டு லட்சக்கணக்கான  பெண்களும் இந்த
தேசத்தில்  உள்ளனர் என்பதை மட்டும் சிந்தித்து விட்டு
தங்க தோசையை சாம்பார். சட்னி சேர்த்து நன்றாக 
சாப்பிடட்டும். அது நன்றாக ஜீரணமாக வாழ்த்துகின்றேன்.


இது விஷயத்தில் என் கவலையே ஒன்றுதான். 


திட்டக் கமிஷன் துணைத்தலைவர் மான்டேக்சிங் அலுவாலியா
வறுமைக்கோடு  என்றால் அதற்கான வருமானம் எவ்வளவு
இருக்க வேண்டும் என்று வரையறுத்துள்ளார். 


நகர்ப்புறத்தில் முப்பத்தி ரெண்டு ரூபாய் வருமானம் உள்ளவன்
வறுமைக் கோட்டிற்கு மேல் செல்வா செழிப்போடு இருப்பதாக
சொல்லி விட்டார். அது கிராமப் புறம் என்றால் இருபத்தி ஆறு
ரூபாய். 


இந்த அயோக்கியத்தனமான வரையறைக்கு அவர் பல வித
விளக்கம் வேறு கொடுத்துக் கொண்டிருக்கிறார். என் கவலையே
மனசாட்சியில்லாத  அவர் இப்படி ஒரு விளக்கம் கூட 
கொடுக்கலாம். 


மூன்று பேர் உள்ள ஒரு குடும்பத்தில்  இரண்டு தங்க தோசை
சாப்பிட்ட பிறகு கூட தொள்ளாயிரத்து எழுபத்து ஆறு ரூபாய்
மீதம் இருக்கும் என்று  அவர் கணக்கு சொல்வார்.


தங்க தோசை சாப்பிடும் அளவிற்கு தேசத்தின் பொருளாதாரம்
முன்னேறியுள்ளது என்று கூட அடுத்த முறை வெளிநாட்டில் 
மன்மோகன்சிங் பேட்டி  கொடுத்தாலும் கூட ஆச்சரியப்
படவேண்டாம்.   

           
 

No comments:

Post a Comment